2015: சட்டமும் நியாயமும்

This entry is part 4 of 17 in the series 20xx கதைகள்

ஐந்தரை மணிக்கே பத்மாவின் தூக்கம் கலைந்தது, கவலையினாலோ ஷிகாகோவின் குளிரினாலோ அல்ல. ஒருவழியாக திவ்யாவின் எதிர்காலம் முடிவானதில் வந்த நிம்மதியினால். பெண்ணுக்கு கல்யாணம் ஆகவில்லையே என தினமும் கவலைப்பட்ட அனந்துக்கு அவளைவிட அதிக சந்தோஷம். அந்த மகிழ்ச்சியில் அவன் இன்னும் சிறிது நேரம் தூங்கட்டும் என அவள் ஓசைப்படாமல் எழுந்து மெல்ல காலடிவைத்தாள். அவர்களுக்குத் தெரிந்த பல இந்தியப்பெண்கள் நாற்பது வயதுக்கு மேலும் சரியான துணை கிடைக்காமல் தனித்துவாழ நேரிட்டிருக்கிறது. பல் மருந்தகம் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தும் அனிதாவின் திருமணம் கடைசி நேரத்தில் மாப்பிள்ளை முரண்டுபிடித்ததால் நின்றுபோனது. இன்னொரு மாப்பிள்ளை இன்னும் அவளைத்தேடி வரவில்லை, அவளும் தேடிப்போகவில்லை. ஒரு உணவு விடுதி சங்கிலிக்கு, பாஸ்டனில் இருந்து சான்டியாகோ வரை மாதம் இரண்டு தடவை சுற்றும் மீனாவை ஓரிடத்தில் நிறுத்திவைக்க கணவன் அமையவில்லை. மொனீகாவின் நிலமை இன்னும் மோசம். அவள் அழகாகத் தேடிப்பிடித்த வெள்ளைக்கணவன் ஆறுமாதங்களுக்குள் அவளுடைய கடன் அட்டையில் நாற்பதாயிரம் டாலர் ஏற்றிவிட்டான். அவனைக் கழற்றிவிட இன்னொரு நாற்பதாயிரம் டாலர். முப்பத்தியோரு வயதில் திவ்யாவுடன் வாழ்க்கை நடத்த பொறுப்பான ஒருவனுக்கு சரி, சம்மதம், சந்தோஷம். திருமணத்துக்கு திட்டமிட அவர்கள் முந்தைய தினம் நாஷ்வில்லில் இருந்து வந்தார்கள். விருப்பப்படி எங்கே எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளட்டும். தடங்கல் இல்லாமல் காரியம் நடந்துமுடிந்தால் சரி.  

மாடி நடைவழியை ஒட்டிய மற்ற மூன்று அறைகளில் இரண்டின் கதவுகள் சாத்தியிருந்தன. திவ்யாவும் ரைலனும் தனித்தனி அறைகளில். அவர்கள் ஒரே அறையில் தூங்கியிருந்தாலும் பத்மாவுக்கு ஆட்சேபம் இல்லை. திருமணத்துக்குமுன்னால் தொடுவதே ஆபத்தில் முடியும் என்று இருந்த அவள் காலம் வேறு, விரல்நுனியில் விவரங்கள் தேடும் அடுத்த தலைமுறை வேறு. சென்ற ஆண்டு அவள் சென்னையில் படித்த கல்லூரிக்கு விஜயம் செய்தபோது, அங்கே ஜோடிஜோடியாக மாணவர்கள். அவர்கள் உறவின் எல்லை எதுவோ? 

