”பிரசித்தியான கோயில்கள்ள மக்கள் மணிக்கணக்கா காத்து கிடக்கா. எங்க கோயில் மாதிரி ஒரு நாளைக்கு நாலு பேர் அஞ்சு பேர் மட்டும் வரும் கோயிலும் இருக்கத்தான் செய்யுது’’ பட்டர் குரலில் ஏக்கம் இருந்தது. உண்மையான ஏக்கம். தன் பணியைச் சரியாக மட்டுமே செய்தவன் அடையும் ஏக்கம். தொடர்ந்து சொன்னார்:

“ஜனங்களை குறை சொல்ல முடியாது. அலாவுதீன் கில்ஜியோட படை இங்க வந்த போது நம்ம நாட்டுல எழுபது எண்பது வருஷம் எல்லா கோயிலும் பூட்டிக் கிடந்திருக்கே. உற்சவரை ஊர் ஊரா கொண்டு போய் உயிரைக் கொடுத்து காப்பாத்தியிருக்காளே. இதெல்லாம் அவனோட விருப்பம்னு விட்டுற வேண்டியது தான்.’’
நாங்கள் மீண்டும் ஒரு முறை பெருமாளைக் கும்பிட்டுக் கொண்டோம்.
“ராத்திரி ரயிலுக்கு நேரம் இருக்குன்னா பக்கத்தில் இருக்கற குன்று மேல ஒரு சின்ன பீடம் இருக்கு. நூறு வருஷத்துக்கும் மேல அதில ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டிருக்கு. ஆடு மாடு மேய்க்கறவா தினமும் மேலே போய் எண்ணெய் விட்டுட்டு வறா. நான் மாசம் ஒரு தடவ போவன்.’’
நூறு வருடமாக எரியும் தீபம். இங்கே வியப்புகளுக்கு குறைவே இருப்பதில்லை.
நாதன் கேட்டான் : “இப்ப அந்த குன்று மேல ஏறணும்னு சொல்லப் போற. இல்லையா?’’
“நான் வேண்டாம்னு சொல்ல வாய்ப்பு இருக்கா என்ன?’’ ராஜன் மறுகேள்வி கேட்டான். பின்னர் தொடர்ந்து
“உனக்கு சிரமமா இருந்தா நீ இங்கயே இரு. நான் மேல போய்ட்டு வந்துர்ரேன்’’
“பிரம்ம லிபின்னு ஒண்ணு இருக்கே. வந்து தொலயறன்.’’
பாதை அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. பாறைகள் வழுக்கின. மண் பாதை மிகக் குறுகியதாக இருந்தது. மூன்றில் ஒரு பங்கு உயரம் ஏறியிருந்தார்கள். நாதனின் பார்வையை ராஜன் தவிர்த்தான். குன்றின் அடிவாரத்தில் சிறுவர்கள் அணி ஒன்றும் இளைஞர்கள் அணி ஒன்றும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது. அசிரத்தையாக ஓர் இளைஞன் போட்ட பந்தை பேட்ஸ்மேன் வானம் வரை பறக்க விட்டான். அந்த மைதானத்தைப் பார்த்து ராஜன் குரல் கொடுத்தான். இளைஞர்கள் அணி சிறுவர்களை ஏவி என்ன என்று விசாரிக்கச் சொன்னது. ஒரு சிறுவன் மைதானத்தில் இருந்த மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவனுடன் இன்னொருவன் ஏறிக் கொண்டான். மூன்றாவதாக ஒருவன் சைக்கிள் வேகத்துக்கு ஓடி வந்தான். மைதானத்துச் சிறுவர்கள் ஏய் ஏய் என்று கத்தினர். மூவரும் குன்றின் அடிவாரத்தில் நெருங்கி வந்து சத்தமாக மேலே இருந்த இருவரிடமும் பேசினர்.
“என்னண்ணா! அவங்க முக்கியமா மேட்ச் ஆடிட்டிருக்காங்க’’
“தம்பி! பாறை ரொம்ப வழுக்குது. மேல ஏற வழி காட்றீங்களா’’
யார் போவது என மூவரும் விவாதித்தனர். மூவருக்கும் ஆர்வம் இருந்தது. அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
‘’அண்ணா! எங்களுக்கும் மேட்ச் இருக்குண்ணா”
‘’என்ன செய்யலாம்?’’
