புலரியில் அடிவானத்தின் மந்த நிலை துலங்கத் தொடங்கியிருந்தது. தன் முதல் பொன்கீற்றைக் கொண்டு கதிரவன் அன்றைய நாளுக்குள் நுழையத் துவங்கியிருந்தது. எங்கள் மஞ்சத்து அறையின் திறந்து வைக்கப்பட்ட கண்ணாடி சாளரத்தின் வழியே நர்மதையின் மேல் பரப்பில் இரவில் தேங்கியிருந்த பனிப்படலம் இறுக்கம் களைந்து குளிர் காற்றாய் உள் நுழைந்தது. அந்த உள்நுழைதலில் சாளரத்தின் இடைத்தடுப்புகளாய் இருந்த தோரண மணிகள் நலுங்கிக்கொண்டிருந்தன. முதற்பொன்னொளியும் அந்த தோரண நலுங்கல்களின் நிழலும் அவள் மேல் கவிந்து தழலாடின. அன்றைய நாளை அவள் இவ்வாறு வரவேற்பதாகப்பட்டது.
“ஆதாமின் ஆப்பிள்” என்றாள் அவள் உறக்க கலக்கத்தில் முனங்கியபடி. அவள் அரைதுஞ்சல் இமைகள் எனை நோக்கி சிமிட்டின.
“பரமனின் கண்டத்தில் அமைந்த ஆலகாலம்” என்றேன் நான் விழிப்புற்ற நிலையில்.
“ஆப்பிளோ விஷமோ இப்போ எனக்கு மெல்லணும் அதை” என்றாள்.
அந்த மஞ்சத்தில் எங்கள் ஒற்றைப் போர்வையை விலக்கி உடலை நகர்த்தி, தன் இருகரங்களைக் கொண்டு என் அருகில் வந்தாள். என் கழுத்தில் பதித்தாள். பிறகு மெலிதாய் நெரித்தாள். பின்னர், “இப்படித்தானே உன் பார்வதி தேவியும் பிடித்து தடுத்து நிறுத்தியிருப்பார்கள்” என்று அந்த இடத்தை அழுத்தினாள் ஒரு வஞ்சக முறுவலுடன்.
“அவர்களாவது பிடித்த கையோடு நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் நான் அப்படிவிடப்போறதில்ல” என்று நா எழ அருகில் வந்து அதை மென்று விட துணிந்தாள்.
“என்னை ஏன் இப்படி எச்சல் படுத்தற?” என்று அவளது அந்த நெரிப்பில் திக்கு திணறி தொண்டையில் எழுந்த ஒலிகளை சொற்கூட்டி திரட்டி சொன்னேன். காதில் வாங்கிக்கொண்டே அவள் தன் செயலைத் தொடர்ந்தாள்.
“என்ன பெண் இவள்? என்ன விளையாட்டு இது?” என்று நான் பலமுறை அவளிடமே கேட்டுமிருக்கிறேன். நானும் எனக்குள்ளேயும் நினைத்திருக்கிறேன். ‘இதலாம் உனக்கு புரியாது. புரிஞ்சுக்கணும்னா ஒரு பொண்ணா மாறணும். என்ன?’ என்று தன் நுனி நாக்கை வலப்பக்கமாய் சுழட்டி ஓரப்பல்லிடுக்கில் துருத்தி நேரெதிர் புருவத்தை ஒசித்துத் தாழ்த்தி பின்னர் மூடிய புன்னகையுடன் கடந்துவிடுவாள்.
எங்கள் இல்லத்தில் அவளுடனான நாழிகைகளில் கிடக்கும் போது அவள் சுவாசம் அதில் மேல் படாமல் இருக்காது. அவளுக்கு வேணுமெனும் போது அங்கே முத்தமிடுவாள். அவளது நிழல் என் மேல் விழுந்தாலே அந்த இடம் எனக்கு கூச்சமேறி குடிகொண்டு குடுகுடுக்க ஆரம்பித்துவிடும். அவளது முத்தத்தின் ஈரமோ சுவாசத்தின் சூடோ அந்த இடத்தை அப்படி மாற்றியிருக்கிறதோ என்னவோ? ஒரு கோலி சோடாவின் கழுத்தில் நலுங்கும் கோலியைப்போல. அதை அவள் ரசிப்பாள். அவ்வப்போது தொட்டுப்பார்ப்பாள். நான் சிணுங்கும் போது, “ஆணுக்கு மட்டுமே உரித்தான கூச்சம்’ல” என்று சிரிப்பாள். “எங்க என் கழுத்தை கூசச் செய்யேன்” என்று அவள் கழுத்தை அவ்வப்போது உயர்த்தி வம்பிழுப்பாள். எங்கிருந்து கற்றுக்கொண்டாள் இந்த குயுக்தியை. மோசக்காரி.
முதல் நாள் இரவு வெகு நேரந்தாழ்ந்தே அந்த அறைக்கு வந்திருந்தோம். இந்தோரிலிருந்து விமானத்தில் இறங்கி டாக்ஸியில் நள்ளிரவில் இங்கு வந்து சேர்ந்தோம். அசதியாக இருந்ததினால் நன்றாக உறங்கிவிட்டிருந்தோம். போர்வையை விலக்கி பின்னர் அவளையும் விலக்கி எழுந்து கொண்டேன். சாளரத்தின் வழியாக கீழே பார்த்தேன். நர்மதையின் நீங்காத சலனத்தில் நிராதரவாய் இருந்த இரு கூரைப்படகுகள் நீள்வாக்கில் முட்டியும் அகன்றும் அசைந்து கொண்டிருந்தன. துடுப்புகள் அதன் மேல் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தன.
***

இது மாஹேஸ்வர். மத்திய பிரதேசத்தின் நர்மதை நதிக்கரையில் அமைந்த ஊர். சற்றும் முன்னேற்பாடற்ற பிரயாணம் தான் இது. நான் சாதாரணமாகத்தான் இந்திய வரைபடத்தை எடுத்துக்காட்டி இங்க எந்த மூலைக்கு போகலாம் சொல்லு என்று கேட்டேன் அவளிடம். அவள் “மூலைலாம் வேணாம். மையத்துக்கு போகலாம்” என்று
தன் கைவிரலைச் சுட்டி இந்த மையநிலத்தை தேர்ந்தெடுத்தாள். முடிவெடுத்த இரண்டு நாட்களிலேயே கிளம்பி வந்துவிட்டோம். மராத்திய மாளவ ராஜ்ஜியத்தின் ஹோல்கர் வம்சத்து ராணி அஹில்யா தேவி ஆட்சிபுரிந்த இடம் இது. அவர் கட்டிய கோட்டையை சற்று சீர்திருத்தி அதன் தொன்மையான அழகை குலைக்காமல் இருக்கும் வெளியை கச்சிதமாய் பயன்படுத்தி தங்கும் விடுதியாக மாற்றியமைத்திருந்தனர். கோட்டையின் முதல் தளத்தில் நதியினைப் பார்த்தவாறு ஒரு நோக்கு மாடம். அதன் அருகில் அமைந்துவிட்டது எங்கள் அறை.
