- இசைபட வாழ்வோம்
- இசைபட வாழ்வோம்- 2
சில வாரங்களுக்குப் பின் மீண்டும் அந்த காஃபி ஷாப்பிற்கு சென்ற எனக்கு அந்த மூவரும் அங்கிருப்பது வியப்பளித்தது. விவேக் என்னிடம் வந்து, “சார், கடைசில சொன்ன தடாலடி இசை விஷயத்தை இன்னிக்கி விவாதிக்கலாமா? கடந்த இரண்டு வாரங்களாக நீங்க இங்க வருவீங்கன்னு காத்திருந்தோம்.”
“என்னுடைய செய்திகளைப் படித்து விட்டு கொஞச நேரம் பேசலாமே”

க: “ஏதோ இசைத்துறையில் தவறாக பயன்படுத்தலாம்னு சொல்லிட்டு போய்டீங்க. அப்படி என்ன தவறு செய்ய முடியும்? இசை வேணும்னா ஒருவருக்கு பிடிக்காம இருக்கலாம். அதனால் என்ன தீங்கு விளைவிக்க முடியும்?”
“கணேஷ், உங்களுக்கு இளையராஜா இசை ஏன் பிடிக்கும்?”
க: “இதென்ன கேள்வி சார்? இசை ஏன் பிடிக்கும்னா, எப்படி பதில் சொல்றது?”
“நீங்க கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாக சொல்றீங்க.”
க: “சரி சார், எனக்கு தெரிந்த வரை சொல்றேன். விவேக், கார்த்திக் அவங்களும் ஏன் பிடிக்கிறது என்று சொல்லட்டும். ராஜா பாட்டைக் கேட்டால் அப்படியே மெய் மறந்து போய்விடுகிறது. சில சமயம் திரைக்காட்சிகள் மனதில் வந்து போகின்றன. மற்ற சமயங்களில், பாடலை முதலாக கேட்ட சூழ்நிலை வந்து மறைகிறது. சில சமயம் சோகமாக இருக்கும் பொழுது ராஜாவின் சில பாடல்கள் ஒரு வித ஆறுதலைத் தருகிறது.”
வி: “என்னைப் பொறுத்த வரை, ரஹ்மானின் இசையில் இருக்கும் ஒழுங்கு எனக்குப் பிடிக்கிறது. எத்தனைதான் மேற்கத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், இந்திய இசை அதில் பின்னோட்டமாய் அவரால் உருவாக்க முடிகிறது. அத்துடன் இளமை துள்ளலும் என்னுள் ஏதோ செய்கிறது.”
கா: “கண்ணதாசனின் கருத்துள்ள வரிகள் நம்மிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை எம்.எஸ்.வி. எடுத்துக் கொண்டு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். எத்தனையோ இசையமைப்பாளர்களும் கவிஞர்களும் வந்தாலும், மிக எளிமையாக இன்றுவரை காலத்தைத் தாண்டி மனதை இசையும், பாடல் வரிகளும், நம்மை வேறு உலகிற்குக் கொண்டு செல்கின்றன”
“ஆக, நீங்கள் மூவரும் சொன்னதைச் சுருக்கமாகச் சொன்னால், ஒருவரின் இசை தாலாட்டுகிறது, மெய் மறக்கச் செய்கிறது, இன்னொருவரின் இசை துள்ளலாக இளமையைக் கொண்டாடுகிறது. மற்றொருவர், வரிகளால் சிந்திக்க வைக்கிறார். ஏன் இதை எல்லாம் ஒரே இசையமைப்பாளரால் செய்ய முடியவில்லை?”
வி:”இன்னிக்கி நீங்க கேக்கற கேள்வி எதுவுமே சரியாக இல்லை. எப்படி சார் மெய் மறந்தால், சிந்திக்க முடியும்? எப்படி இளமைத் துள்ளலில் எளிமையைத் தேடுவது?”
“அட, நீங்களும் கேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வியாகவே கேட்கிறீர்கள். கணேஷ் இதை ஏற்கனவே செய்து விட்டார்.”
வி:”மூன்று இசையமைப்பாளர்களும் வெவ்வேறு உணர்வுகளை நம்மில் உருவாக்கி, வெற்றி பெற்றுள்ளார்கள்.”
