அமலி வாசலில் நின்று வலதுகையில் வளையலை மாட்டிக்கொண்டிருந்தாள். தோள்பையின் ஒருவார் மட்டும் தோளில் நிற்காமல் சரிய வலதுதோளை மட்டும் உயர்த்தி சரிசெய்தாள். அது மீண்டும் சரியக் காத்திருந்தது. தண்ணீர் வாளியோடு வந்த அம்மா, “ அம்மாச்சி வாங்கிக் கொடுத்து எத்தன வருஷமாச்சு. பீரோவுல ஒருமூலையில கெடந்தத இப்பதான் எடுக்கத் தோணுச்சாக்கும்,” என்றாள்.
புன்னகைத்த அமலி, “ அம்மா. . மெர்சியோட வேன் வரைக்கும் போம்மா. . ஸ்கூல் பேக்ல நாப்கின் எடுத்து வச்சிருக்கேன். பாத்து சொல்லி அனுப்பும்மா. . சரியா சாப்பிடலன்னா. .” என்றவளைத் தடுத்து,
“ எனக்கு தெரியாதா. . . . ஏசப்பா…குழந்தைகள பத்து பதினோரு வயசிலேயே இந்த சுழல்ல விடறியே. . இப்பவாச்சும் எட்வின் வேணுன்னு புரிஞ்சுதே. .” என்றபடி உள்ளே சென்றார். அமலி கையிலிருந்த அலைபேசியில் வாட்ஸ்ஆப்பை ஒருமுறை பார்த்துவிட்டு தெருவில் நடந்தாள்.
செப்டம்பர் இரவில் பெய்த மழையின் ஈரமும் எஞ்சியிருந்தாலும், வரப்போகும் மழைக்கான புழுக்கம் அனைவரையும் எரிச்சல் கொள்ள செய்தது. எவ்வளவு வெயிலுக்குப் பிறகு இந்த மழை என்று வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். மட்டான வெளிச்சத்தில் தொலைவில் புகைபோல நீராவி எழுந்து மறைத்திருந்தது.
புன்னகைத்துக் கொண்டாள். பாட்டு கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஸ்டீஃபன் வீட்டில் பறிக்காமல் செடியிலேயே விடப்பட்டிருந்த சந்தனமுல்லையின் மணம் ஒருகுளிரைப்போல தொட்டது. உடல் சிலிர்க்கவும் கைகளைத்தேய்த்தபடி நடந்தாள். கலங்கிய கண்களை கைக்குட்டையால் துடைத்தபடி பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றாள்.

“ குட்மானிங் டீச்சர்,” என்றபடி கிருத்திகா வேகமான நடையில் வந்தாள்.
“ குட்மானிங் டீச்சர்,” என்றபடி மீண்டும் மின்னிமறையும் தன் அலைபேசியை அமலி பார்த்தாள்.
“சாரோட காலைவணக்கத்துக்காக வெயிட்டிங்கா?” என்று புன்னகைத்து, “மெர்சிய மனசிலவச்சி முடிவடுத்தது நல்லது,” என்றாள்.
எதுவும் பேசாமல் புன்னகைத்த அமலி பேருந்து நிறுத்தத்திலிருந்து வடப்பக்கமாக இருந்த தேவாலயத்தைப் பார்த்தாள். நித்தியமாக விரிந்து அழைத்து கொண்டிருந்த கைகளைக் கண்டதும், “கர்த்தாவே,” என்று மனம் எழ நெஞ்சில் கைவைத்துக் கொண்டாள்.
பள்ளியில் காலாண்டுத்தேர்வுகள் நடந்துகொண்டிருந்தன. காலைத்தேர்வுக்கான பிள்ளைகள் தேர்வறைக்கு சென்றதும் பள்ளி மெளனமானது. ஆசிரியர் அறையின் சன்னல் வழியே அங்கங்கு தண்ணீர் தேங்கி ஈரமான மைதானத்தில் ஊறிய இலைகள் கிடப்பதை பார்த்துக்கொண்டிருந்த அமலி கண்களை உயர்த்தினாள். மேகங்களுக்கு பின்னால் தயங்கி நின்ற ஔியால் விளிம்புகள் ஔிர பொழியக்காத்திருந்தது மழை.
அடுத்த மழைகாலத்தில் இந்நேரம் எல்லாம் சரியாக அமைந்திருக்கும் என்ற எண்ணம் வந்ததும் அறைவாயிலுக்கு வந்தாள். மெல்லிய காற்று தொட நின்றாள்.
சிவசந்திரன், “ டீச்சர்… ட்டீ குடிக்கிறீங்களா?” என்று ஒருகோப்பையை அவளிடம் நீட்டிய பின் தூணருகே நின்றார். மைதானத்தின் மரங்களைப் பார்த்தபடி, “ எதையும் ரொம்ப யோசிக்காதீங்க டீச்சர்…இப்ப இருக்கற இருப்பில மெர்சிய தனியா பாத்துக்க முடியுமா?” என்றார்.
