குளக்கரை

இரண்டாம் பாலினத்திற்கு அப்பால்

மிகப் பெரும்பாலும் சொல்லப்பட்டதும், மிகக் குறைவாக புரிந்து கொள்ளப் பட்டதுமான இந்தக் கூற்றை இவ்வாறும் சொல்லலாம், ’பிறப்பில் அடையாளப்படுத்தப்படும் பாலினம் வளர்கையில் தான் உணரப்படுகிறது’ . பெண்ணாகப் பிறப்பதில்லை ஆனால் பெண்ணாகிறார்கள் என்று சிமோன் த பௌவாரின் தத்துவம் அவரின் நூல்களில் வருகிறது. இயற்கைக்கும், வளர்தலுக்குமான விவாதத்தில் ஒரு தாயத்து போல என்று புரிந்து கொள்ளலாம். ஹெச்.எம் பெர்ஷ்லி, ஜுடித் பட்லர், கரோலினா பெர்ல்ஸ் போன்றவர்களையும் குறிப்பிட்டு சிமோன் த பௌவாரின் ‘இரண்டாம் பாலினத்திற்கு அப்பால்’ என்ற நாவலையும், பெண்ணியக் கோட்பாடுகளைப் பற்றி பௌவார்
சொன்னதையும், மறைமுகமாகச் சித்தரித்ததையும் கிர்க் பேட்ரிக் எழுதிய நூலான பௌவாரின் வாழ்க்கைச் சரிதத்தின் விமர்சனத்தை சாரா திதம் எழுதியுள்ளதைப் பார்க்கலாம்.

இன்றைய பெண்ணிய சிந்தனைகளில் பௌவார் எந்தெந்த இடங்களில் மிகப் பொருந்துவார் என்ற ‘குளவிகூட்டுக்’ கேள்வியை நேரடியாக எதிர் கொள்ளாமல் கிர்க் தவிர்த்திருந்தாலும், ’பெண்’ என்ற அடையாளச் சொல்லை மாற்றி ‘கர்ப்பம் தரிப்பவர்’, ‘மாத விடாய் ஏற்படுபவர்’ என்று சுட்டும் சொற்களை அவர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்று திடமாகச் சொல்கிறார். டாரதி பார்க்கர் பெண்களை ‘மனிதர்கள்’ என்று பொதுவாகக் குறிப்பிடலாம் என்று சொல்வதையும் பௌவார் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆண், பெண் இருவருக்குமான வாய்ப்புகள் வெவ்வேறு என்பதால் பொதுவில் ‘மனிதர்கள்’ என்ற சொல் ஆணை அதிகமாகச் சுட்டும் ஆபத்தும் இருக்கிறது. (மென்மையான சொற்கள் சொல்லளவில் மென்மைதான். ஆனால், அது நிலை மேம்பாட்டிற்கு எவ்வகையில் உதவுகிறது என்பதும் கேள்வியே.’ஹரிஜன்’ ‘தலித்’ என ஆனதைப் போல).

ஆண்களை முன்னிறுத்தியே உலகம் செயல்படுகிறது. ஆணின் ‘இயல்பு நிலை’ என்ற ஒன்றை உலகம் ஒத்துக்கொண்டு செயல்படுவதால், பெண்ணைக் குறிக்கும் தனி அடையாளம் இல்லாது போனால் பாலினமும், போகப் பாலுணர்ச்சியும் மட்டுமே சுட்டும் பொருளாகிவிடும். பௌவாரின் வாழ்க்கையில் அவரின் அத்தனை திறமைகளையும் பின் தள்ளி அவர் ஒரு இரண்டாம் இடத்திற்கு உரியவர், மற்றவர் என்றேதான் குறிப்பிடப்பட்டார். சாத்ரே இறந்த போது அவர் அவருடைய தத்துவச் சிந்தனைகளுக்காகப் பெரிதும் நினைவு கூறப்பட்டு அவருடைய சக மாணவியும், மனைவியுமான பௌவார் பெரிதும் மறக்கப்பட்டார். ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் பௌவார் இறந்தபோது அவரது தனிப்பட்ட சிறப்புகள், திறமைகள் பின் தள்ளப்பட்டு சாத்ரே தான் இரங்கற் செய்தியில் பெரிதும் நினைவு கூறப்பட்டார். பொது புத்தி இது எனத்தான் சொல்லவேண்டியிருக்கிறது.