அந்த நோக்கு மாடத்தின் வழியாக நோக்கினேன். கீழே அக்கோட்டையை ஒட்டியே நதியின் படித்துறையும் ஒரு கோவிலும் அமைந்திருந்தன. ஆங்காங்கே நீராடிக்கொண்டிருக்கும் மக்கள் திரள். நர்மதையில் நனைந்து அம்மக்கள் அவர்களின் நாட்களை துவங்குகிறார்கள். ஆடவர்களும் சிறுவர்களும் மேலாடை களைந்து நீருக்குள் இறங்கினர். கண்ணுக்கு எட்டிய வரை கோட்டை மதில் தெரிந்தது. படித்துறையும் கோவிலும் கூட கோட்டையின் பகுதிகள் தான் என்றுபட்டது. ஒரே மாதிரியான செந்நிற வளாகம்.
கதிரவன் சற்று எழுந்திருந்தது. அந்த காலை ஒளியில் கோட்டை மதிலும் அந்த படித்துறையும் அந்த கோயிலும் பொன்னென மின்னிக்கொண்டிருந்தன. நீராடிக் கொண்டிருந்த சிறுவர்களின் முதுகுகளிலும் அந்த பொன்னொளியின் வழிவு தெரிந்தது.
இந்திய தேசம் முழுதும் நிறைந்த கோயில்களின் கோட்டைகளின் பொடி நிறமும் இந்திய மக்களின் மாநிறமும் இந்த காலை வேலையில் தான் பொருட்கொள்கின்றன என்று தோன்றியது. இந்நிறங்கள் ஒரு விதத்தில் மண்ணின் நிறங்கள். மண்ணிற்கு தான் கதிரவனின் பொன்னொளியை முழுதும் வாங்கிக்கொண்டு ஜொலிப்பை திருப்பிக் கொடுக்கத்தெரியும்.
மாஹேஸ்வரின் வீதிகளை காலைப்பொழுதில் பார்த்திட வேண்டும். காலையின் இளவெயில் பட்டு பூமியின் மேல் மணம் எழும். மாஹேஸ்வர் என்று மட்டும் அல்ல. எந்த ஒரு புதிய இடத்திற்குமே அப்படி ஒரு மணம் உண்டு. நான்கு மாத கைக்குழந்தை தன் கால் கட்டைவிரலை முகத்தருகே கொண்டு வந்து வாயில் நுழைத்துக்கொள்ள எத்தனிக்கும். மண்ணை அறிய அதற்கு அதற்குள் ஆசை எழுந்துவிடுகிறது. கட்டைவிரலின் சுவையை அறிந்த பின்னர் சற்று வளர்ந்து வரும் பருவங்களில் அந்த மண்ணை கையால் அள்ளி வாயில் போட்டுக்கொள்கிறது. ஆனால் என் இந்த ஏழு கழுதை அகவையில் அப்படியெல்லாம் போட்டுக்கொள்ள முடியாது. அதை நாசியால் நுகரத்தான் முடியும். அத்தகைய மணம் காலையில் தான் எழும். இதையெல்லாம் விழித்த பிறகு அவளிடம் சொல்ல வேண்டும். ஆசையாய் கேட்டுக்கொண்டிருப்பாள். அசதியாக உறங்கிகொண்டிருந்தாள். அவளை எழுப்பவில்லை.
அறையில் அவளை தனியாக விட்டு விட்டு, மாஹேஸ்வரின் தெருக்களில் திரிந்தேன். குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன். எழுந்து பார்த்தால் தெரிந்துகொள்வாள். தெருக்கடைகள் அதற்குள்ளாகவே திறக்கப்பட்டு இருந்தன. மக்கள் நிறைந்து இருந்தனர். ஒரு தெரு வளைவில் திரும்பினேன். இரு சாரிகளிலும் புடவைகளை விரித்து கடை வாசலில் போட்டிருந்தார்கள். புடவை கடைகளாய் இருந்தது. எதிரில் வந்த ஒருவரிடம் வினவினேன். நர்மதைக்கு சேலை அணிவிக்கும் விழா நாளை. அதனால் தான் புடவை கடைகளாக காட்சி அளிக்கின்றது என்றார். நர்மதைக்கு சேலையா? அப்படி ஒரு நதி வழிபாடா? இந்திய ஆழ்மனத்தின் விசித்திரங்கள் என்னை இந்நிலத்தில் இருந்து அகலவிடாது போல.
என்னென்ன அணி அலங்காரங்கள் அந்த புடவைகளில். எத்தனை விதமான நிறங்கள் பட்டிலும் பருத்தியிலுமாக. அம்மா ஒருமுறை சொல்லியிருக்கிறாள். மாஹேஸ்வரி பட்டுப்புடவைகளைப் பற்றி. அந்த நினைவுப்பிடியை பற்றிக்கொண்டேன். அந்த தெருவின் கடையெல்லையில் ஒரு நெசவுத் தொழில் செய்யும் கூடம். புராதன வழியில் கைத்தறியில் நெசவை மேற்கொண்டு வருகிறார்கள். ராணி அகில்யா தேவி காலத்தில் இருந்தே பிரசித்தி பெற்ற ரேஹ்வா நெசவுத் தொழிலாளர்கள் சமூகம். கைத்தறி நெசவை இன்று வரை காத்துக் கொண்டு வருகிறார்கள். அங்கும் அதன் முன்னறையில் பட்டுப்புடவைகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை அப்போது. அவளுக்காக ஒரு புடவை வாங்கவேண்டும். அவளுக்கு ஏற்ற நிறத்தில் அல்லது நான் அவளை இப்படி பார்க்கவேண்டும் என்று ஆசைப்படும் நிறத்தில் ஒன்றை வாங்கிகொண்டேன். எங்கள் இல்லத்தில் அவளது வார்ட்ரோபில் நான் ஒரு புடவையும் கண்டது இல்லை. ஆனால் ஒருமுறை அதெல்லாம் எனக்கு அணியத்தெரியும் என்று சொல்லியிருக்கிறாள். அதற்குள்ளாகவே “எங்கே போயிருக்க” என்று அவளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
***
“மே ஐ கம் இன் டியர்” என்று அறைக்கு வெளியில் காத்திருந்தேன். “யெஸ் ப்ளீஸ்” என்றது பதில் குரல்.
படுக்கையில் அவள் இல்லை. குளியலறையி லிருந்து துவட்டிய துண்டைச் சுற்றி கட்டிக்கொண்டு வெளியே வந்துகொண்டிருந்தாள். அவள் நெற்றிப் பரப்பில் நீர் மணிகள் நின்றிருந்தன. புருவக் கருமையில் நீர் கோர்த்து ஒரு துளி கீழே விழ காத்துக் கொண்டிருந்தது. அவளுக்காக வாங்கி வந்த புடவையை என் முதுகிற்கு பின்னால் மறைத்துக் கொண்டேன்.
“எங்க போய்ட்ட?”
நான் அவள் அருகினில் வந்தேன். ஈரத்தில் வழியும் கேசத்தினை துவட்ட இன்னொரு துண்டைத் தேடி அவள் கை நீண்டபோது அவள் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டேன்.
“விடு” என்றாள்.
