ஜூலி ஷெடிவி
தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்

பல ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை மறைந்தார். வழக்கமாக அவர் செய்வது போலவே, எந்தவிதத் தயாரிப்புகளும் இல்லாமல், எவரிடமும் கலந்து ஆலோசிக்காமல், ஒரு நாள் இரவு அவர் தூங்கச் சென்றபோது மூளையில் இரத்தம் உறைந்ததால் இறந்துபோனார். மறுநாள் காலையில் தன் படுக்கையில் ஒரு சிலையைப் போல படுக்கை விரிப்புகள் இடையே கிடந்தார்.
தீடீரென்று அவர் இப்படி மறைந்தது என்மீது உள்ள கோபமோ என்று நான் எண்ணினேன். ஏனெனில் பல வருடங்களாக என்னை அவர் செக் குடியரசுக்கு வருமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். நான் அங்குதான் பிறந்தேன். அவர் 1992ம் ஆண்டு அங்கே திரும்பிச் சென்றுவிட்டார். திருமணம்-பட்டப்படிப்பு-பள்ளி-குழந்தைகள்-பணி-விவாகரத்து என்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கைச் சூழலில், என் தந்தையின் நாட்டிற்கு நான் செல்வது என்பது நேரத்தைச் சிறிது நேரம் நிறுத்திவைப்பதற்குச் சமமான வேலை என்பதால் அதை ஒவ்வொரு வருடமும் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தேன்.
இப்போது என் தந்தை என் பின்னாலிருந்து ‘பார்த்தாயா, காலம் கடந்துவிட்டது’ என்று சொல்லி நகைப்பதைப் போல இருந்தது.
அவருடைய மறைவு இன்னொரு வகையிலும் எனக்கு இழப்பாக இருந்தது. அது என் தாய்மொழியைப் பற்றியது. எனக்கு இரண்டு வயதாகும் வரையிலும் தெரிந்த ஒரே மொழி செக் மட்டுமே. அதன்பின் என்னுடைய குடும்பம் மேற்கு நோக்கி இடம்பெயரத் துவங்கியது. அப்போதிருந்த செக்கொஸ்லோவாகியாவிலிருந்து ஆஸ்திரியா, இத்தாலி, அதன்பின் கானடாவின் மான்ட்ரியாலில் நிரந்தரமாகத் தங்கிவிட்டோம். இந்த நேரத்தில் பல்வேறு மொழிகள் என் வாழ்க்கையில் புகுந்தன. சிறுவர் பள்ளியில் ஜெர்மன், நண்பர்களிடம் இத்தாலிய மொழி, கிழக்கு மான்ட்ரியாலில் ஃப்ரெஞ்சு புழங்கும் தெருக்களில் ஃப்ரெஞ்சு மொழி. என்னுடைய உடன்பிறந்தவர்களும் நானும் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்தவுடன், எங்களுடைய பெற்றோர்களின் (குறிப்பாக என் தந்தையின்) முணுமுணுப்பான எதிர்ப்போடு, ஆங்கிலம் எங்கள் குடும்ப மொழியாக மாறியது. அப்போதிருந்து செக் என்னுடைய தினசரி வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற ஆரம்பித்தது.
இலகுவான முறையில் நாங்கள் ஆங்கிலத்திற்குப் பழகிவிட்டது குறித்து பலரும் சிலாகித்தனர். ஆனால் நம்முடைய தாய்மொழியோடு எந்தவிதமான உறவு இருக்கிறது என்பதைப் பற்றியும், அந்த உறவு முறியும்போது அது எந்தவிதமான வலிகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியும் பல்வேறு ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. என் தந்தையின் மறைவால் தூண்டப்பட்டு செக் குடியரசுக்குத் திரும்பிய நான் என்னுடைய அடையாளங்களில் ஒன்றான என் தாய்மொழியோடு, எந்த ஒரு அடையாளத்தைப் பல காலம் துறந்திருந்தேனோ அதனோடு கூட மீண்டும் ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டேன்.
