மகரந்தம்

 அகிலம் ஒரு பெட்டிக்குள் இல்லை

பெட்டகத்தைத் தாண்டிச் சிந்தித்திருக்கிறார் ஜூலியன் பார்பர்.அவருடன் நடந்த உரையாடலை மேற்குறிப்பிட்ட சுட்டியில் விரிவாகப் பார்க்கலாம். காலம் முன்னோக்கித்தான் நகர்கிறது. குழந்தைகள்தான் பெரியவர்களாக ஆகிறார்கள். காலமும், இயக்கமும் மனித சிந்தனையில் இரசிக்கத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. அறிவியல் சட்டங்களின் படி ஒரு நிகழ்வு காலத்தில் திரும்பிப்பார்க்கப்படுகையிலும் அவ்வாறேதான் காணப்படவேண்டும். எடுத்துக்காட்டாக இரு பில்லியர்ட் பந்துகள் மோதும் காட்சியைப் படமெடுத்து அதை பின்னோக்கிப் பார்க்கையில் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால், மேலிருந்து நீருக்குள் ஒருவர் குதிக்கும் காட்சியைப் படமெடுத்துப் பின்னர் பின்னோக்கிப் பார்க்கையில் அது மாறித் தெரிகிறது. இதை பிரபு கெல்வின் இயந்திர சக்தியின் சிதறுகளை நோக்கிச் செல்லும் இயற்கையின் ஒரு இயக்கம் என்கிறார்.

காலம், இயக்கம், அளவு, வடிவம், அமைப்பு இவைகளின் மூலம் அகிலம் உருவாகியிருக்கக்கூடிய விதத்தைப் பற்றி ஜுலியனின் விரைவில் வர இருக்கும் புத்தகம் பேசுகிறது. அவருடன் ஆங்கிலேயர், ஜெர்மானியர் மற்றும் இதாலி நாட்டைச் சேர்ந்த மூவர் இதில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

ரோமானியக் கடவுளான Janus  இரு எதிர் திசைகளைப் பார்ப்பதாக அறிகிறோம்.அதைப் போலவே ஒரு புள்ளியில் தொடங்கி எதிரெதிர் திசைகளில் சமச்சீராகப் பரவி வளர்ந்திருக்கிறது உலகம் என்கிறார் இவர். அத்தகைய எதிர்ப்புறங்கள் ஒன்றையொன்று அறியக்கூடுவனவாக இல்லை என்றாலும் அதை உணர்த்தும் விதமாக ஒரு பரிசோதனையைச் சொல்கிறார். நம் கண்களின் முன்னே ஒரு பொருளை முன்னும் பின்னுமாக அசைக்கும் போது அதன் வடிவம் மாறுவதில்லை, அதன் அளவு மாறுபடுகிறது.ஒரு சாதாரண முக்கோணத்தின் ஒரு பகுதியை நீக்கினால் அது முக்கோணம் என்ற தன்மையை இழந்துவிடுகிறது.

கடந்ததிலிருந்து  எதிர் காலத்தை  நோக்கிச் செல்லும் நம்முடைய  பொதுஉணர்வு, சார்புத் தன்மையினால் ஏற்படுகிறது. எதையும் ஒன்றைச் சார்ந்தே அறிந்து கொள்கிறோம். ஃபிபனாச்சி வரிசை எண்கள், மேலும் தங்கமான விகிதம்  ஆகியன (Fibonacci, Golden Ratio) அனைவரும் அறிந்ததே.

பார்பர் இதன் மூலம் வடிவ இயக்கம் ( shape dynamics ) என்ற ஒன்றைச் சொல்கிறார். 1772-ல்  ஜோசஃப் லாக்ரேஞ்ச் (Joseph Lagrange)   என்ற ஃப்ரெஞ்ச் அறிவியலாளர் பூமி- சந்திரன்- சூரியன் இவைகளின் அமைப்பை ஆராய்ந்து சொல்கையில் நேர்மறை சக்தி அல்லது சூன்ய சக்தியில் ஒரு அமைப்பு இரு திசைகளிலும் அளவில் வளர்ந்து கொண்டே வரும் எனச் சொன்னார். கெப்லர் சொன்னார் ‘இனிமேல்  சூன்யத்தில் கிரகங்கள் தங்கள் பாதையைத் தேடும், பறவைகள் காற்றில் தேடி அடைவதைப் போல.’