“நான் ஊர்ல போய் யாரையாவது கூட்டிட்டு வரேண்ணா”
மூவரும் சென்று விட்டனர்.
ராஜன் அமைதியாக ஒரு பாறை மீது அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டைக் கண்டான். அந்த உயரத்திலிருந்தே கிராமம் முழுதும் தெரிந்தது. தோள் துண்டென கிராமத்தைச் சுற்றி வந்தது சாலை. தூரத்து ஏரியின் மீது பறவைகள் வட்டமிட்டன. இந்திய கிராமம் யாராலும் முழுதாய் அறிந்திட முடியாத ஆழம் ஒன்றில் இருப்பதாக ராஜனுக்குத் தோன்றியது.
நாதன் ஒரு பாறையில் படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தான். அப்போது மேகமற்றிருந்த வானம் மென்நீல நிறம் கொண்டிருந்தது. நீலத்தை ஆழ்ந்து ஆழ்ந்து பார்த்தான். கடலில் மூழ்குவது போல ஓர் எண்ணம் தோன்றியது. கடலின் ஆழத்தில் வானின் நீலத்தைக் காண்பதாகத் தோன்றியது. பள்ளி சென்று வீடு திரும்பிய முதல் தினம். அப்பா வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார். கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு அம்மா சமையலறையிலிருந்து அவசரமாக வருகிறாள். வைத்யா வைத்யா கண்ணா வைத்யா குட்டி அம்மாவின் குரல். நாதன் கேட்டதும் உதட்டைப் பிதுக்குகிறான். அம்மா என்று ஓடிச் சென்று காலைக் கட்டிக் கொள்கிறான்.
சைக்கிள் சிறுவன் ஒரு நடுத்தர வயதுக்காரரை கூட்டிக் கொண்டு வந்து விட்டான். அடிவாரத்தில் விட்டு விட்டு மைதானத்தை நோக்கி ஓடி விட்டான். அவர் சர சர என்று காலடிகள் எடுத்து வைத்து சில வினாடிகளில் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்.
ராஜன் எழுந்து இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னான். நாதன் எழுந்து உட்கார்ந்தான்.
“பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தோம். பட்டர் இந்த குன்றோட உச்சில நூறு வருஷமா அணையாம எரியுற தீபம் இருக்குண்ணு சொன்னார். அதைப் பாக்க ஏறினோம். பாதை வழுக்குது. இவன் அடுத்த மாசம் மெட்ராஸ்ல ஒரு வேலைல சேர்ரான். பாதை தெரிஞ்சவங்க கூட்டிட்டு போனா நல்லதுன்னு பட்டது.’’
“என் பின்னாடியே வாங்க தம்பி’’
அவரைப் பின் தொடர்ந்த போது, சிரமப்பட்டு ஏறிய குன்றிலா இவ்வளவு எளிதாக ஏறுகிறோம் என நாதனும் ராஜனும் நினைத்தனர். அவர் முன் சென்று முள் மரங்கள் மேலே படாதவாறு இலாவகமாகப் பிடித்துக் கொண்டார். அவ்வப்போது ஓய்வு கொடுத்தார். இருவருக்கும் மூச்சிரைத்தது.
இளைஞர்கள் அணியில் ஒரு அணி ஆட்டம் முடித்து அடுத்த அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்திருந்தது. துவக்க ஜோடி ஒரு ஒரு ரன்னாக சேர்த்துக் கொண்டிருந்தார்கள். நாதன் ராகுல் திராவிடின் நிதானமான ஆட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டான். அமைதிக்கு ஒரு ஆற்றல் உண்டு. மௌனத்தில் ஒரு தீவிரம் உண்டு. பொறுத்திருப்பவனுக்கு மேலான ஒன்று கிடைக்கிறது. மேன்மைக்கு நுண்ணிய அழகொன்று உண்டு. சிறுவர்கள் கிரிக்கெட்டை முடித்து விட்டு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அடுத்த ஏற்றத்துக்குத் தயாராயினர். அவர்கள் தெம்பை அளவிட்டுக் கொண்ட வழிகாட்டி மனிதர் மெல்ல மெல்ல அவர்களை மேலேற்றினார்.
