விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 1 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

எப்போதும் போல் மரணம் குறுக்கிட்டது, நான் வாசிக்க வைத்திருந்த திட்டத்தில் மற்றுமோர் இழப்பு முட்டுக்கட்டை போட்டது. மகத்தான விமரிசகர் ஹெரால்ட் ப்ளூம் சென்ற வாரம் மறைந்தார், மூத்தோர் கடன் தீர்க்கும் நிர்ப்பந்தம் என் நூலகத்துக்கு  என்னைக் கொண்டு சென்றது, மனமொன்ற முடியாத தேடலில் புத்தகங்களைக் கலைத்துப் போட்டேன். நான் எதை எடுத்தால் என்ன, அது “சோகத் துள்ளல்” விரவியதாய் இருக்கப் போகிறது. காவியங்கள் குறித்து ப்ளூம் எழுதியவை சில படித்தேன், ஹோமர் குறித்து அவர் எழுதியிருந்த அத்தியாயமும் அதில் அடக்கம். ஆச்சரியம் ஒன்றுமில்லை, வழக்கமான ப்ளூமிய மடப்பள்ளி சமாசாரம்தான். 

சென்ற நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், தாமதமாகத்தான் (‘belatedly’- அவர் அடிக்கடி பயன்படுத்திய ஆங்கில வார்த்தை) ப்ளூமைக் கண்டடைந்திருந்தேன். அவர் ஷேக்ஸ்பியர் பற்றி எழுதியிருந்த தலையணையளவு புத்தகம், மேலைப் பனுவல் தொகையைச் சுருக்கியளித்த சாத்திர லட்சணம் பொருந்திய நூலொன்று, மற்றும், ஏன் வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்று அவர் எழுதியிருந்த சிறிய, இனிய, கையேடு. மேற்கூறிய புத்தகங்களின் கடைசி நூலில் ப்ளூம் வாசகரைப்  புரட்டிப் போடும் வகையில் பரணி பாடியிருந்த ஒரே காரணத்துக்காக டென்னிசனின் மகத்தான நெடுங்கவிதை, ‘யூலிசஸ்’ முழுவதையும் மனனம் செய்ய நான் பிரயாசைப்பட்டதை நினைத்துக் கொள்கிறேன். (கூடவே, “அவன் தன் வேலையைச் செய்து கொள்கிறான், யான் எனதை,” என்று யூலிசஸ் தன் மகன் டெலிமாகஸ்சுக்கு அளிக்கும் குத்தலான வஞ்சப் புகழ்ச்சியின் சிலிர்ப்பையும்). 

ப்ளூமின் மேலைப்பனுவல் தொகை என் நூலக சேகரத்தை முழுமையாய் மாற்றியமைத்தது. என் இளம்பிராயத்து அகம் இன்று திரும்ப நேர்ந்தால், லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய அடுக்குகளை நினைவேக்கத்துடன் சுவைத்தாலும், அமெரிக்க, பிரிட்டிஷ் புனைவுகளும் கவிதைகளும் ஏராளமாய் குவிந்திருப்பதைக் கண்டு  அதிர்ச்சியடையக்கூடும். அந்த ஒரு காரணத்துக்காகவே நான் என்றென்றும் ப்ளூமுக்கு கடன்பட்டவனாகிறேன். அது மட்டுமல்ல, மாபெரும் இலக்கிய நூல் வாசிப்பின் ‘கடுஞ்சுவை’, நம் அகத்தின் மேன்மையான இடங்களை ‘மிகைபடச் செவித்தல்’ காரணமாகவே தோன்றுகிறது என்பதை அவர் எனக்கு உணர்த்தியதற்காகவும் கடன்பட்டிருக்கிறேன். ஆம், நாம் எதை ஊன்றி வாசிக்கக் கற்றுக் கொள்கிறோமோ, அவ்வாறே ஆகிறோம்.

இதெல்லாம் போக, ஆம், நான் அவரது தனிப்பட்ட குறைகளையும் அறிந்திருக்கிறேன். அவர் மீது சுமத்தப்படும் பாலுறவு மீறல்கள் உண்மையாக இருக்கக்கூடிய சாத்தியம் உண்டு, ஆனால் மேற்கத்திய கலாசார மேலாதிக்கம் மற்றும் மேட்டிமைத்தனம் சார்ந்து அவருக்கு உயர்குடி மனநிலை இருந்தது என்று அவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் அற்பமானவை. என் நேசத்துக்குரிய விமரிசகனின் மறைவை எண்ணியே வருந்துகிறேன், ஒரு மானுட இறப்புக்கல்ல.

அவர் எழுதிய எதிலும், அவரை நாம் தீவிரமாக நிராகரிக்கும் எழுத்திலும்கூட, ஏதோவொன்று நினைவை நீங்காத வகையில் இருப்பது தவிர்க்க முடியாதது. நல்ல வேளையாக, இந்த மயான வாசிப்பில், எல்லாம் நன்மையாக, அனைத்தும் இணக்கமாக, அமைந்தன: “வெற்றிகரமாய் படைக்கப்பட்ட காவியத்தின் அசல் அடையாளம் நிலைத்த தரிசன ஏக்கமாய் இருக்கக்கூடும்.”

அவரது அசல் விமரிசனத்தின் நிலைத்த தரிசனத்துக்காக நான் ஏக்கம் கொள்ளப் போவது உறுதி. காவிய ஆகிருதி கொண்ட ஹரோல்ட் ப்ளூம், மீளாத் துயிலில் ஆழ்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தியடைவதாக.

பாரிஸ் ரிவ்யூ இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியொன்றின் தமிழாக்கத்தை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அளிக்கிறேன்.

~oOo~

ஹெரால்ட் ப்ளூம்: விமர்சனக் கலை.

சமீப காலமாக ஹெரால்ட் ப்ளூம்,  புலமை வாய்ந்த சஞ்சிகைகளிலும், அறிஞர் மாநாடுகளிலும் மட்டுமல்லாது செய்தித்தாள்களிலும், தலையங்கங்களிலும், வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் பரந்த தாக்குதல்களுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார். விற்பனைச் சாதனை படைத்திருக்கும் The Book of J  என்ற தன் புத்தகத்தில் ஹீப்ரூ ஆகமத்தின் முதல் ஆசிரியர் என்று குத்துமதிப்பாக யூகிக்கப்படும் ‘ஜெ-ஆசிரியர்’ உண்மையிலேயே இருந்தார் என்றும் (கடந்த நூறு ஆண்டுகளாகப் பைபிள் வரலாற்றாசிரியர்கள் இதை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற போதிலும்) ,  குறிப்பாக அவர் சாலமனிய உயர்ந்தோர் குடியைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்றும், ஜூடாவை ரீயபோவம் ஆட்சி செய்த போது, அரசு வரலாற்றாசிரியருக்குப் போட்டியாக அதை எழுதினார் என்றும் அவர் வாதிட்டதே சரமாரி தாக்குதலுக்கான காரணம். ஆகம அறிஞர்கள், ராபைக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கமான கல்வித்தளங்கள் என்று சக்திவாய்ந்த தரப்புகளிலிருந்து இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. தனது கருத்துக்களால் எப்போதைக் காட்டிலும்  தற்போது தீவிரமான தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் அவர் காப்புறுதியுடன் இருக்கிறார் என்றே தோன்றுகிறது. நண்பர்களையும் எதிரிகளையும் வசப்படுத்தும் சோகம் கலந்த பேருவகையுடன் எதிர்கொள்ளும், தன்னை பற்றித் தானே கூறிக் கொள்வது போல், “ஓய்ந்து போன, பாவமான, மனிதாபிமானமிக்க கிழ ஜந்து” வாகிவிட்டார்.

