பேத்திகள் – பாகம் 2

ஆந்தனி மார்ரா

(இதழ் 207 இல் முதல் பகுதியைப் படிக்கலாம்.)

காலினாவின் பின்புலத்தில் நின்று கொண்டிருந்ததால், எங்கள் மீதும் அப்படிச்  சுட்டும் ஒளிகள் வீழ்ந்தன. புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு ஒப்பனை நிலையம் எங்களுக்கு இலவசமாக நக ஒப்பனைகளைத் தர முன்வந்தது, காலினாவின் முன்னாள் சக மாணவர்களின் வருகை அந்த நிலையத்திற்கு வெற்றியின், நாகரீகத்தின் ஜொலிப்பைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை போலும். முந்தைய ஆண் நண்பர்கள் கூப்பிட்டார்கள், மன்னிப்பு கேட்டார்கள். எங்கள் அம்மாக்கள் நாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கத் துவங்கினார்கள். அதெல்லாம் நீடித்தவரை நாங்கள் அவற்றை மிகவும் ரசித்தோம் என்று ஒப்புக் கொண்டால் அது சின்ன புத்தித் தனமாகத் தொனிக்காது என்று நம்புகிறோம்.

அழகுப் போட்டி நடந்த அன்று மாலை யாரும் வேலை செய்யவில்லை. காலினா மேடையில் தோன்றுவதைப் பார்க்க நாங்கள் எல்லாரும் தொலைக் காட்சிப் பெட்டிகளைச் சுற்றிக் குழுமி இருந்தோம். யுரேனியச் சுரங்கங்களுக்கும், மூடப்பட்ட ராணுவக் களங்களுக்கும் இருந்த தொடர்புக்காக மட்டுமே தெரிய வந்திருந்த, அழகு என்பதோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படாத, சைபீரியச் சிறு நகரங்களிலிருந்து வந்த இதர பெண்களோடு அவள் மேடையேறி இருந்தாள். அது செப்டம்பரின் நடு, எங்கள் வீட்டு ஜன்னல்களில் ஏற்கனவே முன் பனி படர்ந்து மூடியிருந்தது. தித்திப்பான ஷாம்பெய்ன் மது குளிர் பதனப் பெட்டிகளில் குளிர்ச்சியாகிக் கொண்டிருந்தது, வாட்கா எங்கள் கண்ணாடிக் கோப்பைகளைச் சூடாக்கியது, நாங்கள் குடித்தோம், ’நாட்டு விசுவாசியின் பாட்டை’ கூட்டிசை அணி இசைக்கத் துவங்கியபோது ஒருவரை ஒருவர் உஷ் என்று மௌனமாக இருக்க எச்சரித்தோம். நாங்கள் கூடவே பாடலின் சொற்களில்லாது இசையை மட்டும் ஒலித்தோம், ஆனால் பாடவில்லை. எங்கள் நாட்டுக்கு மூன்று வயதுதான் ஆகி இருந்தது, தேசிய கீதத்துக்கான சொற்கள் இன்னும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேடையின் குறுக்கே நடந்தார், மிஸ் சைபீரியா அழகிப் போட்டிக்கு வந்திருந்த பார்வையாளர்களை வரவேற்றார். அவருடைய செஞ்சிவப்புக் கன்னங்கள் தெரிவித்த நம்பிக்கை, அவர் சைபீரியாவில் அதிக காலம் செலவழித்ததில்லை என்று காட்டியது. அவர் ஒவ்வொரு போட்டியாளரையும் அறிமுகப்படுத்தினார், ஆனால் நாங்கள் காலினாவை மட்டும்தான் நோக்கினோம்.