“அப்படிச் சொல்லுங்க. இந்த உணர்வுகள் விஷயத்துக்குப் பிறகு வருவோம். இளையராஜா ஒரு முறை தன்னுடைய பாடல்கள் ஏன் ரசிகர்களுக்கு பிடிக்கிறது என்று தன்னுடைய தியரியைச் சொல்லியுள்ளார்.”
க: “அது என்ன தியரி சார்?”
“ராஜாவின் பார்வையில் ‘ராகங்கள் கோடி எதுவும் புதிதல்ல, பாடல்கள் கோடி எதுவும் புதிதல்ல.’ அதாவது, பிரபஞ்சத்தில் நமக்குப் பிடித்த சில அதிர்வுகள் இருக்கின்றன. அந்த அதிர்வுகளோடு ஒத்து போகும் ஒலிகளே பிரபலமான பாடல்கள். இதை அவர் ஆல்ஃபா ரிதம் என்று சொல்லுவார்.”
க: “என்ன சார், நீங்களும் ராஜா பாணியில் ஒரே தத்துவமாகப் பேச ஆரம்பிச்சுட்டீங்க?”
“இசை என்பது ஒலிகளின் கோர்வை. ஒலி என்பதே அதிர்வுதான் – பெளதிகம் அதைத்தான் சொல்லுகிறது. ராஜா சொல்லுவது போல, நமக்கு பிடித்த அதிர்வுகளை பாடல்களால் உருவாக்க முடிந்தால், பாடலை நமக்கு பிடிக்கிறது. வார்த்தைகள் வேறு விஷயம். ஒலி, கேள்வி சம்பந்தப்பட்டது.”
கா: “அதிர்வுகள் பற்றிக் கேட்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால், எப்படி நான் எம்.எஸ்.வி. ரசிகனாக இருக்கிறேன்? விவேக் எப்படி ரஹ்மான் ரசிகனாக இருக்கிறான்?”
“அருமையான கேள்வி. இசையால் உருவாக்கப்படும் அதிர்வுகள் வெவ்வேறு. உதாரணத்திற்கு, ராஜாவின் ‘ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’ பாடலைக் கேட்க யானைகள் தேனி மலைப் பகுதியில் உள்ள சின்ன சினிமா தியேட்டருக்கு வருவதைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அந்தப் பாடலின் அதிர்வுகள் அந்த விலங்குகளுக்குப் பிடித்திருந்தது.அதே யானைகளுக்கு வேறு மனித பாடல்கள் பிடிப்பதில்லை.”
க: “எங்களைப் போலத்தான். எனக்கு ராஜா பாடல்கள் போல மற்றவர்கள் பாடல்கள் பிடிப்பதில்லை. விவேக்கிற்கும், கார்த்திகிற்கும் அப்படித்தான். அதனால் தான் நாங்கள் ரசனையில் வேறுபடுகிறோம்.”
“முதலில் அதிர்வுகள் என்று சொன்னோம். இப்பொழுது நம்மிடையே வழக்கமான சொல்லான ‘ரசனை’ என்கிறோம். இரண்டும் ஒன்றுதான். ஒரு கர்னாடக இசை ரசிகருக்கு சினிமா பாடல்கள் பிடிக்காமல் இருக்கவும் இதுதான் காரணம். சரி, அடுத்த கேள்விக்கு வருவோம். அந்த ‘ரசனை’ அல்லது அதிர்வுகள் எப்படி உங்களை பாதிக்கிறது? விவேக், நீங்க அமைதியாகவே இருக்கீங்க…”
வி: “பிடிக்கிறது என்று சொல்லிட்டோமே. அப்புறம் எப்படி பாதிக்கிறது என்று கேட்டால் என்ன சொல்றது சார்?”
கா: “கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், வாழ்க்கைத் தத்துவங்கள் எளிமையான இசையோடு, நம்மை இன்னொரு உலகிற்கு கொண்டு செல்கின்றன.”
க: “பல ராஜாவின் பாடல்கள், ஒலிகளால் நம்மை அமைதிப்படுத்துகிறது. பதட்டத்தைக் குறைக்கிறது. இன்னும் சில பாடல்கள் ராகங்களை கையாண்ட வித்ததில் நம்மை வியப்பிலாழ்த்தி, தாலாட்டவே செய்யும். இப்படி பல விதமாக நம்மை பாதிக்கும்.”
“கணேஷ், உங்களது பதில், நம்மை இந்த உரையாடலின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். நீங்கள் சொன்னபடி, அமைதிப்படுத்துவது, பதட்டத்தைக் குறைப்பது, தாலாட்டுவது என்பதை எப்படி விஞ்ஞான பூர்வமாகச் சொல்வது?”
