2084: 1984+100

This entry is part 3 of 17 in the series 20xx கதைகள்

கலா கொண்டுவந்துகொடுத்த மடித்த தென்னை ஓலை. கையளவு நீளம். சம்யுக்தா அதைப் பிரித்தாள். ஒரு மடலில் சீரான ஊசித்துளைகள். ஓலையை மடியின் வெள்ளைத்துணி மேல் வைத்தாள்.  

நாளை வருக! நன்றி. உமா

அழைப்பின் ஒரு காரணம் அவள் பிறந்தநாளைக் கொண்டாட. ஐந்து ஆண்டுகளாக நடப்பதுதான். அவள் பேத்தி கலா பள்ளிக்குப் போனதில் இருந்து. சம்யுக்தா வயதில் புத்தனூரில் அதிகம் பேர் இல்லை. இருந்த ஒரு சிலருக்கும் நினைவு தப்பும் நோய். மூப்பினால் மட்டும் அல்ல, முப்பது ஆண்டுகளுக்குமுன் முழு உலகையும் ஆட்கொண்ட, வார்த்தைகளில் அடங்காத அல்லல்களின் அதிர்ச்சியினாலும். சம்யுக்தாவின் ஞாபகசக்தி அபாரம். எப்போதோ நடந்தவை எல்லாம் நேற்றைய நிகழ்வுகள் போல நினைவில் ஆழப்பதிந்து இருந்தன. அவை மறக்க முடியாதவை என்பதும் உண்மை. அவற்றைப் பேச எப்போதாவது அழைப்பு வரும். இம்முறை உமாவின் வகுப்பில். பள்ளிக்கூடத்தின் பிற ஆசிரியைகள்போல அவளும் பெருமாற்றத்துக்குப் பிறகு ஒருவிதமாக நிலைத்த பின்நவீனகாலத்தில் பிறந்தவள்.  

“நாளைக்கு நானும் உன்னுடன் வரப் போறேன். என் பிறந்தநாளுக்காக.”  

“ஓ! அப்படின்னா உன் வயசு என்ன? பாட்டி!”

“எழுபத்தைந்து.”  

“எழுபத்தைந்து முடிகிறதா? இல்லை தொடங்கப் போறதா?”  

அதே கேள்வியை சம்யுக்தாவும் கலாவின் வயதில் தன் தாத்தாவைக் கேட்டாள்.  

“அதுவா? நான் சின்னவனா இருந்தப்ப நடக்கற வயசை சொல்லுவோம். இப்ப எல்லாத்திலியும் அமெரிக்காவை காப்பி அடிக்கிறதனால, முடிஞ்ச வயசுதான் கணக்கு” என்றார் தாத்தா. “பையில என்ன, எனக்கு ப்ரசென்ட்டா?”  

“ஆமா. அப்பாவோட ஓடாத கடிகாரம். உங்களுக்கு ரிபேர் பண்ணறதுன்னா ரொம்ப பிடிக்கும்னு அம்மா குடுத்தா.” 

“கொண்டா அதை!”   

வட்டமான சுவர் கடிகாரம். வினாடி முள் ஒரே இடத்தில் குத்திட்டு டிக் டிக் டிக்…    

“பிரிச்சுப் பாக்கறேன்” என்று தாத்தா மாடிக்குப் போக எழுந்தார்.  

“நானும் வரட்டுமா? தாத்தா!”  

“வாயேன்!”  

மாடியின் கூடத்தைத் தாண்டி தாத்தாவின் ஒர்க்ஷாப். பெட்டி நிறைய திருகுளிகள், குறடுகள் பல அளவுகளில். சுவரில் தொங்கிய உளி. எல்லாம் தாத்தாவின் அப்பா பயன்படுத்தியவையாம்.  

தாத்தா கண்ணாடி மாட்டிக்கொண்டார். முகத்தில் சிரத்தை கூடியது. 

“ஆஹா!” 

“என்ன தாத்தா! ஆஹா?” 

“இந்த சக்கரத்துக்கு என்னை மாதிரி ஒரு பல் போயிடுத்து” என்று ஓட்டைப்பல் தெரிய சிரித்தார்.  

அடுத்த சிலநிமிடங்கள் தாத்தாவின் மூச்சு சத்தம்தான். சம்யுக்தா தாத்தாவின் கைகளையே உற்றுப்பார்த்தாள். சிறிது நடுங்கினாலும் கடிகாரத்தின் பாகங்களை அவற்றின் இடங்களில் திரும்பப் பொருத்தின.   

பாட்டரியை நுழைத்து அதன் முகத்தை திருப்பியதும் வினாடி முள் சமர்த்தாக பவனி வந்தது. 

“இப்ப என்ன நேரம்?”

சம்யுக்தா தன் சிறிய அலைபேசியில் பார்த்துச் சொன்னாள். “பத்து:நாற்பத்தியேழு.” 

நேரத்தைச் சரிப்படுத்தித் தாத்தா கடிகாரத்தை அதன் கூட்டில் வைத்து மூடினார்.    

“வெரி குட்! தாத்தா! என்ன சாமர்த்தியம்!”   

“நான் சின்ன வயசில அலார கடிகாரம், சாவி கொடுக்கும் கார், வால்வ் ரேடியோ எல்லாத்தையும் பார்ட் பார்ட்டா பிரிச்சுப்போட்டு நாசம் பண்ணினேன். அதுக்கு பரிகாரமா இப்போ எல்லாத்தையும் ரிபேர் பண்றேன்.”  

சாமான்களைப் பிரித்து வேடிக்கை பார்த்த சிறுவனாக தாத்தாவைக் கற்பனை செய்தாள். தலையில் நிறைய கறுப்பு மயிர். அரைக்கை சட்டை, ட்ராயர். வீட்டில் கடிகாரம், ஒரேயொரு பொம்மை கார், சுவர் அலமாரியில் ஒரு பெரிய ரேடியோ பெட்டி தவிர வேறு பொருட்கள் மனக்கண்ணில் படவில்லை. தாத்தாவின் கைகளுக்கு அகப்படாமல் தப்பியவை.  

“நீங்க சின்ன வயசா இருந்தப்ப டிவி கிடையாதுன்னு அம்மா சொன்னா.”  

“அது இருந்திருந்தா அதையும் ஒருகை பாத்திருப்பேன். டிவி வெளிநாட்டு அதிசயங்களில ஒண்ணுன்னு பேப்பர்ல படிச்சதுதான். ரேடியோ கூட ஒரு நாளைக்கு ஆறு ஏழு மணிதான். அதிலும் பாதி நேரம் நியுஸ்.”   

