காணாமல் போனவர்கள்

 “மணி 12 ஆயிருச்சே, சூடாமணி வந்துருவானே”, பதட்டத்துடன் சாப்பாட்டுக் கேரியரை நிரப்புவாள் அம்மா. கீழ்த்தட்டில் சோறு, மேலே குழம்பு, பொரியல், அதற்கு மேலே மோர், பொரியல் தட்டில் குட்டிக் கிண்ணத்தில் துண்டு ஊறுகாய். கூடையில் ஜம்மென்று போய் அமரும் சாப்பாட்டு கேரியர். விசேஷ நாட்களில் இரண்டு அப்பளமும் சேர்ந்து கூடைக்குள் ஒளியும்.

12 மணி அடித்து நிற்பதற்குள் வேர்த்து வடிந்து ஓடி வரும் சூடாமணி, வங்கி ஊழியர்களுக்குச் சாப்பாடு எடுத்துப் போகும் வேலை செய்பவர். எங்களுக்கு எல்லாம் சூடாமணி அண்ணன். எனக்கு இன்னும் நெருக்கம். எல். கே. ஜி படித்துக் கொண்டிருந்த  என்னை பள்ளியில் இருந்து மாலை வேளைகளில் வீட்டுக்குக் கூட்டிச் செல்லும் சைக்கிள் சாரதி.

டிபன் கேரியர்கள் வைத்துச் செல்வதற்கு என்று பெரிய கேரியர் வைத்த சைக்கிள் எடுத்துக் கொண்டு வரும் சூடாமணி அண்ணனுக்கு நான் மிகவும் செல்லம். “ரோடே தெரியல. எனக்கு வேடிக்கை பார்க்கணும்”, என்று நான் கண்ணைக் கசக்கினால், என்னைச் சாலையைப் பார்க்க உட்கார வைத்து ஒரு கையால் என்னையும் பிடித்துக் கொண்டே லாவகமாக சைக்கிள் ஓட்டுவார்.

மழை என்றால் எங்கள் இருவருக்குமே உற்சாகம் பிய்த்துக் கொள்ளும். முடிந்த வரை சைக்கிளை மெல்ல ஓட்டி, முழுவதுமாக நனைந்து வீட்டிற்குள் வரும் எங்களை முறைத்துக் கொண்டே நிற்கும் அம்மாவைச் சிரித்தபடி சமாளிப்பார், “லேசா தானன்னு நனைஞ்சிட்டோம், பெரிய மழை இல்லக்கா”, என்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி கிளம்புவார்.

ஆண்டுகள் கடந்தாலும், சில சைக்கிள் மணிச் சத்தங்களிலும், சில மழைச் சாயங்காலங்களிலும் அந்த அண்ணனின் ஞாபகம் வந்து போகும். அப்படியே சிந்தனைச் சங்கிலி நீண்டு போகும். சூடாமணி அண்ணன் இப்போது என்ன செய்து கொண்டு இருப்பார், வேறு வேலை கிடைத்திருக்குமா, வேறு ஊருக்குப் போயிருப்பாரோ என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.

ஊர் மாற்றலாகி வந்த பின், அப்பாவே காலையில் கேரியர் எடுத்துச் சென்று விடுவார்கள். எனில், இதுவரை சாப்பாடு கொண்டு சென்ற அண்ணன்கள், பாட்டிகள் எல்லாம் அதன் பிறகு என்ன ஆனார்கள்? ஏன் இவ்வளவு நாள் யாருமே அவர்களைத் தேடவில்லை?

நமது தேவைகளுக்கு நாமே ஒரு தீர்வு காண்பதென்பது நல்ல விஷயம் தான். அதற்காக எளிமையானவர்களை ஏன் ஒதுக்க வேண்டும்? நாகரிக வளர்ச்சியில் இவ்வளவு இடைவெளிக்குப் பின், இணையத்தில் பதிவு செய்து தருவித்துக் கொள்ள உடனடி சாப்பாடு இப்போதெல்லாம்.