அவர் முகம் பார்த்துதிரும்பி, “தேங்க்ஸ் சார். இன்னிக்கு அம்மா கிட்ட தெளிவா பேசலான்னு சொல்லிருக்காரு . .” என்றபடி பின்னால் நகர்ந்து நின்றாள்.
அவர் கொஞ்சம் சலிப்பாக,” என்னத்த பேசிக்கிட்டேயிருக்கீங்க. . மனசு ஏற்க நல்ல விஷயத்த தள்ளிப்போடாதீங்க. . சார் உங்கக்கிட்ட பேசறாரா…நீங்க முதல்ல பேசறீங்களோ என்னமோ ஆண்டவனுக்குதான் வெளிச்சம்,” என்றபடி நகர்ந்தார். அமலி பெருமூச்சு விட்டபடி தூணில் சாய்ந்து கொண்டாள்.
“எட்வின் மாமா…. நில்லு. நானும் வர்றேன்…. அம்மாச்சி இன்னும் வரலயா?” என்றபடி ஞாயிறு வழிபாட்டிற்கு பிறகு முழுப்பாவாடையை தூக்கிப்பிடித்தபடி அமலி படிகளில் இறங்கினாள். தேவாலயத்தின் பின்வாயில் வழியாக தெருவிலிறங்கி ஓடிவந்து மூச்சுவாங்க , “ அம்மாச்சி இன்னிக்கி என்ன ஸ்பெசலா செஞ்சிருக்காங்க,” என்றாள். அமலியின் மெல்லிய சரிந்த முக்காடை இழுத்துவிட்டபடி, “ இப்படியே தின்னுதாண்டி பல்கீஸ்ஸா இருக்க. .” என்ற எட்வினை பெண்கள் கும்பலோடு வந்த அம்மாச்சி தலையில் குட்டினாள்.
எட்வின் அருகில் அமர்ந்து சாப்பிடுவது அவளுக்கு எப்பொழுதுமே பிடிக்கும். இடையில் அவளுக்குப் பிடித்த எதையாவது தன் தட்டிலிருந்து எடுத்துக்கொடுப்பான். இவள் கடிக்கமுடியாத எழும்புகளை அவன் தட்டில் போட்டுவிடுவாள். லூசியானா சித்திதான் இதென்ன பழக்கம் என்று கண்டிப்பாள்.
எட்வின் முதுகலைத் தேர்வு எழுதிவிட்டு விடுமுறையிலிருந்த நாட்களில் அமலி ஆசிரியப்பயிற்சி முடித்திருந்தாள். ஆசிரியர் வரன் ஒன்று வரவும் வீட்டில் திருமணப்பேச்சு தீவிரமாக இருந்தது.
“இப்பதான் இருபதுவயசு. . கொஞ்சநாள் போகட்டும். .” என்ற அம்மாவிடம் அப்பா, “ வேலயில இருக்க பையன் கிடைக்கனுமே. .” என்றார். சரி என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. அனைத்தையும் பார்த்துக்கொள்ள அப்பா இருக்கிறார் என்று அமலி தலையாட்டினாள்.
அந்த வாரத்தின் ஞாயிறு வழிபாட்டிற்குச் சென்றிருந்த போது கெபியின் வாயிலில் இருந்த மக்தலேனாலின் சிலையருகே நடந்த எட்வினிடம் அமலி ஓடி வந்தாள்.
“ மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்றான்.
“ தெரியல எட்வின். . அப்பா சொல்றார். .” என்று விழித்தவளிடம் கெஞ்சும் குரலில், “ யோசிச்சு பாரு அம்மு. . அப்பா சொன்னாலும் உனக்கு பிடிச்சிருக்கனும்,” என்றான். அதற்குள் அவளை அம்மா அழைத்தாள். தோட்டத்தைக்கடந்து தேவாலயத்தினுள் மறையும் அவளைப் பார்த்தபடி வளர்ந்த ரோஜாசெடியின் கீழ் நின்றிருந்தான்.
மக்தலேனாலின் சிலைக்கு கீழே வேண்டுதலுக்காக கட்டப்பட்டிருந்த மஞ்சள் கயிறுகளைத் தொட்டுப்பார்த்தான். எதையோ தேடும் மக்தலேனாலின் முகத்தை பார்த்தபடியிருந்த எட்வின் திரும்பி கீழே கிடந்த கல்லை கால்களால் எத்திவிட்டு நடந்தான்.
