குளக்கரை

படைப்பூக்கம்

ஒரு புதுக்கலையோ, புதுக்கருவியோ, புதிய அறிவியல் கோட்பாடுகளோ அல்லது ஏற்கெனவே அறிந்தவற்றின் புதுப் பயன்பாட்டு முறைகளோ தங்களின் அடிப்படையாகக் கொண்டிருப்பது படைப்பூக்கத்தையே.ஆனால் இது ஒரு பொதுக்கூற்று.அப்படியென்றால் அதை எப்படி அடையாளம் காண்பது?எப்படி புதுக் கருத்துக்கள் முன்னர் உருவாகியிருக்கக்கூடும் என்று கவனிப்பது உதவும் என்றாலும்,அதை உருவாக்கியவர்க்கே அது உருவான விதம் பெரும்பாலும் தெரிவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளைத் தனித்தனியாக ஒரே நேரத்தில் கண்டறிந்த டார்வின் மற்றும் வாலஸின் செயற்பாடுகள் இக்கேள்விக்கு ஒரு விளக்கம் தரலாம்.இருவருமே பல இடங்களுக்குப் பயணம் செய்தவர்கள்,பல உயிரினங்களையும், தாவர வகைகளையும் ஆராய்ந்தவர்கள்.அவர்களின் ஆய்வு, உலகைப் புரட்டிப் போட்ட கருத்தைச் சொல்ல முடிந்தது அவர்கள் மால்தஸின் ‘மக்கள் தொகை பற்றிய கோட்பாடுகளை’ப் படித்த பிறகே.அதிக மக்கள் பெருக்கமும்,வல்லமை அற்றது மறையும் என்பதையும் பொதுவாக வைத்துக்கொண்டு அவர்களால் பரிணாமத்தைப் பற்றி,அது இயற்கையின் தேர்வு என்பதைப் பற்றி சொல்ல முடிந்தது.

ஒரு துறையில் நாம் சிறந்திருந்தாலும்,தொடர்பற்ற விஷயங்களைத் தொடர்புபடுத்திச் சிந்திக்கையில் அது நம் கேள்விகளுக்கு பதிலாக அமைந்து விடுகிறது.19-ம் நூற்றாண்டில் பல இயற்கையாளர்கள் சிந்தித்த கேள்விதான் இது;அவர்களில் பலர் மால்தஸ்ஸை படித்திருக்கவும் கூடும்;ஆனால், இவ்விஷயங்களை இணைத்ததில் புதியவை கிட்டின.அனைத்துத் தரவுகளும் இருந்தாலும் துணிச்சலாக மாற்றி சிந்திப்பதில் சில வாசல்கள் திறக்கும்.ஒரு புதுக்கருத்தானது சரியான காரணங்களைக் கொண்டிருக்கிறது என்பது காலப்போக்கில் தான் ஏற்றுக்கொள்ளப்படும்.முதலில் அது நகைப்பிற்கு உள்ளாகும்,பித்து எனக் கூடத் தோன்றும்.பொதுப் புரிதல்கள், காரணங்கள், அதிகார மையங்கள் இவற்றை ஒருவாறு எதிர்த்துக்கொண்டே செயல்படும் மனிதர்கள் அபூர்வமானவர்கள்.தன் துறையில் மிகுந்த ஆர்வம்,தன் செயல்பாடுகளில் நிறுவிய பாதைகளில் மட்டுமே செல்லவிரும்பாமல் இயங்கும் எண்ணமுள்ளவர் படைப்பூக்கம் உள்ளவர்.

அப்படி அடையாளம் காணப்பட்ட மனிதர்களை ஓர் இடத்தில் ஒன்று கூட்டி தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வைப்பது நல்லதா அல்லது அவர்களைத் தனியே செயல்படவிட வேண்டுமா?படைப்பூக்கம் என வருகையில் அவர்களைத் தனித்து செயல்பட விடுவதே நல்லது.ஒவ்வொரு சிறந்த சிந்தனையும் பல்லாயிரம் பிறழ்ந்த எண்ணங்களூடேதான் வரும்;அது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் படைப்பாளிகள் தனித்து செயல்படுவது நல்லது.ஆனால்,படைப்பின் காரணங்கள் தவிர்த்து அவர்கள் கூடி உரையாடுவது என்பதும் உவப்பதே.

