2013 – இன்றே, இப்பொழுதே

அமர்நாத்

மணிவாசகம் காரில் ஏறி அமர்ந்தவுடனேயே, முன்னறிவிப்பு இல்லாமல்…

அந்த பட்டப்பகலிலும் பூரண சூரிய கிரகணம் போல சுற்றிலும் இருண்டது. வயிற்றில் அழுத்தம் எழுந்து உயர்ந்து மார்பை இறுக்கும் வலி. சுவாசம் வலியை மிகுவித்தது. உடலெங்கும் வேர்த்துக்கொட்டியது. எல்லாவற்றையும் விட இதயத்தின் பலத்த துடிப்பு. அதன் ஓசை பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த விஜயாவின் காதில் விழுந்திருக்க வேண்டும். 

“என்னங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கவலைதோய்ந்த குரலில் கேட்டாள். தன் கைக்குட்டையினால் அவர் முகத்தை அழுத்தித்துடைத்தாள். 

‘நான் இப்போது எங்கிருக்கிறேன்?’ என்ற வழக்கமான கேள்வி அவர் மனதில் எழுந்தது. கண்களை மூடிக்கொண்டு பதிலை யோசித்தார். 

எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும் ஓய்வுக்கால வாழ்க்கையில் தனித்துத்தெரிந்த அந்த நிகழ்வு. ரமேஷ் அவருடன் சந்தித்துப்பேச முந்தைய வாரம் வீடுதேடி வந்தான். வந்து… 

ஞாபகம் வந்துவிட்டது. கண்களைத் திறந்து பார்த்தார். பார்வையில் இருள் குறையத் தொடங்கியிருந்தது. சாலையோர பெயர்ப்பலகையில் சூரியவொளி பளிச்சிட்ட வெள்ளி எழுத்துக்கள். ‘ஹெரிடே…’ காரணத்தோடுதான் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். வழி தப்பிவிடவில்லை. 

மார்பை அழுத்திக்கொண்டார். வலி பொறுக்கும் அளவில். இதயத்தின் படபடப்பும் பதற்றத்தின் எல்லைக்குள். ஆனாலும் கைகளும் கால்களும் அவர் கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை. 

அதற்குள் விஜயா தன் அலைபேசியில் ஆனந்தை அழைத்தாள். அரை நிமிடம் கழித்து அவன் குரல் கேட்டதுமே, 

“அப்பாக்கு திடீர்னு கிறுகிறுப்பு, மயக்கம்.”  

“எவ்வளவு நேரமா…”  

“கார்ல வந்து உட்கார்ந்தோம். உடனே இதயம் பட்பட்னு அடிச்சிது.” 

“இப்போது…” 

அவர் மார்பைத் தொட்டுப்பார்த்தாள். “கொஞ்சம் பரவாயில்ல.” 

“இப்ப எங்கே இருக்கீங்க?” 

“ஜோர்டன் லேக் பக்கத்தில.”  

வீட்டிலிருந்து அவ்வளவு தூரம் அவர்கள் வந்த காரணத்தை அவனுக்கு பிறகு சொல்லிக்கொள்ளலாம். 

“எமர்ஜென்ஸிக்கு அழைத்துப்போவது அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன். இப்ப நூறு டிகிரிக்கு மேல. உங்கள் காரின் நிறமும் கறுப்பு. வெயிலில் ஒருமணி நிறுத்தியிருந்தா…”

“நாங்க இங்கே வந்து ஒருமணிக்கு மேல இருக்கும்.” 

“அப்ப காருக்குள்ள இருபது முப்பது டிகிரி கூடுதலாக இருக்கும். உடம்பு மிகவும் சூடாகி இதயத்துக்கு அதிக வேலை. கவலைப்பட ஒன்றும் இல்லை.”  

அதைக்கேட்டு விஜயாவுக்கு ஆறுதல்.

“நீங்கள் இருப்பது இருபத்தைந்து மைல் தள்ளி. அப்பா கார் ஓட்டறது சரியில்லை. உன்னால் முடியாவிட்டால் நான் வருவேன்.”  

“புது இடம். வழிதான் தகராறு.”  

