ஒரு பயணம்

காலம் டோபீன். தமிழில் : மைத்ரேயன்.

“மா, எல்லாரும் எப்படி செத்துப் போறாங்க?” அவன் கேட்டபோது, மேரி பதில் சொல்லி இருந்தாள், செத்த பிறகு எப்படி ஆத்மா உடலை விட்டுப் போகிறது, அப்புறம் கடவுள்… ஹ்ம்ம். கடவுள்… நம்மை நேசிக்கிறார் என்பதால் நம் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்..

“எல்லாருமே செத்துப் போவாங்களா?”

“ஆமாம், டேவிட்.”

”ஒவ்வொருத்தருமா?”

அவனுடைய சிரத்தை அவளுக்கு வேடிக்கையாக இருந்தது, ஆனால் அவனைப் பொறுப்போடு கவனிக்க முயன்றாள், அவளால் முடிந்தவரை நன்றாகப் பதில் சொல்ல முனைந்தாள். அவனுக்கு நான்கு வயது போல இருந்திருக்கும் அப்போது, எல்லாம் எப்படி வேலை செய்தது, ஏன் என்றெல்லாம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளும் கட்டத்தில் இருந்தான் என்று அவளுக்கு நினைவிருந்தது.

அவர்களுடைய ஒரே குழந்தை அவன், இருபது வருட மண வாழ்வுக்குப் பிறகு ஷேமஸும் அவளும் இனிக் குழந்தைகள் பெற வாய்ப்பில்லை என்று கை விட்ட பிறகு, பிறந்தவன். முதலில் அவளால் அதை நம்பவே முடியவில்லை, அவள் பயந்திருந்தாள்; அது ஏன் அப்போது நேர்ந்தது, பல வருடங்களுக்கு முன்னால் ஏன் நேரவில்லை என்று அவள் முன்பே தன்னைக் கேட்டுக் கொண்டிருந்தாள், ஆனால் அவளால் ஒரு விளக்கத்தையும் காண முடியவில்லை. ஒருக்கால் தாங்கள் அதிக வயதாகி விட்டவர்களோ, தம் வழக்கங்களில் மிகவும் ஊறிப் போனவர்கள் என்பதால் குழந்தை ஒன்றை வளர்க்க இயலாதவர்களோ என்று அவள் நினைத்தாள். சுதந்திரமாக இருந்து அவர்களுக்குப் பழகி இருந்தது. இருந்தாலும், அவள் எதிர்பார்த்த அளவு பெரும் மாறுதல்களை டேவிட் அவர்கள் வாழ்வில் கொணரவில்லை. மிஸர்ஸ். ரெட்மண்ட், அருகில் ஒரு குடிலில் வசித்தவர், டேவிட் பிறந்து சில நாட்களில் அவரது கணவர் இறந்திருந்தார், ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வந்து அவளுக்கு உதவினார், அவர்கள் எங்காவது இரவில் வெளியே போக விரும்பினால், அவனைப் பார்த்துக் கொள்ளவும் வந்திருந்தார். அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே சிறியதாக ஒரு தேசியப் பள்ளி இருந்தது, அதில் ஷேமஸ் தலைமையாசிரியராக இருந்தார். டேவிட் சற்று வளர்ந்ததும், அவன் மிஸர்ஸ். ரெட்மண்ட்டோடு கூடுதலான நேரத்தைக் கழிக்கத் தொடங்கினான். பலமுறை, மேரி அங்கே போய் அவனைத் திரும்ப அழைத்து வர முயன்ற போது அவன் வர விரும்பியதில்லை. ஆனால் தன் வீட்டிற்குத் திரும்பி வந்த பிறகு, அவன் மறுபடி சிரிக்கத் தொடங்குவான், அவள் பின்னாலேயே வந்தபடி, கேள்விகளாகக் கேட்பான், அல்லது மேலும் வளர்ந்த பிறகு, பள்ளியில் தனக்கு என்னவெல்லாம் நேர்ந்தது என்று அவளிடம் சொல்வான்.