அரசியல், காதல், விளையாட்டு என்று எதைப் பற்றியும் பேசத் தயார் என்றாலும் சில தலைப்புகளைப் பல முறை பேசி அலுத்து விட்டதால், அவற்றைப் பற்றி அதிகமாகப் பேச விரும்பவில்லை என்று கூறினார்.  அவருடன் வேறுபட முற்படுகிறோம், ஆனால் நமக்கு எதிர்வினையாகக்  கிடைப்பதோ “இல்லை. இல்லை, என் செல்லமே…”.  ஷேக்ஸ்பியர் வகுப்பொன்றில் நவீன உடையணிந்திருக்கும் முதுகலை மாணவொருவர் ஒத்தெல்லோ குறித்து இயாகொவிற்கு பாலியல் பொறாமை இருந்திருக்கலாம் என்று முன்மொழிகையில் ப்ளூம் மென்மயிர் அடர்ந்த புருவங்களைச் சாய்த்து,  ஸ்டாக்கிங் அணியப் பெற்றிருக்கும் கால்களை ஒன்றின் மீது மற்றொன்றைக் குறுக்கிட்டு, கைகளைச் சட்டைக்குள் இடுக்கியபடி, “செல்லமே,  இதெல்லாம் இம்மி கூட சரி வராது, என் எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்!” அவரது முன்னாள் மாணவர்கள் தங்கள் கட்டுரைகளையும் வகுப்புகளையும் ப்ளூமிடம் சண்டையிட்டதிலிருந்து  தொடங்குவது தேய்வழக்காகிவிட்டதில் ஆச்சரியமேதும் இல்லை. ப்ளூமின் பார்வையில் இது சரியானதும் கூட. எமெர்சனின் பொன்மொழியொன்றை அவர் மேற்கோள் காட்ட விரும்புவார்- “மற்றொருவரிடமிருந்து எனக்குக் கிடைப்பதென்பது ஒருபோதும் படிப்பினையல்ல. தூண்டுதல் மட்டுமே.”

நியூ ஹேவனிலும்,நியூ யார்க்கிலும் மனைவி ஜீனுடன் பகிர்ந்து கொள்ளும் இல்லங்களில் இப்பேட்டி  நிகழ்த்தப்பட்டது. ஒன்று நான்கு தசாப்தங்களாகச் சேகரித்திருந்த புத்தகங்களாலும் அறைகலன்களாலும் நிரப்பப்பட்டிருந்தது. மற்றது அனேகமாக வெறுமையாகவே இருந்தது. இரண்டிலுமே அவர் தற்போது எழுதிக்கொண்டிருந்த புத்தகக் குவியல்களும், மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இறைந்து கிடந்தன. பேச்சு கனமாக இல்லாத நேரங்களில் இசை பின்னணியில்  ஓடிக்கொண்டிருப்பதை அவர் விரும்பினார் – சில வேளைகளில் பரோக்கிசை, மற்ற வேளைகளில் ஜாஸ். (அவரது நியூ யார்க் அடுக்ககம் கிரெனிச் வில்லேஜில் இருந்ததால் வெளியில் லைவாக இசைக்கப்படும் ஜாஸ் இசையை வீட்டிலிருந்தே அவரால் கேட்க முடிந்தது.) தொலைபேசி ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவரது நண்பர்கள், முன்னாள் மாணவர்கள், சக ஊழியர்கள்  வந்து போய்க் கொண்டிருந்தார்கள். உரையாடலை அவ்வப்போது கூவிளிகள் இடைமறித்தன. உதாரணமாக அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் Zoombah என்ற புணரார்வத்திற்கான ஸ்வாஹிலி பதமும் அது உடனழைத்து வரும் பெயரடையான zoombinatious-சும் வினைச்சொல்லான to zoobinate-டும். ப்ளூமின் பேச்சு,  அச்சடித்த பக்கத்திலிருந்து படிப்பது போல்,   சிக்கலான இலக்கணத்துடன், சில சமயங்களில் சிடுக்குகளுடனும் தொனித்தது. ஆனால் அனைத்துமே – கனமானதோ மகிழ்வூட்டக்கூடியதோ-, பெரும் உயிரோட்டத்துடனேயே மொழியப்படுகிறது. அறுதி முடிவுடனும் கூட. ஆங்கிலத்தை வாசித்தே கற்றுக் கொண்டதால், அவர் உச்சரிப்பின் அசைவழுத்தங்கள் அவருக்கே உரிய ஒன்றாக சில நியூ யார்க் ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக்கின்றன. ஈஸ்ட் பிரான்க்ஸ் யித்திஷ் மட்டுமே பேசப்படும் ஒரு வீட்டில் பிளேக்கின் Prophecies-சிலிருந்து வார்த்தைகளை உச்சரித்து உச்சரித்து ஆங்கிலம் கற்றுக் கொள்ள  நீங்கள் முயன்று பாருங்கள், என்று விளக்குகிறார். பெரும்பாலும் உரையாடலை ஒரு நேரடியான, சில சமயங்களில் அன்னியோன்னியமான, கேள்வியுடனோ அல்லது பெருமூச்சுடனோ தொடங்குவார் : “ஓ, என்னமாய் வலிகின்றன, ப்ளூமிய பாதங்கள், இன்று!”

பேட்டியாளர்: உங்கள் பால்ய கால நினைவுகள் பற்றிக் கூற முடியுமா?

ப்ளூம்: அது முடிந்து பல யுகங்கள் ஆகி விட்டன.  எனக்கு இப்போது அறுபது வயதாகிவிட்டது. பால்ய காலத்தைப் பற்றி அதிக நினைவில்லை. யித்திஷ் பேசப்பட்ட ஆசாரமான கிழக்கு ஐரோப்பிய யூத குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன். அம்மாவிற்கு சமயப் பற்று அதிகம். அப்பாவிற்குச் சற்று கம்மி. நான் இன்னமும் யித்திஷ் கவிதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன். அவை எனக்கு விருப்பமானவையாகவும் பெரும் இன்பங்களை அளிக்க வல்லவையாகவும் இருந்திருக்கின்றன.

பே: நீங்கள் வளர்ந்த சூழலைச் சற்று நினைவுகூருங்களேன்?

ப்ளூம்: கிட்டத்தட்ட எதுவும் ஞாபகமில்லை. எங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நானும் என் நண்பர்களும் ஐரிஷ் முரடர்களுடன் சதா சர்வகாலம் தெருக்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்தது மீதமிருக்கும் நினைவுகளில் பிரதானமானது என்று கூறலாம். அவர்களில் சிலர்  நிச்சயமாக சில்வர் ஷர்ட்ஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு வகையான அமெரிக்க- நாஜி குழு அளித்த உந்துதலில் இயங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது நடந்தது 1930-களில், ஐரிஷ் குடியிருப்புகளுக்கு வெகு அருகாமையில் ஈஸ்ட் பிரான்க்ஸில் வசித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் எங்கள் மீது படையெடுக்க நாங்கள் அவர்களைத் திருப்பித் தாக்குவோம். உடைந்த பாட்டில்களும் பேஸ்பால் மட்டைகளும் நிரம்பிய பயங்கரமான தெருச் சண்டைகள் அவை. அந்நாள்கள் மிக மோசமானவை. பெரியவனாக தற்போது என் நெருங்கிய நண்பர் வட்டத்தை ஐரிஷ்காரர்களே  கணிசமான அளவில் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையையும் மீறி இதைக் கூறுகிறேன்.

பே: வாழ்க்கைப் பின்னணி உங்கள் பணி வாழ்க்கையைக் கட்டமைக்க எவ்வழியிலாவது ஏதுவாக இருந்ததா?