மணிவாசகம், “ஜிபிஎஸ்” என்று முனகினார். 

“நீ வேலையை விட்டு இவ்வளவு தூரம் வரவேணாம். நான் சமாளிச்சுக்கறேன்.” 

“நீங்க வீட்டுக்கு மெதுவாப்போங்க. நான் அங்கே வந்து பார்க்கிறேன். பை!”  

“இப்ப எப்படி இருக்குதுங்க?”  

“மயக்கம் குறைஞ்சிட்ட மாதிரி தெரியுது.”  

அவள் எழுந்துவந்து கதவைத்திறந்து அவர் கையைத் தாங்கிக்கொள்ள மணிவாசகம் உடலைத்திருப்பி எழுந்தார். 

“மார் வலிக்குதா?”  

“முன்னளவுக்கு இல்ல.”  

“உள்ளே போய் யாரையாவது உதவிக்கு கூட்டிட்டு வரட்டுமா?”   

“ஐயியோ! வேணாம், வேணாம்” என்று கடனட்டையின் மாதாந்தர செலவினங்களைப் பார்த்ததுபோல அலறினார். “வீட்டுக்கே போயிருவோம்.”  

சின்ன தப்படிகளில் காரில் உடலை சாய்த்து அவர் அதன் வலப்பக்கம் வந்தார். வெளியே பார்த்தபடி உட்கார்ந்து உடலைத் திருப்பிக்கொள்ள விஜயா குனிந்து பெல்ட்டை இழுத்து மாட்டினாள். கதவை சாத்திவிட்டு காரை ஓட்ட தன்னைத்தயார் செய்தாள். காருக்கு உயிர்கொடுத்து குளிர் சாதனத்தை உச்சத்தில் வைத்தாள். 

“ஜிபிஎஸ் என்னாத்துக்கு? நானே வீட்டுக்கு வழிசொல்றேன். முதல்ல இந்த இடத்தைவிட்டு வெளியே போவோம்!” 

அவர் விருப்பப்படி கார் வளாகத்தின் வாசலைப் பின்னுக்குத்தள்ளி பிரதான சாலையைத் தொட்டு நின்றதும் அவருக்கு வந்த நிம்மதி. அப்பாடா! தப்பித்தோம். 

“லெஃப்ட் அடிச்சிட்டு நேரா ஐந்து மைல்.”   

மணிவாசகம் மௌனத்தில் கண்மூட விஜயா தன்னம்பிக்கையுடன் காரை இயக்க… 

சின்னவயதில் இதைச் செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவள் பழைய பிருமாண்டமான ப்யுயிக் எலக்ட்ராவைத் திருப்புவதில் தடுமாற, அவர், “இடிக்கபோறே, மெதுவா.. மெதுவா..” என்று இரைய, அவள், “நீங்க கத்தினா நான் பதறிப்போயிடறேன்” என்று திருப்பி குரலை உயர்த்த… 

ஒரு வாரத்துக்கு முன்னால்… 

ரமேஷ் ரஸ்கார் தொலைபேசியில் அனுமதி கேட்டுவிட்டு அவரை சந்திக்க வந்தான். ஆனந்துடன் பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் படித்தகாலத்தில் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்த பழக்கம். அவன் நீளப்பேச அவர் பொருத்தமான வார்த்தைகளை அங்கங்கே நுழைத்தார்.  

“நான் வந்தபோதெல்லாம் நீங்கள் தயாரித்துக்கொடுத்த ஆம்லெட்டின் சுவை இன்னும் என் நாக்கில்.” 

“குட்.”  

“உங்கள் வயதுக்கு நன்றாகவே இருக்கிறீர்கள்.” 

“தாங்க்ஸ்.”  

“நிதித்திட்டத்தில் பட்டம். பிறகு, ப்ரின்ஸ் ஃபினான்ஷியல் செர்வீசஸ் சில ஆண்டுகள்.” 

“அப்படியா?” 

“மூளைச் சிகிச்சையில் ஆனந்துக்கு நல்ல பெயர்.”  

“எனக்கும் பெருமைதான்.” 