நேரமாகி விட்டிருந்தது, இருட்டில் நீண்ட தூரம் ஓட்டி அவளுக்குப் பழக்கமில்லை. கவனமாக இருப்பது அவளுக்குக் கடினமாக இருந்தது, அந்தச் சாலை அவளுக்கு நன்கு பழகிய ஒன்று என்றபோதும், அவளுக்கு மெதுவாகவே ஓட்ட வேண்டி இருந்தது. அது மார்ச் மாதம், மெல்லிய உறைபனி இறங்கத் துவங்கி இருந்தது. சாலை நீண்ட தூரங்களுக்கு அகலப்படுத்தப்பட்டிருந்தது, காரின் முகப்பு விளக்குகள் பழைய சாலை ஓரப் பள்ளங்களுக்குப் பதிலாக, வெள்ளை நிற வேலிகளின் மீது ஒளி வீசின. சாலை குற்றம் செய்ததைப் போல, சூழலில் இருந்த நிலங்களிடமிருந்து ஒடுங்கி ஒளிந்திருந்தது முன்பு, அதுபோல இப்போது ஒளிந்திருக்கவில்லை. இப்போது விபத்துகள் குறைந்திருக்குமென அவள் எண்ணினாள். பழைய குறுகிய சாலை அவளுக்கு நினைவிலிருந்தது, அவள் மனம் பின்னே செல்லத் தொடங்கியது, இதெல்லாம் எந்த நாளில் துவங்கியது என்பதைக் குறிப்பாகக் கண்டுபிடிக்க வேண்டுமென மறுபடி தான் யோசிக்க முயல்வதாக அவள் அறிந்தாள், அன்று ஷேமஸும், தானும் தொடர்பு கொள்ள முடியாத தூரத்துக்கு டேவிட் போய் விட்டதாக, ஆத்திரம் நிரம்பியவனாக, தன்னுள் ஒடுங்கியவனாக அவன் ஆகி விட்டதாக அவள் அறிந்து கொண்டிருந்தாள். தானும், ஷேமஸும்தான் பழி சொல்லப்பட வேண்டியவர்களா, ஆனால் என்ன விதத்தில், ஏனெனில் மருத்துவ மனையிலிருந்து காரோட்டி அவள் வீட்டுக்கு அழைத்து வரும் அவர்களது இருபது வயது மகன், கடந்த ஏழு மாதங்களாக அங்கு மௌன நிலையில் துன்பப்பட்டதாக அவள் நினைத்தாள்; மருத்துவர்கள் அதை மன அழுத்தம் என்று சொன்னார்கள். முன் இருக்கையில் அமர டேவிட் மறுத்து விட்டிருந்தான், அவளோடு பேசவும் தயாராக இல்லை. காரின் பின் இருக்கையில் அமர்ந்து, அவளை ப்ரே நகரில் காரை நிறுத்தி வாங்கி வரச் சொன்ன ஒரு அட்டைப் பெட்டியிலிருந்து எடுத்து, ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட்டுகளை ஏற்றிப் புகைத்துக் கொண்டிருந்தான். அவளோடு பேசக் கூடாது என்று அவன் முடிவு செய்திருக்கிறானா என்று அவள் யோசித்தாள், அல்லது இப்படி இருப்பதுதான் அவனுக்கு இயல்பாக இருக்கிறதா, அந்த மௌனம் அவனுக்கு வசதியாக உணரச் செய்ததா, அவளை அது அமைதி இழந்தவளாகவும், சலித்துப் போனவளாகவும் ஆக்கியது. தான் பேசி ஆக வேண்டும் என அவள் முடிவு செய்தாள்.

 “உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, டேவிட்,” என்றாள்.

