காலத்தின் கடைசிச் சொட்டு..

வாழ்ந்த வாழ்வினை
கையில் எடுத்துப் பார்த்தான்
புத்தன் அருகிலிருந்தான்
அலைகள் உறங்கிய
கடலாய் இருந்தது
அது.
ஆயிரம் நிறங்களில் மிதந்தன
ஓசைகள் சருகுகளின் மீது
பெய்யும் மழை போல
மிக நுண்ணியதாய்
உற்றுக் கேட்டான்
ஏவல்கள்,அழுகைகள்,
களியோசைகள், மெளனத்தின்
முணுமுணுப்புகள்…
அமிழ அமிழ மெளனத்தின் மூச்சுயோசை அவிழ
காட்சிகளின் நிறமும்
கடலின் மடியில் இருந்த இருள் போல ஆகி ஆழ்ந்து மிதக்க…
சாரளத்தின் வழி நுழைந்த
நீல நிற ஒளிக்கு
கரங்கள் முளைத்து
அவனை அள்ளிக் கொண்டது.
தோல் சுருங்கி
இடுக்கிடையே வசித்த
தனிமையும் வடியத் தொடங்கியது
அறையில் அவன் எல்லாமுமாய்
இருந்தான்
கடைசி கடைசியாக
உறவின் குரல்கள் வீழத் தொடங்க
புது வாசனை சாளரக் காற்று
நாசித் துளைகள் கடந்து கடந்து..
சொல்லாமல் புறப்படு!
என்றான் புத்தன்.
புத்தனுக்கு தெரியாது
தன் புறப்பாட்டினை
டைரியில் எழுதி வைத்திருக்கிறான்.
யார் படிப்பாரோ
யாருக்கு புரியுமோ?
அவன் எழுதி வைத்து விட்டான்.
***

அப்பாவின் முகம்
அப்பாவின் காதலி
வந்திருந்தார்
இங்கு
முன்னாள் என
எழுதுவதில் உடன்பாடு இல்லை
பருவத்திற்கேற்ப மனசில்
உடன் பயணிக்கவே
செய்தவள்
நேற்று வரை..
எழுத்திலும் தொடாதபடி
காதலும் நட்புமாய்
மனமூச்சில் இருந்தவள்.
அப்பா தன் துக்கப்பொழுதிலும்
மகிழ் பொழுதிலும்
சில நொடி யாரும்
அறியாத படி
அவளை உச்சரிப்பார்
அவள்
அருகிருந்த வாசமுணர் உயிர்ப்போடு…
இதோ
வந்திருக்கிறார்
அம்மாவிற்கு அவள்
புதுமுகம்.
எனக்கு
அவள் அப்பாவின்
இன்னொரு முகம்
அப்பாவின்
இளமை வாசம்
அவளிடம் இன்னும்
வீசுகிறது
அப்பா படத்தின்
சம்பங்கி மாலை போல
நான்
அவரை வரச்சொல்லி
கைப்பிடித்து அமர்த்தினேன்
அப்பாவை அமர்த்தியது
போலவே.
நல்ல கவிதைகள்.. நன்றி 🙏
என் அப்பாவும் இல்லை. அவர் காதலியும் இப்போது இல்லை. காலமாகி விட்டார்கள்.கவிதையாய் படித்ததும் அவர்களின் நினைவுகள் வந்தது. அன்புடன் சேது வேலுமணி, ஜக்தால்பூர்.