
Toronto Tamil Chair: பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவிருப்பது ஒரு அரிய வாய்ப்பாகும். ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கும் இடமளிக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும். இதுவரை தமிழர்களால் $700,000 நிதி சேர்க்கப்பட்டுவிட்டது. இப்பொழுது $2.3 மில்லியன் பணத் தொகையை இரண்டே ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது. இருக்கைக்காகப் பெறப்படும் நிதி நிரந்த இருப்பாக பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு, அதனால் வரும் வட்டியைக் கொண்டே இவ்வாறான இருக்கையை இயக்கும். அதேவேளை அவ்வப்போது கிடைக்கும் மானியங்களும் நன்கொடைகளும் இந்த இருக்கையை மேலும் வலுப்படுத்தி வளர்க்க உதவும்.
ஒரு தடவை உருவாக்கப்பட்டுவிட்டால் அந்த இருக்கை காலங்காலமாக தொடர்ந்து இருக்கும். நம் தலைமுறைக்குப் பிறகும், பின் வரும் ஒவ்வொரு தலைமுறைகளோடும் இணைந்து பணியாற்றும். தமிழ், தமிழர் தொடர்பான பல்வேறு பண்பாடுகளையும் வரலாறுகளையும் புலம்பெயர்ந்தோரோடு தொடர்புபடுத்தி தொன்மையான சரித்திரத்தையும் வாழ்க்கையையும் உயர்தரத்திலும் உண்மையானதாகவும் பதிவு செய்து பரவலாகக் கொண்டு போகவும் இந்த இருக்கை ஒரு வாயிலாக அமையும்.
இந்த இருக்கையின் முதன்மைப் பணிகள், உலகளாவிய வகையில் தமிழியல் தொடர்பாக ஆய்வுக்களங்களைக் கண்டறிந்து, புதிய ஆய்வுகளை ஏற்படுத்த முன்னின்று செயற்படுவதாகும். பிற பல்கலைக்கழகங்களோடும், ஆய்வு நிறுவனங்களோடும் தொடர்பு கொண்டு, ஆய்வுப் பணிகளுக்கான முன்னெடுப்புகளைச் செய்வதோடு, சிறந்த ஆய்வு நூல்களை வெளியிடுவதும் இதன் செயற்பாடாக இருக்கும். ஆய்வுக்குரிய மூலவளங்களைச் சேகரித்தல் இந்த இருக்கையின் மற்றுமொரு முதன்மைச் செயற்பாடாகும். இந்தத் தமிழ் இருக்கையோடு தொடர்பை ஏற்படுத்தி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஆய்வாளர் தமக்கு வேண்டிய அனைத்து மூலவளங்களையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை இந்த இருக்கை கொண்டிருக்க வேண்டும். அதாவது இது ஒரு மூலவள மையமாகவும் திகழ வேண்டும்.
– பொன்னையா விவேகானந்தன் (தாய்வீடு)
உலகெங்கணும் பரந்து வாழும் தமிழ் மக்கள் தமிழின் உயர்வுக்கு கைகொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகிவிட்டது. அதன் ஒரு அங்கமாக ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தாராளமாக அள்ளிவழங்க அனைவரும் முன்வரவேண்டும்.