ப்ளூம்: சந்தேகமில்லாமல்,  முறைமையான வாசிப்பு பழக்கத்திற்குப் பெருமளவில் அது என்னை முன்னிணக்கப் படுத்தியது. சிறு வயதிலிருந்தே வேதாகமத்தை ஓர் அறுதியான பிரதியாக அது எனக்கு நிறுவியது. அதன் தொடர்ச்சியாக இயல்பாகவே வியாக்கியானம் செய்வதில் சற்று மூர்க்கமாகவே என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். யூத மரபு  அவசியமாகவே வியாக்கியானம் என்பதை ஒரு முறைமையாக ஒருவனுக்கு அறிமுகப்படுத்தி விடுகிறது. பொருள் விளக்கம் என்பது முற்றிலும் இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. ஆனால் எனக்கு அதிகம் மரபார்ந்த சமய நம்பிக்கைகள் கிடையாது. சிறுவனாக இருந்தபோதே ஆன்மீகம் குறித்த மரபார்ந்த கருத்துகளைப் பெரிதும் சந்தேகித்தேன். கண்டிப்பாக இப்போது,  நான் பல முறை கூறியிருப்பது போல்,  நெறி சார்ந்த யூதத்தை,  இரண்டாம் நூற்றாண்டில் பாலஸ்டீனில் ரோமானியர் குடியேற்றத்திற்கு உட்பட்டிருந்த யூத மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட யூத ஆகமத்தின் வலுவான பிறழ்வாசிப்பாகவே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். பதினெட்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அது இயைபுடைய ஒன்றாக எனக்குப் படவில்லை. ஆனால் இதைத் தவிர, வாசகனாகவும்,  குழந்தையாகவும் எனக்குக் கிட்டிய முக்கியமான வாசிப்பனுபவங்கள் ஹீப்ரூ பைபிளிலிருந்து வரவில்லை. அவை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கவிதைகளை வாசித்ததனாலேயே எனக்குக் கிட்டின. இன்னமும்கூட அவை ஓர் ஆகம மனமாற்றத்தின் விசையுடன் என்னை ஆட்கொள்கின்றன. ஹார்ட் கிரேனையும் வில்லியம் பிளேக்கையும் வாசித்ததில் கிடைத்த அழகியல் அனுபவம்- இவ்விரு கவிஞர்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்…

பே: அப்போது உங்கள் வயது என்ன?

ப்ளூம்: பதின்ம காலத்திற்கு முன்னே, பத்து பதினொரு வயதிருக்கும். கிரேனையும் பிளேக்கையும் படிக்கையில் நான் உணர்ந்த அதீதமான பூரிப்பும், அதீதமான விசையும் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது – குறிப்பாக  எனக்கு அப்போது சுத்தமாக புரியாத அவரது நீள்கவிதைகளின் உணர்வை கிளந்தெழச் செய்யும் பிளேக்கிய பேச்சலங்காரம். அதே போல் ஹார்ட் கிரேன் கவிதைகளின் முழுத் தொகுப்பொன்றை பிரான்க்ஸ் நூலகத்திலிருந்து இரவல் வாங்கி வந்தேன்.  “O thou steeled Cognizance whose leap commits/ The agile precincts of the lark’s return” என்ற அபாரமான உருவகம் உள்ள பக்கத்தை வந்தடைந்தது இன்னமும் அப்படியே நினைவிலிருக்கிறது. அதன் மார்லோவிய பேச்சலங்காரம் என்னை கிறுகிறுக்கச் செய்தது. அக்கணத்தின் அலாதியான சுவை என்னுள் இன்னமும் இருக்கிறது. அதுவே நான் சொந்தம் கொண்டாடிய முதல் புத்தகமும் கூட. என் மூத்த சகோதரியிடம் அதை வாங்கித் தரும்படி கெஞ்சினேன். 1942-இல் பிறந்த நாள் பரிசாக அவள் வாங்கிக் கொடுத்த பழைய கருப்பு-தங்கப் பதிப்பு என்னிடம் இன்னமும் இருக்கிறது. இதோ இங்குதான் மேலே மூன்றாவது மாடியில். அவற்றைப் புரிந்து கொள்வதற்கு முன், அவற்றின் விசையால் உந்தப்பட்டு மூர்க்கமான விருப்பத்துடன் பெருங்கவிதைகளை எதிர்கொள்ளும் அதீதமான அனுபவம் (பலவற்றைப் போல் பதின்ம பருவத்திற்கு முந்தைய காலத்தில்) நமக்கு எவ்வாறு வாய்க்கிறது?  சிலருள் அது கவித்துவ ஆகிருதியாகக் குடிகொள்கிறது. என்னைப் போன்றவர்களில் அதற்கான பதில் முதலிலிருந்தே விமர்சகனின் குரலில் ஒலிக்கத் தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில், ஸ்டீவன்ஸையும் யேட்ஸையும் விட உயர்வான இடத்தில் மறைமுகமாக நான் வைக்கக் கூடிய ஒரே கவிஞர் ஹார்ட் கிரேனாகத்தான் இருக்கும். முப்பத்து இரண்டு வயதிலேயே கிரேன் இறந்துவிட்டதால் அவர் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்பதை நம்மால் சரியாக நிர்ணயிக்க முடியவில்லை. பேரிழப்பென்றுதான் கூற வேண்டும். இருபத்தொன்பது வயதில் ஷெல்லியும் இருபத்தைந்து வயதில் கீட்ஸும் மறைந்ததை ஒத்த இழப்பு. என்ன,  சாதனை படைக்க கிரேனுக்கு ஏழெட்டு ஆண்டுகள் மட்டுமே அளிக்கப்பட்டன.

A Manuscript page from the introduction to Major Literary Characters

பே: சிறார் கதைகள், தேவதைக் கதைகள் போன்றவற்றைப் படித்தீர்களா?

ப்ளூம்: படித்ததாக நினைவில்லை. பைபிளைப் படித்தேன். அதுவும் ஒரு வகையில் நீளமான தேவதைக் கதைதானே. பட்டப் பயிற்சி காலத்தில்தான் சிறார் இலக்கியம் படிக்கத் தொடங்கினேன். 

பே: சிறுவனாக இருந்தபோது கவிதை எழுதினீர்களா?

ப்ளூம்: கவிதையில் பேரார்வம் இருந்தாலும் அதை முயன்று பார்க்கும் எண்ணம் எழவே இல்லை. அதன் பேரில் எனக்கிருந்த பெருமதிப்பும், அது என்னில் ஏற்படுத்திய பரவசமும், முதலிலிருந்தே பிளேக் மற்றும் கிரேனிடத்தே நான் உணர்ந்த ஒரு வகையான உச்சாடன சக்தியும் ஏதோவொரு விதத்தில் காரணமாக இருந்திருக்கலாம். கவிஞனாக வேண்டும் என்று நினைக்கவே இல்லை. அதன்  வாசற்படிகளை அணங்குகள் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். செய்யுளில் எழுதுவதென்பது ஒரு விதமான அத்துமீறலாகவே இருந்திருக்கும். இன்னமும் கூட நான்  இதை உறுதியாக நம்புகிறேன். 

பே: நீங்கள் தேர்ந்தெடுத்த பணிப்பாதையைப் பற்றி உங்கள் குடும்பத்தினர் என்ன நினைத்தார்கள்?

ப்ளூம்: நான் என்னவாகப் போகிறேன் என்பதைப் பற்றி அவர்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை. நான் இப்பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களுக்கு ஏமாற்றமளித்தது என்றே நினைக்கிறேன். கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெயர்ந்த யூத குடியேறிகள் என்பதால் அவர்கள் பார்வை குறுகியதாகவே இருந்திருக்க முடியும். மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ, பல் டாக்டராகவோ வரவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். கவிதைப் பேராசிரியர் என்றால் என்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கக்கூட மாட்டார்கள். ஒருக்கால் ராபையாகவோ, டால்மூட் பேரறிஞராகவோ நான் ஆகியிருந்தால் அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் இறுதியாய்ச் சொல்ல வேண்டுமென்றால் நான் தேர்ந்தெடுத்த பாதையைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஆங்கில கவிதைகள் படிப்பதைத் தவிர வேறெதையுமே செய்யாதிருக்கும் பழக்கத்திற்குச் சிறு வயதிலிருந்தே அடிமையாகி விட்டிருந்த என்னிடம் ப்ரூக்லினில் மிட்டாய்க் கடை வைத்திருந்த மாமாவொருவர், பெரியவனான பிறகு எவ்வாறு வாழ்வூதியத்தை ஈட்டப் போகிறேன் என்று கேட்டபோது கவிதை வாசிக்க விரும்புகிறேன் என்று பதிலளித்தேன். ஹார்வர்டிலும் யேலிலும் கவிதை பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கூறினார். அப்போதுதான் அவ்விடங்களைப் பற்றியோ கவிதைக்கான பேராசிரியர் என்ற பணியைப் பற்றியோ நான் முதல் முறையாகக் கேள்விப்பட்டேன். ஐந்தாறு வயது குழந்தைக்கு உரித்தான வகையில், ஹார்வர்டிலோ யேலிலோ கவிதை பேராசிரியராகப் போகிறேன் என்று பதிலளித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் ஹார்வர்டில் சார்ல்ஸ் எலியட் நார்ட்டன் கவிதைப் பேராசிரியராகவும், யேலில் மனிதக் கலைகளுக்கான ஸ்டெர்லிங் பேராசிரியராகவும் பணியாற்றினேன் என்பதுதான். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் துறை பெருமளவில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. சில சமயங்களில் படைப்பைப் பொருத்தமட்டில் எனக்கும் பெரும்பாலான பிற விமர்சகர்களுக்குமிடையே உள்ள முக்கியமான வேறுபாடு இதுதான் என்று தோன்றுகிறது. நான் இப்பணிக்கு இளம் வயதிலேயே வந்துவிட்டேன். மேலும் அதிலிருந்து நான் கிஞ்சித்தும்  திசைமாறியதில்லை. 