“குளிச்சுட்டு இப்படி ஈரமா நிக்க விட்றியே” என்று சினந்தாள்.
“நான் உனக்கு ஒரு கத சொல்லணும்.”
“சொல்லு” என்றாள், இருகைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டு.
நான் அவளை நெருங்கி அவள் புருவ மத்தியை நோக்கி அந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். அவள் கண்கள் மீனின் துள்ளலுடன் இமைகளில் வழிந்த ஈரத்தில் என்னை நோக்கின.
“இதோ பின்னாடி ஓடுதே ஆறு. அதப் பாத்தியா. மனுஷன் முதல்’ல இந்த ஆறப் பாத்தான். அதோட நீளமும் நெளிவும் அவன பிரம்மிக்க வச்சுது. அத அவன் கைல அடக்க நெனச்சான். ரெண்டு கையால ஆத்து தண்ணிய மொண்டு பாத்தான். அடங்கல.
அந்த ஆறோட அலைவும் அதோட நீளமும் அவன் கனவுல தொடர்ந்து இருந்துட்டே வந்தது. நதிய அடக்கி ஆளணும்னு நெனச்சவன், வயல்’ல வெடிச்சி நின்ன பருத்தியப் பாத்தான், பச்ச எலைல நெளிஞ்சுட்டு இருந்த பட்டுப் புழுவப் பாத்தான். அத வச்சு அவன் ஒரு நதிய உருவாக்கணும் நெனச்சான். நதியோட நீளத்த அதுக்கு குடுத்தான். அதோட அலைவ அதுக்கு குடுத்தான். தன்னோட மகளிர்கிட்ட குடுத்து உடுத்திக்க சொன்னான். ஒரு வகையா த்ருப்தி அடைஞ்சான். அந்த மாதிரி இப்போ என் கைல மடிஞ்சி கிடக்கு ஒரு பட்டு நதி” என்று என் இடக்கையால் அவள் கண்களைப் பொத்தி, வலக்கையில் முதுகில் மறைத்த அந்த புடவையை எடுத்து நீட்டினேன்.
என் கையை விலக்கி அந்த புடவையைப் பார்த்தாள். புருவ இழையில் கோர்த்து நின்றிருந்த ஈரம் அந்த புடவையில் சொட்டியது. அந்நிலையில் அவள் பூரிப்பை அவள் கண்கள் காட்டின. அந்த சேலையின் மேல் அவள் கொண்ட பிடித்தம் அவள் அதை நெஞ்சோடணைத்ததில் இருந்து புரிந்தது. என் கண்களைப் பார்த்தாள். வாடிக்கையான அவளது மூடிமறைக்கும் சிரிப்பு.
சிறிது நேரம் பேசாமல் நின்றாள். பின்னர் தொடர்ந்தாள்.
“இதெல்லாம் சரி. இந்த சாரீக்கு ஏத்த ப்ளவுஸ் பிட்டும் மற்ற சமாச்சாரங்களும் யார் வாங்கிட்டு வருவா ராஜா? “ என்று சொல்லிவிட்டு எதிர் நின்ற எந்தன் தொண்டையை தொட்டழுத்தி விலக்கிக்கொண்டாள் ஒரு எள்ளல் சிரிப்புடன்.
“நான் வேணும்னா வெறும் சாரீய மட்டும் சுத்தி கட்டிக்கவா?”
கூச்சம் என்னை பிடிங்கி எடுத்தது. கூடவே அவமானமும். என் முகம் சிறுத்து கன்றிப் போனது. பின்னடியெடுத்து வைத்து மஞ்சத்தில் அமர்ந்துகொண்டேன். அவள் சிரிப்பை நிறுத்தவில்லை. ராட்சசி. அரக்கி. என் மேல் உள்ள தவறுதான் அது. என் அறியாமை. இவள் மேல் கோபம் கொள்வது நியாயமில்லை. ஆனால் என் அறியாமையை சரியாக பயன்படுத்தி காரியத்தை சாதித்துக்கொண்டாள். பாதகத்தி. அவளது செல்லச் சீண்டலுக்கு நானே வழிவகுத்து தந்துவிட்டேன்.
அவள் சிரிப்பும் அடங்கியது. தொய்ந்து போய் அமர்ந்திருந்த என்னருகில் வந்து அந்த அரை ஈரத்துடன் என் மடியில் அமர்ந்து “கண்ணா ஐ டோண்ட் வான் டு ஸ்பாயில் யுவர் மூட் என்ன” என்று என் தாடையை உயர்த்தினாள்.
“ஒன்னு பண்ணலாம், இன்னிக்கு இப்பவே போய் இதுகேத்த மாதிரி ப்ளவுஸ் பிட் வாங்கி தைக்க குடுத்துட்டு வரலாம். நாளைக்கே வாங்கிகிறா மாதிரி கொஞ்சம் வற்புறுத்தி கேட்போம் என்ன?”
சரியென்று பட்டது எனக்கு. என் நெற்றியின் மேல் உள்ள முடியை தன் கையால் கோதினாள். பின்னர், உதடு பதியும் முத்தம் ஒன்றை நெற்றியில் தந்து எழுந்துகொண்டாள். “ஸோ அது வரை. ஐ வில் பீ மை செல்ஃப் இன் தீஸ் கேஷ்யுவல்ஸ்” என்று அன்றைக்கு அணியப்போகும் ஆடையை ஆட்டி காண்பித்தாள்.
***

அந்த மாலையில் அகில்யா காட்’டின் படித்துறையில் இருவரும் அமர்ந்திருந்தோம். சேலை அணிவிழாவின் தடயங்களாக நர்மதையின் குறுக்கே இக்கரையிலிருந்து அக்கரைவரை பலநிறச்சேலைகள் தொகுக்கப்பட்டு அதன் ஓரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தைக்கப்பட்டு நீண்ட நெடிய சேலைகளாய் ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்தன. அச்சேலைகளுக்கு இடைப்பட்ட வெளிகளில்
மக்கள் கூரைப்படகுகளில் பயணித்து நர்மதையை வழிபட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் வெறுமனே நோக்கிக் கொண்டிருந்தோம்.
“கங்கேச யமுனே சைவா கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு” என்று சொல்லி எங்கு நீராடினாலும் இந்த அனைத்து நதிகளிலும் நீராடுவதற்கு சமானம். அப்பா வழி தாத்தா ஒவ்வொரு நாள் குளியலிலும் இதனைச் சொல்வார். இந்த ஏழு நதிகளும் கிளைத்து பரந்து ஊடுருவி வேர் விட்ட மண் இந்த இந்திய நிலம்.
அவள் சொன்னாள். “பாறை மலை மேடு’னு தடுத்து நிறுத்த முடியாத இந்த நதியோட ஓட்டத்த சேலையால தடுத்து நிறுத்திட முடியுமா என்ன? அங்க கடல் வாவாங்குதே.” நான் நகைத்தேன். பின்னர் சொன்னேன். “முடிஞ்சுடலாம். ஏன்னா இது வெறுஞ்சேலை இல்ல. குறுக்க நிக்கிற மனுஷ மனசு”. அவளிடம் ஒரு பதில் நகைப்பு.