“கார்?”   

“ஊர்ல ஒண்ணுரெண்டு டாக்டர்கிட்ட இருக்கும். இப்ப மாதிரி வீட்டுக்கு வீடு தெருவை அடச்சிண்டு நிக்காது.”  

“திருச்சிக்குப் போக?”   

“பஸ். எங்க போறதுனாலும் ரயில்.”  

“டெல்லிக்குக் கூடவா?”   

“அதையும் தாண்டி. ஒரு தடவை நானும் சித்தப்பாவும் கரூர்லேர்ந்து அம்பாலா வரைக்கும் போனோம். மூணு இரவு மூணு பகல்.”    

“மூணு முழுநாளா? பொழுது எப்படிப் போச்சு?”  

“நான் அரபுக் கதைகள் வாசிச்சேன். சித்தப்பா ஜன்னல் பக்கத்தில உக்காந்து அங்கங்கே வேடிக்கை பார்த்துண்டு வந்தான். அந்தக் காலத்தில நீராவி எஞ்சின் தானே. அவன் தலையில ஒரே கரி. எண்ணெய் போட்டு எடுத்தோம்.”   

“ஐ-பாட் இல்ல ஐ-ஃபோன் இருந்திருந்தா…” 

“அதில முகத்தை மறைச்சிண்டு இருக்கலாம். அந்தக் காலத்தில முடியாது. பக்கத்தில இருக்கறவன் பேச்சு கொடுப்பான். என்ன படிக்கிறே? எங்கே போறே? உன் அப்பாவுக்கு எங்கே வேலை? ஆஃபீசர்னா என்ன சம்பளம்? ஆயிரம் ரூபா இருக்குமா? உனக்கு எத்தனை தம்பி தங்கைகள்? உங்க குடும்பத்தில நீங்க ரெண்டு பேர்தானா? ஆச்சரியமா இருக்கே, ம்ம்ம் – இப்படி. ஐ-ஃபோன் எல்லாம் இப்ப வந்ததுதானே. நீ பிறக்கறதுக்கு முன்னாடி செல் கூட கிடையாது.”     

“செல் கிடையாதா? அச்சச்சோ!”   

“உன் அம்மா காலேஜ்ல படிச்சப்ப இந்த தெருவுக்கே ஃபோன் கூட ரெட்டியார் வீட்டில தான்.”   

“அவசரம்னா…”  

“பகல்ல அவர் வீடு. ராத்ரில பழனி ஃபார்மஸி. ஒரு ரூபாய்க்கு லோகல் கால் மட்டும். திருச்சி வெளிநாடு மாதிரி.”   

“கம்ப்யூட்டர்?”   

“கால்குலேட்டரே உன் அம்மா உன்னை மாதிரி நாலாவது படிக்கிறப்பத்தான் வந்தது.”  

“அப்ப, கணக்கெல்லாம்…”   

“மனசில, இல்ல காகிதத்தில.”  

“பெருக்கல் கூட்டல்னா சரி. ஸ்கொயர் ரூட்… லாக்ரித்ம்…” 

“…” 

“பெருக்கல் கூட ஏழெட்டு நம்பர் இருந்தா…”   

தாத்தா அதற்கும் பதில் சொல்லவில்லை. ஒருவேளை அவர் வாழ்ந்த காலத்தை கற்காலம் என்று கேலி செய்தது தவறோ?  

“சம்யுக்தா! நான் உனக்கு ஒரு ப்ரசன்ட் தரப்போறேன்.”  

“என் பர்த்டே அடுத்த மாசம், தாத்தா!”   

“தெரியும். இது உன்னோட எழுபத்தைந்தாவது பிறந்தநாளைக்கு.”   

சம்யுக்தாவின் கறுப்புக் கண்கள் விரிந்தன. இன்னும் அறுபத்தியாறு வருஷம் கழித்து… ஒரு யுகத்தையும் தாண்டி… அதற்குள் அறிவியல் அதிசயங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ! செவ்வாய் கிரகத்துக்குத் தினம் ஒரு ராக்கெட். கண்மூடி திறப்பதற்குள் உலகின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு தாவல். காலக் கப்பலில் பயணம். எல்லா வேலைகளுக்கும் ரோபோக்கள். கதை சொல்ல, காதல் பேச கம்ப்யூட்டர். எல்லா நோய்களுக்கும் மருந்துகள். நீண்ட வாழ்நாள். எழுபத்தைந்து என்ன, நூற்றி ஐம்பதாவது பிறந்தநாள் சர்வசாதாரணம்.  

“அதுக்கு என்ன அவசரம்?”   

“அது வரப்போ நான் நிச்சயம் இருக்க மாட்டேன். இப்பவே கொடுத்திடறேன்.”   

அதைக்கேட்டு சம்யுக்தாவுக்கு வருத்தம், இருந்தாலும், “என்ன ப்ரசன்ட்? தாத்தா!” என்றாள்.   

“சர்ப்ரைஸ்! இன்னும் ஒருமணி கழிச்சு வா! அப்பறம்… எங்க காலத்தில இருந்து இப்ப காணாமல் போனது… ஆற்றுமணல். தினம் அதில் சடுகுடு, பந்து விளையாடுவோம். ஆடிப் பெருக்கின்போது பண்டிகையின் பேருக்கு ஏத்தமாதிரி ரெண்டு கரைகளையும் தொட்டுண்டு அமராவதியில் வெள்ளம் வரும். இப்ப அதெல்லாம் எங்கே?”  

அப்போது சம்யுக்தாவுக்கு மணலும் வெள்ளமும் பெரிய இழப்புகளாகத் தோன்றவில்லை.  

தாத்தா சரிசெய்த கடிகாரத்தைப் பையில் வைத்துத் தன்வீடு திரும்பினாள். மறுமுறை தாத்தாவைப் பார்க்கப் போனபோது அவர் கையில் பழுப்புக் காகிதத்தில் சுற்றிய ஒரு நீளமான பெட்டி. அதன்மேல் பாடப் புத்தகங்கள் மேல் ஒட்டும் லேபல்.  

சம்யுக்தா சசிகுமார்  

எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துகள்!  

தாத்தா  

அதைக் கையில் வாங்கிக்கொண்டபோது அடங்கி ஆறாகப் பெருகிய கண்ணீர்.  

