இது ஒரு உருவகக்கதை.
இப்படியொரு எச்சரிக்கை சமயப்புத்தகங்களின் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டு இருந்தால், எத்தனை சச்சரவுகளை, சண்டைகளை, சாவுகளை அவை தவிர்த்திருக்கும்!
உலகின் உயிரினங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுடன் ஊடாடி ஒன்றையொன்று மாற்றி அமைத்து ஒரு மாபெரும் அமைப்பாக இயங்குகின்றன என்கிற அறிவியல் கோட்பாட்டை வளர்த்து, அந்தத் தொகுதிக்கு கய்யா என்கிற கிரேக்க பூமாதேவியின் பெயரும் கொடுத்தவர் ஜேம்ஸ் லவ்லாக். எதையும் பிரித்துப்பகுத்து ஆராயும் விஞ்ஞானிகள் இந்தக் கோட்பாட்டை ஏற்கவில்லை. கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் நிகழ்ந்த மாற்றங்களின் தீவிரத்தை மட்டுப்படுத்தி எண்ணற்ற உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்ந்திருப்பதைக் காணும்போது அந்தக்கொள்கை மூடநம்பிக்கையாகத் தோன்றவில்லை. சக்திக்கும், வீரத்துக்கும், கல்விக்கும் பெண்தெய்வங்கள் இருப்பதுபோல, உலகுடன் உறவுகொண்ட உயிர்க்கோளத்தையும் ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தை’யாக (தமிழன்னைக்கும் முன்பாக) வணங்கி வழிபடுவது பண்பாடு.

உடல் முழுதும், பிறகு பிரித்த கருங்கூந்தலின் முழுநீளமும் எண்ணெயில் பளபளத்தன. செக்கில் அரைத்த சுத்தமான நல்ல எண்ணெய். மந்தவெளி என்றாலும் ஒரு தனிவீட்டில் வசிப்பதால் வந்த சௌகரியம். அடுக்குவீடு என்றால் பூமாவும் வேதியியல் பொருட்களின் கரைசலை உடம்பில் அப்பிக்கொள்ள வேண்டி இருக்கும்.
வெள்ளிக்கிழமையை வரவேற்க அவள் தயார்.
தொட்டியின் நீரைத் தொட்டுப்பார்த்தாள். குழாயில் இருந்து பிடித்த நீர். ஆனாலும் அது அவளுக்கே சுட்டது. சுடவைக்காத நீரைத் தண்ணீர் என்று அழைக்கும் வழக்கத்தின் காலம் முடிந்துவிட்டது. அந்த நீர் அவளை குளிரவைக்குமா என்பதும் சந்தேகம். புறங்கையை கழுத்தில் வைத்துப்பார்த்தாள். சூடு தணிந்ததாகத் தெரியவில்லை. சில மாதங்களுக்குமுன் உடல் தகிக்கிறதே என்று வெப்பமானியை நாக்குக்கு அடியில்வைத்து எடுத்தாள். முப்பத்தியேழு-புள்ளி-ஒன்பது. ஞாபகம் வந்தபோதெல்லாம் வெப்பமானிக்கு வேலைவைத்தாள். எத்தனை தடவை அளந்தாலும் முப்பத்தெட்டுக்குக் கீழே இறங்கவில்லை. மனிதர்களின் பொதுவான சராசரியாக சொல்லப்படும் முப்பத்தியேழே அவளுக்கு அதிகம். முப்பத்தி ஐந்தரை அவளுக்கு இயற்கை. க்ரிஷ் காதலனாக இருந்தபோது, “உன்னைத் தொட்டா ஏர்கன்டிஷனுக்கு முன்னால நிக்கற மாதிரி இருக்கு” என்றான். இப்போது அவனுக்கு, அவள் சூரியன் சுட்ட கட்டாந்தரை. அதனால்தான் அவன் அவளைத் தொடுவது நின்றுவிட்டதோ? இல்லை, மானிட்டரில் ஃபோட்டோ-ஷாப்பில் செதுக்கிய பெண்களின் படங்களைப் பார்த்தே அவன் திருப்தியடைகிறானோ?