என்னுடைய தந்தை உயிரோடு இருந்த காலத்தில், நானும் மற்ற இளைஞர்களைப் போலவே என்னுடைய வேர்களில் கவனத்தைச் செலுத்தாமல் எதிர்காலத்தை நோக்கிச் சிந்தித்து அதை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். இதில் என்னுடைய சொந்த மொழியை விட்டுவிட்டு புதிய நாட்டின் மொழியை பேசுவதும் அடக்கம். கலாச்சார ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் ஒரு மொழியைப் பேசுவதால், நிதி தொடர்பான லாபங்கள் அதிகம். பொருளாதார நிபுணரான பாரி சிஸிக், குடியேறியவர்களில் வந்து சேர்ந்த நாட்டின் மொழியைப் பேசுவதில் விரைவாகத் தேறியவர்களுக்கு கிட்டத்தட்ட 15 சதவிகிதம் சம்பள உயர்வு கிடைப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பள்ளிப் பிள்ளைகளைப் பொறுத்தவரை, ஆதிக்கம் செலுத்தும் மொழியைக் கற்றுக்கொள்வதும் பேசுவதும் ஆசிரியர்கள் இடையேயும், சக மாணவர்கள் இடையேயும் நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது. என்னுடைய முதல் வகுப்பு ஆசிரியர் பள்ளியின் முதல்நாள் அன்று “உனக்கு சிறிதாவது இங்கிலிஷ் தெரியுமா” என்று கேட்டபோது நான் கோபமடைந்தேன். “சிறிதாவதா..இல்லை…எனக்கு நிறைய இங்கிலிஷ் தெரியும்” என்று கனமான உச்சரிப்போடு பதிலளித்தேன். தெரியாத மொழியில், கெட்ட வார்த்தையில் திட்டுவதைத் தவிர செக் மொழிக்கு எந்த அவசியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என் பெற்றோர்கள் என்னை அப்படி வளர்க்கவில்லை என்பதால் அதைக் கூட செய்ய இயலாதவனாக நான் இருந்தேன் என்பது வேறு விஷயம்.
ஆனால் ஆதிக்கம் செலுத்தும் மொழியைக் கற்பதில் ஒரு பிரச்சனை இருந்தது. ஒரு புதிய குழந்தையை வரவேற்கும் வீட்டைப் போல, புதிய மொழியைக் கற்கும் ஒரு மனம் அங்கு ஏற்கனவே இருக்கும் மொழிகளை ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதன்மூலம் பல மொழிகள் ஒன்றிணைந்து இருக்க முடியாது என்று சொல்ல வரவில்லை. ஆனால், பல குழந்தைகள் இருக்கும் வீடு போல, மனதின் குவிதலையும் கவனத்தையும் பல மொழிகளில் ஒரே நேரத்தில் செலுத்துவது சிரமமான விஷயம். இரண்டு மொழிகளில் தேர்ச்சியுடைய ஒரு மனிதன், ஒரு மொழியில் எண்ணத்தொடங்கும்போது மற்றொரு மொழியின் வார்த்தைகளும் இலக்கணங்களும் அந்த எண்ணங்களோடு மோதி குழப்பத்தை உண்டுபண்ணுகின்றன. இந்த மோதலைச் சமாளிக்கும் பணியில் ஈடுபடும் அடிமனதில் பொருத்தமான வார்த்தைகளைக் கோர்ப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பின்னாலிருக்கும் மொழி முன்னே வர முண்டியடிக்கும் போது வார்த்தைகள் ஒரு மொழியிலிருந்தும் வாக்கிய அமைப்பு இன்னொரு மொழியிலிருந்தும் கலந்து பேச்சாளரைச் சங்கடப்படுத்துகிறது. இந்தச் சிக்கலில் பலவீனமான மொழி நாளடைவில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இப்படி புறக்கணிக்கப்படும் மொழி போட்டியிடுவதற்கு வழியே இல்லாமல் மெல்ல நினைவிலிருந்து மறந்து போய் விடுகிறது.
லாஸ் ஏஞ்சலஸில் 2004ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தலைமுறை 1.5ஐச் சேர்ந்த, அதாவது பதின்ம வயதை அடைவதற்கு முன் குடியேறுபவர்களில் பாதிக்குக் கீழானவர்களே தாங்கள் ‘பிறந்த மொழியை’ நன்கு பேசத்தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மெக்ஸிகோவிலிருந்து தெற்கு கலிஃபோர்னியாவில் குடியேறியவர்களிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, அவர்களின் மூன்றாம் தலைமுறையினரில் 100ல் 5 பேர் மட்டுமே சரளமாக ஸ்பானிஷ் பேசத்தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கின்றது.