அவர் எழுதிய ‘Beyond the Second Sex’ குமட்டல் எடுக்க வைக்கும் பேத்தல் என்றே விமர்சிக்கப்பட்டது. இருந்தும் அவர் தன் அந்தரங்க வாழ்க்கையில் சாத்ரேயை பின்பற்றுபவராகக் காணப்பட வேண்டிய சமுதாய கட்டுப்பட்டிற்குள் இருந்தார் என ஊகிக்கமுடிகிறது. அவரை முதலில் சந்தித்த போதே பௌவாருக்கு காதலன் இருந்திருக்கலாம்; ஆனால், அவர் அதைப்பற்றி நேர்முகமாகச் சொல்லவில்லை. பின்னரும்கூட சாத்ரேயும், அவரும் பலருடன், குறிப்பாக இளம் பெண்களுடன் கொண்ட உறவு, அதில் ஒரு பெண்ணிடம் கண்டனத்திற்குரிய விதத்தில் இருந்த பௌவாரின் நடத்தைக்காக அவரே வருந்துவது, குடித்து, உடல் நிலை சீர்கெட்டு, மாவோயிசத்தினால் சென்று சேர்ந்த அறுதி இருளுமாக சாத்ரே இன்னமும் கொண்டிருந்த மறு பால் உறவு போன்றவற்றை கிர்க் பேட்ரிக் மிகத் திறமையாகக் காட்டுகிறார்.பல ஆண்களை நேசித்தாலும் பௌவார் சாத்ரேவிற்கு உண்மையாக இருந்தார். சாத்ரேயின் தத்துவங்கள் மற்றும் விழுமியம் சார்ந்த நடத்தைகள் ஆகியவை பௌவாரிடம் பெற்ற கொடை என்றே சொல்லலாம்.

பௌவாரின் அருமையான இந்தப் புதினத்தில் 15% நீக்கி பார்ஷ்லி செய்தது உண்மையின் குரல்வளையை ( பெண்ணியக் கோட்பாடுகள் சொல்லப்படாமல்) நெறிப்பது போலத்தான் என்று கிர்க் சொல்கிறார்.ஆனால். பௌவார் என்ற ஒரு நபரை, அவரின் சிக்கல்களுடனும், சிந்தனைகளுடனும், வாழ்வுடனும் அருமையாக படைத்திருக்கிறார் கிர்க்.

இந்தியாவில் அர்த்தநாரி என்று சிவனும், உமையும் சரிபாதியாக நிற்கும் கடவுள் உரு வணங்கப்படுகிறது. ஒரு நாவலில் அல்லது சிறுகதையில் தி. ஜானகிராமன் எழுதுவார்:

‘சரிபாதிதான், கண்ணும், ஒரு முலையும், இடை வளைவும்
காட்டிக்கொண்டுதானிருக்கின்றன.’

1880-ம் ஆண்டு இந்தியாவில் ரேங்க்டாங்கில் இடமில்லா குறுகிய செங்குத்தான பள்ளத்தில்  இரயில் பாதையை எப்படி அமைப்பது என பொறியியலாளர் தவிக்கையில் மேலிருந்து கீழ் நோக்கிச் இறங்குவதைத் தவிர்த்து பின்னோக்கி செல்லுமாறு ‘Z ‘வடிவ இரயில் பாதையை அமைக்க வழிகாட்டி சிக்கலைத் தீர்த்தவள் அவர் மனைவி!