~oOo~

மறுநாள். கலாவுடன் சம்யுக்தாவும் கிளம்பினாள். கலாவுக்கு நீண்ட பின்னல், சம்யுக்தாவுக்குப் பாதி வெள்ளையில் ஜாண் பின்னல். அவரவர் வயதுக்கு அதுஅது அழகு. புத்தாற்றின் ஓரமாக நடந்தார்கள். கோடை மழையால் புதுவெள்ளம். மணல் தெரியாதபடி ஆறு சுழித்துக்கொண்டு ஓடியது. ஓட்டத்தையும் எதிர்த்து துள்ளிக் குதித்த மீன்கள்.  

சம்யுக்தாவின் தோளில் பெரிய பிரம்புப் பை, அதில் காகிதத்தில் சுற்றிய பெட்டி.  

“பெட்டில என்ன? பாட்டி!” 

“என் தாத்தா எனக்குத் தந்த பிறந்தநாள் பரிசு.”  

“என்ன அது?”  

“பிரிச்சாத்தான் தெரியும்.”  

எழுபத்தி ஐந்து வயது வரை வாழ்ந்திருப்போமா என்ற சந்தேகம் பலமுறை சம்யுக்தாவுக்கு வந்தது உண்டு. ஆனாலும் பரிசைப் பிரித்துப் பார்க்க ஆசை எழுந்தது இல்லை.  

பரிசுப்பெட்டி முதல் பதினைந்து ஆண்டுகள் இரும்பு அலமாரியில் பத்திரமாக இருந்தது, தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், பட்டுத் துணிகளுடன். தாத்தாவுக்கு ஜீரணிக்கும் சக்தி குறைந்தாலும் முழங்காலும் மூளையும் பத்திரமாக இருந்தன. அதனால், தாத்தாவிடம் இருந்து அடிப்படை இயந்திரங்களின் இயக்கங்கள், அவை பழுதுபட்டால் அவற்றைச் சரி செய்யும் வழிகள் எல்லாவற்றையும் சம்யுக்தா கற்றுக்கொண்டாள். கல்லூரியிலும் இயந்திரக் கருவிகள் படித்தாள். முடிக்கும் சமயத்தில் தாத்தாவின் முடிவும் நெருங்கிவிட்டது.  

“தாத்தா! நீங்க கொடுத்த எத்தனையோ ப்ரசன்ட் எங்கெல்லாமோ போயிடுத்து. ஆனா, என்னோட எழுபத்தைந்தாவது பர்த்டே ப்ரசன்ட்டை மட்டும் பத்திரமா வச்சிருக்கேன்.”  

தாத்தா பிரயத்தனப்பட்டு அதை நினைவுக்கு கொண்டுவந்தார்.  

“அதுவா? அந்த சமயத்தில ஏதோ தோணித்து. அதுக்கு அர்த்தம் இருக்கும்னு நான் அப்ப நினைக்கல. ஆனா இப்ப… இன்னும் கொஞ்ச காலத்தில… எல்லாரும் பாவம்!”  

தாத்தாவின் திறந்த கண்கள் குளம் கட்டின. சம்யுக்தா அவர் முகத்தின் அருகில் குனிந்தாள். உடைந்து சிதைந்து இடமாறி விழுந்த வார்த்தைகளை ஒன்றுசேர்க்க முயற்சித்தாள்.  

கடைசி மரத்தை வெட்டிச் சாய்த்து, கடைசி மீனைப் பிடித்துத் தின்று, கடைசிக் கிணற்றையும் தூர்த்த பிறகுதான் மனிதனுக்கு புத்திவரும்… வங்கியில் எத்தனை கோடி பணம் இருந்தாலும் அதை எடுத்துத் தின்னமுடியாது.  

– க்ரீ இனத்தைச்சேர்ந்த அலனிஸ் ஓபாம்ஸாவின் 

தாத்தா சொன்னதுபோல மணலையும் தண்ணீரையும் பாழ்செய்த பாவத்தால் வந்த மகா மாற்றம். அந்தச் சாபக்கேடு அவர் எதிர்பார்த்ததைவிட மிக விரைவாக வந்தது. வந்து வேகமாக எல்லாவற்றையும் ஆக்கிரமித்தது. அதன்போது அப்பெட்டி யாரும் சீந்தாமல் கிடந்தது. அலமாரியில் இருந்த தங்கமும் வெள்ளியும் அரிசிக்கு பேரம் பேசின. அதால் முடியுமா? அதன் தோற்றத்தில் இருந்து அதில் மதிப்புள்ளது எதுவும் இராது என்கிற எண்ணத்தில் யாரும் அதை அபகரிக்க முயற்சிக்கவில்லை. அலமாரியும் போய், கூரையில் ஓட்டை விழுந்து கடைசியில் வீடு இடிந்தும் போனது. கூரை மண் வீட்டிற்கு இடம் மாறியபோது சம்யுக்தா பெட்டியை ஞாபகமாக எடுத்துவந்து பரண்மேல் வைத்தாள். மழையில் நனைந்து வெயிலில் சுருங்கி வெளிறிய மேலுறைக் காகிதம். பல இடங்களில் கிழிசல். துண்டுக் காகிதத்தில் எழுத்துக்கள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. 

~oOo~

ஒரு காலத்தில் திரைப்படக் கொட்டகையாக இருந்த கட்டடம் சுண்ணாம்பைப் பூசி நின்றது. எரியாத குழல் விளக்குகளும் சுழலாத கூரை விசிறிகளும் மறைந்துபோன காலத்தை நினைவுபடுத்தின. பின்னிய தென்னை ஓலைகளால் பிரித்த அறைகள். பள்ளிக்கூடத்தில் ஐந்து பிரிவுகள், ஒவ்வொன்றிலும் பத்துப் பன்னிரண்டு பேர். குழந்தைகளை புத்தனூரின் பொறுப்புள்ள குடிமக்களாகவும், சுதந்திரமாகச் சிந்திக்கும் தனி மனிதர்களாகவும் வளர்ப்பது கல்வியின் குறிக்கோள். பாடப் புத்தகங்கள் கிடையாது. எழுத்துப் பிரதிகள், இலக்கிய ஏடுகள், பழைய செய்தித்தாள்கள் மற்றும் கைக்கருவிகளை ஆசிரியர்கள் பயன்படுத்துவது உண்டு. பண்டிகை தவிர மற்ற எல்லா நாள்களும் மதியம் வரை. பிற்பகலில் அவரவர்களுக்குப் பிடித்தமான தொழிற்கல்வி.  