பூமாவின் முப்பத்தியைந்து ஆண்டு வாழ்க்கையில் பலமுறை ஜுரம் வந்து இருக்கிறது. மூன்று நாட்களுக்குமேல் நீடித்தது இல்லை. ஜுரத்தின்போது ஆஸ்ப்ரினோ இல்லை ஆயுர்வேத மருந்தோ கொடுத்து குறைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை. இந்த தடவை இரண்டையும் மாற்றிமாற்றி ஒருவாரம் சாப்பிட்டாள். ஒரு மாற்றமும் தெரியவில்லை. இப்போதைய சூடு நிரந்தரம். இன்னும் அதிகரிக்கலாம், ஆனால், குளிர்காலம் வந்தாலும் உடலின் வெம்மை குறையும் என்கிற எதிர்பார்ப்பு போய்விட்டது. என்ன செய்யலாம்? வீட்டின் முன்னறையில் மட்டும் குளிர் சாதனம். அதில் இருவருக்கு சுகவாசம். அவர்கள் எழுந்துவருவதற்கு முன்னால் குளியலை முடித்துவிட வேண்டும்.
“மா! போ!” புறங்கையால் ஒரு தள்ளல்.
விவேக்குக்கு அம்மா வேண்டாம். அப்பாவைக் கட்டிக்கொண்டு தூங்குவதில் சுகம். அம்மாவுக்கு அப்பாவின் தழுவலைத் தராமல் தடுப்பது சுகத்துக்கு மேல் ஊற்றிய சர்க்கரைப்பாகு. க்ரிஷுக்கும் அவளை அணைப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டது.
விவேக் என்ற பெயர் பொருத்தம் இல்லை தான், ஆனாலும் பிறப்பதற்குமுன்பே ஆண்குழந்தையென்றால் விவேக், பெண் என்றால் வித்யா என்று தீர்மானித்து, அரிசியில் பெயரும் எழுதியாகிவிட்டது. மாற்ற விரும்பினாலும் என்ன பெயர் தரலாம்? ஸ்வார்த்தம், அஹம்பூர்ணம், மிகப்பொருத்தமாக ஸ்வயமித்ரா…
இரண்டு வயதுவரை விவேக்கின் எதிர்காலத்துக்கான அறிகுறிகள் இல்லை. எட்டு மாதத்தில் நடந்து, பெண் குழந்தைகளுடன் அன்புடன் விளையாடி, இருபது மாதத்தில் ம்மா, ப்பா, பால் என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லத்தொடங்கி…
இன்னொரு ஆறுமாதம் போனதும், பாஸ்டனில் இருக்கும் அத்தை பெண், அத்துடன் அந்தரங்க சிநேகிதி, அனுவிடன் குறைபட்டுக்கொண்டாள்.
“எதிராத்து கீதிகா விவேக்கைவிட மூணுமாசம் சின்னது, என்னமா பேசறது. இவன் இன்னும் ஒரு சிலபல்லியே இருக்கான்.”
“ஆண் குழந்தைகள் பேச்சில நிதானமாத்தான் இருக்கும். அதுவும் வீட்டிலயே வளர்ந்திருக்கான். ப்ரீ-ஸ்கூல்ல போடு! மத்த குழந்தைகளோட விளையாடினா பேச்சு தன்னால வரும்.”
அறிவாளியாக வளரப்போகிறான் என்ற ஆசையில் வித்யாகேந்திரம். விரைவிலேயே காப்பாளர்களின் முறையீடுகள்.
“தானாகவே விளையாடுகிறான்.”
“மற்ற குழந்தைகளுடன் பேசுவதில்லை, உறவாடுவதும் இல்லை.”
“எங்களையும் சரி, மற்ற யாரையும் சரி, நேருக்குநேர் பார்ப்பதில்லை.”
மூன்றாம் பிறந்தநாள். ஸ்பென்சரில் வாங்கிய கேக், நான்கு ரக வறுவல்கள். சுற்றுப்புறத்துக் குழந்தைகள்.
பரிசுப்பொருட்களை மற்ற குழந்தைகள் தொடவிடாமல், அவர்கள் பக்கத்தில் வந்தாலே பலாத்காரமாகக் கீழேதள்ளி… சரி, கேக்கையாவது வெட்டட்டும் என எல்லாரையும் சுற்றி உட்காரவைத்து மெழுகுவர்த்திகளை ஏற்றி… ஊதி அணைக்காமல் அவன் ஒன்றை எடுத்து கீதிகா பக்கம் வீச. நல்லவேளை, அவள் ஆடையில் சின்ன பொசுங்கலுடன் போய்விட்டது.
எல்லாரும் போனபிறகு பூமா அழுத அழுகை. பேச்சிலும் பின்னாளில் படிப்பிலும் பின்தங்கி இருக்கட்டும், பரவாயில்லை. மற்ற குழந்தைகளுடன் ஒத்துப்போகாத குறை ஏன்?
