காத்திருப்பு

காத்திருப்பு ஓர் ஆசுவாசம் என்றுதான் திவாகருக்குத் தோன்றியது. தன் கையில் எதுவும் இல்லை. அப்படி இருப்பதில் ஒரு மென்மையும் மௌனமும் இருக்கிறது. பாய்ந்து இறங்கி செயலாற்றி விளைவை அனுபவித்து அடுத்ததற்குத் தயாராகி அந்த ஆட்டத்தை பலமுறை ஆடியாகி விட்டது. உலகியல் வெற்றிகள். கடினமான இலக்குகள். தடை உடைத்த ஓட்டங்கள். இப்போதும் இங்கிருந்து இறங்கிச் செல்லலாம். பேருந்து அல்லது டாக்ஸி. குளிர்சாதன வசதி உள்ள சொகுசான வாகனத்தையே கூட தெரிவு செய்யலாம். நிறுவனம் வாடகையைச் செலுத்தி விடும். கணக்கிட வேண்டாம் என்று கூறிக் கொண்டான். ஆயிரத்து ஐந்நூறு பேர் இங்கு இருக்கிறார்கள்.  இங்கே இருப்பதால் ஏதோ ஒன்றைப் புதிதாக உணரலாம் என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. நான்கு வருடம் இருந்த ஊர் என்பதால் மனம் உருவாக்கிக் கொள்ளும் மாயம் என்று மனம் சொன்னது. அந்த எண்ணம் தோன்றியதும் நாம் விடாமல் தேடிப் பிடித்து அலையும் வாழ்க்கையை ஏன் மாயம் என்று நினைப்பதில்லை என்று திவாகர் கேட்டுக் கொண்டான்.

 “சார்! போளி சூடா இருக்கு சார்! சாப்பிடறீங்களா” கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் ஜோடி பித்தளை தட்டுகள் போல ஒன்றின் மேல் ஒன்று வைக்கப்பட்ட எவர்சில்வர் தட்டுகளுக்குள் போளி இருந்ததை மணம் மூலம் அறிய முடிந்தது. இரண்டு வாங்கிக் கொண்டான். பணமும் சில்லறையும் பரிமாற்றமானது. 

 “தம்பி! உன் பேர் குமரேசன் தானே!’’

குமரேசன் முகத்தில் ஓர் ஒளி மின்னியது.

“டூ தொஸ்ண்ட் டூ பாஸ் அவுட் தம்பி’’

அவன் யோசித்தான்.

 “அப்ப உனக்கு எட்டு வயசு’’

“அண்ணா! லக்ஷ்மி அண்ணன் பேட்ச்சான்னா நீங்க’’

 “நீ அவனைப் பாப்பியா’’

“தினமும் வருவார்னா’’

“எங்க இருப்பான்? அவன எங்க பார்க்கலாம்?’’

அவன் நேரடியாக பதில் சொல்லவில்லை. 

“அண்ணா! வண்டி கிளியர் ஆக நாலு மணி நேரத்துக்கு மேல கூட ஆகும்னா. கேண்டீனுக்கு வாங்க. ஓனர் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவார்.’’

நேரம் நாலு மணி. மூன்றரை மணி நேரத்துக்கு மேல் வண்டி தாமதம். இன்னும் நேரமாகும் என்கிறார்கள். திவாகர் ரயிலிலிருந்து இறங்கி நடைமேடையில் நடக்க ஆரம்பித்தான்.

