வெள்ளைப் புள்ளி

மொழியாக்கம்: மைத்ரேயன்

‘யுவர் டக் ஈஸ் மை டக்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர், டெப்ரா ஐஸென்பர்க் என்ற எழுத்தாளர் எலெக்ட்ரிக் லிடரேச்சர் என்ற இணையப் பத்திரிகைக்கு எழுதிய ஒரு சிறு பரிந்துரையின் மொழியாக்கம்:

பல வாசகர்கள் நீளம் மட்டான கதை என்பது, ஆகிருதியிலும் சிறியது என்று கருதுவதைப் பார்த்தால் புதிராக இருக்கிறது – ஆத்திரமூட்டுகிறது என்றுகூடச் சொல்லலாம். வெறுப்பின் ஆழங்களைப் பற்றி – வெறுப்பினால் கிட்டும் காயங்களின் பெருக்கு, அழிக்கப்பட முடியாத அதன் நீடிப்பு, தீரவே தீராத அதன் பிடிவாதம், அது பரப்பப்படும் விதம், மனித குணத்திலும், உள நிலையிலும் அது உருவாக்கும் வக்கிரங்களின் அதிர்வுகள் – ஜானதன் ப்ளூம் எழுதிய இந்தக் கதையை எடுத்துக் கொள்வோம், இதைவிட வேறெந்தக் கதை மேலும் சக்தி வாய்ந்ததாக, பெரியதாக இருக்க முடியும்?

சொல்லப் போனால், ‘வெள்ளைப் புள்ளி’ எனும் இக்கதையின் சுருக்கமும், கட்டுப்பாடும்தான் பெரும்பாலும் வெடித்துச் சிதறச் செய்யும் சக்தியை இந்தக் கதைக்குக் கொடுக்கின்றன. தொனி என்னவோ சகஜமாகத் தெரியும், மொழி இதைவிட மேலும் இயல்பாக, நயமாக, மேலும் நேரிடையானதாக இருந்திருக்க முடியாது. இதில் வளர்ந்த மனிதர் ஒருவர், மருத்துவரான தன் அப்பா, மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்க அறைகளில் நடந்து போகையில், 9 வயதான தாம் உடன் சென்ற அனுபவத்தை நேர்மையாகப் பதிவிடுகிறார். அந்தச் சம்பவம் அவருடைய அப்பாவும், அம்மாவும் மண உறவை முறித்துக் கொண்ட பிறகு, சில மாதங்கள் கழித்து நடப்பதாகக் கதை.

கூரிய புத்தி கொண்ட சிறுவனின் நுண்ணுணர்தல் திறனும், மரியாதையான நடத்தையும் உடனே கவனத்தை ஈர்க்கின்றன. தம் அப்பாவின்மீது அவன் கொண்டுள்ள அபிமானம், தம் அப்பாவின் அன்பு, அங்கீகாரம் இவற்றைப் பெறுவது பற்றி அவன் கொள்ளும் கவலை, இவையெல்லாம் நமக்குப் பெரும் ஈர்ப்பைத் தருகின்றன. இப்படி ஒரு குழந்தையின் திறமைகளை வளர்த்தெடுக்க எந்த ஒரு பெற்றோரும் ஆசைப்படுவர்; எந்தப் பெற்றோரும் பெருமை கொள்வர், ஆனால் அவனுடைய அப்பாவின் கர்வம் நெருக்கடிகளுக்கு எப்படி அடிபணிய வைக்கப்படுகிறது, அந்த அருமையான குழந்தை என்னென்ன குறிக்கோள்களுக்கு எல்லாம் பயன்படுத்தப்படுகிறான் என்பதை எல்லாம் படிக்கும்போது நமக்கு இன்னுமே கூடுதலான அதிர்ச்சி எழுகிறது. அன்பு, அல்லது அது போன்ற ஓர் உணர்வு, அடக்கப்பட முடியாததும், குருடாக்குவதுமான வரலாற்றால் எப்படிச் சுலபமாக நோய்வாய்ப்படுத்தப்படுகிறது.

முதல் வாக்கியத்தில் வரும் “குழந்தையைத் தன்னிடம் வைத்துக் கொள்ள எழும் கசப்பான சண்டை” என்பது மறுபடி எங்கும் பேசப்படவில்லை என்றாலும், அது கதை நெடுக ஓர் ஏவுகணையைப் போல எரித்துக் கொண்டே போகிறது. கதையின் தலைப்பில் வரும் ‘வெள்ளைப் புள்ளி’ என்பது எக்ஸ்-ரே படத்தில் தெரியும் புற்று நோய்க்கான அறிகுறி. பயிற்சி பெறாதவரின் பார்வைக்கு அது சாதாரணச் சதை போலவோ, அல்லது எலும்பு போலவோ தெரிந்திருக்கும், இங்கு படிக்கும்போதே, நாமே புற்று நோயைக் கண்டு பிடிப்பது எப்படி என்று கற்பது போல இருக்கிறது. கணிசமான காலம் கடந்தபின், திரும்பி நோக்கிச் சொல்லப்படும் கதையாக இருந்த போதும், நம்மிடம் சொல்லப்படுவதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது என்பதையும் முற்றிலும் நம்மை அழிக்கும்படியான உள்ளர்த்தங்களை அனுபவிப்பதையும், விவரிப்பவர் மிகக் கவனமாக நமக்கே விட்டு வைக்கிறார்.

வெள்ளைப் புள்ளி

எனக்கு ஒன்பது வயதாகிறபோது, என் பெற்றோர்கள், மணமுறிவுக்குப் பிறகு யார் என்னை வளர்ப்பது என்பது பற்றி ஒரு கசப்பான சண்டையை நடத்தி இருந்தார்கள். இறுதியில், திங்கள் கிழமையிலிருந்து சனிக் கிழமைவரை என் அம்மாவிடம் நான் இருக்க வேண்டும், சனி இரவிலிருந்து ஞாயிறு பூராவும் நான் என் அப்பாவோடு இருக்கலாம் என்று ஒரு நீதிபதி தீர்ப்பு சொன்னார். அந்தக் காலத்தில் என் அப்பா வாரத்தில் ஏழு நாள்களும் மருத்துவமனைக்கு எந்நேரமும் கூப்பிடப்படலாம் என்ற வகைப் பொறுப்பில் இருந்தார், அவர் வேலை செய்யும் நேரங்களில் என்னைப் பராமரிக்க, அவர் வீட்டில் வேறு யாரும் இல்லை, அதனால் ஞாயிறுகளில் தம்மோடு என்னையும் மருத்துவமனைக்கு அழைத்துப்போய், நோயாளிகள் இருந்த அதே தளத்தில், ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறை ஒன்றில் இருக்க வைத்திருந்தார்.

அந்த ஓய்வறை, இரண்டு துணி அலமாரிகள் அளவுதான் இருந்தது. சொரசொரப்பான கட்டம் போட்ட துணியால் மூடப்பட்ட ஒரு சோஃபாவும், தரையருகில் ஆசனம் போல இருந்த தோலால் ஆன வட்டமான நாற்காலி ஒன்றும், காஃபி எந்திரம் ஒன்றும், சில கோப்பைகளும், ஒரு பாத்திரம் கழுவும் தொட்டியும், சில சுவற்றலமாரிகளும், ஒரு தொலைபேசியும், தொலைபேசிக்கு மேலே, துளைத்துச் சிகிச்சை செய்யப்பட வேண்டிய புற்று நோய்க் கட்டிகளை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதற்கான வழி முறைகள் அச்சிடப்பட்டு, ப்ளாஸ்டிக் தகட்டால் போர்த்தப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியும் அங்கிருந்தன. அந்தச் சுவரொட்டி அமெரிக்க அகடமி ஆஃப் பாதாலஜியால் தயாரிக்கப்பட்டிருந்தது. முதல் தடவை அங்கு நான் போனபோது, நான் பிறந்த பிறகு, மருத்துவமனையில் முதல் முறையாக நான் நுழைந்திருந்தேன். அன்று அந்த சோஃபாவில் நிமிர்ந்து நேராக உட்கார நான் முயன்றேன், எல்லா இடங்களுக்கும் நான் தூக்கிக்கொண்டு போகும் ஒரு விளையாட்டுக்காரரின் சரிதைப் புத்தகம் ஒன்றைப் படிக்க முயன்றேன், ஆனால் என்னால் அதில் ஊன்றவே முடியவில்லை. என் அப்பா என்ன செய்கிறார் என்று அறிய – எங்கே அவர் இருந்தார், யாரோடு இருந்தார் என்று அறிய – என் புத்தி அலைந்தது.

அவர் பயிற்சி மருத்துவராக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, என் அப்பா தன் வேலையைப் பற்றி யாருடனும் ஒருபோதும் பேசியதில்லை, ஆனால் அவர் என்ன செய்தார் என்பது பற்றி எனக்குச் சில விஷயங்கள் தெரிந்திருந்தன. இது ஏன் என்றால், சில வருடங்கள் முன்பு துவங்கி, அவருடைய மருத்துவப் புத்தகங்களில் இரண்டின் இறுதிப் பகுதிகளை நான் மேலோட்டமாகப் படித்தேன், அதில் இருந்த நுரையீரலில் நோய்ப் பட்டவர்களின் படங்களைப் பார்த்தேன். சாவுக்குப் பிறகு, ஜோடிகளான நுரையீரல்கள் பல உடல்களிலிருந்து அகற்றப்பட்டுப் படமெடுக்கப்பட்டிருந்தன, அவற்றை நான் பார்த்தேன். அப்படி ஒரு ஜோடி, நுரையீரல் சீழ்க்கட்டி நோய் இருந்த ஒருவருடையதாக இருந்தது, வழக்கமாக இருக்கும் சிவப்பு நிறத்துக்குப் பதிலாக, அவற்றின்மீது சாம்பல் நிறத் திரவம் பூசியிருந்தது. புகை பிடிக்கிற பழக்கத்தால் இன்னொரு ஜோடி நுரையீரல்களில் கரிப் படிவுகளால் ஓட்டைகள் ஏற்பட்டிருந்தன. புகை பிடிப்பவர்களில், அழுகியதால் பாதி வெட்டப்பட்ட பாதம் கொண்டவர், தொண்டையில் ஓட்டை போடப்பட்டிருந்தவர், வாயில் நாக்கே இல்லாத ஒருவர் ஆகியோரின் படங்களை நான் பார்த்திருந்தேன்.