க: “என்ன சார், இப்படி மாட்டி விடறீங்க? எனக்கு தெரியல. நீங்களே சொல்லுங்க.”
“இந்த உணர்வுகள், ரசனை எல்லாமே வெறும் உடலில் ரசாயன மாற்றங்கள். அவ்வளவுதான், இல்லையா? உதாரணத்திற்கு, ஒரு கோமா நிலையில் அல்லது முழு மயக்க நிலையில் இருக்கும் மனிதருக்கு இந்த வகை ரசாயன மாற்றங்கள் நேர வாய்ப்பில்லை. இசை இந்நிலையில் உள்ளவர்களை பாதிப்பதில்லை.”
க: ”நீங்க சொல்றது உண்மைன்னு ஒத்துக் கொண்டாலும், எப்படி இசை ரசனையை வெறும் ரசாயன மாற்றங்கள்னு ஒத்துக்கறது?”
“நீங்க ஒண்ணும் ஒத்துக்க வேண்டாம். இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிச்சிருக்காங்க.
Hannover University of Music and Drama, Germany
Research reveals the biochemical connection between music and emotion: You are in a concert hall, listening to music you love, Ludwig von Beethoven’s Ninth Symphony. You are happily awaiting the glorious climax in the fourth movement — you know it’s coming — when the full orchestra and chorus erupt with the “Ode to Joy.” The moment is here and you are exhilarated, awash in a sudden wave of pleasure.
குறிப்பாக, மனித மூளையில் இசையினால் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.”
வி: “சரி, ஆராய்ச்சில என்ன தெரிய வந்தது?”
“மனித மூளையில் டோபமைன் (dopamine) என்ற ரசாயனம் பல விதங்களிலும் உருவாகிறது. இதை ஒரு நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் ஆகவும் மனித மூளை பயன்படுத்துகிறது. மனித உடலுறவு, போதைப் பொருட்கள் போன்ற விஷயங்களில் இன்ப உணர்ச்சிகள் தோன்றுவதற்கு டோபமைன் காரணம். இதை வேறு விதமாக சொன்னால், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’, ‘மெளனமான நேரம் இளமனதில் என்ன பாரம்’, ‘உயிரும் நீயே உறவும் நீயே’, போன்ற பாடல்களை நீங்கள் மூவரும் மணிக் கணக்காக ரசிப்பதற்கும் டோபமைன் காரணம்.”
கா: “இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே. நம்முடைய முன்னோர்கள், நீங்கள் சொல்லும் இசை அல்லாத இன்பங்களைச் சிற்றின்பம் என்றும், இறைவனைப் போற்றி பக்தியை பெருக்கும் இசையை பேரின்பம் என்றும் சொல்லியுள்ளனர். சினிமா இசை என்பது இறை இன்பத்தைக் கொடுக்காவிட்டாலும், அதை ஒரு சிற்றின்பத்தோடு ஒப்பிடுவது சரியில்லை.”
“உங்களது சிற்றின்பம் டெஃபனஷன் முன்னோர்கள் சொன்னது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பேரின்பம் என்பது மிகவும் சப்ஜெக்டிவ் விஷயம். பக்தி இசைதான் இதை உருவாக்கும் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலும், மத நம்பிக்கை ஏற்கனவே உள்ளவர்களை பரவச நிலைக்கு (அதாவது, உடலில் ரசாயன மாற்றங்கள்) பக்தி இசை கொண்டு செல்கிறது. இன்று இவ்வகை உணர்ச்சிகளை எப்படி மனித மூளையில் உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள, மனித மூளை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.”
க: “நீங்க இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்யறீங்களா சார்? மேலும் கொஞ்சம் விளக்குங்களேன்.”
“இது போன்ற பல இசை சார்ந்த விஷயங்கள் என்னுடைய ஆராய்ச்சியில் அடங்கும். அதை விடுங்க, கணேஷ், உங்களைப் பற்றி ஏதோ ஒன்று நினைத்தேன், சிரிப்பாக வந்தது. உங்களை எப்படி டெய்லர் ஸ்விஃப்டின் ரசிகராக மாற்றுவது. அதே போல, விவேக்கை எப்படி கே.பி.சுந்தராம்பாள் ரசிகராக மாற்றுவது, கார்த்திக்கை எப்படி செலின் டியானின் ரசிகராக மாற்றுவது?”