இப்படிக் காணாமல் போனவர்கள் பட்டியலை யோசித்தால் எத்தனை மனிதர்களை நாம் உண்மையில் தொலைத்து இருக்கிறோம்? குடுகுடுப்பைக்காரர்கள், மோர்-தயிர் விற்றவர்கள், காய்கறி-கீரைக் கூடை சுமந்து வந்து விற்ற பாட்டிகள், தையல் இயந்திரங்கள் தள்ளிக் கொண்டு வீட்டிற்கே வந்தவர்கள், சாணை பிடிப்பவர்கள்  இன்னும் எத்தனை பேர்.

நம் வீட்டை நாமே கட்டுகையில் இருந்த சித்தாள்களும், கொத்தனார்களும் கிரகப்பிரவேச பந்தியில் நிச்சயம் இருந்தார்கள். வயிறார உண்டு, நாம் அந்த வீட்டில் நிலைத்துச் செழித்து வாழ வாழ்த்திச் சென்றார்கள். அதனால் தான் அந்த வீடுகளில் உயிரோட்டம் இருந்தது போலும். இப்போதெல்லாம் ஆயத்த வீடுகள் தான்.

முன்பெல்லாம் துணிகளை வெளுத்து வீட்டிற்குக் கொண்டு வந்து தருபவர்கள் இருந்தார்கள். என் அப்பா கசங்கிய சட்டை அணிந்து நான் பார்த்ததே இல்லை. எங்கள் வீட்டின் துணி வெளுப்பிற்கு வரும் தம்பதியரில் இருவரின் பெயரும் “தங்கம்”. சலவைத் துணிக் கணக்குக்கென்று ஒரு குறிப்பேடு இருக்கும். தேதி வாரியாக வெளுக்கக் கொடுக்கப்பட்டத் துணிகளும்  எண்ணிக்கைகளும் குறித்து வைக்கப்படும். அந்த குறிப்புகள் எடுக்க ஏனோ எனக்கு மிகவும் பிடிக்கும். சலவை செய்து வந்த பின், அவற்றைச் சரிபார்த்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். “ஒரு சேலையைக் காணோமே தங்கம்,” என்று அம்மா கேட்டால் திடுக்கிட்டுப், பின் தலையைச் சொறிந்து கொண்டே “அடுத்த தடவை வரப்ப எடுத்துட்டு வாரேன்மா”, என்பார்.

இவர்கள் வீட்டு விசேஷத்துக்கு எல்லாம் நாம் போனால் மரியாதை தூள் பறக்கும். ஒரு குட்டி இளவரசியை வரவேற்பது போல் தடபுடல் செய்து விடுவார்கள். கூச்சமாக இருக்கும். இருந்தாலும் அந்த அன்பு நம்மை நெகிழ வைக்கும்.

ஊர் மாற்றலாகிச் சென்னை வந்த பின் திருநெல்வேலி வந்தாலும் அவர்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு திருமண வீட்டில் தூரத்தில் அவர்களை பார்த்தவுடன் என்னோடு என் மனமும் குதித்துக் கொண்டு அவர்களிடம் ஓடிச் சென்றது. என்னிடம் அம்மா, அப்பா, அக்காக்கள் பற்றி விசாரித்துக், கண்கள் பனிக்க நின்று கொண்டே இருந்தனர். நினைத்தாலும் பார்க்க முடியாத இடம் சென்று விட்டனர் இப்போது.

வெளுப்புத் தொழில் இப்போது “ட்ரை கிளீனர்ஸ்” என்றாகி விட்டது. எனினும் வீட்டிற்கே வந்து சென்ற அந்த மக்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் நமக்காகத் தான் உழைத்தார்கள். நாம் கொடுத்த சம்பளம் மட்டுமா அவர்களை நம் மீது பாசம் கொள்ள வைத்தது? பணத்தையும் மீறி அந்த எளிமையான மனிதர்களிடம் நாம் பழகிய நாள்கள் எவ்வளவு நிறைவாய் இருந்தன?