பே: சிறு வயதிலிருந்தே அசாத்திய நினைவாற்றல் மிக்கவராக அறியப்பட்டிருக்கிறீர்கள். இந்த நினைவுகூரும் சக்தி, அது வார்த்தைகளால்  தூண்டப்படுகிறதா அல்லது அதற்கான வேறு காரணிகளேதும் இருக்கிறதா?

ப்ளூம்: இல்லை.  உடனடியாக எப்போதும் பிரதியே இதைத் தூண்டுகிறது. கண்டிப்பாக அதில் ஓர் அழகியல் அம்சமும் எப்போதும் உடனிருக்கும். சிறு வயதிலிருந்தே ஒரு கவிதையை முதலிலிருந்து இறுதிவரை முற்றிலும் நினைவுகூர முடிவதே அதன் தவிர்க்க முடியாமைக்கான அளவுகோலாக எனக்கிருந்திருக்கிறது. இவ்விஷயத்தைப் பொருத்தமட்டில் நீட்ஷேயின் பாதிப்பைத் தவிர என்னிடம் வேறெந்த மாற்றமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அழகியல் ரீதியாக அவர் இந்த வழியில் மட்டுமே என்னை பாதித்திருக்கிறார். உக்கிரமான இன்பத்திலிருந்து கிளர்ந்தெழுந்தது என்று நான் நம்பிக் கொண்டிருந்த நினைவுகூர்தல் தன்மையும் தவிர்க்கவியலாமையும் உண்மையில் ஒரு விதமான வலியிலிருந்தே பிறந்திருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டேன். இதை இப்படியும் கூறலாம், பொருட்படுத்தலின் வலியை நாம் நீட்ஷேவிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். சில சமயம் இது கடினத்தால் ஏற்படும் வலியாக இருக்கிறது. மற்ற சமயங்களில் நம்மால் என்றுமே எட்டமுடியாத தகுதரம் நம்முன் நிறுவப்படுகையில் உண்டாகும் வலியாக அது உருக்கொள்கிறது. 

பே: வாசிப்பு எப்போதாவது அனுபவத் தவிர்த்தலாக இருந்திருக்கிறதா?

ப்ளூம்: இல்லை. கட்டுக்கடங்கா கோபமும் பெரும் விழைவுமே எனக்கு உந்துவிசையாக இருந்திருக்கின்றன. ஆத்திரம் அல்லது ஆட்டிப் படைக்கும் பிடிப்பு என்று கூற வேண்டும். என் பங்குக்கு நான் என்னதான் ஊகம் செய்தாலும், எனக்கென்று வாய்த்த வாழ்வுக்கு மாற்றாய் அதைக் காட்டிலும் ஆதர்ச வாழ்வொன்றை அமைத்துக் கொள்ளும் முயற்சியாக என் வாசிப்பு அர்த்தப்படுத்தப்படுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  இம்மாதிரியான தீவிர விழைவை ஆதர்சப்படுத்தக் கூடாது. கண்டிப்பாக இப்போது நான் அப்படிச் செய்வதில்லை என்று என்னால் உறுதியாகவே கூற முடியும். இன்னமும் ஒரு நல்ல கவிதையைக் கண்டெடுக்கையில் அதை வாசிக்கும் அனுபவம் எனக்கு உவர்ச்சியளிப்பதாக இருக்கிறது என்பதே உண்மை. அண்மையில் பல வருடங்களுக்குப் பிறகு (அந்தோ பரிதாபம்) முதல்முறையாக ஷேக்ஸ்பியரின் ‘டிராய்லஸ் அண்ட் கிரெசிடா’ நாடகத்தை ஒரே மூச்சில் படிப்பதற்காக உட்கார்ந்தேன். வியக்கத்தக்க வகையில் அபாரமானதாகவும் காத்திரமாகவும் அவ்வனுபவம் அமைந்திருந்தது. அவ்வகையில் அது குறையவோ மட்டுப்படவோ இல்லை. அம்மாதிரியான அனுபவத்திற்குத் தன்னளவிலேயே மதிப்பும் மெய்மையும் இருக்கிறது; நிச்சயமாக வேறொரு பெயரளித்துக் குறுக்கவோ உள்ளடக்கவோ முடியாது. சந்தேகமில்லாமல் பாலியல் சிந்தனைக்கோ பாலியல் இறந்த காலத்திற்கோ அதைக் குறுக்குவதையே ஃபிராய்ட் விரும்பியிருப்பார். மேலும் மேலும், உளப்பகுப்பியலைக் காட்டிலும் இலக்கியமே, குறிப்பாக அதற்கு ஆதர்சமாக விளங்கும் ஷேக்ஸ்பியருமே  அறிதலுக்கான முழுமுதலான முறைமையாகத் தோன்றுகிறது.

பே: உங்களுடைய ஆசிரியர்களில் யார் யாரை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்கள்? யேலில் நியூ க்ரிடிக்ஸ்களுடன் பயின்றீர்களா?

ப்ளூம்: வில்லியம் கே விம்சட்டைத் தவிர நியூ க்ரிடிக்ஸ் குழுவிலிருந்த எவருடனும் நான் பயிலவில்லை. வடிவியல் விமர்சகரான பில், அதிபுத்திசாலியும்கூட. கவிதை கோட்பாடு பற்றிய அவருடைய முதல் வகுப்பில் காலடி வைத்த உடனேயே அவர் என்னைக் கணக்கீடு செய்தார். அவருக்காக எழுதிய என் முதல் கட்டுரையில் அவர் எழுதிய முதல் திருத்தக் குறிப்பு : “இது ஒரு லாஞ்சைனிய விமர்சனம். அச்சு அசல், எனக்குப் பிடிக்காத, நான் வேண்டியிராத ஒன்றிற்கான நல்ல உதாரணம் நீ.” அவர் கூறியது மிகச் சரியே. அவர் ஒரு அரிஸ்டோடீலியர்; என்னைப் பொருத்தவரை அரிஸ்டாடில் மேலை விமர்சனத்தை,  அனேகமாக அதன் ஆரம்பக் காலத்திலிருந்தே நாசம் செய்து விட்டார்; நான் விமர்சனமென  அர்த்தப்படுத்திக் கொண்டது உண்மையிலேயே சூடோ-லாஞ்சைனசிடமிருந்துதான் தொடங்கியது. இது போல், இம்மாதிரியான விஷயங்களில் எங்கள் இருவருக்குமிடையே தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அவர் ஓர் அருமையான, குறிப்பிடத்தக்க ஆசிரியர்,  பிற்காலத்தில் நாங்கள்  நெருங்கிய நண்பர்களானோம். அவரது மறைவு என்னை இன்னமும் மிகவுமே துயருறச் செய்கிறது. சுவாரசியம் நிரம்பிய மிக வாட்டசாட்டமான,   அற்புத மனிதர் அவர்.  கிட்டத்தட்ட ஏழடி உயரம், மூர்க்கமான ரோமன் கத்தோலிய கொள்கைப் பிடிப்புள்ள தீவிர ஆசாமி. ஆனால் அனேகமாக நடுநிலைமை தவறாதவரும்கூட. இருவருமே டாக்டர் சாமூயெல் ஜான்சனை மிக விரும்பிப் படித்தோம். அவருக்கு எதிராக அவ்வளவு மூர்க்கமாக எதிர்வினை ஆற்றியதாலேயே ஒரு விதமான முரணியக்கம் வழியே அவர் என்னைப் பெரிதும் பாதித்தார். The Anxiety of Influence புத்தகத்தை பில்லிற்கு சமர்ப்பித்ததின் பொருள் இதுதான் என்று நினைக்கிறேன். புத்தகத்தின் ஆரம்ப காலத்துப் பிரதி ஒன்றை அவருக்குப் பரிசாக அளித்ததிற்குப் பதிலாக அவர் எழுதியதை நான் இன்னமும் ஒரு பொக்கிஷத்தைப் போல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். சமர்ப்பணம் என்னை மிக ஆச்சரியப்படுத்தியது, என்று கூறிவிட்டுத் துக்ககரமான தொனியில் தொடர்ந்தார். நான் அறவே வெறுக்கும் அமெரிக்க நியோ-ரொமாண்டிசிஸத்தைப் பொருத்தமட்டில் எமர்சனின் பிளடோவிற்கு நீ பிளோடினஸாக பாவித்துக் கொள்ளும் உரிமையை இது உனக்கு அளிக்கிறது அல்லவா? ஆமாம், கவிதையைக் குறித்த உணர்வுகளில் எங்களிருவருக்கும் இடையே பெருத்த வேறுபாடிருந்தது. 

