மாசிக் களரி

கூர்ந்த கவனத்துடன் திரையில் நிரல் எழுதிக் கொண்டிருந்த போது அந்த கூர்மையை ஏய்த்து வலது கண்ணில் கசிந்தது ஒரு துளி. கணிப்பொறியை மூடிவிட்டு கைப்பேசியை திறந்தேன். ரொம்ப நேரமாக அடக்கிவைத்திருந்த ஒன்னுக்கை தென்னைமட்டையில் அடித்தது போல் கைப்பேசியில் செய்திகள் முண்டிக் கொண்டு வேகமாக வந்தன. சோனை கோயில்பங்காளிகள் என்ற பெயரில் புதிய வாட்சப் குழு தொடங்கப்பட்டு அதில் என் எண்ணும் இணைக்கப்பட்டிருந்தது. 

வில் தோட்டி தாத்தா ஆடிய மலையானை அவர் யாருக்கும் குருவங்கொலை கொடுத்து இறக்கி விடாமல் இறந்துபோனதால், இருபதுவருடங்களாக நம் குலதெய்வமான சோனையை கும்பிட முடியவில்லை. இருபது வருடங்களாக நம் பங்காளிகளுக்குள் இறக்கப்படாமலிருக்கும் மலையானுடன் இருபத்தோரு தெய்வங்களையும்  வரும் மாசிப்பச்சையன்று இறக்கி பட்டம் கட்ட வேண்டும். இந்த வருடம் மாசிப்பச்சையன்று நம் அங்கும் பங்காளிகள் எல்லாரும் சோனைகோயில் களரியில் நின்று இருபத்தொரு தெய்வத்தையும் இறக்கி பட்டம் கட்டி விட்டால் பின் வருடந்தோறும் நம் குலசாமியை எடுத்து கும்பிட மலையான் உத்தரவு கிடைக்கும்.

ஆகவே அங்கும் பங்காளிகள் எல்லோரும் தவறாமல் மாசிப் பச்சையில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அறைக்கு திரும்பிய பின் அப்பாவுக்கு போன் செய்து கேட்டேன். அவரும் அதை உறுதி செய்தார். தெய்வ காரியமாதலால் நான் கண்டிப்பாக வர வேண்டும் என கட்டளையிட்டார். இருந்தும் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்றே தோன்றவில்லை. 

இந்த வில்தோட்டி தாத்தாவை நான் பார்த்திருக்கிறேன். நம் பங்காளிகளுக்குள் முத்திரி அடித்த கோடாங்கி அவர்தான் என அம்மா சொல்லியிருக்கிறார். மானாருடம்பு. சுருக்கங்களும் மடிப்புகளுமாய் அகல நெற்றி. வலது தோள்பட்டையில் சக்கரமும், இடது தோள்பட்டையில் சங்கும் மங்கலாக பச்சை குத்தப்பட்டிருக்கும். வலது கையில் ஒரு பித்தளைகாப்பு ஒன்று அணிந்திருப்பார். அதில் ஒருகையில் சாட்டையும் மறுகையில் அரிவாளுமாய் ஒரு கம்பீர உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த காப்பை எனக்குத் தருவியா என தாத்தாவிடம் ஒரு முறை கேட்டேன். “குதிர மனுசன பழகாது. மனுசந்தான் குதிரய பழகிக்கணும். தெய்வம் சவாரி செய்ற குதிரதான் மனுசன். தெய்வ அழுத்தம் சாதாரணமானதில்ல. அழுத்தம் தாங்காம அழிஞ்சு போனவய்ங்க பலபேரு. உன்ன அழிச்சுத்தான் அது நிக்கும். அதனால அது மேல நீ ஆசப்படாதே. அதுக்கு உம்மேல ஆசயிருக்கான்னு பின்னும் பெறகு பாப்போம் என்றார்.”

அவர் தூக்கமாத்திரைகளை மொத்தமாக தின்று செத்துப் போனதாக போஸ்ட் மாட்டம் அறிக்கை சொன்னது. அவரை எது அழுத்தியது( அழித்தது) என இன்னும் புரியவேஇல்லை.

Mario Sánchez Nevado

வாட்சப் குழுவில் யார் யார் எங்கிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை பகிருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. குழுவில் நூற்றுக்கணக்கான எண்கள் இணைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவர்கள் யாரென்றே நான் தெரிந்திருக்கவில்லை. மாசிப் பச்சைக்கு இரண்டு நாள் முன்பே வந்து விடுவதாக ராசய்யா என்பவர் அமெரிக்காவிலிருந்து பதிவிட்டிருந்தார். மாசிப் பச்சையன்று காலைதான் தன்னால் வரமுடியும் என கண்ணன் என்பவர் பகிர்ந்திருந்தார். கம்பனியில் லீவ் தருவது சிரமம் என கோபால் என்பவர் பதிவிட்டிருந்தார். இருபது ஆண்டுகளுக்கு பின் ஒருங்கு செய்யப்படும் தெய்வ நிகழ்வு என்பதால் எப்பாடுபட்டேனும் அங்கும் பங்காளிகள் எல்லாரும் களரியில் பங்கெடுக்க வேண்டும் என குழுவின் அட்மினான குருநாதன் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த குருநாதனை நானறிவேன். விராலிப்பட்டியில் வசிக்கும் மகாலிங்கம் சித்தப்பாவின் மகன் தான் இவர். என் அப்பாவைப் பெற்ற தாத்தாவான சோனை, தன் அண்ணனான வில்தோட்டி  தாத்தாவுடன் சண்டை போட்டுக் கொண்டு சொத்துக்கள் எதுவும் வேண்டாம் என உதறி பூர்வீகமான விராலிப்பட்டியை விட்டுவிட்டு சிலுக்குவார்பட்டியில் வந்து குடியேறியதாக அப்பா சொல்லியிருக்கிறார்.

குழுவில் இணைக்கப்பட்டிருக்கும் எண்களை எண்ணிப்பார்த்தேன். முந்நூற்று அறுபது எண்கள். இந்தியா முழுவதுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருப்பவர்கள் அந்த குழுவில் இணைந்திருந்தார்கள். தினந்தோறும் ஓரிரு நபர்கள் குழுவில் இணைந்தபடியே இருந்தனர். யார் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை உலக வரைபடத்தில் புள்ளிகளாக குறித்து அவற்றை கோடுகளால் இணைத்து பார்த்தேன். ஏறத்தாழ ஒரு நீள்வட்டம் கிடைத்தது. இந்த சோனைக்குடும்பம் கூட நீள்வட்டம்தான் போலும்.

‘சாமியாடுவதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏமாற்றுவேலை. படித்தவர்கள் யாரும் சாமியாடுவதே இல்லை. காலங்காலமாக பூசாரித்தனம் செய்து வரும் பிராமண குலத்தில் இதுவரை யாரும் சாமியாடி பார்த்ததில்லை. பெண்கள்தான் அதிகம் சாமியாடுகிறார்கள். சாமியாடுவதால் கிடைக்கும் அற்ப கெளரவத்திற்கு ஆசைப்பட்டுதான் பெண்கள் சாமியாடுகிறார்கள். ஆகவே சாமியாடுவதெல்லாம் வெறும் நடிப்புதான்.’

  ‘இது ஒரு நரம்பு வியாதி. மனப்பிறழ்வு நோய். ஒரு நோயாளியைக் கண்டுபிடிக்க இத்தனை பேர் கூடுவது அவசியந்தானா?’

‘மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் ஒரு ஆற்றல் நெற்றிப்பொட்டில் நின்று சுடரும் நிலையே சன்னதம். அது சில விநாடிகள் மட்டுமே நீடிக்கும் ஒரு ஐக்கியநிலை. அதனை தியானம் மூலம் எட்டலாம்.’