சிறுவயதின் மொழி சிதைவடையும்போது, உங்களுடைய தனிப்பட்ட வரலாற்றை அடையும் முயற்சியும் தேய்வுறுகிறது. மொழிக்கும் நினைவுகள் உண்டு. அதற்கு அடிமனதிலிருந்து நினைவுகளையும் நிகழ்வுகளையும் தட்டி எழுப்பும் சக்தி உண்டு. சில வாசனைகள் பழைய அனுபவங்களை மீட்டெடுப்பது போல, மொழியும் நம்முடைய அனுபவங்களோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்துவது அதனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் நினைவுபடுத்தக்கூடியது.
மனவியல் சிகிச்சை நிபுணரான ஜெனிஃபர் ஷ்வான்பெர்க் இதை நேரடியாகவே அனுபவித்திருக்கிறார். அவருடைய 2010ம் ஆண்டுக் கட்டுரை ஒன்றில் மெக்ஸிகோவில் தன் சிறுவயதில் கடுமையான துன்பங்களைச் சந்தித்த நோயாளியைப் பற்றிக் குறிப்பிடும்போது இந்த நிகழ்ச்சியை விளக்கியிருக்கிறார். அவரிடம் சிறுவயது நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டபோது அந்தப் பெண் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் பதிலளித்ததைக் கவனித்த ஜெனிஃபர், ஒருவேளை அதையெல்லாம் அவர் கடந்து வந்துவிட்டாரோ என்று நினைத்தாராம். ஆனால் இன்னொரு அமர்வில், அவர் ஸ்பானிய மொழியில் பேசத்தொடங்கியபோது, சிறுவயதில் அவர் சந்தித்த வலிகளும் வேதனைகளும் அருவியாகக் கொட்டிற்றாம். அவரது கடந்த காலம் அந்தப் பெண்ணின் தாய்மொழியில் இருந்தது என்று முடிக்கிறார் ஜெனிஃபர்.
ஒருவருடைய முதல் மொழி அவரது சிறுவயது நினைவுகளோடு பின்னிப் பிணைந்திருக்கும். அதன்பின் அவர் எத்தனை மொழிகளில் நிபுணத்துவம் அடைந்தாலும், முதல் மொழியின் சிறப்பு தனிதான். ‘தி பை லிங்குவல் மைண்ட்’ என்ற புத்தகத்தில் மொழியியளாளர் அனெடா பாவ்லியன்கா ரஷ்ய எழுத்தாளர் வ்ளாடிமீர் நாபாகோஃபைப் பற்றிய ஒரு குறிப்பைத் தருகிறார். நாபோகோஃப் ரஸ்ஸியப் புரட்சியின் போது நாட்டை விட்டு ஓடிவந்து பிரிட்டனில் தஞ்சமடைந்தவர். அவர் பல வருடங்களாக ஆங்கிலத்தில் எழுதிவந்தாலும், தன்னுடைய சரிதையை ‘கன்க்ளூசிவ் எவிடன்ஸ்’ என்ற நூலாக எழுதும்போது தன்னுடைய நினைவுகளை அப்படியே எழுதத் தடுமாறினார். பின்னர் ரஸ்ஸிய மொழியில் அதை மொழிபெயர்க்கும் போது, அவருடைய புலன்கள் விழிப்படைந்தன, நினைவுகளும் தட்டுத்தடங்காமல் புதிய தகவல்களைக் கொண்டுவந்தன. ஒரு வயதான வீட்டுவேலையாளைப் பற்றிய குறிப்பு புதிய வாசனையை அடைந்தது, சலவைத் தொழிலாளரைப் பற்றிய விளக்கம் அதனோடு கூடிய ஒலிகளோடு விரிவடைந்தது, அவர் குழந்தையாக இருந்தபோது குளித்த தொட்டியின் செல்லுலாய்ட் அன்னமும் பொம்மைப் படகும் அப்படியே கண்முன் வந்தன. இந்த விவரங்கள் எல்லாம் திருத்தப்பட்ட ஆங்கிலப் பதிப்பிலும் பின்னர் சேர்க்கப்பட்டன. அதற்குப் பொருத்தமாக ‘ஸ்பீக், மெமெரி’ என்ற தலைப்பை அவர் வைத்திருந்தார். நினைவுகள் பேசும்போது, சிலசமயம் அது ஒரு குறிப்பிட்ட மொழியின் மூலமே பேசுகிறது.