அவன் பேச்சு, அவனுடன் வந்த சின்ன தள்ளுவண்டி எல்லாவற்றையும் சேர்த்துப்பார்த்த மணிவாசகத்துக்கு ஒரு சந்தேகம்.

“எதிர்காலத்துக்கு எந்தவயதிலும் தயாராக இருக்கவேண்டும். அதிலும், வயதான காலத்தில் எதிர்பாராத செலவுகள் ஆளை அமுக்கிவிடும்.” 

சந்தேகம் தீர்ந்தது. எதையோ விற்கவந்திருக்கிறான். முதியோர்கள் என்றால் மருத்துவ இன்ஷுரன்ஸ். அன்றாட நிவாரணம், நீண்டகால கவனிப்பு என அது பல உருவங்களில். 

“எனக்கு சிறுவயதில் இருந்தே சுதந்திரமாகத் தொழில்நடத்த ஆசை. பத்து ஆண்டுகளுக்கு முன், இன்னும் ஒருவனுடன் கூட்டு சேர்ந்து ஓய்வுபெற்றவர்களுக்காக ஒரு தொடர் கவனிப்பு வளாகம் தொடங்கினேன். பெயர் ஹெரிடேஜ் ஹில்ஸ்.”  

“ஓ, அப்படியா? பொருத்தமான பெயர்” என்றார் அசுவாரசியமாக.

“அது சாதாரண முதியோர் இல்லம் இல்லை. வயதுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ற மாதிரி எல்லா தேவைகளும் எங்கள் பொறுப்பு. உணவு, பொழுதுபோக்கு, மருத்துவ மேற்பார்வை, நர்ஸின் சேவை அனைத்தும். ஜோர்டன் லேக் பக்கத்தில், அதைப்பார்த்தபடி மிக அழகான நிலப்பரப்பில்.” 

“நான் சமீபத்தில் அந்தப்பக்கம் போகவில்லை. போயிருந்தால் கண்ணில்பட்டு இருக்கும்.” 

“என் தந்தை உங்களைவிட ஆறு வயது பெரியவர். மூன்று ஆண்டுகளுக்குமுன் என் தாய் இறந்ததும் அங்கே ஒரு தனி அபார்ட்மென்ட்டில் வசிக்க ஆரம்பித்தார். இப்போது அவரால் முடியவில்லை. அதனால் இரண்டாம் கட்டம்.”  

இன்னும் சில ஆண்டுகள் போனால் அதற்கும் அடுத்த கட்டம் அங்கேயே. அது எதுவென அவன் சொல்லவில்லை. 

வளாகத்தின் படங்கள், வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் கொடுத்த பாராட்டுகள் மணிவாசகத்தின் பார்வையில் மெதுவாக நகர்ந்தன.  

“ஹெரிடேஜ் ஹில்ஸை நாங்கள் திறம்பட நடத்துகிறோம். அதைப் புகழ்ந்து நியூயார்க் டைம்ஸில் ஒரு கட்டுரை வந்ததில் இருந்து, அதற்கு நல்ல கிராக்கி. வடக்கேயிருந்து எல்லாம் வசிக்க வருகிறார்கள்.”

“ரொம்ப சந்தோஷம்.” 

“அதனால், தற்சமயம் காத்திருக்கும் காலம் மூன்று ஆண்டுகள். இப்போது பெயரைப் பதிவுசெய்தால் நீங்கள் இந்த பெரிய வீட்டில் இருந்து நகர விரும்பும்போது ஹெரிடேஜ் ஹில்ஸில் இடம் உங்களுக்காக தயாராகக் காத்திருக்கும். ஆனந்தும் செந்திலும் உங்களைப்பற்றி கவலைப்படாமல், நீங்களும் அவர்களுக்குத் தொந்தரவு தராமல் நிம்மதியாக இருக்கலாம்.” 

மற்றவர்கள் தயவு இல்லாத சுதந்திர வாழ்க்கை அவருக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்குத்தான் என்று அவனே தீர்மானித்துவிட்டான். 

