குருதி வழி

”சார், பெரிய டாக்டர் கூப்புடுராங்க”, நர்ஸ் வந்து அழைக்கும் போது என் கை குழந்தையின் பாதங்களைத் தடவிக் கொண்டிருந்தது. எவ்வளவு மென்மையானவை. இன்னும் தரையை, ஏன் திடப்பொருளையே தொடாதவை. கருப்பையின் திரவத்தை மட்டுமே அறிந்தது. அதைத் தீண்ட அந்த மென்மை போதும் என்பதால்தானோ அப்பாதத்திற்கு அவ்வளவு செம்மை இருக்கிறது. உள்ளே ஓடும் இரத்தத்தை ஒத்த செம்மை. பாதங்கள் மட்டுமா என்ன? மொத்த உடலும் அந்த செந்நிறம் தான். ஆனால் எல்லாம் சில நாட்கள் மட்டுமே. சுற்றியுள்ள இந்த இயந்திர உலகிற்கு அதன் கணித விதிகளுக்கு ஏற்றாற்போல தோலெல்லாம் தடித்து முரடாகி நிறம் மாறிவிடும். 

எழ மனமில்லாமல் என் பார்வை அந்தப் புது உயிரிடமே இருந்தது. மெல்லிய இமைகள் ஒன்றுடன் ஒன்று தொட்டு அணைத்து மூடியிருக்க எங்கிருந்தோ ஒரு சிறு புன்னகை வந்து அந்த உதடுகளில் படிந்தது. அக்கணம் ஏனென்றறியாத ஒரு சிறு நடுக்கம் எனக்குள் எழுந்தது. என்னிடமிருந்து உருவானாலும் நானறியமுடியாத ஒரு உயிரின் முதல் வெளிப்பாடைக் கண்டதன் அதிர்ச்சி அது.

ஒரு சிறு பெருமூச்சுடன் அந்த எண்ணங்களை மெல்ல விலக்கி எழுந்து அறைக்கு வெளியே வந்தேன். வாசலின் இடது மூலையிலிருந்து செல்ஃபோனில் பேசிமுடித்து அத்தை வந்துகொண்டிருந்தாள். முகத்தில் பேத்தி பிறந்த தகவலை உறவினர்களுக்குக் கூறியதன் பூரிப்பு இன்னும் மிச்சம் இருந்தது. தன் பருமன் காரணமாக தொடர்ச்சியாக வியர்க்கும் கழுத்தை சேலை நுனியால் ஒற்றி துடைத்தவாறே “தம்பி, தனபால் அண்ணே கூப்புடுவாரு. காந்திபுரத்துல இருந்து எந்த பஸ்ஸுண்னு தெரியலையாம்,” எனக் கூறினாள்.

”நான் கூப்டு பேசிக்கிறேன் அத்த. உள்ள இருங்க. இதா வந்துர்றன்,” வடபுறம் இருக்கும் டாக்டர் அறையை நோக்கி நடந்தேன். சுற்றிலும் சுவர்களில் ஒட்டப்பட்ட பலவகையான‌ மருத்துவ விளம்பரங்களுக்கு மத்தியில் டாக்டர் அமர்ந்திருந்தார்.

”கங்ராட்ஸ் சுந்தர். பொண்ணு நல்ல ஹெல்தியா இருக்கா. 3.6 கிலோ. கரெக்டான நேரத்துல டெசிஷன் எடுத்தாச்சு. கழுத்துல கொடி மூணு சுத்து சுத்தியிருந்துச்சு. ஒரு நிமிஷம் ஸ்டன் ஆயிட்டேன். நல்ல வேளை,” கண்ணாடிக்கு பின்னிருந்த கண்கள் ஒரு கணம் ஆச்சரியமும் பெருமிதமும் காட்டி மறைந்தது. 

டாக்டரின் முகத்தைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். முகத்தில் எந்த நடிப்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியென்றால் உண்மைதானா? காசுக்காக பண்ணவில்லை போலும். நன்றாக கஞ்சி போட்ட வாயில் புடவைத் தலைப்பை நளினமாக முன்புறமாக பிடித்துக் கொண்டே எழுந்து அருகிலிருந்த மேஜை டிராயரைத் திறந்து ஒரு வண்ண அட்டையை எடுத்துக் கொண்டு வந்தார்.

”உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. கேள்விப்பட்டிருப்பீங்க. ஸ்டெம் செல்லோட முக்கியத்துவத்தப் பத்தி. உங்க குழந்தங்கிறது உங்க ரெண்டு பேரு சம்பத்தப்பட்டது மட்டும் இல்ல. பல தலைமுறையோட தொடர்ச்சி அதுல இருக்கு. பரம்பரையா வர்ற வியாதிகளையும் உயிருக்கு ஆபத்தான நோய்களையும் இது மூலமா குணப்படுத்திறலாம். பிரஸர்வ் பண்ணி வச்சுக்கிறீங்களா?”

”இல்ல. அது வந்து…. யோசிச்சு சொல்றேன் டாக்டர்,” தயங்கிய குரலில் கூறினேன். வேண்டாம் என்பதை வேறு சொல்லில் கூறமுயன்றேன்.

டாக்டர் புத்திசாலி. குரலில் இருந்த தயக்கத்தை உடனே புரிந்து கொண்டு விட்டார். முகத்தில் சின்ன சிரிப்புடன் “இல்லன்னா நீங்க டொனேட் பண்ணலாமே. நிறைய பேங்க்ஸ் இருக்கு. பின்னாடி தேவைப்பட்டுச்சினா உங்க ஐடி நம்பர் சொல்லி யூஸ் பண்ணிக்கலாம். அப்ப பே பண்ணாப் போதும்.” கையிலிருந்த அந்த அட்டையை என் முன்னால் நீட்டி கூடவே ஒரு வங்கியின் அப்ளிகேஷன் ஃபார்மையும் கொடுத்தார்.

அதுவரை வாசலில் நின்றிருந்த வங்கிப் பிரதிநிதி நான் அந்தப் படிவத்தை வாங்கியதும் அருகில் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு அதை நிரப்ப உதவினார்.

மீண்டும் அறைக்கு வந்த போது வாணி முழித்திருந்தாள். வீங்கிய முகத்தில் கண்கள் இன்னும் உள்ளே சென்றிருந்தன. முகத்தில் ஆசுவாசமும் வலியும் கலந்த ஒருவிதமான களைப்பு இருந்தது. அதில் குழந்தையைப் பெற்ற பூரிப்பையும் அடிவயிற்றுத் தையலின் வேதனையையும் காண முடிந்தது. காய்ந்த வியர்வையால் முன்னெற்றியில் மயிரிழைகள் இணைந்து கற்றைகளாக படிந்திருந்தன. மெல்ல அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். எந்த ஆறுதல் சொற்களை கூற நினைத்தாலும் அது அபத்தமாகவே பட்டது. தயக்கத்துடன் அவள் கைகளை மட்டும் பிடித்துக் கொண்டேன். காரணமில்லாமல் ஒரு குற்றவுணர்வு என்னுள் எழுந்தது. திடுக்கிட்டு அதற்கான காரணத்தைத் துழாவினேன். எதுவும் கிடைக்கவில்லை. இருந்தும் அந்த உணர்வு மட்டும் வலுவாக இருந்தது. ஏன்? ஆண் என்பதாலேயே வரும் உணர்வா அது? 

குடும்ப வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் கவனமாக எந்த ஆதிக்கமும் என்னிலிருந்து எழாமல் தவிர்த்து அனைத்திலும் அவளை சமமாகவே நடத்தி வந்தேன். இருந்தும் மேல் கீழ் குறித்தான ஒரு இறுக்க உணர்வு எங்கள் இடையில் இருந்தது. என்ன்னையும் மீறி என் உடல் மொழியில் அது வெளிப்பட்டதா? பதின்வயதில் பெண்களின் மார்பகங்களில் இருந்து பார்வையை விலக்கி முகத்தை மட்டுமே நோக்கி அவர்களிடம் பேச மிகவும் முயல்வேன். இருந்தும் அப்பெண்களுக்கு அது தெரிவது அவர்கள் கண்களில் வெளிப்படும். இயல்பாக கை சென்று துப்பட்டாவை சரி செய்யும். அது போலத் தானா இதுவும்? தெரியவில்லை.