அவன் இயற்கைக்குணம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவந்தது.
மற்றவர்கள் உணர்ச்சிகளை வார்த்தைகள் வழியாகவோ, உடலின் மெய்ப்பாடுகள் மூலமாகவோ புரிந்துகொள்ள அவன் முயற்சிக்கவில்லை. புரிந்தாலும் அவற்றை மதித்து நடக்கும் பண்பு வளரவில்லை. ஆனால், அவன் மனநிலையை வெளிப்படுத்துவதில் ஒருகுறையும் கிடையாது.
அவன் மொழி கத்தல். நுண்மையற்ற இரண்டு வகை. சந்தோஷம். அது திருப்தியில் வரும் ஆனந்தக்களிப்பு இல்லை. கேட்டது கிடைத்ததில், பிறர் விரும்பியது நடக்காமல் போனதில் வரும் எக்களிப்பு. அசட்டுச்சிரிப்புடன் தரையில் இருந்து எம்பிஎம்பிக் குதித்து, ர்ர்ர்ர்… ர்ர்ர்ர்… தான் ஆசைப்பட்டது நடக்காவிட்டால் வருத்தம், மற்றவர்கள் சந்தோஷத்தைப் பார்த்து ஆத்திரம். அப்போது நெடில் உயிர் எழுத்துக்களின் ஊர்வலம். முழங்கையால் குத்தி, பொருட்களைத் தூக்கியெறிந்து, தரையில் புரண்டு.
இப்படி இருக்கும் ஒருவனுடன் எப்படி பேச்சை வளர்க்க முடியும்?
அரைமணி ஆகிவிட்டது என கண்களை இறுக்க மூடிக்கொண்டு சீக்காய்ப்பொடியால் கூந்தலைத் தேய்க்கத்தொடங்கினாள்.
வளர்ந்தபிறகு முதிர்ச்சி யடைவான் என்கிற நம்பிக்கையில் சிலகாலம்.
“மிஷின் தோச்ச துணிகளை தண்ணில அலசிக்கொண்டு வா!”
தண்ணீரை வீணடித்தாலும் அம்மா சொன்னபடி செய்தான். பதின்பருவத்தைத் தொடும்வரை. பிறகு அதுவும் நின்றது. வளர்ந்தது, உடல் வலிமைதான். முழங்கையால் அவன் அம்மாவைக் குத்தும்போது எவ்வளவு வலி.
சமீப காலமாக அவளை அரிக்கும் கேள்வி.
தாய் தன் பிள்ளையைத் தள்ளமுடியுமா?
இது அவள் பிள்ளை என்றால் அவளுடைய குணங்கள் ஏன் அவனிடம் இல்லை?
அவள் கல்லூரியில் சேர்ந்தபோதே தந்தை இறந்துவிட்டார். புதிய ஆடைகள் வாங்காமல், காசு மிச்சம்பிடிக்க கல்லூரிக்கு பஸ்ஸில் கூட பயணிக்காமல் நடந்துசென்று படித்துமுடித்தாள். பட்டம்பெற்றபின் தந்தை பணிசெய்த நிறுவனத்திலேயே கணக்காளர். தன் திருமணத்துக்கு பணம் சேர்த்து, கல்யாணத்துக்குப்பிறகு தான் தன் குடும்பம் என்றில்லாமல் தம்பியின் எதிர்காலத்துக்கு வழிசெய்து, அம்மாவைக் கடைசிக்காலம் வரை கவனித்துக்கொண்டு…
பிறக்கும்போது அவனுக்கு அவள் கொடுத்த க்ரோமோஸோம் காலப்போக்கில் பிறழ்ந்து திரிந்திருந்தால், அவள் பிள்ளை என்று எப்படிச் சொல்லமுடியும்?
போன வெள்ளிக்கிழமை எண்ணெய்க்குளியல் தப்பிவிட்டது, தண்ணீர் இல்லாததால். முந்தைய தினம், குளித்துவிட்டு நீர் சொட்டச்சொட்ட தரையை ஈரப்படுத்தி விவேக் நடந்துவந்தான்.
“சோப்பே போகல. இன்னொரு தடவை உடம்பில தண்ணி கொட்டிண்டு வா!”
“இல்ல.”
“என்ன இல்ல?”
“தண்ணி.”
“எப்படி இல்லாம போகும்?”