“கொஞ்ச வருஷம் முன்னால் எங்க ஊர்க்காரன் ஒருத்தன் நாள் கணக்கா காணாம போய்ட்டான். எங்கெங்கியோ தேடினோங்க. எனக்கு ஒரு சந்தேகம் அவன் மலையில தான் இருக்காண்ணு. உயரம் குறைச்ச தான் ஆனா நீளம் ஜாஸ்தி. பாறைங்க பெருசும் சிறுசுமா கெடக்கும். ஒரு இடம் விடாம தேடினேன். சுனைத் தண்ணிய குடிச்சிட்டு பாறைக்குப் பின்னால யார் கண்ணுலயும் படாம இருந்திருக்கான். என்னைப் பார்த்ததும் துரை பக்கத்துல வராத எனக்கு அம்மன் அருள் வந்திருக்குன்னான். பெத்த தாய் தகப்பன் பரிதவிச்சு தேடிட்டு இருக்காங்க. என்னடா கதை விடறன்னு நாலு அறை விட்டன். துரை அப்பா கண்டபடி பேசிட்டார்டா என்று அழுதான். அதச் சொல்லுடா ஏண்டா சாமி பேர சொல்லி ஊரை ஏமாத்தறன்னு கீழே இழுத்துட்டு வந்தேன்.’’ அந்தரத்தில் துரை ஒரு கதை சொன்னார்.
ராஜன், “துரை அண்ணனுக்கு மலை அத்துபடி போலருக்கே’’ என்றான்.
“சின்ன புள்ளையா இருந்த போது இங்க தான் ஓடி புடிச்சு விளையாடுவோம். இப்ப உள்ள பொடுசுங்க மைதானத்திலயே விளையாடறானுங்க. அவனுங்க வீட்டுல மலை மேல ஏறாதீங்க பூச்சி பொட்டு இருக்கும்னு சொல்லி அனுப்புறாங்க.’’ துரைக்கு நிகழ்காலம் மீதான மனத்தாங்கலை வெளிப்படுத்தினார்.
சமவெளிக்கு நடந்து பழகிய கால்கள். அதற்கே பழகிய நுரையீரல். உயரம் ஏறும் போது உடல் இயங்கும் விதம் மனதுக்குப் பழகாததாக இருப்பதால் தொகுத்துக் கொள்ள திணறுகிறது. வழிமுறை தெரிந்து விட்டால் இயல்பாகி விடும். ராஜன் நிலைமையை மதிப்பிட்டு வகைப்படுத்திக் கொண்டான்.
“அண்ணனுக்கு என்ன விவசாயமா?’’
“நாங்க அண்ணன் தம்பி நாலு பேரு தம்பி. ரெண்டு ஏக்கர் பூர்வீக நிலம் இருக்கு. பெரிய வீடு இருக்கு. ரெண்டு ஏக்கர்ல காய்கறி பயிர் பண்ணுவோம். பெரிய அண்ணன் ரெண்டு பேரும் கொல்லையப் பாத்துப்பாங்க. நான் காய்கறியை சைக்கிள்ல கொண்டு போய் வியாபாரம் பண்ணிட்டு வருவேன். என்னோட தம்பி வீட்டுல இருக்கற குழந்தைகளை காலைல ஸ்கூல் கொண்டு போய் விட்டு அழைச்சுட்டு வருவான்.’’ அவர் இந்த இடத்தில் நிறுத்தினார்.
அவர் முகம் கொண்டிருக்கும் மகிழ்ச்சி ரேகைகள் அஸ்தமித்துப் போயின.
“போன வருஷம் அண்ணனுக்கு கிட்னில பிரச்சனை தம்பி. டயாலிசிஸ் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. நாங்க பண்ணிகிட்டிருக்கோம்’’
இன்னும் கால் பங்கு தூரம் ஏற வேண்டியிருந்தது. அவர்கள் மேலே நடக்க ஆரம்பித்தனர்.
“குடும்பத்துக்கு இது ரொம்ப கஷ்டமான காலம் தம்பி.’’