அறையினுள் ஒரு புது நிழல் அசைய திரும்பி நோக்கினேன். முகத்தில் மகிழ்ச்சி வழிய அண்ணா என்னருகில் வந்தான். மகிழ்ச்சியில் நிலையழிந்து அவன் உடல் அதிர்ந்து கொண்டிருப்பதை அருகில் உணர முடிந்தது. மின்விசிரியின் காற்று வேகத்தால் அவன் மல்வேஷ்டியின் நுனி என் காலில் உரசியது. ஒரு தழுவல் போல. எனக்கும் என் அண்ணணுக்கும் ஆறு வயது வித்தியாசம். எந்த உணர்வையும் நேரடியாக வெளிப்படுத்திக் கொள்ள மாட்டோம். ஒரு புன்னைகை அல்லது ஒரு தலையசைப்பு. அவ்வளவுதான். அரிதாக தொடுதல்கள். முதன்முதலில் எனக்கு வேலை கிடைத்த போது எனது தோள்களை அணைத்து அழுத்தினான். அது தான் அவனின் உச்சபட்ச வெளிப்பாடு. 

”அறுப்புக்கு கலிங்கப்பேரி போயிட்டு இருந்தேன். இங்க ஆஸ்பத்திரியில சேத்த தகவல் கேட்டு கெளம்பிட்டேன். அம்மாவாச 12 மணி வர இருந்துச்சே?”

”இல்ல இப்பத் தான். 1:30 மணிக்கு. வெள்ளன இருந்தே வலி இருந்துச்சு. பொறுத்துப் பாத்துட்டு வேற வழி இல்லன்னுட்டாங்க. குழந்தைய எடுக்கறப்போ கழுத்துல கொடி சுத்தியிருக்கு அதுனால தான் போல.”  

சொல்லும் போதே மனதில் சுருக் எனப் பட்டது. மனம் எதை தவிர்க்க‌ நினைக்கிறதோ அதையே தொடும் விந்தையை எண்ணிக் கொண்டேன். குழந்தை பிறக்கும் போராட்டத்தை அதன் வலியை அண்ணனை விட யாருக்குத் தெரியும். சுரேந்தரின் பிறப்பு அவனின் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அவன் பிறந்ததிலிருந்து தான் ஜனனி அண்ணியின் உடல் இன்னும் மோசமாக மாறியது. முதல் கரு உண்டாகி கலைந்ததிலிருந்தே அண்ணி நலிவடையத் துவங்கிவிட்டாள். சுரேந்தர் வயிற்றில் இருக்கும் போதே முகத்தில் ஒளி மங்கத்துவங்கிவிட்டது. சரஸ்வதி பூஜைக்கான தொடர் கல்லூரி விடுமுறை நாட்களுகளில் ஊருக்கு சென்ற போது ஒரு கணம் வாசலில் அமர்ந்திருப்பது யாரென்றே இனம் காணமுடியவில்லை. நரம்போடிய கைகால்கள் சுள்ளிகளாக படிக்கட்டுகளில் படிந்திருக்க வயிறு மட்டும் புடைத்து முன்நீட்டி நின்றது. பெரும் எடையைத் தூக்குபவர் போல மூச்சடக்கி கழுத்து நரம்புகள் புடைத்து மேலெழ உந்தி எழுந்து நின்றாள்.

“பாத்ரூம் போணுமா? உள்ள வெந்நீ வெளாரி வச்சுருக்கேன். ஒரு ரெண்டு போணி மேலுக்கு ஊத்திவிட்டேன்னா உடம்பு கொஞ்ச‌ம் சொடக்கு எடுத்து விட்ட மாதிரி இருக்கும்” கையில் மசித்துணியும் காலி பாத்திரமுமாக‌ அண்ணா வாசலுக்கு வந்தான். வெளிக்கதவைத் திறந்து நான் உள்ளே வருவதைப் பார்த்து தன் வழக்கமான சிரிப்பைத் தந்தான். மெல்ல அசைந்து அண்ணி பாத்ரூம் பக்கம் செல்ல அண்ணன் வலப்புற‌மூலையில் இருந்து சின்ன பீடத்தை எடுத்து குளியறையில் வைத்து விட்டு வந்தான்.