கழிவறைச் சுத்தம் செய்வதற்கெல்லாம் ஆள் தேவை இல்லை என்று சொன்னாலும், “மாசத்துக்கு இருவது ரூவா போதும் ராசா”, என்று வரும் பாட்டியின் மேல் பினாயிலை மீறி வெற்றிலை வாசம் வரும். காவி ஏறிய சில பற்கள் மட்டுமே  இருக்கும் சிரிப்பை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இருபது ரூபாயுடன் ஒரு கவுளி வெற்றிலை கொடுத்தால் கண்களும் பற்களும் மினுங்கும். எத்தனை சொன்னாலும் பாட்டி பின்புற வாசல் வழியே தான் வருவார்கள். “புறவாசக் கதவை திற தாயி”, என்ற சத்தம் வந்தால் நான் தான் முதலில் ஓடுவேன். வேலை முடிந்து, ஆசுவாசப்படுத்த சிறிது நேரம் புறவாசல் படிகளில் அமர்ந்து இருக்கும் பாட்டியுடன் ஊர்க் கதைகள் பேசுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு. ஏதாவது சின்ன நகைச்சுவை என்றாலும் உரத்துச் சிரிப்பார் பாட்டி. இப்போதுள்ள எண்ணியல் படக்கருவி (டிஜிட்டல் கேமரா) அப்போது என்னிடம் இருந்திருந்தால் கரும் மினுமினுப்பில், தோல் சுருங்கிய, அந்த அரைகுறைப் பொக்கை வாய்க் கிழவியின் புகைப்படங்களை கவிதைகளாய் வடித்து இருப்பேன்.

பாட்டி, தாத்தாக்கள் எங்கு இருந்தாலும் அழகு தான். அதிலும் பேருந்துப் பயணங்களில் தெரியாத பாட்டி என்றாலும் அவர்கள் அருகில் அமர்ந்து சென்றால் முருகன் மயிலேறி உலகைச் சுற்றி வந்த அனுபவம் நமக்கு கிட்டும். ஒரு முறை மதுரையில் இருந்து திருநெல்வேலிக்குப் பயணித்துக் கொண்டிருந்த போது என்னருகில் அமர்ந்து இருந்த பாட்டி நடத்துநரிடம் சண்டை போட ஆரம்பித்தார். “ஐயோ பாட்டி, சொன்னா புரிஞ்சுக்கங்க”, என்று நடத்துநர் எவ்வளவோ கெஞ்சியும் பாட்டி விடுவதாக இல்லை. விசாரித்தால், பாட்டி ஏறிய இடத்தில் இருந்து கங்கைகொண்டானுக்கு ஒரு பயணச் சீட்டுக்கு பதில் இரண்டு பயணச் சீட்டுகள் கொடுத்து விட்டாராம் நடத்துநர். படிக்காத தன்னை ஏமாற்றி விட்டதாக புலம்பித் தள்ளிய பாட்டியிடம் பொறுமை இழந்த நடத்துநர், “ஒரு டிக்கெட் தான் கிழவி.மொத்தம் பதினஞ்சு ரூபா. பத்து ரூபா டிக்கெட் ஒண்ணு, அஞ்சு ரூபா டிக்கெட் ஒண்ணு”, என்று திட்டியும் பாட்டி ஒத்துக் கொள்ளவே இல்லை. நானும் மற்றும் சில பயணிகளும் இடையிட்டு சமாதானப் படுத்தினோம். இருப்பினும், இறங்கும் போதும் நடத்துநரை முறைத்துக் கொண்டே இறங்கிய பாட்டியை இன்னும் நினைத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு களைப்பான பயணம் என்றாலும், பயணத்தைக் களைகட்டச் செய்வது சக மனிதர்களின் உரையாடல்கள் தானே. வெளிநாட்டுப் பேருந்து பயணங்களுக்கு ஈடாகி விட்டது நம் இப்போதைய நகரப் பேருந்துப் பயணங்கள். காதில் மாட்டிக் கொண்ட கைபேசி வழியான உரையாடல்கள் மட்டுமே.

வெளியூர்ப் பயணங்கள் முடிந்து விடியற்காலையில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய நம்மை ஊர்க் காற்றும், நலம் விசாரிப்புகளும் தானே வரவேற்கும். “எக்கா, வந்துட்டிங்களா”, என்று அம்மாவிடம் கேட்க ஆரம்பிக்கும் அத்தை ஊரில் உள்ள சொந்தபந்த நலம் விசாரித்து, இங்கு நடந்த அனைத்துக் கதைகளையும் பேசி நம்மை வீட்டுக்கு அனுப்பும் போது நண்பகல் ஆகி இருக்கும். அப்போதும் பக்கத்து வீட்டு அத்தை, குழம்பும் காயும் தருவார்கள்.