என்னுடைய கூச்சமும், நம்பிக்கையும் கலந்த வழியில், என் அப்பா நுரையீரல்களுக்குச் சிகிச்சை செய்தார் என்ற விஷயத்தில் நான் பெருமை கொண்டிருந்தேன். நுரையீரல்கள் அவசியமானவை – ஆனால் அதிகம் கவனம் பெறாதவை. மனித உடலின் பாராட்டப்படாத நாயகர்களாக அவற்றை நான் கருதினேன். மிகவும் கொண்டாடப்படும் இதயம், மூளை ஆகியவற்றைப்போல அல்லாமல், யாரும் ஒரு போதும் நுரையீரல்களைப் பற்றிப் பேசியதில்லை, இருந்தாலும் நாம் யாரும் அவை இல்லாமல் நான்கு நிமிடங்கள்கூட உயிரோடு இருக்கவியலாது. அவை மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை மூச்சை உள்வாங்கி, வெளிவிட்டன, அனேகமாக எவரும் இதைக் கவனிப்பதில்லை. அவை ரத்த ஓட்டத்தில் பிராணவாயுவைக் கலக்கின, கரியமிலத்தை அகற்றின. நாம் தூங்கும்போதுகூட, நம்மை இயக்கிக் கொண்டிருந்தன.

ஒரு மணி நேரத்துக்கும்மேல் நான் பகலிலேயே கனவு கண்டுகொண்டிருந்தேன், என் அப்பா, அவர் பெரிய மனிதராக இருந்தார் – ஆறடி இரண்டங்குலம் உயரம், நூற்றித் தொண்ணூறு பௌண்ட்கள் எடை, வெள்ளை நிறத்தில் சோதனைக் கூடத்து மேலங்கியும், பழுப்பு மென் காலணிகளும் அணிந்து, சுருட்டையான கரிய தலைமுடி கொண்டவராக இருந்தார் – அந்த ஓய்வு அறைக்குத் திரும்பி வந்தார், தாழ்வான இருக்கை கொண்ட ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார், கால் மேல் கால் போட்டுக் கொண்டார், அவருடைய பாதங்கள் என் பாதங்களுக்கு அருகில் இருந்தன. அன்று காற்றுப் பதனப் பெட்டி சரியாக வேலை செய்யவில்லை, அவருடைய நெற்றியில் வியர்வைத் துளிகள் இருந்தன, கைகளுக்கு அடியில் நாற்றமடித்த வியர்வை ஈரச் சுவடுகள் தெரிந்தன. அவருடைய சுவாசங்கள் வேகமாக, சுய நம்பிக்கையைக் காட்டுவனவாக இருந்தன. அவர் தம் எல்லா நோயாளிகளையும் ஏற்கெனவே பார்த்திருந்தார், சில குறிப்புகளை எழுத வேண்டிய நிலையிலிருந்தார். மூன்று பிரதிகளைக் கொடுக்கும் காகிதத்தில், கட்டங்களில் குறியிட்டு, வார்த்தைகளை அடித்துத், தன் பெயரை ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் கையெழுத்தாக எழுதி, பக்கம் பக்கமாக நீல பால்பாயிண்ட் பேனாவால் எழுதினார். நான் ஒரு விளையாட்டுக்காரரின் வாழ்க்கைச் சரித்திரப் புத்தகத்தால் என் கண்களைப் பாதி மறைத்துக் கொண்டு, அதைப் படிப்பதுபோல நடித்துக் கொண்டிருந்தேன்.

என் அப்பா அந்தப் பக்கங்களில் – ஒன்று வெள்ளை, ஒன்று மஞ்சள், ஒன்று இளஞ்சிவப்பு நிறம் – என்ன எழுதிக் கொண்டிருந்தார் என்பது பற்றி எனக்கு மிகவும் ஆர்வம் எழுந்திருந்தது, ஆனால், அதைக் கேட்க எனக்குத் துணிவில்லை. அவர் என்னிடம் முதலில் பேசினாலே ஒழிய, மருத்துவமனையில் அவரிடம் பேசாமல் இருப்பதுதான் சிறந்த வழி என்று நான் முடிவு கட்டியிருந்தேன்.

இறுதியாக அவர் கேட்டார்,“ராபர்டோ க்ளெமெண்டோ எப்படி இருக்கிறார்?”

“அவர் நிகராகுவாவில் பூகம்பத்தில் பலியானவர்களுக்கு உதவ முயல்கையில் இறந்து போய் விட்டார்,” நான் சொன்னேன்.

“ஆமாம், எனக்கு அது நினைவிருக்கிறது,” என் அப்பா சொன்னார். “இங்கேயிருந்து போவதற்கு நீ தயாராக இருக்கிறாயா?”

∞∞∞∞

அனேகமாக, ஒவ்வொரு ஞாயிறன்றும் அப்பா மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். சில சமயம் அவர் வருணித்தபடி ‘நிஜமான அவசர’ நிலைகளுக்காக இருந்தன, சில நேரம் அவை தேவையில்லாத பதட்டமாக ஆயின. அவருடைய அடுக்ககத்தில் நாங்கள் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கையிலோ, அல்லது எங்களுக்கு விருப்பமான விளையாட்டான, என்சைக்லோபீடியாவை வைத்துக்கொண்டு ஆடும் விளையாட்டில் ஈடுபட்டு இருக்கையில், அவருடைய அவசர அழைப்புக் கருவி ஒலிக்கும். அந்த என்ஸைக்லோபீடியா விளையாட்டு என்பதில், என்சைக்லோபீடியா புத்தக வரிசையில் ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக் கொள்வோம், ஏதாவது ஒரு பக்கத்தைத் திறப்போம், அதில் இருந்த விஷயங்களைப் பற்றி ஒருவர் மற்றவரைக் கேள்விகள் கேட்போம். அப்பாவின் அழைப்புக் கருவி ஒலித்ததும், அவர் வழக்கமாகச் சொல்வார், ”சரி பையா, நாம் போகலாம்.”

சில ஞாயிறுகளில் என் அப்பா ஒரு நோயாளியை மட்டுமே கவனிக்க வேண்டி இருந்தது; மற்ற ஞாயிறுகளில் பலரைக் கவனித்தார். சில சமயங்களில் அவர் தீவிர சிகிச்சை மையத்துக்குப் போவார்; மற்ற நேரங்களில் அவர் நுரையீரல் சிகிச்சைப் பகுதிகளில் மட்டுமே சுற்றிவருவார். அவர் பார்த்தவர்களை ‘என் நோயாளிகள்’ என்று அவர் வருணிப்பதைக் கேட்டாலே எனக்கு உற்சாகமாக இருக்கும்; அதற்குப் பொருள் அவர் ஒருவரே அந்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார் என்பது. தன் நோயாளிகளை அவர் பார்த்தபோது அவர் என்ன செய்தார் என்பதைக் கேட்க எனக்குத் துணிவில்லை, இத்தனைக்கும் அதைத் தெரிந்து கொள்ளத்தான் எனக்கு மிகவும் ஆவலாக இருந்தது. நான் ஓய்வறையில் மட்டுமே இருந்தேன், படித்துக் கொண்டிருந்தேன், அவர் போய் வந்தார்.

∞∞∞

ஒரு ஞாயிறன்று காலை நேரம், வழக்கத்தைவிட முன்னதாகவே என் அப்பாவுக்கு அழைப்பு வந்திருந்தது. நாங்கள் போகும் வழியில் மருத்துவமனையின் சிற்றுண்டியகத்துக்குப் போனோம். அதன் முகப்பில், முகவாய் தொங்கலாக இருந்த குதிரைவால் கொண்டை போட்டிருந்த ஒரு பெண், என் அப்பாவை அறிந்ததும் புன்னகைத்தாள், பிறகு, அவர் இன்று தன்னுடன் அழைத்து வந்திருக்கிற இந்த அருமையான இளைஞன் யார் என்று அப்பாவிடம் கேட்டாள், அந்தப் பெண்மணியைச் சூழ்ந்து பருப்புக் கூட்டு இருந்த பாத்திரமும், நொறுக்குத் தீனிகளும், சிறுமி டெப்பி கேக்குகளும், சில சமைத்துக் குளிர வைக்கப்பட்ட மாமிசத் துண்டுகளும், பாலாடைக் கட்டிகளும், ஒரு டப்பாவில் மேயோன்னீஸ் கூழ் பொட்டலங்களும் இருந்தன. அந்தப் பெண்மணியிடம் என் பெயரைச் சொன்ன பிறகு, அப்பா லவங்கப் பட்டைப் பொடி தூவிய சில பன்களை வாங்கினார். அவற்றை அந்தப் பெண் நுண்கதிரலை அடுப்பில் சுடவைத்தார். அந்த அடுப்புக்குள் கஞ்சித் துளிகள் எங்கும் சிதறி இருந்தன. என் அப்பா ஒரு கோப்பை காஃபியும் வாங்கினார்.

மின்தூக்கியில் நாங்கள் மேலே ஏறியபோது, எத்தனை தளங்களைத் தாண்டினோம் என்று நான் எண்ணிக் கொண்டேன்.

ஓய்வறைக்கு வந்து சேர்ந்தபோது, என் அப்பா என் தலையைத் தடவி அளைந்தபடி சொன்னார், ”ஒவ்வொரு வாரமும் இங்கே வந்தாலும், நீ ஏதும் குறைப்பட்டுக் கொள்ளாமல் இருக்கிறாய், நல்ல பையன் நீ. நெஞ்சு எக்ஸ்-ரே படங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்று இன்றைக்குக் கற்றுக் கொள்ள உனக்கு விருப்பமா?”

என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை.

இரண்டு மணி நேரம் போல ஆகியது, எல்லா நோயாளிகளையும் பார்த்து முடித்து விட்டு, என் அப்பா ஓய்வறைக்குத் திரும்பினார், கையில் ஒரு க்ளிப் பொருந்திய அட்டை இருந்தது.

”இப்ப செய்யலாம்,” என்றார் அவர்.