எந்த இருவரும் மற்றவரின் எண்ணக் கருவூலத்தை அப்படியே பிரதிபலிப்பதில்லை.’அ’ ஒருவருக்கும் ‘ஆ’ ஒருவருக்கும் தெரிந்திருக்கலாம்.ஆனாலும் அவையின் இணைப்பே போதுமானதில்லை.’அ’ ‘ஆ’ ‘இ’ என்ற மாறுபட்ட சிந்தனையில் புதிது தோன்றலாம்.இதை யாரும் தனிப்பட்ட முறையில் சிந்திக்கவில்லை என்பதும் முக்கியமானது.

‘சிந்தனைக் கூட்டங்கள்’ தரவுகளையும், அவற்றின் கலவைகளையும்,சுற்றித் திரிந்து வந்து சேர்பவைகளையும் ஒருங்கமைக்கப் பயன்படலாம்.ஆனால், படைப்பாளிகளை இதில் எப்படி ஈடுபடுத்துவது? எளிமை, சிந்தனைகளை வெளிப்படையாகப் பேச அனுமதி,வெளிப்பட சிந்தித்தல்,தான் கண்காணிக்கப்படுகிறோம் என்பதற்ற சூழல் அவர்களை ஆற்றுப்படுத்தும்.ஒரு அமர்வில் பித்துக்குளித்தனமாக பேசுவதற்கும்,மற்றவரையும் அதே போல் அனுமதிப்பதற்கும் வாய்ப்பு அவசியம் வேண்டும். எல்லாம் தெரிந்திருந்தாலும்,இந்தப் பைத்தியக்காரத்தனத்தை அனுமதிக்காத ஒருவர் அத்தகைய அமர்வுகளையே பாழ்படுத்திவிடுவார்.அதே போல் பிறரை விட அதிகம் அறிந்தவர், திறம்பட சொல்லக்கூடியவர்,சுருக்கமாக அறிவின் அராஜகத்தில் சிக்கியிருப்பவர்,பிறரைத்தடுக்கும் சக்தியாகிவிடுவார்.

ஒரு குழுவில் அதிக பட்சமாக ஐவர் வரை இருக்கலாம்;அதிக அறிவாளிகள் உள்ள குழுவில் அதிகத் தரவுகள் கிடைக்கும் என்பது உண்மையென்றாலும்,தன் முறை வந்து பேசுவதற்குள் பொறுமை போய்விடும்.சிறு குழுக்களாகக் கூடுகையில் சிலது மீள் சொல்லலாகிவிடும்;அந்த ஆபத்து என்னவோ சிறிதுதான்,அது அளிக்கும் உத்வேகத்தைக் கணக்கிடுகையில்.

கூட்டங்கள் முறைசாராமல்,விளையாட்டுத்தனமாக,முதல் பெயரால் ஒருவரை ஒருவர் அழைத்து நெருங்கும் விதமாக, ஒரு வீட்டிலோ,உணவகத்திலோ நடப்பது நல்லது.எல்லாவற்றையும் விட பொறுப்பைக் கோருவது தீமையைத்தான் தரும். உலகின் மிகப் பெரிய சிந்தனைகளைச் செய்தவர்கள் சாதாரண வேலைகளிலிருந்து கொண்டே தங்கள் ஆர்வங்களுக்காகச் சிந்தித்தவர்கள் தான்.முக்கியமானது, இத்தகைய புதியவற்றிற்காக அவர்கள் பணம் சம்பாதிக்கவில்லை.அது அதன் பக்க விளைவே!

சம்பளம் கொடுத்து புதிய சிந்தனைகளைக் கொண்டு வந்துவிடலாம் என்பதைவிட ‘சிந்தனை அமர்வுகளில்’பங்கேற்போர் சிறு குறிப்பெழுதுதல்,சிறு விளக்கம் எழுதுதல் போன்றவற்றைச் செய்து அதற்கான பணத்தினைப் பெறலாம்;இது குற்ற உணர்வு கொள்வதைத் தடுக்கும்.

இத்தகைய அமர்வுகளில் ஒரு ‘ஒழுங்கு படுத்துபவர்’ இருப்பதும் தேவையே.பேச்சு திசை மாறுகையிலும்,வெற்று விளையாட்டாய் போகையிலும் அவர் நிதானத்துடன் அறிவுறுத்தி செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும்.