அமலி ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது, அமலியின் கணவர் விபத்தில் இறந்தது தெரிந்ததும் அதுவரை மனஸ்தாபத்தில் இருந்த அம்மாச்சி பறந்துவந்தாள். அந்தக் கைவிடப்பட்ட தருணத்தில் அம்மாச்சியும், லூசியானா சித்தியும் கைப்பிடித்துக் கொள்ளும் பிடிமானமாக இருந்தார்கள். அடுத்து வந்த நாட்களில் அவளின் கருணை அடிப்படையிலான வேலைக்காக மாதக்கணக்காக எட்வின் அலைந்துகொண்டிருந்தான்.
“எல்லா பேப்பர்ஸ்சும் சம்மிட் பண்ணியாச்சு. . அமலிக்கு வேலை கெடச்சிரும். .” என்றபடி மதியச் சாப்பாடு முடித்து வராண்டாவில் கிடந்த நாற்காலியின் அமர்ந்தான்.
அப்பா நேரடியாக, “அமலிய மேரேஜ் பண்ணிக்கிறியா?” என்றார்.
உள்ளிருந்து அம்மாச்சி, “அவன என்னக் கேக்றது. பண்ணிவச்சிடலாம். எம்பேத்திக்கு இந்தக் கஷ்டம் வேணாம். .” என்றார்.
திருமணம் முடிந்த சிலநாட்களில், “ அம்மாகூட இருந்துட்டு வர்றேன்,” என்று வந்தவள் அடுத்த தெருவிலிருந்த எட்வினிடம் திரும்பிச் செல்லவில்லை.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எட்டாம் வகுப்புக்கான தேர்வறையில் அமலி நுழைந்தாள். வினாத்தாள் கொடுத்த பிறகு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். தேர்வெழுதுவதில் மும்முரமாக இருந்த பவித்ராவை கடக்கும்போது தோளில் தட்டி மெதுவாக, “ டாப்ச பின்னாடி இழுத்துவிட்டு ஒக்காரும்மா. .” என்றபடி நகர்ந்தாள்.
மெர்ஸியின் நினைவு வந்தது. இந்த ஆறுமாதத்தில் நிகுநிகு வென்று வளர்ந்துவிட்டாள். வெண்ணெய்யில் பிடித்து வைத்த பொம்மை என. நினைக்கும் போதே உள்ளுக்குள் அமிலம் சுரந்தது. பொருந்தாத வளர்ச்சி. அவளுக்கு இன்னும் மனம் பெண் எனத் தெளியவில்லை.
சட்டென்று எட்வின் நினைவிற்கு வந்தான். ஆறு மாதத்திற்கு முன்பு தேவாலயத்தில் மெர்சிக்கு நடந்த பூசைக்காக எட்வின் வரவேண்டியிருந்தது. மேசையில் கிடந்த அலைபேசியைப் பார்த்தாள். சாயுங்காலம் வருவானா..மாட்டானா? என்ற எண்ணத்தை மாணவன் ஒருவனின் குரல் கலைத்தது.
பகலில் ஓசைகளில்லாத அந்தக் கிராமத்தின் அமைதி மனதை சாந்தமாக மாற்றியது. தன் சீரான மூச்சை உணர்ந்த அமலி அதுவரை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள். என்னவாயிற்று மறுபடியும். மீண்டும் அதே சிக்கல். அன்று அமலியாக இருந்த மையம் இன்று மெர்சியாக மாறியிருக்கிறது. எனக்கு என்னதான் வேண்டும் என்று தெரியவில்லை. இல்லை தெரிகிறது. மறைப்பது எது?
உள்ளங்கை வியர்வையை கைகுட்டையில் துடைக்க துடைக்க அது வியர்த்துக் கொண்டேயிருந்தது. எட்வின் வராண்டாவில் அவனுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அவள் மனதிற்குள் வந்தது. மனம் மீண்டும் இல்லை என்றது. இது என்னையே நான் வீழ்த்திக்கொள்ளும் கண்ணி. ஒருபார்வை , ஒருசொல், ஒருமுகக்குறிப்பு அன்று உணர்த்திய எள்ளலை மீண்டும் கண்டால் எழுப்பிய அனைத்தும் சரியும். ஆனால் உள்ளுக்குள் மிக ஆழத்தில் எட்வின் முகம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான்.
ரோஐாவின் முட்களும் மென்மையானவை. மற்றவர் பார்வைக்குத் தெரிந்தாலும் மனம் உணர்வதில்லை. அந்தச் சிரிப்பை என்ன செய்வது? எந்த எடையை வைத்து அதை மூழ்கடிப்பது. இன்றுவரை இறங்காத நான்தான் அவன், அல்லது இன்றுவரை தருக்கும் அவன்தான் நான் என அமலியின் மனம் சுழன்றுவந்தது.
மழையால் சாலைகளின் பழுதின் காரணமாக சாயுங்காலம் மிகத்தாமதமாக வந்த பேருந்து வேகமெடுத்தது. அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது கொண்டேயிருந்தது.