நானும் அவரும் நுரையீரல் சிகிச்சைப் பகுதியைப் பார்க்க, அந்த பெரிய அறை வழியே நடந்து போனோம். அவர் நர்ஸ்களுக்கு வந்தனம் தெரிவித்தார். நான் அறையின் சுவர்மீது விரல்களால் கோடிழுத்தபடி சென்றேன். மூலி புற்களும், டாம்பா வெர்வெய்ன் செடிகளுமாக வரையப்பட்ட ஓவியங்களைக் கடந்து போனோம். விரைவிலேயே சுவரில் இருந்த ஒரு சிறு திறப்பை அடைந்தோம். அதனுள் ஒரு சிறு மாடம், அதில் சுவரில் பொருத்தப்பட்ட எக்ஸ்-ரே படங்களைப் பார்க்கும் பெட்டி இருந்தது. அதை ஒட்டிச் சுவரில் ஒரு ப்ளாஸ்டிக் பெட்டி திருகாணியால் பிணைக்கப்பட்டிருந்தது, அதில் தாறுமாறாகப் பல டஜன் எக்ஸ்-ரே படங்கள் திணிக்கப்பட்டிருந்தன. சுவருக்குப் பின்னே மூடிய ஒரு கதவு.

என் அப்பா அந்தக் கதவு வழியே போய் மறைந்தார், ஒரு நிமிடம் கழித்துத் திரும்பினார், அலங்கோலமான ஒரு காகித உறையில் சிறு கற்றை எக்ஸ்-ரே படங்கள் இருந்தன.

“சரி,” என்றார், “முதல்ல நீ தெரிஞ்சுக்க வேண்டியது, ஒழுங்கா இருக்கிற படத்துண்டை எப்படிப் பார்க்கணுங்கறது.”

ஒரு எக்ஸ்-ரே படத்துண்டை திரையில் ஏற்றினார், பார்க்க உதவும் விளக்கை எரியச் செய்தார். படத்தின் நடுவில் ஒரு ஜோடி நீண்ட கருப்பான பகுதி இருந்தது, இரு புறமும் சமச்சீராக இல்லை, ஒன்றின் கீழ்ப்பகுதி கூடுதலாகக் கூரிய வளைவோடு தெரிந்தது.

“நுரையீரல்கள்,” என்றேன் நான்.

“அது ரொம்ப சரி,” அவர் சொன்னார்.

முதலில், இரு நுரையீரல்களும் எனக்கு ஏரிகளை அல்லது குளங்களை நினைக்கச் செய்தன, பிறகு இறக்கைகளையும், ஜன்னல்களையும். அதன் பிறகு கேலிச் சித்திரங்களில் நாம் பார்க்கிற கல்லறைக் கற்களை நினைவூட்டின.

“இவை ஏன் கருப்பாக இருக்கின்றன என்று உன்னால் சொல்ல முடியுமா?” என்று கேட்டார் அப்பா.

நான் இல்லை என்று தலையை ஆட்டினேன். என் கூச்ச சுபாவம், தவறான பதிலைச் சொல்லிவிடுவது குறித்த பயத்தை எனக்கு ஊட்டி இருந்தது.

“ஏன் என்றால் அவை அனேகமாகக் காற்றுதான்,” அவர் சொன்னார். “ஆனால் அவை ரொம்பக் கருப்பாக இருக்கவும் கூடாது. அப்படி இருந்தால் அங்கே காற்று அடைபட்டுக் கிடக்கிறது என்றாகும்.”

ஆரோக்கியமான நுரையீரல்களின் குணாதிசயங்களைச் சொல்லிக் கொடுத்தபின், மெல்லிய வலைப் பின்னலாக இருந்த மூச்சுக் குழாய்களைக் காட்டினார், பிறகு நுரையீரல்களைச் சூழ்ந்து இருந்த வெண்மையான பகுதிகளின்மீது என் கவனத்தைத் திருப்பினார்: விலா எலும்புகள், கழுத்து எலும்பு, முதுகெலும்பு, குரல்வளை, தோள் பட்டை எலும்புகள், கைத் தசைகள், உதர விதானத் திரை மற்றும் இதயம் ஆகியன அவை.

பிறகு ஆரோக்கியமான எக்ஸ்-ரே படத்தகட்டை நகர்த்திவிட்டுச் சொன்னார், “இப்ப நாம கொஞ்சம் நோய்களைப் பார்க்கப் போறோம்.”

சாதாரணத் தகட்டுக்கு அருகில் இன்னொரு எக்ஸ்-ரே தகட்டைச் செருகினார்.

“சாதாரணத் தகட்டைவிட இது எப்படி மாறி இருக்கு?” என்று கேட்டார் அப்பா.

அது சுலபமாக இருந்த கேள்வி.

“ஒரு நுரையீரல் வெள்ளையாக இருக்கு,” என்றேன்.

“அது சரி,” அப்பா சொன்னார். “இடது பக்கத்தில கீழ்ப்பகுதி மொத்தமும் வெள்ளை. இந்த நோயாளியின் விஷயத்தில, நுரையீரலில் இருக்கிற சிறு காற்றுப் பைகள், அல்வியோலி என்று பெயர் கொண்டவை, அடர்த்தியான திரவத்தால் நிரம்பி விட்டிருக்கின்றன. இந்த நோயாளிக்கு நிமோனியா.”

“இந்த நோயாளி இறந்து விடுவாரா?” நான் கேட்டேன்.

“அது அவசியமில்லை,” அப்பா சொன்னார். “நமக்கு இன்னும் சில விஷயங்கள் தெரிந்திருக்கணும். அந்த நோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது, நோயாளியின் வயது இப்படி. ஆனால், அனேகமாக இறக்க மாட்டார்,” என்றார் அவர்.

அப்பா இன்னொரு எக்ஸ்-ரே தகட்டை மேலே ஒட்டினார்.

“இங்கே என்ன பிரச்சினை?” அவர் கேட்டார்.

இது கடினமாக இருந்தது. நான் தலையை ஆட்டித் தெரியாதென்றேன்.

“நுரையீரல்களைப் பார்,” அப்பா சொன்னார். “ஆரோக்கியமான நுரையீரல்கள் நெகிழக் கூடியவை. நாம் மூச்சை இழுக்கும்போது, அவை விரியும், விடும்போது சுருங்கும். சில நோய்கள் தாக்கினால் அவை இந்த நெகிழும் குணத்தை இழந்து விடுகின்றன. அவை அளவுக்கு அதிகமாக உப்பும். இங்கே இதயம் எத்தனை குறுகித் தெரிகிறது பார். தட்டையாக, கீழே போய்விட்ட உதர விதானத் திரையைப் பார்க்கலாம். இங்கே நுரையீரல்கள் ரொம்பப் பெரிசாகவும், ரொம்பக் கருப்பாகவும் இருக்கின்றன. நான் சொன்னேனில்லையா, காற்று இங்கே சிறைப்பட்டிருக்கிறதென்று. இங்கே ரத்தத்தில் போதுமான அளவு பிராண வாயு இல்லை. இந்த நபருக்குக் காற்றடைப்பு நோய் இருக்கிறது.”

“இந்த நோயாளி இறப்பாரா?” நான் கேட்டேன்.

“ஆமாம், இறக்கக் கூடும்,” அப்பா சொன்னார்.

“எப்ப?” நான் கேட்டேன்.

“எட்டு மாசத்திலேருந்து ஒரு வருடம், இல்லை ரெண்டு வருஷங்கள் போல ஆகலாம். என்ன சிகிச்சை வேலை செய்கிறது என்பதைப் பொறுத்தது.”

அவர் பதிலைப் பற்றி நான் யோசித்தேன், என் அப்பா அளவு, என் தாத்தா பாட்டிகள் அளவு சாவை நான் நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பியவனாக இருந்தேன்.

“இங்கே இருக்கறது உன்னைச் சற்று நின்று, வியக்க வைக்கக் கூடியது.” அவர் சொன்னார். “காற்றடைப்பு நோயாளிகள் என்னைப் பார்க்க வருகிற நேரம், அவர்கள் ஏற்கனவே கல்லறையில் ஒரு காலை வைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்நாள் பூராவும் புகை பிடித்தவர்கள். அவர்களின் நுரையீரல்களின் செயல் மந்தப்பட்டிருக்கும், அல்லது மோசமாகப் பழுதாகி இருக்கும். இருந்தும் இவர்கள், அந்த நோயை நிறுத்த ஒரே வழி புகை பிடிப்பதை நிறுத்துவதுதான் என்று தெரிந்திருந்தும்கூட, தொடர்ந்து புகை பிடித்தபடி இருப்பார்கள். மருத்துவமனையில் யாரும் பக்கத்தில் இல்லாதபோது தங்கள் படுக்கையிலேயே சிகரெட்டைப் பிடிப்பார்கள். இந்தப் பெரிய அறையில் மறுபக்கம்கூட அந்த வாடை வீசும். அதைப் பற்றி உனக்கென்ன தோணுது?”

இன்னோர் எக்ஸ்-ரே தகட்டை எடுத்தார். “இன்னும் ஒண்ணு?” என்றார்.

“சரி,” என்றேன்.

சாதாரணமான தகட்டுக்கு அருகே ஒரு நோயாளியின் தகடை மாட்டினார். இரண்டும் பார்க்க கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்தன.

“நல்லா உன்னிப்பாப் பார்,” என்றார் அவர்.

என்னால் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை.

“இங்கே, கழுத்து எலும்புக்குக் கீழே,”அவர் சுட்டினார். “இந்த அடர்த்தி. இந்த வெள்ளைப் புள்ளிப் பகுதி.”

“இப்ப எனக்குத் தெரியறது.” என்றேன்.

“இது புற்று நோய்,” என்றார் அப்பா.

இந்த நோயாளி இறப்பாரா என்று கேட்க எனக்குத் தைரியம் இல்லை. இறப்பது சாத்தியம்தான். அதற்குப் பதில், என் அப்பா, அவரைச் சுற்றித் தினமும் என்ன பார்க்கிறார் என்று நான் யோசித்தேன். சாதாரண மனிதர் பார்க்கிறதைவிட கூடுதலாக அவர் வேறு என்னவெல்லாம் கவனிப்பார்?

“இதை நீக்க ஏதாவது வழி இருக்கா?” நான் கேட்டேன்.

“அனேகம் பேருக்கு,” அவர் சொன்னார், “இது கண்டு பிடிக்கப்படற கட்டத்துல, நிலைமை மோசமாகி இருக்கும்.”

“எத்தனை சீக்கிரமா அவங்க சாவாங்க?” நான் கேட்டேன்.