விளம்பரங்களுக்காக போட்டியில் இடைவெளி விட்டார்கள், அது மறுபடி துவங்கிய போது போட்டியாளர்கள், உயரக் குதிகாலணிகளுடன் நீச்சல் உடைகளில் இருந்தார்கள்; எங்கள் நடுவே, இதிலெல்லாம் பெருமிதப்படுத்தப்பட்ட ஆபாசம்தான் இருப்பதாகக் கருதிய சிறுபான்மையினர், ஆபாசப்படங்களில்தான் உயரக் குதிகாலணிகளும், நீச்சல் உடையும் சேர்ந்து பயன்படும் என்று சுட்டிக் காட்டினர். மற்ற போட்டியாளர்களைப் பார்த்து நாங்கள் கெக்கலி ஒலியெழுப்பினோம், அவர்கள் தடுக்கி விழ வேண்டும் என்றும், காலணியின் குதி உடையவேண்டும் என்றும், திடீரென்று பற்றி எரிய வேண்டுமென்றும், போட்டியின் அழுத்தத்தால் உடைந்து போக வேண்டும் என்றும், உணர்ச்சிப் பெருக்கில் நொறுங்க வேண்டுமென்றும், உடல் சிதைய வேண்டுமென்றும், தலையே வெட்டப்பட வேண்டுமென்றும், பழைய ஏற்பாட்டு விவிலியத்தில் உள்ள சித்திரவதைகளுக்கு ஆளாக வேண்டுமென்றும் விரும்பினோம். அப்படி ஒன்றும் மறைக்கப்படாத இந்த கொடும் நோக்கம், நாங்கள் எல்லாரும் அதைப் பகிர்ந்து கொண்டதால், அந்த இடத்துக்குப் பொருத்தமானதாகவே எங்களுக்குப் பட்டது. நீச்சல் உடைப் போட்டியாளர்கள் காலணியின் குதி உடையாமலோ, தடுக்கி விழாமலோ மேடைக்குக் குறுக்கே நடந்து முடிந்ததைப் பார்த்த பிறகு, அவர்கள் எல்லாருக்கும் ஆபாசப் படங்களில் நடிகைகளாக இருந்து நிறைய பயிற்சி இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். காலினாவின் மீதுதான் அந்த உடை மாலைப் பொழுதின் நீண்ட அங்கியைப் போல நேர்த்தியாகத் தெரிந்தது.

பேட்டிப் பகுதியில், மற்ற போட்டியாளர்களுடைய, பயிற்சி செய்ததால் கிட்டும் சரளமான பதில்களைக் கேலி செய்தோம், காலினா மைக்ரொஃபோனிடம் வந்த போது மௌனமானோம். நிகழ்ச்சியைத் தொகுத்தவர், அவளை அறிமுகப்படுத்தினார், குறிப்பு தாங்கும் பச்சை நிற அட்டைகளின் தொகுப்பு ஒன்றைச் சிறிது நீண்ட நேரம் கீழ் நோக்கிய பார்வையால் சோதித்தார், அது அந்தக் கணத்தின் மர்மத்தைக் கூட்டியது, அவர் படிப்பறிவில்லாதவர் என்பது போலிருந்தது. “மிஸ் சைபீரியா அழகி அணிவகுப்பு என்பது உங்களுக்கு எப்படித் தெரிகிறது?” இறுதியாக அவர் கேட்டார்.

சிறிது நாணம் கலந்த புன்னகையோடு காலினா அருகிலிருந்த காமிராவை நோக்கித் திரும்பினாள், “நாட்டுடைய மேடையில் என் சொந்த ஊருக்காகத் தோன்றுவது எனக்கு மிகவும் முக்கியமாகத் தெரிகிறது. சைபீரியாவின் வளமை பொருந்திய பாரம்பரியத்தின் மீது கவனத்தை இந்த அணி குவிப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பல நூறாண்டுகளாக யூரோப்பிய ரஷ்யா சைபீரியாவை குற்றவாளிகளுக்கும் நாடு கடத்தப்பட்டவர்களுக்குமான ஒரு சிறைச்சாலையாகப் பயன்படுத்தி இருக்கிறது. ஆனால் நாங்கள் குற்றவாளிகளில்லை, சிறைக்கைதிகளும் இல்லை. நாங்கள் ஒரு புது நாட்டின் பிரஜைகள், சைபீரியர்கள் ரஷ்யக் கூட்டமைப்பின் எரிபொருட்களைத் தோண்டி எடுப்பவர்கள் மட்டுமில்லை, நாங்களே ரஷ்யக் கூட்டமைப்பின் எரிபொருட்கள் என்பதை கூடிய சீக்கிரம் உலகம் அறியப் போகிறது.”