அவள் எழுந்துகொண்டு சேலையை சற்று உயர்த்திப்பிடித்துக்கொண்டு படிகளில் இறங்கினாள். கணுக்கால் அளவு நீரின் உயரம் கொண்ட பகுதியில் தன்னை நிறுத்திக்கொண்டாள். அந்த சேலை அவளுக்கு சரியாக பொருந்தியிருந்ததை அந்த விலகல் தூரத்திலிருந்து பார்த்தபோது தான் அறிய முடிந்தது. ஒவ்வொரு பொருளுக்கும் அதன் துல்லியமான அழகை தெரியப்படுத்துவதற்கு ஒரு தூரம் தேவைபடுகிறது போலும். அந்த தூரத்தினை அந்த பொருளே தேர்ந்தெடுக்கிறது போலும்.
அங்கிருந்து என்னைப் பார்த்தாள். பின்னர், மேற்கு பக்கமாய் திரும்பி நின்றாள். அதன் பின் நேரத்தினை அவள் உணரவே இல்லை. மேற்கிற்கு தன்னை முழுதும் ஒப்படைப்பவள் போல நெடு நாழிகைப் பொழுது நின்றிருந்தாள். இப்படி நின்று எதனை யாசிக்கிறாள்? அவள் சேலையில் விரிந்து படர்ந்த அடிமடிப்புகள் கணுக்கால் அளவு நீரில் நனைந்து அலைவு கண்டன. நதியின் அடிவானத்தில் சூரிய அஸ்தமனம் நிகழ்ந்துகொண்டிருந்தது. நர்மதை மேற்கு நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது அதன் அலைகளினால் செந்நிற முட்டை ஒன்றை கவ்வி விழுங்கியவாறு.
அன்றைய இரவு விமானப் பயணத்தில் என் மேல் ஒருக்களித்து தலை சாய்த்து, “யூ நோ இட் வாஸ் ஹெவன்லி” என்றாள்.
எதையோ யோசித்தவாறு இருந்தாள். பின்னர், “நான் எப்படி இந்த எடத்தை தேர்ந்தெடுத்தேன்னு எனக்கே புரியல! ஆச்சரியமா இருக்கு. த ப்ளேஸ் வேர் த ரிவர் இஸ் ஹெட்டிங் வெஸ்ட்’ங்கிறது அந்த ஆச்சரியத்துக்கு பதிலா அமஞ்சதுனாலயா?
இங்க கேள்விக்கு பதில் இருக்கலாம். ஆனா ஆச்சரியத்துக்கும் பதில் இருக்குமா? அது இன்னொரு ஆச்சரியம் தானா? ஒரு வகையில ரிக்கர்ஷன் ஆஃப் எக்ஸ்க்ளமேஷன்ஸ் தான் ஒரு எக்ஸ்க்ளமேஷனுக்கு பதிலா இருக்கமுடியுமா என்ன?”.
உறங்கிவிட்டாள்.
***
எங்கிருந்து எழுகிறது இந்த சத்தம்? அங்கு எங்கோ ஒரு வெளியில் வேறொரு உலகிலிருந்து கேட்கிறது. இரு தட்டையான உலோகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாய் உராயும் சத்தம். அவை எதையோ கத்திரிக்கின்றன? எதை? காலம் அறுபடுகிறதா அதனால்?
***
நாங்கள் தங்கியிருந்த அந்த வீடு பன்னடுக்குமாடி குடியிருப்பில் இருவதாவது மாடி. அவளுக்காகவே மேற்குப்பக்கமாய் பார்த்தவாறு இருந்த பால்கனி வைத்த அறையுள்ள வீடாய் பார்த்து குடியிருந்தோம். அன்று அவள் தன் அலுவல்களை முடித்துவிட்டு கிளம்பிவிட்டிருந்தாள். எப்போதுமே அவள் கிளம்பும்போது குறுஞ்செய்தி அனுப்புவாள். ஆனால் அன்று அப்படியில்லை.
அழைப்பு மணி ஒலித்தது. நான் “கெட் இன் டியர். சும்மா தான் சாத்தி இருக்கு.” என்று உள்ளறையில் இருந்தே குரல் கொடுத்தேன்.
“எப்படி நான் தான் வர்றேனு கரெக்டா தெரிஞ்சிருக்கு உனக்கு. ஹ்ம்ம்” என்றாள், கதவை திறந்து தனது காலணிகளை அவிழ்த்து அதன் அலமாரியில் வைத்தப்படியே.
“எனக்கு என்னம்மோ சந்தேகமா இருக்குப்பா? என்ன மாதிரி எத்தன டியர்ஸ் இந்த வீட்டுக்கு வந்துட்டு போறாங்க? ஹ்ம்ம்” என்று பரபரப்பாக என் அறைக்குள் நுழைந்து தன் ஒரு கையை இடுப்பில் வைத்து, ஒருபக்கமாய் தலை சாய்த்து புருவம் உயர்த்தினாள்.
நான் முறுவலித்தேன். “இததான் என்னால் நம்பமுடியல” என்றாள்.
“ஸச் அன் அன்வெல்கமிங் இன்ட்யூஷன். ஸாரி ஐ குட் நாட் ஹெல்ப் இட்” என்றேன். “என்னதான் இந்த மாதிரி ஷர்ட்- ஜீன்ஸ் அணிஞ்சிருந்தாலும் உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கற அந்த பழங்காலத்த எந்த திரைய போட்டும் மறைக்க முடியலல்ல உங்களால. ஏழு கடல திரட்டி அத கொண்டு மூடினாலும். ம்ம்..ஹூம்ம்…” என்றேன் கொஞ்சம் அசட்டையாக, அவளை சீண்டுவதற்காகவே.
“ஹே. ஹே. ஸ்டாப். ஒன்லி தீஸ் திங்ஸ் மேக் அ வுமன் அ ரியல் வுமன். யு நோ”
“ஃபார் காட் ஸேக். ப்ளீஸ்”
“பின்ன ஒழுங்கா எப்படி’னு சொல்லு” என்றாள். தன் தோள்பட்டையில் மாட்டியிருந்த தன் கைப்பையை எடுத்து அருகில் இருந்த மேஜையில் வைத்தாள்.
“அதலாம் அப்படித்தான்”
“அப்டீன்னா எப்டீ”
“ஹ்ம்ம். உன் வாசனைய வச்சு’னு நான் சொன்னா” என்றேன்.
“பார்டா. எல்லாம் கத”. பின்னர்,” என்ன அவ்வளோ மோப்பம் புடிச்சிருக்கியா?”
“ஆமாம். இருக்காதா என்ன. தினமும் கட்டி உருள்றோமே?”
“சரி இன்னிக்கு என்ன இவ்வளோ சீக்கிரமாவே வந்துட்ட?” என்று சாய்ந்து அமர்ந்திருந்த நான் என் உடலை உயர்த்திக்கொண்டு படுக்கையில் இருந்து எழ முற்பட்டேன்.