உங்களுடைய இயற்கையான மொழியிலிருந்து விலகும்போது உங்களை உருவாக்கிய ஒட்டுமொத்தக் கலாச்சாரத்திலிருந்து நீங்கள் விலக நேரிடுகிறது. நீங்கள் உள்வாங்கிய அறங்களையும், விதிகளையும் வெளிக்காட்டிய புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள், பாடல்கள் ஆகியவற்றை நீங்கள் நெருங்க இயலாமல் போகிறது. உங்கள் குடும்பத்தை தங்களோடு அரவணைத்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை அல்லது ஒரு தேசத்தை நீங்கள் இழக்க நேரிடுகிறது. உங்கள் அடையாளத்தை நீங்கள் இழக்கிறீர்கள். இந்தத் துண்டிப்பு கடுமையானது. 2007ல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடிகளினிடையே டார்சி ஹாலட் என்ற ஆய்வாளர் நடத்திய ஆய்வு ஒன்றில், தங்களது மொழியைப் பேச இயலாதவர்களில் (பாதிக்கு மேற்பட்டவர்கள்) இளவயதில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை தங்களது மொழியைப் பேசும் சமூகங்களில் இருந்ததை விட ஆறு மடங்கு அதிகமாக இருந்தது என்று கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் தெரசா லாஃப்ரம்பாய்ஸ் என்ற மனவியலாளர், அமெரிக்க-இந்திய பதின்ம வயதினரிடையே தங்களது மொழியைப் பேசுபவர்களும் மரபைப் பின்பற்றுபவர்களும் அப்படிச் செய்யாதவர்களை விட பள்ளியில் நல்ல முறையில் செயலாற்றினர் என்று கூறினார். இது போன்ற நிகழ்வுகள் கண்டங்களைக் கடந்து நடந்துகொண்டிருக்கின்றன. 2011ல் ஆஸ்திரேலியா புள்ளிவிவரக் கணக்கு ஒன்று அந்நாட்டுப் பழங்குடியினரிடையே தங்கள் தாய்மொழியைப் பேசியவர்கள் குடிக்கும் போதைக்கும் அடிமையாகும் வாய்ப்புக் குறைவு என்று தெரிவிக்கிறது.
ஏன் இப்படி மரபுசார்ந்த மொழி நல்வாழ்க்கைக்கு அடிகோலுகிறது? தற்கொலைகளைப் பற்றி ஆய்வு செய்த மைக்கேல் சாண்ட்லர், கலாச்சாரத் தொடர்ச்சி ஒருவரை வலுப்படுத்தி தங்களுடைய அடையாளத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது என்று குறிப்பிடுகிறதார். இந்தத் தொடர்ச்சி இல்லாவிடில், பழங்குடிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது என்றும் எச்சரிக்கிறார். கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இணைக்கும் சங்கிலியை அவர்கள் இழக்கும் அபாயத்திற்கு உள்ளாகிறார்கள் என்கிறார் அவர்.

நானும் என்னுடைய உடன்பிறந்தவர்களும் இளமையில் செக் மொழியிலிருந்து விலகிச்செல்லும்போது எங்களுக்கும் எங்கள் பெற்றோர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி உருவாகத் தொடங்கியிருந்தது. குறிப்பாக என் தந்தை ஆங்கிலத்தை எளிதாகப் பேசக்கூடியவரல்ல. எங்களுடைய முந்தைய வாழ்வின் நினைவுகள், சடங்குகள் எல்லாம் எங்களுக்குத் தூரமாகச் சென்றுவிட்டன. எங்கள் பெற்றோரைக் குறிக்கும் வார்த்தைகளில் கூட இது எதிரொலித்தது. செக் வார்த்தைகளான மமிங்கா, டட்டினக் ஆகியவை அன்போடும், வெறுப்பின் சுவடு இல்லாமலும் உச்சரிக்கக்கூடியவை. ஆங்கிலத்தில் உள்ள மம்மி, டாடி, பிற்பாடு மாம், டாட் என்று மாறி அந்த உணர்ச்சிகளையெல்லம் அடியோடு அழித்துவிட்டன.