முன்பின் தெரியாதவனாக இருந்தால், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு எழுந்துநின்று… நாங்கள் இந்தியர்கள். எங்கள் பையன்கள் முனகினாலும் வயதான காலத்தில் கவனித்துக்கொள்வார்கள். எங்கள் வசதிக்கு நீ சொல்லும் கன்டினியுயிங் கேர் கட்டிவராது. மனைவியைக் கேட்டு சொல்கிறேன். இப்படி ஏதாவது சாக்கு சொல்லி கதவை சாத்தி வெளியே அனுப்பிவிடலாம். ரமேஷை சிறுவயதில் இருந்தே தெரியும். அவன் தந்தையுடனும் ஓரளவு பரிச்சயம். 

“பார்க்கிறோம்” என்று அவர் யோசனையுடன் சொன்னதை பார்க்க வருகிறோம் என்று அவன் அர்த்தம்செய்து,   

“வசிப்பவர்களுக்குத் தொந்தரவு தரக்கூடாது என புதன்கிழமை மதியத்துக்கு முன்னால் மட்டும் வளாகத்தைச் சுற்றிக்காண்பிப்போம். அடுத்த புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு விஜயா ஆன்ட்டியுடன்…” 

அவர் சாக்கு கண்டுபிடிப்பதற்குள் அவனே ஏற்பாடும் செய்துவிட்டான். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார்.  

விஜயா காரை கராஜிற்குள் நிறுத்தி அதன் கதவை இறக்குவதற்குமுன் ஆனந்தின் ஊர்தி வீட்டுப்பாதையில். அவன் ஓடிவந்து அப்பாவைத் தாங்கிப்பிடித்து படிக்கட்டில் ஏற்றி வீட்டின் முன்னறை சோஃபாவில் படுக்கவைத்தான். மருத்துவன் என்ற முறையில் சின்ன சோதனைகள். 

“இரத்தத்துடிப்பு சீராக இல்லை. கொஞ்சம் அதிர்ச்சி, அவ்வளவுதான். எதற்கும் இதய நிபுணர் ஒருவரை சந்திக்க உடனே ஏற்பாடு செய்கிறேன்.” 

அவன் அலைபேசி இடுப்பில் அதிர, அதை எடுத்துப் பதில் சொன்னான். 

“ஓ! ஷுர்.” என்று சொல்லிவிட்டு அதை அப்பாவின் காதருகில் வைத்தான். ஆனந்தின் மனைவி ஷேரன். சொந்தப்பெண்ணை விட அவளுக்கு அவர்மேல் மதிப்பு மரியாதை. 

“ஐ ஹோப் யூ கெட்  பெட்டர், டாட்!” என்றாள் கனிவுடன். 

“தாங்க்ஸ், ஷேரன்! உன் வார்த்தையே எனக்கு மருந்து.”  

அவளைத்தொடர்ந்து முந்தையத் திருமணத்தில் அவளுக்குப் பிறந்த இரண்டு பெண்களும் ‘மேனி தாத்தா’ விரைவில் நலம்பெற விருப்பம் தெரிவித்தார்கள். அப்போதே அவருக்கு உடல் குணமாகிவிட்ட உணர்வு. 

ஆனந்த் கிளம்பிப்போனதும், 

“காப்பி தரட்டுமா?”  

“பால் குறைச்சலா.”  

மற்ற எண்ணங்களை விரட்ட தனக்குத்தெரிந்த அத்தனை சைவப்பாடல்களையும் மனதுக்குள் சொன்னார். 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து… 

மாசில் வீணையும் மாலை மதியமும்… 

மாலைவருவதற்குள் மேற்குக்கரையில் இருந்த செந்திலும் அவன் தோழியும் அவர் நலனை விசாரித்தார்கள். 

“நான் நல்லாத்தான் இருக்கேன். நீ இப்ப வந்து பாக்கறதெல்லாம் அவசியமே இல்ல” என்று அவனை அடக்கினார். 

அடுத்த சிலநாட்கள் கடினமான காரியம் எதுவும் செய்யாமல் பகல்நேரத்தில் சூரிய அறையின் சாய்வு நாற்காலியில் அமைதி காத்தார். விஜயா காரம் குறைச்சலான ரசமும், அடுப்பில் வாட்டிய ரொட்டியும் செய்து கொடுத்தாள். அண்மைக்கால எதிர்கால சிந்தனைகளுக்கு நடுவில், 

தோடுடைய செவியன் விடையேறி… 

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்… 

‘காலனை உதைத்த காலா’ என்ற துதியை முன்பெல்லாம் சொல்வார். இந்த சமயத்தில் அது அவர் நினைவுக்கு ஏனோ வரவேயில்லை. 