பண்டிகை நாள்களில் பக்கத்துக்கு வீடுகளுக்கும், நம் அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் மனிதர்களுக்கும் சேர்த்துச் செய்யும் பண்டங்கள் கொப்பரைகளிலும் தவலைகளிலும் நிரம்பும். புதுத்துணி உடுத்தி எல்லார் வீடுகளுக்கும் செல்ல வேண்டும். கோலங்களைப் பாராட்ட வேண்டும். பண்டங்கள் செய்யும் முறை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். தீபாவளி என்றால் வெடி போடும் இளசுகளைச் சலித்துக் கொள்ள வேண்டும். பொங்கலுக்கு, “பால் பொங்கியாச்சா” என்று பரஸ்பரம் விசாரித்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ் கேக், ரமலான் பிரியாணி சாப்பிட வேண்டும். நம்முடன் வீட்டிற்கே வந்து பண்டிகைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சாலமன் பாப்பையாவை குடும்பத்தோடு ரசிக்க வேண்டும். அப்பப்பா, என்ன சுகம்!!

உரல் இடிக்க, முறுக்கு சுத்த, அதிரசம் சுட என்று பண்டிகைகளின் போது அம்மாக்களுக்கு உதவ வரும் பெண்கள் அத்தைகளாகவும், ஆச்சிகளாகவும் மாறி இருக்கின்றனர். எங்கள் வீட்டில் சுத்து வேலை பார்க்கும் அத்தையிடம் வீட்டையே ஒப்படைத்து விட்டு நாங்கள் நாள்கணக்கில் ஊருக்குச் சென்று இருக்கிறோம். அப்போது பெரிய விஷயமாகத் தெரியாதது, இப்போது வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

என்னைப் பள்ளிக்குக் கூட்டிச் சென்ற சூடாமணி அண்ணனிடம் கதை பேசியதைப் போல், எந்த வாடகை வண்டி ஓட்டுநரிடமும் என்னால் பேசவே முடிவதில்லை. தினம் ஒரு ஓட்டுநர் என்றாலும் அவர்கள் முகம் பார்த்து சிரிக்கக் கூட முடிவதில்லை யாராலும். உடனடி சாப்பாடு தருவிப்பவரிடம் சாப்பாடும் காசும் மட்டும் இடம் மாறுகின்றன. நட்பான புன்னகைக்கும், நன்றிக்கும் பஞ்சமாகி விட்டது.

எங்கே, எந்த கணத்தில் விழுந்திருக்கும் மனிதர்களுக்குள்ளான இந்த இடைவெளிகள்? இது எங்கே நம்மை இட்டுச் செல்லும்? அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் – இவற்றைத் தாண்டி நாம் மனிதர்களிடம் உரையாடுவதே இல்லை.

மனிதர்களுக்கு மனிதர்கள் மேல் நம்பிகையின்மையும், சலிப்பும் வந்து விட்டன. வாழ்க்கையின் மேல் பெரிய மரியாதையின்மையும், அசட்டுத் துணிச்சலும் நிரம்பி வழிகின்றன. இந்த மரியாதையின்மை தான் மனிதர்களிடம் முகம் திருப்பக் கற்றுக் கொடுக்கிறது.

வயதானவர்களைப் பார்த்தால் தெரியும் நாம் இழந்த பண்பையும் மரியாதையையும் பற்றி. தாமிரபரணிக்குக் குளிக்கச் சென்ற எங்களை நாங்கள் கேட்காமலேயே இடம் பார்த்து, “இங்க மட்டும் தான் குளிக்கணும் சரியா? அங்கலாம் சுழல் இருக்கும்”, என கண்டிப்பும் அக்கறையுமாய் சொல்லிச் சென்ற ஆச்சியை சத்தியமாய் நாங்கள் அதற்கு முன் பார்த்ததே இல்லை.

கோடை விடுமுறையில் பதநீர் விற்கும் தாத்தாவின் குரல் மட்டுமே விடியற் காலையில் என்னை எழுப்பும். நான் பல் தேய்த்து, முகம் கழுவி வரும் வரை நின்று கொண்டிருப்பார் தாத்தா. பேத்திப் பொண்ணு வந்தாச்சா என்றபடி பனை ஓலையில் அவர் ஊற்றிக் கொடுத்த பதநீர் இன்னும் இனிக்கிறது.