“ஹ்ம்ம்.. உன்ன சீக்கிரமாவே எச்சல் படுத்தலாம்னு தான்” என்று கண்ணடித்துக் கொண்டே எழப்போகும் என்னை தடுத்து என் மடியில் வந்து அமர்ந்து கொண்டு என் கழுத்தை தொட்டு விலக்கிக்கொண்டாள் . அவள் நிழல் என் மேல் கவியத் தொடங்கியது. கிரகண நாழிகைகள். அவள் என்னை நெருங்க நெருங்க பதற்றத்தில் என் தொண்டை நலுங்க ஆரம்பித்தது. அதை எண்ணி தான் அப்படி செய்திருப்பாள். என் கழுத்தை நெருக்கிய அவள் கரங்கள் வழக்கத்திற்கு மாறாக அகன்று என் பின்னங்கழுத்து வழியாக மேலேறி என் பின்மயிர் கற்றைகள் விரல் சிக்க பிடித்து கீழுக்கு இழுத்தன. என் முகம் அந்த இழுப்புக்கு அசைந்து கொடுத்து நான் அண்ணார்ந்தேன். அரைமுறுவலுடன் என்னை அவள் நோக்குற்றாள். அவள் விழிகள் என் உதட்டிற்கு மேல் நிலைக்குத்தி இருந்தன.
“என்ன அப்படி உத்துப் பாக்குற”.
அவள் கண்டுகொள்ளவே இல்லை.
“உன்ன தான். அப்படி என்ன பார்வை இன்னிக்கி புதுசா? என்னமோ? “
“நான் பாக்கல. படிக்கிறேன்.”
“எத?” என்றேன் புருவங்களை சுருக்கி.
“இதோ இந்த உன் உதட்டுக்கு மேல ஒடுற இந்த வரிகள. எதோ ஒரு கவிதை ஒளிஞ்சுருக்கு அதுல. அர்த்தமற்றது. புரியாத பாஷைல.
எதோ புரியாத லிபி. நானும் இந்த வரிகளப் போல உன் உதட்டுல ஓடக்கூடாதா’னு யோசிக்கறேன்.” என்று சொல்லிவிட்டு அவள் வலது கை கட்டைவிரலைக் கொண்டு என் உதட்டுப் பள்ளங்களை அழுத்தி ஒரு பக்கமாய் இழுத்தாள்.
“ரொம்ப அழுத்தாதம்மா. அந்த அர்த்தமற்ற வரிகள் உன் கட்டை விரலின் ரேகைப்பட்டு கலஞ்சு மேலும் அர்த்தமற்றவையா மாறிட போகுது” என்றேன்.
அப்படி ஒரு மென்னகைப்பு அவளிடம் எங்கிருந்தோ குடிபுகுந்தது. என் நெஞ்சில் நான்கு குத்து குத்தி “ஐ லவ் பீயிங் லைக் திஸ் வித் யூ” என்று அதிலேயே தலை சாய்த்து படுத்துக்கொண்டாள். பின்னர் எழுந்து தலையினால் என்னை முட்டி “இந்த மாதிரி உரையாடல்கள்’ல இருக்கற ப்ளெஷர் ஆஃப் த மொமண்ட்’க்காக தான் உன்னோட இருக்கணும்’னு தோனுது”என்றாள்.
“நாம் சேந்து இருக்கற வரைக்கும் இப்படியே பேசிட்டு இருக்கலாம். என்ன”
“ஹ்ம்ம்” என்றேன்.
“சரி நான் உனக்கு எப்படி?”
“இப்படி திடீர்னு கேட்டா எப்படி?”
“இல்ல இந்த கேள்விக்குலாம் உன்கிட்ட பதில் இல்லாமா போகாது.”
“ஹ்ம்ம்.. அப்ப சரி. ஒன்னு சொல்றேன்”.
“கைவிரல்’ல பிடிபட்டு இருக்கற பட்டாம்பூச்சிய திரும்பி பறக்க விடும்போது, அது அதோட நிறத்த அந்த விரல்’ல கொஞ்சம் விட்டுட்டுப்போகும். அந்த மாதிரி”.
“ச்ச. என்ன மாதிரியான மெட்டாஃபர்! கொன்னுட்ட”
“சரி லாஜிகலி கரெக்டா சொல்லு இப்போ. நான் அந்த பட்டாம்பூச்சியா? இல்ல அந்த நிறமா?” என்று என் மேலேயே திரும்பி படுத்துக்கொண்டாள்.
“இப்போதைக்கு பட்டாம்பூச்சி” என்றேன். அப்படின்னா “விடாதா இறுக்கிக்கோ” என்று என் கைகள் இரண்டையும் எடுத்து அவள் மேல் போட்டுக்கொண்டாள்.
அவள் அணைத்து கட்டிக்கொண்ட கரங்களில் இருந்து வலக்கரத்தை மட்டும் விடுவித்துக் கொண்டு
“ஹே பட்டாம்பூச்சி, உன்ன பறக்கவிடப் போறேன்” என்றவாறு விரல்களால் சிமிட்டுவதைப் போன்ற ஒரு செய்கை செய்தேன். எதோ எண்ணியவளாய் அவள் எனது ஆள்காட்டிவிரலை அப்படியே லாகவமாய் பற்றி தன் வலக் கன்னத்தில்
அழுத்தி மேலிருந்து கீழாக இழுத்துப்பதித்து பூசிக்கொண்டாள்.
அதனைத் தொடர்ந்த அவளது நிச்சலனத்தை நான் பரிசோதிக்க நினைத்ததில்லை. அவை அவளுக்கான ப்ரத்யேக நாழிகைகள். அதில் நான் பங்குபெறுவது பெருங்குற்றம். அந்த நாழிகைகளுக்குள் அவள் உள் நுழைய துணைபுரியும் சாளரம் மட்டும் தான் நான். மற்றபடி அங்கு அவள் தனியளாக மேற்கு நோக்கி பார்த்துக்கொண்டு நின்றிருக்க வேண்டும் என்பதை மட்டுமே என்னால் அறுதியிட்டுச்சொல்ல முடியும்.
அவள் எங்கள் உலகிற்கு மீண்டிருந்தாள். அவள் கண்களின் இமைகள் சரிந்து சொக்கியிருந்தன. என் மீதே புரண்டு படுத்துக்கொண்டாள்.
அவளை அப்படியே இறுக அணைத்துகொண்டேன். அவளது சுவாசத்தின் வெப்பம் என் தொண்டை கூச்சத்திற்கு அணுசரனையாக இருந்தது. அப்படி ஒரு இதம். கொஞ்சம் எக்கி தலைமாட்டில் உள்ள அறைவிளக்கை அணைத்தேன். சமயம் பார்த்து காத்திருக்கும் செந்நாய்களைப் போல அனைத்து திசைகளில் இருந்தும் ஆர்பரித்தது இருள். சிறிது நேரத்திற்கு முன்பு என் கை மீறிய பட்டாம்பூச்சி படபடத்து அவ்விருள் காட்டில் அலைந்து திரிந்தது. அதன் சிறகடிப்பின் சத்தம் எனக்கு மட்டும் ஒலிப்பது போல கேட்டது. அந்த ஓசையை கேட்டுக்கொண்டிருந்தது என்னையும் கண்ணயறச் செய்தது.