“நான் பார்க்கிறவங்கள்ள நுரையீரல்ல புற்று நோய் இருக்கறவங்க நோய் கண்டு பிடிக்கப்படறதுலேருந்து ஒரு வருடத்துல செத்துப் போறாங்க. பெரும்பாலும் மூன்று அல்லது நாலு மாசம்தான் இருப்பாங்க. ஆனா நான் அதை அவங்க கிட்டே சொல்றதில்லை. அவங்க நேரடியாக் கேட்டாத்தான் சொல்வேன்.”

“ஏன் சொல்றதில்லே?”

“ஜனங்களுக்கு நம்பிக்கை இழக்காம இருக்க ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு உனக்குத் தோணல்லியா?”

இதைப் பற்றி நான் யோசித்தேன். பிறகு என் அப்பாவிடம் அந்த மாதிரி வெள்ளைப் புள்ளி இருக்கிற இன்னொரு எக்ஸ்-ரே தகட்டைக் காட்டச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். அப்புறம் இன்னொன்று, இன்னொன்று என்று கேட்டேன். என்னால் அவரளவு வேகமாகவும், மிகச் சரியாகவும் அந்த வெள்ளைப் புள்ளிகளைக் கண்டு பிடிக்க முடியணும் என்று நான் விரும்பினேன்.

கடைசியில், எனக்கு அது பிடிபட்டது. மூன்று புற்று நோய்ப் புள்ளிகளை வரிசையாகக் கண்டுபிடித்தேன். “இந்தச் செய்தியை ஒரு நோயாளிக்குச் சொல்ல வேணுங்கற நிலைமையைக் கற்பனை செய்து பார்,” என்றார் அப்பா.

அந்த வார்த்தைகள் என்னை அதிரச் செய்தன, ஏனெனில் அந்தக் கணம் வரை, வெள்ளைப் புள்ளிகளைக் கண்டுபிடிப்பது என்பது ஏதோ புதையலைத் தேடிக் கண்டு பிடிப்பது போலத்தான் தெரிந்தது.

“சரி,”அப்பா சொன்னார், “இன்னக்கி இது போதும். இந்த இடத்திலேர்ந்து நாம் போகலாமா?”

***

அந்த எக்ஸ்-ரே படங்களைப் படிக்கத் தெரிந்து கொண்ட பிறகு சில வாரங்களில், நல்ல நுரையீரல்களுக்கும், மோசமான கோழைக்கட்டு, காச நோய், காற்றடைப்பு, மேலும் புற்று நோய் உள்ளவற்றுக்கும் இடையே வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். சுருங்கிப் போய்விட்ட நுரையீரல்களையும், ஈளை நோயிருந்த நுரையீரல்களையும் பார்த்தேன். இளம் பிராயத்தினரை மட்டும் பாதிக்கிற ஓர் அபூர்வமான நுரையீரல் நோயை, அதற்கு நீளமான பெயர் இருந்தது, கண்டேன்.

ஒரு ஞாயிறன்று, மருத்துவமனைக்குச் சவாரி போகிறபோது, ஏழு நாள்களும் நோயாளிகளையே பார்ப்பதில் தனக்கு ஏற்பட்டிருக்கிற சலிப்பைப் பற்றி என் அப்பா பேசினார். அவருக்கு ஓர் இடைவெளி தேவையாக இருந்தது. ஆனால், ஞாயிறுகளில் நோயாளிகளைத் தனக்குப் பதிலாகப் பார்க்கக்கூடிய வேறு யாரையும் அவருக்குத் தெரியவில்லை.

“உங்கள் நோயாளிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றேன்.

அவர் சிரித்தார்.

“உனக்குத் தெரியுமா, இது எனக்கு ஒரு யோசனையைக் கொடுத்தது,” என்றார்.

“இன்னக்கி என்னோடவே வந்து நோயாளிகளை எல்லாம் பார்க்கறியா? நீ அந்த அறைக்குள் தலையை மட்டும் காட்டி அவங்களுக்கு ஹலோ சொல்லு. அது அவங்களுக்குக் கொஞ்சம் உற்சாகம் தரும். உன்னை மாதிரி ஒரு நல்ல பையனைப் பார்க்கறது.”

“என்னிக்கி வேணும்னாலும் வரேன்,” என்றேன்.

ஆக, ஒரு திட்டம் உருவானது. நான் என் அப்பாவுடன் நுரையீரல் நோயாளிகள் இருந்த பகுதி அறைகளில் அவரோடு நடந்து போவேன், எப்போது அறைக்குள் நான் வரலாம், எப்போது வெளியேறணும் என்று அவர் சொல்வார்.

“சிலப் பேர் ரொம்ப மோசமான நிலையில் இருப்பாங்க, அவங்களைப் பார்க்க வேண்டி வரும்,” என்றார் அவர். “உன்னால அதைத் தாங்கிக்க முடியுமா?”

“நிச்சயமா,” என்றேன்.

“என்ன செய்யலாம்னா, இன்னிக்கி நீ ஒரு நோயாளியை மட்டும் பாரு, அப்புறமா என்ன செய்யலாம்னு யோசிப்போம்.”

நாங்கள் மருத்துவ மனைக்கு வந்த பிறகு, என் அப்பா தீவிர சிகிச்சை நடக்கும் பகுதிக்குப் போனார். அங்கே ஒரு நபர் ஊசலாட்ட நிலையில் இருந்தார்.

நான் ஓய்வறையில் காத்திருந்த போது, என் அப்பா மிகச் சரியான சிகிச்சையை நோயாளிகளுக்குத் தந்தாலும், தொடர்ந்து தன் நோயாளிகளை இறப்புக்கு இழந்த வண்ணம் இருப்பது என் அப்பாவுக்கு எப்படி இருந்தது என்று நான் யோசித்தேன்,

அவர் திரும்பி வந்த போது என் தோளில் ஒரு கிள்ளு கிள்ளினார், “சரி, நாம் போகலாம்,” என்றார்.

நுரையிரல் பகுதிக்கு நடந்தோம், என் குட்டைக் கால்களால் அவரது நீண்ட கால்களின் வேகத்துக்கு ஈடு கட்டுவது கடினமாக இருந்தது.

“இந்தப் பெண்ணுக்கு காற்றடைப்பு இருக்கிறது,” என்று தாழ்ந்த குரலில் சொன்னார்.

அந்தப் பெண்ணின் எக்ஸ்-ரே தகடுகளை எனக்குக் காட்ட மாட்டேனென்றார்; அது அவரது அந்தரங்கத்தில் ஊடுருவதாகும். “ஆனால் உனக்கு இருக்கிற அனுபவத்தில், அவளுடைய படம் எப்படி இருக்கும் என்று உனக்கு நல்ல ஊகம் இருக்கும்.”

அந்தப் பெண்ணின் அறைக் கதவு அனேகமாக முழுதும் மூடியிருந்தது. எங்கள் எதிரே நான்கு அல்லது ஐந்து வயதான குழந்தையின் ஓவியம், காகிதத் தட்டுகள், ஐஸ் மிட்டாயின் குச்சிகள், க்ரேயான்கள், பசை, வண்ண நூல் துண்டுகளால் ஆன மரங்களும் பூக்களும் அதில் இருந்தன.

“சரி, இப்ப நாம உள்ளே போகலாம்,” அப்பா சொன்னார்.

கதவைத் தட்டினார். கரகரப்பான பெண் குரல் உடைந்தது, “யாரு?”

“ஹல்ல்லோஓ, மிஸர்ஸ் க்ரின்னெல்,” என் அப்பா சொன்னார், அவர் குரல் ஓங்கி ஒலித்தது. கதவைத் தள்ளித் திறந்தார், ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தார்.

அவர் நின்றார், அப்போது நான் படுக்கையின் கால்மாட்டில் நின்றேன். அவருடைய நரை முடி அழுக்கான மஞ்சள் நிறமாக மாறி இருந்த ஒரு மூதாட்டி படுக்கையில் தலை உயர்த்திச் சாய்வாகப் படுத்திருந்தார். அவர் வெளுத்து, சளைத்து இருந்தார், அவருடைய முகத்தின் தசைகள் இனிமேல் எந்தக் கட்டளைகளையும் பின்பற்ற முடியாதவை ஆகி விட்டன என்பது போல இருந்தது. அவருடைய மூக்குத் துவாரங்களுக்குள் ஆழமாக இரு மெல்லிய வளையக் கூடிய குழாய்கள் செருகப்பட்டிருந்தன, அவை தரையில் இருந்த பச்சை நிறக் கலம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தன, அந்த கலனுக்கு மேல்புறத்தில் ஒரு வால்வ் இருந்தது. நீல நிற மருத்துவ மனை அங்கி ஒன்றை அணிந்திருந்த அந்தப் பெண் தொலைக்காட்சியில் ஒரு புதிர் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார், அதில் போட்டியாளர் ஒரு பிழை செய்ததால் பார்வையாளர்கள் ஐயோ என்று கூவிக் கொண்டிருந்தனர்.

“இன்னக்கி உங்களோட மூச்சுத் திணறல் எப்படி இருக்கு, மிஸஸ் க்ரின்னெல்?” அப்பா அந்த விளையாட்டின் சத்தத்தை விட உரத்துக் கேட்டார். அந்தப் பெண் சில விநாடிகளுக்கு ஒரு முறை காற்றை உறிஞ்சி இழுத்துக் கொண்டிருந்தார்.  ”பிராணவாயு வைத்தது உதவுகிறதா?”

என் அப்பா படுக்கை அருகே சென்று, தொலைக்காட்சிப் பெட்டியின் ரிமோட்டை எடுத்து, அந்தக் காட்சியை மௌனமாக்கினார்.

“அப்படித்தான் நினைக்கிறேன், டாக்டர்,” அவர் கொரகொரத்தார், பிறகு காற்றை உறிஞ்சினார்.

“அப்படி நினைக்கிறீங்களா? நேத்திக்கி ஒண்ணுங்கிறது ரொம்ப மோசமான நிலை என்றால், உங்களுக்கு இருக்கறது ரெண்டுன்னு சொன்னீங்க. இப்பவும் ரெண்டுதான்னு சொல்வீங்களா? வாழ்க்கையை நீட்டிக்க நாம முயற்சி செய்யறோம். ஏதாவது முன்னேற்றம் இருக்கா?”

அந்தப் பெண் தன் எண்ணங்களைத் தொகுத்துக் கொண்டிருந்தார்.