சமையலறையின் மேஜைமேல், அம்மாவுக்கு காப்பி பிடிக்கும் என திவ்யா வாங்கிவந்த கே-கப் தட்டு. அதில் முப்பத்தியாறு சிமிழ்கள், ஆறு ரகங்களில். வெரி வெனிலா, ஹேஸ்டி ஹேஸல்நட், மெட்ராஸ் மேட்னஸ்…  

மெட்ராஸ் மேட்னஸை நுழைத்து கூரிக் இயந்திரத்தை இயக்கினாள். பெயருக்கேற்றபடி டிகாக்ஷன் கள்ளிச்சொட்டாக இறங்கியது. குடித்து முடித்தபின்புதான் கசப்பு தெரிந்தது. அவளுடன் பலகாலம் பணிசெய்து நெருங்கிய தோழியாகவும் ஆன ஸ்வெட்லானாவின் எச்சரிக்கையும் நினைவுக்கு வந்தது.    

“லானா! திவ்யாவின் திருமணம் நிச்சயம் ஆனமாதிரி தான்.” 

“பர்ஃபெக்ட் குட்! டிவ் எப்படி எங்கே அவனை சந்தித்தாள்?” 

ஃபார்ம். டி. பட்டம் வாங்கிய திவ்யா ஒரு வால்க்ரீன்ஸ் கடையில் மருந்துப்பகுதியின் மேனேஜர்.

“அவன் அம்மாவுக்கு தினம் இரண்டு வேளையில் நாலு மருந்து. அவற்றை வாங்க அடிக்கடி வந்தவன் மருந்துகளை எப்போது சாப்பிட வேண்டும், எவற்றை கலக்கக்கூடாது போன்ற விவரங்களைத் தேவைக்கு அதிகமாகவே அவளிடம் கேட்டு, சிரித்துப்பேசி…” 

“சரி, கல்யாணம் எப்போது?”  

“அடுத்த மாதம்.”  

“எங்கே?”  

“இருவரும் இப்போது நாஷ்வில்லில். அங்கே நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நீ நிச்சயம் வர வேண்டும்.”   

“ஷுர்! ஷுர்! யார் அவன்?”  

“ஒரு வயலினிஸ்ட்.”  

“பெயர்?”  

“ரைலன் பிஷப்.”  

சோவியத் யூனியனின் பொருளாதாரம் சீர்குலைந்து சிதறிப்போன காலத்தில் அல்லல்பட்டு அலைந்து, யூ.எஸ். வந்த ஸ்வெட்லானாவுக்கு கையில் கிடைக்கும் வரை எதுவும் நிச்சயம் கிடையாது. தன் அதிபுத்திசாலி அலைபேசியியில் தேடி, அதில் கிடைத்த விவரங்களை ஜீரணித்து… 

“ப்ரீ-நப்(ஷியல் அக்ரிமென்ட்) செய்தாகிவிட்டதா?”  

“திருமணத்துக்கு முந்தைய நிதி ஒப்பந்தம் வேலையற்ற வக்கீல்கள் விரித்த வலை.” 

“அப்படி ஒரேயடியாகச் சொல்லாதே! பட்மா!” 

“சரி, இது முதல் கல்யாணம். இரண்டு பேரும் கீழ் முப்பதுகளில்.”  

“வயசு எவ்வளவு இருந்தால் என்ன? அவன் நிதி நிலமை?” 

“விவரம் தெரியாது. ஆனால் எங்களைவிட சற்று குறைவாக இருக்கலாம்.” 

அலைபேசியில் இன்னொரு தேடல். 

“நீ சொல்வது சரி. அவன் தன் பெற்றோர்களுடன் தங்கியிருக்கிறான். அவர்களும் வாடகை வீட்டில். ப்ரீ-நப் நிச்சயம் அவசியம்.” 

“ஒப்பந்தம் கீழே இருப்பவர்களை வசதியானவர்கள் அவமதிப்பதாக இல்லை?” 

“என் பணத்தைத் தொடாதே என்று தடை போடுவது ரொமான்டிக் காதலைக் கொன்றுவிடும், ஒப்புக்கொள்கிறேன். கல்யாண தினத்தில் இருந்து அது முடிகிறவரை – எந்தத் திருமணமும் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும் – இருவரும் குடும்பப் பொறுப்புகளைப்போல வருமானத்தையும் பகிர்ந்துகொள்வதும் நியாயம். ஆனால், அதற்கு முன்பும், பின்னாலும் வரும் செலவுகள் அவர் அவர் பொறுப்பு. இதை எழுத்தில் பதிப்பது எப்படி தவறாகும்?” 