இதயமும் மனமும் சமனநிலைக்கு வந்ததும் சாமியை அழைத்தார். என்ன எப்படிக்குப்பிறகு… 

“ஹெரிடேஜ் ஹில்ஸை போய்ப்பார்த்தோம். தெரியும் இல்ல?”  

“ம்ம். விஜயா சரவணப்ரியாவுக்கு விஸ்தாரமா சொல்ல, அவ தன் விமர்சனத்தை சேர்த்து எனக்கு செய்தி வாசிக்க… இடம் எப்படி?”  

“முதல்ல ஆணும் பெண்ணுமா ரெண்டு இளவட்டங்கள். தங்கற இடம், சாப்பிடற இடம், தினப்படிக்கு மூணுவேளை முழுசாப்பாடு, இரண்டு காப்பியோட நொறுதீனி, எல்லாம் காட்டினாங்க. அந்த இடத்திலயே அவசரம்னா ஒரு வயசானவங்க டாக்டர். இருபத்திநாலு மணி நேரமும் இரண்டு நர்ஸ்கள். ஹார்ட் அட்டாக் மாதிரி எமர்ஜென்ஸிக்கு உடனே ஏபெக்ஸ் மெடிகல் காம்ப்ளெக்ஸுக்கு எடுத்துட்டுப்போக தயாரா ஒரு வேன்.” 

எல்லா சௌகரியங்களையும் சேர்த்துப் பார்த்தபோது பணக்காரர்களுக்கான காப்பகம் போல சாமிக்குத் தோன்றியது.    

“பிடிச்சிருந்ததா?”  

“எல்லாம் சுத்தமா கச்சிதமா இருந்தது. ரமேஷ் நல்லா டிசைன் பண்ணி சாமர்த்தியமா மேனேஜ் செய்யறான். உடம்பு முடியாம போனாக்க மத்தவங்களைத் தொந்தரவு செய்யாம இருக்கலாமோன்னு ஒருதடவை தோணித்து. ஆஃபீஸுக்கு திரும்பிவந்ததும்…”   

“உங்களை மயக்கியாச்சுன்னு முழு செலவையும் சொல்லியிருப்பாங்க.”  

“மத்த வியாபாரம் மாதிரிதான். முதல்ல ஆசைப்படற மாதிரி பொருளைக் காட்டிட்டு கடைசியில விலை. பெரிசும் இல்லாம சிறிசும் இல்லாம சுமாரான ஒன்-பெட்ரூம் எடுக்கலாம்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன். அதில நுழையறதுக்கே நானூறு ஆயிரம், மாசாமாசம் சாப்பாடு, லான்ட்ரி, சுத்தம் செய்யறது எல்லாம்சேர்த்து இரண்டாயிரம், அசிஸ்டட் லிவிங்னா மாசம் இன்னொரு ஆறாயிரம், தினம் நர்ஸ் வந்து பார்த்துக்கணும்னா மாசத்துக்கு குறைஞ்சது பத்தாயிரம்.”  

“அதைப்பார்த்துதான் உன் இதயத்துக்கு அதிர்ச்சியா?”  

“காசு அதிகம் தான். வீட்டை வித்து எல்லா பணத்தையும் திரட்டிப்போட்டா ஒருவேளை முடியலாம். ஆனா அதிர்ச்சி அதனால இல்ல. என்னை பாதிச்சது வேற ஒரு சமாசாரம்.”  

“வேற எதனால?”  

“சொல்றேன். விஜயா வாரத்தில ஒண்ணுரெண்டு நாள் வெங்காயம் சாப்பிடமாட்டா. அத்தோட, இன்னைக்கு கிருத்திகை, இல்ல திருப்பதிசாமிக்கு நல்லநாள்னு சொல்லிட்டு புதுசா சமைச்சு கடவுளுக்கு படைச்சிட்டுத்தான் சாப்பிடுவா, பழசைத் தொடமாட்டா. எனக்கு எது எப்பன்னு கூடத் தெரியாது.”  

