மொழிபெயர்ப்பு கவிதை – குண்டர் க்ராஸ்

ஜெர்மானியக் கவிஞர் குண்டர் க்ராஸ்(1927-2015) தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் தனது இறுதிப் புத்தகத்தை முடித்தார். சிறு சிறு உரைநடை, கவிதைகள், பென்சில் ஓவியங்கள் ஆகிய வடிவங்களில் நினைவுகள், பயண அனுபவங்கள், விசித்திரமான அவதானிப்புகள் கொண்ட இதை ஆங்கிலத்தில் பிரயோன் மிச்செல் (Breon Mitchell) ‘ஆஃப் ஆல் தட் எண்ஸ்’ (Of All That Ends) என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். அதில் ஒரு கவிதை, மாலை நேரப் பிரார்த்தனை (Evening Prayer). இந்தக் கவிதைக்கு முந்தைய உரைநடைப் பகுதியில் மயக்கம் (swoon) என்ற தலைப்பில்இணையத்தில் மக்கள் வீழ்ந்து கிடப்பது ப ற்றி எழுதியிருக்கிறார். இந்தக் கவிதையும் அதையே பேசுகிறது.

மாலைப் பிரார்த்தனை

சிறு பிராயத்தில்
திரும்பிய பக்கங்களிலெல்லாம்
‘கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’
என்ற அறிவிப்பில் உறைந்துபோனேன்.
இப்பொழுது கடவுள் இல்லை
என்றாகிவிட்டாலும்
தலைக்குமேலே சுற்றிக்கொண்டிருக்கும்
ஆளில்லா ஊர்தி ஒன்று
என்னைக் கண்காணித்துக்கொண்டேயிருக்கிறது.
தூங்க மறுக்கும் அதன் இமையற்ற கண்கள்.
எல்லாவற்றையும் குறித்துக்கொள்ளும்
மறக்க இயலா மனம் கொண்ட அது.
அதனால் மீண்டும் குழந்தமையுடன்
பிரார்த்தனைகளை முணுமுணுக்கத் தொடங்குகிறேன்.
ஒவ்வொரு பாவச் செயலுக்கு பின்னும்
கருணையும் மன்னிப்பும்
தூங்குமுன் வேண்டியதுபோல்
என் உதடுகள் இறைஞ்சுகின்றன.
‘ஓ அருமை ஆளில்லா ஊர்தியே
உன் சுவர்க்க வீட்டிற்கு நான் வர
மத நம்பிக்கையாளனாக மாற்றிவிடு’

என்ற என் பாவ மன்னிப்பு
முணுமுணுப்பாய் காதில் ஒலிக்கிறது.

***