https://literaryreview.co.uk/beyond-the-second-sex


         செல்வம் குவிக்கும் உரிமம்

முடியாட்சியின் இறுகிய பிடியை நாம் அவ்வண்ணமே இன்று உணர முடியாது என்று நினக்கிறோம். அது வேறு வடிவில் உலகளாவிய சக்தி மையமாக, வணிக நோக்குள்ள குழுவின் நன்கொடைகளால், அவர்கள் தன்னல நோக்கோடு பரிந்துரைக்கும் கருத்துக்களால், உலகம் தழுவிய நிதி நிறுவன செயல்பாடுகளால், உலகச் சந்தையால், அரசுக்கொள்கைகளில் பெரும் வணிக அமைப்புகள் செலுத்தும் ஆதிக்கத்தால், நவீன கண்காணிப்பு முதலாளியத்தால் திரட்டப்படும் மக்கள் திரள் மற்றும் தனி நபர் பற்றிய செய்திகளால் அழிக்க முடியாத அசுர சக்தி என இருக்கிறது.’

*William Dalrymple எழுதிய ஐநூறு பக்கங்கள் கொண்ட ‘The Anarchy’ இந்தியாவில் பிரித்தானியர்கள் செய்த அராஜகக் கொள்ளையை எடுத்துக்காட்டுகிறது. இந்திய வார்த்தையான ‘லூட்’ என்பதே முதலில் பிரித்தானியர் அறிந்தது என்கிறார் அவர். இவரின் மிகப் புகழ் பெற்ற ஆக்கங்கள் The Last Mughal , Return of a King. அந்த வரிசையில் இதுவும்  மிகச் சிறந்த ஒன்று. இன்றைய ‘இங்கிலாந்து தேசீயப் பெருமிதத்தில்’ இது பாராட்டப்பட வேண்டிய நூல் மட்டுமல்ல, அவரின் துணிவையும் குறிக்கும் ஒன்றாகும்.

குலாம் ஹூசைன் கான், ஷா ஆலம் , பிரித்தானிய, ப்ரெஞ்ச், முகலாய, நவாப்கள், மைசூர் சுல்தான்கள் ஆகியோரின் வரலாற்றையும் இணைத்து கிழக்கிந்தியக் கம்பெனி அடித்த கொள்ளையைப் பற்றி இந்த நூல் பேசுகிறது. அதே நேரம் சமகால அரசியல் சூழலை, அதன் கட்டமைப்பாளர்களான பேராசைக்காரர்களை நோக்கி அதன் மையம் குவிவதை
உணர முடிகிறது. Simon Kuper சொல்வதை இங்கே பார்ப்பது பொருத்தம் :

’தன் கடந்த காலத்துடன் தொந்தரவுகளற்ற உறவும், புதிதான எதைப் பற்றியும் சந்தேகமுமுள்ள தனிப்போக்குள்ள பிரிட்டன்’

அதிகாரமுள்ள தேவாலயத் தலைமையிடம் சொன்ன வார்த்தைகளையும் மீறி எலிசெபெத் ராணியின் அரசு கிழக்கிந்திய கம்பெனிக்கு வர்த்தகத்திற்காக கடல் வழியில் இந்தியா போன்ற நாடுகளுக்குச் செல்ல அனுமதி அளித்ததில், 1608-12 ஆண்டுகளில் சூரத்தில் கிடங்கு அமைத்ததும், சார்ல்ஸ் தன் மனைவிக்குச் சொந்தமான பாம்பே தீவுகளை கம்பெனியாருக்குக் குத்தகைக்கு அளித்ததும் பின்னர் இராணுவ பாதுகாப்பு தேவை என வணிக வற்புறுத்தலும், அதற்கு அரசு இணைவதுமாக இவ்வரலாறு தொடங்குகிறது. 1709-ல் மேன்மைமிகு கிழக்கிந்திய கம்பெனி எனப் பெயர் மாற்றப்பட்டாலும், செயலில் அட்டூழியம் தொடர்ந்தது. 1757-ல் ராபர்ட் க்ளைவ் ப்ளாஸி போரில் வென்றதும் 1764-ல் பக்ஸாரில் வரி வசூல் தொடக்குமாக (அனுமதி பெற்றதென்னவோ முகலாய அரசுகளை பயமுறுத்தியும், நிர்ப்பந்தம் செய்தும்) அவர்களின் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றது ; ஆங்கில அரசே மேன்மையெனவும், அவர்கள் உலகையே ஆளும் திறமை கொண்டவர்கள் என்றும் மிதமிஞ்சிய பெருமை கொண்டார்கள். 2,50,000 நபர்கள் கொண்ட தனிப்பட்ட இராணுவம் கம்பெனியிடம் இருந்தது.