“அப்பா…டேமேஜ் இல்லாத நாள்,” என்று கிருத்திகா மெதுவாக சொல்லிக்கொண்டாள். மழையும் விடுமுறையும் மனதின் எடையற்ற தன்மையும் ஏதா ஒருவகையில் பின்னிப்பிணைந்த ஒன்று, காலமும் மனமும் லயிக்கும் புள்ளி என்று அமலியின் மனம் ஆழ்ந்தது.
மழைக்கான முன்தோற்றம் கொண்டது வானம். என்றாலும் மேற்கு வானின் சூரியன் வட்டத்தகடென தெளிந்து இருந்தான். சூரியனின் ஔிபட்டு பெரும்பாறைகளால் ஆன பொன்மலை சோபையுடன் எழுந்து நின்றது. கோல்டன் ராக் என்று அழைக்க இந்த நேரத்தில் இந்தக் காலத்தில் பார்த்த மனதிற்கு தோன்றியிருக்கும் என்ற எண்ணம் எழ புன்னகைத்தாள்.
கிருத்திகா, “ என்ன தனியா சிரிப்பு?” என்றாள். நிறுத்தத்தில் இறங்கும் பொழுது உள்ளுக்குள் பதக் பதக் என்ற தாளம் கேட்டது.
வேகமாக நடந்து சாலையைக்கடந்து நிமிரும் போது வீட்டுத் திருப்பத்திலிருந்து லூசியானாசித்தி வருவது தெரிந்தது. அமலி அங்கேயே நின்றாள். பின்னால் எட்வின். இத்தனை ஆண்டுகளில் கடந்து போகும் எதார்த்தப் பார்வைகளைத் தவிர்த்து இன்றுதான் நின்று நிதானித்துப் பார்க்கிறாள்.
இதுவரை மனதில் இருந்த உருவம் அல்ல இவன். நெருங்கி வந்து கொண்டிருந்தான். கொஞ்சம் பூசிய உடல் அவன் உயரத்தை நிறத்தை அதிகமாகக் காட்டியது. அடர்ந்த மீசை. இன்னும் அருகில் வந்திருந்தான். மிகமெல்லிய பசுமை படர்ந்த கன்னங்கள். அந்த பழுப்புக் கண்கள் மட்டும் அப்படியே இருப்பதை அவனிடம் இப்பொழுதே சொல்ல வேண்டும். மெர்சிகூட பேசறியான்னு கேக்கனும் என்று மனதிற்குள் தோன்றியது. மனதை கவனித்துக் கொண்டேயிருந்தது அவளின் புத்தி.
புறக் கவனமற்ற இவளை லூசியானா கடந்து சென்றிருந்தாள். இவளைப் பார்த்தபடியே வந்து, “ஆன்ட்டிக்கிட்ட பேசியாச்சு. .” என்று நடந்தான். இவள் பார்த்தபடி நிற்க திருப்பத்தில் மறைந்தான்.
அமலி உள்ளே நுழைந்ததும் அம்மா, “ வழியில அவங்களப்பாத்தியா. . அவனுக்கு சில டிமாண்ட்ஸ் இருக்கு அமலி…நீயும் இப்பவே சரிக்கு சரியா பேசிடனும்,” என்றார்.
“ மெர்சி ஸ்கூல் வேன் வந்திரும். .” என்றதும் அம்மா கிளம்பினார். இரவு ஜெபத்திற்காக கண்களை மூடியிருந்த மெர்சி எழுந்து படுத்தாள். நிர்மலமான அவள் முகத்தைப் பார்த்து என்ன சொல்வதென்று யோசித்தபடி போர்வையைப் போர்த்திவிட்டு தட்டிக்கொடுத்தாள்.
மற்றவர்கள் நினைப்பதைப்போல மெர்சி எனக்கு பாரமா இல்லை நானே எனக்கு பாரமா?. என் உள்ளே உறைந்திருக்கும் என்னை மீறி எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்குமா? இத்தனைக்கு கணக்குப்போடும் எந்திரத்தனமானவளா நான். உள்ளிருந்த ஈரத்தை கடைசி சொட்டுவரை இறுக்கிப்பிழிந்து உலரவிடுகிறேன். மீண்டும் ஈரம் படரும் வேளைகளை கண்காணிக்கிறேன். மனதை மாற்ற எழுந்து சென்று செடிகளுக்கு தண்ணீர் விட்டாள். சட்டென்று எதற்காக மாறணும் என்ற கேள்வி அவள் மனதிற்குள் எழுந்து பதில் தேடியது. மெர்சியின் பக்கம் மட்டுமே தன்னால் நிற்க முடியும் என்பது அவளுக்கு உறுதியாக தெரிந்ததும் படுக்கைக்குச் சென்றாள்.
***