க, கா, வி: “என்ன சார் விளையாடறீங்களா? அது எப்படி சாத்தியம்?”
“அடுத்த வாரம் இதைப் பற்றிப் பேசலாம்.”
*** *** ***
வழக்கமான காஃபி ஷாப்பில் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பு. விவேக் முதலில் ஆரம்பித்தான்.
வி:”விட்ட இடத்திலிருந்து பிடிக்கலாமா சார்? யுடியூப்பில் கே.பி..எஸ்ஸின் இசை கேட்டேன். தலை கீழாக நின்றாலும், என்னை உங்களால் அவரது ரசிகன் ஆக்க முடியாது.”
க: “எனக்கு டெய்லர் ஸ்விஃப்ட் யாருன்னே தெரியாது. நீங்க சொன்னவுடன் யுடியூப்பில் கேட்டேன். அந்தம்மாவின் பாட்டெல்லாம் ஒரே மாதிரி இருக்கு சார். விட்டா போதும்னு ராஜா பாட்டுக்கே வந்துட்டேன்.”
கா: “செலின் டியான் – அந்தம்மா ஒல்லியா என்னம்மா உச்சஸ்தாயில பாடறாங்க. ஆனாலும், ஒரு ரெண்டு மூணு பாட்டுக்கு மேல முடியல சார். ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ –க்கு மாறிட்டேன்.”
“நான் எங்க உங்களை இவர்களது ரசிகனாக்குவேன்னு சொன்னேன்? நினைச்சு பார்த்தேன். அவ்வளவுதான். இதுக்கே இப்படி ரியாக்ஷன். உண்மையில நடந்தா என்னவாகும்?”
வி: “கொலை விழும் சார். ரஹ்மானை நானே விரும்பி கேட்டேன். அவர் ஒன்னும் எங்கிட்ட வந்து என்னை ரசிகனாகச் சொல்லவில்லை. கார்த்திக்கும், கணெஷும் அப்படிதான். இதென்ன அபத்தமான கற்பனை?”
“அபத்தமான கற்பனை அல்ல. சில விஞ்ஞானிகளின் கருத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு எதிர்கால சாத்தியம்.”
க: “என்ன சார் குண்டைத் தூக்கிப் போடறீங்க. இது என்ன சைன்ஸ் ஃபிக்ஷன் மாதிரி போகுது? இது எப்படி சாத்தியமாம்?”
“இன்னும் முழுசாக எப்படி இது நிகழும்னு தெரியாது. ஏராளமான மூளை நரம்பு இயல்பியல் (neuroscience) வளர்ச்சி இதற்கு தேவை. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக நிறைய முதலீடு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் (artificial intelligence) செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடிப்படை, மூளை நரம்பு இயல்பியல் துறை. அதனால், மூளை நரம்பு இயல்பியல் துறையிலும் நிறைய ஆராய்ச்சிகள் நேர்ந்த வண்ணம் இருக்கிறது. எதிர்காலம் முழுவதும் எப்படி இருக்கும் என்று தெரியாவிட்டாலும், தொழில்நுட்பத் துறைகளில் எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று மதிப்பிடுவது ஒரு பயனுள்ள செயல். சில எதிர்கால மதிப்பீடுகள் இவ்வகை சாத்தியங்களை முன் வைக்கின்றன.”
கா: “Interesting.முழுவதும் இது எப்படி நிகழும்னு சொல்லுங்க.”
“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”
வி: “இதை ஒரு வியாபார உத்தியாக பயன்படுத்தி, நம்முடைய இசையை நீக்கி, இங்குள்ள எல்லோரையும் மேற்கத்திய கலைஞர்களின் ரசிகர்களாக்கி விடுவார்களா?”
“அது ஒரு சாத்தியப்பாடு. அதைத்தான் முன்னர் நான் இசைத்துறையில் தவறாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வழி உண்டு என்று சொன்னேன்.”
க: “எனக்கு என்னவோ இது அசாத்தியம்னே தோன்றுகிறது.”