கருவிகள் மூலம் ‘படைப்பூக்கத்தை’ ஏற்படுத்துவதற்கும் கூட இயங்கு சுதந்திரம்,பொறுப்பு சுமத்தாமை,விளையாட்டுத்தனத்தை  ஏற்றுக்கொள்வது போன்றவை அக்கருவிகள் வர வழி வகுக்கும்

ஐசக் அஸிமோவ் தன் நண்பர் ஆர்தர் ஒபெர்மேயரின் விருப்பப்படி எம் ஐ டியின் பாஸ்டனிலுள்ள ‘அல்லைட் ரிசர்ச் அசோசியேட்ஸ்’இல் சில அமர்வுகளில் பங்கேற்றார்.ஆனால், ‘பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள்’ என்பதை நினைத்து அதிலிருந்து வெளியேறிவிட்டார். அந்த நேரத்தில் அவர்’ படைப்பூக்கம்’ பற்றி எழுதியதை பழைய கோப்புகளில் எதையோ தேடுகையில்  இந்தக்கட்டுரையைப் பார்த்த ஆர்தர் அதை வலையேற்றியுள்ளார்.

https://www.technologyreview.com/s/531911/issac-asimov-ask-how-do-people-get-new-ideas/

அலைகளுக்கு அப்பால்

“வரும் தலைமுறையின் ‘ரோஜர் ஸ்க்ரூடன்’ (Roger Scruton) என என்னை ஒரு சக தத்துவவாதி சொல்கையில் என்னால் அதை சிறிதும் ஏற்கமுடியவில்லை.எத்தகைய வரலாற்றுக் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது மிக அதிர்ச்சிகரமாக உள்ளது.என்னை ‘கன்சர்வேடிவ்’ என முத்திரை குத்துபவர்கள் அமெரிகாவில் அதே  போல் இருப்பவர்களை அப்படிச் சொல்வதில்லை என்பதும் வியப்பிற்குரியது.என்னை அப்படி’மாறுதலை விரும்பாத நடைமுறையினர்’ என்று அவர் சொல்லும்போது நான் சொன்னேன்’உலகம் கிறுக்குத்தனமாக இயங்குகிறது; நான் அப்படி அல்ல’.அதற்கு அவர் “ஆம்,தன்னை பழமைவாதி என்று அடையாளப்படுத்தினால் அவர்களில் பலரும் சொல்வது அதுதான்;ஆனால் அப்படியிருப்பதில் தவறொன்றுமில்லை.’ ஜஸ்டின் ஸ்மித் (Justin E H Smith) தன்னுடைய PointMag (Jon Baskin செய்தது) நேர்காணலில் இவ்வாறு சொல்கிறார்.

முதுமைக்கும், இளமைக்கும் இடையே இருக்கும் கடக்க முடியாத இடைவெளியைப் பற்றி,ஆனால் அதற்கான தேவைகள் மற்றும் ஆவல்களைப் பற்றி அரசியல்,பண்பாட்டுப் பின்புலம் மற்றும் சில இணைப்போடு அவர் சொல்லும் கருத்துக்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

1968 –ல் அடோர்னோவிற்கு (Theodor Adorno) ஏற்பட்ட அதிர்ச்சி,பல்கலையின் போராளி மாணவி தன் மார்பகங்களைத் திறந்து காட்டிய செயல்,பல்கலையைக் கட்டி எழுப்பியவர்களைப் பற்றி முப்பது வயதிற்குக் கீழுள்ள இளைஞர்கள் உதாசீனம் செய்வது,அந்தக் குரல்களை அனுமதிக்குமாறு உயிர் நண்பரான ஹெர்பர்ட்(Herbert Marcuse) சொல்வது,ஸ்மித்தைப் பொறுத்தவரை மதிப்பீடுகளின் வீழ்ச்சியாகத் தெரிகிறது.

68-ன் தலைமுறைகள், முப்பது வயதிற்கு மேம்பட்டவர்களின் குரலிற்கு மதிப்பில்லை எனவும் தங்கள் தலைமுறைக்கு வயதே ஆகாது எனவும் சிந்தித்தது, இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டிருந்தாலும், காலம்,இன்றைய 90 களின் தலைமுறையுடன் அந்தப் பிளவை காட்டிக்கொண்டிருக்கிறது.