அங்கிருந்து பதில் ஏதும் இல்லை. அவளை நோக்கி ஒரு கார் எதிரில் வந்தபோது, அவள் முகப்பு விளக்குகளை மங்கலாக்கினாள், ஆனால் எதிரில் வந்த விளக்குகளின் ஒளி மிகவும் கடுமையாக இருந்ததால், கண்களைச் சாலை ஓரத்தில் பதித்து அவற்றைத் தவிர்க்க வேண்டி இருந்தது.

“அவருக்குப் போன வாரம் இன்னொரு முறை ரத்த அடைப்பு வந்தது,” அவள் சொன்னாள், ஆனால் அது ஏனோ நிஜமில்லை, பொய் என்பது போலவும், ஏதோ அவனுக்கு அதிர்ச்சி கொடுத்துத் தன்னோடு பேசவைக்கவென்று அவள் அதைச் சும்மா சொல்கிறாள் என்பது போலவும் இருந்தது. ஆனாலும் அவன் பேசவில்லை; தன் சிகரெட்டை வலுவாக அவன் உறிஞ்சுவது அவளுக்குக் கேட்டது.

ஆர்க்லோ நகரின் மையத் தெரு ஆளற்றுக் காணப்பட்டது, பிறகு மீதமிருந்தவை, கோரி, காமொலின் மற்றும் ஃபெர்ன்ஸ் நகரங்களும், அவற்றிடையே நீண்டிருந்த சாலைகளும், பிறகு வீடும்தான். காருடைய முகப்பு விளக்குகள் சிறிது தூரமே ஒளியூட்டின, அதைத் தாண்டினால் வேறெதுவும் இல்லாத சூன்யம்தான் என்பதாகத் தெரிந்தது. சாலையில் போக்குவரத்து மிகக் குறைவாக இருந்தது. காருக்குள் இருந்த அடர்ந்த சிகரெட் புகையை மேரியால் தாங்க முடியவில்லை. முதல் தடவையாக நிலா பார்வைக்குத் தென்பட்டது.

யோசிக்காமல் இருக்க அவள் முயன்றாள், முன்னே இருக்கும் சாலையில் தன் புத்தியைப் பதித்து இருக்க முயன்றாலும், கடந்த காலத்திலிருந்து ஏதேதோ பிம்பங்கள் அவளுக்குத் தோன்றிய வண்ணம் இருந்தன, என்ன செய்தும் அவற்றை நிறுத்த அவளால் முடியவில்லை. தன் தேன் நிலவு நாட்களைக் கழித்திருந்த டப்லின் நகரின் மோண்ட் க்ளேர் விடுதியில் தாங்கள் இருந்த அறையையும், காலையில் அந்தத் தெருவிலிருந்து எழுந்த வினோதமான ஒலிகளையும் திரும்ப நினைக்க அவளுக்கு முடிந்தது. அன்று அவளுக்குக் கொஞ்சமே தெரிந்திருந்த அந்த நகர் பற்றித் தனக்கிருந்த மனச் சித்திரங்களை மீண்டும் பெற முயன்றாள். ஆனால் வேறு காட்சிகள் அந்தப் படத்தில் கலந்து விடவும், எல்லாம் குழம்பிய உருவாயின. கோடைக் காலங்களி அவர்கள் வழக்கமாகப் போகும் குஷ் பகுதியைச் சுற்றி வலைப் பின்னலாக இருந்த சந்துகளும், அந்தி வேளையில் சுற்றிப் பறந்து தலைமுடிக்குள் நுழைந்து விடும் சுள்ளான்களும். ஃபெர்ன்ஸில் அவளுடைய அப்பாவின் கடைக்கு மேல்தளத்தில் இருந்த வரவேற்பறையில், அவளுடைய அம்மா இறந்த பிறகு, தொங்க விடப்பட்டிருந்த அம்மாவின் சித்திரம் ஒன்றும் மனதில் பார்த்தாள்.