நடத்துபவர், வினோதமான சிறு முகச் சுருக்கத்தை வீசினார், அது ஒரே நேரம் வியப்பையும், பாராட்டையும் காட்டும் முக பாவங்களில் ஒன்று.  “நீங்கள் மிஸ் சைபீரியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?” அவர் கேட்டார்.

“நான் புகழ் பெறுவேன், அப்படித்தானே?” காலினா சொன்னாள், காமெராவைப் பார்த்துக் கண்ணடித்தாள். பார்வையாளர்கள் ஆர்ப்பரிப்புக்கும், பின்னணி இசைக்குழுவினரின் எழுச்சி இசைக்குமெனக் கொடுக்கப்பட்ட இரண்டு வினாடி இடைவெளியில், காலினாவுக்கு அந்தக் கிரீடம் தேவைப்படவில்லை, ஏனெனில் அந்தக் கண்ணடிப்பால் அவள் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டிருந்தாள்.

திறமைகளின் சோதிப்புக்கான சுற்றின் போது, வ்ளடிவாஸ்டாக்கிலிருந்து ஒரு உலர்ந்த சோளத்தட்டை ரஹ்மானினஃபின் படைப்பிசையை பலாலைகா  வாத்தியத்தில் வாசித்தாள். பர்னாவுல் நகரிலிருந்து, பொய்யான நகங்கள், முலைகள், கண் இமை முடிகள், மேலும் தலைச் சவரிகள் கொண்டு ரசவாதத்தால் நிஜப் பெண் போல ஆன ஒருத்தி, கண்களைக் கட்டிக் கொண்டு ரூபிக் கனசதுரப் புதிரை விடுவித்தாள். இந்த மாதிரி அசகாய சூரப் பேரழகிகள், யாரிவர்கள்?  ‘ஸ்வான் லேக்’ நாடகத்திலிருந்து ஓடெட்டின் தனி நடனத்தை காலினா ஆடுவாள் என்று அறிவிக்கப்பட்ட போது நாங்களெல்லாம் வாயடைத்து நின்றோம். அறுபது வருடங்களுக்கு முன்னால் அவளுடைய பாட்டி, காண்டீனில் மேடையேற்றிய முதல் நாட்டிய நாடகத்தில் ஆடிய அந்த தனி நடனத்தைத் தேர்ந்தெடுத்ததால் அவள் என்ன நிரூபிக்க முயல்கிறாள்? புது ரஷ்யாவின் பெருமிதச் சின்னமாக எங்களுக்குத் தெரிந்த காலினா, எதற்கு சோவியத் ரஷ்யாவின் பிரபல பாலே நடனத்திலிருந்து ஒரு தனிநாட்டியத்தை ஆடுகிறாள்? ஃபோட்டோ ஃப்ளாஷ்கள் ஒளி வெள்ளம் பெருக்கின. இடுப்பைச் சுற்றி வெண்மையான டூல் ஸ்கர்ட்டை அணிந்திருந்தாள். அவளுடைய தலை, அடைப்புக்குறிகள் போல கவிந்தித இரு உயர்த்திய கைகளுக்கு நடுவே இருந்தபடி, தன் பாதங்களின் நுனிகளில் எழும்பி, மேலிருந்து குவிந்த ஒளிவட்டத்தால் வளைத்துப் பிடிக்கப்பட்டபடி, அவள் துவங்கினாள்.