வயது மற்றும் தலைமுறை வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.ஆனால், சில விழுமியங்கள் கேள்விக்குறிகளாகுகையில் இரண்டின் இடையே சமன்பாட்டைக் கொண்டுவருவது எப்படி என்பதும்,எப்படி இந்தச் சுழலின் இரு விசைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் செயல்படுவது என்பதும் சிந்திக்கத்தகுந்ததே.இளைஞர்களைப் போன்ற விளையாட்டுத் தோற்றங்கள் கொள்ளும் 40, 50 வயது சக ஆசிரியர்கள் (Steve Buscemi) வேதனையைத்தான் கொண்டுவருகிறார்கள் என்கிறார் இவர்

பின்நவீனத்துவத்தின் ‘பிறப்பு,இறப்பு,மீள்பிறப்பு’ போன்றவைகளைக் குறிப்பிடும் விதமாக’விளையாட்டு நேரம் முடிந்துவிட்டது’ என்ற இவரது கட்டுரை பின் நவீனத்துவத்தின் கோட்பாட்டினை அசைத்துப் பார்க்கிறது.பகுப்பாய்வு தத்துவம் படித்த 90 களில் உண்மை அல்லது பொய் என்ற இரு நிலைகள் மட்டுமே அவர்கள் அறிந்தார்கள்.’இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை’ என்பதை பின் நவீனத்துவம் பகடி செய்யவும், புதைந்துள்ள தன்மையை வெளிக்கொணரவும் பயன்படுத்தியது;ஆனால், இன்றைய இளைஞர்கள் ‘உண்மையா,இல்லையா?’ என்ற இரண்டை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.இடைப்பட்டது என்பதுஇல்லை என்பதிலேயே பின் நவீனத்துவத்தின் மீள்பிறப்பு நிகழ்ந்துள்ளது.பின் நவீனத்துவர்கள் எவ்வளவு முயன்றாலும்,அதன் அதிகத்தாலேயே அதில் நேர்மையை உணர்த்தும் கருத்துகள் குறைந்துவிடுகிறது.ஃப்ரெஞ்சுக் கலாசாரத்தில் நடக்கும் அனைத்தையும் நிறுவனம் சார்ந்த ஒன்றாக, வரையறுக்கப்பட்டதாக, அதே நேரம் விளையாட்டின் நெறிமுறைகள் சொல்லப்படாததாக மாற்றும் ஓர் வல்லமை ஃப்ரான்சுக்கு இருக்கிறது. சர்ரியலிசத்தில் நடந்ததும் அதுவே;பின் நவீனத்திலும் நடப்பதும் அதுவே.இவைகள் அடைக்கப்பட்ட நிலையை அடைந்துவிடுவதால்,அதன் உண்மைகள் புலப்படுவதில்லை.ஃப்ரெஞ்சு தத்துவவாதிகள் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் என்னதான் சொல்ல வந்தார்கள், என்னதான் செய்தார்கள் என்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.ஆனால், இந்தப் பின் நவீனத்துவத்தினையும் தாண்டி அறிவுஜீவிகளின் வாழ்க்கை  எனக் கருதப்பட்டதை, கடந்த பத்தாண்டுகளில் கல்வியாளர்கள் அதிலிருந்து விலகிச் சென்றுள்ளதையும் பார்க்கிறோம்.

சற்று விளையாடலோடு ஸ்மித் தன் தத்துவங்களைச்  சொல்ல விழைந்தாலும், அவர் வளர்க்கப்பட்ட, பயிற்றுவிக்கப்பட்ட விதம் அதைச் சொல்ல இயலாமல் செய்கிறது. இருந்தும்,அத்தகைய விழைவே இன்றைய தலைமுறையில் இல்லை.நிறுவனங்களின் சட்ட திட்டங்களை தெய்வீகக் கோட்பாடுகள் எனக்கொண்டு  இளைய கற்பிப்பாளர்கள் செயல்படுகிறார்கள் என்கிறார் அவர்.தாங்கள் விளயாட்டுத்தனம் கொண்டவர்களாகவும்,அதே நேரம் இணைப் பணியாளர்கள் உள் நோக்கத்தோடு புரளிகள் கிளப்பி,அரசியல் செய்வதாகவும், சரியான இறுக்கமான ஒழுங்கியல் விதிமுறைகள் தேவையெனவும் சொல்கையில் கல்விச் சூழலில் ‘அறிவுப் புரளிகளையோ அல்லது மீறல்களையோ சகிக்க மாட்டாது அனைத்துக்கும் அரசியல் வண்ணம் பூசுபவரை என்னவென்று சொல்வது என்று ஸ்மித் ஆதங்கப்படுகிறார்.