அவர்கள் மணம் செய்து கொண்டபோது, தன் அப்பா அவர்களுக்கென்று வாங்கிய, பள்ளிக்கூடத்துக்கு அருகிலிருந்த பழைய இரண்டு தள வீட்டை, இருவரும் முதல் தடவை பார்த்ததையும் பார்த்தாள். அவர்கள் இருவரும் வீட்டைப் பார்க்க முதல் தடவை உள்ளே சென்றபோது, அங்கிருந்த எல்லா வெற்றுச் சுவர்களோடு, நடந்த போது அவர்களின் காலடிகள் எழுப்பிய மழுங்கிய ஒலிகளுமாகக் கலந்து வீட்டில் நிலவிய சூழலை நினைவு கொண்டாள். ஷேமஸ் இப்போது அதே வீட்டில் மாடியில் படுத்திருந்தார். அவருடைய உடலில் மொத்த வலது பாகமும் செயலிழந்து போயிருந்தது. மேரியால் வேறெதையும் விட அந்தக் காட்சியைத் தெளிவாக உருவகிக்க முடிந்தது. செய்தித்தாள்களை அவள் அவருக்குப் படித்துக் காட்டிய போதும், அவர் எந்த ஈடுபாட்டையும் காட்டவில்லை.

காரின் பின்னிருக்கையில், டேவிட் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

”முன் ஸீட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொள்ள வேண்டுமா உனக்கு?” அவள் கேட்டாள். அங்கு ஒரு மௌனம் சில கணங்களுக்கு நிலவியது, பிறகு ஒரு அடக்கப்பட்ட ஒலி கேட்டது.

”வேண்டாம். தேங்க்ஸ்.”

அவள் காரைத் திடீரென்று நிறுத்தி, சாலையின் பக்கவாட்டில் ஒதுக்கி நிறுத்தினாள். திரும்பிப் பார்க்கையில் அவளால் அவனைச் சரிவரப் பார்க்க முடியவில்லை, அதனால் மங்கலான உள் விளக்கைத் தட்டி விட்டு ஏற்றினாள். டேவிட் புகை வெளியேறுவதற்காக ஜன்னலைத் திறந்தான். பெரிய எலும்புகள் கொண்ட அவளுடைய முகத்திலிருந்து அவன் எதையும் பெற்றிருக்கவில்லை, ஆனால் அவளுடைய அடர்ந்த மஞ்சள் நிற முடியை மட்டும் பெற்றிருந்தான். அந்த மங்கலான ஒளியில் அவள் ஷேமஸை முதலில் பார்த்தபோது அவர் இருந்த அதே தோற்றத்தை அவன் அவளுக்கு நினைவூட்டினான். ஆனால் டேவிட்டின் முகம் இன்னமும் கூடுதலாக மெலிவாக இருந்தது. அவனுடைய முகத்தில் அல்லலுற்ற சுவடு இருந்தது. அவன் திரும்பிக் கொண்ட விதத்திலிருந்து அவளோடு பேச அவன் விரும்பவில்லை என்பது தெளிவாக இருந்தது.

“இப்ப நீ என்ன செய்யப் போறே? அதைப் பத்தி உனக்கு ஏதாவது யோசனை இருக்கா?” அவள் கேட்டாள், துரிதமான ஒரு வினாடி நேரம் அவன் கண்களை அவள் சந்தித்தாள். அவன் வேறுபுறம் பார்த்துக் கொண்டான்.  

“எனக்குத் தெரியல்லை. இப்ப என்னை எதுவும் கேக்காதீங்க, அதுக்கு சம்மதமா? எதையுமே என் கிட்டே கேக்காதீங்க.”

“கொஞ்ச நாளைக்கு நீ வீட்டோட இருக்கலாம். ஊர்லயே ஏதாவது வேலை கூடப் பார்க்கலாம்.”

“எனக்குத் தெரியல்லை.”

அவன் பாதி புகைத்த சிகரெட்டை ஜன்னல் வழியே விட்டெறிந்தான்.