“இந்தப் பையன் யார்?” அவர் கரகரப்பான குரலில் கேட்டார்.

“என்னோட பையன்,” அப்பா சொன்னார். “உங்களுக்குப் பார்த்தால் தெரியறதா?”

உண்மையில் நான் தோற்றத்தில் அப்பா மாதிரி எல்லாம் இல்லை. எத்தனையோ விதங்களில் நான் அவர் போல ஆகப் போவதே இல்லை; அவற்றில் உடல் வலுவும், அளவும் இரண்டு குணங்கள், அவ்வளவுதான்.

“இந்த அம்மணிக்கு உன் தோளில் என்ன மாதிரி தலை உட்கார்ந்திருக்கிறது என்று காட்டப் போகிறாயா?” என் அப்பா என்னிடம் கேட்டார். “அதுல நிறைய அறிவு ரொம்பி இருக்கு,” அந்தப் பெண்ணிடம் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

நான் என் விரல் கணுக்களை நெட்டி முறித்தேன், நான் தயார் என்று சொல்வது போல.

“ரொம்ப சரி,” அப்பா சொன்னார். “24 ஐ 48 ஆல பெருக்கினா என்ன வரும்?” “1,152,” என்றேன் நான் ஒரு நொடி கூடத் தயங்காமல்.

“31 ஐ 13 ஆல பெருக்கினா?”

“403.”

“ஐஸ்லாந்தோட தலை நகரம்?”

“ரெய்க்யவீக்.”

 “இருபத்தி ஒண்ணாவது அதிபர் யாரு?”

“செஸ்டர் ஆலன் ஆர்தர். நியூயார்க்கோட குடியரசுக் கட்சிக்காரர்.”

“டாம்பா எப்ப நிறுவப்பட்டது?”

“இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னே இங்கே இந்தியர்கள் வாழத் தொடங்கினாங்க. ஆனா ஸ்பானியர்கள் 1600 இல் வந்த பிறகு, இவங்கள்லெ பெரும்பாலானவங்க நோய்ப்பட்டு இறந்து போனாங்க. இன்னிக்கு இருக்கற டாம்பா 1824 இல துவங்கித்து, அது ஸ்பெயின் கிட்டேருந்து அமெரிக்க ஐக்கியம் அதை விலைக்கு வாங்கினப்பறம்தான்.”

“சரி, இப்ப நீங்க ஒரு கேள்வி கேளுங்க,” அப்பா அந்தப் பெண்ணிடம் சொன்னார். “ஏதாவது கேட்டு அவனை திக்கு முக்காட வையுங்க. முடியறதான்னு பாருங்க.” என்றார்.

“நான் இப்ப 2.5க்கு வந்திருப்பேன்,” என்றார் அந்தப் பெண் கரகரத்த குரலில், பிறகு காற்றை விழுங்கினார்.

“அது,” அப்பா சொன்னார், “எனக்கு சந்தோஷத்தைத் தரது. அதுதான்,” அவர் சொன்னார், “நான் கேட்க விரும்பறது.”

அப்பா அந்தப் பெண்மணியிடம் அடுத்த இரண்டு நாட்களுக்கு பிராணவாயு கொடுப்பதை நீட்டிக்கப் போவதாகவும், அப்படிச் செய்தால் என்ன ஆகிறது என்று பார்க்கவிருப்பதாகவும் சொன்னார். அவர் அந்தப் பெண்ணுக்கு ஒரு மருந்தைக் கொடுக்கப் போகிறதாகவும், அது மூச்சு போய் வரும் பாதைகளைத் திறக்க உதவும், காற்றோட்டத்தைச் சுலபமாக்கும் என்றும் தெரிவித்தார்.

அந்தப் பெண் ஆழமாக இருமினார்; அவருடைய நுரையீரல்களில் ஓட்டை இருப்பதால், ஈரமான ஏதோ ஒன்று அந்தத் துளைகள் வழியே வழிந்தோட முயல்வது போல அந்த ஒலி கேட்டது.

“புகையிலை கிட்டயே போகாதீங்க,” அவளிடம் அவர் சொன்னார். “இல்லைன்னா.”

கட்டம் போட்ட சட்டைஅணிந்த, தலையை ஒட்ட வெட்டி இருந்த முதியவர் ஒருவர், அந்தப் பெண்மணியின் கணவர் என்பது தெளிவாக இருந்தது, அறைக்குள் நுழைந்தார், அப்பெண்ணின் படுக்கைக்கு இன்னொரு புறத்தை மெதுவாக வந்தடைந்தார். கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்பவர் போலத் தெரிந்தார்.

”நாளைக்கு வந்து உங்களை மறுபடி பார்க்கிறேன்,” அப்பா அந்தப் பெண்ணிடமும் அவரது கணவரிடமும் சொன்னார்.

“பை,” நான் கையசைத்தேன்.

***

அடுத்த ஞாயிறன்று, அப்பா மேலும் சில நோயாளிகளைப் பார்க்க என்னை அனுமதித்தார். மிஸஸ் க்ரின்னெல் விடுவிக்கப்பட்டுப் போய் விட்டிருந்தார், ஆனால் பார்ப்பதற்கு மேலும் நிறைய பேர்கள் அங்கே இருந்தனர். மிஸஸ் க்ரின்னெலின் அறையிலிருந்து சில அறைகள் தள்ளி ஒரு அறையில் காற்றடைப்பு நோயால் துன்பப்பட்ட ஒருவரைப் பார்க்கப் போனோம். போகும் வழியில் என் அப்பா ரகசியமாகச் சொன்னார், “இந்த ஆளோட கதை முடிஞ்சு போச்சு. அதிக பட்சம் மூன்று மாசம்தான் இருப்பார். எது கொடுத்தாலும் அவருக்குக் கேட்க மாட்டேங்கிறது.”

அங்கே, அப்பா என்னிடம் கேள்விகள் கேட்டதற்கு, அந்த ஆணிடம் நான் டிஎன் ஏவில் நான்கு ந்யூக்ளியோபேஸ்கள் உண்டு- அவை ஸைடோஸின், குவானீன், ஆடினீன் மேலும் தைமீன் என்று சொன்னேன். 1780 இல் சராசரி அமெரிக்கரின் ஆயுள்காலம் (முப்பத்தி ஆறு), 1880 இல் (நாற்பது), 1980 ல் (எழுபத்தி மூன்று) என்று தெரிவித்தேன். தன் இளம் பிராயத்து நோய் ஒன்றைத் தன் வலுவாக மாற்றிக் கொண்ட ஒரு மேஜர் லீக் பேஸ்பால் விளையாட்டுக் காரரின் பெயரைச் சொன்னேன் – மோர்டெகாய் “மூணு விரல்” ப்ரௌன்.

அதன் பிறகு மேலும் இரண்டு காற்றடைப்பு நோய் இருந்த நோயாளிகளைப் பார்த்தோம், இருவருமே தேறி வராதவர்கள். இருவரிடமும் என் அப்பாவுடைய ஜோக் ஒன்றை நான் சொன்னேன், அதன் முத்தாய்ப்பு வாக்கியம், “ஆமாம், சாப்பாடு மோசமாகத்தான் இருந்தது, அதோட ரொம்பக் கொஞ்சமாத்தான் எல்லாத்தையும் கொடுத்தாங்க, கஞ்சப் பசங்க.” ஜோக் முடிந்ததும், பாராட்டுக்குத் தலை குனிவது போல நான் ஒரு கொஞ்சம் குனிந்து நிமிர்ந்தேன்.

பிறகு மோசமான கோழைக் கட்டு இருந்த ஒரு ஆளைப் பார்த்தோம், அப்பா அந்த நபர் நன்கு தேறி மருத்துவ மனையிலிருந்து விடுதலை பெறுவார் என்றும், ஆனால் அவர் சிகரெட்களை விடாமல் இருந்தால், மற்றவர்கள் இறங்கிய அதே சறுக்கு மரத்தில் அவரும் இறங்கிக் கொண்டிருப்பார் என்றும் சொன்னார்.

“அப்ப இங்கேருந்து போகத் தயாரா இருக்கியா?” என்று கடைசியாகக் கேட்டார்.

***

தொடர்ந்த அடுத்த வாரத்தில் என் அப்பா என்னுடைய அறிவு முதிர்ச்சியைச் சோதிக்கப் போவதாகச் சொன்னார். நுரையீரலில் புற்று நோயால் இறந்து கொண்டிருந்த ஒரு நோயாளியைச் சந்திக்க என்னை அழைத்துப் போக இருந்தார். நுரையீரலில் எங்கும் கட்டிகள். அவர் மூச்சு விட உதவும் கருவியில் இணைக்கப்பட்டிருந்தார், அது அவருடைய வலியைக் குறைத்தது, ஆனால் வருகிற வாரம் அவரிடம் காற்றைச் செலுத்த ஏதும் இருக்கப் போவதில்லை.

போகிற வழியில் ஒரு சோடா எந்திரத்தில் சில காசுகளைப் போட்டார், அவை எந்திரத்தின் உட்புறம் கலகலத்து வீழ்ந்தன. எந்திரத்தை இரண்டு தடவை தட்டினார், இரண்டு குளிர்பான டப்பிகள் பறந்து வீழ்ந்தன, நாங்கள் இருவரும் நிறைய பானத்தைக் குடித்தோம்.

“இந்தப் பெண்மணியை உன்னால் உற்சாகப் படுத்த முடியாது,” அப்பா சொன்னார். “நான் பல மாதங்களாக இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் அவருக்கு மகிழ்ச்சி தருவதில்லை.”

நாங்கள் உள்ளே போனோம். படுக்கையில் உயர்த்தி அமர்த்தப்பட்டிருந்தார், தலையில் மெல்லிய வலை போல முடி இருந்தது, முன் நெற்றியில் ஆத்திரத்தின் வரிகள் ஓடின, நான் பார்த்ததிலேயே மிக ஈரமான விழிகளோடு இருந்தார். அவை நீலமாக இருந்தன, அவற்றில் கண்ணீர் ஊறித் ததும்பியது, என்னை உற்றுப் பார்த்தார், துளைத்துப் பார்த்தார். மூக்கிலும் வாயிலும் மூடிய பிராணவாயுக்கான மூடி ஒன்று இருந்தது, அது குழாயொன்றால், தலைமாட்டில், சிவப்பு நிறச்சாயம் திரித்திரியாகப் பிய்ந்து கொண்டிருந்த ஒரு  சேமக்கலத்தில் இணைக்கப்பட்டிருந்தது. இன்னொரு குழாய் சக்கரங்கள் கொண்ட சுவாசிப்பு எந்திரத்திலிருந்து வந்து அவருடைய கழுத்திலிருந்த ஒரு துளையில் நுழைந்திருந்தது. அந்த எந்திரம் ஊதல் போன்ற ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.