”ஆனாலும்,’விளையாட்டு நேரம் முடிந்துவிட்டது’ என்பதை நாம் கவனத்துடன் சொல்ல வேண்டும்;அந்தக்குழுவில் நாம் நம் வயதின் காரணமாக ஏற்றுக்கொள்ளப் படவில்லையென்றால்,அவர்களின் மத்தியில் மட்டும் அவ்விளையாட்டு இருக்கிறதென்றால் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை.”

“சார்லி ஹெப்டோவை நம் சமூகம் கையாண்டவிதத்தில் நம்மால் கேலி, கிண்டல்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனப் புரிகிறது. நம்மை மகிழ்விக்கும் நகைச்சுவைகள்,அரசியல்வாதிகளால் மறு’குருவிச் செய்தி’யென வடிவெடுத்து இரண்டு மூன்று நாட்களில் வரும்போது, யாருடன் நம்மை நாம் சேர்த்துக் காண, கருத்துத் தளத்தில், விரும்பமாட்டோமோ,அவரால் அந்த நகைச்சுவை காட்சி அரசியல் தொனியுடன் வருகையில் இந்த சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதே நல்லது எனத் தோன்றுகிறது.எதற்கு நெருக்கமாக எது இருக்கிறது என்பதுதான் மக்களின் கவனத்தில் இருக்கிறது.நீங்கள் சமூக வலைதளத்தில் யாரைத் தொடருகிறீர்கள் என்று பார்த்து அவரைத் தொடர்வது என்பது என்னவென்றால், என்ன சொல்லப்பட்டது என்பதை கவனிக்காமல் அதில் ஒரு திட்டத்தைக் கொணர்ந்து அதைப் பார்வைப்படுத்துவதுதான்;மக்கள் அந்தப் போக்கில் தான் இருக்கிறார்கள்.இதனால், நாம் கேட்க விரும்புவோரின் கருத்துக்கள் சொல்லவே படாமல் ஆகிவிடும்.இது உண்மையில் யாரை பாதிக்கும் என்றால், தான் உண்மையாக வலது சாரியில் இல்லை என்றாலும் இடது சாரியினரின் தற்காலச் செயல்பாடுகளுக்குக் கூரான, கறாரான விமர்சனம் செய்ய விழைவோரைப் பாதிக்கும்.நடுனிலையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு எந்த வழியையும் அடைக்கும் ‘முழு மைய’ஆட்களால் எந்தப் பயனும் இல்லை.”

“சோஷலிஸ்ட்ஸ் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட சிலவற்றைப் பாதுகாக்க விழைகிறார்கள்.அரசியலும், பண்பாடும் களேபரமாகக் கலந்த இந்த நிலையில் லெனின் காப்பாற்ற விழைந்த அந்த ஜாரிஸ்ட் ரெயில்வே போல(!),புத்தகங்களும், சினிமாக்களும், புரட்சிக்கு முன் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே காப்பாற்றப்படவேண்டும்.அரசியல் செய்ய வேண்டிய வேலை வருமானத்தை சரிசமமாக்குவது,மாணவர்களின் கடனை நீக்குதல் போன்றவையாகும்.கலாச்சாரம் என்பது அரசியலிலிருந்து பிரிந்துதான் செயல்படவேண்டும்.ஒவ்வொரு கால கட்டத்திலும் கலைப் பொருட்கள், கலைகள்,இலக்கியம் போன்றவற்றை இரசிக்கும் பண்புகள் மாறித்தான் வருகின்றன. எனக்குப்பிடித்த பாடல் என்னைவிட இருவது வயது இளயோருக்குப் பிடிப்பதில்லை.ஆனால், அவைகள் நம்மால் கொண்டாடப்பட்டன.எட்வர்ட் லுட்வாக் சொன்னார்’கண்டத்தட்டு இடம் பெயர்தல் அதி விரைவில் நடைபெறுகிறது. ஒருவரின் வாழ்விலேயே அது பலமுறை இடம் பெயர்வதைப் பார்க்க நேர்கிறது.45, 50 களில் இருக்கும் மனிதன் அதுவரை அவன் பெற்ற, வளர்த்த திறமைகள் ஒன்றுமில்லாமல் போகும் மாற்றத்தைக் காண்கிறான்.வேலைச்சந்தையைப் போலவே பண்பாட்டிலும் இத்தகைய மாற்றங்கள், 20 வயதிலிருந்து, நாப்பது வயது வரை இருப்பவர்களுக்கு பெரிதாகப் பொருள் படுவதில்லை.”