குளியலறையில் போய்ப்பார்த்தால் வாளிகளில், தொட்டியில் ஒரு சொட்டு கூட இல்லை.
“ஃபன்.”
“தண்ணியைக் கொட்டி வீணடிக்கறது ஃபன்னா? சரி துண்டால தொடச்சிக்கோ! நாளை வரைக்கும் ஒரு குடம் தண்ணில சமாளிக்கணும்.”
குளித்ததும் பசி. தோசை.
“ஜாம்.”
“அதில ஒரே சர்க்கரை. நீ விழுதுவிழுதா தடவிண்டு சாப்பிடுவே. உடம்புக்கு ஒத்துக்காது.”
“ஜாம்.”
“சட்னிப்பொடி போட்டுக்கோ! எண்ணெய் ஊத்தறேன். சுத்தமான நல்ல எண்ணெய்.”
“ஜாம்ம்ம்.”
அவளுக்கு ஒவ்வொரு ஞாயிறு மாலையும் மூன்றுமணிநேர விடுதலை. மருத்துவரின் ஆலோசனையின் படி விவேக்கின் தொப்பையைக் குறைக்க நீச்சல். அவனைத் தாஜாசெய்து குளத்துக்கு அழைத்துப்போவது க்ரிஷின் வேலை.
அந்நேரத்தில் அனுவுடன் அரட்டை.
கடைக்காரர்களிடம் அரிசிக்கும் அப்பளத்துக்கும் ஆர்டர் சொல்லவோ, க்ரிஷை, ‘எப்போ வர்றே? என்ன சமைச்சுவைக்கணும்? வர்ற வழியில பாங்க்லேர்ந்து பணம் எடுத்துண்டு வரியா?’ என்று கேட்கவோ தொலைபேசியை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தினால் விவேக் குறுக்கிடமாட்டான். உறவு நட்பு என்று அம்மா பேசினால் அவள் குரலின் தொனியில் இருந்து அவனுக்குத் தெரிந்துவிடும், அது சந்தோஷப்பேச்சு. பொறுக்காது. தொலைபேசியைப் பிடுங்கி, ஹாய், குட் பை என்று சொல்லி தொடர்பைத் துண்டிப்பதில் அலாதி மகிழ்ச்சி.
“அனு! பண்டிகைன்னு இன்னிக்கி அதிரசம் பண்ணினேன்.”
“அதிரசம் தின்னு எவ்வளவு நாளாச்சு. அதில இரண்டை ஈ-மெயில் அட்டாச்மென்ட்டா அனுப்பிவைடி!”
இரண்டு மாதங்களுக்குமுன்.
“நான் பாஸ்டன் எர்த் டே வாக்குக்கு போனேன்டி.”
“நல்ல காரியம்.”
“திரும்பிவந்தப்பறம் தான் நிஜமான நல்ல காரியம். எங்க நெய்பர்வுட்ல எல்லா வீட்டுக்கும் எதிரில தெருவுக்கும் புல்தரைக்கும் நடுவில உபயோகப்படாத தரை. அதில குழிவெட்டி ஆப்பில், பேர் மரங்களை நட்டோம். அப்பறம்…”
பேச்சு சுவாரசியத்தில் கார்வந்து நின்றதையோ, கதவைத்திறந்து அப்பாவும் பிள்ளையும் உள்ளே வந்ததையோ, “இன்னிக்கி தண்ணி சரியில்லன்னு பூலை மூடிட்டான்” என்று க்ரிஷ் சொன்னதையோ பூமா கவனிக்கவில்லை. ஆனால், விவேக்கின் பார்வை தப்பவில்லை. அம்மாவின் முகத்தில் அவன் அதுவரை பார்த்திராத பரவசம். யாருடனோ ஆனந்தமாக வம்பளக்கிறாள், அதுவும் அவன் வீட்டில் இல்லாதபோது.
அடுத்த ஞாயிறு மாலை. விவேக்கின் நீச்சல்-பை தயார். க்ரிஷ் காரைக்கிளப்பினான்.
“நோ ஸ்விம்.”
“ஏன்?”
“நோ!”
“திரும்பிவர்றப்ப ஒரு பாவ் பாஜி.”
எப்போதுமே நீச்சல்முடித்து வரும்போது க்ரிஷ் அதை வாங்கித்தருவது தான். அவனை ஏமாற்ற முடியுமா?
“ஒரு மெகா-ஸ்டார்.”