“இரவில் காரோட்டினால் எனக்கு மிகவும் களைப்பாகிறது. நான் வயசானவளாகி விட்டேன் போலிருக்கிறது.” அவள் சிரித்தாள், அவன் அவளைப் பார்த்து ஒரு குறைச் சிரிப்பைக் காட்டினான்.

“எப்படியோ இருக்கட்டும், நாம அவசரமாப் போறது நல்லது.”

அவள் எட்டி விளக்கை அணைத்தாள், எஞ்சினை மறுபடி கிளப்பினாள்.

“உன் அப்பா நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்.”

அவர் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு படுத்திருப்பார், நான் உள்ளே வரும்போது என்னைக் கொஞ்சம் பார்த்தால் அதிகம் என்று அவள் நினைத்தாள். இப்பொழுது இரண்டு பேர் இப்படி தனக்குத் துணையாக இருப்பார்கள் என்று நினைப்பு வரவும் அவள் புன்னகைத்தாள். அவனுடைய மௌன நிலைகள் எத்தனை கடுமையாகத் தெரிந்தாலும், அவன் எத்தனை நாட்கள் ஜன்னல் திரைகளை மூடிக் கொண்டு படுக்கையிலேயே கழித்தாலும், எப்படியானாலும் டேவிட் வீட்டோடு இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவனோடு குஷ் பகுதிக்குப் போவது பற்றி, அவன் இழந்திருந்த ஏதோ ஒன்றை, அவன் வேண்டுமென்றே தொலைத்திருந்த முந்தைய இளமை வேகத்தை, பளீரிடும் ஒரு கோடை நாளில், கடலிலிருந்து ஒளி அவனுக்குத் திரும்பக் கொடுப்பது பற்றியெல்லாம் அவள் கனவு கண்டு கொண்டிருந்தாள். வெறும் காலோடு மண்ணில் அவன் நடந்தால் அது அவனுடைய உணர்வுகளைத் தூண்டி உயிர்ப்பிக்கும் என்று நினைத்தாள், ஆனால் எதுவும் அத்தனை எளியதாக இராது என்று உணர்ந்த போது அவள் பெருமூச்சு விட்டாள். அது ஒரு நோய் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் அப்படி அது தெரியவில்லை. அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஏதோ ஒரு விசேஷமான இருண்ட பரிசை, டேவிட் விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறான் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. ஏதொ ஒன்று அவனுக்கு ஆறுதலைக் கொடுத்திருந்திருக்கிறது, அதை அவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான்.

“அங்கே எப்படி இருந்தது டேவிட், மருத்துவ மனையில்? நாங்கள் உன்னைப் பார்க்க வந்த போது என்னால் அது பற்றி ஏதும் தெரிந்து கொள்ள முடியவில்லை. நீ எப்படி இருந்தாய் என்று நான் கண்டு பிடிக்கவே முடியவில்லை.”

“கேள்வி ஏதும் கேட்காதீங்க, அம்மா, ஒரு கேள்வியும் கூடாது.”

“சும்மாச் சொல்லு எங்கிட்டே.”

“அது படு மோசமா இருந்தது.” அவன் பெருமூச்சு விட்டான், அவன் புகையை ஊதி வெளியே விட்ட ஒலி அவளுக்குக் கேட்டது. “எல்லாமே. படு மோசம்.”

“ஆனா அந்த நேரத்துல அதுதான் ரொம்ப நல்லதாத் தெரிஞ்சது இல்லியா? என்ன சொல்றேன்னா, அப்ப செய்யறத்துக்கு எங்களுக்கு வேறெதுவும் இல்லையே.”

“ஆமா.”