“பால் செலனை மொழி பெயர்த்தவர், கவிஞர்,எனதருமை நண்பர், ஜெரோமினை இன்று நினைவில் கொள்வாரில்லை.எத்தகைய இடங்கள், எத்தகைய விவாதங்கள்,அவை அனைத்தும் மறக்கப்பட்டுவிட்டன. நாம் ஆற்றலுடன் இன்னமும் செயல்பட்டாலும், நம்மை பொருட்படுத்தாத இந்த சமூகம் அளிப்பது அதிர்ச்சியும், வேதனையும்.2014-லில் நான் நல்ல படைப்பூக்கம் கொண்டவனாகவும், திறம்படச் செய்பவனாகவும் உணர்ந்தேன் 2015 அதைப் புரட்டிப் போட்டுவிட்டது.அலைகளின் சறுக்கலில் மாட்டிக்கொண்டு என்னை மீள் கட்டமைப்பு செய்ய முயற்சித்ததனால் ‘அனைத்தும் முடிவுற்றன’ என்று நான் சொன்னது என்னுடைய அனுபவங்களின் வெளிப்பாடே!”

“அதனால்தான் ‘பின்வாங்குதல்’ பற்றிப் பேசுகிறேன்.என்னுடைய சொந்த விஷயங்களும்,வரலாற்றுப் பிண்ணணிகளும் ஒத்திசைந்து போவதைப் பார்க்கிறேன். எது எதை பாதிக்கிறது என்பதையும் சிந்திக்கிறேன்.சில வரலாற்றுத் தருணங்கள் பகுத்தறிந்து பார்ப்பதற்கு உகந்தது.

சமகால கலாச்சாரப் பின்புலதிலிருந்து விலகி என் மனதிற்குப் பிடித்தமானவற்றை எழுதுவது, அதற்கான பொதுப் புரிதலை உண்டாக்கி இந்த முதுமை, இளமைப் பிரிவைக் கடப்பதில் நான் ஈடுபட்டுள்ளேன்.பொதுவானவிவாத மேடை என்பது, முகத்திற்கு நேரே பேசுதலும்,அதைப் புரிந்து கொள்ளும் மனிதரிடையே எந்த விதத்திலும் கொண்டு சேர்ப்பதுமாகும்.பழையதைப் புரிந்து கொள்ளுதல் என்பதில் இன்று பலவகை தொழில் நுட்பங்கள் உதவுகின்றன.அரிஸ்டாட்டிலின் ‘மெரைன் பயாலஜி’யை விக்கிபீடியா மிகச் சிறந்த முறையில் புரியும்படி தருகிறது.(மற்ற அதைப் பற்றிய பிற நூல்களை விட!)”

“உங்களின் உணர்ச்சி அப்படியே அவர்களிடம் பிரதிபலிக்காவிட்டாலும்,மறுபக்கத்தில் இருப்பவர்க்கும் பழசை பற்றி அறிய ஆவல் உள்ளது.என்னைவிட இருவது வயது இளயவர்களின் வரலாற்று அறிவும், ஆர்வமும் எனக்கு இனிய அதிர்ச்சிதான்;என்ன ஒன்று அவர்கள் மிகப் பழையதையே பேச விரும்புகிறார்கள்!”

ஜஸ்டின் ஸ்மித் பாரிஸ் பல்கலையில் வரலாறு மற்றும் தத்துவ அறிவியல் கற்பிக்கும் பேராசிரியர்.இவரது”எல்லாம் முடிந்தது” என்ற வலைப்பூ பக்கம் இணையத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது. அவருடைய  சமீபத்திய நூல் ’Irrationality:A History of the Dark side of the Reason’. 

ஜான் பாஸ்கின் ‘பாயின்ட்’ இதழின் முதல் ஆசிரியர். ‘சமூக ஆய்வின் புதுப்பள்ளியில்’ “படைப்பூக்க வெளியீடுகளும், கூரான இதழியலும்’ என்ற முதுகலை படிப்பு கற்பிக்கிறார்.   

[இரு குறிப்புகளையும் எழுதியவர் ந. பானுமதி]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.