விவேக்கின் பலவீனம். பெயருக்கு ஏற்றமாதிரி அதில் சக்தியை விரயம்செய்த சர்க்கரையும், (மழைக்காடுகளையும் அங்கே தொன்றுதொட்டு வாழ்ந்த ஆதிக்குடிகளையும் அடியோடு அழித்துப் பயிரிட்ட) பாம் விதை எண்ணெயின் கொழுப்பும் எக்கச்சக்கம். ஒரு சாக்லேட் கட்டிக்கு அவன் வயிறு ஈடுகொடுக்கும். இரண்டுக்கு… அதன் பலன்… முன்னால் சொன்ன அதுதான். உள்ளாடையையும் சில சமயங்களில் கழிப்பறைக்கு போகும் வழியையும் அவள் சுத்தம் செய்யவேண்டிவரும். அவன் கைக்கும் பார்வைக்கும் எட்டாமல் அதை ஒளித்துவைக்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பாள். இட்டிலிப்பானை, சீக்காய்ப்பொடி டப்பா…
ஒரு மெகா-ஸ்டாருக்கு அவன் மசியவில்லை.
போனால் போகிறது, அனுவுடன் அனுபவித்துப்பேச ஒரு வாய்ப்பு.
“இரண்டு?”
விவேக் முகத்தில் சலனம்.
சாக்லேட் தரும் இன்பம். அம்மாவின் சந்தோஷத்தைப் பறிப்பதில் வரும் சுகம். அவன் பிறந்தகுலத்தின் சமீபத்திய பரிணாம மாற்றத்தாலும், அந்தக்குலம் முன்யோசனை இல்லாமல் அமைத்துக்கொண்ட பண்பாட்டின் தாக்கத்தாலும் பின்னதுக்கு பலம் அதிகம்.
“ந்நோ!”
நீச்சல் போனதால் இடுப்பில் துண்டுவைத்துக் கட்டியதுபோல சதை.
எண்ணெயும் சீக்காயும் போக குளித்துமுடித்தாள். மெல்லிய துண்டால் துடைத்துக்கொண்டதுமே உடல் உலர்ந்தது. தலைமயிரை விரித்துக்கொண்டாள். நீண்டுதொங்கிய அதன் ஈரம் கூட தொந்தரவாக இல்லை. இன்னொரு நீளமான துண்டை உடலில் சுற்றி, அதை ஒருகையில் பிடித்துக்கொண்டு குளியலறையில் இருந்து வெளியேவந்தாள். சமையலறையின் கதவு சாத்தியிருந்தது. திறந்துவைத்துவிட்டு வந்ததாக ஞாபகம். பின் ஜன்னல் வழியாக வீசிய காற்றில் தானாக மூடிக்கொண்டதோ. தள்ளினாள். அசைந்தது, ஆனால் திறக்கவில்லை. மாட்டப்பட்ட கொக்கியின் ஓசை.
பின்கதவைத்திறந்து வீட்டைச்சுற்றி நடந்தாள்.
முன்னறை ஜன்னலின் கீழ்ப்பாதியை மறைத்து ஏர்கன்டிஷனர். தரையில் எம்பிநின்று கண்ணாடி வழியாகப் பார்த்தபோது கட்டிலில் படுத்திருந்த உருவம். க்ரிஷ்.
“க்ரிஷ்! க்ரீஈஷ்!!”
இயந்திரத்தின் உம்ம்ம் அதை விழுங்கிவிட்டது.
கதவை ஓங்கித்தட்டினாள். அதுவும் அவனை அசைக்கவில்லை. தூக்கம் வரவழைக்க லுனெஸ்டாவை விழுங்கியிருக்க வேண்டும்.
விவேக்? அவன் நடுக்கூடத்தில் இல்லை.
சமையலறை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள்.
தரையில் உட்கார்ந்திருந்த விவேக். அவனுக்கு ஒரு பக்கம் ஸ்டூல், இன்னொரு பக்கம் ப்ரஷர் குக்கர் வந்த பெட்டி. முன்னதில் ஏறிநின்று சாமான் தளத்தில் இருந்து பின்னதை எடுத்து. அவனுக்கு அது எப்படித் தெரிந்திருக்கும்? முந்தைய தினம் அவனுக்கு எடுத்துக்கொடுத்தபோது அவன் மறைந்துநின்று கவனித்துவிட்டானோ?