1769-ம் வருடம் மிகக் கொடும் பஞ்சம் வங்காளத்தைப் புரட்டிப் போட்டது. அது இயற்கையாக நேரிட்டதில்லை.விளை பொருட்கள் யாவும் பிரிட்டனுக்குச் சென்றன. வரி விகிதம் அதிகச் சுமையானது. செலுத்த மறுத்தவர்களைக் கழுவில் ஏற்றினார்கள். **கல்கத்தா துறைமுகத்திற்கு கோதுமை தானிய மூட்டைகளுடன் வந்த ஆஸ்திரேலிய கப்பல் ஒரு மணி கோதுமையைக் கூட இறக்காமல் லண்டனுக்குத் திருப்பிவிட ஆணையிடப்பட்டது இலட்சக்கணக்கில் இந்தியரின் பிணக் குவியலின் மேலே கம்பெனி £1086255 லண்டனுக்கு அனுப்பியது. வரலாறு காணாத விதமாக 12.5% ஈவுத்தொகையை பங்குதாரர்கள் பெற்றார்கள். தொழில், வருமானம், சுய கௌரவம், செல்வம் இவற்றுடன் உயிரையும் இழந்த இந்தியர்களின் இரத்தக்கறை படிந்த அந்த சொத்துக்கள் அவர்கள் மனதை உறுத்தவில்லை. அவ்வப்போது எழும் அற உணர்வினையும், அராஜகத்தையும், அவலத்தையும் பற்றி சில பத்திரிக்கைகள், வெஸ்ட்மினிஸ்டர் நிர்வாகம் பரிதாபப்பட்டது. எந்த நிலையிலும் வீழக்கூடாத பெரும் பணக்கார நிலையைத்தக்க வைத்துக்கொள்ள கம்பெனி செய்தவைகள் அரசுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்பெனி திவாலாகியது. 

**1700 களில் உலக அளவில் 27% ஆக இந்தியாவில் இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 1800 களில் 23% ஆகவும் பிரித்தானியர்களின் 250 வருட ஆட்சிக்குப் பிறகு 3% என்றானதான செய்தி குறிப்பது எதை? 1900-47 ஜி டி பி 0.0001% என்றானது சொல்வது எதை? பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற போது இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்த மக்கள் 90%;சராசரி வாழ்நாள் 27 வருடங்கள்.படிப்பறிவு சுமார் 17% கனரக தொழிற்சாலைகளும், அறிவியல் ஆய்வகங்களும், படிப்பறிவில் கூடுதலான வளர்ச்சியும், சராசரி ஆயுள் உயர்வும் அவர்கள் சென்ற பின்னர் ஏற்பட்ட முன்னேற்றங்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியர்கள் இப்பொழுது 27% இன்றைய மதிப்பின் படி $15 ட்ரில்லியன் சொத்து அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நம் செல்வம், நம் வளம், நம் நாட்டின் தனித்த செழிப்பான அமைதி, கல்வி, கலாசாரம், தொழில் நுட்பம், நம் கௌரவம், அனைத்தும் வணிகத்திற்காக வந்த கம்பெனியினரால் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அரசு தன் எல்லைகளை விரிவுபடுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அதைப் பயன்படுத்தி, வன்முறையாலும், பயமுறுத்தலாலும், நம்மிடையே பிளவை (ஜகத் சேத் என்ற பணக்காரர் சிராஜ் உல் தௌலத்தை பதவியிறக்குவதற்காக £2 மில்லியன்களை பிரித்தானிய கம்பெனிக்கு வழங்கினார்) ஏற்படுத்தி இன்னமும் மீளும் முயற்சியிலேயே நம் வளர்ச்சித் திட்டங்களை அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இன்றும் அதற்கான இழப்பீடோ, வருத்தமோ (ஜாலியன் வாலா பாக் படுகொலை ஒன்று போதுமே) பிரிட்டன் அரசோ, அரசக் குடும்பமோ தெரிவிக்கவில்லை. நம் வாழ்வு மேம்பட அந்தச் செல்வம் இன்றியமையாதது அன்றோ?