முன்பெல்லாம் ஒவ்வொரு தெருவிற்குமோ, வளவிற்குமோ ஒரு தாத்தா அல்லது பாட்டி கதை சொல்லிகளாக இருப்பார்கள். ஆவென்று வாய் பிளந்து சிந்தனையைப் பறக்க விட்டுக் கதை கேட்டுக் கொண்டிருப்போம் நாம். இப்போது தாத்தாக்களின் கதையை விடக் கைபேசி தான் சுவாரசியமாய் இருக்கிறது நம் பிள்ளைகளுக்கு.

வாழ்க்கையின் பல மனிதர்கள் காணாமல் போனவர்களாய் ஆகி விட்டதால் தான், பல கதைகளும் காணாமலே போய் விட்டன.

கால ஓட்டத்தில் இவர்களை நடுவழியில் காணாமல் அற்றவர்களாக்கி யாரைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்? ஓட்டப் பந்தயத்தில் இலக்கை அடைந்தவுடன் நாம் தான் முதல் பரிசு என்று பெருமிதமாய் திரும்பி பார்த்தால் பந்தயத்தில் பங்கெடுத்தவர்களில் நம்மைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள் போல!

நான்கு சுவர்களும், கை பேசியும், தொலைக்காட்சியும் தர முடியாத சந்தோஷங்களை ஒரு வெள்ளந்திச் சிரிப்பும் நலம் விசாரித்தலும் நல்கி விட முடியும். மனிதம் மட்டும் காணாமல் போய் விட்டது எனத் தேடிக் கொண்டே இருக்கும் நாம் மனிதர்களையும் தொலைத்துக் கொண்டே இருக்கிறோம். வளரும் தலைமுறையினருக்கு மனிதர்களை பரிசாகத் தருவோம். இல்லையெனில், கற்கால மனிதர்கள் போல் கைபேசி கால மனிதர்களாய் தொடர்பற்றுப் போய் வாழும் நாகரிகம் உருவாகலாம். கவனம் மனிதர்களே, மனிதர்களைத் தொலைத்து விடாதீர்கள் – நாமும் மனிதர்கள் தான்!!

13 Replies to “காணாமல் போனவர்கள்”

  1. அருமையான சொற்றொடர்கள். பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவந்தன. இழந்ததையும் இழக்கவிருப்பதையும் நெகிழ்வுடன் உணர்கிறேன்.

    வளர்க தங்கள் விழிப்புணர்வு எழுத்து பயணம்.

    வாழ்க வளமுடன் 🙏

    1. அருமை. உங்கள் படைப்பு, என் பள்ளி நாட்களை ஞாபகப்படுத்துகின்றன. 1980 களில் பிறந்த அனைவருக்கும் பொருந்தும்! மேன்மேலும் உங்கள் படைப்புகள் சிறப்படைய வாழ்த்துக்கள் சகோதரி.

  2. மிகவும் அருமை. இன்னும் நாம் தொலைத்துவிட்டு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன அதையும் எழுதுங்கள். உங்கள் எழுத்து பயணம் இனிதே தொடங்கட்டும்.

  3. இயந்திர உலகில் நாமும் உணர்ச்சியற்ற இயந்திரமாக மாறிவிட்டோம். உலர் சலவைக் கடையில் ஓரிருவராவது இருப்பர். நவீன கடைகளில் அனைத்தும் தானியங்கிகள். பணம் கூட அட்டைமூலம்தான். மனிதரில்லா துவைத்து உலர்த்தவும் இயந்திரக்கடைகள். மனிதம் மறைந்துவிட்டது. அருமையான கட்டுரை. மிக்க நன்றி.

  4. மிக அருமை பிரசன்னா குமாரி. காணாமல் போனவர்களை கண்டு பிடித்து பார்த்த உணர்வை ஏற்படுத்தியது உன் கட்டுரை. வாழ்த்துக்கள். அழகான. அருமையான உன் கட்டுரைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் உன் விசிறி!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.