 அவனிடம் மாத்திரைகள் இருந்தது அவளுக்குத் தெரியும், ஆனால் அவை என்ன செய்யும் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் பேசிய மருத்துவர், உரையாடல் முழுதும் டேவிட்டை, ‘நோயாளி’ என்றுதான் குறிப்பிட்டார், பின்னொரு நாள் அவனை மறுபடி மருத்துவ மனையில் சேர்ப்பது அவனுக்கு நன்மை செய்யும் என்றும் கருதி இருந்தார். அவர் நேரடியான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிந்ததால், மேரி அவரிடம் எதையும் கேட்கவில்லை. டேவிட்டை யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அவள் நினைத்தாள், அவனும் எதற்கும் தகுதி பெற்றிருக்கவில்லை. அவள் ஒரு முதியவளாக ஆகிற போது, டேவிட் இன்னமும் மேல் தளத்தில் இருக்கும் அறையில்தான் இருப்பான் என்று அவள் நினைத்தாள். அவனை வேறேதோ கேட்க நினைத்தாள், ஆனால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள், அவனுக்கு எரிச்சலூட்ட அவள் விரும்பவில்லை. காரின் பின் இருக்கையில் இருந்த மௌனம் இன்னமும் கூடுதலான ஜாக்கிரதை உணர்வும், எதிர்ப்புணர்வும் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவள் மேலும் வேகமாக காரை ஓட்டுகையில் அந்த மௌனம் அவளை நோக்கிச் செலுத்தப்பட்டதாக அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவள் வீட்டுக்குச் சீக்கிரம் போய்ச் சேர்வதற்கு ஆசைப்பட்டாள்.

காரின் முகப்பு விளக்குகள் ஃபெர்ன்ஸ் நகரின் ப்ராடஸ்டண்ட் கதீட்ரலின் அடக்கமான சதுரக் கூண்டின் மீது ஒளி வீசின. அவர்கள் கார் ஒன்றை வாங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு ஞாயிறன்றும் ஷேமஸும் அவளும் சைக்கிள்களை ஓட்டிச் சென்று நகருக்குள் செல்வார்கள், பிறகு ஃபெர்ன்ஸ் நகருக்குச் செல்லும் ரயிலில் பயணிப்பார்கள், அங்கு அவளுடைய அப்பாவுடன் ஒரு முழு நாளைச் செலவழிப்பார்கள். அவர் இறக்கும் நிலையில் பல மாதங்களில், அவர் அத்தனை மென்மையானவராக, நல்ல குணமுள்ளவராக இருந்தார். மேரி தனியாக அவரோடு இருந்தாள், அவருடன் அமர்ந்திருந்தாள். அவர்கள் இருவருக்கும் அது ஒரு மகிழ்ச்சியான காலம் என்று அவள் நினைத்திருந்தாள்.

காரின் விளக்குகள் சாலை முடியும் சந்திப்பில் இருந்த உயரம் குறைந்த நவீன கதோலிக்க சர்ச்சின் கண்ணாடிகளில் மின்னிய போது, அவளுக்கு தன் திருமணம் பழைய சர்ச்சில் இருந்தது என்பது நினைவு வந்தது, அது இப்போது என்னவாகப் பயன்படுத்தப்படுகிறது என்று யோசித்தாள். அவளிடம் அவளுடைய அப்பாவின் உலோக விளிம்பு கொண்ட மூக்குக் கண்ணாடி இன்னமும் ஏதோ ஒரு இழுப்பறையில் எங்கோ இருந்தது. அவர் இறந்த போது, அவர்கள் அவருடைய கடையை விற்று விட்டார்கள், தங்கள் வீட்டை விசாலமாக்க, ஒரு இணைப்புப் பகுதியைக் கட்டிக் கொண்டார்கள், ஒரு காரை வாங்கினார்கள். தாங்கள் அந்தக் கடையை இன்னும் விற்கவில்லை என்பது போல ஒரு கணம் அவள் கற்பனை செய்து பார்த்தாள், அந்தக் கடையில் தினம் வேலை செய்வது டேவிட்டுக்கு உதவும் என்றும், அவள் அவனை மேற்பார்வை பார்ப்பாள், அந்த வேலை அவனுக்கு மிக அதிகமாகாமல் பார்த்துக் கொள்வாள் என்றெல்லாம் கற்பனை செய்தாள். அவள் சிறுமியாக இருந்த போது அந்தக் கடையில் வேலை பார்த்ததை அவள் விரும்பி இருந்தாள்.