முறைப்படுத்தப்படாத பெரு நிறுவனங்கள்,அவர்களின் செயல்பாடுகளை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ ஆதரிக்கும் அரசு இரண்டுமே வன்முறையைத் தவிர வேறொன்றுமில்லை. வன்முறை அழிவுப் பாதையில் வேகமாக மக்களைத் தள்ளிவிடும். நூலாசிரியர், பன்னாட்டு நிறுவனங்களின் பேராசையை அதை அரசுகள் அவியிட்டு வளர்த்ததை Anglo Persian Oil, United Fruits, Guatemala, ITT at Chile மூலம் சொல்கிறார். முதலீட்டார்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்காகச் செயல்படும் நிறுவனங்கள், உலகின் வளங்களை உறிஞ்சி சிறு அளவில் அதி பெரும் பணக்காரர்களை உருவாக்கி அதனால் அதிகாரமையத்தில் அவர்கள் குரலே ஓங்கி ஒலிக்க வழி செய்வதைச் சுட்டுகிறார். ஆனால், கிழக்கிந்திய கம்பெனியின் சமகாலத்தில் நடந்த அடிமை வணிகம், டச்சுக் கம்பெனியார் செய்த அட்டூழியங்கள், போதைப் பொருள் வணிகம் அவை இன்றைய உலகை கரியமில வாயுக் கிடங்காக மாற்றியுள்ள அவலம் ஆகியவற்றைச் சொல்லவில்லை. (2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் 335 எம் பிக்களின் சொத்து தலா ரூ 6 கோடி அளவில் 2014-19 கால கட்டத்தில் வளர்ந்துள்ளது. கட்சி பேதமின்றி பெரும்பான்மை எம்.பிக்கள், பெரும் ஆலை முதலாளிகள், வணிக நிறுவனங்கள் நடத்துபவர்).

‘இவ்வுலகில் அனைவரும் வாழும் வண்ணம் இயற்கை வளம் உள்ளது; அது பேராசைக்காரர்களின் கையில் சிக்கினால் மனித இனம் முற்றுக்குமே அழிவைத் தரும்’-

–மகாத்மா காந்தி

https://www.drb.ie/essays/a-licence-to-print-money


*Book: The Anarchy by William Dalrymple ; Review by Philip Mcdonagh in Dublin

William Dalrymple:  ஸ்காட்லேன்ட்டைச் சேர்ந்த வரலாற்றாய்வாளர், நூலாசிரியர், விமர்சகர், கலை பாதுகாப்பாளர், எழுத்திற்காகப் பரிசுகளும் பட்டங்களும் பெற்றவர், தில்லி அருகில் 1989 முதல் பெரும்பாலும் வசிக்கிறார் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன். இந்தியப் பெருமிதமான ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவின் இணை அமைப்பாளர் மற்றும் இணை இயக்குனர். வர்ஜீனியா வுல்ஃப் இவரது உறவுக்காரர்.

