வெக்கையும் ஈரமும்

பூமணியின் நாவல் பற்றி

தோற்கடிக்கப்பட்ட அல்லது துரோகமிழைக்கப்பட்ட மனிதனாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் வாய்ப்பை வாழ்க்கை ஒரு முறையேனும் நமக்கு வழங்கிவிடுகிறது. அவ்வுணர்வை உள்ளெழச் செய்வதற்குப் பின்னால் இருக்கும் சமூகக் காரணிகளையும், எதிர்வினைத் தூண்டுதலுக்கான நியாயப்படுத்தலின் உருவாக்கத்தையும் அடிநாதமாகக் கொண்டுள்ளது நாவல். குடும்பத்தில் உள்ள அனைவரின் மனத்திலும் சதா நிரம்பிக் கொதிக்கும் வன்மமும் பழிவாங்கும் உணர்வும் உந்தித் தள்ள, தன் அண்ணனைக் கொன்ற வடக்கூரானின் கையை வெட்டும் எண்ணத்துடன் கிளம்பும் பதினைந்து வயதுச் சிதம்பரம், தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி அவனைக் கொலை செய்துவிட்டுத் தன் தந்தையுடன் தலைமறைவாக வாழும் அந்த எட்டு நாட்கள்!

Poomani

கரிசல் நிலத்திற்கே உரிய விதவிதமான செடிகள், பறவைகள், கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடிவாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு என விரியும் இந்நாவலின் நிலக் காட்சிகள் அபாரமானவை. அவர் விவரித்துக்கொண்டே வரும்போது கதை நிகழும் வெளி கண் முன் தோன்றி அங்கே அவரது கதாபாத்திரங்களும் தன்னியல்பில் இயங்கத் தொடங்கிவிடுகின்றன.

அப்பா ஊருக்குச் சென்று திரும்பும் நேரத்தில் காட்டில் கல்லடுப்பு கூட்டிச் சுள்ளி நெருப்பு மூட்டிக் கட்டுச் சோறு துணியில் அரிசி களைந்து, கிடைத்த ஒரே மண் பாத்திரத்தில் தண்ணீர் சேகரித்து, உலை போட்டு, காய்ந்த சுள்ளி வைத்துக் கிண்டி, அத்துணியைக் கொண்டே சட்டியை வளைத்துச் சோறு வடித்து, புளி கரைத்து வத்தலைச் சுட்டு சிரட்டையில் ரசம் வைக்கும் அந்த நேரம் முழுதும் கைக்குண்டுகளைத் தீச்சூடு படாமல் செடி நிழலில் பத்திரப்படுத்தி வைப்பவன். குத்திவிட்ட அரிவாளின் கூர் மழுங்கியதைச் சிறிது கவலையோடு பார்க்கும் அவன், கொலை தலைமறைவு என்பதெல்லாம் மறந்து நீச்சலடிக்கும் ஆசையுடன் குளிர் நீரில் குதித்துக் குளிக்கத் தொடங்குபவன். அம்மா, அத்தை மற்றும் அவ்வப்போது தான் கடையில் வாங்கிக் கொடுக்கும் ஏதேனும் ஒரு பொருளுக்கு ஆசைப்படும் தங்கை ஆகியோரின் நினைவுகளை அசை போட்டபடி தனித்திருப்பவன். பொன்வண்டுகள் பிடித்தல், பூவரச இலையைக்கொண்டு ஊதல் செய்தல், கிளித்தட்டு விளையாடுதல் என்று குழந்தைத்தனம் மாறாதவன், மடியில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு அரிவாளுடன் காடுகளுக்குள் அலைந்து திரியும் அச்சிறுவனைத்தான் கவனப்படுத்தியிருக்கிறார் பூமணி.

ஊருக்குள் இருந்த வரை மனத்தில் நிறைந்திருக்கும் கசப்பு, ஆங்காரம், ஏமாற்றம், பழி,வெற்றி, தோல்வி போன்ற சமூகக் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டவை அனைத்தும் கரிசல் காட்டுக்குள் நுழைந்ததும் அழிந்துபோய், உயிர் வாழ்தலுக்கான அடிப்படைப் பிரச்சனைகளான பசியும், எதிரிகளிடமிருந்து உயிர் தப்புதலும் மட்டுமே அன்றாடங்களை நிரப்பி ஆதிமனிதனாக்கிவிடும் நிலையை அப்பட்டமாகச் சொல்லும் கதை. அரசியல், அறம், நிலவுடைமை, வர்க்கபேதம் போன்ற கனமான வார்த்தைகள் கொடுக்க முடியாத அழுத்தங்களை, அர்த்தங்களை இலகுவாகத் தந்துவிடும் எளிய உரையாடல்கள், நிலக்காட்சிகளின் நுட்பமான விவரிப்புகள், நாவலில் எழுத்தாளரின் இருப்பைக் கொஞ்சமும் காட்டாமல் கதாபாத்திரங்களைத் தன்னியல்பில் உலவவிட்டிருக்கும் சுதந்திரம் என வெக்கையில் கவர்ந்தவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

Vekkai

பழி வாங்குதல், கொலை ஆகியவற்றைப் பின்னணியாக வைத்து மனித உறவுகள், அதன் உணர்வு வெளிகளின் வழி அன்பை மட்டுமே காட்டியிருக்கும் கதை. அறக் கவலைகளும் அரசியல் கோணங்களும் குறுக்கிடாத இயல்புவாத அழகியல் கதை. அவற்றின் குறுக்கீடுகள் இல்லாத காரணத்தால்தான் சார்புத்தன்மையற்ற கலைப்படைப்பாகி இருக்கிறது. இயல்புவாத அழகியலுக்குச் சமூகமோ, அரசியலோ, அறமோ பற்றிய கவலை இல்லை என்பது அல்ல. உள்ளது உள்ளபடியான நடப்பைக் காட்டுதல் என்பது கதை சொல்லப்படும் காலகட்டத்தில் இதுபோன்ற சமூக நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்பதை, அறியாத பலருக்கும் விண்டு எடுத்துத் தனித்துக் காட்டுவது. சொல்ல வேண்டியதைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, சொல்லப்படும் முறையை முடிவு செய்வது வரை சமூகப் பிரக்ஞையுடனும் நேர்மையுடனும் செயல்படும்போது அது கலைத்தன்மை உடையதாகிவிடுகிறது. அப்படிப் பார்க்கையில் இது ஒரு வகை ஆவணப்படுத்துதல். சார்புகளுக்கப்பால் வாழ்வின் இயல்புகளை, உண்மைகளை, உணர்வுகளைக் கண்டடைந்திருக்கிறது வெக்கை.

குறிப்பு:

வெக்கை– நாவல் /படைப்பாளர்- பூமணி/ காலச்சுவடு பதிப்பகம்/ இரண்டாம் பதிப்பு-2011

One Reply to “வெக்கையும் ஈரமும்”

  1. சிறப்பான விமர்சனம்.சுருக்கமாகவும் கூர்மையாகவும் உள்ளது.
    அசுரன் திரைப்படக் கதை பூமணியின் ‘வெக்கை’அடிப்படையாகக் கொண்டது.தமிழில் புதினங்கள் திரைப்படமாக் எடுக்கப்படும்போது வெற்றி பெறுவதில்லை.ஆனால் இது வெற்றி பெற்றிருக்கிறது

Leave a Reply to r.ramanan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.