பே: உங்கள் ஆரம்ப காலத்துக் கட்டுரைகள் எவ்வாறு இருந்தன?

ப்ளூம்: கார்னல் பட்டப் பயிற்சி காலத்திற்கு முன் நான் கட்டுரையேதும் எழுதவில்லை என்றுதான் நினைக்கிறேன். சில வருடங்கள் முன்னே பதினாறு பதினேழு வயதில் கார்னல் முதலாண்டு வகுப்பொன்றில்  ஹார்ட் கிரேனைப் பற்றி நான் எழுதிய, முற்றிலும் மறந்து விட்டிருந்த கட்டுரையொன்றைப் பாப் எலியஸ் அனுப்பி வைத்திருந்தார், அப்போது அதைப் பார்ப்பதைக் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதை உடனேயே அழித்து விட்டேன் என்று நினைக்கிறேன். இப்போது அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. அதை கண்ணுறுவதற்கான மனநிலை வரும்வரையில் நான் காத்திருந்திருக்க வேண்டும். அது எப்படி இருந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள இப்போது ஆர்வமாக இருக்கிறது.

பே: ஆரம்ப காலத்தில் உங்களைப் பாதித்த முக்கியமான வேறு சில இலக்கியவாதிகளைப் பற்றிக் கூற முடியுமா?

ப்ளூம்: இப்போது அவரைப் பற்றி யாரும் பேச விரும்பவில்லை என்றாலும் அப்போது நவீன விமர்சகர்களின் செல்லப் பிள்ளையாயிருந்த ஜார்ஜ் வில்சன் நைட் என்னை மிகவும் பாதித்தார். பழைய நண்பர். வடிகட்டிய கிறுக்கு.  அவரோடு ஒப்பிடுகையில் கென்னத் பர்க், ஹெரால்ட் ப்ளூம் எல்லாம் அமைதி காக்கும் சாந்த சொரூபிகள். ஜார்ஜ் நரைதட்டிய பழுத்த பழமாகத்தான் இறந்தார். ஆன்மீகம், மரணத்திற்குப் பின்னும் நீடித்ததல் போன்ற விஷயங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. அவற்றை உண்மையிலேயே நம்புவதாக இரண்டு மூன்று முறை  என்னிடம் கூறியிருக்கிறார். The Christian Renaissance புத்தகத்தில் ஓர் இடம் வரும், விமர்சன வரலாற்றின் மிக அற்புதமான தருணம் என்றும் அதை மதிப்பிடலாம். ஏனெனில், அது அவ்வரலாற்றின் மிக கிறுக்குத்தனமான தருணமும் கூட. அவர் ஆவியுலக கோட்பாளரான எஃப். டபில்யூ. ஹெச். மையெர்ஸ் எழுதிப் பதிப்பித்ததை மேற்கோள் காட்டுகிறார். அதன்பின்  ஆவி தொடர்புக் குழுமமொன்றில் மெயெர்ஸ் “திரும்பி வந்து” ஆவியுலக இடையீட்டாளராகக் கூறிய வாக்கியத்தை நமக்களித்துவிட்டு, அப்படிக்கப்படியே நான் தற்போது உங்களுக்காக ஒப்பிக்கப் போவதைக் கூறுகிறார்: ” அவரது பூவுலக ‘மரணத்திற்கு‘ முன்னேயும் பின்னேயும் இயற்றிய, ஒன்றையொன்று அனேகமாக நகலிக்கும், எஃப். டபில்யூ. ஹெச். மையெர்ஸின் இம்மேற்கோள்களின் கூட்டுச் சாராம்சத்தில் பொதிந்திருக்கும் ஞானத்தை நமது சகாப்தத்தில் உள்வாங்கிக் கொள்வது கடினமாக இருக்கலாம்.” கண்ணைக் கூடச் சிமிட்டாது கூசாமல் ஏதோ தரவு தருவது போல் எப்படி நேரடியாகப் பேசுகிறார் பாருங்கள்! ஆனால் வில்சன் நைட்டின் ஆரம்ப காலத்துப் புத்தகங்கள் உண்மையிலேயே மிக அருமையானவை. தற்போது மறக்கப்பட்டிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான விமர்சகர்கள் பட்டியலில் அவர் கண்டிப்பாக இடம் பெறுவார். 

[இத்தறுவாயில் நடந்தபடியே நாங்கள் சமையற்கட்டிற்குள் வந்துவிடுகிறோம். அங்கு மிசஸ். ப்ளூம் தொலைக்காட்சியில் மாலைச் செய்திகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.]

ப்ளூம்: சற்று நேரம் பேட்டியை ஆறப்போட்டு விட்டு இந்த பாழாய்ப் போன யாங்கீஸ் தோற்கும் தறுவாயிலிருந்து திரும்பிவந்து ஜெயித்தார்களா என்ற செய்திக்காகக் காத்திருப்போம். நான் அவர்களை திட்டித் தீர்க்காத நாளில்லை. 1979லிருந்து இதுவரையிலும் அவர்களால் வெற்றி ஈட்ட முடியவில்லை. பத்து வருடங்களாகி விட்டன, இந்த வருடமும் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. தண்டக் கருமாந்தரம் அவர்கள்…. அடடே இது என்ன அதிசயம்?

[டி.வி: திடீர் திருப்பங்கள் கூடிய இப்பிற்பகலில் யாங்கீஸ் இவ்வருடத்தின் மிக நம்பமுடியாத வெற்றியை ஈட்டினார்கள்…. மீண்டுமொரு முறை டைகர்ஸ் தோல்வியைத் தழுவுகிறார்கள்.]

ப்ளூம்: “ஓ மை காட்! அப்படி என்றால் நாம் இன்னமும் நாலே நாலு ஆட்டங்கள் மட்டுமே ஜெயித்தால் போதும். எவ்வளவு மகிழ்வூட்டும் நம்பிக்கையான விஷயம்.

மிசஸ். ப்ளூம்: ஜெஸிகா ஹான்.

ப்ளூம்: ஜெஸிகா ஹான் திரும்பி வந்துவிட்டார்!

[டி.வி: ஃபீனிக்சின் டாப் 40 வானொலி நிலையமொன்றில் நட்சத்திர ஒலிபரப்பாளராகப் பணியேற்கிறார்.]

ப்ளூம்: அற்புதம்! 

[டி.வி: பிளேபாய் நாளிதழ் அவரை மலைபோல் நம்பிக் கொண்டிருந்தார்கள். அண்மை இதழொன்றில் அவர் அம்மணமாகத் தோன்றியிருக்கிறார்.]