“அவ சொல்ற காய்கள் சாமான்கள் வாங்கிவர்றதோட உன்வேலை முடிஞ்சிடும்.”  

“அத்தோட, அவ குடுக்கறதை ரசிச்சு சாப்பிட்டிருவேன். இவங்க செய்யற சமையல்ல வெங்காயம் பூண்டு இல்லாம இருக்குமா? தினம் புதுசா சமைப்பாங்கன்னு சொல்லமுடியாது. பழசிலே வாசனை தூவி சுடவச்சு சமாளிச்சிருவாங்க. அதனால, சிலநாள் நாங்களே எங்க யூனிட்ல சமைச்சிக்கிட்டா அந்த நாளுக்கு க்ரெடிட் தருவீங்களான்னு விஜயா கேட்டுது.” 

“அது எப்படி தருவாங்க? மாசம் முழுவதுக்கும் இவ்வளவுன்னு திட்டம்போட்டு பணத்தை ஒதுக்கியிருப்பாங்க.”  

“அதைத்தான் அவனும் சொன்னான். விஜயாக்கு திருப்தி இல்ல. அதை சாக்கா வச்சு நானும் நைஸா கழட்டிக்கலாம்னு எழுந்தேன். அப்ப அங்கே வந்த ரமேஷ் அவனோட அப்பாவை பார்க்கலாம்னு எங்களை கூட்டிட்டுப்போனான்.”  

விஜயாவின் தயக்கத்தை கவனித்து ஒப்பொந்தம் கைநழுவிப்போய்விடுமோ என்ற அச்சத்தில் மற்றவள் ரமேஷுக்கு ரகசியத்தகவல் அனுப்பியிருப்பாள்.  

“ஏற்கனவே பார்த்ததைத்தவிர பிங்கோ, சீட்டு விளையாட ஹால், சின்னதா ஒன்பது குழியில ஒரு கால்ஃப் கோர்ஸ். நாலு களிமண் டென்னிஸ் கோர்ட் எல்லாம் சுத்திக்காட்டினான். அங்கே நிறைய பேர்…”  

“நம்ம மாதிரி வயசானவங்க.”  

“எழுபதுக்கு மேல இருக்கும். ஆனா உன்னையும் என்னையும் மாதிரி இல்ல.”  

அதற்கு என்ன அர்த்தம்? வெள்ளை நிறத்திலா?  

“அப்பறம் அப்பா ரஸ்காரோட அரை மணி. மறுபடி ஆஃபீஸ்.”  

“நீ கையெழுத்து போட்டு முன்பணம் குடுக்கறதுதான் பாக்கி.”  

“பையன்களை ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன். இந்தியால போய் செட்டில் பண்ணறதுக்கு ஒரு ப்ளான் இருக்கு. வீட்டை விக்கணும்னா கொஞ்சம் ரிபேர் பண்ணணும். அதுக்கு செலவாகும். இப்படி நிறைய காரணம்கொடுத்திட்டு வெளியே வந்தோம். எதிர்ல ஜோர்டன் லேக் அழகா தெரிஞ்சுது. அதைப்பார்த்தபடி அப்படியே நின்னிட்டேன். அப்பத்தான் என் மூளைக்கு அது உறைச்சுது.”    

போதி மரம் மட்டுமா, ஜோர்டன் ஏரியின் தண்ணீர் கூட ஞானோதயம் தரலாம்.  

“அங்கே இருக்கறவங்களுடைய இயற்கை குணமா, இல்ல ஹெரிடேஜ் ஹில்ஸின் சூழ்நிலையா? எதுவானாலும் அவங்களுக்கு எப்பவும் தங்களைப்பத்தித்தான் நினைப்பு. சமைக்காம சாப்பிடறாங்க. வேலை செய்யாம விளையாடறாங்க. கூப்பிட்ட குரலுக்கு ஆள். முணுக்குன்னா டாக்டர் வந்து பார்க்கறார். அவங்க பேச்சிலேர்ந்து வெளியுலகத்தைப் பத்திய கவலை இருக்கறதா தெரியல. ரஸ்காருக்கு உக்கார்ந்த இடத்தில எல்லாம் வருது. டிவி ரிமோட்டை அழுத்தறதுதான் அவர் செய்யற ஒரே வேலை. நாள் முழுக்க க்ரிக்கெட், பாஸ்கெட் பால், சாக்கர்.”  

