குளக்கரை

ஒருக்கால்….

இருளிலிருந்து ஒளிக்கு வந்து மீண்டும் இருளுக்குத் திரும்பும் இந்த வாழ்வில் ’நாம் யார், ஏன் நாம்?’ போன்ற சிந்தனைகள் நம்மைத் தழுவவும், தெரியாததும், தெரிந்து கொள்ள முடியாததுமாகிய  எண்ணங்களை அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் நம் பின்னிரவுத் துணைகளென இருப்பது புனைவுகளின் முக்கியக் குறிக்கோள்  என்கிறார்  ‘த மில்லியன்ஸ்’ நேர்காணலில் டிம் ஓ ப்ரையன்.அவருடைய சமீபத்திய நூலான ‘டாட்’ஸ் டே புக்’கினை ஒட்டி  டேவிட் வார்னோ செய்த நேர்காணலில் 58 வயதில் தந்தையான தன் நிலையினை ஒட்டி, தன் தந்தை தனக்குத் தராத குழந்தைப் பருவத் தோழமை பற்றி, அவருடைய சில கருத்துக்கள் வசீகரமாக இருக்கின்றன.

அவை எழுதப்பட்டு முடிக்கப்படும் கட்டம் வரையும், எந்த ஆக்கமுமே ‘ஒருக்கால் ..’ என்ற நிலையில்தான் இருக்கும்- அது பைபிளோ, போரும் அமைதியுமோ எல்லாமே அப்படித்தான் என்கிறார். நாளை என்பது இருக்கவும் கூடும், இல்லாமலும் போகக்கூடும் என்பதால் எதிலும் நிச்சயமற்ற நிலை ஒன்றே நிரந்தரம் என்றுஅவர் சிந்தனை சொல்கிறது. ஒரு பாட்டிலில் போடப்படும் செய்திகளைப் போல, தான் மகிழ்ந்ததும், அழுததுமான  நினைவுகளை தன் குழந்தைகளுக்கென ஆனால்,காலக்கிரமமற்றுச் சொல்ல விழைந்ததையும் அதை எழுதுகையில் அது என்ன புத்தகம் என்று மகன் கேட்டபோது, தனக்கு அது என்னதென்று சொல்லத் தெரியாது என்று பதில் சொன்னபோது, அவரது இளைய மகன் அதையே தலைப்பாக வைக்கச் சொன்னதாகவும், ’அப்படியும் இருக்கலாம்’ என்று சொன்னதை தலைப்பாகக் கொண்டதாகவும் சொல்கிறார்.

குழந்தைகளைப் பற்றிய பெருமிதங்கள் பெற்றோருக்கு இயல்பிலேயே வந்தாலும்,அந்தப் பெருமிதத்தைப் பற்றி கவனமும் தேவை என்கிறார்.வலிகளும், ஏமாற்றங்களும் கூட பெருமிதத்தைப் போல் கவனம் கோருபவை தான். தேசப் பெருமிதங்கள் கொலை செய்யவும் மனிதர்களைத் தூண்டுவதைச் சுட்டுகிறார். இந்தியாவில் ஒரு நூறு வருடங்களுக்கு முன்னர் தன் மக்களின் பெருமைகளைக் கூறி மெய் சிலிர்ப்பதைத் தவிர்த்த பெற்றோர் இருந்தார்களாம்.

“Going After Cacciato” என்ற அவரது புதினம் கடைசி வார்த்தைக்கு முதலான இரண்டாம் சொல்லாக ‘ஒருக்கால்’ என முடிந்தது. துருவங்களாகப் பிளவு பட்டு இருக்கும் இந்த உலகில்,புலம் பெயர்தல்களும்,சண்டைகளும் பெருகும் இந்தப் பூமியில், உறுதிப் பெருமிதத்தோடு வெளி வரும் ‘சிறு குருவி’ச் செய்திகள் இவரைத் தொந்தரவு செய்கின்றன.

நினைவுகளின் மீட்டலில், முடிந்தவரை நம்பிக்கையுடன் அவர் செய்யும் கட்டமைப்பும்,ஒரு உண்மையைச் சொல்கையில் அதன் ‘செய்த பகுதிகளை’ச் சொல்வதும் அவரது இயல்பாகவும், விருப்பாகவும் இருக்கிறது.நினைவு தட்டுத் தடங்கித்தான் செயல்படும்; எனவே எதையும் அப்படியே சொல்வது என்பது அச் சம்பவத்தின் தன்மையைப் பொறுத்தது என அவர் சொல்வது சிறந்த அழகியல். அவர் சொல்லும் ஒன்று மனதைக் கவர்கிறது.

“என் அம்மா இறந்த செய்தி ஃப்ரான்ஸில் நாங்கள் ஒரு நீண்ட சாலையில் நடந்து கொண்டிருக்கையில் வந்தது. என் குழந்தைகளுக்கு ஏழும், ஐந்துமான வயது. சிறிது பொறுத்துக் கேட்டேன்’பாட்டியை நினைத்துக் கொண்டிருக்கிறாயா?’ என்று. ’நீங்கள் உங்கள் அம்மாவைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பீர்கள் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன்’ என்று பதில் வந்தது.”