என்னுடைய தந்தை தன்னுடைய மரபு சார்ந்த விஷயங்களை, மதசம்பந்தமான நெறிகளை, பழைய குடும்ப உறவுகளை, மரபிசையை, நாங்கள் வாழ்ந்த பகுதிகளின் வழக்கங்களை, முன்னோர்களுக்குச் செலுத்தும் மரியாதைகளை எங்களுக்குக் கடத்த முடியாததால் விரக்தியடைந்தார். இவையெல்லாம் ஆங்கிலத்தின் மூலம் தொடர்ந்து செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த புதிய நினைவுகளாலும் தனித்துவத்தாலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தன. நாங்கள் பெரியவர்களாகி வட அமெரிக்காவின் பல பகுதிகளுக்கு எங்கள் தனிப்பட்ட வாழ்வை அமைத்துக்கொள்ளப் பிரிந்து செல்லும் போது, எங்கள் தந்தை வேறு வழியில்லாமல் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு என்னுடைய கவனம் ஆங்கிலம் பேசும் உலகத்திலேயே மூழ்கி இருந்தது. கனடியக் குடியுரிமையோடு அமெரிக்கக் குடியுரிமையையும் நான் பெற்றேன். என்னுடைய தந்தையோடு மட்டுமே நான் செக் மொழியில் பேசினேன். அதில் அதிகமாக ஆங்கிலம் கலந்து, செக் மொழி ஏதோ தேவையில்லாத உறுப்பு போல மாறிவிட்டது.
பின்னர் என் தந்தை மறைந்தார். ஒரு ஆர்க்கெஸ்ட்ராவில் கம்பி வாத்தியங்கள் வாசிக்கப்படாவிட்டால் அது அதிகம் கவனிக்கப்படாவிடினும் அது அளித்த ஆழமும் இனிமையும் இல்லாதது தெரியவே செய்யும். அது போல என் தந்தை மறைந்தோடு என்னுடைய செக் மொழியும் என்னை விட்டுச் சென்றதை நான் உணரமுடிந்தது. என்னுடைய உடன்பிறந்தவர்களிடமும் தாயிடமும் ஆங்கிலத்திலேயே நான் உரையாடத்துவங்கியிருந்தேன்.
என்னுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு எங்களுடைய குடும்பச் சொத்தான வீடு எங்கள் கைக்கு வந்தது. அந்தக் குடியிருப்பில் எங்கள் சித்தப்பாவும் வாழ்ந்துகொண்டிருந்தார். இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு நான் அங்கே சென்றேன். என்னுடைய தந்தையும் அவரது சகோதரர்களும் பிறந்த அதே படுக்கையில் நான் உறங்கினேன்.
நான் என் தந்தையைப் பார்க்க சரியான நேரத்தில் வராவிட்டாலும், என் தாய்மொழியுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இன்னும் வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். விமான நிலையத்திலிருந்து என் சித்தப்பாவுடன் வரும்போது உடைந்த, தவறுகள் நிறைந்த செக் மொழியில் எங்கள் உரையாடல் இருந்தது. அடுத்த சில நாட்களில் தினப்படி உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் தவறிழைத்தேன், இலக்கணப் பிழைகள் என் வாக்கியங்களில் நிறைந்திருந்தன. ஆனாலும் சமாளித்துகொண்டு சிறிது சிறிதாக அவற்றைத் திருத்திக்கொள்ளத் துவங்கினேன். அடுத்த சில நாட்களில் ஒரு வெளி மனிதருடன் உண்மையான செக் குடிமகனைப் போல் உரையாடும் அளவிற்குத் தேறிவிட்டேன். செக் மொழியை மீண்டும் கற்பது ஏதோ பெரும் மொழி வல்லமையை அடைந்தது போல இருந்தது
என்னுடைய வேகமான முன்னேற்றத்தினால் ஏற்பட்ட ஆச்சரியம் காரணமாக, சிறுவயதில் பேசப்பட்ட மொழியை மீண்டும் கற்றுக்கொண்டவர்களைப் பற்றி ஆராய ஆரம்பித்தேன். பல ஆராய்ச்சிக்கட்டுரைகளில் இளவயதில் கற்று மறந்த மொழிகளை மீண்டும் கற்றுக்கொள்ளும்போது அடிமனதில் இருந்து அது மேலெழும்புகிறது என்றும் இலக்கணம், வார்த்தைச் செறிவு தவிர அந்த மொழியின் ஒலியை மீண்டும் கைக்கொள்வது அவர்களுக்கு எளிதாகவே இருந்தது.