 ப்ளூம்: அபாரம்!… சரி, அண்டொனியோ நாம் மீண்டும் ஆரம்பிக்கலாமா. என்ன பேசிக் கொண்டிருந்தோம்?

[வரவேற்பறைக்குத் திரும்பிச் செல்கிறோம்]

பே: உங்கள் ஆசிரியர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இதுவரையில் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்த கவிஞர்களைப் பற்றி கேட்கலாம் என்றிருந்தேன்.

ப்ளூம்: ஆடனை எனக்கு நன்றாகவே தெரியும்,  பெரும்பாலும் ஜான் ஹாலண்டர் மூலமாக. எலியட்டை நான் சந்தித்ததில்லை. ஸ்டீவன்ஸை ஒரு முறை சந்தித்திருக்கிறேன். கார்னலில் படித்துக் கொண்டிருக்கும் போது யேலிற்கு ஒரு முறை சென்றிருந்தேன். “Ordinary Evening in New Haven” கவிதையை அதன் சுருக்கப்பட்ட வடிவத்தில் அவர் வாசித்துக் கேட்பதற்காக. நியூ ஹேவனிற்கு, ஏன் யேலிற்குமே கூட முதல் முறையாக அப்போதுதான் சென்றேன். வாசிப்பு முடிந்து அவருடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அவரைச் சந்தித்தது எனக்கு ஒரு காத்திரமான அனுபவமாக இருந்தது. ஷெல்லியைப் பற்றி பேசினோம். “Witch of Atlas” கவிதையிலிருந்து ஒரு செய்யுளை அவர் ஒப்பித்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. “நெருப்பின் அழகை மனிதர்கள் மிக அருகலாகவே அறிந்திருக்கிறார்கள்” என்று அக்கவிதை தொடங்குகிறது. சில்லிப்புகள் நிறைந்த அழகான கவிதை. ராபர்ட் பென்  வாரனும் நானும் நெருங்கிய நண்பர்கள். மிஸ் பிஷப்பும் அந்த இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்தான். ஆர்ச்சி அம்மன்ஸும் நானும் அன்னியோன்னியமானவர்கள். இதுபோல் நிறையவே இருக்கிறார்கள்.. 

ஜேம்ஸ் மெரில்லுடன் சில காலம் கடிதத் தொடர்பில் இருந்தேன், அவர் The Changing Light at Sandover எழுதிக் கொண்டிருந்தபோது, எழுத எழுத எனக்கு அனுப்பி வைப்பார். நான் பதில் கடிதங்களில் “கேப்பிடல் எழுத்துகளில் வரும் சமாசாரத்தைக் குறைத்து விட்டு J.M -ஐ அதிகரிக்க முடியுமா?”என்று கேட்பேன். அது அப்படித்தான் இருக்கும், ஏனெனில் அப்படிதான் தனக்கு ‘வருகிறது’ என்று அவர் பதிலெழுதுவார். என் அடிப்படை விதியை நானே மீறிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்:, மெச்ச மட்டும் செய், விவாதிக்காதே.

பே: நீங்கள் சந்தித்திராத, ஆனால் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்களா?

ப்ளூம்: இல்லை, இதுவே அதிகமென்றும் இதைக் காட்டிலும் குறைவான எழுத்தாளர்களுடன் பழகியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இப்படிச் சொல்வதனால், என் அருமை நண்பர்களைக் குறை கூறுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.

பே:  நேர்மையான மதிப்பீட்டிற்கு நட்பு தடையாக இருக்கலாம் என்பதாலா?

ப்ளூம்: இல்லை. வயதாக ஆக இந்தத் துறையில் மேலும் மேலும் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளச் சபிக்கப்பட்டிருக்கிறோம். அவர்களில் அனேகமானவர்கள் அருமையான சீமாட்டிகளும் கனவான்களும்தான் என்றாலும் அவர்களுக்கு, உற்ற நண்பர்களுக்கும் கூட,  என் போன்ற அதே ஓய்ந்துபோன,  பாவமான,  மனிதாபிமான ஜந்துவிடம் உரையாடுவது கடினமாக இருக்கிறது. அவர்கள் நாவலாசிரியர்கள், கவிஞர்கள்  என்பதை நான் உணர்ந்திருப்பதைக் காட்டிலும் நான் இலக்கிய விமர்சகன் என்பதை அவர்கள் தன்னிலையாக உணர்ந்திருக்கிறார்கள். 

பே: கதாபாத்திரங்களில் எவரையாவது சந்திக்க விரும்பி இருக்கிறீர்களா?

ப்ளூம்: இல்லையில்லை. நான் அறிந்திராத ஆனால் மிகவுமே அறிய விரும்பிய ஒரே நபர் சோஃபியா லாரன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். குறைந்த பட்சம் நூற்றாண்டின் மூன்றில் ஒரு பங்கிற்கு சோஃபியா லாரனிடம் காதல் வயப்பட்டிருக்கிறேன். ஆனால் கண்டிப்பாக சந்தேகத்திற்கு இடமின்றி அவரைச் சந்திக்காதது என் நல்லதிர்ஷ்டமே. மறைந்த நண்பர் பார்ட் கியாமட்டி அவருடன் காலையுணவு அருந்தியிருக்கிறார். எனக்கு அவ்வாறான வாய்ப்புகள் இனிமேலும் அமையும் என்று  தோன்றவில்லை. புகைப்படங்கள், அண்மைத் திரைப்படங்களை வைத்து பார்க்கும்போது மூப்பை அவர் நளினமாக எதிர்கொண்டிருக்கிறார் என்று படுகிறது. என்ன, சற்று மெலிந்து விட்டதால் அந்த வசீகரமான முன்னாள் நீயோபோலிட அழகு இல்லையென்றாலும்,  முன்னதைக் காட்டிலும் நளினமான அழகுடன் மிளிர்கிறார். 

பே: சில நாவலாசிரியர்களைப் பற்றிய உங்கள் கருத்துகளைக் கூற முடியுமா? நார்மன் மெய்லரிடமிருந்து தொடங்குவோம்.

ப்ளூம்: ம்ம், நார்மனைப் பற்றி நிறையவே எழுதியாயிற்று. த நியூ யார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸில் ஏன்சியண்ட் ஈவினிங்ஸ் புத்தகத்தை விரிவாகவே விமர்சித்திருக்கிறேன். அதில் நார்மனை மகிழ்வூட்டாத, நான் இன்னமும் பெருமைப்பட்டுக் கொள்ளும் வாக்கியமொன்று வருகிறது. “Subscribers to the Literary Guild will find in it more than enough humbuggery and bumbuggery to give them their money’s worth,” என்ற வாக்கியம். அதில் வரும் ஓரின மற்றும் மாற்றுப் பாலருடன் நிகழும் ஆசனவாய் புணர்ச்சிகளை எண்ணிக்கையிட்டேன்; அந்த எண் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. என் நினைவு பிழையில்லை என்றால், முதன்மைப் பாத்திரம் அல்லது ஒருக்கால் அந்தக் கடவுள்-ராஜாவாகவும் இருக்கலாம், ஒரு சிங்கத்துடன் குதம்வழி புணர்ச்சி கொள்வதும் அவ்வெண்ணிக்கையில் அடக்கம் என்பதும் அவ்வாச்சர்யத்திற்கான காரணமாக இருக்கலாம். இம்மாதிரியான விஷயங்களில் நார்மன் நூதனமான கலைத்திறன் படைத்தவர். கடைசியாகச் சந்தித்தபோது CIA பற்றிய ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் ஒரு கையெழுத்துப்படியை முடித்துக் கொண்டிருப்பதாக கூறினார். நார்மன் இயல்பாகவே எல்லாவற்றிலுமே சதித் திட்டங்களைக் காணும் அதீத பிறழ்ச்சி தரிசனம் கொண்டவர் என்பதால் அது ஓர் அபாரமான கொடுங்கனவுப் புத்தகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். என்னத்தைச் சொல்ல?  மெய்லர் பெரும் கற்பனைத் திறன் மிக்கவர். மிகுபுனைவு அவருக்கேற்ற பாணி என்று நம்மால் நம்ப முடிவதில்லை. சந்தேகமில்லாமல், The Executioner’s Song -கே  நெஞ்சில் நிற்கும் அவரது மிகச்  சிறந்த புத்தகம். அதுவோ,  நாம் நிதர்சனம் என்று அழைக்கும் யதார்த்தத்தை மிக நெருக்கமாக எழுத்துப்படி செய்கிறது. முத்திரை பதிப்பதற்காக நார்மன் விரும்பித் தேர்ந்தெடுத்த வகைமைகளைக் காட்டிலும் தியடோர் டிரெய்சரின் பாணியில்தான் அவர் சாதனை படைத்திருக்கிறார் என்பதே நகைமுரண். அவரது The Executioner’s Song  டிரெய்சரின American Tragedy-யைச் சமகாலத்திற்குக் கொண்டு வருகிறது. டிரெய்சரின் தொடர்ச்சியாகவே வருங்கால இலக்கிய வரலாற்றாசிரியர்கள் அவரைக் கொண்டாடுவார்கள். இது ஓர் எளிய சாதனையல்ல. 