“வாழ்நாள் முழுக்க உழைச்சாச்சு. இப்ப சௌகரியமா இருக்கறதுல என்ன தப்புன்னு அவங்க நினைக்கலாம்.”  

ரஸ்காரும் அதையேதான் சொன்னார். இன்னொண்ணும் சொன்னார். சாகறதுக்கு முன்னாடி நீ கொடுக்கற கடைசி செக், பாங்க்ல பணம் தீர்ந்துபோயிரிச்சுன்னு பௌன்ஸ் ஆகணுமாம். அதாவது, நாம உலகத்திலேர்ந்து போயிட்டபிறகு அது எக்கேடுகெட்டுப்போனா என்னன்னு அலட்சியம். வாழ்க்கை முடியறப்ப நம்ம திறமைகளை முழுக்கப்பயன்படுத்தி சாதிக்க ஒண்ணும் மிச்சம் இல்லங்கற திருப்தியோட சாகறது வேற. நம்மால முடியும்னு எல்லா செல்வங்களையும் சீரழிச்சிட்டு அடுத்த தலைமுறைக்கு ஒண்ணும் மிச்சம் வைக்காம போறது வேற.” 

வயதானவர்களுக்குத் தரப்படும் பரஸ்காரின் அறிவுரையை சாமி ஏற்கனவே கேட்டு இருந்தான். ஆனால், அதற்கு மணிவாசகம் கொடுத்த விளக்கம் அவனுக்குப் புதிது, சரியாகவும் பட்டது. 

“நம்மோட உலகம் முடிஞ்சிறது இல்ல. அப்பறமும் அது தொடரும், தொடரணும்.”  

ஒருசில ஆண்டுகளுக்குமுன் விஜயா சொன்னது சாமியின் நினைவுக்கு வந்தது. 

‘அவர் வேலையிலே ரிடைர் ஆனதும் சாமான்கள் போட்டது போட்டபடி கிளம்பி வந்துடல. சம்பளம் இல்லாட்டியும் மூணு மாசம் அங்கேயே இருந்து, பாதியில விட்டிருந்த எல்லா ரியாக்ஷனும் முடிச்சிட்டு, அழுக்கு கண்ணாடி எதுவும் தொட்டியில வைக்காம, எல்லா விவரங்களையும் கம்ப்யூட்டர்ல சுத்தமா எழுதிக்கொடுத்திட்டு வந்தார். ஏன்னு கேட்டாக்க, அடுத்து வர்றவங்களுக்கு நாம செய்யற கடமை. எனக்கு அப்பறமும் நமக்கு இத்தனை வருஷம் வாழ்வுகொடுத்த இன்ஸ்டிட்யுட் நல்லபடியா இருக்கணும்னு சொன்னார்.’  

உலகத்தில் இருந்து ரிடைர் ஆகிப்போகும்போதும் அதை நல்லபடியாக வைத்துவிட்டுப் போக வேண்டும் என்கிற அதே நினைப்பு மணிவாசகத்துக்கு. பெருமிதத்தில் சாமிக்கு கண்ணீர் துளித்தது. நல்லவேளை! தொலைபேசி உரையாடல், ஃபேஸ்டைம் இல்லை.  