பத்மா யோசித்தாள். முடிபோடுவதற்கு முன்னால் என்பது நியாயமாகப்பட்டது. பின்னால் என்பது பல ஆண்டுகளுக்குப்பிறகு என்கிற நம்பிக்கை. மொனீகா பட்ட கஷ்டமும் ஞாபகம் வந்தது. 

“நீங்கள் வாழ்நாள் முழுக்க சிரமமப்பட்டுச் சேமித்துவைத்த பணத்தில் அவன் கைவைக்கமாட்டான் என்று உங்களுக்கும் நிம்மதி.”  

“ப்ரீ-நப் செய் என்று திவ்யாவிடம் நான் சொல்ல முடியாது. ரைலனுக்கு தெரியவந்தால் என்னை வாழ்நாள் முழுக்க வெறுப்பான். பொல்லாத மாமியார் பட்டத்துடன் இந்த பொல்லாப்பும் எனக்கு ஏன்?”  

“சரி, நான் சொல்கிறேன்.”  

திவ்யா தனியாக இருக்கும்போது லானாவுடன் ஒரு வார்த்தை பேசு என்று சொல்ல வேண்டும். 

பத்மாவின் நாக்கு, கசப்பு கரைந்துபோனதால் இன்னொரு கோப்பை காப்பிக்கு ஆசைப்பட்டது. இன்னொரு மெட்ராஸ் மேட்னஸ்? 

கணவன் மனைவிக்குள் நிதிநிலைமை மட்டும் அல்ல, பத்மா அனந்தைப்போல் பணத்தைப்பற்றிய நோக்கும் அவர்களுக்குள் மாறுபடலாம். அனந்த் அவளுக்கு தூரத்து உறவு என்றாலும் அவளுக்கு எட்டு ஆண்டுகள் முந்திப்பிறந்து, ஷிகாகோவுக்கு ஐந்து ஆண்டுகள் முன்னால் வந்து குடியேறியதால் அவனுக்கு வந்த சாமர்த்தியம். 

பிரும்மாண்டமான விமானத்தில் பிரமிப்புடன் வந்து இறங்கி நான்கு நாள் ஆனபிறகும் பத்மாவின் தூக்கம் சென்னை நேரத்துக்கு பத்தரை மணி பின்னால்போகத் தடுமாறியது. 

“நாளைக்கு நீ சரியான நேரத்துக்கு எழுந்திருக்கணும். வீட்டுக்கு கையெழுத்து போடப்போறோம், ரெண்டு பேருமா சேர்ந்து. கல்யாணத்துக்கு முன்னாடியே இடம் பார்த்துவச்சுட்டேன். கச்சிதமா மூணு பெட்ரூம். வீட்டன்ல நல்ல (கறுப்பு நிறத்தவர்கள், தெற்குநாட்டினர்கள் அதிகம் கண்ணில்படாத) நெய்பர்வுட். உனக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றான் அனந்த்.   

“வீடா?” 

அஷோக் நகரில் வீட்டுவாரியம் கட்டிய நான்கு அறை வீட்டில் தம்பி தங்கையுடன் இருபத்தியோரு ஆண்டுகள் வசித்தவள் அவள். 

“இந்த அபார்ட்மென்ட்டே சௌகரியமாத்தானே இருக்கு.” 

அவளுக்கு அதில் மிகவும் பிடித்தது பூச்செடிகளுடன் பால்கனி. 

“ஏன்? சொந்த வீடு வேண்டாமா நமக்கு?”  

“விலை எவ்வளவு?”  

“120, 000 டாலர்.” 

அவ்வளவு பணம் அவனிடம் இருக்கிறதா? 

“நாம கொடுக்கறது 6, 000 தான், மீதி கடன்.”  

“கடனா?” 