முன்திடலில் அனைவரும் கூடி காலை வணக்கம். தலைமை ஆசிரியையைத் தொடர்ந்து எல்லாரும் திருப்பிச்சொன்னார்கள்.   

பூமி நம் இல்லம்.  

சூரியன் நமக்குச் சக்தி வழங்கும் நட்சத்திரம். 

நாம் கணக்கற்ற ஆண்டுகளாக மாறிவரும் இயற்கையின் அங்கம்.  

எதற்கும் எல்லை உண்டு.  

புதுப்பிக்கப்படும் இயற்கை வளங்கள் மட்டுமே நமக்கு ஆதாரம்.  

நம் உடல் பிற உயிர்களிடம் வாங்கிய கடன்.  

முடிந்ததும் பிரிந்து சென்றனர். 

தலைமை ஆசிரியை சம்யுக்தாவை உயர் வகுப்புக்கு அழைத்துப் போனாள். பதினான்கில் இருந்து பதினாறு வயதுக்குள். குழந்தைப் பருவத்தையும், ஆளாகிவிட்ட முதிர்ச்சியையும் இணைக்கும் பாலத்தில் நடப்பவர்கள். ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் இடையில் ஒரு துண்டு, மேலே ஒரு சட்டை.  

தலைமை ஆசிரியை மாணவர்களுடன் தரையில் அமர்ந்தாள்.  

“மகா மாற்றத்துக்கு முந்தைய நிலை” என்று ஆசிரியை உமா அன்றைய பாடத்தை அறிவித்தாள். “நம் குடியிருப்பில் வயதில் மட்டுமல்ல அறிவிலும் மூத்த சம்யுக்தா அக்காலத்தில் வாழ்ந்தவள். தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள அழைத்திருக்கிறேன்.”  

உமா சம்யுக்தாவுக்கு நன்றிப் புன்னகை வீசியதும் அவள் உமாவின் அருகில் வந்து நின்றாள்.  

“சம்யுக்தா! அக்காலத்தைப் பற்றி ஒருசில வார்த்தைகள்…”   

“அன்றைய மக்கள் எல்லையற்ற கடவுளை வணங்கினார்கள். அந்தக் கடவுள் மனிதனுக்கு வழங்கிய வரம் – சாபம் என்பது என் எண்ணம் – அடர்சக்தி எரிபொருட்கள். அது கொடுத்த தைரியத்தில் இயற்கையை வென்றுவிட்டதாக மனிதர்கள் கர்வப்பட்டார்கள். முதலில் கறுப்புக் கட்டிகள், பிறகு ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்லும் திரவ வாயு வடிவங்கள். அவற்றை வைத்துக் கடலில் பாய்ந்தார்கள், தரையில் ஓடினார்கள், வானத்தில் பறந்தார்கள்.”   

“பறவை போலவா?”   

“இல்லை, இறக்கையை அசைக்காமல்… அது மட்டுமில்லை. செயற்கையாகப் பயிர் விளைவித்து நோய்களுக்கு அடிமையானார்கள், எல்லா உடல் அசௌகரியங்களுக்கும் மருந்து தயாரித்தார்கள். முக்கியமாக, இயற்கைச் சுழற்சியில் சேராத பிளாஸ்டிக்கைப் பல வடிவங்களில் உற்பத்தி செய்து குவித்தார்கள்.”  

“ஏரிக்கு அப்பால் ஓர் உயரமான குப்பைக் கோபுரம் இருக்கிறதே அது அக்காலத்திய நினைவுச் சின்னம்” என்பதை உமா மாணவர்களுக்கு நினைவுபடுத்தினாள்.  

சம்யுக்தா பையில் இருந்து ஒரு செவ்வகத் தட்டை எடுத்தாள். அதன் ஒரு பக்கம் கண்ணாடி. ஓரங்களில் விரிசல்கள்.   

“என் சிறு வயதில் எல்லாருடைய கையிலும் இதுபோல ஒன்று. உலகில் யாருடனும் பேசலாம். படம் எடுத்து அனுப்பலாம். பாட்டுக் கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். கேள்விக்கு பதில் தேடலாம். விளையாடலாம். கண்ணெதிரில் இருந்த பிரச்சினைகளை மறந்து மாய உலகில் சஞ்சரிக்கலாம்.”   

உமா அதை வாங்கி மாணவர்களுக்கு அருகில் எடுத்துச் சென்று காட்டிவிட்டு வந்தாள். இத்தனை அதிசயங்கள் இத்தனை சிறிய தட்டிலா? மாணவர்களால் நம்பமுடியவில்லை.   

“மாயப் பணம் பெருகியது, மக்கள் தொகை வளர்ந்தது, எங்கு பார்த்தாலும் குப்பை. ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்த பொருட்கள். சீர்ப்படுத்தமுடியாதபடி பழுதுபட்ட அல்லது நல்ல நிலையில் இருந்தாலும் காலவதியான இயந்திரங்கள்.   

“இயற்கை சுருங்கியது.    

“உடல்நிலை, மகிழ்ச்சி, சமுதாய உணர்வு குறைந்தது.   

“எதற்கும் இயந்திரங்கள். முதலில் மனிதன் உடலால் செய்யும் காரியங்களைச் செய்தன. திறனுடன், பணத்தில் சிக்கனமாகச் செய்வதாகச் சொல்லப்பட்டது. ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் அளவுகோல் ஆள்காட்டி விரலைத் தவிர மற்ற விரல்களை அசைக்காத மனிதர்களின் எண்ணிக்கை. விரைவில் மூளையின் வேலைகளைச் செய்யவும் இயந்திரங்கள். அவை மனிதனை வென்றுவிட்டதாகத் சிலரின் தீர்மானம். எதிர்காலம் அந்த ஆள்காட்டி விரலைக்கூட அசைக்காத பொற்காலம் என சிலரது கனவு. ஆனால் – நான் அப்படி நினைக்கவில்லை.”    

ஏன்? என்ற கேள்வி எல்லாருடைய நாவிலும்.  

