சுயம்வரம்
எனக்குக் கிட்டாத
எல்லா நற்பேறுகளும் உனக்கு வாய்க்கக் கோரி
அன்றாடம் பிரார்த்தனை செய்தேன்.
எட்டியும் ஊமத்தையும் நிறைந்த என் தோட்டத்தில்
மனோரஞ்சிதமாய் பூத்த மலர் நீ.
உன் வடிவையும் வனப்பையும் கண்டு
அளவிலாப் பெருமை கொண்டேன்.
பற்றாக்குறைகள் பரிகசித்தபோதும்
உனக்குச் சுயம்வரம் நடத்தும்
கனவுகளைச் சுமந்து திரிந்தேன்.
மேலைக்காற்றின் நஞ்சும்
வண்ணத்திரைகளின் மாயங்களும் நிறுவும்
பொய்யுலகை நிஜமென நினைத்தாய்.
நெகிழிப்பூக்களில் தேன் தேடத் துவங்கினாய்.
கசப்பான தருணமொன்றில்
கண்டிப்புக்கும் கடுமைக்குமான நூலிழையை
மறந்துன் கனவுகளை உணர்வுகளை காயப்படுத்தினேன்.
உனக்கு அந்நியமானேன். பறந்துபோனாய்..
மூர்க்கமான அன்பின் முட்டாள்தனத்தில்
நிகழ்ந்தது எல்லாம்.
உன்னைத் தோளில் சுமந்தவன்
நெஞ்சில் சுமக்கிறேன்.
வானவில்லின் வண்ணங்களாயிருக்கட்டும்
உன் வருங்காலமென ஆசீர்வதிக்கிறேன்.
உன்மீது எனக்குப் பகையில்லை.
நீ என் ரத்தம்.
~oOo~

காதறுந்த கதை
பொய்த்த கனவுகளை
நினைத்து வருந்தும் ஒரு நேரம்
எல்லோர்க்கும் வரும்.
அப்போது மேலே பார்த்தால்
வெர்டிகோ வரும்.
கீழேயும் சுற்றிலும் பார்க்கவேண்டும்.
அரசுத்துறையில் பணியில் சேர்ந்த
யுவனொருவன் கிழவனாகும்வரை
அவன் வேலை நிரந்தரமாகவில்லை.
ஊர்ஜிதமான பதவியும்
ஊதிய உயர்வும் உனக்குண்டு.
பத்து வெள்ளைத்தாள்களில்
மொட்டைக் கையெழுத்திட்டு
தலைவனிடம் தந்து
ஒருவன் அமைச்சராகிறான்.
பத்தில் ஒன்று ராஜினாமாக் கடிதமாக
அவன் தலைமேல் தொங்கிக்கொண்டிருக்கும்.
அதைத்தான் டெமாக்கிள்சின் கத்தியென்கிறார்கள்.
அதுபோல் அபாயம் எதுவும் உனக்கில்லை.
பரிதி தொலைந்ததுபோல்
பதவிஉயர்வு கிடைக்கவில்லையென்று புலம்புகிறாய்.
குவைத் நகரத்தில் நான் சந்தித்த ஒருவன்
என் நினைவுக்கு வருகிறான்.
அவனுக்கு ஒற்றைக்காதுதானிருந்தது.
மற்றொரு காதைப்பற்றிக் கேட்டேன்.
சதாம் உசேனின் கொடுமைகளில் ஒன்றாய்
தன் காதறுந்த கதையைச் சொன்னான்
அதிலென்ன சிறப்பென்றால்
அறுந்த காதை நினைத்து அவன் அழவேயில்லை. –