கடன்பட்டார் நெஞ்சம்போல்…  

“பயப்படாதே! மாசாமாசம் வாடகை கொடுக்கறமாதிரி மார்ட்கேஜ். கொடுக்கற பணத்திலியும் வட்டியின் பங்கை வரியில கழிச்சுடலாம்.” 

மறுநாள் வக்கீல் அலுவலகம் போனபோது, 

“நீ இன்னும் நம்ம ஊர் மத்தியக்குடும்பத்தில இருக்கே. காலையில எழுந்ததும் காப்பிப்பொடி கடன் வாங்காட்டா, நல்ல நாள். மாசம் முடியற வரைக்கும் சம்பளப்பணம் கையில தங்கினா, சொர்க்கம். இங்கே மிடில் க்ளாஸ் எதிர்பார்ப்புகள் வேற. சொந்தமா வீடு, ரெண்டு கார்…” என்று அனந்த் தைரியம் கொடுத்தாலும், 

வக்கீல் காட்டிய இடங்களில் பத்மா பயத்துடனே கையெழுத்திட்டாள். முப்பது வருஷக்கடன். அவள் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையைவிட அதிக காலம். கடன் தீரும்போது அவள் எப்படி இருப்பாள்? 

அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த நாளே இன்னொன்று.  

“இதில ஒரு கையெழுத்து போடு!” 

அனந்த் ஏற்கனவே அவன் கையெழுத்தைப் பதித்திருந்தான்.  

எதற்கு விண்ணப்பம் என்று அவள் கேட்கவில்லை. அவனாகவே, 

“ஸ்டாக் வாங்கப்போறோம்.” 

அவள் தந்தை இன்டியன் வங்கியில் கணக்கர். 

“செலவு போக மிச்சத்தை சேவிங்ஸ் பாங்க்ல போடலாமே.”  

“மிஞ்சிப்போனா ஆறு பர்சன்ட் தூக்கிக்கொடுப்பான். மியுசுவல் ஃபன்ட்ல சில வருஷம் இருபதுக்கு மேல கூட டிவிடென்ட் கிடைக்கும்.”  

முதல் வாரம் முடிவதற்குள் சிறில் அலெக்ஸான்டர் அவளை அழைத்தார். 

“வெல்கம் டு ஷிகாகோ!” 

“தாங்க்ஸ் சார்!” 

“சார் எல்லாம் சென்னையில தான்.” 

கல்லூரியில் அவளுக்கு ஃபிஸிகல் கெமிஸ்ட்ரி நடத்தியவர். ஒருமுறை அவரை அவர் மனைவியுடன் எதிர்ப்பட்டபோது, 

“என் மாணவர்கள் எல்லாரிலும் இவள் தான் அதிபுத்திசாலி” என்று பத்மாவைத் தன்மனைவிக்கு அறிமுகம்செய்து அவளை சங்கடத்தில் ஆழ்த்தியவர். முந்தைய ஆண்டு அவர் ஷிகாகோ பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். அவள் அனுப்பிய திருமண அழைப்பிதழைப் பார்த்து, அனந்துவின் தொலைபேசி எண்ணைத் தேடி…  

“என்ன செய்யறதா இருக்கே?” 

“இப்பத்தானே ஷிகாகோ மண்ணில கால் வச்சிருக்கேன்.”  

“நீ மேலே க்ராஜுவேட் ஸ்கூல் சேரணும்னா நான் இங்கே ஏற்பாடு செய்யறேன்.”  

“அனந்துவைக் கேட்டு சொல்றேன், சார்! சாரி, சாரை திருப்பி வாங்கிக்கறேன்.” 

அதற்கும் அனந்தின் ஏற்பாடு.  