***
இதோ என் ஆழத்தில் மீண்டும் அது போன்ற சிறகடிப்புகள். ஆனால் முன்னது போல இல்லை இவை. அனைத்தும் தலைகீழ் சிறகடிப்புகள். என் மனதறையின் மூடிக்கு கீழ் ஆயிரம் தொங்கல்களை உணர முடிகிறது என்னால். அவை பெயர்த்துகொண்டு எழுப்போகின்றன. விண்ணேகப் போகின்றன. எண்ணங்களுக்கு சிறகுகள் உண்டா என்ன? அவையா இப்படி கீழிருந்து அழுத்தம் தருகின்றன. இதோ என் ஆழிருள் வெளியிலிருந்து ஆயிரம் ஆயிரம் வெளவால்கள்.
***
கூச்சம். எவ்வடிவில் எல்லாம் அது தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது? மழலையின் இடத்தில் அது தாயின் பின் ஒளிதல் போன்ற ஒரு செய்கை அல்லது ஒரு சிணுங்கலில் துவங்கி அதன் பால்பற்களில் குடியேறும் நகை. பெண்ணிடத்தில் அது அவளது நாணத்து ஊற்றில் நுரைக்கும் குமிழ்களின் வெடிப்பு. ஆணிடத்தில் அது அவனுள் இழையும் பெண்மை எனலாமா? இந்த படிநிலைகளில் பெண் மழலையாகலாம், ஆண் பெண்ணாகலாம். அவ்வளவு தானே. மேலும் கூச்சம் என்பது சில இடத்தில் ஒரு மெல்லிய திரை, சில இடத்தில் தடிமனான சுவர். ஒரு விலக்கம், தயக்கம். ஒரு ஒவ்வாமை. உகவாமை. ஒரு தடுப்பு. ஒரு வகை ஒளிதல்.
அந்த நிகழ்கணத்தில் நம் மூளையில் இருந்து எழும் அனைத்து சமிக்ஞைகளும் நியூரான்களால் உடம்பு முழுதும் பாய்ச்சப்பட்டு அந்த பகுதியைப்பற்றிய சமிக்ஞையாகவே அனைத்து புலன்களுக்கும் சொல்லுமோ என்னவோ? அதாவது, ஒரு தொடுகை தொடு உணர்வாகவே மூளையால் கண்களுக்கு செலுத்தப்படும் போது கண்கள் பார்ப்பதை நிறுத்தி மூடிவிடும். காதுகள் கேட்பதை நிறுத்திவிடும். கூச்சத்தின் போது நாம் மெய் மயங்குவது இதனால்தானோ? அப்படி ஒவ்வொன்றிற்கும் தவறான சமிக்ஞை செலுத்தப்படும் போது மொத்த புலன்களின் பார்வையும் அந்த கூச்சப் பகுதி மேல் குவியும். ஒரு உடற்குவிவு நிகழ்வு அது.
மொத்த உடலும் குறுகி பந்தென மாற முயற்சிக்கும். அத்தனை புலன்களும் நம்மை ஒடுக்கும்.
இயற்கையின் ஆதி வடிவம் அது. இயற்கையின் அத்துனை உயிர்களிலும் ஆழ் அகத்தில் நிலைப் பெற்று உள்ளது அவ்வடிவம். எதுவும் தன்னை ஒடுக்கிகொள்ளும் போது அவ்வடிவையே மனதில் கொண்டு செயல்படுகிறது. அது நமக்கு ஒரு காப்பு. ஓடு ஆமையையும் கருக்குடம் மகவையும் அப்படித்தான் பேணிக்கொண்டிருக்கின்றன.
அவமானத்தில் மனிதன் கூனிக் குறுகுவது அவ்வடிவை அடையத்தான். ஈர்க்கால் சீண்டப்பட்ட மரவட்டை தன்னைச் சுருட்டிக் காத்துக் கொள்ள அடைய விழையும் வடிவமும் அது தான். நம்மை குறுக்கும் எந்த செயல்பாடும் நமக்கு அந்த ஆதி வடிவை மீட்டு தரட்டும்! கூச்சம் என்பது அது போடும் கூப்பாடு தான்.
நன்கு ஊதப்பட்ட பந்தின் எதோ ஒரு பகுதியை தொட்டு அழுத்தினால் மற்றொரு பகுதி தீடீரெனப் வீங்கிப் புடைக்குமே.
குறுக்கும் சிறு அழுத்தம் கூட பெரிதாய் புடைக்கச் செய்துவிடுகிறது அல்லவா? அத்தகைய இடங்கள் தான் கூச்சத்தின் தோரண வாயில்கள். அத்தகைய தருணங்களும் அத்தகைய தொடுகைகளும் அரிதாக அமைபவை. அப்படியொரு அரிதான கணத்தில் தான் என் கூச்சக் கடவுள் எழுந்திருக்கிறார். இவளுடனான இந்த அன்யோன்ய கணங்களில என் கூச்சக் கடவுளை காட்டித் தரும் தேவி இவள்.
கடவுளர் எவரும் வெளியில் இருந்து உருவாவதில்லை. உள்ளிருந்து எழுகிறார்கள் போல. என் இந்த கூச்சம் நான் பிறந்த போதே என்னுள் பதிந்திருக்கலாம். இவ்வளவு நாள் நானறியாது இருந்திருக்கலாம். ஆனால் அதை உணரச்செய்வது எது? எப்போது? எவரால்? அந்த சூட்சுமத்தைத் தான் இப்போது எனக்கு அவள் புரியவைத்துக்கொண்டிருக்கிறாளோ என்னவோ? என் கூச்சத்தை இவள் தானே காட்டி கொடுக்கிறாள் எனக்கு. கடவுளையும் காட்டிக் கொடுக்க ஒருவர் தேவையோ? அதுவும் நம்முள் பதிந்த கடவுளரை?
மெய்ஞானம் என்பது காட்டிகொடுத்தல் தானா?
ஒற்றைப் பகுதியில் எழுந்த கூச்சம் உடம்பு முழுதும் எழுந்ததால் தானே மனிதன் என்பவன் பரிணமித்தான்.
ரோமங்கள் நிறைந்து குரங்காய் இருந்தவன் அந்த இழப்பை ஈடுகட்ட வேண்டியிருந்தது. தனது நிர்வாணத்தினால் எழுந்த கூச்சத்தினால் தானே ஆடையை வடிவமைத்தான். இலைகளாய் இருந்த அவனது ஆடைகள் காலப் பெருக்கில் விசைத்தறியில் நெய்யப்பட்டு நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டன. கூதிர் காற்று பட்டால் உடம்புக்கு குளிர்கிறது. கம்பிளியை இழுத்துப் போர்த்திக் கொள்கிறான். மேலும் ஒளியினால் கண்கள் கூசாதிருக்க குளிரூட்டப்பட்ட கண்ணாடிகள். ஆகவே மனிதன் தன் கூச்சத்தை மறைக்கிறான். தடுக்கிறான். தாழிட்டு தனக்குள் புதைத்து கொள்கிறான். அவன் உடம்பில் எங்கோ ஒளிந்துகொண்டு அவனில் அவ்வப்போது கசிகிறது அது.
இன்னும் ஏன் இந்த நிலத்திற்குமே கூச்சம் உண்டு. நிலம் தன் மேல் புல்களை பரவ விடுவது எதனால்?