“மாலை வணக்கம், மிஸஸ் ஸாபோ,” என் அப்பா சொன்னார். “யோ நபோட்.”

எனக்கு அதிர்ச்சி. என் அப்பாவுடைய பெற்றோர்களின் மொழியான ஹங்கேரிய மொழியை என் அப்பா ஒரு போதும் பேசியதில்லை. ஏதோ ஒன்றிரண்டு தடவை நாங்கள் எல்லாரும், ஃப்ளாரிடாவை விட்டு நீங்கி, டெலாவேர் மாநிலத்தில் வில்மிங்டன் நகரத்தில் வசிக்கும் பாட்டி-தாத்தாவைப் பார்க்கப் போன போதும், தன்னுடைய ஹங்கேரிய, யூதக் குணங்களை முற்றிலும் மறுத்தவராகவே அப்பா இருந்திருந்தார்.

”யாரை அழைச்சு வந்திருக்கேன்னு பாருங்க,” அப்பா சொன்னார், நுரையீரல் எந்திரத்தின் அமைப்பைச் சோதித்து விட்டு, அதிலிருந்து சில விஷயங்களைத் தன் கையிலிருந்த அட்டையில் காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார். “என் மகன், ஜே.”

மிஸஸ் ஸாபோ தன் இறுகிய புருவங்களின் கீழே என்னை உற்றுக் கவனித்தார். நான் ஏதோ அவரை அவமதித்து விட்டது போலவோ, அல்லது அவமதிக்கப் போகிறேன் என்றோ நினைத்தவர் போலத் தெரிந்தார்.

நான் என் அப்பாவைப் பார்த்தேன். தவறாக எதையும் சொல்லி விடக் கூடாது என்று எனக்கு இருந்தது.

“மிஸஸ் ஸாபோவுடைய குடும்பத்தார் பேஜ் நகரத்திலிருந்து வருகிறவர்கள், அப்படித்தானே மிஸஸ் ஸாபோ? அழகான கார்பேதியன் வடிநிலத்தில் இருக்கிற ஊர். என் அம்மாவுடைய பூர்விக கிராமத்திலிருந்து அதிக தூரம் இல்லை.”

மூச்சு இழுத்த போது மிஸஸ் ஸாபோவுடைய நெஞ்சு சிறிது உயர்ந்தது, பிறகு தாழ்ந்தது. அவருடைய படுக்கை விரிப்புக்குக் கீழே கால் விரல்களின் விளிம்புகள் தெரிந்தன.

”மிஸஸ் ஸாபோ சிறு வயதுப் பெண்ணாக அமெரிக்காவுக்கு வந்தார். முதல் உலகப் போர் துவங்கவிருந்த போது. அவருடைய குடும்பம் ஏழைக் குடும்பம், அதிகம் கல்வி இல்லாதது. அவர்கள் வாய்ப்புகளைத் தேடி வந்தார்கள். கரிச்சுரங்கத்தில் அவருடைய அப்பாவுக்கு வேலை கிட்டியது. மேற்கு பென்ஸில்வேனியாவில். கஷ்ட ஜீவனம், ஆனால் வருமானத்தைப் பொறுத்த வரை, ஹங்கெரியில் இருந்தால் கிட்டியதை விட மேலான வாழ்க்கைதான் இது. நான்கு குழந்தைகளை வளர்த்தார். வீட்டில் ஹங்கெரிய மொழியில் பேசினார்கள்.”

என் அப்பாவின் குரலில் குரோதம் தொனித்தது. அவர் இப்படிப் பேசி நான் கேட்டதே இல்லை.

”அவருடைய கனவு என்னவென்றால் அமெரிக்காவில் போதுமான பணம் சம்பாதித்து விட்டு, பேஜ் நகருக்குத் திரும்பிப் போய் அங்கே ஒரு நிலத்தை வாங்கி அதில் பழத் தோப்புகளை நடவேண்டும் என்பது. ஒரு குடும்ப வியாபாரத்தைத் துவங்கி அதன் மூலம் யூரோப்பின் இதர பகுதிகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விரும்பினார். கோடையில் புளிப்புச் செர்ரிகள், குளிர்காலத்தில் ஆப்பிள்களை அனுப்புவார்.”

“மிஸஸ் ஸாபோ என்னிடம் தன் குடும்பம் பற்றி எல்லாம் சொன்னார்,” அப்பா சொன்னார். “அவர்களின் ஏற்றங்கள், தாழ்வுகள் பற்றி. அவர்களின் துன்பங்கள், ஏமாற்றங்கள் எல்லாம் பற்றி. ஆனால் அவர் என்னைப் பற்றி ஒருபோதும் கேட்டதில்லை. என் பெயரில் ஹங்கேரிய யூதப் பெயர் இருக்கிற போதும். ஒரு வேளை என் வாழ்க்கையைப் பற்றிக் கேட்க அவருக்கு விருப்பமில்லை போலிருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய், பையா?”

ஆக்சிஜன் முகமூடிக்குப் பின்னாலிருந்து மிஸஸ் ஸாபோவின் ஈரமான நீல விழிகள் என்னை உற்று நோக்கின. அவை நிரந்தரமாகச் சண்டை போடத் தயாராக உள்ளவை போலத் தெரிந்தன.

“ஹங்கேரியர்கள் நம் கதைகளைக் கேட்க விரும்புவதில்லை, அப்படித்தானே மிஸஸ் ஸாபோ? யூதர்கள் தங்களுடைய கஷ்ட காலங்களைப் பற்றி நிற்காமல் தொண தொணப்பதைப் பார்த்தால், ஏதோ உலகத்திலேயே கஷ்டப்படுகிறவர்கள் நாம் மட்டும்தான் என்பது போல இருக்கும்.

“பாருங்க, என் அப்பா அம்மாவெல்லாம் எப்படி அமெரிக்காவுக்கு வந்தார்கள் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளணும் என்று நான் விரும்புகிறேன்.” அந்த மூச்சு எந்திரம் விஷ் விஷ் என்று ஒலித்துக் கொண்டே இருந்தது.

”இங்கேதான் நீ பொருந்துகிறாய்,” என்னிடம் அப்பா சொன்னார், தன் கைகளைக் குறுக்கே கட்டியபடி நின்றார்.

“என் பெற்றோரைப் பார்க்கப் போகிற போது,” அப்பா அந்தப் பெண்ணிடம் சொன்னார், “இந்தப் பயல் மேஜையின் மறுபக்கம் உட்கார்ந்து மணிக்கணக்காய் அந்தக் கதைகளைக் கேட்கிறான், அப்படியே ஊறி விடுகிறான். என்னால் அரை நிமிஷம் கூட அங்கே உட்கார முடியாது. நான் ஓட்டப் பயிற்சிக்குப் போய் விடுவேன். நான் என் காதில் பொருத்திய ஒலிபெருக்கிகள் மூலம் ராக் அண்ட் ரோல் இசையைக் கேட்பேன்.

“என் அம்மா எந்த வருஷம் பிறந்தார்?” அப்பா என்னிடம் கேட்டார்.

“1926,” நான் சொன்னேன்.

“என் அம்மா சிறுமியாக இருந்த போது அவர் வாழ்க்கை எப்படி இருந்ததென்று அவரிடம் சொல்லு.”

“பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும்போது என்ன நடக்கும் என்பதை எல்லாமா?” நான் கேட்டேன்.

“ஆமாம், அதைப் போலத்தான்.” அவர் சொன்னார்.

“வீட்டுக்குத் திரும்பும்போது,” நான் சொன்னேன், “அவருடைய வகுப்பிலிருந்த இரண்டு பெண்கள் அவரைக் காலால் உதைப்பார்கள், மூக்கில் ரத்தம் வரும்படி உதைப்பார்கள், பிறகு, “யூதக் கழிசடை. நீங்கள் எல்லாம் சாகப் போறீங்க.” என்று சொல்வார்கள்.”

“என் அம்மா அப்போது என்ன செய்வார்?”

”அவர்களைத் தடுக்க,” நான் சொன்னேன்,”அவர்களுடைய வீட்டுப் பாடங்களை இவர் செய்து தருவார். ஒவ்வொரு வாரமும் அவர்களுக்குப் பணம் கொடுப்பார். ஹங்கேரியில் அப்போது பொருளாதாரச் சரிவு இருந்தது.”

“அந்தக் காலத்தைப் பற்றி வேறென்ன உனக்குத் தெரியும்?”

“அவருக்கு மிகவும் பிடித்தவர்கள் அவருடைய இரண்டு சகோதரர்கள், லாயோஸும், ஷான்யியும். லாயோஸ் அவராகவே எப்படி தோலைப் பதனிடுவது என்று கற்றுக் கொண்டார், தங்கையின் பிறந்த நாளுக்கு அவளுக்கு ஒரு பணப்பை செய்வதற்காக. அடுத்த வருடம் கை உறைகள் செய்து கொடுத்தார்.”

“ம்ம்ம்,” என்றார் அப்பா, “பிறகு என்ன ஆயிற்று?”

“ஹிட்லரின் படைகள் ஹங்கெரிக்குள் நுழைந்தன.”

“எப்போது?”

“மார்ச் 19, 1944.”

“அவமானப்படுத்துகிற மஞ்சள் நட்சத்திரக் குறிகளை எப்போது யூதர்கள் அணியத் தொடங்கினார்கள்?”

“ஏப்ரல் 5, 1944.”

“அப்போ எப்போது என் அம்மாவின் கிராமத்தில் இருந்த யூதர்களெல்லாம் கெட்டோ கட்டாயப் பாசறையில் அடைக்கப்பட்டார்கள்?”

நான் என் கண்களை கீழே நோக்கும்படி வைத்துக் கொண்டேன், ஏனெனில் அவை கண்ணீரால் நிரம்பின என்பதை நான் உணர்ந்தேன். என்னால் அந்தத் தேதியை நினைவு கூர முடியவில்லை. தவறான தேதியைச் சொல்வதை விட எந்தத் தேதியையும் சொல்லாமல் இருப்பதே மேல் என்று என் நினைப்பாக இருந்தது.