Philip Mcdonagh: Dedalus and Arlen House இதழ்களில் கவிதை மற்றும் நாடகங்கள் எழுதியவர். பல நாட்டில் தூதுவராகப் பணிபுரிந்த அவர் இந்தியாவின் வெளி நாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியத் தூதுவராகப் பணியாற்றியவர்.

** சசி தரூர் ஆற்றிய உரைகள்:You Tube .Ham Farris Sep 10.2017;SOH Talks & Ideas Oct 30, 2017; Channel 4 News Mar8 2017

மேல் கண்ட இரு குறிப்புகளை எழுதியவர் பானுமதி. ந.


எதிரெதிர் பயணங்கள்

சில எழுத்தாளர்கள் கோணங்கிகள். எல்லாரும் ஒரு பக்கம் போனால் அவர்கள் எதிர் திசையில் போவதை ஒரு மதம் போலப் பழகுகிறார்கள். எல்லா எதிர் திசைப் பயணங்களும் பயனுள்ளவை இல்லை. ஆனால் எல்லா ஒரு திசைப் பயணங்களும் பயன் தருவதில்லையே.

பொதுவாக எதிர் திசைப் பயணங்களில் பெரும்பகுதி தோற்கின்றன என்பதால் அவை பயனற்ற முயற்சிகளும் ஆகி விடா. சில அசாதாரணங்களும், மானிட குலத்தின் பெரும் எட்டுகளும் இப்படி ‘மாற்றி’ யோசித்தல், பயணித்தலில் விளைந்திருக்கின்றன.

ஆபத்து அதிகமானதால் லாபம் அதிகமாவதில்லை. ஆபத்துகளைத் தாண்டி தப்பித்தால் சில சமயம் சிரஞ்சீவித்தனத்துக்கான குளிகை கிட்டுமோ என்னவோ. இந்த எழுத்தாளர் குழந்தை வளர்ப்பைப் பற்றித்தான் எழுதுகிறார். மிகச் சாதாரணமான தலைப்பு. ஆனால் எதிர்த் திக்கில் போய்ப் பார்க்கும் கட்டுரை இது. துவக்கத்திலிருந்தே எதிர்.

தமிழில் குழந்தைகளுக்கான இலக்கியமும் நல்லதாக இல்லை, பரவலாக விரும்பப்பட்டதாகவும் இல்லை, செழித்து வளர்ந்து பெரும் இடத்தை ஆக்கிரமிப்பதும் இல்லை. இங்கிலிஷில் முன்பு சிறுவர் இலக்கியம் நிறைய இருந்ததான பிம்பம் இருந்தது. இப்போது பதின்மர் இலக்கியம்தான் ஏராளம். சிறு குழந்தைகளுக்கான இலக்கியத்தில் பெரும் எட்டு என்று இல்லை. ஆனால் நிறைய இன்னும் விளைகிறது. இதைப் பற்றி ஏதும் விரிவான தகவல் கொண்ட கட்டுரை இருக்கிறதா என்று தேட வேண்டும்.

இந்தக் கட்டுரையில் பெற்றோர்கள் பொதுவாக சலிப்பூட்டும் வகையில் ஒரே மாதிரி நடக்கிறார்கள் என்றும், தம் மோசமான அனுபவங்களைப் பற்றிப் பொதுவில் பகிராமல், தொடர்ந்து சிறு பங்கே உள்ள நல்ல அனுபவங்களை மட்டுமே பகிர்கிறார்கள் என்றும் ஒரு ‘குற்றச் சாட்டை’ சாதாரணமாக எடுத்து வீசி விட்டு மேலே போகிறார். அவருக்கு இரு விஷயங்கள் புரிந்ததாக எனக்குத் தெரியவில்லை.