சமச்சீரான சட்டங்கள் சமச்சீரற்ற விஷயங்களைக் காட்டினாலும் ஒரு புள்ளியின் இரு எதிர்புறங்களும் தகுதிகளில் ஒன்றேயாம், விவரங்களில் மாறுபடும். உலகம் பிறந்த வரலாறு இரு பகுதிகளாகும்; பெரு வெடிப்பினை ஒட்டி நாம் இரு பிரிவுகளாக காலத்தை வகுத்து அறியப் பார்க்கிறோம். கால அம்பு, உலகின் கால வரிசையின் மையப் புள்ளியிலிருந்து எதிரெதிர் திசைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இக்கட்டுரையில் அவர் ஐன்ஷ்டைன், ந்யூட்டன், ருடால்ஃப், கார்னோ (Carnot), கெல்வின் போன்றோரின் அறிவியல் முடிவுகளையும்,  இன்றைய அறிவியலாளர் உவப்புடன் கொண்டாடும் ‘உலகம் அடையும் விரிவாக்கத் தேற்றத்திற்கு’ சரியான எதிர் தேற்றங்கள் உருவாகவில்லையென்பதையும் எடுத்துக்காட்டுகிறார். 

https://www.edge.org/conversation/julian_barbour-the-universe-is-not-in-a-box

[ஜுலியன் பார்பர் கோட்பாட்டு இயற்பியலாளர். காலம், இயக்கம் ஆகியவற்றை ஆராய்பவர். ஆக்ஸ்ஃபொர்ட் பல்கலையில் இயற்பியல் துறையில் ஓய்வு பெற்று, அவ்வப்போது வந்து போகும் சிறப்புப் பேராசிரியராக இருக்கிறார். த ஜேனஸ் பாயிண்ட் என்கிற நூலை 2020 இல் வெளியிடவிருக்கிறார். எண்ட் ஆஃப் டைம் என்ற நூலின் ஆசிரியர்.]

***

ஆரோக்கியமான நீண்ட வாழ் நாளும், தலைமுறைப் பிணக்குகளும்

தன் காதோரம் காணப்பட்ட நரை முடியைக் கண்ட தசரதன், சபையைக் கூட்டி அரசப் பதவியை இராமனுக்கு அளித்து தான் ஓய்வு பெறப் போவதாக அறிவிக்கிறான்;அதை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கையில் அவன் மனம் துணுக்குறுகிறது-என் ஆட்சியில் இவர்களுக்கு நிறைவில்லையா-அல்லது இராமன் என்னைவிட சிறப்பாக ஆள்வானா?இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் வரும் காட்சி இது.

பதினைந்து வயதே ஆன கிரியெத்தா தூன்பேரி (Greta Thunberg),  சுற்றுச் சூழல் பாதிப்புகளால் இளைய சமுதாயத்தினரின் வாழ்வு கேள்விக்குரியானதைப் பற்றியும்,அதற்கு முழுப் பொறுப்பும் ஆள்வோரைச் சாரும் எனவும்  உலகின் பெரும்பான்மை இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து அதை பல நாட்டுத் தலைவர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்தார்.அதிகாரமற்ற இளமையின் குரல் அது. 

அது கேட்கப்படுகிறது, பொதுவில் ஒலிக்க விடப்படுகிறது, ஆனால் செயல்பாட்டுக்கு இட்டுச் செல்லுமா என்பது வேறு விஷயம். மலையை நகர்த்த முடியுமா என்றால் எங்காவது துவங்கித்தான் பார்க்க வேண்டும். அது அவசியமா என்பதுதான் முதல் கேள்வி. அவசியம்தான் என்றால் நகர்த்த முயற்சி செய்யாமல் இருக்கலாகாது. இப்படிச் செயல்பட்டுத்தான் ஏராளமான நெடுஞ்சாலைகள், பாலங்கள், அணைக்கட்டுகள் என்று மனிதர்கள் உலகெங்கும் பல நாடுகளிலும் நிர்மாணித்திருக்கிறார்கள். மொத்த மலையை நகர்த்தாமல் பகுதியை நகர்த்தியாவது தம் உத்தேசத்தை அடைந்திருக்கிறார்கள். 

மருந்துகளால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்ற எண்பது வயதானவர்கள்,வருங்காலத்தில் இன்று ஐம்பது வயசாளிகள் செய்யும் செயல்களையெல்லாம் செய்யக்கூடும் என்கிறார் ரெபெக்கா ரோச் (Rebecca Roache)

அத்தகைய மூத்தோருக்கு  நல்ல உடல் நலத்துடன், அனுபவம் மற்றும் மேம்பட்ட அறிவுத்திறன் இருப்பது அவர்கள் கைகளில் அதிகாரம், செல்வம் அனைத்தையும் கொடுக்கும். மேலும் அவர்கள் தங்கள் இணைவயதுக்கான நலன்கள் சார்ந்து முடிவெடுக்கக்கூடும் என்பதால் ஏற்கெனவே காணப்படும் சமமற்ற தலைமுறைப் பிளவு இன்னமும் அதிகரிக்கும். இன்று நடு வயதில் இருக்கும் பலர் கைகளில் இருக்கும் அரசியல், பொருளாதாரம்,கலாசாரம் போன்றவை எண்பது வயது மற்றும் அதற்கு மேம்பட்டோரின் வரம்பிற்குள் வந்துவிடும்.