பே: அப்படியே வில்லியம் காடிஸை பற்றியும்…?

ப்ளூம்: மற்றெல்லோரையும் போல என்னாலும் The Recognition’s  புத்தகத்தை மறக்க முடியவில்லை. ஆனால் மற்ற இரண்டு புத்தகங்களும் அவரது தகுதிக்குத் தக்க விதத்தில்தான் அமைந்திருந்தன என்று மற்றவர்கள் கூறுவதில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு, அவற்றைப் படித்து முடிப்பதே எனக்கு மிகக் கடினமாக இருந்தது. மேலும் சில புத்தகங்களை எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்  ஆனால், எனக்கென்னவோ, அந்த பரந்த உடற்கூறியல் கொண்ட முதல் புத்தகத்தில் (அம்மாதிரியான புனைவெழுத்தை வரையறுப்பதற்காக ஃபிரை பயன்படுத்திய சொற்றொடர்) தம் திறமையை அவர் விஞ்சிவிட்டார் என்றே தோன்றுகிறது… அப்படிச் செய்வதும் அமெரிக்க இலக்கிய மரபின் ஓர் அம்சம்தான்.

பே: சால் பெல்லோ?

ப்ளூம்: அலாதியான சுகம் அளிப்பவர் என்றாலும் அவர் தன்னையும் நம்மையும் கடினமான விஷயங்களில் ஈடுபடுத்துவதில்லை. பலரும் மெச்சுவது போல்,  அவரது ஒவ்வொரு புத்தகத்தையும் கொண்டு செல்லும், அனேகமாக ஆண்களாகவே அமைந்திருக்கும் குறும்பாத்திரங்களை அவர்கள் வெளிப்படுத்தும் டிக்கென்சிய பேருவகைக்காக நானும் மெச்சுகிறேன். ஹெண்டெர்சன் புத்தகம் உட்பட எப்போதும் அவரது பிரதிமையாகவே வரும் மைய கதாபாத்திரங்கள்  அனைத்துமே, விதிவிலக்கில்லாமல், அபத்தமான தோல்விகளே. அவர் புத்தகத்தில் வரும் பெண்களோ, அனைவரும் அறிந்திருப்பது போல, அபத்தக் களஞ்சியங்கள். சாத்தியப்படா மூன்றாம் தர கனவுகள். மையக் கதை மீது நமக்கு எவ்விதமான ஆர்வமும் ஏற்படுவதில்லை. அவரது மதச்சார்பற்ற கருத்துக்களோ ஆலன் ப்ளூமிற்கு ஏற்றவை, அவரே கூட அவற்றின் நீட்சி போல்தான் தெரிகிறார். நான் அந்த ‘வேற்று’ ப்ளூமின் ரசிகன் இல்லை என்று அனைவருக்குமே தெரியும். பொதுவாகச் சொல்வதானால்,  தன் பெரும் திறனை வீணடித்து விட்டவராகவே பெல்லோ எனக்குப் படுகிறார். நான் அப்படிச் சொல்வதை அவர் கண்டிப்பாகப் பாராட்டவும் மாட்டார். அவருக்கு எதிராக நான் அதீதமான ஓர் ஆளுமையை முன்வைக்க விரும்புகிறேன் – பிலிப் ராத். பிலிப் ராத் பலத்திலிருந்து பலத்திற்கு போய்க் கொண்டே இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. அதனால் அவர் இவ்வளவு குறைவாக பாராட்டப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. துர்பிரசித்தம், பரவலான வாசிப்பு பெற்றிருந்தும் கூட அவர் அதிகமாகப் பாராட்டப்படவில்லை என்று கூறுவது மிக விசித்திரமாக இருக்கிறது, Deception  அதிகம் பேசப்படவில்லை. அது ஓர் அபாரமான படைப்பு, 

பே:அது ஒரு சோதனை முயற்சியாகப் பார்க்கப்பட்டது அல்லது ஒரு மீதமாக…

ப்ளூம்: … Counterlife-இன் மீதமாக. எப்படியானாலும், அதற்குக் கிடைத்த புகழுரைகளைப் பெறுவதற்கு The Counterlife முற்றிலும் தகுதியானதே. அது ஒரு வியப்பூட்டும் புத்தகம் என்றாலும் அதை அந்த அருமையான Prague Orgy  பின்னுரை அல்லது கோடாவோடு முடியும் Zuckerman Bound Trilogy -யிற்கு ஒரு படி குறைவாகவே எடை போடுவேன். இன்னமும், My Life as a Man , மற்றும் சந்தேகமின்றி Portnoy’s Complaint-டையும் மிகச் சிறப்பான புத்தகங்களாகவே கருதுகிறேன். காஃப்காவின் கூத்தியாள் என்று தலைப்பிடப்பட்ட அந்த மாபெரும் அத்தியாயம் The Professor of Desire-ரில் வருகிறது. ஃபிலிப்பைப் பற்றி நான் நிறையவே எழுதிவிட்டேன். படித்து முடிப்பதற்கே கஷ்டமாக இருந்த The Facts  என்று தலைப்பிடப்பட்ட அந்த அசம்பாவிதமான சுயசரிதைப் புனைவிற்குப் பிறகு மறைந்த தன் தந்தையைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அழகானதும் பெரும் நெகிழ்வூட்டக்கூடியதுமான அந்தப் புத்தகம் உண்மையிலேயே ஒரு பெரும் சாதனைதான். அபரிமிதமான உவகை அவர் கதையாடல்களில் காணக் கிடைக்கிறது. மேலும்- சுலபமானதல்ல என்பது நம்மெல்லோருக்குமே தெரிந்ததுதான் என்பதால் நான் இதை வலியுறுத்தியே சொல்ல வேண்டும் – ஃபிலிப்பின் நகைச்சுவை மிக வலிமிக்கதுதான் என்றாலும் அவர் ஒரு முதல் தரமான அசலான அக்மார்க் நகைச்சுவை நாவலாசிரியர். 

பே: கவிதை தற்போது குறிப்பிடத்தக்க வகையில் காத்திரமான இடத்திலிருக்கிறது என்று எழுதியிருக்கீர்கள், புனைவிற்கும் இது பொருந்துமா?

ப்ளூம்: கடந்த சில வருடங்களாகவே விரிவாகப் படித்து அதைப் பற்றி எழுதிக் கொண்டுமிருந்திருக்கிறேன் என்பது உண்மையானாலும், அமெரிக்கப் புனைவு என்னும் பல்லுருக்காட்டியைத் தொடர்ந்து அனுபவிப்பதென்பது எனக்கு மிகவும் கடினமாகி விட்டது. உயிருடன் இருக்கும் நம்முடைய  மிக மாண்புமிக்க புனைவுக் கதையாடல் எழுதுபவர்களில் – அவரை நாவலாசிரியர் என்று கருதமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்- முதன்மையானவர் தாமஸ் பின்ச்சன். ஆனால் அவர் அண்மையில் எழுதிய Vineland என்ற புத்தகமோ முற்றிலும் படு மோசமான ஒரு பெருந்தோல்வியே. பைரன் த லைட் பல்ப் பற்றிய மாபெரும் கதையை கிராவிடீஸ் ரெயின்போவில் எழுதிவிட்டு, கிரையிங் லாட் ஆஃப் 49- னை எழுதிவிட்டு, இந்த அபத்தமான, மீட்கவே முடியாத அளவிற்குத் தட்டையாகவும், அதைக் காப்பாற்றவல்ல வாக்கியம் ஒன்றுகூட இல்லாத,  நம்பவே முடியாத திகைப்புடன் நான் படித்த இந்த புத்தகத்தை அளிப்பதென்பது மிகுந்த மனச்சோர்வை அளிக்கிறது. 