“ஒருசில நூற்றாண்டுகளில் நிலக்கரியும் பெட்ரோலியமும் கொட்டி உருவாக்கிய இயந்திரங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் செதுக்கிய மனிதனுடன் போட்டியிட முடியுமா? மனிதனுக்கு உணவு வாழைப்பூ, கீரைத்தண்டு, மரவள்ளி வேர், பிற உயிரினங்களின் மாமிசம். இவற்றை உருவாக்கச் சூரியவொளியின் பரவலான சக்தி போதும். இயந்திரங்களின் பசிக்கு அடர்சக்தி வேண்டும், குறிப்பிட்ட அழுத்தத்துடன் மின்சாரம், சுத்தமான ஹைட்ரோகார்பன்கள். அவை வெளிப்படுத்திய வெப்பம், அப்பப்பா! எவ்வளவு நினைவுத்திறன் இருந்தாலும் பழைய இயந்திரங்களில் இருந்து புதியன உருவாவது இல்லை. இயந்திரங்களுக்கு ஒரு காரியம்தான் தெரியும். எல்லா உயிரினங்களையும் போல நாமும் புதிய சூழலுக்கு விரைவில் பழக்கிக் கொள்கிறோம். இயந்திரங்களின் முடிவுக்கு காரணம் அவற்றுக்குத் தேவையான பொருட்கள்.”   

சம்யுக்தா சுவரில் மாட்டியிருந்த பழைய பலகையைக் காட்டினாள். அதில் தனிமங்களின் அட்டவணை.   

“நம் உடலில் தொண்ணூற்றி ஒன்பது சதம் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன். இவை உயிர்க்கோளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. மற்றபடி இரும்பு, தாமிரம், கால்ஷியம், மக்னீஷியம், கந்தகம், பாஸ்ஃபரஸ். இந்தச் சாதாரணக் கனிமப் பொருட்களுக்கும் பஞ்சம் இல்லை. குடிநீரில் கரைந்திருக்கும் அளவு போதும். அவற்றை யாரும் பூமியை அகழ்ந்து எடுக்க வேண்டாம். இந்தச் செவ்வக அதிசயத்துக்கு ஒன்பது அரிய உலோகங்கள் தேவை” என்று வாயில் நுழையாத அவற்றின் பெயர்களைச் சுவரில் மாட்டிய பலகையைப் பார்த்துப் படித்தாள். “நியோடிமியம்… ஐரோப்பியம்… அவற்றைப் பெற மலைகளை உடைக்க வேண்டும், ஆழ்கடலில் தோண்ட வேண்டும். அப்போது வெளிப்பட்ட கதிரியக்கம்.”       

“சரி, சரிவு எங்கிருந்து வந்தது?”  

“எரிபொருள் தட்டுப்பாடு, மிகையான வெப்பநிலை, வல்லரசுகளின் காரணமற்ற போர்கள், அவசியம் இல்லாத நுகர்பொருட்கள், பூமி பாரத்தைத் தாண்டிய மக்கள்தொகை என அறிஞர்கள் கொடுத்த பல எச்சரிக்கைகள். யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசிச் சொட்டு எண்ணெயை எரித்த பிறகு, பூமி இரண்டு டிகிரி சூடானதும், ஒருவர் தலையில் இன்னொருவர் நிற்கும் நிலை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அரசியல்வாதிகளும் பாமர மக்களும் பிரச்சினைகளை தள்ளிப் போட்டார்கள். ஆனால் அப்படி நடப்பதற்கு வெகுகாலம் முன்பே இயந்திர நாகரிகம் சரிந்துவிட்டது.”     

“எப்படி?”  

சம்யுக்தா பிரம்புப் பையில் இருந்து பாட்டரி தேவைப்படாத ‘ஜெங்கா’ விளையாட்டை எடுத்து ஆசிரியையின் மேஜை மேல் வைத்தாள். நீள்செவ்வக வடிவில் விரலளவு கட்டைகளை மும்மூன்றாக மாற்றி மாற்றி ஒரே சீராக அடுக்கினாள். பதினெட்டு வரிசை உயரம். கீழேயிருந்து ஒரு கட்டையை ஜாக்கிரதையாக இழுத்துக் கோபுரத்தின் மேலே வைத்துப் புதிய வரிசையை ஆரம்பித்து வைத்தாள். அவளைப் பார்த்து உமாவும் அப்படிச் செய்தாள். பிறகு, மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து அதைச் செய்ய கோபுரம் ஒன்றரை மடங்கு உயர்ந்தது. கீழ்ப்பகுதியில் பல ஓட்டைகள், ஒரு தட்டில் நடுக்கட்டை மட்டும் கோபுரத்தைத் தாங்கியது. ராமியின் முறை. மேலிருந்து கீழ்வரை உன்னிப்புடன் பார்த்தாள். சிலவற்றைத் தொட்டாள், அசைத்துப்பார்த்தாள். தள்ளி எடுக்கும்படி எந்தக் கட்டையும் இல்லை. வேறு வழியில்லாமல் அடியில் இருந்த ஒன்றை இழுக்க… டபால்! மற்றவர்கள் சிரிக்க ராமியும் கலந்து கொண்டாள். பிறகு கட்டைகளைப் பொறுக்கிச் சம்யுக்தாவிடம் கொடுத்தாள்.    

“பூமியில் நமக்கு எதிர்ப்புறத்து நாட்டில் இந்த விளையாட்டைப் போல. சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் இருந்து கொள்ளையடித்த பணத்தை மேல் தட்டில் ஏற்றிப் பொருளாதாரத்தை வளர்த்தார்கள். நவம்பர் மாதத்தின் கடைசியில் கரி வெள்ளிக் கிழமை. அன்று மக்கள் எல்லையற்ற கடவுளின் பேரைச் சொல்லி தேவையில்லாத ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிப்பது வழக்கம். ஒரு நிலையில் எல்லாச் செல்வமும் மேல்தட்டினரின் கைக்குள். அந்தக் கரி வெள்ளிக் கிழமை. யாரும் எதையும் வாங்கவில்லை. கையில் காசு இல்லை, கடன் கொடுப்பார் யாரும் இல்லை. அவ்வளவுதான், பொருளாதாரம் படுத்தது. அந்த பொருளாதாரத்தை நம்பி நம் நாட்டில் தகவல் தொழில். பயனில்லாத செய்திகளையும் உருப்படாத விவரங்களையும் அதி பரிசுத்த சிலிகானால் ஊதிப் பெரிதுபடுத்தும் வித்தை. அதுவும் விழுந்தது. அதிலிருந்து ஒவ்வொன்றாக மற்ற அமைப்புகளும் கவிழ்ந்தன.”   