“நீங்கள் சொல்வதில் தவறேதும் இல்லை. இந்தத் துறையின் பயன்கள் சற்று மழுப்பலாக இருப்பது உண்மை. ஆனால், இப்படி நிகழக் கூடாது என்று எல்லோருக்கும் சற்று பயம் இருப்பது என்னவோ உண்மை. இது ஒரு சாத்தியக்கூறாகவே இன்று பார்க்கப்படுகிறது. நிறைய மனித மூளை சார்ந்த விஷயங்கள் இன்னும் புதிராகவே இருக்கிறது. ஆனால், ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கணினியால் மனிதனால் உருவாக்கப்பட்ட வண்ணப் படங்களில் உள்ள பொருட்களை கண்டறிய முடியும் என்று நினைக்கவில்லை. 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு உயிரின் தோலெச்சத்தைக் கொண்டு, அதன் ஜாதகத்தையே சொல்ல முடியும் என்று 20 ஆண்டுகளுக்கு முன் நாம் நினைக்கவில்லை.”
கா: “இப்படி நிகழ எது உந்துதலாக இருக்க முடியும்?”
“வேறென்ன, பணம் தான். இந்தியா, சைனா போன்ற நாடுகளில் உலகின் பாதி மனிதர்கள் வசிக்கிறார்கள். இவர்களைக் கவருவது எல்லா வியாபாரங்களுக்கும் முக்கியம். ஒலியை விற்கும் வியாபாரத்திற்கு இவ்வகை தொழில்நுட்பம் கையில் கிடைத்தால், சிலர், அறம் செய்ய விரும்பாமல், இப்படிச் செய்ய நேரலாம்.”
வி: “நல்லா இருக்கு சார் இது. தில்லாலங்கடி செய்து கார்த்திக்கை செலின் டியான் ரசிகனாக்கி விட்டால் அப்படி என்ன லாபம் பார்க்க முடியும்?”
“இன்று உலகின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சில நாடுகள், சில மொழிகள் என்று ஒரு வட்டத்திற்குள் இயங்குகிறார்கள். டெய்லர் ஸ்விஃப்ட் இந்தியாவில் ஒரு 15 நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தினால், சிலர் வருவார்கள். இவ்வகை தொழில்நுட்பத்தால், பல கோடி டாலர்கள் ஈட்ட முடியும். ஏனென்றால், ஒரு இந்தியக் கச்சேரிக்கு கூடும் கூட்டம், பல நூறு மேற்கத்திய கச்சேரிகளுக்கு ஈடாகும்.”
கா: “இது அமெரிக்க தேர்தலில் ரஷ்யா, தலையிடுவதை விட மோசமாக இருக்கிறதே”
“நீங்க சொல்வது இன்னொரு முக்கிய விஷயம். சமூக வலைத்தளங்கள் மூலம் அமெரிக்க தேர்தலில் ரஷ்யா ஊடுருவியது என்று எல்லா செய்தி ஊடகங்களும், அரசியல்வாதிகளும் கதறுகிறார்கள். என் பார்வையில், நாம் பேசும் இந்தப் புதிய தொழில்நுட்பம், இந்த வகை ஊடுருவல்களை ஒரு குழந்தைச் செயலாக்கி விடும்.”
க: “புதுசா என்ன குண்டை போடறீங்க சார். இந்த தொழில்நுட்பத்தை எப்படி அரசியலில் பயன்படுத்த முடியும்?”
“அரசியல், ராணுவம் எல்லாவற்றிலும் தாராளமாக பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, எதிர்காலத்தில் ஹிட்லர் போன்ற ஒரு திறமையான பேச்சாளன் பதவிக்கு வந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, அவன் என்ன பேசினாலும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கலாம். ‘உங்களது வருமான வரியை இரண்டு மடங்காக்குகிறேன்’ என்று சொன்னால், அனைவரையும் தன்னை மறந்து கைதட்ட வைக்கலாம். ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையான ஃப்ரீ வில் என்பது மழுங்கடிக்க இதைப் பயன்படுத்தலாம். இந்த ரஷ்யா விஷயம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை. ராணுவங்கள், இதை ஆக்கிரமிக்கும் நாடுகள் மீது தவறான பிரச்சரத்திற்காகப் பயன்படுத்தலாம்.”
கா: “அப்படி ஏதும் நடக்காது என்று நம்புவோம். குறைந்த பட்சம், நம்முடைய வாழ்நாளில் அப்படி நடக்காது என்று தோன்றுகிறது.”
“உங்களோடு discuss செய்தது மிக்க மகிழ்ச்சி. இன்னொரு தலைப்பில் சந்திப்போம்னு நினைக்கிறேன்.”
கா,வி,க: “நன்றி சார். குட் நைட்.”