“நம்ம பி.எஸ்ஸி. மூணு வருஷம் தான். அதனால எம்.எஸ். பண்ணிட்டு அப்பறம் தான் பிஎச்.டி. ஆகமொத்தம் ஆறு வருஷம். முடிச்சதும் 20, 000 டாலர். அதுகூட நிச்சயம் இல்ல. நீ வர்றதக்கு முன்னாடியே நார்தர்ன் இல்லினாய்(யூனிவெர்சிடி)ல மெடிகல் டெக்னாலஜிக்கு அப்ளிகேஷன் வாங்கிவச்சிருக்கேன். நாலு செமிஸ்டர். ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, ஸ்பெக்ட்ராஸ்கோபி, செல் பயாலஜி எல்லாம் நீ ஏற்கனவே படிச்சதுதான். ஒண்ணரை வருஷத்திலயே முடிச்சிடுவே.” 

தெரிந்த விஷயங்களை இன்னொரு தடவை ஏன் படிக்க வேண்டும்?  

“மெடிகல் டெக்குக்கு ஹாஸ்பிடல்ல 30, 000 டாலர் வேலை சுலபமா கிடைக்கும்.” 

அப்படியே நடந்தது. கணிசமான சம்பளம் மட்டும் இல்லை, நேரத்துக்குப்போய் நேரத்துக்கு திரும்பிவரலாம். சனி ஞாயிறு கிறிஸ்மஸ் சமயங்களில் வேலை செய்தால் இரட்டிப்பு வருமானம். காரில் பதினைந்து நிமிடப்பயணம். அதை நிறுத்த இடம்… 

மாடிப்படியில் இறங்கிவரும் ஓசை. 

“குட் மார்னிங், ரைலன்!” 

“குட் மார்னிங், மிசஸ் ராம்!” 

“நன்றாகத் தூங்க முடிந்ததா?” 

“ஓ! அறுபத்தைந்து டிகிரி. அடக்கமாக இருந்தது. என் பெற்றோர் வீட்டில் அறுபதுக்கும் குறைவு. குளிர் நடுக்கும். காலை நாலுமணிக்கே போக்குவரத்து ஓசை எழுப்பிவிடும். இங்கே என்ன அமைதி!” 

“காஃபி தரட்டுமா?”  

“ஓ! ஷுர்.” 

அவனுக்கு வெரி வெனிலா, அவளுக்கு மறுபடி மெட்ராஸ் மேட்னஸ்.  

பத்மாவின் காப்பியை பார்த்து பால், க்ரீம் கலவாமல், 

“கறுப்பாக இருக்கிறதே!” என்று ஆச்சரியப்பட்டான். 

“நான் மருந்தகத்தில் வேலை தொடங்கியபோது அது தான் கிடைக்கும். அலுப்பைக் குறைக்க அதைக் குடிக்க ஆரம்பித்தேன்.” 

“அலுப்பு இல்லாத வேலை எது?” 

“மருந்தகத்தில் நோயாளிகளின் உடல் திரவங்களை ஒரேவழியில் அளவிடுவது அவசியம். யாராவது அதைச் செய்துதான் ஆகவேண்டும். ஆனால், அறிவியல் ஆய்வில் எனக்கு இன்னும் திருப்தி கிடைத்திருக்கும், என் புத்திசாலித்தனத்துக்கு.” கடைசி வார்த்தையில் புன்னகை சேர்த்தாள். “என்னுடன் கல்லூரியில் படித்த ஒருத்தி வான்டர்பில்ட்டில். அவள் வேலையில் தினம் புதுப்புது கேள்விகள், பதில்கள்.” 

“ஆனால், அவளுக்கு வருமானம் மிகக்குறைவாக இருக்கும்.” 

“உண்மை தான்.” 

காப்பி குடித்துமுடித்ததும் கோப்பையை கையில் பிடித்து அழகுபார்த்தான். 

“சின்னது, பிடிக்க வாகு, மோனா லிஸாவின் படம். இதுபோல இங்கே கிடைக்கிறதா?”   

“இல்லை. நாங்கள் பாரிஸ் போனபோது வாங்கிவந்தது.” 