***

Ione Citrin

அவனை லக்ஷ்மி என்று கூப்பிடுவார்கள். லக்ஷ்மி நரசிம்மன். உடன் படிப்பவன் என்பதால் ஒருமையில் அழைப்பார்களே தவிர அவனது செயல்பாடுகள் வழக்கமானவையாக இருக்காது என்பதால் மரியாதைக்குரிய ஒரு இடைவெளியை அவனுக்கு சக மாணவர்கள் கொடுப்பார்கள். யார் யாரோ பார்க்க வருவார்கள். ஒருமுறை ஒரு வயதான பாட்டி அவனைக் காண பத்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்து மாலை 3 மணிக்கு வந்திருந்தாள். லக்ஷ்மி சென்னை சென்றிருந்தான். மறுநாள் இரவு ஏழு மணிக்குத் தான் கல்லூரிக்குத் திரும்பினான். சக மாணவர்கள் இரண்டு நாட்களும் அவளுக்கு ஹாஸ்டலிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுத்தனர். வார்டன் சென்ற பிறகு ஹாஸ்டல் மாடிப்படிக்குக் கீழே ஒரு டேபிள் ஃபேன் இணைப்பு கொடுத்து பாயும் தலையணையும் கொடுத்து உறங்கச் சொன்னார்கள். லக்ஷ்மி வந்ததும் அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஒரே அழுகை. பேரனைக் கைது செய்து விட்டார்கள். பேத்தியை தன் தம்பி வீட்டில் அந்த பாட்டி விட்டு விட்டு வந்திருக்கிறாள். அவன் தவறு செய்தவன் தான். நாங்கள் என்ன தவறு செய்தோம். பேத்தியைக் கரையேற்றி விட்டால் நிம்மதியாகக் கண்மூடி விடுவேன். பாட்டி போட்ட கூப்பாடு ஹாஸ்டல் முழுதுக்கும் கேட்டது. தன் கையில் இருந்த ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து ஒரு ஆட்டோ பிடித்து பாட்டியை அனுப்பி வைத்தான் லக்ஷ்மி. அடுத்த நாள் அந்த பாட்டியின் ஊருக்குச் சென்று அவள் உறவினர்களைச் சந்தித்தான். இளம்பெண்ணான பாட்டியின் பேத்திக்கு உதவுமாறு கேட்டான். உதவுவதற்கு உறவினர்களுக்கு தயக்கம் இருந்தது. ஒவ்வொருவரிடமும் பேசினான். அவனால் பொறுமையாகப் பேச முடியும். பொறுமையாக இருக்க முடியும். அவன் முயற்சியைக் கண்டு ஓர் இளைஞன் திருமணம் செய்து கொள்ள முன்வந்தான். அவனுடைய பெற்றோர் தயங்கினர். 

“அம்மா! அந்த பொன்னோட சகோதரன் போலிஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு இருக்கான். உண்மைதான். அவனால அந்த பொன்னும் பாட்டியும் வேதனைப்படறது சரியான்னு சொல்லுங்க. அவன் ஜெயில்லேந்து வரட்டும். நான் அவனை வெளியூர் அனுப்பறேன். அவனால உங்க குடும்பத்துக்கு எந்த கஷ்டமும் வராது. எந்த அவமானமும் வராது. நான் அயோக்கியனை யோக்கியன்னு சொல்லல. ஆனா அயோக்கியனா இருக்கறவன் அயோக்கியனாவே இருக்க வேண்டிய அவசியமில்லை.’’

அவனுக்குத் தெரிந்த ஒவ்வொருவரிடமும் சென்றான். பிச்சை எடுத்தான் என்று சொல்வதுதான் சரியானது. அவனுக்குத் தயக்கம் இல்லை. அவன் செய்யும் செயலில் அவனுக்கு எப்போதுமே உறுதி இருந்தது. ஒவ்வொரு ஜூவல்லரி ஓனரையும் சந்தித்து உதவி கேட்டான். நிலைமையை விளக்கிச் சொன்னான். ஒவ்வொருவரும் கால் பவுன் தந்து உதவினர். பதினைந்து பவுன் போட்டு அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தான். உடன் படித்த மாணவர்கள் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாட்டி கண்ணீர் விட்டாள்.  “அவளோட அப்பா அம்மா இருந்திருந்தாக் கூட இப்படியெல்லாம் நடந்திருக்குமான்னு தெரியலையே. யாரு பெத்த புள்ளயோ எங்க குடும்பத்துக்காக இப்படி உழைச்சிருக்கியே கண்ணு.’’ 

***

திவாகர் ரயில்வே காண்டீனுக்குச் சென்றான். செல்லும் வழியில் புக் ஸ்டால். பெரியவருக்கு இன்னும் கொஞ்சம் வயதாகியிருந்தது. தந்தியும் மணியும் மலரும் எக்ஸ்பிரஸும் தினமும் வந்து சேரும் இடம். திவாகர் எக்ஸ்பிரஸ் வாங்குவான். தாத்தா பின்னர் அப்பா இப்போது அவன். இப்போதும் காலையில் எக்ஸ்பிரஸ் வேண்டும். ஆல் இண்டியா ரேடியோ இங்கிலீஷ் நியூஸ்.

கேண்டீன் உரிமையாளர் கமலக்கண்ணனைக் கண்டு விஷ் செய்தான். எல்லாருக்கும் பொதுவான ஒரு புன்னகையை உரிமையாளர் தன் முகத்தில் தவழ விட்டிருந்தார். தன் பெயரைச் சொன்னான். அப்போதும் அதே புன்னகை. அவருக்கு நெருக்கமாக இருந்த தனது நண்பனின் பெயரைச் சொன்னான்.