“மிஸஸ் ஸாபோவிடம் கெட்டோவைப் பற்றிச் சொல்,” என்றார் என் அப்பா.

“கிராமத்தின் இருநூறு யூதர்களும் அங்கே வாழும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.”

“கிராமத்தில் மொத்தம் எத்தனை நபர்கள் இருந்தார்கள், அவர்களில் இரு நூறு பேரை அப்படி அனுப்ப?”

“ஏழாயிரம் பேர்.”

“இவன் எப்படிக் கவனமாகக் கேட்கிறான் என்று பார்த்தீங்களா?” அப்பா மிஸஸ் ஸாபோவிடம் சொன்னார். அவளுடைய நீலக் கண்கள் ஆத்திரத்தில் எரிவது போலத் தெரிந்தன.

“அவர்கள் எல்லாம் யூதக் கோவிலில் உறங்க வேண்டி இருந்தது,” நான் சொன்னேன். “அல்லது கோவிலருகே இருந்த மூன்று சிறிய வீடுகளில் அடைந்து கொள்ள வேண்டி இருந்தது. எல்லாரும் சொன்னார்கள், “ஏதோ மோசமானது நடக்கப் போகிறது.”

“அப்ப, என்ன நடந்தது?” அப்பா கேட்டார்.

“முதல்லே லாயோஸும், ஷான்யியும் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு இழுத்துப் போகப்பட்டார்கள். அவங்களோட சில நண்பர்களும் அப்படி அனுப்பப்பட்டார்கள்.”

 “ஆமாம், அது சரி,” அப்பா சொன்னார், “அதுக்கப்புறம்?”

“கிராமத்தின் இருநூறு யூதர்களும், என்னோட பாட்டியும், அவருடைய தோழிகளும் சேர்த்து, ஔஷ்விட்ஸுக்கு அனுப்பப்பட்டார்கள். அது மூன்று நாள் பயணம், சாப்பாடு தண்ணி ஏதும் இல்லாம.”

“ஓ, மிஸஸ் ஸாபோ ஔஷ்விட்ஸ் பத்தி எல்லாம் கேட்க விரும்ப மாட்டார். நாம யூதர்கள், எப்போ பார்த்தாலும் ஔஷ்விட்ஸைப் பத்திப் பேசறத்திலேயே குறியா இருக்கோம்.”

மூச்சு விட உதவும் எந்திரத்தின் அருகே நின்றிருந்த என் அப்பா, வருத்தத்தோடு தன் தலையைக் குனிந்து கொண்டிருந்தார், தன் முதுகுக்குப் பின் கைகளை வைத்துக் கொண்டு, அப்படி இப்படி அசைந்தார்.

நடந்தது என்னவென்றால், என் பாட்டியின் பெற்றோர்கள் நேராக விஷ வாயுக் கூண்டுகளுக்கு அனுப்பப் பட்டு விட்டார்கள். அங்கே போய்ச் சேர்ந்ததும், என் பாட்டியின் அம்மா, மெனகிலயிடம் ஜெர்மன் மொழியில் சொல்லி இருக்கிறார், “நாங்கள் அம்மா, பெண். சேர்ந்து இருக்க விரும்புகிறோம்.” அவன் அவர்களைப் பிரித்தான். தன் அம்மாவுடன் இருக்க வேண்டுமென்று என் பாட்டி வற்புறுத்தி இருந்தால், அவளும் விஷ வாயுக் கூண்டுக்கு அனுப்பப் பட்டிருப்பார்.

“அங்கே என்ன நடந்தது என்பது பற்றி இந்தப் பையன் உங்களுக்கு கதைகள் சொல்வான் – எல்லாம் 100 சதவீதம் நிஜமானவை,” அப்பா சொன்னார். “ஆனால் ஔஷ்விட்ஸில் கொஞ்சம் நல்ல ஜெர்மனியர் இல்லையா என்ன? ஒரு தடவை என் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன், அவளுடைய பையில் கூடுதலாக ஒரு துண்டு ரொட்டியை ஒரு ஜெர்மனியர் வைக்கவில்லை என்றாலோ, அவளுக்கு டிப்தீரியா வந்த போது மருத்துவ மனையில் அவளை ஒருவர் பார்த்துச் சிகிச்சை செய்யவில்லை என்றால் அவள் பிழைத்து வெளியே வந்திருக்கவே முடிந்திராது என்று. எந்தக் கணமும் அவர்கள் அவளை விஷ வாயுவால் கொன்றிருக்க முடியுமே.”

மிஸஸ் ஸாபோவின் கண்கள் இப்போது பெரும் கோபத்தால் பொங்கின.

“என் அம்மாவுக்கு அடுத்தது என்ன ஆச்சு?” அப்பா கேட்டார்.

“பேரதிசயமாய், அவர் லென்ஸிங்கிற்கு அனுப்பப் பட்டார். இன்னும் முந்நூறு இளம் பெண்கள் அப்படி அனுப்பப் பட்டார்கள்.”

“லென்ஸிங்குங்கறது என்னது?”

“மௌதௌஸனின் கிளை முகாம் அது. ஆஸ்த்ரியாவில் இருந்தது. அங்கே தொழிற்சாலையில் வேலை பார்த்தார். எல்லாப் பெண்களும் வெறும் எலும்புக் கூடாக ஆனார்கள்.”

என் அப்பாவின் அவசர அழைப்புக் கருவி ஒலித்தது. ஒரு செவிலி கதவு தாண்டித் தன் தலையை நுழைத்தார். என் அப்பா ஒரு விரலை உயர்த்தினார், அவள் மறைந்தாள்.

 “நாங்கள் உங்கள் பொறுமையைச் சோதிக்கவில்லையே, மிஸஸ் ஸாபோ?” அப்பா சொன்னார். அந்த மூதாட்டியின் ஈரமான நீல விழிகள் அவருடைய முகமூடி அணிந்த முகத்துப் பையில் எரிந்தன. “யூதரான எங்களால் உலகுக்கு எங்கள் துன்பங்களை ஒலி பரப்பாமல் இருக்க முடிவதில்லை.”

“அப்புறம் என்ன ஆச்சு?” அப்பா என்னிடம் கேட்டார்.

”அமெரிக்கர்கள் லென்ஸிங்கை மே 5, 1945 அன்று விடுவித்தார்கள்.”

“என் அம்மா பிறகு எங்கே போனாள்?”

“ஹங்கெரிக்குத் திரும்பப் போனார்,” நான் சொன்னேன். “ரயிலில்.”

“இந்த இடத்தில் என் அம்மாவின் கதையில் வரப் போவதை உங்களால் ரசிக்க முடியாது, மிஸஸ் ஸாபோ. மிஸஸ் ஸாபோ உண்மையான ஹங்கெரியன்,” என் அப்பா என்னிடம் சொன்னார். “அவர் பேஜ் நகருக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திரும்பிப் போகிறார். அவரால் எப்போதெல்லாம் போக முடிகிறதோ அப்போது. சரளமாக ஹங்கெரிய மொழி பேசுவார். ஹங்கெரியப் பார்வை கொண்ட அமெரிக்கர் என்று ஒன்று இருந்தால், அவர் மிஸஸ் ஸாபோதான்.”

மூதாட்டியின் கண்கள் குறுகின. நெஞ்சு மெதுவாக மேலெழும்பி இறங்கியது, அவர் களைத்துப் போகத் துவங்கினார் என்று சுட்டுவது போல இருந்தது. ஏதோ காரணத்தால், அவருடைய நெஞ்சு எக்ஸ்-ரே படம் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்யத் துவங்கினேன், வெள்ளைப் புள்ளிகள் எங்கு பார்த்தாலும் இருக்கும். அவர் சாவின் அருகே இருக்கிறார் என்றால், அவருடைய உறவினர்கள் எவருமே ஏன் இங்கு இல்லை?

“என் அம்மா கிராமத்துக்குத் திரும்பிய ரயில் பயணத்தில் என்ன ஆயிற்று?”

“அவர் ஒரு இளைஞனைச் சந்தித்தாள். அந்தப் பையன் என் தாத்தாவானார். ஜெர்மனியில் ரயில் பாதைகளைப் பழுது பார்க்கும் வேலையைக் கட்டாயத்தின் பேரில் செய்ய வைக்கப்பட்டிருந்தார். அவர் அவளோடு அவளுடைய கிராமத்திற்குச் சென்றார்.”

“அவர்கள் திரும்பி வந்தபோது என்ன ஆயிற்று?”

“அங்கே யூதர்கள் யாருமே இல்லை,” நான் சொன்னேன்.

“அவள் அப்போ என்ன செய்தாள்?”

“அவர் தனக்குத் தெரிந்த சிலரின் வீட்டுக் கதவுகளைத் தட்டினார். அவர்கள் எல்லாரும் அவரிடம், “இங்கே யூதர்கள் யாரும் வாழவில்லை.” என்று சொன்னார்கள்.

“அவர் அங்கே இருந்து போய் எத்தனை நாட்கள் ஆகி இருந்தன?” அப்பா கேட்டார்.

“ஒரு வருடத்துக்கு மேல் கொஞ்ச தினங்கள் ஆகி இருந்தன.”

“பிறகென்ன ஆயிற்று?”

“அவர் கோவிலுக்குப் போனார். அந்தக் கோவில் இப்போது சாமான் கிடங்காக இருந்தது. சில உறவினர்களின், யூத நண்பர்களின் வீடுகளுக்குப் போனார், அவை எல்லாவற்றிலும் வேறு மக்கள் இருந்தார்கள். யூதக் கல்லறைக்குப் போனார். அந்தக் கல்லறை அழிக்கப்பட்டு, அங்கே மர விற்பனைக் கூடம் இருந்தது.”

“கடைசியில் அவர் அந்த கிராமத்தின் செய்தித்தாளைப் பிரசுரிப்பவரிடம் போனார். அவரிடம் பாட்டி சொன்னார், “நான் விரும்புவது ஒன்றுதான், என் சகோதரர்களைக் கண்டு பிடிக்கணும்.”

“இங்கே யூதர்கள் யாரும் கிடையாது,” அந்த மனிதர் சொன்னார்.