‘என் அம்மா சாமியாடி குறி சொன்ன பின்தான் தனக்கு குழந்தை பிறந்தது. எனக்காக என் அம்மா வேண்டிக்கொள்ளும் போது எனக்கு பிடித்தவர்களுக்காக நான் வேண்டிக் கொள்ளத்தானே வேண்டும். என் அம்மா கூப்பிட்டிருக்கிறார். என் முதல் தெய்வம் என்னை எங்கு அழைத்தாலும் நான் செல்வேன். என்னை எங்கு செலுத்த வேண்டும் என்பதை அவளறிவாள்.’

இவ்வாறாக பல்வேறு நபர்கள் தங்கள் கருத்துகளை குழுவில் பகிர்ந்திருந்தார்கள். அருள்வாக்கு சொல்வது பற்றி, ஒரு ஆன்மீக குரு பேசும் வீடியோ ஒன்றை மூக்கையா என்பவர் பகிர்ந்திருந்தார். ‘ஒரு நபருக்கு அருள் வந்தால் முதலில் அதை அனுபவிக்க வேண்டும். வாய் திறந்து அந்த அருளை வெளியே துப்பக் கூடாது. தாகத்தோடு இருக்கும் மனிதனுக்கு அருள் எனும் தண்ணீர் கொடுத்தால் குடிக்கத்தானே செய்ய வேண்டும்? மாறாக கொடுத்தவர் மீது துப்பவா வேண்டும்?’ என அவர் கேட்டிருந்தார்.

தனிமனிதன் அனுபவிக்கும் அருளை தனக்குள் மட்டுமே வைத்து அனுபவித்து சாகவேண்டுமானால், அப்படி ஒரு அருள் இருப்பதை நாம் எப்படி அறிந்தோம்? அதைப் பெற தியானப் பயிற்சிகள் ஏன்? மேலும் அருளை அடைய தியானம் மட்டும்தான் வழியா? தியானத்தின் வரையறை தெரியாத, அதன் நோக்கமறியாத பாமரன் அருளற்றவனோ எனத் தோன்றியது.  தியானம் மூலமோ அல்லது எவற்றின் மூலமோ ஈட்டப்படும் அருளின் சேமிப்பு கிடங்கை யார் பராமரிக்கிறார்கள்? என்ற கேள்விகள் எனக்கு கிறுக்கை குத்திவிட்டன. 

கிறுக்கு தெளிந்துவிடுமென்ற நம்பிக்கையில் இணையத்தில் குதித்து வாசிக்க தொடங்கினேன். மனித மனத்தை மூன்றாக பகுத்திருப்பதாக மனோ தத்துவம் சொன்னது. வெளி மனம் ( இட்), உள்மனம் (ஈகோ) மற்றும் ஆழ்மனம் (சூப்பர் ஈகோ). இவற்றில் வெளி மனம் லெளகீக நடவடிக்கைகளை கவனிக்கிறது. லௌகீகத்தை ஆழ் மனப்பதிவுகளுடன் ஆய்வு செய்யும் பணியை உள்மனம் செய்கிறது. இந்த ஆழ் மனத்தில் தான் புழுங்கிப் புதைந்த நினைவுகள் பதிவாகியுள்ளன. மூளை நரம்புகள் தூண்டப்படுவதால் ஆழ்மனம் விழிப்பு கொள்கிறது. ஜன்னி வரும் போது கூட விசித்திரமான இறையுணர்வை மனிதர்கள் அடைகிறார்கள் என்பதைப் படித்தபோது சுப்பு அத்தை இறந்தது என் நினைவுக்கு வந்தது.  இந்த ஆஸ்பத்திரியில் வைத்து இனி பார்க்கமுடியாது. வீட்டுக்கு கொண்டு போய் விடுங்கள் என டாக்டர் சொல்லிக் கொண்டிருந்த போது சுப்பு அத்தையின் உடல் உதறிக் கொண்டே இருந்தது. ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டு போய்க் கொண்டிருந்த போதும் சுப்பு அத்தையின் உடல் அதன் உதறலை நிறுத்தவில்லை. வீட்டில் கொண்டுவந்து போட்ட பத்தாவது நிமிடத்தில் ஒரு உச்ச இழுவையுடன் உடலைக் கடந்து மறைந்தாள் சுப்பு அத்தை.

என் மூளையில் அதாவது ஆழ்மனத்தில் யாரின் உள்ளமுக்கப்பட்ட என்ணங்கள் சேகரமாகியிருக்கின்றன என யோசித்தேன். நான் என்பது என் தனியுடல். இந்த உடல் என் உரிமை. ஆனாலும் என் முகம் நான் பிறக்கு முன்பே இறந்து போன சொட்டையன் தாத்தாவை போல் இருப்பதாக அப்பாவும் பெருமளக்கா அவ்வாவும் சொல்லியிருக்கிறார்கள். ஆக என் உடலும் ஏதோ ஒரு தொகுப்பின் சேகரம். அதை அப்பாவும் அவ்வாவும் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதுபோல் என் ஆழ்மனதில் எவரெல்லாம் (எவையெல்லாம்) சேகரம் ஆகியிருக்கிறார்கள்? என் அனுமதியின்றி எனக்குள் எண்ணங்களை சேமித்து வைத்தது யார்? எனக்கு பிடித்த இசை கேட்கையில், பிடித்ததைக் கொண்டு களிகூர்கையில், பெருகும் கோபத்தில் மகிழ்வதும் ஆவேசிப்பதும் யார்? உடலோ உயிரோ எதுவாயினும் நான் என்பதொரு தொகுப்போ? இந்த தொகுப்புக்குள் எத்தனை கதைகள், எண்ணங்கள்? இவற்றுக்கெல்லாம் நான் பிரதிநிதியா?  இங்கு எதுவும் தனியுடமையல்ல என்றெல்லாம் சுழற்சிக்குள் சுழன்று துவண்டு கொண்டிருந்தேன். நடப்பவற்றுளெல்லாம் எனக்கு தொடர்பு இருப்பது போன்றும் இல்லாதது போன்றுமாய் மனச்சுழற்சியில் இருந்ததால் மாசிப்பச்சைக்கு போக வேண்டுமா வேண்டாமா என்பது தொடர்ந்து பரிசீலனையிலேயே இருந்தது. என் குழப்பங்களை வாட் சப்பில் பகிர்ந்து கொள்ளவில்லை. 

‘உங்கள் வாலில் பற்றிய நெருப்பை உலகுக்கு பற்ற வைக்க வேண்டாம். இந்த உலகில் உணரப்பட்ட பல விஷயங்கள் தர்க்க ரீதியாக நிறுவப்படவில்லை. கண்டவர் விண்டிலர். உங்கள் ஐயங்கள் தெளிவு பெறவேண்டுமாயின் நீங்கள் தேட வேண்டும். உங்கள் தேடலில் கண்டடைந்ததை பொதுவில் வைக்கலாம். உங்கள் ஐயத்தையே பொதுவில் வைப்பதென்பது அடுத்தவர் உணர்வை சொறிய முயல்வது போன்றது.  ஐயங்களை தேடித் தெளிய யாருக்கும் உரிமையுள்ளது. மாறாக உங்கள் ஐயங்களை கொண்டு யாரையும் குழப்ப உரிமையில்லை.  மாசிப் பச்சைக்கு மறுநாள் எல்லோரும் கோயிலில் கூடி விவாதிக்கலாம். ஐயமிருப்பவர்கள் அதில் கலந்து கொள்ளலாம். மாசிப் பச்சை விழாவை கெடுக்கும் விதமாக பதிவுகளை இட்டு ஆட்டையை கலைக்க வேண்டாம்,’ என்று ஒரு பங்காளி குழுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ஊருக்கு கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு வாட்சப் குழுவில் சுமார் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும் ஒரு குரல் பதிவு வந்திருந்தது.    பொதுவாக வாட்சப் குழுவில் பேசி அனுப்புபவர்கள் அதிக பட்சம் ஒரு நிமிடம் மட்டுமே நீடிக்கும் பேச்சையே அனுப்புவார்கள். பெரும்பாலும் மாசிப் பச்சைக்கு வருவது பற்றிய நேர, தூர விசாரிப்புகளாகவே அவை இருக்கும். ஒரு நிதானத்தை துணை கொண்டு அந்த குரல் பதிவை கேட்கத் தொடங்கினேன்.