மொத்த வாழ்வே இப்படித்தான். துன்பங்களும், சலிப்பும், நிராசைகளும், அதிர்ச்சிகளும், தேவையற்ற உபாதைகளும் என்றுதான் வாழ்வின் பெரும்பங்கு, பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது. அதிர்வுகளோ, வெறுப்பூட்டும் நிகழ்வுகளோ இல்லாது சுகப் பயணம் என்று வாழ்வு அமையும் மக்கள் மிக மிகச் சிறிய சதவீதம்தான் இருப்பார்கள்.  நடுக்கிணற்றில் தொங்கிக் கொண்டு மேலிருந்து சொட்டும் துளித் தேனை ருசிக்க நாவை நீட்டும் மனிதனாக பழைய இந்தியக் கதை ஒன்று உண்டு. இது எந்த மொழிக் கதை என்று எனக்கு நினைவில்லை. அதுதான் வாழ்வு என்பதில் எனக்கு ஐயம் இல்லை. உபாதைகளை விலக்கி, சிறு நன்மைகளையும் மேல் உயர்த்தி அவற்றின் நினைவு/ வாச்த்திலேயே வாழ்க்கையை நடத்தி விடும் பாங்குதான் மனிதரின் பிழைப்புக்கான உத்தி.

அதை உப்பிய பலூன் என்றும், தான் ஊசி கொண்டு குத்தி வீக்கத்தை அகற்றுவதாகவும் எண்ணிக் கட்டுரையை எழுதுகிறார். இதில் எனக்குக் கிட்டிய ஒரே ஒரு சாரம்- குழந்தைகளின் சுதந்திரத் தன்மை, அவர்களின் பார்வையில் வளர்ச்சிப் பருவம்/ பாதை, அவர்களின் அனுபவங்களில் வெளி உலகம் என்று நமக்குக் கிட்டும் தகவல்களோ, ஆய்வுகளோ, அவற்றை விரிக்கும் கட்டுரைகள்/
கதைகளோ குறைவு என்பதுதான்.

அதற்கான காரணங்கள் தெளிவு. உலகம் வயது வந்தவர்களுக்காக, அவர்களால் இயக்கப்பட்டு நடத்தப்படுவது என்பது தலையாய காரணம். அதற்கு மேல்பட்டு நோக்கினால், ஒவ்வொரு மக்கள் தொகையிலும் எந்த வயது ஆட்கள் அதிகமோ அவர்களுக்கேற்ற சமுதாயம்தான் அங்கு கட்டமைக்கப்பட்டு அதிகாரம் செலுத்தும். இது வெறும் பெரும்பான்மை சார்ந்ததல்ல என்று எனக்கும் தெரியும். சில சமயம் மிகச்சிறுபான்மை வயது/ பண்பாட்டுக் குழுக்கள் பெரும்பான்மை மீது அதிகாரம் செலுத்துவது நடக்கலாம், ஆனால் அது அடித்தளம் வலுவற்ற அமைப்பாகவோ, அல்லது சாரத்தில் மிக்க துன்பமே கொடுக்கும் அமைப்பாகவோதான் அமையும். 

இத்தனை சொன்னாலும், அவற்றை எல்லாம் தாண்டி இந்தக் கட்டுரையில் சில இடங்களில் வெளிச்சம் கிட்டுகிறது. அதற்காகப் படிக்கலாம். 


துரு துரு கண்ணா?

சென்ற குறிப்பில் எதிர் திசைப் பயணங்களைப் பற்றிப் பார்த்தோம்.
சிலர் எப்போதும் எதிர்ப்பு, எதிர்க் கோணம், எதிராளி என்றே பழகுபவர்கள். அப்படியே நடப்பவர்கள். காண்ட்ரரியன் என்றே ஒரு சொல் இங்கிலிஷில் உண்டு. ஹாஸ்டையல் என்றும் சொல்வார்கள்.
கொறளி என்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த வகை நபர்களை அழைப்பார்கள். வக்கிரம் என்ற சொல் எதையும் கோணலாகவே பார்த்துப் பழகியவர்களைக் குறிக்கும் சொல், இன்றைய பழக்கத்தில் அது அத்துமீறி நடப்பவர்களை, குறிப்பாக பால் விவகாரங்களில் மாறான, நடத்தை பற்றிய சொல் போலப் புழங்கப்படுகிறது. பழைய பண்பாட்டில் வக்கிரம் என்பது கோணலான நோக்கு என்று மட்டுமே அறியப்பட்டிருந்தது.