வகுப்பில் வருத்தம் கலந்த அமைதி. மாணவர்களை கலகலப்பாக்க உமா அறிவித்தாள். 

“இன்று சம்யுக்தாவின் எழுபத்தைந்தாவது பிறந்தநாள்.”  

“பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சம்யுக்தா!” என்ற கூவல்கள்.  

“நன்றி! நன்றி! இது இன்றைய தினத்துக்கு என் தாத்தா கொடுத்த பரிசு” என்று பெட்டியைக் காட்டினாள். “அவருடைய எழுபத்தைந்தாவது பிறந்தநாளின் போது எனக்குக் கொடுத்தார். எனக்குக்கூட இதில் என்ன இருக்கிறது என்று தெரியாது. சரிவுக்கு முந்தைய காலத்தை நம் கண் முன்னால் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பில் உங்கள் பார்வையில் பிரிக்கப் போகிறேன்.”   

பல சுற்றுகளுடன் மேலுறை காகிதம் பிரிந்து விழுந்தது. துணியில் வைத்துத் தாத்தா போட்ட தையல் பல இடங்களில் நைந்திருந்தது. நூலை இழுப்பது சிரமமாக இல்லை. மேஜை மேல் வைத்துத் துணியைப் பிரித்தாள். நீண்ட அலுமினியக் குழல். ஒரு பக்கம் அதன் மூடி. அதைத் திருகித் திறந்து உள்ளே பார்த்தாள். பிறகு ஜாக்கிரதையாக கவிழ்த்தாள்.  

எல்லாருடைய கண்களும் அதன் மேல்.  

நான்கு ஸ்கேல்களை அடுக்கி வைத்த வழவழப்பான கட்டை. பல வரிசைகளில் எண்கள். ஜப்பான், சன் என்கிற அடையாளங்களால் கடல் கடந்த அந்நாட்டில் சன் கம்பெனி செய்தது எனத் தெரிந்தது. அதைச் சம்யுக்தா திருப்பித் திருப்பிப் பார்த்தாள். மூங்கில் உடலும் தந்தம் போன்ற பிளாஸ்டிக் தோலும் காலத்தால் அதிகம் மாறாமல் கண்ணைப் பறித்தன. அப்படியொன்றை தாத்தா பயன்படுத்தியதாக ஞாபகம் இல்லை. அதை வைத்து என்ன செய்ய முடியும் என்றும் தெரியவில்லை.  

மாணவர்கள் ஒவ்வொருவர் கையிலும் அது சில நிமிடங்கள் தங்கியது, நிறைய கேள்விகள் எழுந்தன. நீளத்தை அளக்க முடியுமோ? ஏன் எண்கள் ஒரே சீராக இல்லை? பூஜ்யம் எங்கே? ஏ, பி, ஸி, டி எழுத்துக்களுக்கு என்ன அர்த்தம்? மேலே கோடுகளுடன் நகரும் பிளாஸ்டிக், எதற்காக?

கடைசியில் ராமியின் கையில் அது தங்கியது. நடுப்பட்டை வித்தியாசமாக இருந்ததால் அதை அவள் நகர்த்திப் பார்த்தாள்.  

உமா மேஜையின் அடியில் மறைத்து வைத்திருந்த தட்டை எடுத்தாள். மாணவர்கள் மகிழ்ச்சியை மறைக்க முயற்சிக்கவில்லை, ராமியைத் தவிர. அவள் ஸ்லைட் ரூலில் லயித்திருந்தாள்.  

பனை வெல்லப் பாகில் பதிந்த வேர்க் கடலைகள். நடுவில் ஒரு பெரிய சதுரம் சம்யுக்தாவுக்கு. அவள் ஒரு துண்டு கடித்ததும் மற்றவர்களுக்கும். ராமிக்கு இனிப்பைவிட எண்களுடன் சொந்தம் கொள்வது பிடித்திருந்தது.  

விடைபெறும் நேரம். பிரம்புப் பையை எடுத்துக்கொண்ட சம்யுக்தா ராமியை நோக்கினாள். அவள் எழுந்து வந்து…

“இதை வைத்துப் பெருக்கல் வகுத்தல் சுலபமாகப் போடலாம். ஒன்றுக்குள் ஒன்று நுழைகிற இரண்டு மூங்கில் குழல்களை வைத்து இதேபோல நாமும் செய்யலாம்.”   

தலைமை ஆசிரியை ஒப்புதலாகத் தலையசைத்தாள்.   

“நான் இன்னும் சிறிது நேரம் இதைப் பார்க்கலாமா?”   

ராமி வகுப்பிலேயே அதி புத்திசாலி என்ற பெயரெடுத்தவள். அவள் ஆர்வத்தை ஏன் தடுக்கவேண்டும்? 

சம்யுக்தாவும் தலைமை ஆசிரியையும் அகன்றார்கள்.  

உமா மகா மாற்றத்துக்கு முந்தைய காலத்து மூட நம்பிக்கைகளை ஒவ்வொன்றாக விவரிக்கத் தொடங்கினாள்.  

“எந்தக் கேள்விக்கும் நடைமுறையில் பதில் தேடாமல் ஒவ்வொருவரும் தங்கள் அபிப்பிராயம் தான் சரி என்று சாதித்தார்கள். உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் அபிப்பிராயம் எழுதுவதை தொழிலாகக் கொண்ட பல அரைகுறை புத்திசாலிகள். அவர்கள் வார்த்தையை அப்படியே நம்பிய பாமர முட்டாள்கள்… 

“மனிதனின் இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்ட ஒருசில அறிஞர்களுக்குப் பரிசு, பரிகாசம், வறுமை…

“அடுத்ததாக, வரலாற்றில் இல்லாத ஒருவர் மறு அவதாரம் எடுத்து வந்து தங்களைக் காப்பாற்றுவார் என்று மக்களில் பலர்…” 

ராமியின் கவனம் முழுவதும் ஸ்லைட் ரூலில்.   

~oOo~

தலைமை ஆசிரியை சம்யுக்தாவை தன் அலுவலகம் அழைத்துப் போனாள்.  

“உன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சம்யுக்தா! கசப்பான கொடூரமான விஷயங்களைத் தவிர்த்து விட்டாய்.”     

“இளைஞர்களுக்கு அதெல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது?”   

தலைமை ஆசிரியைக்கு முழுக் கதையும் தெரிந்துகொள்ள ஆசை. வரலாற்றில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவள். அத்துடன், தன் பெற்றோர்களை மகா மாற்றத்தின் சீற்றத்தில் இழந்து அனாதையாக வளர்க்கப்பட்டவள்.  