“பக்‌ஷி ஃபிரண்டுல்ல நீங்க! ரொம்ப சந்தோஷம். லைன் கிளியர் ஆகாததால இன்னைக்கு சந்திக்கிறோம்.’’

 “மீரட்-ல வேலையா இருக்கன். எப்பவாவதுதான் சென்னைக்கே வரேன்’’

“பக்‌ஷி வருஷம் ஒரு தடவையாவது வந்து பாத்திட்டு போவாப்ல. என்ன சாப்பிடறீங்க. ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறோம். பூரி கிழங்கு சூடா இருக்கு’’ 

“குமரேசன் இப்பதான் போளி கொடுத்தான். பெரிய ஆளா ஆயிட்டானே.’’

 “பரவாயில்லையே எல்லாம் ஞாபகம் வைச்சிருக்கீங்களே’’

 “தோஸ் ஆர் த டேஸ்’’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

***

லக்ஷ்மி கல்லூரிக்கு நடந்து வருவான். சைக்கிளில் வருவான். மோட்டார் சைக்கிளில் வருவான். காரில் வருவான். ஆட்டோவில் வருவான். நம்ப கடினமாக இருக்கும். ஒரு முறை அவனை ஒரு லாரி இறக்கி விட்டுச் சென்றது. அவனுடைய தாத்தா ஒரு வளையல் கடை வைத்திருந்தார். அப்பா அம்மா இல்லை. அவனுடைய அத்தைதான் அவனுக்கும் தாத்தாவுக்கும் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். பாலிஷ் போட்ட கருப்பு பூட்ஸ். கருப்பு சாக்ஸ். செவ்வக ஃபிரேம் போட்ட கண்ணாடி. இடது கையில் பல வெயில் மழை பார்த்து மங்கிய ஒரு தாமிரக் காப்பு. பாக்கெட்டில் எப்போதும் இரண்டு பால் பாயிண்ட் பேனா. யாராவது கையில் பேனா இல்லாமல் இரவல் கேட்டால் கொடுப்பான். திரும்ப வாங்க மாட்டான். உங்களிடம் இரவல் கேட்பவர்களிடம் கொடுத்து விடுங்கள் என்பான். அவனைச் சந்திப்பவர்கள் அவனை எப்போதும் அணுக்கமாகவே உணர்வார்கள். யாராலும் அவனை விட்டு விலகிடவும் முடியாது.  

***

திவாகர் நடராஜபுரம் ரயில் நிலையத்தின் கிழக்குப் பக்கமாக வந்தான். இப்போது கல்லூரிக்கு சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தான். முன்பெல்லாம் இந்தச் சுவர் இல்லை. கல்லூரியும் இரயில் நிலையமும் கடலும் கரையும் போல இணைந்தேயிருக்கும். ரயில் நிலையத்தில் எத்தனை மணி அடிக்கிறார்கள் என்பதை வைத்தே வரப்போகும் ரயிலையும் நேரத்தையும் தெரிந்து கொள்ளலாம். வகுப்பில் அமர்ந்திருக்கும் போது சற்று தொலைவில் ஓர் இனிய சொர்க்கம் என மாணவர்கள் நம்பும் ரயில் நிலையம் காத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். இப்போது சொர்க்கத்தில் கொண்டு விட்டால் கூட அதனை சொர்க்கம் என்று உணரமுடியுமா என்று தெரியவில்லை. எல்லாரும் நம்புவதை நாமும் நம்புகிறோம். அப்போது எல்லாருக்கும் வாய்ப்பதுதானே நமக்கும் வாய்க்கும்.

***

லக்ஷ்மியின் காதல் கதை எல்லா காதல் கதைகளைப்  போலவே ஒரு புரிதலிலிருந்தோ அல்லது ஒரு பிரியத்திலிருந்தோ அல்லது ஒரு பார்வையிலிருந்தோ அல்லது ஒரு புன்னகையிலிருந்தோதான் துவங்குகிறது. ஆயிரமாயிரம் பார்வைகள் வாழ்க்கையில் கடக்கின்றன. சில பார்வைகள் மன ஆழங்களில் இறங்கி மன ஆழங்களாய் ஆகி விடுகின்றன. மனதின் ஆழங்களை முற்றும் அறிந்தவர்கள் மனதைக் கடந்து மனமற்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர். சாமானியர் எக்காரணம் கொண்டும் மேற்பரப்பைத் தாண்டுவதில்லை.