 “அவர் எப்போதும் படுக்கையிலேயேதான் இருக்காரா?” டேவிட் திடீரென்று கேட்டான்.

“அனேகமா அப்படித்தான்,” அவள் சொன்னாள். “அவர் ஆஸ்பத்திரிக்குப் போகிறதா இருந்தது, ஆனால் அவர் போகமாட்டேன்னு சொல்லிட்டார், அதனால் மிஸர்ஸ் ரெட்மண்ட் ஒவ்வொரு நாள் ராத்திரியிலும் வருகிறார். நாம அவரைத் தூக்கணும், அவரோ பளு அதிகமா இருக்கிறவர். மிஸர்ஸ் ரெட்மண்டுக்கும் வயசாயிடுத்து. அவர்தான் இன்னக்கி ராத்திரி தங்கி இருக்கிறார்.”

டேவிட்டும் தானும் மொத்தப் பயணத்திலும் சுலபமாகப் பேசிக் கொண்டிருந்தது போல அவள் தனக்குத் தானே நடித்துக் கொண்டிருந்தாள்.

 “எனக்கு என்ன ரொம்பத் தேவைன்னு உனக்குத் தெரியுமா?” அவள் சகஜபாவத்தோடு கேட்டாள். “எனக்கு ஒரு சிகரெட் வேணும், ரொம்ப நாளாச்சு ஒண்ணைக் கையிலெடுத்து. உங்க அப்பா நான் புகை பிடிச்சதை வெறுப்பார். ஒண்ணைக் கொளுத்தி என் கிட்டே கொடுப்பியா?”

டேவிட் ஒரு லைட்டரைச் சுண்டும் ஒலியை காரின் பின்புறத்தில் அவள் கேட்டாள். அவன் அவளிடம் ஒரு சிகரெட்டைக் கொடுத்தான்.

“உனக்கு முன் ஸீட்ல உக்கார வேண்டாமா, நிச்சயமா அது?” அவள் கேட்டாள். “நாம வீட்டுக்குக் கிட்டே வந்துட்டோம்.”

“இல்லை. இங்கேயே சரியா இருக்கு.”

ஆற்றுக்கு அருகில் மரங்கள் கவிந்து மூடிய குறுகலான தெரு வழியே ஊருக்குள் அவர்கள் வந்தார்கள். குன்றுக்கு மேல் நிலா தெரிந்தது, இலைகள் இல்லாத மரக் கிளைகளையும், இளம்பனியின் நட்சத்திரச் சிதறல்களையும் அவள் சாலையில் பார்த்தாள். அவளால் அந்த சிகரெட்டைப் புகைத்து முடிக்க முடியவில்லை, எனவே அதை ஆஷ்ட்ரேயில் அணைத்துப் போட்டாள். ஊரின் தெருவிளக்குகள் அழுக்காக இருந்தன, அச்சுறுத்தும் மஞ்சளில் ஒளிர்ந்தன. தபால் அலுவலகத்தைத் தாண்டி ஓட்டிப் போய், ஆலையை நோக்கிச் சென்றாள். காரின் பின் கதவில் அதன் இடத்தில் இருந்த ஆஷ்ட்ரேயை எடுத்த டேவிட், பின் ஜன்னல் வழியே அதைக் காலி செய்தான். காருக்குள் வந்த குளிர்ந்த காற்றை அவள் கவனித்தாள்.

“நாம இப்ப வீட்டுக்கு வந்தாச்சு,” அவள் சொன்னாள்.

சாலையிலிருந்து திரும்பி, வீட்டு முன் இருந்த தார் போட்ட நுழைபாதையில் செலுத்தி வீட்டை அடைந்தாள். வீட்டில் விளக்குகள் போடப்பட்டிருந்தன, மிஸர்ஸ். ரெட்மண்ட் முன் கதவைத் திறந்து அவர்களைச் சந்திக்க வந்தார். பின் இருக்கையிலிருந்து தன் பையை டேவிட் எடுத்துக் கொண்டான்.