சென்ற தலைமுறையைவிட இன்று கோடிக்கணக்கானோர் குறைந்த பணம், நிறைந்த கடன் என வாழ்கிறார்கள்; அதிகாரம் மற்றும் செழுமை இன்றி இருக்கிறார்கள். இளமை இன்று நவ நாகரீக உடைகளிலும், பொழுது போக்கிலும் தன் இருப்பைக் காட்டிக்கொண்டு வருகிறது. ஆனாலும் வயதானவர்களின் இருப்பு, செல்வாக்கு அதிகரிக்கையில், நடு வயதுக்காரர்களின் நிலை சற்றுக் கீழிறிங்கினாலும் பெரிய தாக்கம் இளைய சமூகத்தின் மீதுதான். இந்த நிலை உடனே ஏற்படும் என ஏற்பது எவ்வளவு கடினமோ அதே போல் அது நடைபெறாது என நினைப்பதும் தான்.

அனைத்து வயதுக்காரர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அரசியல் தீர்வுகள் வர வேண்டும். அதற்கு, நாம் இதுவரை பேசத் தயங்கிய அல்லது மறுத்த அல்லது அருவருத்த விஷயங்களான இறப்பு, வாரிசுரிமை பற்றி,இரு பிரிவினருக்கான கடமைகள் மற்றும் இணக்கங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி பெரியோருக்கும் இளையோருக்குமான புரிதலை உண்டாக்க வேண்டும். இல்லையெனில் இளமை தன் மதிப்பினை இழந்து நிற்கும்.

வயதாவனர்களின் பிரச்சினைகளாக நாம் தற்போது பார்க்கும் அவர்களின் தனிமை, இயலாமை மற்றைய வாழ்வியல் சிக்கல்களை மட்டும் பேசாமல், சமூகம் அவர்களால் பயன் பெறும் வழிமுறைகளைக் கொணர வேண்டும். அதே நேரம் பொறுப்பற்றவர்களாகவும், அறிவிலிகளாகவும், பொருந்தாதவராகவும் நாம் கருதும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இளைஞர்களைப் பற்றிய நம் பார்வையும் மாற வேண்டும். மூத்தோரிடமிருந்து வயதானதன் தன்மையைக் குறைப்பதில் இளைய சமூகத்தின் உற்சாகப் பளபளப்பு குறையலாம்;ஆனால், இளைஞர்களைப் பற்றிய நம் குறை நோக்குப் பார்வை மாற அது ஒரு வழியாகும்.

வயதும், அதன் ஆக்கமும், இளமை, நடுவயது, அதைத் தாண்டிய நிலைகளினூடாகவும் பார்க்க வேண்டுபவை. 21 அகவையில் பொதுவாக ஒலிம்பிக் நீச்சல் போட்டியிலும், நடு வயதில் பெரிய நிறுவனங்களில் அதிகாரப் பதவிகளிலும், இறக்கும் வரை அறிவியலாளராகவும் சமூகத்தில் மனிதர்கள் திகழ்வதைப் பார்க்கிறோம். நமக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள், மற்றும் நம் உடல் நிலை போன்றவை முக்கிய காரணிகள். இவை எவ்வாறு முறைப்படுத்தப்பட்டு கிடைக்கப் பெறும் என்பதைக் காத்திருந்து காண வேண்டும். இன்னமும் அத்தகைய மேம்பட்ட வயதினர் அதிகமில்லாத சமூகத்தில் இதைப் பற்றி தீர்மானமாக எதுவும் சொல்ல இயலாது.

வாழ் நாள் மட்டுமே அதிகரித்து, அப்படி வாழும் மூத்தோரின் உடல் நலம் சரியாக இல்லையென்றால் அது மிகப் பெரிய பளுவாகிவிடும். பொருளாதாரம், மூத்தோருக்கான மற்றைய தேவைகளை அமைத்துவிடுவதன் மூலம்,அந்தந்த வயது வரம்பிற்குள்ளோர் அதற்கு உகந்த செயலை ஆற்றும் வகையில் சட்டமும், சமூகமும் ஒன்றுபட வேண்டும்.

Rebecca Roache is a senior lecturer in philosophy at Royal Holloway, University of London.

https://www.technologyreview.com/s/614165/longer-healthier-lives-will-spark-a-new-generational-conflict/

Longer, healthier lives will spark a new generational conflict

As older generations stay productive for longer, they will hold on to more of the wealth and power.

by Rebecca Roache

[குறிப்புகள் ஆக்கம்: பானுமதி ந. ]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.