திவாகர் அன்று ரயில் நிலையத்தில் இருந்தான்.

***

நடராஜபுரம் ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை மதிய நேரங்களில் புதிய ஒளி கொண்டிருக்கும். மதியம் இரண்டே காலுக்கு டே எக்ஸ்பிரஸ். தெற்கே செல்பவர்கள் அனைவரும் ரயில் முன்பதிவு செய்து காத்திருப்பார்கள். ஒவ்வொரு மரத்தின் நிழலிலும் இளம் கல்லூரி மாணவிகள். வீட்டுக்குச் செல்வதால் உற்சாகமாக இருப்பார்கள். நடைமேடையெங்கும் பயணப்பைகள் காத்துக் கொண்டிருக்கும். பூ விற்பவர்கள், கொய்யாக்காய் விற்பவர்கள் தங்கள் விற்பனையை நடைமேடையிலேயே பாதிக்குப் பாதி முடித்து விடுவார்கள். எங்கிருந்தோ வந்து சேரும் ஒன்று எல்லார் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எல்லார் எதிர்பார்ப்பையும் எங்கிருந்தோ வந்து சேரும் ஒன்று பூர்த்தி செய்கிறது. ரயில் நிலைய நடைமேடை நம்பிக்கைகள் ததும்பும் ஒரு வெளி. அங்கிருக்கும் அனைவருக்குமே ஒரு மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையை அங்கிருக்கும் அனைவருக்குமே ரயில் தந்து விடுகிறது.

அவர்கள் ஏழு பேர். விவசாயக் கல்லூரி மாணவிகள். பூர்ணா அவர்களுக்கு மத்தியில் இருந்தாள். அவர்கள் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். பூர்ணாவின் பெற்றோர் ஓரிரு நாட்களுக்கு முன் பார்க்க வந்திருந்தனர். அப்போது அவர்கள் வீட்டின் சாவியை பூர்ணாவிடம் தந்து விட்டு சென்னைக்கு ஒரு திருமணத்துக்காகச் சென்றிருந்தனர். சாவி மறதியாக அறையிலேயே இருந்து விட்டது. பூர்ணாவும் அவளது அறைத் தோழியும் அறையைப் பூட்டிவிட்டு ஊருக்குக் கிளம்பி விட்டனர். பூர்ணா தெற்கே செல்ல வேண்டியள். அறைத் தோழி வடக்கே பயணிப்பவள். தோழி கிளம்பி எதிர் திசையில் சென்று கொண்டிருக்கிறாள். அவர்கள் குழு பரபரப்பானது. அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர் தளர்ந்து அமர்ந்தனர். சிலர் விசனப்பட்டனர். பூர்ணா திகைத்துக் கொண்டிருந்தாள். விவசாயக் கல்லூரி மாணவிகளிடம் பரவிய செய்தி பொறியியல் மாணவிகளிடம் நடைமேடையில் பரவி பொறியியல் மாணவர்களிடம் வந்தது. அன்று லக்ஷ்மி நரசிம்மன் ரயில் நிலையத்தில் இருந்தான். 

பூர்ணா மணிக்கட்டு வரை நிறைந்திருந்த வெண்ணிற சுடிதார்  அணிந்திருந்தாள். இரண்டு கையிலும் இரண்டு உருண்ட பெரிய தங்க வளையல்கள். இரண்டு கை மோதிர விரல்களிலும் மோதிரங்கள். கழுத்தில் ஒரு துளசிமாலை. ஒரு தங்கச் சங்கிலி. புருவ மத்தியில் சந்தனப் பொட்டு. அளந்து வைக்கப்பட்ட பூட்ஸ் காலடிகளுடன் லக்ஷ்மி பூர்ணாவிடம் சென்றான்.

 “என் பேர் லக்ஷ்மி நரசிம்மன். மெக்கானிக்கல் தேர்ட் இயர் படிக்கறேன்.’’

பூர்ணா மையமாக ஹாய் என்றாள்.

 “என்ன பிராப்ளம் உங்களுக்கு?’’

பூர்ணாவின் அருகிலிருந்த தோழி நிலைமையை விளக்கினாள்.