செல்லோ வாத்தியங்கள் துடிப்புடன் ஒலித்தன. காலினா கால் விரல் நுனிகளில் நின்றாள், இடுப்பில் வெள்ளை டுட்டு உடுப்பை அணிந்திருந்தாள். இடது காலைத் தூக்கினாள், தன் பாலே காலணியால் காற்றில் ஒரு சாய்கிற தொடுவளைவைக் கோடிட்டாள். வயலின்கள் துவங்கும்போது அவள் கால் தரையைத் தொட்டது, அப்போது எங்கள் பாட்டிகள் அதைப் பார்க்க உயிரோடிருந்திருக்கக் கூடாதா என்று நாங்கள் அத்தனை ஏங்கினோம். இரண்டரை நிமிடங்களுக்கு அவள் நடனமாடினாள், மொத்த நகரமும் மௌனமாக இருந்தது. அந்த அரங்கிலிருந்து ஆயிரத்து எழுநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் நாங்கள் இருந்தோம், ஆனால் அந்தக் கணத்தளவு எங்கள் தோழியோடு நெருக்கமாக நாங்கள் வேறெப்போதும் உணர்ந்ததில்லை. மாஸ்கோ, பீடர்ஸ்பர்க், வல்கோக்ராட் நகரங்களிலிருந்து அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் ஒரு பெண் மேடையில் தன் கைகளை மேலும் கீழும் அசைத்ததைத்தான் கண்டார்கள், ஆனால் நாங்கள் அவளுடைய முதல் பாலே நடன வகுப்பில், ஆசிரியர் தன் உற்சாகத்தை இழந்து பெருமூச்சு விட்ட கணத்தில் இருந்தவளைத்தான் கண்டோம். அவளுடைய பாட்டியைப் பற்றிய கதைகளைச் சொன்ன போது அவளுடைய தாடை தன் இறுக்கத்தை இழந்ததைக் கண்டோம். மூன்றாம் வகுப்பு கணிதப் பாடத்தின்போது தன்னுடைய காலணிக் கயிற்றில் தடுக்கி காற்றில் எகிறி விழுந்தவளைக் கண்டோம். இங்கு அவளுடைய நடனத்தின் கடைசிப் பதினைந்து வினாடிகளில் காலினா விழுந்ததற்கு எந்தக் காலணிக் கயிற்றையும் நாங்கள் குற்றம் சொல்லியிருக்க முடியாது. அதற்குரிய தொடர் காரணங்களாக, கடினமான உயரத் தாவல்களையும், பளபளப்பாக மெருகூட்டப்பட்ட மேடையையும், அளவு மீறிய ஆசையையும், திறமை போதாமையையும்தான் சொல்ல முடியும். அவள் தன் வலது பாதத்தின் முன் பந்துப் பகுதியிலிருந்து தாவினாள், ஆனால் இடது பாதத்தின் பக்கவாட்டில் இறங்கினாள். அந்த ஒலிபெருக்கி அவளுடைய காலின் மீடியல் மாலியொலஸ் (கால்கணுவின் இடைப்பகுதி) உடைந்த ஒலியைப் பதிவு செய்யவில்லை, கூட்டிசையின் சத்தம் அதை விடப் பெரியதாக இருந்தது. நிகழ்ச்சி நடத்துபவரின் துணுக்குறும் சத்தத்தையும், அவள் தரையில் இடித்து விழுந்தபோது காலினா அலறியதையும், ஒரு வயோலா இசைப்பாளர் மற்ற கலைஞர்களெல்லாம் நிறுத்திய பிறகும், நிறுத்தாமல் பிடிவாதமாக, இசைக் குறிப்புப் பக்கத்தின் கடைசி வரி வரை வாசித்ததையும்தான் கேட்டோம். காலினா கைகளை ஊன்றி எழுந்த போது, அவளுடைய முகம் சிவந்திருந்தது, அவளுடைய டூட்டு ஆடை அவளைச் சுற்றி மேடையில் பரவி இருந்தது, குவியொளியின் மொத்த வட்டத்தையும் அது மூடியது, அவள் தன் தோல்வியைக் காட்டிய முனகலோடு, பரிவை வேண்டுபவளாகக் காமிராவை நோக்கியது எங்களுக்கு நன்கு பழகிய ஒன்றுதான், அது அத்தனை நெருக்கமாக இருந்ததால், எங்கள் தொண்டைகளில் அடைப்பை உணர்ந்தோம்.

காலினாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோது, இதர போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை முன்வைத்தார்கள், பாட்டு, கழைக் கூத்து, மற்றும் தந்திர விளையாட்டுகளாக அவை இருந்தன. நாங்கள் சோர்ந்து அமர்ந்திருந்தோம், காலினாவை உத்தேசித்து மற்ற போட்டியாளர்களைக் கேலி செய்யும் அளவு கூட உற்சாகம் இருக்கவில்லை. இறுதிக் கிரீடம் அணிவிக்கும் நிகழ்வுக்கு அவள் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டாள், அவளுடைய கணுக்கால் பனிக்கட்டியால் சுற்றப்பட்டிருந்தது. அவள் தோற்றதை எங்களால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நாங்கள் ஏற்கனவே இத்தனை தூரம் வந்திருந்தோமே. அந்த இரவு எங்களுக்குப் பல வருடங்களுக்குப் பேசுவதற்கான விஷயங்களைத் தந்திருந்தது. அவளுடைய மோசமான தயாரிப்பையும், அவளுடைய ஆணவத்தையும், அவள் கீழே விழுவாள் என்று எச்சரித்திருக்கக் கூடிய எங்களிடம் முன்கூட்டிப் பேசாதிருந்த அவளுடைய கர்வத்தையும் ஏற்கனவே நாங்கள் விமர்சிக்கத் தொடங்கி இருந்தோம். நிகழ்ச்சி நடத்துபவர், தீர்ப்பு சொல்லும் குழுவினரிடமிருந்து ஒரு உறையைப் பெற்றார், அதை மேடையில் திறந்தார். அவர் முகத்தில் துணுக்குற்ற பாவம் இருந்தது. அது மர்மமாகத் தெரிய வேண்டி, அவர் இடைவிடும் கணங்களில் ஒன்றல்ல; அவர் அந்தப் பெயரை நோக்கினார், நிஜமென நம்பமுடியாமல் திரும்பவும் வாசித்துக் கொண்டிருந்தார். அந்த அழகுப் போட்டிக்கு நிதியளித்தவர்களில் பிரதானமானவர் அந்தக் குறுங்குழு ஆட்சியாளர் என்றும், போட்டியில் வெல்பவரின் பெயர் அந்தக் காட்சி துவங்குவதற்கு மூன்று நாட்கள் முன்பே காகிதத்தில் எழுதி உறையிலிடப்பட்டு, உறை ஒட்டப்பட்டிருந்தது என்றும் எங்களுக்கு அப்புறம் தெரிய வந்தாலும், அன்று அந்த நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு கோணல் சிரிப்புடன் காமிராவைப் பார்த்து, “மிஸ்.சைபீரியா கிரீடத்தை அணியப் போகிறவர் வேறு யாருமில்லை, காலினா இவானொவாதான் என்று அறிவிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.” என்று சொன்னபோது, எங்களிடையே ஓடிய குதூகலத்தின் நினைவை அதெல்லாம் சற்றும் நீர்க்கச் செய்யவில்லை. நாங்கள் கரகோஷம் செய்தோம், பெரும் கூக்குரலிட்டோம். மரத்தளத் தரையில் குதி போட்டோம், அறைகளில் நடனமாடினோம்.  எங்களுக்குத் தெரிந்திருந்தது, அவள் அதைச் சாதிப்பாள் என்று. எங்களுக்கு ஒரு கணம் கூட ஐயமே இருக்கவில்லை. காலினாவின் ஈரமான கண்களில் ஃபோட்டோ ஃப்ளாஷ் ஒளிகள் மின்னின. அவளால் மேடையில் ஏற முடியவில்லை என்பதால், அவளை மேடை உதவியாளர்கள் தூக்கி எடுத்துப் போனார்கள், நிகழ்ச்சியாளர் தங்கக் கிரீடத்தை அவள் தலையில் அணிவித்தார். ஒரு மாதத்துக்குள் கிரீடத்தின் மேல் பூசப்பட்டிருந்த தங்க முலாம் இழிந்து உள்ளே இருந்த நிக்கல் கலப்பு உலோகத்தைக் காட்டியது.