கணிசமான சமையலறை, அதையொட்டிய சாப்பிடும் இடம், நீண்ட குடும்ப அறை. ரைலன் பார்வையை ஓட்டினான். பளிங்குக்கல் மேஜைகள், விலையுயர்ந்த அடுப்பு, நான்கு கதவுகளுடன் ஃப்ரிட்ஜ், நினைத்தமாத்திரத்தில் காஃபி தயாரிக்கும் கூரிக், பத்மாவும் அனந்தும் பயணம் போன நாடுகளைக் காட்டும் வகையில், இத்தாலியில் இருந்து கண்ணாடி சிலைகள், ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கற்கள்…  

“பெரிய சௌகரியமான வீடு.”  

பத்மா ஷிகாகோ வந்தவுடன் வாங்கிய வீட்டை விற்று, அதில் வந்த லாபத்தில் அடுத்ததை வாங்கி, அதையும் விற்று மூன்றாவதாக…  

“தாங்க்ஸ். கொஞ்சம் பழசாகிவிட்டது.”  

ரைலனுடன் என்ன பேசுவது? பத்மாவுக்கு கர்னாடக சங்கீதமே தகராறு, சிம்ஃபனி என்பது, ஒட்டு மொத்தமாக ஒரு கும்பல் ஒருவரின் கையசைவுகளுக்கு… 

“ம்யுஸிக்கில் உனக்கு எப்படி ஆர்வம் வந்தது?” 

“ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாஷ்வில்லுக்கு இடமாறும் வரை என் தந்தை ப்ரூக்லினில் சங்கீத ஆசிரியர். ப்ரூக்லின் ஸிம்ஃபனியில் அவர் ச்செல்லோ வாசித்ததும் உண்டு. இசையில் இலவச ஆரம்பப்பாடம்” என புன்னகைத்தான். 

“காலேஜ்…” 

“பெர்க்லீ காலேஜ் ஆஃப் ம்யுசிக். இந்த பெர்க்லீ பாஸ்டனில்.” 

உரையாடலில் ஒரு இடைவெளி. ஏதோ யோசனைக்குப்பிறகு, ரைலன் தயக்கத்துடன் ஆரம்பித்தான்.  

“டிவ்யாவின் கீழ்பட்டப்படிப்புக்கு நீங்கள் கடன் வாங்கவில்லை என்று அவள் சொன்னாள்.”  

“அவள் இல்லினாய் (பல்கலைக்கழகம்) போனாள். உனக்குத்தான் தெரியுமே மாநிலக்கல்லூரி, சம்பளம் குறைச்சல்.”  

“ஃபார்ம்.டி.?”  

“அதுவும் இல்லினாய்.”  

“நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து நூறாயிரம் டாலர் ஆகியிருக்குமே.”   

“இன்னும் கொஞ்சம் அதிகம்.”  

“அதற்கும் அவள் கடன் வாங்கவில்லை.”  

“நாங்கள் வாங்கினோம், வீட்டின் பேரில். திருப்பிக்கொடுத்தாகி விட்டது.”  

பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியுசிக் தனியார் நிறுவனம் என்பதில் சந்தேகம் இல்லை. அதில் பட்டம் வாங்க அவனுக்கு நிச்சயம் கல்விக்கடன் தேவைப்பட்டு இருக்கும். பத்மாவின் மூளையில் பல ஆண்டுகளாக அடங்கிக்கிடந்த ஒரு சிந்தனைப்பொறி பிரகாசமாக சுடர்விட்டு எரிய… அதைத்தொடர்ந்து திடீரென ஒரு தீர்மானம்.  

“ரைலன்! நான் சொல்லப்போவதை நீ கவனமாகக் கேட்கவேண்டும்.” 

அவள் குரலின் கனம் அவனை நிமிரவைத்தது. 

“இதைப்பற்றி பல காலமாக நான் யோசித்து இருக்கிறேன். அதை ஒருவர் விரிவாக, எண்களுடன் மனதில்படியும்படி அழுத்தமாக எழுதியதை சென்ற வாரம் படித்தேன்… 

ராபர்ட் பால் வுல்ஃப் எழுதிய ‘ஒரு முன்னாள் வெள்ளை மனிதனின் சுயசரிதை’யில் இருந்து…

உலகப்போர் முடிந்து 1950-ஆம் ஆண்டு. 