இலை, செடி, கொடி, மரம், காடு எதனால்? மரத்தின் வேர்கள் உள்நின்று கிளைப்பது எதைத் தேடி ? நிலத்தின் கூச்சத்தை தானே. அந்த நிலத்தின் கூச்சத்தை வேரறுக்கத்தானே இந்த புயல் சூறாவளி எல்லாம்.
***
இதனாலேயே ஷர்ட் அணியும்போது காலர் பட்டன் போடுவதில்லை. டை அணியும்போது கூட இரண்டு இன்ச் கீழே தான் நாட் இருக்கும். அவள் வந்து அதனை சரிசெய்துவிடாத தினங்களில் அப்படியே தான் இருப்பேன். அந்த இரண்டு ஆண்டுகளில் என் நடை உடை பாவனைகள் பொருட்படுத்தத்தக்க அளவு மாறியிருந்ததை என் அலுவலக நண்பர்கள் கவனித்திருந்தார்கள். அந்த மாற்றத்தின் பெரும்பகுதிக்கு அவளே பொறுப்பு. அவள் தான் எனக்கு முகச்சவரம் முதல் சிகையலங்காரங்கள் வரை செய்துவிடுபவள். ஏன் என்று கேட்டால் என்னை நெருங்க இவையெல்லாம் அவளுக்கு சாக்குகள் என்றுவிடுவாள்.
இரண்டு வருடங்களாக இருந்த இந்த அன்யோன்ய கயிற்றை அறுத்தெறிந்தது காலம். சிறுமை. காலத்தின் சிறுமை என்று தான் சொல்ல வேண்டும். அது தான் எங்களை அந்நியராக்கிவிட்டது. அநிச்சயம் எனும் கடல் அதன் அலைகளால் கரையை அறைகிறது. கரையோர கால் தடங்களை வாரி சுருட்டிகொள்கிறது. கூடவே காலமெனும் காலடி கரை மணலை நழுவச் செய்து நம்மை நிலையழியவும் செய்துவிடுகிறது. நமது வாழ்வு அதன் கரையிலேயே இருத்தி வைக்கப்பட்ட ஒன்று. விளிம்பிலேயே பயணிப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. அத்தகையதொரு நிர்பந்தம்.
இந்த அநிச்சயத்தை அறிந்திராமலேயா இத்தனை நாள் நாங்கள் இணைந்திருந்தோம்? இல்லையே. முதலில் அதனை ஏற்றுக்கொண்டோம். பின்னர் அதில் ஆழ இறங்கினோம். வாழ்ந்தோம். ஆழத்தில் எதையோ உணர்ந்தோம். இயற்கையாகவே ஒரு உயிர் சமன்பாடு நிகழ்ந்தது. ஆனால் இது போன்ற பிரியாவிடைகளை ஏற்க மறுக்கிறோம்.
காலம் நழுவுகிறது. இல்லை இல்லை. என் கழுத்தில் இருந்த பிடியுடன் காலத்தின் பிடியையும் ஒரு சேர நழுவ விட்டவள் அவள் என்று தான் நான் சொல்வேன். காலத்தை சிறை வைக்க அவள் பார்வதி அல்ல என்ற யதார்த்தத்தை உணர வேண்டியிருக்கிறது இங்கே. காலம் நழுவினாலும் தழும்பாய் என் கழுத்து கண்டத்தில் அவள் இருந்து கொண்டு தான் இருக்கிறாள். இந்த கூச்சம் அதைத்தான் எனக்கு இப்போது உணர்த்துகிறதா என்ன?
அவளுடனான இறுதி நாளில் என்னை ஆரத்தழுவி, “ஃபைனலி த டே ஹாவ் அர்ரைவ்ட். உனக்கு தெரியும். நீ எனக்கு எவ்ளோ வேணும்னு. இட் வாஸ் வொர்கிங் அவுட் வெல் பிட்வின் அஸ். ஆனா ஐ குட் நாட் பர்ஸ்யூ திஸ் எனி மோர். ஐ யம் ஹெட்டிங் வெஸ்ட் வித் ஆல் திஸ் க்ரை. இட்’ஸ் பெய்னிங் மீ அண்ட் ஐ நோ இட்’ஸ் ஸேம் தேர். ப்ளீஸ். ப்ளீஸ். கடைசியா ஒரு தடவ என் கழுத்த நெரிச்சுடு” என்றாள். என் கண்களில் துளி கசிவில்லை. அவளை நோக்கி ஒரு வெறும்பார்வை அவ்வளவுதான். அதைக்கொண்டுதான் அவளை வழியனுப்பி வைத்தேன். அப்படி ஒரு நிராகரிப்பு என்னுள் சாத்தியப்பட்டு இருந்ததை இப்போது வரை உணரமுடிகிறது.
அவளது அழுகை நான் அன்று அணிந்திருந்த வெளிர் நிற ஷர்டைத் தாண்டி வந்து என் மார் நனைத்திருந்தது. அந்த சட்டையில் படிந்திருந்த கரிய நிற கறைகளை சலவைக்கு போடும்போது அம்மா காண்பித்தாள். அவளது கண்ணீரின் கரிப்போடு தங்கிப்போன கண் மைத்தீற்றல்கள் அவை. இரண்டு மூன்று சலவைகளுக்கு பின்னர் தான் இல்லாமல் போனது.
கண்ணீரால் எண்ணங்களை கரைத்து அவள் எளிதாக கடந்திருக்கக்கூடும். இலகுவாகியிருக்கக்கூடும். எனக்கு தான் அது வாய்க்கவில்லை. கண்ணழுகைகள் வரண்டதால் மன அழுகைகள் மண்டி ஆழத்தில் கசடாய் தேங்கிக்கிடக்கின்றனவா? பூமியின் ஆறுகளுக்கு மண்ணிற்கு அடியிலும் அதன் நிகர் ஆறுகள் உண்டு என்பார்களே. அதுபோல தானே இவ்விரு அழுகைகளும். ஒன்றில் நீர் இல்லை என்றால் மற்றொன்றிலும் இல்லாமல் ஆவதில்லையே!
அந்த நீர் தான் இத்தனை நாள் தேங்கிக்கிடந்து கசடாக எஞ்சியிருப்பது. அதைத் தான் எண்ணங்களாய் உருமாற்றி அகழ்ந்து கொண்டிருக்கிறேனா இப்போது? இல்லை அந்த அடிக்கசடை மன உலையில் காய்ச்சி ஆவியாக்கிக் கொண்டிருக்கிறேன்.
அது என்ன? என் தோள்பட்டையிலும் பின்கழுத்திலும் சரிவது? எண்ணக் கொத்துகளா? எண்ணக் கற்றைகளா? இத்தனை அடர்ந்து, நெளிந்து, அறுபட்டு சுருள் கொண்டு சிடுக்குகள் நிறைந்து. எங்கிருந்து உதிர்கின்றன அவை? என்ன அவை உதிர்கின்றனவா ? எண்ணங்கள் விண்ணுக்கானது என்பதைத்தானே சற்று முன் கண்டுகொண்டேன்.