“எப்படி இருந்தார்?” மேரி பாதி இரகசியக் குரலில் கேட்டாள்.

“கொஞ்ச நேரம் முன்னால் வரை அவர் தூங்கினார், ஆனால் இப்போது அவர் முழுசா விழிச்சுக்கிட்டார். நாள் பூராவும் அவர் ஒடுங்கிப் போய் இருந்தார்.” மிஸர்ஸ். ரெட்மண்ட் சொன்னார்.

டேவிட் சமையலறைக்குத் தன்னோடு வர வேண்டுமென்று மிஸர்ஸ்.ரெட்மண்ட் வற்புறுத்தினார். அவன் அவரைப் பின் தொடர்ந்தான், ஆனால் பையைக் கெட்டியாகத் தன் கைகளில் பற்றிக் கொண்டிருந்தான், ஏதோ அவன் வேறெங்கோ போகவிருப்பவன் போல இருந்தது அது. மாடிப்படிகளின் கீழே நின்றபடி மேரி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள், பிறகு திரும்பி, படுக்கை அறைக்குள் போனாள்.

திரைகள் இழுக்கப்பட்டு ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன, அங்கு மின் உலைக்கு முன்னால் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. அறை நல்ல சூடாக இருந்தது.

“அவன் இங்க இருக்கானா?” ஷேமஸ் கேட்டார்.

அவள் பதில் சொல்லவில்லை, ஆனால் நடந்து போய் ஒப்பனை மேஜையின் கண்ணாடி முன் இருந்த ஒரு முக்காலியில் அமர்ந்தாள், அங்கிருந்து அவளால் அவரைப் பார்க்க முடிந்தது. தன் கண்களையும், வாயையும் சுற்றி இருந்த சுருக்கங்களோடு ஒப்பிட்டால், நன்கு பராமரிக்கப்பட்டு இருந்த தன் இளம் மஞ்சள் நிறக் கூந்தல் வினோதமாகத் தெரிந்தது என்பதைக் கவனித்தாள். அவளுடைய தேய்மானங்கள் என்று டேவிட் அவற்றை அழைத்துக் கொண்டிருப்பான். தன் நரைகளை வெளியே தெரிய விட வேண்டிய காலம் வந்து விட்டது என்று அவள் நினைத்தாள். ஷேமஸ் அவளைப் படுக்கையிலிருந்தபடி உற்று நோக்கிக் கொண்டிருந்தார், அவர்கள் கண்கள் சந்தித்தபோது, தன் எதிர்காலத்தை அவள் ஒரு க்ஷணம் பார்த்தாள், அதில் தன் சுய நலனின் எல்லாத் துளிகளையும் தான் ஒன்று திரட்ட வேண்டி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டாள். அவரை நோக்கித் திரும்பு முன், தன் கண்களைச் சிறிது நேரம் மூடிக் கொண்டாள்.

“அவன் திரும்பி வந்தானா? நீ அழைச்சுகிட்டு வந்துட்டியா?” அவர் மறுபடி கேட்டார்.


காலம் டோபீன் (Colm Tóibín) அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். ஆறு நாவல்களும், சில சிறுகதைத் தொகுப்புகளும், பல அ-புனைவு நூல்களும், சில நாடகங்களும் எழுதி இருக்கிறார். முழு விவரங்களுக்கு இங்கே செல்லலாம்:

http://colmtoibin.com/content/biography

இந்தச் சிறுகதை இவரது ‘மதர்ஸ் அண்ட் ஸன்ஸ்’ என்கிற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.  ‘அ ஜோர்னி’ (A Journey) என்கிற இங்கிலிஷ் சிறுகதையை ‘ஒரு பயணம்’ என்று தமிழாக்கியவர்- மைத்ரேயன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.