யூ.எஸ்.ஸின் கீழ்-நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள். ஒவ்வொன்றிலும் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள். இரண்டுக்கும் ஒரே வருமானம், ஆண்டுக்கு ஆண்டு ஒரே சம்பள உயர்வு. ஒரே மாதிரியான உணவு, உடை, மனமகிழ்வுக்கான செலவுகள். 

ஒரு பக்கம் வெள்ளைநிற ஸ்மித். இன்னொரு பக்கம் கறுப்பு ராபின்சன். 

ஸ்மித் 500 டாலர் முன்பணம் போட்டு ஒரு வீடு வாங்குகிறார், மீதி 10, 000 டாலர் நிலையான 6 சதம் வட்டியில் 30 வருஷ அரசாங்கக் கடன். ஒவ்வொரு ஆண்டிற்கும் மார்ட்கேஜ் தொகை 720 டாலர். கடன் காலம் முடிந்தபோது, ஒவ்வொரு மாதம் கட்டிய தொகை, சொத்துவரி, இன்ஷுரன்ஸ், பழுதுபார்க்கும் செலவு ஆகியவற்றைக்கழித்து, வீட்டு மதிப்பின் உயர்ச்சி, வீட்டுக்கடனின் வட்டிக்கு வரிவிலக்கு இவற்றைக் கூட்டினால்… அந்த காலக்கட்டத்தில் வசிப்பதற்கு ஸ்மித் குடும்பம் செய்த மொத்த செலவு 36, 000 டாலர், வீடும் அவர்களுக்கு சொந்தம்.  

இராணுவத்தில் இருந்து விலகிய ராபின்சனிடமும் வீட்டுக்கு முன்பணம் கொடுக்க 500 டாலர் இருந்தது. ஆனால், ஊரின் கௌரவமான பகுதிகளில் அவர் வீடு வாங்காமல் தடுக்க மத்திய மாநில மாவட்ட சட்டங்கள், கடனை மறுப்பதற்கு வர்த்தக நிறுவனங்களின் மறைமுக வஞ்சகம். அதனால், அவர் குடும்பம் வாடகை வீட்டியேயே வசிக்க நேர்கிறது. மற்ற பொருள்களின் விலை போல் மாத வாடகையும் முப்பது ஆண்டுகளில் 120 டாலரில் இருந்து 350 டாலராக அதிகரிக்கிறது. ராபின்சன் குடும்பத்தின் வீட்டுக்கான மொத்த செலவு 82, 000 டாலர். வாடகை வீட்டின்மேல் அவர்களுக்கு எந்தவிதமான பாத்தியதையும் கிடையாது.

அப்பட்டமாகச் சொல்லப்போனால், முப்பது ஆண்டுகளில் ராபின்சன் குடும்பத்தில் இருந்து ஸ்மித் குடும்பத்துக்கு அரசின் அங்கீகாரத்துடன் 46, 000 டாலர் மாற்றப்பட்டது. 

…வேதியியல் சமன்பாட்டில் இரண்டு பக்கங்களின் பொருட்களும் சரிசமமாக இருந்தாக வேண்டும். அதன்படி பார்த்தால், வீட்டுக்கடனின் வட்டியை ஒருவர் வருமானவரியில் கழித்தால், வாடகை கொடுக்கும் வேறு யாரோ அதை சரிக்கட்ட வேண்டிவரும். அனந்தின் எண்ணங்கள் வேறு. ‘சட்டப்படி நடந்தோம். சாமர்த்தியமாகப் பணம் சேர்த்தோம். யாரையும் ஏமாற்றவில்லை. யாருக்கும் துரோகம் செய்யவில்ல’ என்று சொல்வான். நான் அப்படி நினைத்தது இல்லை. யூ.எஸ். சட்டங்கள் எல்லாமே சிறுபான்மை இனத்தவர்களின் சுதந்திரங்களைப் பறித்து, வெள்ளை மக்களுக்கு, அதிலும் சொத்து வைத்திருக்கும் வெள்ளைகளுக்கு சாதகமாக காங்க்ரஸ் இயற்றியவை. உன் குடும்பம் வெள்ளை என்றாலும் உன் தந்தை வீடு வாங்கவில்லை.”  