லக்ஷ்மி தனது கடிகாரத்தைப் பார்த்தான். அது அவனது சுபாவம். அவனிடம் முக்கியமாக யாரேனும் எதையேனும் சொன்னால் அவன் கடிகார முள் நகர்வதைப் பார்ப்பான். அந்த நகர்வின் தாளத்தில் அவன் சில முடிவுகளுக்கு வருவான். முக்கியமான செயல்கள் செய்யத் துவங்கும் போதும் கடிகாரத்தைப் பார்ப்பான். வினாடி முள் நகர்ந்து கொண்டேயிருந்தது

 “ஹாஸ்டல்ல வார்டன் இருப்பாங்களா?’’

 “அடுத்த மூணு நாள் ஹாலிடே. ஹாஸ்டலே காலியா கிடக்கு”

 “வார்டன் வீடு தெரியுமா?’’

ஏழு பேரும் பக்கவாட்டில் தலையசைத்தனர்.

 “சிவகாமி மேடம் தானே வார்டன்’’

எழுவரும் மேலும் கீழும் தலையசைத்தனர். 

’’நீங்க என் கூட வாங்க. நாம ஆட்டோல வார்டன் வீட்டுக்குப் போய் ஹெல்ப் பண்ண சொல்லி கேட்கலாம்.’’

 “நேரம் இருக்குமா? டிரெயின் பிடிச்சுடமுடியுமா’’

 “நாம ஒரு விஷயம் சிக்கலா இருக்கேன்னு கவலைப்படறோம். கவலைப்பட்டா சிக்கல் தீர்ந்திடும்னா இந்த க்ஷணத்துல உலகத்தில இருக்கறவங்கள்ள நூத்துல தொண்ணூற்று எட்டு பேரு கவலைப்பட ஒக்காந்துற மாட்டாங்களா. சிக்கலை ஒடைக்க நல்ல வழி முயற்சி பண்ணி பாக்கறது’’

பூர்ணாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வார்டனைப் பார்த்து உதவி கேட்பது நல்ல வழி என்று முடிவு செய்தாள். திரும்பி வருவதற்குள் டிரெயின் வந்து கிளம்பி விட்டால் மீதியிருக்கும் ஆறு பேரில் ஒரு தோழி காத்திருந்து பூர்ணாவுடன் பேருந்தில் வருவது என்று முடிவு செய்து கொண்டார்கள்.

பூர்ணா ஆட்டோவின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டாள். ஆட்டோ டிரைவருடன் முன்னால் அமர்ந்து கொண்டான் லக்ஷ்மி.

 “அண்ணன்! பாரதி நகர் செகண்ட் கிராஸ் போகனும்ணன்’’

வண்டி வேகமாக சென்று கொண்டிருந்தது.

’’அண்ணன் பேர் என்ன?’’

’’வெங்கட்ராஜ் தம்பி”

 “எத்தனை கொழந்தைங்கண்ணன்’’

 “ரெண்டு பேர்”

“என்ன படிக்கிறாங்க?’’

”மூத்தவன் நாலாவது படிக்கறான். சின்னவனை அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேக்கணும்” 

 “குடிப்பழக்கம் உண்டாண்ணன்?’’

வெங்கட்ராஜ் மௌனமாக இருந்தார்.

 “நம்ம சம்பாத்யத்தை சேமிக்க முடியாம ஆக்கிடும்ணன். நம்ம உடம்பை கொஞ்சம் கொஞ்சம் அழிச்சிடும். நம்ம மேலயே நமக்கு நம்பிக்கை இல்லாம ஆக்கிடும்.உடம்ப பார்த்துக்கங்கண்ணன்’’

 “அந்த பழக்கத்தை விட்டுடணும்னு தான் நினைக்கறேன். ஆனா அந்த நேரம் வந்தா கை கால் நடுங்க ஆரம்பிச்சுடுது தம்பி”

 “எனக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல டாக்டர் இருக்கார். நான் அழைச்சுட்டுப் போறேன். மனசுல உறுதியா இருந்தா எதுல இருந்தும் வெளியே வந்துரலாம்ணன்’’

வார்டன் வீடு வந்தது. பூர்ணாவும் லக்ஷ்மியும் வாயில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று அழைப்பு மணியை அழுத்தினர். மின்னணுக் குருவிகள் வீட்டுக்குள் கிரீச்சிட்டன. சிவகாமி வந்து கதவைத் திறந்தார்.

பூர்ணா அவரிடம் நிலையை விளக்கினாள்.

 “ஆர் யூ எ ஸ்கூல் ஸ்டூடண்ட்?” முதல் கேள்வியே கோபத்துடன் வெளிப்பட்டது.

