(அ)தர்க்கம்

ஒன்றிலிருந்து ஒன்றை உருமாற்றினாய்.
ஒன்றுமில்லாதிலிருந்து ஒன்றை உருவாக்கியிருக்கலாம்-
ஒன்று பலவாய், பல ஒன்றாய், உருவருவாய்
ஒன்றில்லா ஒன்றாய், ஓயா இயக்கமாய்
ஆணிப்பொன் அம்பலத்தாடு ஆனந்தக்கூத்தா!
கான் நரிகளைக் கவின் பரிகளாய் உருமாற்றினாய்.
”நரிகள் மாறிய பரிகள்”
நள்ளிரவில் மறுபடியும் –
உருமாற்றியல்ல தாமே உருமாறி-
நரிகளாகி ஊளையிட ,
”நரிகள் மாறிய பரிகள் மாறிய நரிகள்”
பரிகளாகும் முன்பிருந்த பழைய கான் நரிகளாகுமா?
வாதவூரார்க்காய் வைகை பெருக்கெடுத்து கரை புரள வைத்து
முதியோளின் உதிர்ந்த பிட்டுக்கு மண் சுமந்த பெரும்பித்தா!
கரையுடைந்து வழிந்த வெள்ளம் திரும்பிற்றா?
பரிகளான நினைவின்றி ”நரிகள் மாறிய பரிகள் மாறிய நரிகள்”
பழைய கான் நரிகளாய்ப் பழையபடி காடு திரும்பினவா?
அரவரவம்

வாழைத் தோட்டத்திலிருந்து வெளிப்பட்டு
வடக்கு மதிலோரமாய் ஊர்ந்து வந்து, வெளிவாயில் கீழ்
கயிறா இல்லை கயிற்றரவாயெனச் சுருண்டு கிடக்க
கண்ணுறாது நெருங்க
கயிற்றரவில்லை, கொல்நச்சுப் பையரவாய்ப்
படமெடுக்கக் கண்டு
பயந்தலறி ஓட
விரைந்து ‘சர சர’வென
வலது பக்க வாய்க்கால் வழி போகாமல்
இடது பக்கக் காலியிடத்தில் மண்டிக் கிடக்கும்
எருக்கஞ் செடிப் புதரில் போயொளிந்தாலும்
அருவுருவாய்ச் சீறும் அரவு இன்னும் வெருட்ட- இவ்வண்
அரவு பற்றிய ஓயா அரவரவம்
அரவினும் அரட்டியாய் ஊர்ந்தூர்ந்து
உறுகாலம் உற்றது போல்
ஒளிந்திருக்கும் நச்சு
அரவுற
அரவு தீண்டி உயிரிறக்கும்
ஒரு தடயமுமின்றி-
அவரவர் கலைவர்
எவரெவரோயென்று
அரவமின்றி-