வேணு தயாநிதி

1.
தனிமையின்
சலிப்பில்
சிலிர்த்து குலுங்கி
அணில்களை
விளையாட அழைக்கும்
மேப்பிள் மரத்திற்கு
ஆயிரம் ஆயிரம்
கைகள்.
அவற்றின் கீழ்
அளவாய்
கத்தரிக்கப்பட்ட
அடர் பச்சையின் மீது
வானோக்கி துயின்றேன்
இன்று மதியம்.
வழக்கமாக
வெறுமை
ஒரு உலர்ந்த சருகு
புழுதி
அல்லது
ஏதோ ஒரு பழைய ஞாபகம்
ஆகியவற்றை
எறிந்து விட்டு செல்லும்
கோடையின் காற்று,
இன்று மதியம்
எங்கிருந்தோ கொண்டுவந்த
அபூர்வமான
ஒரு பிடி சாரலை
சிதறி விட்டுச் செல்கிறது
முகத்தில்.
கழுத்தை சுற்றி
படமெடுத்து நிற்கும்
நாகத்துடன்
நீலநிறத்தில்
தியானிக்கும்
பரமேஸ்வரனின் படம்
படபடக்கும்
கிராமத்து சலூன் நாற்காலியின்
நினைவு
பிறகு
முதல் முறையாக
மீசையை சவரம் செய்ய
சென்றது
வழித்து விட்ட
என் மீசையை பார்த்து
நீ வாய்பொத்தி சிரித்தது
மருதாணிச் செம்மை
மெத்திட்ட விரல்களுக்குள்
கோணிச் சுழித்த
உன் இதழ்கள்
அவைகளை
நான் முதல் முதலாக
முத்தமிட்ட
பன்னீர்ப்பூக்கள் செறிந்த
மர நிழல்
உனை
நினைவுபடுத்த என்று
இந்த உலகத்தில்
எப்பவும்
ஏதோ ஒன்று
இருக்கத்தான் செய்கிறது
2.
மேப்பிள் மரத்திலிருந்து
எதோ ஒரு
அவசர வேலையாக
கீழ் இறங்கி வந்த
சோனியான
அந்த அணிற்குஞ்சு
என்னைப்பற்றி
என்னதான் நினத்ததோ
ஒரு ஏகார்ன்
கொட்டையையும்
கொஞ்சம்
பிரியத்தையும்
என் காலடியில்
வைத்து விட்டு
திரும்பி செல்கிறது.