தரையில் இரண்டு மெகா-ஸ்டார் நட்சத்திர உறைகள். முகத்தில் பரவசம். அசட்டுச்சிரிப்பு. இரண்டுமுறை எம்பிக்குதித்தான். ர்ர்ர்ர்… ர்ர்ர்ர்…
“விவேக்! கதவைத்திற!”
அவன் திரும்பிப்பார்த்தான். அம்மாவின் வார்த்தைகள் காதில் விழாவிட்டாலும், அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்துகொண்டு, அதன்படி செய்தால் என்ன நடக்கும் என்று தெரிகிற அளவுக்கு மூளை வேலைசெய்தது.
பெட்டியில் இன்னும் மூன்று கட்டிகள் மிச்சம். அவற்றையும் விழுங்கிக் காலிசெய்தபிறகு…
“விவேக்! பின்கதவைத்திற!”
அவன் அசையவில்லை. அது அவள் பொறுமையின் எல்லை.
இயற்கையின் மாற்றங்களில் பல வேகமான திருப்பமுடியாத நிகழ்வுகள்.
புலியின் முன்கால் கீறலில் இதயத்துடிப்பும் உடலின் இயக்கமும் இழக்கும் மான். கருமுட்டையை முற்றுகையிட்டு சில நிமிடங்களில் அந்தக்கோட்டைக்குள் புகுந்து அதன் வளர்ச்சியைத் துவக்கும் ஆண்கரு.
அவள் தீர்மானித்துவிட்டாள்.
விருப்பப்பட்டால் தன்னுடைய கழிவுகளில் இருந்து தானே விடுபட்டு தன்னை அவன் சுத்தம் செய்துகொள்ளட்டும்!
பிரசவத்தின்போது வெட்டியது பௌதீக நஞ்சுக்கொடி. இப்போது வெட்டப்போவது காலம்காலமாக வந்த பாசக்கயிறு.
வெளி வாசலுக்கு வந்தாள். கான்க்ரீட் தரையின் ஓரத்தில் ஒரு சதுர ஓட்டை. அதில் வேர்விட்டு வளர்ந்த நித்தியமல்லி. ஆசையுடன் பார்த்தாள். பிறருக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு உயிரினம். அதை அணைத்து அதன் பூக்களை முகர்ந்து அதற்கு விடை சொன்னாள்.
ஒருகையால் கதவைத்திறந்து தெருவுக்கு வந்தாள். சூரியோதயம் தொடங்கிவிட்டது. போக்குவரத்து சற்றே குறைந்த நேரம்.
சென்னையின் சாலையில் ஒரு பெண் கூந்தலை விரித்து ஒரு துண்டில் உடலின் அந்தரங்கத்தை மறைத்து நடப்பது ஆச்சரியம் இல்லை. இருந்தாலும் இருபத்தியோராம் நூற்றாண்டு கண்ணகியா என்ற சந்தேகம் சிலருக்கு. அவள் எதை எரிக்கப்போகிறாள்? இவள் எரியுகக்கண்ணகி, காவியக்கண்ணகிக்கு நேர் எதிர். அவள் கண்கள் தீயணைக்கும் படை. அவற்றின் பார்வையில் தண்மை. அகழ்ந்தெடுத்த எரிபொருட்களின் வெப்பத்தைத் தணிக்கப்போகிறது.
இருபதுவயது இளம்பெண் இல்லையென்றாலும் வெளியில் தெரிந்த அங்கங்கள் இத்தனை அழகு என்றால் துண்டு காற்றில் பறந்தோ, இல்லை கையின் அணைப்பில் இருந்து விலகியோ விழுந்தால்… அந்த நம்பிக்கையில் அவளை பின்தொடர்ந்த சிலர். அவளைப்பொறுத்தவரை ஆடை என்பதே தேவையற்ற குற்ற உணர்வின் அடையாளம். இயற்கை சுழற்சியில் தடைபோடும் கட்டுப்பாடு.
பூமா எங்கே போகிறாள்?
அவளுக்கே தெரியாது. முன்பே தெரிந்துவிட்டால் எதிர்காலம் என்ற ஒன்று அவசியம் இல்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். பிறர் உணர்ச்சிகளை மதிக்கும் ஒரு உயிரை உருவாக்க வேண்டும் என்கிற நம்பிக்கை அவள் உயிர்மூச்சு.
சாத்தியக்குறைவான எண்ணற்ற நிகழ்வுகளின் நம்பமுடியாத வரிசையில் உருவானவள் அவள். அவளின் இந்த ஆசையும் நிறைவேறலாம்.
***