“அம்மா செவல்பட்டித் தெரு வரைய போயிருக்காங்க. சீதாக்காப் பேத்திக்கு குடலேறியிருக்கும் போல. தட்டிவிடக் கூப்டாங்க”

“ம்..”

குளியறையில் பீடம் இழுபடும் சத்தம் கேட்க இருவரிலும் மெல்லிய இறுக்கம் உருவானது. மாலை வெயில் ஜன்னல் வழியாக விழ அவன் முகம் தீப்பற்றியது போல இருந்தது. சன்னமாக அண்ணாவின் குரல் கேட்கத் தொடங்கியது.

“நேத்து வனஜா டாக்டர்ட்ட காட்டீட்டு வந்தோம். உடம்புல சத்து கம்மியா இருக்குதாம். சூதானமா பாத்துக்க சொன்னாங்க. ரொம்ப பேருக்குத் தெரியாது. முதல் கரு கலஞ்சப்ப 5 மாசம். ரத்தப்போக்கு ஜாஸ்தியாகி ஆஸ்பத்திரியில சேத்தப்போதான் தெரிய ஆரம்பிச்சது. பொம்பளங்களுக்கு இந்த மாதிரி மாசமாயிருக்கிறப்பத் தான் உள்ளெ இருக்குற பிரச்சன வெளிய வருமாம். கிட்னில சின்னதா வீக்கம் இருந்துருக்குது. இதுல ஜாஸ்தி ஆயிருச்சு.”

மேலும் சொல்ல வந்தவன் வார்த்தை தேடி சிக்காமல் அதை அப்படியே விட்டுவிட்டான். உதடு மட்டும் மெல்லமாக அசைந்து கொண்டிருந்தது. சுற்றியிருக்கும் கண்ணுக்குப் புலப்படாதவர்களிடம் மட்டும் பதில் சொல்வதைப் போல.

ஒரு கணம் கேட்க வந்தவன் அப்படியே அடக்கிக் கொண்டேன். அண்ணிக்கு இது தெரியுமா?. ஒரு வாரிசுக்காக அவளை பலி கொடுக்கிறாயா?. சீக்காளி போய் சேர்ந்துவிட்டால் தனக்கு கடைசி காலம் வரை ஒரு மகன் வேண்டும் என்பதற்காகவா?. ஆனால் அந்த வயதில் எதுவும் கேட்கத் தோன்றாமல் திரும்பி அறைக்குள் சென்று விட்டேன். அண்ணன் கொடியிலிருந்த துண்டை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி சென்றான்.

அன்றிலிருந்து அந்த நினைப்பை என்னால் அகற்றவே முடியவில்லை. எனக்கும் அண்ணாவிற்குமான இடைவெளி இன்னும் அதிகமாகியது. சுரேந்தர் பிறந்த எட்டு மாதத்தில் அண்ணி வலிப்பு வந்து இறந்து போனாள். ஒடுக்கு விழுந்த கன்னங்களும் துருத்திய கழுத்தெலும்புகளுமாக படுக்கையில் கிடத்தப்பட்ட அண்ணியின் காட்சி மனதில் நெடுநாள் இம்சித்து வந்தது.

ஒருவேளை என் மனைவியை இறந்த என் அண்ணியின் இன்னொரு வடிவமாகப் பார்க்கிறேனா? அதனால் கவனமாக அவளை நடத்துகிறேனா? ஆனால் காலம் என்னைச் சோதிக்கிறது. சுகப் பிரசவம் ஆக எத்தனை எத்தனை பிரயத்தனங்கள். யோகா முதல் மாலை நடை வரை விதவிதமான தயாரிப்புகள். இதோ இப்போது அனைத்தையும் தாண்டி இந்த அறுவை சிகிச்சை. எனக்கு நன்றாகத் தெரியும் கத்தி பட்ட உடம்பு மீண்டும் பழைய நிலைக்கு வருவது கடினம். தெரிந்தே இன்னொரு முறை இது நடக்க வேண்டாம். எதுவாயினும் மற்றொரு குழந்தை எனக்கு வேண்டாம். என் மனைவியே ஆசைப்பட்டாலும் சரி. அதுதான் இறந்த அவருக்கு என் சார்பில் செய்யும் ஒரு பிழையீடு. அதுதான் இதோ இங்கு நின்றிருக்கும் இவனின் தம்பியாக நான் செய்யக்கூடியது.