லக்ஷ்மி மெல்ல தலையிட்டு,  “ சாரி மேடம். இப்படி ஒரு சிச்சுவேஷன்ல எந்த புரொஃபசர்ட்டயும் போக முடியாது. யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க. ஆனா சிவகாமி மேடம் நிலைமையை ஹியூமனேட்டரியன் கிரவுண்ட்-ல பார்ப்பீங்கன்னுதான் உங்க கிட்ட வந்தோம். தப்பு எங்க மேல தான். நடந்த தப்புக்கு மன்னிப்பு கேட்டுக்கறோம். முடிஞ்சா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க”

சிவகாமி மேடம் யோசித்தார். 

லக்ஷ்மி அந்த இடைவெளியில்,  “மேம்! ஆட்டோல அழைச்சுட்டுப் போய்ட்டு திரும்பி கொண்டு வந்து விட்டுடறோம்”

சிவகாமி மேடம் ஹாஸ்டலுக்குக் கிளம்பத் தயாராகி வீட்டின் உள்ளே சென்றார். வீட்டில் இருந்த பெண் குழந்தைக்கு சில குறிப்புகளைக் கொடுத்து விட்டு வெளியே வந்தார். 

 “நீங்க ஆட்டோல ஹாஸ்டலுக்குப் போங்க. நான் டூ-வீலர்-ல வந்துடறேன்.”

 “நீங்க சிரமப்படாதீங்க மேடம். ஆட்டோலயே திரும்பக் கொண்டு வந்து விட்டுடறோம்’’

அவர் ஆட்டோவுக்குத் தயாரானார்.

’’மேம்! ஒரு ஃபோன் பண்ணிக்கலாமா?

’’அனு! கார்ட்லெஸ் கொண்டு வாம்மா”

ஒரு பன்னிரெண்டு வயதுப் பெண் கார்ட்லெஸ் ஃபோன் கொண்டு வந்தாள். ரயில் நிலையத்துக்கு ஃபோன் செய்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் விவசாயக் கல்லூரி மாணவிக்கு வீட்டுச்சாவி கிடைத்து விடும். ஆதலால் அவளது நண்பர்கள் திட்டமிட்டவாறு ரயிலில் பயணிக்கலாம். பயணத்தின் அடுத்தடுத்த நிலையங்களில் எங்காவது சாவியைத் தவற விட்டவர் சேர்ந்து கொள்வார் என்ற தகவலை அறிவிக்கச் சொன்னான். ஸ்டேஷன் மாஸ்டர் பயணியின் பெயர் சொல்ல வேண்டுமா என்றார். லக்ஷ்மி பெயர் சொல்ல வேண்டாம் என்றான். அடுத்த ஃபோன் காலில் அவனது நண்பன் ஒருவனுக்கு ஃபோன் செய்து உடனே அவசரமாக அவனுடைய காரை ரயில் நிலையத்துக்கு அனுப்பச் சொன்னான்.

ஆட்டோ டிரைவரிடம் வார்டனைப் பற்றி மிகவும் புகழ்ந்து கொண்டிருந்தான் லக்ஷ்மி. 

 “அனௌன்ஸ்மெண்ட்ல பேர் சொல்ல வேண்டாம்னு கேட்டுக்கிட்டது ரொம்ப சென்ஸான விஷயம் தம்பி” வார்டன் பாராட்டினார்.

மாணவிகள் விடுதி சுற்றுச்சுவருக்கு வெளியே ஆட்டோ நின்றது. பூர்ணாவும் வார்டனும் உள்ளே சென்று மாஸ்டர் சாவியால் அறையைத் திறந்து பூர்ணா எடுத்துக் கொள்ள வேண்டிய சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் முன்பு ரயில் புறப்பட்டிருந்தது. கார் காத்துக் கொண்டிருந்தது. 

சிவகாமி மேடம்,’’யூ சேஸ் த டிரெயின். ஐ வில் கோ பை ஆட்டோ” என்றார்.

அவர் கண்ணெதிரிலேயே ஆட்டோவுக்கு எவ்வளவு என்று கேட்டுக் கொடுத்தான். திரும்ப பாரதி நகருக்குச் செல்வதற்கும் சேர்த்து தானே வாங்கியிருக்கிறீர்கள் என்று வெங்கட்ராஜிடம் வார்டன் முன்னிலையில் உறுதிப்படுத்தினான்.