பே: விக்டர் ஹ்யூகோ போன்ற நாவல்களை எழுதவேண்டும் என்று வற்புறுத்திய டாம் உல்ஃப் கட்டுரைக்கு உங்களிடமிருந்து ஏதாவது எதிர்வினை உண்டா?

ப்ளூம்: வெளிப்படையாகவே அவர் அவரது பான்ஃபைர் ஆஃப் வேனிடீஸைப் புகழ்ந்து கொள்கிறார். கட்டுரை ஆசிரியராகத் தொடங்கி நாவலாசிரியராக உருமாறிய ஒருவர் இவ்வாறு செய்வது முறையானதும் கூட. டாம் உல்ஃப் மிக இணக்கமான ஆசாமி,  நானும் அவரும் யேலில் ஒன்றாகப் படித்தோம். பான்ஃபைர் ஆஃப் வேனிடீஸை நான் விரும்பியே படித்தேன். அனைத்து மரியாதைகளுக்கும் அவர் உரியவர்தான். இருந்தாலும் அந்தப் புத்தகத்திற்கும் அவரது கட்டுரைத் தொகுப்பிற்கும் அதிகம் வித்தியாசமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.இதழியல் கட்டுரைக்கான அவரது ஆசீர்வதிக்கப்பட்ட அபாரமான திறமையையும் வீச்சின் வரம்புகளையும் சற்றே மீற முற்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்; ஆனால் அவர் கதாபாத்திரங்கள் புத்தகத்தில் வரும் பெயர்கள் மட்டுமே – அதற்கு மேலான பரிமாணங்களை அவற்றிற்கு அளிக்க அவர் முயலவில்லை. சமூக அழுத்தம் மிக அருமையாகவும் தத்ரூபமாகவும் நமக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இதெல்லாம்  எப்போதுமே அவருக்குக் கைவந்த கலைதான். ஒரு வகையான கீச்சுக் குரல் இதழியலை கிட்டத்தட்ட அழகியல் சார்ந்த ஒன்றாக எடுத்துச் செல்லும் பரவலான இயக்கத்தில் அவர் இன்னமும் ஓர் உறுப்பினர். அதே சமயத்தில் இதையும் சொல்லி விடுகிறேன். திரு. அப்டைக்கின் ராபிட் தொகுப்பை மீண்டும் படிப்பதைக் காட்டிலும் த பான்ஃபைர் ஆஃப் வேனிடீஸையே நான் மீள்வாசிப்புச் செய்ய விரும்புவேன் என்று தோன்றுகிறது. ஆனால், நானும் திரு. அப்டைக்கும் ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்ளும் குழுவின் உறுப்பினர்கள் அல்லர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

பே: நீங்கள் விமர்சனம் செய்த புத்தங்களை எழுதிய எழுத்தாளர்களுடனோ நண்பர்களுடனோ பூசல்கள் ஏதாவது…?

ப்ளூம்: பூசல்கள் என்று கூறமாட்டேன். திரு.ஸ்டைரனுக்கு அவருக்கே உரிதான பல சிக்கல்கள் உண்டு என்பது வெளிப்படை. அவற்றை என்னால் பரிவுடன் புரிந்துகொள்ளவும் முடிகிறது. ஒரு முறை ராபர்ட் பென் வாரனின் வீட்டில் உணவருந்திக் கொண்டிருக்கையில் இலக்கிய மதிப்பீடு குறித்து அவருக்கு எதிராகப் பேசிவிட்டேனென்று ஸ்டைரன் உரத்த குரலில் உன்னுடைய கருத்துகள் ஒரு பொருட்டே அல்ல, நீ ஒரு பள்ளி ஆசிரியர் மட்டுமே, என்றார். சமகால நாவலாசிரியர்கள் என்னிடம் கூறியவற்றுள் அதுவே மிகவும் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கலாம். வாரனது அண்மைய நாவல்களைக் காட்டிலும் அவர் கவிதை பல படிகள் மேலாக இருந்ததென்று எனக்கும் பட்டது. மேலும் நாவல்கள் எழுதுவதைக் கைவிட வேண்டும் என்று நான் ரெட்டை வற்புறுத்திக் கொண்டிருந்தேன். A Place to Come நாவல் World Enough and Time, At Heaven’s Gate, All the King’s Men மற்றும் Night Rider போன்றவற்றிற்கு நிகரான மகத்துவத்தைப் பெற்றிருந்ததென்று ரெட் தன் சாவு நாள் வரை நினைத்துக் கொண்டிருந்தார். அது மிகச் சலிப்பூட்டும் செத்துப் பிறந்த ஒரு புத்தகம். இதை நான் பெரும் வருத்தத்துடனே கூறுகிறேன்.அதற்கு நேர்மாறாக 1966-இல் Incarnations-சில் தொடங்கி இறுதிவரையிலும் (உடல் நிலை மிக மோசமாகி விட்டதால் கடைசி சில வருடங்கள் அவர் கவிதை எழுதுவதையே நிறுத்தி விட்டார்) ஒரு பெரும் கவிஞரின் திறனுக்கு ஏற்றாற்போல் அவரது கவிதைத் தரம் பிசறாமல் அப்படியே இருந்தது. 

பே: இளம் எழுத்தாளர்களை விரும்பிப் படிப்பதுண்டா?

ப்ளூம்: இந்த டெட் மூனி ஆசாமியை எனக்குப் பிடித்திருக்கிறது. அவரிடம் ஏதோ ஒன்றிருக்கிறது என்று நினைக்கிறேன். இதோ இப்போதுதான் படித்து முடித்த Traffic and Laughter  நிச்சயமாக ஆர்ப்பாட்டமான தீவிர செறிவு கொண்ட ஒரு புத்தகம். சரியாகத் தெரியவில்லை; ஆயிரக் கணக்கில் எழுதுகிறார்கள் என்பதால் தேர்வு செய்வது கடினமாக இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாவலாசிரியர்களைக் காட்டிலும் கவிஞர்களைப் பற்றிச் சிந்திப்பதே தற்போது சுலபமாக இருக்கிறது. தடைகளைத் தகர்த்துச் சாதனை படைப்பதென்பது நாவலாசிரியர்களுக்கு மிகக் கடினமாகவே இருக்கிறது. அபாரமான புதினத்திறன் படைத்த டான் டெலிலோ என்ற விதிவிலக்கைத் தவிர அக்கலையில் அதிக வளம் இருப்பது போல் தெரியவில்லை.

பே: இவ்வடிவம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

ப்ளூம்: அமெரிக்காவில்,கொடூரமான நூற்றாண்டு நிறைவடையும் தரிசனங்கள் நம்மை மேலும் மேலும் ஈர்க்கின்றன என்று தோன்றுகிறது. அதற்கு ஏற்ற விதத்தில் மதம், பகடி, இதுவரை பழக்கப்பட்டதைக் காட்டிலும் மேலதிகமான ஊழியிறுதி சார்ந்த பரிமாணங்களை எதிர்பார்க்கிறேன். மிகுபுனைவு வகையில் புதிய வரிசை மாற்றங்கள் உருவாகுவதையும் எதிர்பார்க்கிறேன்.
(தொடரும்)

———————————————-
Source / Further Reading

Harold Bloom, The Art of Criticism, 1991 Interview, The Paris Review Interviews, Vol II, Picador, 2007

Series Navigationவிமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.