சென்ற குறிப்பில் சொன்னது போலவே, இப்படி எதிர்ப்பாக நிற்பவர்கள் எல்லாம் பயனற்றவர்களும் இல்லை, எல்லாம் பயனுள்ளவர்களும் இல்லை. எப்போதும் எதிராகவே நிற்பது என்பது அனேக நேரம் வெறும் ஜல்லியாக முடியவே வாய்ப்பு அதிகம். எதையும் எதிர்ப்பவருக்குச் சீக்கிரமே சமூக அங்கீகாரம் இல்லாமல்
போகும் வாய்ப்புதான் அதிகம். சமூகம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாகச் சிறிது சிறிதாகக் கட்டி அமைக்கப்பட்டது,
அதில் களிம்புகளும் உண்டு, உறுதியான உலோக மையமும் உண்டு. அதை உடைப்பேன், எப்போதும் அமிலமாகவேதான் அரிப்பேன் என்று சொல்லும் எந்தத் தனி நபரும் யாருக்கும் பயனற்றவராக முடிய வாய்ப்பு அதிகம்.

இதெல்லாம் பொதுப் புத்தியில் கிட்டும் விஷயங்கள். பொதுப்புத்தி என்பது சராசரிப் பார்வை, அறிதல். சராசரியாக இல்லாதிருப்பது பயனுள்ளதாக அமைய வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்துவோரின் குணாம்சங்களை கீழே உள்ள கட்டுரை பேசுகிறது. செய்ய வேண்டிய வேலைகளின் பளுவில் திணறும்போதே புத்தி அலைந்து எங்கேயோ மேயப் போகிறதை நாம் எல்லாரும் உணர்ந்திருப்போம். மிக மிகச் சிலரே புத்தியை அலைய விடாமல் தம் விருப்புக்கு வளைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் இப்படித் தன் போக்கில் போக விரும்பும் புத்தியை உந்துவது எது என்ற கேள்வியை எழுப்பி அதற்குப் பதில் சொல்கிறது கட்டுரை.

குறுகுறுப்பு, புதிதாக அறியும் ஆர்வம், புரியாதவற்றை மர்மம் தீர்த்து அவிழ்த்து அறியும் உந்துதல் இவை எல்லாம் ஒரு சங்கிலியான போக்கு. இதை இங்கிலிஷில் க்யூரியாஸிடி என்கிறார்கள். தமிழில் அறியும் ஆர்வம் எனலாம். அதாவது குறுகுறுப்பு. கட்டுரையாளரின் கருத்துப்படி பரிணாமப் போக்கில் எஞ்சும், அழிவைத் தவிர்த்துத் தொடர்ந்து வாழும், வளமடையும் மிருகங்கள் எல்லாம் இந்த அறியும் ஆர்வம் கொண்டவை. மனிதர்கள் இத்தகைய மிருகங்களில் ஒன்று.

என்னென்ன நேரங்களில் இத்தகைய குறுகுறுப்பு உந்தப்படுகிறது, அது உந்தப்பட்டால் அதன் பின் விளைவுகள் என்ன, அந்தப் பின் விளைவுகளுக்கும் அறிவுச் சேமிப்பிற்கும், வாழ்வில் வெற்றிகளுக்கும் உள்ள தொடர்புகளை மிகச் சுருக்கமாகக் கட்டுரை பேசுகிறது.

Why Aren’t We Curious About the Things We Want to Be Curious About?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.