“இந்த மண்ணுல இந்த வித்துதேன் விளையும்கிற மாதிரி இந்த உடம்புக்கும் உயிருக்கும் ஒத்துக்கிற ஒத்துக்கிறாத விஷயங்களும் இருக்கு. எந்த மண்ணுல பொழக்கிறமோ அந்த மண்ணுல விளையிற தானியம் தான் அந்த மண்ணோட உயிர்களுக்கானது. வேத்துப் பொருள உடம்பே ஏத்துக்கிற மாட்டேங்குதுதான?”

“மானம் பாத்த பூமியில மலப்பொருளு விளையாது. விதைய அது விதைக்கப்பட்ட மண்ணு ஏத்துக்கணும். வித்துகளுக்கு எல்லையிருக்கு. அதது அததோட எல்லையிலதான் விளையும். அடுத்தவன் மனையில உங்க வீட்ட கட்ட முடியாதுங்கிற மாதிரி ஒங்க மனையில அடுத்தவனும் வீடு கட்ட முடியாது. அவுகவுக எல்லையில அவுகவுக வீடு.”

“ஆளானப்பட்ட மலையானே பதினெட்டாம்படியான்கிட்ட உத்தரவு கேட்டிட்டுத்தான் சந்நிதானத்த விட்டு வெளிய போறான். கணக்கு சரிபாத்ததுக்கு அப்பறம்தான் மலையான கோயிலுக்குள்ள விடுறான். அதாவது பதினெட்டாம் படி சந்தன கருப்பனோட காவல் எல்லையிலதான் எல்லயில்லாதவனுக்கு கோயில் இருக்கு.”

“ஒருத்தங்கிட்டயிருந்து உலகம் பொறந்திச்சின்னா, இந்த விஸ்தார உலகத்து மனுசன் அந்த ஒருத்தன தொடனும்னா அவன் வந்த பாதையில திரும்பிதான் போகணும். அப்படி போகும் போது எதைத் தாண்டி வந்தமோ அத தொட்டுத்தான போகணும். மதுரயிலருந்து நிலக்கோட்டைக்கு வந்திட்டோம். திரும்ப மதுரக்கி போறதுக்கு பல பாதைக இருக்கத்தான் செய்யிதுண்டாலும் நீங்க வந்த பாததான் ஒங்களுக்கு தோதா இருக்கும். மனுசனுக்கு மட்டுமில்ல. நம்ம சாமிகளுக்கும் கூட சாமி இருக்கு. ராக்காச்சி கோயில்ல தீர்த்தமாடி, அந்த தீர்த்தத்த கொண்டுவந்து மலையான் சந்நிதியிலயும், பதினெட்டாம்படியான் காலடியிலயும் வச்சு கும்புட்டு கொண்டு வந்த தீர்த்தத்த வேப்பிலயில அள்ளி தெளிச்சாத்தான் நம்ம தெய்வம் களரிக்கு வரும். நாம நம்ம சாமிக்கு கட்டுப்பட்டா நம்ம சாமி பதினெட்டாம் படியான் பாதத்தில கொண்டு சேக்கும். அவன் உலகளந்த சாமிகிட்ட போக திச காட்டுவான். ஒசந்த சாமி ஊர்கோலம் வரும் போது அவன் முன்னாடி கச்சகட்டி வணங்கியாடுறம். மலையான் இருட்டுல நடக்கும்போது திரியோட அவன் முன்னாடி நடக்கறோம். அந்த தங்கத் திருமேனி தகதகக்கும் பொன்மேனி வெயில் பட்டு செவக்காம இருக்க தோல் பையில தண்ணி கொண்டு போய் அந்த அழகுமலையான் மேல பீய்ச்சியடிக்கிறோம். வேர்க்காம இருக்க அவனுக்கு விசிறி கொண்டு வீசுறோம். அவன் வய்யக் கரையில இறங்கி தணிஞ்சிருக்கும் போது எங்க தல பாரத்த இறக்கி வக்கிறோம். வருஷா வருஷம் எங்களுக்கு சேதி கொண்டு வாரானப்பா. நம்ம சாமி கையில இருக்க வீச்சருவா, சாட்டையெல்லாம் அந்த சாமி எல்லய காப்பாத்தி அவனுக்கு அடங்கி நடக்கும். நம்ம வீட்டு காணிக்க அவன் உண்டியலுக்கு போகும். புதுத்தானியம் கோட்டையாகி அவன் களஞ்சியத்துக்கு போகும். அங்க எதுக்கு போறன்னு நம்ம சோனையோ கருப்போ கேக்கலப்பா.”

“எங்கம்மா எங்களுக்கு தெரியிற மாதிரி அம்மாவுக்கெல்லாம் அம்மாவா ஆத்தா மீனாட்சி இருக்கா. அவளுக்கு சீர் கொடுக்கிறதால அந்த மலையான் நமக்கு மாமன் முறையப்பா. உலகளந்த உத்தமன் குடும்பத்தில நாமளும் இருக்கமப்பா. பங்காளிக சண்டைய மாமன், மச்சான் வந்து பேசித் தீக்குற மாதிரி நம்ம பஞ்சாயத்துகளுக்கெல்லாம் தீர்ப்பு சொல்றவனப்பா மாயவன்… அவன் சந்நிதானத்தில எறங்காத சாமியெல்லாம் இறங்கும். ஒடாத பேயெல்லாம் ஓடும்.”

“வியாதிக்கு யாரும் பணம்பாக்கு வெத்தல வச்சு கூப்புடறதில்ல. வியாதிகள் மனுசன கண்டுபிடிக்குது. இங்க பொழப்புங்கிறதே அவனவன் அவனவன காப்பாத்திக்கிறது  அதுவும் முடியாதப்ப நாலு பேரு சேந்து ஒருத்தன காப்பாத்துறோம். வியாதியஸ்தனுக்கு இருக்குற பாதிப்பு காப்பாத்துறவனுக்கும் இருக்கு. சாமியாடுறது ஒரு மனச் சீக்காவே இருந்தாலும் அதை யாராவது கவனிக்கத்தான வேணும்? நாண்டுக்கிட்டு நிக்கிறவன, அரளிவிதைய அரச்சு குடிச்சிட்டு வர்றவன் சாக விட்ருவானா? அப்பறம் வைத்தியம் பாத்தா வியாதி குணமாகும்தான். சாமி கும்பிடாம எந்த வைத்தியன் மருந்து குடுக்கிறான்? பாக்க முடியாத கிருமி ஒரு மனுசன கொல்லும்னா பாக்க முடியாத வைத்தியம் அவன காப்பாத்தவும் செய்யும்தானே.”

“ஆம்பள ஆம்பளேங்கறத மறந்து, பொம்பள பொம்பளேங்கறத மறந்து படிச்சவன் படிக்காதவன்னு எல்லாருமே இங்க சாமியாடுறவகதான். படிச்சவன் ஒரு மாதிரி ஆடுறான். படிக்காதவன் வேற மாதிரி ஆடுறான். எல்லாருமே கடைசில ஜன்னிங்கற ஆட்டத்த ஆடி உடம்ப உதறித்தான சாகிறான்.”

“வீட்டுக்கொரு பிள்ளய நாட்டுக்கு கொடுத்தோம். நாட்டுக்காக செத்த பிள்ள அந்த வம்சத்துக்கு தெய்வமானான். வம்சத்துக்கொரு சாமி சேந்து கோட்டய காத்துச்சு. பலிகொண்டும் எடுத்தும் காத்துக்கிட்டிருந்த கோட்டய இடிச்சு தள்ளுனப்ப நாதியத்து நின்னுச்சு நம்ம தெய்வம். கோட்டய காத்த சாமிகளே இனி எங்க வம்சத்து காத்து குடுக்கணும்னு கேட்டு அந்த எல்லையில இருந்து பிடி மண்ணு கொண்டு வந்து போட்டுதானப்பா இங்க கோயில் கட்டுனோம்.”