“பத்து ஆண்டுகள் மனிதகுலம் பட்ட கஷ்டங்கள், அப்பப்பா!” என்றாள் சம்யுக்தா.  

“அதைப் பற்றிச் சொல்!”  

“சரிவு நிதானமாகப் படிப்படியாக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நான் பல முறை யோசித்தது உண்டு. ஆனால், நம்மைக் கேட்டுக்கொண்டா எதுவும் நடக்கிறது?” 

மதியம் வரை பேச எத்தனை விஷயங்கள்.  

போர்க்களம் என்றால் இரண்டு தரப்புகளுக்கு நடுவே மட்டும் பகை. தன் பக்கத்தில் யாரும் முதுகில் குத்த மாட்டார்கள் என்கிற நிச்சயம். சமுதாயத்தின் தூண்கள் அனைத்தும் இடிந்து விழுந்த அராஜகத்திலோ, ஒவ்வொருவருக்கும் மற்ற எல்லாருமே எதிரிகள். கையின் பலமும் மூளையின் வேகமும் தான் பாதுகாப்பு. பலன் கிடைக்கும் என்கிற நிச்சயம் இல்லாதபோது உழைப்புக்கு அர்த்தம் ஏது? நிலத்தைப் பண்படுத்தி ஏன் விதைக்க வேண்டும், கட்டடங்கள் ஏன் கட்ட வேண்டும், ஏன் பயணம் போக வேண்டும், பொருட்களை தருவித்து ஏன் கடை நடத்த வேண்டும்? எதிர்காலம் இல்லாதபோது நிகழ்காலமும் இல்லை. கைத்தொழில்கள் இல்லை, கலைகள் இல்லை. கவிதைகள் இல்லை, சிந்தனைகள் இல்லை. எல்லாவற்றிலும் கொடுமை, எப்போது கொடூரமான சாவை சந்திப்போமோ என்கிற நிரந்தர பீதி. அந்நிலையில் மனித வாழ்க்கை அவலம், அற்பம், அநித்தியம், அபத்தம், அநாவசியம்.   

– தாமஸ் ஹாப்ஸ் (1588-1679)

“கடந்த ஆறாயிரம் ஆண்டுகளில் பஞ்சம், போர், கடல் கொந்தளிப்பு, கொள்ளை நோய் என எத்தனையோ உத்பாதங்கள். சில நம்மைத் தாண்டிய இயற்கையின் சீற்றங்கள், பல நாமே வரவழைத்துக் கொண்டவை. ஆனால், பாதிப்பு உலகின் ஒரு சிறு பகுதியில். தப்பிப் பிழைத்தவர்கள் வேறொரு பகுதிக்கு நகர்ந்தார்கள். இம்முறை ஐரோப்பாவின் காலனி ஆக்கிரமிப்பாலும், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தாலும் உலக மக்கள் அனைவரும் ஒரே தோணியில். அதில் ஓட்டை விழுந்ததும் தப்பிக்க வழியே இல்லை” என்று சரித்திரம் பேசினாள் தலைமை ஆசிரியை.  

“நீ சொல்வது ரொம்ப சரி! இன்னொரு பெரிய வித்தியாசம். என் தாத்தா அவர் தாத்தாவைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவரைத் தாங்க ஒரு நெசவாளி, ஒரு தயிர்க்காரி, நாலைந்து விவசாயிகள் மட்டுமே. பெருமாற்றத்துக்கு முன் நான் நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பை நம்பியிருந்தேன். அவர்களில் சிலர் மறைந்ததும் என் சொகுசு வாழ்க்கையும் சிதைந்து போய்விட்டது.”        

“ஐரோப்பா, வட அமெரிக்கக் கண்டங்களில் கடுங்குளிர். மேற்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் பொறுக்க முடியாத சூடு. தென் அமெரிக்காவும் நாமும் தப்பித்தோம். ஆனாலும் நம் பகுதியில் கோடிக்கணக்கான பேர் பலி…”  

“என்ன செய்வது? (ராபர்ட்) மால்தஸ் முதல் (டென்னிஸ்) மெடோஸ் வரை பல தீர்க்கதரிசிகள் சொன்ன அறிவுரைகளைக் காற்றில் பறக்கவிட்டோம். ஒரு பிடி சோற்றுக்கே பஞ்சம் என்கிற நிலை. அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள், பெரும்புள்ளிகள் என்று வெறுங்கையில் முழம் போட்ட அனைவருக்கும்…” என்று சம்யுக்தா நிறுத்தியதும்…

“ஊசியா?” என்று தயங்கித் தயங்கி கேட்டாள் மற்றவள்.   

“சயனைட் மாத்திரை, சுருக்குக் கயிறு. தோட்டாக்கள் எப்போதோ தீர்ந்து போய்விட்டன.” 

“குழந்தைகள்?” 

“தடுப்பு மருந்து இல்லாததால்…”   

“என்ன கொடுமை!”  

“ஆரம்ப காலத்தில் சில காலம் ரேடியோ தொடர்பு இருந்தது. பல நாடுகளில் மனிதர்கள் ஒருவரையொருவர் கொன்று… நம் பண்பாட்டில் ஊறிய பலர் அப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமா என்கிற விரக்தியில் சந்தோஷமாகவே வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள்.” 

“இத்தனையும் பார்த்து நீ வாழ்க்கையில் நம்பிக்கை இழக்காதது அதிசயம் தான்.”  

“மரணப் படுக்கையில் என் தாத்தா எனக்குத் தந்த எச்சரிக்கை என்னை கஷ்டங்களுக்கு தயார் செய்திருந்தது. அதைவிட முக்கிய காரணம். அடுத்த தலைமுறையில் ஒரு சிலராவது தங்கியிருக்க வேண்டும் என்கிற ஆசையில் பலர் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.” 

அனாதை ஆசிரமத்தின் காப்பாளர் குழந்தைகள் சாப்பிட்டு மிஞ்சியதில் உயிர் தரித்ததை தலைமை ஆசிரியை கண்கலங்க நினைவுகூர்ந்தாள்.  

“ஏதோ, மனித குலம் முழுவதும் நசிந்துவிடாமல் நாமாவது பிழைத்திருக்கிறோம்.”  