சிவகாமி மேடம் தன் கைப்பையில் இருந்து ஒரு துண்டுத் தாளை எடுத்து அதில் தன் தொலைபேசி எண்ணை எழுதி பூர்ணாவிடம் தந்தார்.

 “பத்திரமா வீட்டுக்குப் போம்மா. வீட்டுக்குப் போய்ட்டு எனக்கு ஃபோன் பண்ணு’’

ஆட்டோ கிளம்பியது. கார் டிரைவர் சாவியைக் கொடுத்து விட்டு கிளம்பினார். காரை லக்ஷ்மி எடுத்தான். பின்சீட்டில் பூர்ணா அமர்ந்திருந்தாள்.

***

 “அன்னைக்கு மழை பெய்து ஓய்ஞ்ச மாதிரி இருந்தது.’’

 “அன்னைக்குப் பெய்ய ஆரம்பிச்ச மழை இன்னும் எனக்கு ஓயவே இல்லை.’’

ரயில் நிலையத்திலிருந்து இருநூறு மீட்டர் தொலைவில் ஒரு பூங்கா இருந்தது. அதில் ஒரு பவழமல்லி மரம். எப்போதும் பூத்துக் கொட்டிக் கொண்டேயிருக்கும். மரத்தின் கீழே ஒரு சிமெண்ட் இருக்கை. லக்ஷ்மிக்கும் பூர்ணாவுக்கும் அதுதான் சந்திப்பு இடம்.

***

’’லக்ஷ்மி! எனக்கு எல்லாமே அன்னைக்கு ஸ்ட்ரேஞ்சா இருந்தது. நீ ஒண்ணுலேந்து இன்னொண்ணுன்னு போய்ட்டே இருந்த.”

 “வாழ்க்கை ஃபங்ஷன் ஆகற விதம் அப்படித்தானே இருக்கு.”

 “நீ வண்டி ஓட்டறதை பார்த்த போது பிரமிப்பா இருந்துச்சு. பரபரப்பா இருந்த. அடுத்த ஸ்டேஷன்ல வண்டி புடிச்சுடணும்ங்கறதிலயே கண்ணா இருந்த. என்னை ஒரு தடவை கூட திரும்பிப் பார்க்கலை.’’

 “அடுத்த ஸ்டேஷன்ல வண்டி பிடிக்கலைன்னா நீ பதட்டமாயிருப்ப.”

***

பிரம்மாபுரம் ரயில் நிலையத்தில் அன்று ஒரு சரக்கு ரயில் கிராஸிங். டே எக்ஸ்பிரஸ் அந்த ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. பூர்ணா நடைமேடையில் விரைவாக நடந்து சென்று தனக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியை அடையாளம் கண்டு அங்கே சென்று ரயிலில் ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாள்.

லக்ஷ்மி நடைமேடையில் நடந்து வருவதைக் கண்ட மாணவர்கள் நடந்ததை யூகித்து ஆர்ப்பரித்தனர். ரயில் நிலைய அறிவிப்பால் அவர்களுக்கு நடந்தது ஓரளவு புரிந்திருந்தது.

ரயிலுக்குள் இருந்த பூர்ணாவிடம்,  “குடிக்க தண்ணி வேணுமா” என்று லக்ஷ்மி கேட்டான்.

 “இந்த கேள்வியை நியாயமா நான்தான் கேட்டிருக்கணும்” பூர்ணா சொன்னாள்.

தன் பயணப்பையிலிருந்து குடிநீர்க்கலனை எடுத்து பூர்ணா லக்ஷ்மியிடம் தந்தாள். சரக்கு ரயில் கடந்து சென்றது. இவர்கள் விரைவு வண்டிக்கான பச்சை விளக்கு ஒளிரத் துவங்கியது. 

’’தேங்க் யூ. தேங்க் யூ ஃபார் யுவர் எஃபர்ட்ஸ்’’ குடிநீர்க்கலனைப் பெற்றுக் கொண்டு பூர்ணா சொன்னாள்.

 “நாட் அட் ஆல்.”

’’ஆட்டோ சார்ஜ் காருக்கான பெட்ரோலுக்கு நான் உங்களுக்கு பணம் தரணும்’’

’’இல்ல. வேண்டாம். பரவாயில்லை.’’

 “ஊருக்குப் போய்ட்டு வந்ததும் நாம மீட் பண்ணும் போது தர்ரேன்.’’

அதில் இருந்த குறிப்பை உணர்ந்து லக்ஷ்மி புன்னகைத்தான். பூர்ணாவும் புன்னகைத்தாள்.