“கூத்துல ஆடுறவனோட அழுகைய பாத்து நாமளும் அழுகுறதில்லையா? எல்லாருக்குள்ளயும் என்னென்னத்தையோ, எம்புட்டெம்புட்டையோ பொத்துனாப்புல வச்சுக்கிட்டுத்தான பொழக்கிறோம்? எல்லாருக்கும் கூத்துல வேஷம் கெடைக்குமா? கூத்துல நல்லதுமிருக்கும் கெட்டதுமிருக்கும். அத ஆட விட்டுத்தான கண்டுபுடிக்க முடியும்?”

“சீலக்காரி, மொண்டிச்சோனை, பதினெட்டாம்படியானோட இருபத்தோரு தெய்வங்களும் அவுகவுக சவாரிய கண்டுபுடிக்க தோதா அங்கும் பங்காளிக எல்லோரும் இந்த களரிக்கு வந்து சேரணும்னு கேட்டுக்குறேன்.”

குரல் நின்றது. தொடங்கும் போது இருந்த குரல் இடை இடையே குளறி, தழுதழுத்து முடிக்கும் போது முற்றிலும் வேறாக இருந்தது. தனக்கு கொடுக்கப்பட்டதை இன்னொருவருக்கு கொடுக்காமல் போயிருந்தால் நானே இங்கிருக்க மாட்டேன். கடத்துதல் அல்லது கையளித்தல் என்பது உயிர்களின் உயிர்க்கடமையோ எனத் தோன்றியது. கண்ணுக்கு தெரியாமல் கதை வழியாகவோ குருதி வழியாகவோ கடத்தப்பட்ட எதையோ அடையாளம் காணும் நெறிதான் இந்த மாசிப் பச்சைக் களரி போலும். பேருந்து சீட்டு பதிவு செய்தேன். அசைவம் உண்ணக்கூடாது. கையில் காப்பு கட்டியிருக்க வேண்டும். நாள்தோறும் குளித்து குலதெய்வத்தை வணங்கி விபூதி பூசிக்கொள்ள வேண்டும் என விரதநெறிகள் வகுக்கப்பட்டிருந்தன. என்னால் முடிந்தளவுக்கு பின்பற்றினேன். விரத நெறிகளை முறையாக கடைபிடிக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சியெல்லாம் எனக்கில்லை.

மாலைவேளையில் சாமி இறக்க போகிறார்கள் என்பதால் ஒருசந்தி இருக்க வேண்டியிருந்தது. கையில் மஞ்சள்காப்பு, நெற்றி நிறைய விபூதி,  தோளில் அல்லது இடுப்பில் காவித்துண்டு என என் மூத்த அண்ணன் சோனை விரத நெறிகளை சரியாக கடைபிடிப்பதாக தோன்றியது. பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியிலிருந்த தண்டவாளக்கம்பியை திருடி அதற்கு பேரிச்சம் பழமும் ஐஸும் வாங்கித் தின்ற அண்ணனா என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நைஸாக நழுவிச் சென்று ஒரு டீயும் பன்னும் விழுங்கலாம் என யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்து ஊரான உச்சணம்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தேன். எதிரில் வாடகை சைக்கிளை ஓட்டிக்கொண்டு என் அண்ணன் சோனை வந்து கொண்டிருந்தார். நான் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கி நின்றேன்.

“எங்கடா போறே?”

“உச்சணம்பட்டியிலிருக்கிற சிநேகிதன பாக்கப் போறேன்”. 

“யாரு வீட்டுலயும் தண்ணி வெண்ணி பொளங்க கூடாது ” என சொல்லிக் கொண்டே ஏப்பம் விட்டார் அண்ணன். அவர் வயிற்றில் கிடக்கும் உளுந்தவடை அவர் வாய் வழியே மணம் பரப்பியது. வீட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போனால் சைக்கிளை யாராவது தேடுவார்கள் என்றெண்ணி தந்திரமாக வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாரென எனக்கு புரிந்த போதும் அவர் விரதத்தை நான் கலைக்கவில்லை.

நாலுமணி சுமாருக்கு வீட்டிலிருந்து கோயிலுக்கு கிளம்ப சொன்னார்கள். வீட்டிலிருந்து கிழக்கில் இருநூறு மீட்டர் நடந்தால் ஒரு ஓடை. ஓடை கடந்தால் ஒரு இட்டறைப்பாதை. இட்டறைப்பாதையின் முடிவில் பெருஞ்செங்கரடு. கரடு கடந்தால் இரயில்வே இருட்டுப்பாலம். இருட்டுப்பாலம் கடந்தால் அம்மையநாயக்கனூர். அம்மையநாயக்கனூர் தாண்டினால் மீண்டும் ஒரு ஓடை . ஓடையையடுத்து மீண்டும் ஒரு இட்டறைப்பாதையில்தான் எங்கள் குலதெய்வமான சோனைக்கு கோயில் இருந்தது. 

செங்கரட்டில்  கிடந்த வெங்குச்சான் கற்களின் இளஞ்சூடும் அதன் எகனமொகனயான வடிவங்களும் செருப்பில்லாத பாதங்களை சில நேரம் வலிப்பது போலும் சில சமயம் வலிக்காதது போலும் கிள்ளிக் கொண்டேயிருந்தன. அங்கங்கே இருந்த காராம்பழ செடிகளும், கோவைக் கொடிகளும் என் விரதத்தை சோதித்தன. எனது அண்ணன் சோனை எதையோ முணுமுணுத்துக் கொண்டே நடப்பது போலிருந்தது. 

“அண்ணே பசி வயித்த கிள்ளுது காராம் பழம் புடிங்கி திங்கவா?”

“நம்ம குலசாமிக்காக ஒரு நா ஒன்னால ஒரு சந்தி இருக்க முடியாதா?” 

எனக்கு கடுப்பேறியது. 

“நீ எதுக்கு இம்புட்டு பக்தியா இருக்க? சாமியாட அம்புட்டு ஆசயா?”

“யாருக்குடா ஆச? அது எறங்குனா நம்மள எல்லாரும் மரியாதையா பாப்பாய்ங்க. திங்கறதுலருந்து பேலுறது வரைக்கும் ரூல்ஸ் போடுவாய்ங்க? நானு சாமி கும்புடுறதே எம்மேல இறங்கிறாதன்னு வேண்டத்தான் “

எனக்கு தைரியம் வந்தது. 

“விரதம் இருக்குறவுக மேல தான சாமி இறங்கும்? பேசாம அம்மையநாயக்கனூர்ல புரோட்டா திண்டுட்டு கோயிலுக்கு போனா சாமி நம்ம மேல எறங்காதுல்ல.”

“புரோட்டாவுக்கு கறிக்குழம்பு ஊத்துவாய்ங்க. வாடையடிச்சு நம்மள காட்டி குடுத்திரும்.”

“சரி வா காராம்பழம் திம்போம்” என்றேன்.” 

இருவரும் உடன்பாட்டுக்கு வந்து காராம்பழம், கள்ளிப்பழம், கோவப்பழம், எலந்தைப்பழம் என எங்கள் போலிவிரதத்தை பழங்களால் நிறைத்தோம். வேப்பங்குச்சியை ஒடித்து பல்லை விலக்கி அதையே கீறி நாக்கையும் வழித்துக்கொண்டோம். உதட்டிலும் நாக்கிலும் படிந்திருந்த சிவப்பு மங்கியதை உறுதி செய்தபின் கோயிலை அடைந்தோம். வயிறு நிறைந்திருந்த போதும் முகத்தில் பசியை திறம்பட நடித்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் இந்த ஏப்பத்தொல்லை.