“ஹெரிடேஜ் ஹில்ஸை கட்டி பராமரிக்க எவ்வளவு ரிசோர்சஸ் வேணும், யோசிச்சுப்பார்! அங்கே டாக்டர் நர்ஸ் தவிர மத்த எல்லாரும் மெக்ஸிகோ இல்ல சென்ட்ரல் அமெரிக்காலேர்ந்து வந்தவங்க. அவங்க திரும்பிப்போய் அங்கே தோட்டம் வளர்த்தோ, இல்ல கீன்வா பயிரிட்டோ தங்களோட குடும்பத்தின், நாட்டின் எதிர்காலத்தை கட்டணும். நாம் போடற குப்பைகளுக்கு நாமதான் பொறுப்பு. அவங்களை எதிர்பார்க்கறது தப்பு. ஹெரிடேஜ் ஹில்ஸ்ல இடம் வாங்கினா நானும் அங்கே வசிக்கிறவங்க மாதிரி ஆயிருவேனோன்னு பயம் வந்திரிச்சி.”  

“அதுதான் கார்ல வந்து உட்கார்ந்ததும் உன் உடம்புக்கு உதறல்.”  

“நாலு நாளா தீர யோசிச்சு ஒரு தீர்மானத்துக்கு வந்துட்டேன். நான் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டை பார்க்கப்போறது இல்ல, எனக்கு ஸ்ட்ரெஸ் டெஸ்ட்டும் வேண்டாம். இப்போதைக்கு இதயம் நல்ல நிலமையில இருக்கா, இன்னும் பத்துப்பதினைந்து வருஷம் இந்த வீட்டிலேயே வாழ்ந்துட்டுப்போறேன். இப்பல்லாம் ஒவ்வொரு வாரக்கடைசிலியும் ஆனந்தின் பெண்கள் இங்கே வருது.”  

“என்ன வயசு அதுகளுக்கு?”  

“வயலெட்டுக்கு ஆகஸ்ட் வந்தா ஆறு முடியும், வீனஸுக்கு இரண்டரை. விஜயா கிட்ட என்கிட்ட அப்படியொரு ஒட்டுதல். அவ பூரி, வடை எதுசெஞ்சாலும் ரெண்டும் நல்லா சாப்பிடும். வயலட் என்கிட்ட சீட்டு ஸ்க்ராப்ல் விளையாடும். அவளுக்கு செஸ் கத்துக்கொடுக்கலாம்னு இருக்கேன். டீன்-ஏஜ் ஆயிட்டா நம்மை கண்டுக்க மாட்டாங்க. அதுவரைக்கும் அவங்க கம்பெனியை அனுபவிச்சிட்டுப்போறேன். கையில புத்தகத்தைப் பிரிச்சு படிக்க முடியுது. தினம் காலையில என்ன குளிரானாலும் மூணு கிலோமீட்டர் நடக்கறேன். இதுதான் இப்போதைய வாழ்க்கை. ஹார்ட்ல எதாவது சரியில்லையா, பொட்டுன்னு மண்டையைப் போடறேன். ஸ்டென்ட் வச்சுக்கிட்டு, பை-பாஸ் சர்ஜெரி செஞ்சிட்டு ரஸ்கார் மாதிரி நாளைக்கடத்தப்போறது இல்ல. நீ என்ன நினைக்கிற?”  

“நீ சொல்றது எப்படி இருக்குன்னா… நம்மை அழைச்சிண்டு வர்றதுக்கு எமன் எந்த அசிஸ்டன்ட்டை முதல்ல அனுப்பிவைக்கறானோ அவனோட சந்தோஷமா உடனே கிளம்பிப்போயிடணும். ஹார்ட் அட்டாக், நிமோனியா, மூளையில ப்ளட் க்ளாட், கான்சர் யாரா இருந்தாலும் சரி. இன்று போய் நாளை வா, இல்ல நீ போயிட்டு இன்னும் பல வருஷம் கழிச்சு இன்னொரு ஆளை அனுப்புன்னு தள்ளிப்போடக்கூடாது.”  

“சரியா சொல்லிட்டே, போ!”  

One Reply to “2013 – இன்றே, இப்பொழுதே”

  1. மிக அருமையான கதை. செயற்கையாய் வாழ்வதைவிட அணுக்கமானவர்களுடன் இயற்கையோடு இணைந்து வாழ்வதே சிறப்பான வாழ்க்கை. நானும் என் 2வயது பேத்தியுடன் வாழ்வதையே சிறப்பாக கருதுகிறேன். என் மனைவியும் நாள் கிழமை பார்த்துதான் உணவு தயார் செய்வாள். மிக்க நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.