***

திவாகர் பூங்காவை நோக்கி நகர்ந்தான்.

பழைய இடங்கள் மனதில் பதிந்து அப்படியே உறைந்து விடுகிறது. ஆனால் அங்கேயிருப்பவர்களுக்கு வயதாகிறது. இடங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. சில புதிய பயன்பாடுகள் உருவாகின்றன. பழைய நோக்கங்கள் தேய்மானமாகின்றன.

பூங்கா வடிவம் மனதில் இருந்தபடியே இருந்தது. மகிழமரத்தடியில் லக்ஷ்மி அமர்ந்திருந்தான்.

திவாகரைப்  பார்த்ததும் புன்னகைத்தான். தன் அருகில் அமரச் சொன்னான்.

 “திவாகர்தானே உங்க சாரி  உன் பேரு’’

 “ஞாபகம் வச்சிருக்கயே லக்ஷ்மி.’’

 “பக்‌ஷி அப்பப்ப சொல்வான். எப்ப வந்த. ஃபேமிலியோட வந்தியா. அவங்கள்லாம் எங்க.’’

’’இன்னைக்கு அன்யூஷுவலா டிரெயின் லேட். இன்னும் கிளம்ப மூணு மணி நேரமாவது ஆகும்.’’

’’பூர்ணா வர நேரம். நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கன்.’’

லக்ஷ்மி நடுவயதுக்கு வந்திருக்கிறான். அதே காஸ்ட்யூம். பூங்கா வாசலில் அவனுடைய கார் நிற்கிறது. பாலிஷ் போட்ட கறுப்பு ஷூ பளபளக்கிறது. 

’’தாத்தா எப்படி இருக்கார்?’’

 “தாத்தாவுக்கு வயசாயிடுச்சு திவாகர். நவ் ஹீ இஸ் நோ மோர். ஆறு வருஷமாச்சு.’’

 “அத்தை எப்படியிருக்காங்க.’’

 “நல்லாயிருக்காங்க திவாகர். பூர்ணாவைப் பாக்கணும்னு பிரியப்படறாங்க. பூர்ணா வர நேரம். நான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கன்.’’

திவாகருடைய பணி தொடர்பான விஷயங்களை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டான். தாத்தாவின் வியாபாரத்தை நல்ல முறையில் பெரிதாக்கியிருப்பதாகக் கூறினான். ஒரு பிரிண்டிங் பிரஸ் லீஸுக்கு எடுத்து நடத்துவதாகவும் சொன்னான்.

***

திவாகர் கேண்டீனை நோக்கி நடந்தான்.

பூர்ணா ஒரு ரயில் விபத்தில் இறந்து போனாள். பாலக்காட்டிலிருந்து கோயம்புத்தூர் வருவதற்குள் நிகழ்ந்த விபத்து. எதிர்பாராத தடம் புரள்வு. லக்ஷ்மி நண்பர்களுடன் கல்கத்தா சென்றிருந்தான். அவன் திரும்பி வரும் போது எல்லாம் முடிந்திருந்தது. பூர்ணாவின் தோழிகள் லக்ஷ்மியிடம் தகவலைச் சொன்னார்கள். கேட்டுக் கொண்டான். ஆனால் எப்போது நினைத்துக் கொண்டாலும் பூங்காவிற்கு வந்து அமர்ந்து விடுவான். நாளின் எல்லா பணிகளையும் இயல்பாகச் செய்வான். அந்த நினைவு வந்து விட்டால் அவன் உடைந்து விடுவான். 

***

கேண்டீன் ஓனர் சற்று ஓய்வாக இருந்தார். திவாகர் பூரிக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 “லக்ஷ்மி மேலே தெய்வங்களுக்கு கொஞ்சம் கருணை இருக்கு தம்பி. முழுக்க மீளலைன்னாலும் ஓரளவு மீண்டிருக்கான். அவனுக்குன்னு எதுவும் செஞ்சுக்கலைன்னாலும் நித்யப்படி காரியங்களை செஞ்சுகிட்டிருக்கான்.’’

திவாகர் பொதுவாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 “அப்பப்ப வந்துட்டு போங்க தம்பி. லக்ஷ்மியைப் பாத்துட்டு போங்க.’’

***

திவாகர் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான். ரயில் இன்னும் சற்று நேரத்தில் புறப்படும் என்ற அறிவிப்பு வந்தது. திவாகர் எல்லா காத்திருப்புகளும் எளியவை அல்ல என்று எண்ணிக் கொண்டான்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.