“யூதர்கள் இந்த கிராமத்தில் ஐநூறு வருடங்களுக்கும் மேலாக வசித்திருக்கிறார்கள்,” என் பாட்டி சொன்னார். “உங்கள் செய்தித்தாளில் நான் ஒரு விளம்பரம் போடலாமா, என் குடும்பத்தைக் கண்டு பிடிப்பதற்கு?”

“அந்த மனிதர் ஒத்துக் கொண்டார். ஆனால் யாரும் விளம்பரத்திற்குப் பதில் போடவில்லை.”

“மேலே சொல்லு.”

“இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஒன்றுவிட்ட உறவினர் வந்தார். அவள் பாட்டியிடம் அவருடைய இரு சகோதரர்களும் இறந்தனர் என்று தெரிவித்தாள். லாயோஸ் ஆஸ்த்ரியாவில் நீண்ட நடைப் பயணத்தில் காலில் காயம் பட்டுக் கொண்ட போது ஒரு சுட்டுக் கொல்லும் படையால் சுடப்பட்டார். ஷான்யி யூகோஸ்லாவியாவில் ஒரு முகாமில் இறந்திருந்தார்.”

“என் பாட்டி அப்போது அழத் தொடங்கினார், என் வருங்காலத்துத் தாத்தாவிடம் சொன்னார், ’இந்த நாட்டில் இன்னும் ஒரு நாள் கூட என்னால் வாழ முடியாது.’

“அவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்குத் திட்டமிடத் தொடங்கினார்கள். என் வருங்காலப் பாட்டனாருக்கு டெலாவேர் மாநிலத்தின் வில்மிங்டன் நகரில் ஐந்து சகோதரிகள் இருந்தனர்.”

மறுபடியும் நான் அழவிருக்கிறேன் என்று உணர்ந்தேன். என் பாட்டியின் கதையை நான் சொல்கையில் ஏதாவது தகவலில் பிழை இருந்தால் எது மொத்தக் கதையையும் நம்பத் தகாததாக ஆக்கி விடாதா? இந்த யோசனை என்னை மிகவும் கலக்கியது. என் பாட்டி நிறைய தடவை சொல்லி இருக்கிறார், யூதரல்லாதோர் நம் கதைகளை நம்புவதில்லை, அதனால் தகவல் பிழை எதையும் செய்யக் கூடாது என்று.

“நம் குடும்பத்தில் எத்தனை பேர் முகாம்களுக்குப் போனார்கள்?” என் அப்பா என்னிடம் கேட்டார்.

“நாற்பத்தி இரண்டு.”

“எத்தனை பேர் திரும்பி வந்தார்கள்?”

“மூன்று.”

 “க்ராடுலாலங்க்!” என்றார் மிஸஸ் ஸாபோவிடம் என் அப்பா. “பாத்தீங்களா? அது ஒண்ணும் கேட்பதற்கு அத்தனை துன்பமான கதை இல்லை. இப்ப நாம எல்லாம் மறுபடியும் அதை எல்லாம் மறந்து இருக்கறத்துக்குத் திரும்பிப் போகலாம்.”

மிஸஸ் ஸாபோவின் கண்கள் மூடி இருந்தன, விளிம்பில் ஈரமாக இருந்தன. அப்பா அவரிடம் போனார், அவருடைய தோள் மீது தன் கையை வைத்தார்.

***

அடுத்த வாரம், அப்பாவும் நானும் மருத்துவ மனைக்குக் காரோட்டிச் செல்லும்போது, அவர் மிஸஸ் ஸாபோ இறந்து விட்டாரென்று என்னிடம் சொன்னார்.

“யூதர்களை வெறுக்கிற அந்தக் கிழப் பிணந்தின்னிக் கழுகு,” என்றார் அவர். “அவளுக்கு எது என்னன்னு நாம் காட்டினோம்.”

அந்தக் கணம் வரை நான் ஒரு விஷயத்தை அதிகம் யோசித்ததில்லை, அது, ஒரு குழுவினர் எல்லாரையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்று யோசிக்குமளவு எப்படி ஒருவர் அந்தக் குழுவை வெறுக்க முடியும் என்பது. என் பாட்டி-தாத்தா அந்தக் கதைகளைச் சொல்லும்போது இது ஒரு கேள்வியாகக் கேட்கப்பட்டதே இல்லை. அது நிஜமான ஒன்றாக இருந்தது- மக்கள் யூதர்களை வெறுக்கிறார்கள்.

சாவின் முனையில் இருந்த ஒரு நோயாளியைச் சந்தித்த போது நான் நிலை குலையாமல் இருந்தேன் என்பதால், அவருடைய மிக மோசமாக நோய்ப்பட்ட கேஸ்களை எல்லாம் பார்க்க என்னை அப்பா அழைத்துப் போனார்.

பொதுவாக நான் என் மௌனத்தைக் கலைக்கவில்லை, ஜாக்கிரதையாக ஒரு புன்னகையைத் தரித்துக் கொள்வேன். என் அப்பா நோயாளிகளைச் சோதித்து, அவர்களிடம் கேள்விகள் கேட்கும்போது, அவர் என்னையும் கேள்விகள் கேட்டு சோதித்தபடி இருப்பார்.

***

சில வாரங்களுக்குப் பிறகு, என் அப்பா தன் நோயாளிகளை ஞாயிறன்று கவனிக்க ஒருவரைக் கண்டு பிடித்திருந்தார். பதிலுக்கு, மற்ற மருத்துவரின் வேலையை சனிக்கிழமைகளில் அப்பா பார்த்து விடுவார்.

இதை என் அப்பா சொன்ன போது, நான் இனிமேல் அவரோடு மருத்துவ மனைக்கு வர வேண்டாம் என்று தெரிந்ததும் நான் உடனே விடுதலை உணர்வைப் பெறுவேன் என்று நினைத்தது போல என்னைப் பார்த்தார். இப்போது நாங்கள் மகிழ்வு தரும் விஷயங்களை ஞாயிறுகளில் செய்யலாம், கால்பந்து விளையாட்டுகளைப் பார்க்கலாம். மீன் பிடிக்கப் போகலாம். கரியடுப்பில் வதக்கல்களைச் செய்து உண்ணலாம். ஊரை விட்டு வெளியூர் போகலாம். மருத்துவ மனையிலிருந்து ஒரு அழைப்பு வந்து நாங்கள் செய்வதைப் பாதியில் நிறுத்த நேரும் என்று பயப்பட வேண்டாம்.

ஆனால் மருத்துவ மனைக்குப் போவதை நிறுத்த நான் தயாராக இருக்கவில்லை. வேறெங்கும் என்னால் கற்க முடியாததை அங்கே நான் கற்றுக் கொண்டிருந்தேன்.

மருத்துவ மனையில் எனக்குக் கடைசி நாளன்று ஓய்வறையில் இருக்க எனக்கு விருப்பமில்லை என்று அப்பாவிடம் சொன்னேன். அவரோடு இருக்கத்தான் நான் விரும்பினேன். அதனால் அவர் பின்னே தொடர்ந்து போக என்னை அனுமதித்தார். தீவிர சிகிச்சை அறைகளுக்குச் செல்லும் இரட்டைக் கதவுகளுக்கு வெளியே நிற்கக் கூட என்னை அனுமதித்தார்.

இதற்குள், எனக்கு மருத்துவ மனையில் இருக்கையில் இறந்தவர்கள் என்று நான்கு பேரைத் தெரிந்திருந்தது. ஒவ்வொரு தடவையும், அந்த அறை இன்னொரு காற்றடைப்பு நோய் அல்லது புற்று நோய் இருந்த நோயாளிக்குக் கொடுக்கப்பட்டது என்பது இயல்பானது, அவர்கள் உற்சாகப்படுத்தப் பட வேண்டிய நிலையில் இருந்தனர் என்பதும் அப்படியே.

அன்று நாள் முடிவில், மிஸஸ் ஸாபோவின் முந்நாள் அறையை அணுகினோம். நான் உள்ளே ஒரு துரிதப் பார்வையைச் செலுத்திய போது, உள்ளே விரிந்த மார்புள்ளவரும், நெஞ்சில் வெள்ளியாய் முடியடர்ந்தவருமான ஒருவர் அறையின் கூரையை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவர் ஆழமாக, ஈரமாக இருமினார். உடனே இன்னொரு முறை இருமினார். தன் தொண்டையைக் கனைத்தார், கோழையை வாயில் கொணர்ந்தார், அதை ஒரு காகிதத்தில் துப்பினார், ஆழமான, காற்றுக்குத் தவிக்கிற மூச்சு ஒன்றை இழுத்தார். என் அப்பா என்னிடம் குனிந்து, சீனாவில் இருக்கிற அத்தனை தேயிலையையும் கொடுத்தாலும் இந்த நபர் புகை பிடிப்பதை நிறுத்த மாட்டார் என்று ரகசியமாகச் சொன்னார்.

“இவருக்கு ஆறுமாதம்தான் கெடு வைத்திருக்கிறேன்.”

**   **  **

இங்கிலிஷ் மூலம்: ஜானதன் ப்ளூம்

தமிழாக்கம்: மைத்ரேயன்

மூல எழுத்தாளர் பற்றி: ஜானதன் ப்ளூம் இரண்டு புனைவு நூல்கள் எழுதியவர். த யூஷுவல் அன்ஸர்டெண்டிஸ் (ரெஸ்க்யூ ப்ரஸ், 2019) என்பது சிறுகதைத் தொகுப்பு.

லாஸ்ட் வோர்ட் (ரெஸ்க்யூ ப்ரஸ், 2013) ஒரு குறுநாவல்.  ஏஞ்சல்ஸ் ஃப்ளைட், லிடரரி வெஸ்ட், த காரோலீனா க்வார்டர்லி, கல்ஃப் கோஸ்ட், கென்யன் ரிவ்யூ, ப்ளேபாய், ஸோனோரா ரிவ்யூ மேலும் ஷான்க்ஸி லிடரேச்சர் ஆகிய சஞ்சிகைகளில் கதைகளைப் பிரசுரித்திருக்கிறார். லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் வசிக்கிறார்.

இந்தக் கதை எலெக்ட்ரிக் லிடரேச்சர் என்ற இணையப் பத்திரிகையின் 391 ஆம் இதழில் நவம்பர் 13, 2019 அன்று பிரசுரமாகி இருக்கிறது. எலெக்ட்ரிக் லிடரேச்சர் பத்திரிகைக்கு நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.