ஒளியுடன் பேசுதல்
புதிதாகப் பிறந்திருக்கும்
குழந்தையின் வீடு தேடி
வெகுதூரம் பாய்ந்து வருகிறது
முற்றாத ஒளி.
ஓடுகளிடையே சிரித்துக் கொண்டிருக்கும்
கண்ணாடியின் மீதேறி
குழந்தை விழித்ததும்
தவழ்ந்து நுழைகிறது.
கடைவாயில் பால் உமிழும் குழந்தை
ஒளியின் திசையை சுழல வைத்து
இருளின் கதையைச் சொல்ல
அறையெங்கும் அமர்கிறார்கள்
அதன் தோழர்கள்.
கால்களை உதைத்து
மெல்லிய ஒலியில்
குழந்தை சொல்லும் கதை
கண்ணாடி வழியே
ஒளி ஒளி ஒளி ஒளி
ஒளி ஒளி ஒளி ஒளி
ஒளி ஆண்டுகள் கடந்து
பயணித்துக் கொண்டே இருக்கிறது
அந்த முனையிலிருந்து வரும் கைத்தட்டல்
வயிற்றில் பால்வெளியை நிரப்புகிறது.
பஞ்சுமிட்டாயின்
நுண்ணிய இளஞ்சிவப்பில்
ததும்பி அலையும் ஒளி
இருளை அணைத்துக் கொண்டு
தன் கதையைச்
சொல்லத் தொடங்குகையில்
எல்லாமும் தானாகவே மாறிவிடுவதால்
தோற்றுப் போய்
குழந்தையின் கால் விரல்களில் துடிக்கும்
நரம்புகளின் பச்சையை
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது.

வெயில்/
நிழல்/
மணல்/
இலை
வெயிலும் இலைகளும் பேசுவதை
அப்படியே பேசுவதில்லை
நிழலும் மணலும்.
வெயிலிடம் கோபித்துக் கொள்ளும் இலைகள்
முகம் தொங்கி திரும்பும் போதும்
நிழல் உற்சாகமாக கதை சொல்லும்
மணலுக்கு எல்லாமே வாங்குதல்தான்.
வெயில்தான்
கீழே
நிழலாக இருக்கிறது என்று
கரைகின்ற காகங்கள்
இலைகளில் மொழி பூக்கும் பருவத்தில்
மணலிடம் உண்மை சொல்லாமல்
பறந்து செல்கின்றன
இரவுகளில் உருகும் உறைந்த நிழல்
மணல் மீது பனியைத் தடவிய படியே
முதுகில் அழுது கொண்டிருக்கும்
வெயிலை ஒளித்துக் கொண்டு
இலைகளுடன் காலையில் பாடிய பாடல்களில்
கொஞ்சம் சுதியேற்றிப் பாடுகிறது
மணல்
நேரடியாக இலைகளுடன் பேசத் துடிக்கிறது
நிழலை வெயிலிடம் அனுப்பி
இலைகளை அழைத்து வரச் சொல்கிறது.
வெயிலும் நிழலும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அசையாமல் நிற்கிறார்கள்
காற்றின் தயவால்
சுழன்று விழுகின்ற
பழுப்பு நிற இலைகள்
மணலின் மடியைச் சேரும் போதெல்லாம்
நாவற்றதாகவே
இருக்கின்றன.
***