உறுதியாக முழுதுமாக எதுவும் நாம் புரிந்து கொள்ளும் வித்த்தில் இருக்க முடியாது என்று தத்துவமும், அறிவியலும் சொல்லிக் கொண்டுதானிருக்கின்றன. ’ஒருக்கால்’இடை நின்று சமாளிக்கிறது. 

https://themillions.com/2019/10/all-books-are-maybe-books-the-millions-interviews-tim-obrien.html  அக் 25,2019.

டிம் ஓ ப்ரையன், அமெரிக்க இலக்கிய விமர்சகர்களின் குழு அளிக்கும் ’நேஷனல் புக்’ விருது பெற்றவர்.

டேவிட் வார்னோ எழுத்தாளர், எடிட்டர், நேஷனல் புத்தக விமர்சகக் குழும அங்கத்தினர்.  

~oOo~

இப்படியும் சில நல்ல மனிதர்கள்

பிரபஞ்சத்தின் பேருண்மையை அறிந்து கொள்ளும் ஆவல் மனித குலத்திற்கு என்றும் இருப்பதுதான்;அதிலும் அறிவியலாளர்கள் விண்ணிலிருந்து வெளிப்படும் ஒலிகளின் சிறு வேறுபாடுகளைக்கூடக் கண்டறிந்து அது தன்னுள் புதைத்துள்ள இரகசியங்களைக் காண முயல்வார்கள்.அப்படிக் கண்டறிந்த ஒன்று அவரை விடுத்து மற்றவருக்கு அந்தப் புகழைக் கொண்டு சேர்க்குமானால் அவர்கள் நொந்து போவார்கள், கோபப்படுவார்கள்,ஆய்வை விட்டுவிடுவார்கள், தட்டிப் பறித்தவர்களைப் பற்றி புறம் பேசுவார்கள். பொது மனித இயல்பு இது.

ஆனால், திருமதி.ஜாஸலின் பெல் பர்னெல் இப்படியெல்லாம் செய்யவில்லை.1965-69-ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் இயற்பியல் ஆய்வு மாணவியாக இருந்த அவர்  வான்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள் போன்றவற்றை ‘வானொலி தொலைநோக்கி’யின் உதவி கொண்டு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இடையேயான பொறிச்சிதறல் வரிசைகளைக் கவனித்து வந்தார். அதற்கு அவர் பயன்படுத்தியது ஐந்துகி மீ நீளமுள்ள வரைபட பதிவேடுதான். இன்றைய நாட்களைப் போல் கணிணி பயன்பாட்டிலில்லை. ஐந்து கி.மீ நடந்து நடந்து பதிவிட வேண்டும்.ஒலியின் அதிர்வலைகள் சன்னமானவை; மேலும், ஒரு குறிப்பிட்ட திசையில் 1.337 வினாடிகள் மட்டுமே பதிவிடமுடியும். முதலில் அது வேற்றுக்கிரக உயிரின ஓசை என்றே நினைத்தார்கள். மற்றொரு திசையிலும் இதே 1.337 வினாடிகளில் பதிவேறிய ஒலியினால் ‘ரேடியோ பல்சார்’ என்ற ‘ந்யூட்ரான் ஸ்டார்’ வகையை இவர் கண்டுபிடித்தார். பலமுறை, பல திசை, அதே ஐந்து கி மீ நடை; அவரது ஆய்வு வழிகாட்டிகளான திரு ஏ ஹவீஷ்,மார்டின் ரைல் இருவருக்கும் இக்கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 1974-ல் வழங்கப்பட்டது. இவரது பெயர் கூட குறிப்பிடப்படவில்லை.

மிக அடர்த்தியான, தன் அச்சில் கன வேகமாகச் சுழலும் ந்யூட்ரான் வெளிப்படுத்தும் மின்காந்த அலைகள் அதிகமானவை.

ஐம்பது வருடங்கள் கழித்து ஜாஸலின் பெர்னெலுக்கு இழைத்த அநீதிக்கு ஈடு செய்வது போல்’ சிறப்பு ‘ப் பரிசாக அவருக்கு மூன்று மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்  வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் செய்தது என்ன தெரியுமா?

‘பெல் பெர்னெல் பட்டப்படிப்பு சிறப்பு உதவித் தொகை’ என்று ஏற்படுத்தி அறிவியல் ஆர்வம் மிகந்த பெண்கள், வந்தேறிகள், அகதிகள், மற்றும் சிறுபான்மையினர்  தங்கள் படிப்பு மற்றும் ஆய்வினைத் தொடர ஒரு நிதி ஏற்படுத்தினார். ’சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.’

ந்யூட்ரான் உருளைகளான பல்சார்கள் ஏன் இத்தகைய கனமிக்க மின்காந்த அலைகளைத் தோற்றுவிக்கின்றன,அதுவும்  தங்களின் துருவப் பகுதிகளிலே,அதுவும் இவ்வளவு வேகத்தில் சுழன்று கொண்டே என்பது இன்னமும் ஆய்வில் உள்ளது.கேள்விகள் உள்ளன, நிதியும் உள்ளது; பதில்கள் நம் வசப்படுமானல் நல்லதல்லவா?

குறிப்புகள்: பானுமதி ந.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.