வியப்பூட்டும் உதாரணங்களில் ஒன்றாக இருந்தது, இந்தியாவிலிருந்து தத்து எடுத்துப் போகப்பட்டவர்களின், (ஆறு மாதத்திலிருந்து அறுபது மாதங்கள் வரையான) சிறு வயதிலிருந்தே இங்கிலிஷ் பேசும் குடும்பங்களில் வளர்க்கப்பட்டவர்கள், தங்களுடைய மூல மொழியோடு குறிப்பிடத் தக்க தொடர்பு ஏதும் இல்லாது இருந்தவர்களின் அனுபவங்கள். உளவியலாளர் லெஹர் சிங் [1] இந்தக் குழந்தைகளில் 8 வயதில் உள்ளவர்களையும், பதினாறு வயதில் உள்ளவர்களையும் சோதித்தார். துவக்கத்தில் இரு குழுவினர்களும், பற்களைத் தொடும் உயிரெழுத்துக்களுக்கும், அண்ணத்தை நாக்கின் அடி தொடுவதால் ஒலிக்கும் உயிரெழுத்துகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்க இயலாதவர்களாக இருந்தனர், இந்த வேறுபாட்டைப் பல இந்திய மொழிகள் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்த வேறுபாட்டைச் சில நிமிடங்களே கேட்ட பிறகு, தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமே இந்த இரு உயிரெழுத்துகளிடையே வேறுபடுத்துவதைச் செய்ய முடிந்தவர்களாக இருந்தார்கள். அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளால் இந்த வேறுபாட்டை உணர முடியவில்லை. [2]
இது ஒரு பெரிய கண்டறிதல். ஏனெனில் வயதான பிறகு ஒரு மொழியைக் கற்றுக்கொள்பவருக்கு அதனுடைய ஒலியமைப்பைக் கற்றுக்கொள்வது ஒரு பெரும் சவாலாக இருக்கும். என்னதான் அவர்கள் வார்த்தைகளையும் வாக்கிய அமைப்புகளையும் கற்றுக்கொண்டாலும், அவர்களுடைய உச்சரிப்பு புதிதாகக் கற்றுக்கொண்டவர்கள் அவர்கள் என்பதைக் காட்டிவிடும். ஆர்னால்ட் ஷ்வார்ட்ஸ்நெக்கர் அமெரிக்காவின் பிரபலமான திரைப்பட நடிகர், கலிஃபோர்னியா எனும் பெரிய மாநிலம் ஒன்றின் முந்நாள் ஆளுநர். ஆனாலும் அவருடைய ஆஸ்திரிய உச்சரிப்பு, அவர் எப்போதும் நாட்டு அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்பதைச் சுட்டிக்கொண்டே இருக்கிறது.
குடும்பத்து மொழியின் உச்சரிப்பு ஒலிகளைச் சிறு பிராயத்தில் குழந்தைகள் கேட்டிருப்பது எத்தனை முக்கியமானது என்பதை என் குடும்பத்தின் அனுபவத்திலிருந்தே நாம் பார்க்கலாம்: செக் மொழியில் உச்சரிக்க மிகக் கடினமான “ř” என்ற ஒலியை என்னால் உச்சரிக்க முடிகிறது. ஆனால் எனக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்கு அப்புறம் வியன்னாவில் பிறந்த என் சகோதரனால் முடியவில்லை.
ஒரு மொழியை மறப்பதிலும் பின்பு அதை மீண்டும் கற்பதிலும் அதன் உச்சரிப்பு ஏற்படுத்தும் தாக்கம் மொழியின் கட்டமைப்பு ஒரு குழந்தையின் மனதில் இளவயதிலேயே அழுத்தமாகப் பதிந்துவிடுகிறது என்பதைக் காட்டுகிறது. ஆறு மாதக் குழந்தை கூட மொழியின் ஒலியில் உள்ள வேறுபாடுகளை கிரகித்துக்கொள்கிறது. முதல் வருடத்தின் பிற்பகுதியில் அதைச் சுற்றிப் பேசப்படும் மொழியின் ஒலிகளை வைத்து தன் உணர்வுகளை அது உருவாக்கிக் கொள்கிறது. மாண்டரின் போன்ற மொழிகளில் வேறுபட்ட ஒலிகளில் உச்சரிக்கப்படும் வார்த்தைகளின் பொருளை மூளை எளிதில் கிரகித்துக்கொள்கிறது. உதாரணமாக மா என்ற சொல்லிற்கு அம்மா, சணல், குதிரை, திட்டு என்று பல பொருள்கள், உச்சரிப்பின் விதத்தைப் பொறுத்து உண்டு. இப்படி ஒலியின் விதத்தை அடிப்படையாகக் கொண்ட மாண்டரின் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு மூளையின் இடதுபுறம் அதிகமாக வேலை செய்யுமாம். ஒலி வேறுபாட்டில்லாத ஆங்கிலம் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு வலது மூளை அதிகமாக வேலை செய்கிறதாம், ஏனெனில் இத்தகைய மொழிகளில் வார்த்தைகளின் வேறுபாடு உச்சரிப்பைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை. அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, ஃப்ரெஞ்சு வீடுகளில் தத்தெடுக்கப்பட்ட சீனக் குழந்தைகளின் மூளை இயக்கம், அவர்கள் தாய்நாட்டைப் பிரிந்து 12 வருடங்களாகியும் சீன மொழியைப் பேசுபவர்களையே ஒத்திருந்ததே அல்லாது ஃப்ரெஞ்சு மொழி பேசுபவர்களைப் போல் அல்ல என்று கூறுகிறது.