பக்கத்து தோட்டத்தில் ஓசி கரண்ட் கோயிலில் மைக் செட் கட்டியிருந்தார்கள். தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய “கருப்பு வடிவம் பூண்டவராம்” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.   பெரிய கம்பீரமும் ஈர்ப்பும் கொண்ட அவரின் தடித்த பெருங்குரலில் 

“இருபத்தோரு உருவம் உண்டு

அத்தனைக்கும் உருவம் ஒன்று

அவரு பேரு எத்தனையோ

அனைவருக்கும் கருப்பு ஒன்று”

என்ற வரிகள்  அந்த பொட்டல்  வெளியை இசையால் நிறைத்துக்கொண்டிருந்தது. 

சுற்றுப்புற கிராமங்களை பூர்வீகமாகக் கொண்டு உலகெலாம் பரவிப்போன வம்சக்குழுவினர் மேல்சட்டையை கழற்றி விட்டு நின்றிருந்தனர். சிலர் கங்கணம் கட்டி காவி வேட்டியிலிருந்தார்கள். பெரும்பான்மையினர் ஜீன்ஸ் பேன்ட் போட்டிருந்தார்கள்.  அவர்கள் புட்டப்பையில் ஸ்மார்ட் போன்கள் இருந்தன. ஜீன்ஸ் போட்டிருந்தவர்களின் ஜட்டியினுடைய பட்டி வெளியே தெரியுமாறு பேன்ட்டை இறக்கி விட்டிருந்தார்கள். 

அங்கும் பங்காளிகள் எல்லோரும் தீர்த்தமாடி விட்டு ஈரவுடையுடன் வந்து நிற்குமாறு மைக்கில் அலவுன்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். அக்கம் பக்கத்து தோட்டங்களின் தொட்டிகளில் கிடந்த நீரை அள்ளி மேல்களில் ஊற்றிக் கொண்டு சொட்டை சொட்டையாக வந்து நின்றார்கள். நானும் அண்ணனும் உடலின் பெரும்பாதி நனைய நீரை ஊற்றிக் கொண்டோம். ஈரத்துணியோடு நின்றவர்களின் தொப்புள் தெரியும் தொப்பைகளை சகித்தான் வேண்டியிருந்தது.

பெண்கள் ஒரு புறமாக ஈரவுடையுடனே இருந்தார்கள். அந்தி மசங்கிக் கொண்டிருந்த வேளையில் கோயில் என்று நாங்கள் சொல்லிக் கொண்ட மூன்று விளக்குத் தண்டுகளின் வடக்கிருந்து முதல் விளக்குத் தண்டான சோனைச்சாமி விளக்குத்தண்டுக்கு முன் பங்காளிகளில் மூத்தவர்கள் நின்றிருந்தார்கள். பூசாரி சோனை கோயிலில் சூடம் கொளுத்தப் போனார். 

‘யப்பா பூசாரி மொதல்ல பெண் தெய்வத்ததானப்பா வணங்கனும் ‘ என்றார் மூத்தவர் ஒருவர்.

பலர் ஆமாம் சாமி போட்டார்கள்.
பூசாரி சீலக்காரி விளக்குத் தண்டிற்கு முன் படைக்கப்பட்டிருந்த வாழைப்பழத்திற்கு கண் திறந்து, தேங்காயை பிள்ளையார் வடிவம் வருவது மாதிரி உடைத்து வைத்து விட்டு பத்தி மற்றும் சூடங்களை பொருத்தினார். அதேபோல வீரியகாரி விளக்குத்தண்டிலும் பத்தி சூடம் பொருத்தினார்.

சோனையின் விளக்குத் தண்டிற்கு போனபோது துண்டால் வாயும் மூக்கும் மறையுமாறு கட்டிக்கொண்டார். அண்ணனிடம் ஏன் என்று  அவனுக்கு மட்டும் கேட்குமளவுக்கான சத்தத்தில் கேட்டேன். அவனுக்கும் தெரியவில்லை.

” எச்சிச் சோறுன்னாலும் அம்மா பொறுத்துக்குவா. ஆனா இந்த மொண்டிச்சோனை பொறுக்கமாட்டான் ” என்று என் காதில் விழ வேண்டியதை யாரோ கூட்டத்துக்குள் சொல்லிக் கொண்டிருந்தார். 

சோனை கோயிலருகே திரி, வீச்சரிவாள், சாட்டை, தடி போன்ற ஆயுதங்களை வரிசையாக வைத்திருந்தார்கள். இங்கு யாரும் வேட்டைக்கு செல்லப் போகிறார்களோ என எனக்கு தோன்றியது. 

 கூட்டத்தில் குசு குசுவென பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட அங்கு நிலவிய அமைதியை விரும்பியவர்களாகவே இருந்தார்கள். சூட ஆரத்தி முடித்தவுடன் பூசாரி சூடத்தட்டுடன் களரியில் நின்றிருந்தவர்களை நோக்கி வந்தார். அந்த தட்டு நிறைய விபூதி கொட்டப்பட்டிருந்தது. வாயில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தார்.

“சோனை, கருப்பா, வாலகுருநாதா, சீலக்காரி, நாகம்மா, வீரியகாரி , பதினெட்டாம்படி சந்தனக் கருப்பா, அழகுமலையானே, உலகளந்த கண்ணா, இருபத்தோரு தெய்வமும், அறுபத்தோரு பந்தியும், பதினெட்டு சித்தர்களும், நாப்பத்தெட்டு ரிஷிமார்களும் இந்தக் களரிக்கு துணையா நின்னு நடத்திக் கொடுக்கணும். இந்த வம்சத்த காக்கும் துடியான சாமிகளே  இங்க நிக்கிற குதிரைகள்ல உங்க சவாரிய நீங்க அடையாளங்காட்டி ஆடி காட்டணும். சீலக்காரி, பகவதி இங்க நிக்கிறது சத்தியம்னா இந்த களரிக்கு வந்து நின்னு சத்தியத்த காத்துக் குடுக்கணும்” என முழங்கிக் கொண்டே அங்கு களரியில் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் துன்னூறு போட்டார்.

“பொம்பளக கொலவ போடுங்கம்மா ” என்றார்கள். 

” கொட்டுக்காரகள அடிக்கச்சொல்லுங்கப்பா ” என்றது மற்றொரு குரல்.

நாக்கை இரு பக்கமும் சன்னமாக மடித்து, உதடுகளை குவித்தவாறு நாக்கு வாயின் இடத்துக்கும் வலத்துக்குமாய் உரசிய போது எழுந்த சத்தம், அங்கு நிலவிய அமைதியைக் கீறி மனித குலத்தின் ஏதோ ஒரு மூத்த உணர்வை சீண்டுவதாக இருந்தது. 

ஒரு தவில், ஒரு நாதசுரம், ஒரு உடுக்கை, பம்பை உருமியுடன் கொட்டுக்காரர்கள் வந்திருந்தனர். வாலை மிதித்து விட்டவனை பார்த்து, படமெடுத்து நிற்கும் ராஜநாகத்தின் சீறல் போல நாதசுரத்தின் ஓசை முதலில் எழுந்தது. குருதியை சுண்டி ரோமங்களை நிமிர்த்தி அதனாழங்களுடன் சமராடுவது போல உடுக்கையின் ஓசை கிடுகிடுத்தது. தோலை ஊடுருவி இரத்தத்தின் உஷ்ணத்தை வளர்த்து மறுபுறம் மூளையின் வர்மத்தில் அடிப்பது போலுமாய் உருமியின்  இழுவையும் பம்பையின் அடியுமிருந்தது. இந்த ஒலிகளெல்லாம் ஆகாய வாசல்களை மனிதக் காதுகளுக்குள் திறக்க முயல்வது போல் ஆர்த்தது. 