நாதனையும் ராஜனையும் கவனமாக குன்றின் உச்சிப்பகுதிக்குக் கொண்டு சென்றார். ஒரு உயரமான கல்பீடம் அதன் முகப்பு குடையப்பட்டிருந்தது. அதன் உள்ளே ஒரு பெரிய அகலில் தீபம் சுடர்ந்து கொண்டிருந்தது. மூவரும் அதன் அருகில் சென்று கைகூப்பி நின்றனர். ராஜன் கண் மூடியிருந்தான். சில நிமிடங்களுக்குப் பின் கண்களைத் திறந்து பார்வையை சுடர் மீது நாட்டினான். அவ்வப்போது மெல்லிய அசைவுகளுடன் எரிந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு மனிதன் தன்னைக் கடந்த ஒன்று தன்னில் வெளிப்பட்ட கணத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றியிருக்கிறான். அணையாமல் காத்திருக்கிறான். நாட்கணக்காக. மாதக்கணக்காக. பின்னர் உடனிருந்தவர்கள் காத்திருக்கிறார்கள். இப்போது ஊரே காக்கிறது. தலைமுறைகள் காக்கின்றன.ராஜன் தரையில் விழுந்து முழு உடலால் வணங்கினான். துரையும் வணங்கினார். நாதன் கை கூப்பிய வண்ணம் இருந்தான். அருகில் இருந்த பாறை ஒன்றின் மேற்பரப்பில் எண்ணெய் பாட்டில்கள் இருந்தன.
குன்றின் ஏற்றத்தை விட இறக்கத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது நாதனுக்கும் ராஜனுக்கும். நாதனுக்கு இரண்டு முறை சறுக்கியது. ராஜன் துரையிடம் அவசரம் ஏதும் இல்லை மிக மெதுவாகவே இறங்கலாம் என்றான்.
“ஏறும் போது மேல போக நம்ம பிரயத்தனம் தேவைப்படும். இறங்கும் போது நிதானம் வேணும் தம்பி,’’ துரை சொல்லிச் சிரித்தார்.
பாதி வழியில் மூவரும் மூன்று பாறைகள் மேல் அமர்ந்தார்கள்.
ராஜன், ‘’அண்ணன் விவசாயத்தைக் குடும்பமா சேர்ந்து செஞ்சிருக்கீங்க. இப்ப கஷ்டம். உங்களுக்கு பேங்க்-ல லோன் வாங்கித் தர ஏற்பாடு செய்றோம். ஆடு கோழி இல்லன்னா, மாடு ஏதாவது வாங்கி வளக்கிறீங்களாண்ணன்?’’ என்று கேட்டான்.
துரை முகத்தில் பெரிய தயக்கம் தெரிந்தது.
நாதன், “அண்ணன் ராஜன் ஒப்புக்காக எதையும் சொல்ல மாட்டார். சொன்னா எதையும் செய்வார். நாங்க வெளியூர்ன்னு நினைக்காதீங்க. உங்களுக்காக இங்க வந்து நாலு நாள் தங்கின்னாலும் உங்களுக்கு வேண்டியதைச் செஞ்சு கொடுப்பார்.’’ உறுதியாகச் சொன்னான்.
“விஷயம் அது இல்ல தம்பி. கொஞ்ச நேரம் முன்னால பாத்த ஒருத்தனுக்காக நீங்க அக்கறைப்படறதப் புரிஞ்சுக்க முடியுது. ஆனா இப்ப எங்க குடும்பத்தில மருத்துவ செலவு ஜாஸ்தியா இருக்கு. எங்க தேவை எல்லாத்தையும் வாரி சுருட்டும். பேங்க்ல கடன் வாங்கிட்டு திருப்பிக் கட்டறதுல ஏதாவது சிக்கல்னா அது உங்க முயற்சியை அவமதிச்சாப்ல ஆய்டும் தம்பி. கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் பாக்கலாம் தம்பி.’’
அடிவாரத்துக்கு ராஜனையும் நாதனையும் பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டு விடைபெற்றுச் சென்றார் துரை.
‘’நூறு வருஷமா ஒரு தீபம் தொடர்ந்து எரியறதுல மனுஷனைத் தாண்டின ஏதோ ஒரு அம்சம் இருக்குல்ல’’ ராஜன் நாதனிடம் சொன்னான்.
“எவ்வளவு கஷ்டம் தனக்கு இருந்தாலும் தன்னால அடுத்தவங்களுக்கு சிரமம் ஏற்பட்டுடக் கூடாதுன்னு நினைக்கற சாதாரண மனுஷனோட உணர்வு கூட மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒண்ணுதான்,’’ நாதன் சொன்னான்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னால், ’’வாழ்க்கை மேல அவங்களுக்கு இருக்கற நம்பிக்கை குன்று மேல இருக்கற அணையாத தீபத்தைப் போல தீவிரமானதுதான்’’ என்று தொடர்ந்து சொன்னான்.