செக் குடியரசிலிருந்து திரும்பி வந்த பிறகு என் தாயாரோடு செக் மொழியிலேயே பேசிக்கொண்டிருக்கிறேன். இருவருக்கும் அது சற்றுச் சிரமாக இருந்தாலும் கூட எங்கள் உரையாடல் மென்மையாகவே இருக்கிறது. என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்திய மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், எனக்கு எளிதானதாக, சௌகரியமானதாக, தாலாட்டப்பட்டதாக செக் மொழிதான் இருக்கிறது.
என்னுடைய தோட்டத்தில் வேலை செய்யும்போது என்னுடைய தந்தையின் குரல் என் காதுகளில் ஒலிப்பதை எளிதாக உணரமுடிகிறது. அவருடனான, என் சித்தப்பாவுடனான என்னுடைய அண்மை உரையாடல்கள் தோட்டக்கலையைப் பற்றியே இருந்தன. என்னுடைய தந்தையின் குடும்பம் பல நூற்றாண்டுகளாக பழத்தோட்டங்கள் அதிகமாக இருந்த மொராவியா பகுதியில் வாழ்ந்துவந்தது. என்னுடைய அண்மைப் பயணத்தின் போது தன் துணையை அல்லது குழந்தையைப் பார்ப்பது போல் என் உறவினர்கள் தங்களுடைய நிலங்களைப் பார்த்ததை நான் கவனித்தேன். இதன் காரணமாகவோ என்னவோ, நான் எங்கே வாழ்ந்தாலும் ஏதாவது ஒன்றை, ஒரு செடியையோ, மரத்தையோ எனக்குக் கிடைக்கும் நிலங்களில் எல்லாம் வளர்க்க விரும்புகிறேன். சில நேரங்களில் என் தந்தை செய்வதைப் போல என்னுடைய செடிகளுடன் நான் செக் மொழியில் உரையாடக்கூடச் செய்கிறேன்.
என்னுடைய புதிய தாய்மொழியின் கற்றலும், அதோடு என்னுடைய தந்தையின் குரலும் என்னுடைய கடந்த காலத்தோடு என்னை இணைக்கிறது. என்னுடைய தற்போதைய பணியில் அது எதிர்பாரத துணையாகவும் இருக்கிறது. ஒரு மொழியியலாளராக என்னுடைய பணியிலிருந்து விலகி எழுதுவதில் என்னுடைய நேரத்தை தற்போது செலவழிக்கிறேன். பல சமயம் என்னுடைய தந்தை செக் மொழியில் ஒரு பத்தியைப் படிப்பது போல நான் உணர்வதுண்டு. பல செக் குடிமக்களைப் போலவே என்னுடைய தந்தையும் மொழியை ஒரு அருமையான பொருளைப் போல நேசித்தார், அதன் மேல் அதிக கவனமும் செலுத்தினார். அவர் குறைந்த அளவே பேசினாலும், பேசும்போதெல்லாம் அவர் மொழி வளம் வெளிப்பட்டது. ஆழமாக எழுதுமளவிற்கு என்னுடைய தாய்மொழியில் நான் மீண்டும் வல்லமை பெறுவது கடினம். ஆனால் ஒரு வரியை எழுதத் தடுமாறும்போதெல்லாம், எனக்குள்ளே நான் செக் மொழியில் உரையாட ஆரம்பிக்கின்றேன். அது எனக்கு ஒரு மொழியில் மூழ்குவதன் அனுபவத்தை அளிக்கிறது. ஒரு வார்த்தையின் வீச்சு அல்லது ஒரு வாக்கியத்தின் அழகு அளிக்கும் ஆச்சரியத்தை, ஆனந்தத்தை அளிக்கிறது. அதன் ஒலியின் இனிமையை, அதன் தாளம் அளிக்கும் இன்பத்தை அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கு இணையேயில்லை. என்னுடைய தாய்மொழி என்னுடைய ஆன்மாவின் அறைக்குள் அமைதியாக அமர்ந்திருப்பதை நான் கண்டறிந்தேன்.