“அவர் ஒரு ஃப்ரீ ஸ்ப்ரிட். கார், வீடு, ஸ்டாக் எல்லாம் அவருக்கு வேண்டாத வேதனைகள்.”  

“சட்டம் வேறு, நியாயம் என்பது வேறு. சட்டப்படி நாங்கள் திருடாவிட்டாலும், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் சொந்த வீடு என்கிற போர்வையில் ஏறக்குறைய 100, 000 டாலரை நாங்கள் அபகரித்து இருக்கிறோம். அதற்கு அரசாங்கமும் உடந்தை. அந்தப்பணம் சொத்து இல்லாத பல குடும்பங்களில் இருந்து வந்தது. மனசாட்சி தெளிவாக இருப்பதற்கு நான் அதைத் திருப்பிக்கொடுக்க விரும்பினாலும் முகம்தெரியாத அவர்களைத் தேடிக்கொடுக்க முடியாது.” 

உரையாடல் ஒரு முக்கியமான முடிவு நோக்கிப் போவதை உணர்ந்த ரைலன் பத்மாவின் முகத்தையே உற்றுப்பார்த்தான். 

“அதனால்… நான் உன் ஒரு குடும்பத்தில் இருந்து பணத்தை எடுத்ததாக வைத்துக்கொள்வோம். உன் கல்விக்கடன் எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. அதை அடைப்பதற்கு உதவியாக நான் 50, 000 டாலர் தரப்போகிறேன். திவ்யாவுடன் அத்தொகையை வரதட்சணையாக நீ ஏற்றுக்கொள்! ஒரு அநியாயத்தை நியாயப்படுத்திய திருப்தி எனக்கு.” 

மருந்துகளை வாங்குகிறவர்கள், அவற்றின் விவரங்களைக் கேட்பவர்கள் எல்லாருக்கும் பொறுமையாக, சிரித்த முகத்துடன் பதில்சொன்ன திவ்யாவின் குணநலன்களால் ரைலன் கவரப்பட்டான். அவள் தாயின் எதிர்பாராத அன்பளிப்பைக் கேட்டு அவனுக்கு அதிர்ச்சி. அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு,   

“முதலில், ஒரு விஷயத்தை முடித்துவிடுவோம். என் பெற்றோர்களுக்கு ஓய்வுக்கால சேமிப்பு அதிகம் கிடையாது. சொந்த வீடு இல்லை. என் தாயின் மருந்துகளுக்கு அரசாங்கத்தின் நிச்சயமற்ற தயாள குணத்தைத்தான் நம்பி இருக்கிறோம். உங்கள் வீட்டையும், சொகுசான வாழ்க்கையையும், யோசிக்காமல் செலவுசெய்யும் நிதிநிலமையையும் பார்த்து ஒரு நிமிஷம் எனக்கு பொறாமை வந்தது உண்மை. அத்தவறுக்கு இப்போது நான் மனம் வருந்துகிறேன். என் மன்னிப்பை ஏற்க வேண்டும், மிசஸ் ராம்!” என்றான் குற்றம் தோய்ந்த குரலில்.  

“முடியாது!” என்று பத்மா முகத்தை இறுக்கிக்கொண்டாள். பிறகு, தளர்ந்த புன்னகையில், 

“மாம் என்று என்னை அழைத்தால் நான் ஏற்றுக்கொள்வேன்.” 

***

Series Navigation<< 2084: 1984+1002010- மீண்டும் மால்தஸ் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.