கேலிச் சிரிப்புடன் பலரும் முரட்டுப் பார்வையுடன் சிலரும் மிரட்சியுடனுமாய் பல பாவங்கள் அங்கிருந்தவர்களின் முகங்களில் பொலிந்தன. பலருக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன. அந்த சிலிர்ப்பை கண்களை மூடி காத்தனர். சிலிர்ப்பேறியவர்களின் தலை துவளுவது போலிருந்தது. என்னருகில் நிற்பவர்களில் யாராவது ஆடுவது போல தெரிந்தால் விலகி வேறிடம் போக வேண்டும் என்பதற்காக நான்  சுற்றும் முற்றும் வெறித்து வெறித்து பார்த்தபடி நின்றேன்.  அண்ணனும் அதே எண்ணத்தோடு வெறித்துக்கொண்டிருந்தார்.

கரங்கூப்பி கண்களை மூடியிருந்த பெண்களில் சிலர் கண்களிலிருந்து ஈரம் கசிந்தது. பெரும்பாலானவர்கள் கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது. மூடிய கண்களை அப்பெண்கள் திறக்கவேயில்லை. துயரமோ ஆற்றாமையோ ஏமாற்றமோ பொருட்படுத்தப்படாத புறக்கணிக்கப்பட்ட உரிமை அல்லது அன்பின் வஞ்சம் என அனைத்தும் அங்கு நின்று கொண்டிருக்கும் பெண்களின் கண்களில் துடித்து திரண்டதைப் போல விழித்தார்கள்.  பெண்ணினத்தின் யுகத்துயரை அழவே தங்களுக்கு கண்கள் வாய்த்தது போல் எல்லா பெண்கள் பொங்கிப் பொங்கி அழுதார்கள். ஓங்கிக் குலவையிட்டார்கள். கிடுகிடுக்கும் மேளச் சத்தத்துடன் பெண்களின் ஓலச்சத்தம் எல்லோரையும் நடுங்க வைத்தது. பெரும்பாலான பெண்கள் உறுமி உறுமி பொங்கினர். உஸ் உஸ்ஸென ஊதினர். அருளாடிய பெண்கள் யாரும் கண்களைத் திறக்கவேயில்லை. கைகளை பின் கழுத்தில் கோர்த்து தடுமாறினர். நாக்கை உள்மடித்து வெறி காட்டியபடியே தரையில் விழப் போனவர்களை பக்கத்தில் நின்ற பெண்கள் தாங்கினார்கள். 

“தரையில விழுகுறவகள தாங்காதிக. மெய்ச்சாமி மட்டுந்தே நின்னு ஆடும்” என்றார் ஒரு முதியவர். கீழே விழுந்தவர்களுக்கு பூசாரி திருநீற்றுடன் அவரின் வலதுகை கட்டை விரலை நெற்றிப்பொட்டிலும் பிற விரல்களை உச்சந்தலையிலும் வைத்து அலட்சியமாக அழுத்துவது போலிருந்தது. உடனே ஆடியவர்கள் ஆசுவாசத்துக்கு வந்தனர். 

சுமார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி பெருங்குரலெடுத்து அலறினாள். பக்கத்திலிருந்த பெண்களால் அவளை பிடிக்கவே முடியவில்லை. மற்ற பெண்களைப் போல அவளின் முந்தானை நவிழவேயில்லை. இருகைகளின் உள்ளங்கையும் வெளித்தெரியுமாறு முன்னே நீட்டி பிணைத்துக்கொண்டாள். ஒரு பெரும் சிலிர்ப்பில் அங்கங்கே நரைத்து நீண்டு மினுங்கிய அவளின் கேசம் ஆவேசமாக படமெடுத்து நிற்கும் நாகம் போல் விரிந்தாடியது.  அப்பெண்ணின் ஆவேசம் தளரவில்லை. பூசாரி விலகி நின்று அப்பெண்ணை ஆடவிட்டார். வெறி கொண்டு விழிகளை உருட்டி, அடிவயிற்றிலிருந்து முக்கி நாக்கை மடித்து தலை விரிக்கோலத்தில் நின்ற அப்பெண் அவளல்லாதவாகவே இருக்க வேண்டும். அவள் அழவில்லை. சுற்றியிருந்தவர்களை மிரட்டுவதுபோல பார்த்தாள். என் மனதிலும் உடலிலும் நடுக்கம் உச்சத்திலிருந்தது. அவள் ஆகாயத்தைப் பார்த்த போது அழுவது போலும் பூமியை பார்த்த போது ஆறாக் கோபத்துடன் உறுமுவது போலுமிருந்தது. ஆவேசக் கூச்சலிட்டு அவளாடிய போது அங்கிருந்தவர்களில் யாரையும் ஆணாகவே பொருட்படுத்தவில்லை என்றுதான் தோன்றியது. சில நிமிடங்கள் கழித்து கொட்டுச்சத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள். அந்தப்பெண் கண்களை மூடியபடி தடுமாறி நின்று கொண்டிருந்தார். சூடத்தட்டுடன் பூசாரி அப்பெண்ணின் முன் நின்று 

“யாரும்மா நீ ” என்றார்

பதிலில்லை. 

“ஊமச்சாமிய ஊரெப்புடி நம்பும்? வாப்பூட்டு போட்ருக்காகளா?” என்றார் பூசாரி. 

கால்களின் தடுமாற்றம் நின்று திடமான பார்வையை சுற்றியிருந்தவர்கள் மீது செலுத்தினார் அந்த பெண். 

“நீ சத்தியமான சாமியா இருந்தா ஓ ஆயுதத்த எடுத்துகிட்டு ஓ எல்லையில நின்னு காட்டு என்றார் பூசாரி.”

அந்தப் பெண் தன்னைத் திமிர்த்துவதை கண்களில் திரட்டி சுற்றிப்பார்த்துவிட்டு நேராக சோனைகோயில் விளக்குத்தண்டுக்கு அருகிலிருக்கும் மணியை எடுத்துக் கொண்டு சீலக்காரி விளக்குத் தண்டருகே போய் நின்றாள். கூட்டத்துக்குள் அமைதியை விரும்பும் சலசலப்பொன்று நிலவியது. “இந்த நெருப்ப தொட்டு வாக்கு சொல்” என்று கங்குள்ள சாம்பிராணிகரண்டியை நீட்டினார் பூசாரி. 

அந்த பெண் கங்கின் மீது கை வைத்த படியே 

“என்ன எடுத்து கும்புட்டு வர்றவுகளுக்கு காவலாவும் அவுக தொட்டது தொலங்கவும் வச்சது வெளங்கவும் துணையா இருப்பேன். இது முக்காலுஞ்சத்தியம்” என்றார் அந்த பெண். 

சாமியே சத்தியம் செய்தால் தான் நம்புகிறார்கள். இந்த களரியை சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு சீலக்காரியை மலையேற சொன்னார். எந்த மலையில் ஏறச் சொன்னார் என தெரியவில்லை. சில நிமிடங்களில் அந்த பெண் ஆசுவாசநிலைக்கு வந்தார். எந்த மலையில் ஏறினார் என்றும் தெரியவில்லை. கிழக்கே சிறுமலை, மேற்கே கொடைக்கானல் மலை, வடக்கேயும் தெற்கேயும் சிறு சிறு குன்றுகளுக்கு மத்தியிலிருக்கும் பொட்டல் காட்டுத் தெய்வம் எந்த மலையில் ஏறியதோ…

மீண்டும் கொட்டுச் சத்தமும் குலவைச் சத்தமும் ஒலிக்கத் துவங்கியது. நீண்ட நெடுங்காலமாய் உறங்கிச் சலித்த ஓருணர்வு உயிர்க்கத் துடிப்பதை உணர்த்தும் விதமாக மயிர்க்கால்கள் சிலிர்க்கத் தொடங்கின. பாடம் செய்த விலங்குத்தோலில் அடிப்பதால் எழும் ஓசை, அங்கு நின்ற மனிதர்களின் தோலை ஊடுருவியதால் அவர்கள் இளகிக் கொண்டிருந்தார்கள். 