என்னை உரசிய வேட்டியை மெல்ல இழுத்து விட்டுக் கொண்டு அண்ணன் தொட்டில் அருகில் சென்றான். தன் காய்ந்து தடித்த விரல்களால் குழந்தையின் நெற்றியை மெல்ல வருடினான். அந்தக் கணம் உள்ளே ஒன்று கரைய அவன் தொண்டைக் குழி ஏறி இறங்கியது. மெல்லக் கனைத்துக் கொண்டு வாசலருகே சென்றான்.

அப்போது உள்ளே வந்த உறவினர்களை அத்தை புன்னகையுடன் வரவேற்றாள். சிரிப்புகள், கொஞ்சல்கள், விசாரிப்புகள் என அறையின் குரல்களின் ஒலி பெருகின. அங்கிருக்கப் பிடிக்காமல் மெல்ல நகன்று வெளியே வந்தேன். சுவரோரம் போடப்பட்ட பெஞ்சு விளிம்பில் அண்ணன் இரு கைகளையும் அழுத்தி கண்கள் நிலம் நோக்க அசைவிழந்து அமர்ந்திருந்தான். அருகில் போய் நான் நின்றதும் மெல்ல தலைத் தூக்கி என்னைப் பார்த்தான். கண்களில் நீர்த்திரையின் படலம் ஒளிபட்டு மின்னியது.

“ரொம்ப சந்தோசம்டா. நமக்குப் பொறக்குற குழந்தங்குறது நம்மோடது மட்டும் கெடையாது. ஒவ்வொரு அறுப்புக்கப்பறமும் சேத்து வெக்கிற வெத நெல்லு மாதிரி. வெளஞ்சத வெச்சு எவ்வளவு வேணா சம்பாரிக்கலாம். காரு பெளேனுல போகலாம். ஆனா அடுத்த நடவு அந்த நெல்ல வச்சுத் தான். ஏன்னா அந்த ஒவ்வொரு நெல்லுக்குப் பின்னாடியும் ஏகப்பட்ட அறுவடை இருக்கு. ஓவ்வொரு தடவ நடற புது நெல்லுலையும் அந்த மொத அறுவடையோட மிச்சம் இருக்கு. சோறா, காசா, சொத்தா மாறுன மத்த நெல்லுமணிகளோட நெனப்பும் அதுல இருக்கு. நீ எவ்வளவு பட்டினி கிடந்தாலும் ஒன்னோட புது நெல்ல நல்லா வச்சுக்கோ. ஏன்னா நம்மள விட நம்ம புள்ளங்க ரொம்ப பெருசு.” அண்ணனின் கார்வையான குரல் நிதானமாகக் கூறியது.

சற்று நேரம் இருந்துவிட்டு நாளை வருவதாகக் கூறி அண்ணன் வெளியே கிளம்பினான். மீண்டும் அறைக்குள் வந்த போது குரல்கள் ஓய்ந்து முனுமுனுப்பாகியது. குழந்தை தூக்கதிலேயே அதன் செவ்வுதடுகளைக் குவித்து மெதுவாக அசைத்துக் கொண்டிருந்தது. கனவில் அதற்கு யாரோ அமுதூட்டிக் கொண்டிருக்கிறார்கள் போல.

“சார்” என வெளியிலிருந்து ஒரு குரல் கூப்பிட திரும்பிப் பார்த்தேன். அந்தப் பிரதிநிதிதான். ”அட்ரஸ் புருஃப் ஒரு காப்பி வேணும் சார். ஃபார்ம் கூட அதயும் வச்சு சப்மிட் பண்ணணும் சார்.” குரலில் பவ்யம் தொனிக்கக் கேட்டான்.  

சில நொடிகள் அந்த படிவத்தையே இமைக்காமல் பார்த்தேன். ஏனென்றறியாமல் ஒரு புன்னகை உதட்டில் வர சிரித்துக் கொண்டே அடையாள அட்டையை எடுக்க என் பர்ஸைத் திறந்தேன்.

One Reply to “குருதி வழி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.