கட்டுரையின் இங்கிலிஷ் மூலத்தை எழுதியவர்: ஜூலி ஷெடிவி.
கட்டுரையைத் தழுவிச் சுருக்கித் தமிழில் எழுதியவர்: கிருஷ்ணன் சுப்ரமணியன்.
இங்கிலிஷ் மூலக் கட்டுரையைப் பிரசுரித்த நாடிலஸ் பத்திரிகைக்கு நன்றி.
அந்த மூலக் கட்டுரை நாடிலஸ் பத்திரிகையின் 76 ஆம் இதழில், செப்டம்பர் 12, 2019 அன்று பிரசுரமாகி இருக்கிறது. அதற்கான சுட்டி: http://nautil.us/issue/76/language/the-strange-persistence-of-first-languages-rp
ஜூலி ஷெடிவியை (செக் உச்சரிப்பு. மூலப் பெயர் Julie Sedivy என்று வரும்) கெவின் பெர்ஜர் என்பவர் பேட்டி கண்டுள்ளதை நாடிலஸ் பத்திரிகை பிரசுரித்திருக்கிறது. அந்த பேட்டியை இங்கே காணலாம்: http://nautil.us/issue/76/language/language-both-enraptures-and-deceives-us ]
____________
அடிக் குறிப்புகள்:
[1] லெஹர் சிங் இப்போது சிங்கப்பூரில் உள்ள தேசியப் பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் சிங்கப்பூரில் உள்ள பலமொழிக் கலவை நாகரீகத்தில் தன் ஆய்வுகளைத் தொடர்வதில் மிக துடிப்போடு இருக்கிறார். ஒரு மொழி மட்டுமே தெரிந்த பெற்றோரால் பன்மொழி அல்லது இரு மொழி பேசக் கூடிய குழந்தைகளை வளர்க்க முடியுமா, அதற்கு என்ன மேல் உதவிகள் தேவைப்படும் என்ற கேள்வி சிங்கப்பூரில் எல்லா பெற்றோருக்கும் எழும் கேள்வி. அதற்குப் பதில் சொல்லும் விதமாக அவர் கொடுத்துள்ள குறிப்புகளை இங்கே காணலாம்: https://www.channelnewsasia.com/news/singapore/commentary-what-hope-do-monolingual-parents-have-in-raising-9842552
[2] இந்த ஆய்வில் அமெரிக்காவில் ஒரு மொழி (இங்கிலிஷ்) மட்டும் பேசிய குடும்பங்களில் இந்தியாவிலிருந்து தத்து எடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளும், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த குழந்தைகளும் சோதிக்கப்பட்டார்கள். இரு குழுக்களும் இங்கிலிஷ் பேசும் குடும்பங்களில் வளர்ந்தவர்களே. ஆனால் இந்திய மொழிகளில் ஒலிக்கும் இரு வகை ஒலிகளிடையே வேறுபாட்டை உணரக் கூடியவர்களாக இந்தியாவில் பிறந்து அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளே இருந்தார்கள் என்பது இந்த ஆய்வின் கண்டு பிடிப்பு. இது போன்ற கண்டு பிடிப்புகள் விரிவாகப் பல இடங்களில் பல மொழிக் கூட்டங்களில் சோதிக்கப்பட்டாலே முடிவுகள் உறுதியானவை என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முதல் குறிப்பில் மேலே அத்தகைய ஆய்வுகளை லெஹர் சிங் இப்போது சிங்கப்பூரில் மேற்கொண்டு வருகிறார், மேற்கொள்வார் என்பது சுட்டப்படுகிறது.