எல்லோரின் கவனமும் களரியில் நின்றிருந்தவர்களின் மீது இருக்கையில் வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களில் ஒருத்தன் குரலுயர்த்தி கத்தி கவனம் ஈர்த்தான். அவன் எங்கள் சம்மந்தகார முறை கொண்டவன் என்பதால் பூசாரி அவனுக்கு விபூதி போட்டு மலையேற்றி விடுவதற்காக சூடத்தட்டுடன் அருகில் சென்றார். ‘யாருன்னு கேட்டுட்டு மலையேத்துப்பா ‘ என்றார்கள். அவன் பேராட்டம் தள்ளாட்டமான போது “யாருப்பா நீயி ” என்றார் பூசாரி. நிகழ்காலம் திரும்பி அவன் சொன்னான் “லாட சன்னாசி ” கூட்டத்திற்குள் குசுகுசுப்பு கூடியது. 

“இது சோனையோட எல்ல. ஒன்னோட எல்லயில நீ ஆடு. இப்ப நீ மலையேறப்பா”  என்று சொல்லி பூசாரி அவருக்கு விபூதியிட்டார். இவரையும் எந்த மலையில் ஏறச் சொன்னார் என தெரியவில்லை.

கொட்டுக்காரர்கள் கொட்டி முழக்க துவங்கினார்கள். ஒரு முதியவர் கண்களைச் சுருக்கி தள்ளாடினார். அந்த தள்ளாட்டம் வெடித்தது போல் குதித்தார். கண்களில் வெறியாடத் தொடங்கியிருந்தது. கை கால்களை அவர் வீசியாடிய போது அவர் அவரின் வயதிலில்லை. அவராடும் வேகம் அவர் வயதிற்கு சாத்தியமில்லாதது. பூசாரி யாரென்று கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லாமல் நேராக சென்று சந்தனம் குங்குமம் இழுகி நுனியில் எலுமிச்சம் பழம் செருகிய அரிவாளைக் கையிலெடுத்தார். 

“எந்த கருப்பு?” என்று கேட்டார் பூசாரி. எல்லா விளக்குத் தண்டையும் தாண்டி முன்னால் போய் நின்றார்.

“மச்சங்கேளுங்கப்பா ” என்றார்கள். 

“நீ சத்தியமான கோட்டக்கருப்பணா இருந்தா எங்கையில என்ன இருக்குன்னு சொல்லப்பா ” என்றார் பூசாரி.

“சந்தனம்” என்று

 சரியாகவே சொன்னார் ஆடியவர். கூட்டத்துக்குள் ஒரு ஆசுவாச குசுகுசுப்பு எழுந்தது. உறுமியின் இழுவையுடன் மீண்டும் இசை ஆர்த்தது. சிறிது நேரத்தில் சோனை சாட்டையெடுத்து ஆடி “அரி கோவிந்தா ” என முழங்கினார். எல்லோரும் “கோவிந்தா ” என மறுமொழி சொன்னார்கள். அவன் சாட்டையை சுண்டியபோது எழுந்த பளீர் சத்தம் திகைக்க வைத்தது. பதினெட்டாம்படி சந்தன கருப்பன் இறங்கி வானத்துக்கும் பூமிக்குமாய் ஆக்ரோஷ கூத்தாடினான். சோனையைப் போல் சாட்டையை சுண்டினான். சாட்டையை சோனையிடம் கொடுத்துவிட்டு அரிவாளையும் தடியையும் எடுத்தாடினான். மனிதனுக்குள் குதிக்கும் ஒரு ஆவேசத்தை தன் பேராவேசத்தால் மிரட்டுவது போல உக்கிரமான பார்வையை சுற்றியிருந்தோர் மீது பதினெட்டாம் படியான் செலுத்தினான். எங்கள் குலக்குழுவின் எல்லைகளை விஸ்தரித்த இருபத்தோரு தெய்வங்களும் சோனையின் எல்லைக்கு வந்தாடி மகிழ்ந்தார்கள். 

கொட்டுக்காரர்கள் சோர்ந்திருந்தனர். அப்போது பூசாரி “இந்த களரியே மலையான இறக்குறதுக்குத்தான். எத்தன தெய்வங்கள் எறங்கினாலும் மலையானில்லாம எந்த தெய்வத்த எடுத்து கும்பிட முடியும்?  கோம்பமலையான் இன்னும் வரலியேப்பா. திரியெடுத்து ஆட நமக்கு தெய்வமில்லையா?” என்று புலம்பியபடியே கொட்டுக்காரர்களை ஓங்கி அடிக்கச் சொன்னார். 

அருளாடி ஓய்ந்த கோடாங்கிகளும் அருளாடாத பக்தர்களும் சேர்ந்து மலையா மலையா என்று புலம்பியபடி கரங்கூப்பியிருந்தனர். கொட்டுக்காரர்களின் பெரு முழக்கமும், பெண்களின் பெருங்குலவைச் சத்தமும் எட்டாத தூரத்தில் எவ்வுச்சியிலிருக்கிறானோ என புலம்பினார்கள். கண்ணீர் சிலர் கண்களில் திரண்டிருந்தது. சிலர் கண்களில் வழிந்து கொண்டிருந்தது. பெரும்பாலோரின் கண்களில் தாரை தாரையாக கொட்டுவது கண்ணீர் என்றே தெரியவில்லை.  ஒருவரின் துயரம் இன்னொருவரால் தேற்றப்பட்டாலும் தேற்றியவரின் துயரம் தேற்றப்பட்டவருக்கு ரகசியமாகவே இருக்கிறது. அவ்வாறான இரகசியங்களெல்லாம் அவிழ்ந்து உருகிப் பெருகி பெய்வது போலிருந்தது. 

கொட்டுக்காரர்கள் சற்று ஓய்வு கேட்டார்கள். அழுது கொண்டிருந்தவர்கள் அந்த ஓய்வை விரும்பியவர்களாக தெரியவில்லை. கொட்டுக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை கீழே வைத்துவிட்டு ஓரமாக சென்று ஒன்னுக்கு போனார்கள். கூட்டத்திலிருந்தவர்களும் ஒவ்வொருவராக டீ, பீடி என பல காரணங்களுக்காக ஒதுங்கினார்கள். ஆயினும் அவ்விடம் கூட்டமாகவே இருந்தது. நானும் அண்ணனும் ஒதுங்கி சென்று திரும்பினோம். பெண்களின் அழுகை ஓயவேயில்லை. மைக் செட்டை கூட அணைத்திருந்தார்கள். அங்கிருந்தவர்களின் சலசலப்பிற்குள்ளும் ஒரு அமைதியை உணர முடிந்தது. 

“மலையானுக்கு என்ன குறையோ?” என்ற வார்த்தைகள் வேறு வேறு குரல்களில் கேட்டுக் கொண்டேயிருந்தது. பங்காளிகள் தாங்கள் கொண்டுவந்திருந்த பழங்களை பகிர்ந்துண்டார்கள். எனக்கும் இரண்டு வாழைப்பழம் கிடைத்தது. பக்கத்திலிருந்த என் அண்ணனைப் பார்த்தேன். அவன் பற்களில் சாக்லேட் ஒட்டியிருந்தது. எனக்குத் தெரியாமலும் ஒதுங்கியிருப்பான் போலும். களரியில் நின்றவர்களே செல்போனில் உழுது கொண்டிருந்தார்கள். பலர் 4G டவர் கிடைக்கவில்லை என தவித்தார்கள். கிழவிகள் வெற்றிலை போட்டுவிட்டு நாக்கு சிவந்திருக்கிறதா என நாக்கை நீட்டி நீட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