அப்படியானால் உதிர்வது? மேலெழுகின்ற அந்த எண்ணங்களின் கரிய நிற சாயைகள். அவை மண்ணுக்கானது போல. அருவ எண்ணங்களுக்கு உருவ நிழல்களா? அபத்தமான தலைகீழாக்கம். எத்தனை அர்த்தமற்ற சிந்தனை தொடர்ச்சி? ஒவ்வொரு எண்ணமும் முன்னும் பின்னும் அதனின் கொக்கிகளுடன் வருகின்றன போலும். ஒரு எண்ணம் எண்ணப்பட்டப் பிறகு அது இனி எழவே கூடாது என்பது எத்தனை ஆசுவாசத்தினை அளிப்பதாய் இருக்கும்? மனம் எண்ணங்களை ஒழிந்து விட்டால்? ஒரு வெற்றுக் குடம் போல சலம்புமா என்ன? மனத்தினை ஒருவன் உணர்வது எண்ணங்களினால் தானே?
***
“டேய் உன் உசுரு போறங்காட்டிக்கும் அது ஆறிடும். புரிதா. அத பாத்துட்டே நிக்காத” என்றார் அந்த அண்ணன் அவர் உதவியாளனாகிய அந்த சிறுவனை நோக்கி, கடுமையான தொனியில்.
எனக்கு முழிப்பு தட்டியது. பின்னர் தான் உணர்ந்தேன் அங்கு நடந்ததை. நான் முழித்துக்கொண்டதைப் பார்த்து, “இப்போ தான் முடிஞ்சுது தம்பி. நல்லா கண்ணசந்துடீங்க போல. நீங்க கேட்ட மாதிரியே ஷார்ட் பண்ணிட்டேன். அதுக்குள்ள இங்க ஒரே களேபரம். தோ இவன்கிட்ட ப்ளேட எடுத்து குடுக்கச் சொன்னேன். எடுக்கும் போது கைய கிழிச்சுக்கிட்டான். எத்தன தடவ சொல்லிருப்பேன் பாத்து எடுக்கணும்னு. பாண்ட் எய்ட் போட்டு உட்ருக்கேன். இருந்தாலும் அந்த வெரல பாத்துகிட்டே நிக்கிறான். வேல வேற ஓடமாட்டேங்குது” என்று சொல்லி அவனை நோக்கி முறைத்தார். பின்னர் அவர் மேல் சட்டையில் படிந்திருந்த முடிப் பிசிறுகளைத் தட்டிக்கொண்டார்.
‘ரொம்ப அடர்த்தி ஜாஸ்தி தம்பி. கோர முடியில்லயா. அதான் ரொம்ப டைம் இழுத்துடுச்சு. இதுக்கு முன்னாடி எப்போ வெட்டிகிட்டீங்க?”
“ஏழு மாசம் முன்னாடிண்ணா”
“ஹ்ம்ம்…தாடிய எப்படி பண்ணனும்னீங்க?”
“ஒட்ட எடுத்தறலாம்னா. ஒன்னுல வச்சுருங்க ட்ரிம்மர்ல. மீசைக்கும் அதே தான்”
என்னை உட்கார வைத்து போர்த்தியிருந்த துணியை எடுத்து உதறிவிட்டு மீண்டும் போர்த்தினார். பின்னர், நாற்காலியின் பின்னிருந்த தலை தாங்கலை தூக்கி நிறுத்தி சாயச்சொன்னார். நான் கழுத்தை இறுக்குகிறதே என்று போர்த்தியிருந்த துணியை கீழே இழுத்து விட்டேன்.
“என்ன தம்பி இப்படி பண்றீங்க. நான் முடிவெட்றதா வேணாமா. நானும் அப்போலேந்து பாக்குறேன் கை தானா வந்து இழுத்து இழுத்து விட்டுக்குறீங்க. ரொம்ப இறுக்குதோ”
“இல்லன்னா, இறுக்கலாம் இல்ல. ஆனா அந்த எடத்துல கொஞ்சம் கூச்சம் ஜாஸ்தி” என்றேன்.
“என்ன தம்பி நீங்க. எப்படி வெட்றது உங்க தாடிய” என்று சொல்லி ஆரம்பித்தார்.
அத்தனை கணத்த தாடி அவருக்கு சவால் தான். தலைமுடியை கூட எளிதாக வெட்டியிருந்துப்பார்.
ஒவ்வொரு முறை ட்ரிம்மரைக் கொண்டு கழுத்தை உயர்த்த சொல்லும்போது புலன்களை உள்ளிழுத்துக் கொள்வேன். சேரின் கை பிடியை இறுக்க பிடித்துக்கொள்வேன். நல்ல வேளை போர்த்தியிருப்பதனால் வெளியே தெரியாது. பற்கள் கிட்டித்துக்கொள்ளும். ஆனால் அவரால் அதனை அறியமுடிந்தது.
அருகில் இருந்த இருக்கையில் முடிவெட்டிக்கொள்ள இரண்டு குழந்தைகள் வந்து காத்திருந்தன. ஒன்று அந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருக்க, மற்றொன்று அந்த நாற்காலியை சுழற்றிவிட்டுக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தன. நான் எழுந்த போது இரண்டும் முண்டியடித்துக்கொண்டு ஓடி வந்தன.
நான் உட்கார்ந்த நாற்காலியில் மரத்தால் ஆன கட்டையை இடையில் போட்டுக் கொண்டே இருவரிடமும் அந்த அண்ணன், “லூட்டியா அடிக்கிறீங்க. இருங்க உங்க ரெண்டு பேரு மூக்கையும் காதையும் வெட்டி உட்டுடறேன். யார்க்கு மூக்க வெட்டனும், யார்க்கு காத வெட்டனும்’னு நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி முடிவு பண்ணி சொல்லுங்க”.
“இவனோட காது” என்றது ஒரு குழந்தை. “இவளோட மூக்கு” என்று மற்றொன்று தொட்டுக் காண்பித்தது.
விடைபெறும்போது, “இரண்டு வருஷம் கொறச்சு குடுத்துருக்கீங்கண்ணா” என்றேன்.
“பின்ன அத இந்த கத்திக்கும் கத்திரிக்கோலுக்கும் கத்துகொடுத்து தானே கைல புடிக்கறோம். கத்திய புடிச்சா ஒரு பவர் வந்துருதுல எங்களுக்கு. எதனாலும் ஈஸியா அறுத்து விட்ற முடியும். அழகு’ல கொண்டு போய் முடியுற வன்முறை இங்க எங்க கையால நிகழ்ந்துறுது பாருங்க” என்றார் சிரித்துக்கொண்டே.
“இல்ல. இல்ல. இவனோட மூக்கு “ என்று மாற்றியது முதல் குழந்தை.
“அப்டீன்னா. இவளோட காது” என்றது இரண்டாமாவது.
வீட்டிற்கு வந்து குளியலறைக் கண்ணாடியில் என் கழுத்துப் பகுதியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். முன்பைப் போல கூசவில்லை. என் அப்பா வழி தாத்தா சொன்ன துதியை மனதில் நிறுத்திக்கொண்டு ஷவர் நாசிலை திறந்துவிட்டேன்.