“சரியான வார்த்தை. சொல்லப்போனால், எனக்கு இந்நிலை தான் பிடித்திருக்கிறது. மகாமாற்றம் வராது இருந்தால் இந்த வயதில் வேளைக்கு நாலு மருந்து, முதுகில் கூனல், சாப்பிடவும் அதை வெளியேற்றவும் மற்றவர் தயவு. இப்போதோ, கடைசிநாள் வரை எனக்கும் பிறருக்கும் உபயோகமாக இருந்துவிட்டு நிம்மதியாக கண்மூடுவேன்.”  

“நீ எப்படித் தப்பித்தாய்?”   

“இயந்திரங்களைப் பழுது பார்க்கக் கற்றுக்கொண்டது என்னைக் காப்பாற்றியது. என் உயிரை மட்டுமல்ல. காலத்தின் கோலத்தில் சாக்குப் போட்டு என் மேல் கைவைக்க வந்த சில்லறை ஆட்களிடம் இருந்தும். எரிபொருள் தட்டுப்பாட்டினால் மனித சக்தியில் இயங்கிய இயந்திரங்களுக்கு மதிப்பு, முக்கியமாக சைக்கிள். நான் பள்ளியில் படித்தபோது தினம் சைக்கிளில் சவாரி. தாத்தா சொல்லித்தர நானே அதைப் பிரித்துப்போட்டு சேர்த்திருக்கிறேன்.”     

“பத்துப் பதினைந்து கிலோமீட்டர் போகவர, சாமான்களை எடுத்துச் செல்ல, சைக்கிள் சௌகரியம்.”    

“அதுமட்டுமல்ல. மின்சாரம் இல்லாததால் சைக்கிளை வேகமாக ஓட்டி பன்னிரண்டு வோல்ட்டை சுவாசித்த மின்கருவிகளை சிலகாலம் ஓட்டினோம். இப்போதும் மாவறைப்பது, துணி கசக்குவது போன்ற வேலைகளுக்கு சைக்கிள் உதவுகிறது.”     

“உன் கணவன்…”  

“எல்லாரையும் போல தகவல் தொழிலில் போய் விழாமல் தோட்டக்கலை படித்ததால், தொட்டிகளில் கூரைகளில் பட்டாணியும் அவரையும் விளைவித்துப் பிழைத்தான். அமளி ஓரளவு அடங்கியபின் நடந்த ஒப்புதல் திருமணம்.”    

“கலா…”  

“என் பெரிய மகனின் பெண். அவனும் அவன் தம்பியும் என் வழியில் பழைய கை-இயந்திரங்களுக்குப் புது உயிர் கொடுக்கிறார்கள்.” 

இருவரும் மௌனமாக உரையாடலை அசை போட்டார்கள்.  

கதவருகில் ராமி.  

“உள்ளே வா!”  

சம்யுக்தாவிடம் ஸ்லைட் ரூலை திருப்பித்தர அவளுக்கு மனமில்லை.  

“இதை வைத்துக்கொண்டு போடமுடியாத கணக்கே இல்லை. லாக்ரித்ம் என்ன, ட்ரிக்னாமெட்ரி என்ன…

“அதெல்லாம் கூடவா?”  

தாத்தா காலத்தில் பாட்டரி போடாமல், எப்படி பயன்படுத்துவது என்கிற விளக்கம் இல்லாமல், பல ஆண்டுகள் நீடித்து பயன்படக்கூடிய பொருளும் இருந்திருக்கிறது. அதை நினைவுபடுத்தத்தான் தாத்தா அப்பரிசை அவளுக்குக் கொடுத்தாரோ?    

“நான் எண்களை அலசிப் பார்த்தேன். ஒவ்வொரு ஆண்டும் இத்தனை கனமீட்டர் புத்தாற்று நீர் வீணாகக் கடலில் போய் விழுகிறது. கரையின் மணலைச் சுண்ணாம்புடன் கலந்து அணைகட்டி…” 

ராமியின் கற்பனை விரிந்துகொண்டே போனது.  

அதிர்ச்சியில் தலைமை ஆசிரியைக்கு வாயடைத்துவிட்டது. சம்யுக்தா தான் ராமியைத் தரைக்கு இறக்கி வந்தாள். 

“ராமி! இன்றைய வகுப்பில் உன் கவனம் பாடத்தில் இல்லவே இல்லை என்று தெரிகிறது. கடலில் கலக்கும் தண்ணீர் வீண் அல்ல. மேகம், மழை, ஆறு, சமுத்திரம் இயற்கையின் நீர்சுழற்சி. அதில் குறுக்கிட நமக்கு உரிமை இல்லை. மணலில் வீடுகட்டி விளையாடலாம். ஆனால் அதை அள்ளிக்கொண்டு வருவது மகா தவறு. நம் முன்னோர்கள் ஏற்கனவே அப்பாவங்களைச் செய்து அதற்கான தண்டனையையும் அனுபவித்து விட்டார்கள். நாம் மறுபடி அதையே செய்ய வேண்டாம்.” 

‘நீ அதிபுத்திசாலி என நினைத்தேனே, இப்படி யோசனை செய்யலாமா?’ என்று தலைமை ஆசிரியை வெளிப்படையாகக் கேட்காமலே ராமி தன் தவறை உணர்ந்தாள். அதை அவள் முகம் காட்டியது. அதை கவனித்த சம்யுக்தாவும் முழுத் தவறும் அவள் மேல் இல்லை என…

“ராமி! இதை நீயே மறுபடி கட்டு! பார்க்கலாம்.”    

தவறுக்குப் பிராயச்சித்தம் செய்யும் சந்தோஷத்தில் ராமி முகமலர்ந்தாள். ஸ்லைட் ரூலை எடுத்து ஆசையுடன் பார்த்தாள். நடுப்பகுதியை நகர்த்தி சரிசெய்தாள். பிறகு அதை அதன் பெட்டியில் வைத்து இறுக்க மூடினாள். தலைமை ஆசிரியை துண்டுத் துணியும், ஊசி நூலும் எடுத்துக் கொடுக்க பெட்டியைச் சுற்றித் தைத்தாள். வேலை முடிந்ததும் சம்யுக்தாவிடம் நீட்டினாள். அவள் அதன்மேல் ஈர்க்குச்சியை கடுக்காய் மசியில் தோய்த்து எழுதினாள்.   

கலா ராம் 

எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!   

பாட்டி சம்யுக்தா 

Series Navigation<< இருவேறு உலகங்கள்2015: சட்டமும் நியாயமும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.