மீண்டும் களரி கூடிய போது எல்லோர் மீதும் அழகர் கோயில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேல்சட்டை கழற்றிய ஆண்கள் வரிசையாக நின்றார்கள். பூசாரி எல்லோருக்கும் விபூதியிட்டார். அவர் சுருட்டுக்காக ஒதுங்கியிருப்பார் போலும். வீச்சம் குடலை புரட்டியது. கொட்டுச் சத்தமும் குலவைச் சத்தமும் உரக்கத் துவங்கியது. யாருக்கும் புல்லரித்தது போல தெரியவில்லை. அந்த இசையை காதும் மனமும் பழகிவிட்டதுவோ தெரியவில்லை. மலையானிறங்காத பெருங்கவலைச்சொற்கள் ஓலமாகின. சப்தங்களற்ற ஆதிமெளனத்தில் மலையான் அடங்கிவிட்டானோ…

கொட்டுக்காரர்களின் கைகளும் குலவையிட்டவர்களின் வாயுடன் அங்கிருந்த அங்காளி பங்காளிகளின் மனங்களும் சலித்த போது அனைத்தோசைகளையும் நிறுத்தச் சொன்னார்கள். அங்கு நிலவிய அமைதியின் பேரெடை எல்லாருள்ளும் அழுத்தியது. தோல் சுருங்கி உடல் வற்றிப் போயிருந்த முதியவர் முன் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. மைக்கை தட்டி அலோ… அலோ… என்றார் அந்த முதியவர். மீண்டும் கொட்டுக்காரர்கள் அவர்களின் பல்வேறு காரணங்களுக்காக ஒதுங்கினார்கள். களரியில் நிற்கும் அங்கும் பங்காளிகள் யாரும் ஒதுங்கவேண்டாம் என்று பெரிய தலைக்கட்டுகள் கட்டளையிட்டார்கள். அதனால் நகர முடியாமல் நானும் அண்ணனும் நின்று தவித்துக் கொண்டிருந்தோம். எல்லோரையும் போலவே உலர்ந்திருந்தோம். அந்தப் பெரியவர் பாடத் தொடங்கினார்.

“பிறந்தார் வடமதுரை

போய் வளந்தார் ஆ(யர்)ல்பாடி

நஞ்சு முனையில் பால் குடித்து

சொந்த மகனாய் வாழ்ந்தார்

வந்த வினைகளெல்லாம் 

தந்திரமாய் போக வச்சார்.”

அவர் குரலில் மனித பாஷைகளின் ஆதித்தனமிருந்தது. அவரின் ஒலி இழுவையில் பிரபஞ்சத்தினுடைய பெருங்காந்தத்தின் ஈர்ப்பு கசிந்தது.

“மதுரைக்கு நேர் கிழக்கே

வளருதய்யா ரெண்டு பனை

ஆண்பனை கள் குடிச்சா

அதிக போத ஆகுமிண்டு

பொண் பனை கள் குடிச்சா

போத வெறி ஆகுமிண்டு

கூந்தப்பனைகள்ளை

குடத்தோட சாய்ச்ச 

வம்பனே கிளம்பு.”

இருளுக்கஞ்சி உறங்காது பற்றி எரியும் தீக்குண்டுகள் போல கண்கள் கொண்டவன் ஒளியான விடிவை கெஞ்சி அழைப்பது போன்றிருந்தது. சீலக்காரி சாமியாடிய அந்த நடுத்தர வயதுப்பெண்ணின் தலை சுழலத் துவங்கி ஒரு பெருஞ்சுழலை சுண்டப் போவது போல ஆடினாள்.

“வரப்பாம் தலகாணி

வா மடையாம் பஞ்சு மெத்த

எங்க தொப்பகுண்டக்காரா

துளசிமணி மார்வேந்தே

அள்ளி மழபொழியும் – நீ இருக்கும்

அருவி மழச்சோங்கு

சொல்லி மழ பொழியும்

துவாராபுரி நாடு

பால வெட்டி பல் வெளக்கி 

பனையோல கொண்டு நா வழிச்சு

வெண்ணெய் திருடின கண்ணா நீ திரும்பு”

தன் வாலை தன் வாயால் கவ்விக்கொண்ட தன் ருசியறிந்த பெருநாகம் தன் வாலைத் தூ… என துப்பி தன் பெருந்தலையை ஆவேசமாக விரித்து வாய் பிளந்தால் எழுமே ஒரு சத்தம்! அது போல அந்தப் பெண்ணின் குரல் நடுங்க வைக்கும் தொனியிலிருந்தது. சோனை விளக்குத்தண்டருகே நின்றாடியவள் பெரு ஆவேச ஆர்ப்பரிப்புடன் களரியில் நின்றவர்களை நோக்கி ஓடி வந்தாள். எனக்கு நடுக்கமும் படபடப்பும் பேருச்சத்திலிருந்தது. அந்த சன்னதப்பெண் அருகில் வந்தால் நிற்பதா ஓடுவதா என்ற குழப்பத்தில் அதிர்ந்து கொண்டிருந்த போது அவர் என்னருகில் வந்து நின்று என் அண்ணனின் வலதுகரத்தை பற்றினார். என் அண்ணனைத் தொட்டதால் நானில்லை என்றெனக்கேற்பட்ட ஆசுவாசத்தை கூட அனுபவிக்க  அவகாசமளிக்காமல் என் அண்ணன் வெடித்திருந்தார். ஒரு வெடிப்பில் தோன்றிய இந்த பிரபஞ்சத்தில் ஜனித்த உயிரான அவருக்குள்,  பிரபஞ்சமே வெடித்து விட்டதோ எனத் தோன்றியது. ஆடல்வல்லான் அடிக்கும் உடுக்கின் கிடுகிடுப்பு போல் வெறிநடம் புரிந்தார்.  யாரும் அவரிடம் நெருங்க முடியவில்லை. சோனையின் விளக்குத்தண்டருகே கணியும் நெருப்புடன் புகைந்து கொண்டிருந்த திரியை, சற்று முன் என் அண்ணன் சோனையாக இருந்து, இப்போது வேறெதுவாகவோ இருக்கும் அவர் தன் இடதுகையில் எடுத்தாடினார். சாட்டையால் சுழற்றப்பட்ட பம்பரத்தின் வீசுவிசை தளர தொடங்குவது போல அவரின் ஆட்டம் தளர்ந்தபோது பூசாரி அருகில் சென்றார். 

“மலையானிங்க நிக்கிறது சத்தியம்னா இந்த நெருப்ப அள்ளி வாக்குச் சொல்லணும்” என்று சொல்லி சற்று முன் எரிந்து புகையுடன் தணலாய் கிடந்த கங்கை காட்டினார். எல்லோருக்கும் சத்தியம்தான் தேவையாய் இருக்கும் போலும். ஆதியிலே வார்த்தையாக இருந்தது சத்தியம்தானோ… 

அவர் நெருப்பை அள்ள குனிந்தபோது மின்சாரத் தடையால் அனைத்து விளக்குகளும் அணைந்து அவ்விடமே இருளடைந்தது. அவர் நெருப்பை அள்ளி நிமிர்ந்தபோது சுழன்று வீசிய காற்றில் அவர் கைகளிலிருந்த கங்குகள் பற்றிக்கொண்டன. தாண்டவமூர்த்தியை வேர்களாய் கொண்ட உஷ்ணமான ஒளியின் துளியை ஏந்தி “இந்த களரிய நானு ஏத்துக்கிட்டனப்பா” என்றார். களரி முடிந்தபின் அண்ணனின் கைகளைப் பார்த்தேன். சிவந்த கைகளில் ஒரு சின்னக்காயம் கூட இல்லை.

வீட்டுக்கு போனபின் செல்போனை நீவிப் பார்த்தேன். களரியில் நடந்த எதையும் நேரடியாக அனுபவிக்காமல் பல கோணங்களில் செல்போனில் அனுபவித்து அதனை நூற்றுக்கணக்கில் காணொளிகளாக வாட்சப் குழுவில் பகிர்ந்திருந்தார்கள். என் பெற்றோருடன் தற்போது மலையானின் குதிரையாகிவிட்ட என் அண்ணனும் கூட அந்த காணொளிகளைப் பார்த்து மலர்ந்தான்.

நான் அந்த வாட்சப் குழுவை விட்டு உடனே வெளியேறினேன்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.