புகழ் வந்தது. காலினாவுக்கு திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் வாய்ப்புகள் கிட்டின, சில வருடங்களுக்கு நாங்கள் அவளைத் திரைக்காட்சிகளிலும், பரபரப்புச் செய்தி வெளியிடும் பத்திரிகைகளில் மங்கலான ஒளிப்படங்களாகவும்தான் பார்த்தோம். கோல்யா சிசினியாவிலிருந்து திரும்பி வந்தான், ஆனால் இந்த நகரத்தில் முரட்டுக் கையாளாக இருக்கும் வேலைதான் அவனுக்குக் கிடைத்தது, காலினா குறுங்குழு ஆட்சியாளரின் வைப்பாட்டியாக இருந்திராத நாட்கள் முன்பு இருந்தன என்பதையே நாங்கள் மறந்து விட்டோம். அவள் பீட்டர்ஸ்பர்க் நகரில், வோரனாஃபின் ஆடம்பர விடுதிகளில் மேல் தளத்து அடுக்ககத்தில் வசித்தாள். செய்தித்தாள்கள் எத்தனை கிளுகிளுப்புச் செய்திகளை வெளியிட்டாலும், குறுங்குழு ஆட்சியாளரைப் பற்றி எழுதும்போது மரியாதையைக் கைவிடவில்லை. அவரைப் போன்றவர்கள், ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு தொல்லை கொடுக்கும் எழுத்தாளர்களை சைபீரியாவில் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பினார்கள். இப்போது, தொல்லையான எழுத்தாளர்களை சர்வசாதாரணமாகச் சுட்டு விட்டார்கள்.

எங்களுக்குக் கொண்டாட அதிக நேரம் கிட்டவில்லை. எங்கள் அப்பாக்கள் நுரையீரல் நோய்களில் இறந்தனர், சகோதரர்களும், கணவர்களும் அவர்களின் இடத்தை இட்டு நிரப்பினர். எங்கள் அப்பாக்களைப் போலவே, மாலைப் பொழுதில் அவர்கள், மின்னிக் கொண்டு, ஆனால் அமைதியாக, சிறிதும் மகிழ்ச்சி இன்றி, வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றி மிகுந்த கவலையோடு வேலையிலிருந்து திரும்பினர். அவர்கள் வேலையில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துச் சில காலத்திலேயே அவர்களுடைய வேலைகளை இழக்கத் துவங்கினர். சுத்தியும் அரிவாளும் தொலைந்து போன மாதிரியே, கூட்டமைப்புச் சுரங்க நிறுவன வேலைகளில் ஊழியர்களுக்கு முன்பு கிட்டிய பல மேலதிக வசதிகளும் தொலைந்து போயிருந்தன. முன்பு போல ஓய்வுக்கு ஊற்றுத் தலங்களுக்குப் போவதோ, மருத்துவ மனைகளில் சிகிச்சைக்குக் கட்டில்களோ இப்போது கிட்டவில்லை. கூட்டமைப்பு நிறுவனத்துப் பங்குகளை விற்றுக் கிட்டிய பணம் செலவழிந்து போய் வெகுநாட்கள் ஆயிருந்தன, எங்கள் பாட்டன்மார்கள் வெட்டி உருவாக்கிய சுரங்கங்கள் மீது எங்களுக்கு எந்த உரிமையும் இப்போது இருக்கவில்லை. பதின்ம வயதினர் சுதந்திரத்துக்கு ஏங்குகிறார்கள்; வயதுக்கு வந்தவர்கள் பாதுகாப்புக்கு ஏங்குகிறார்கள், என்று எங்கள் அம்மாக்கள் முன்பு சொன்னது மிகவும் சரி என்று தெரிந்த போது, அந்த எதார்த்தம் முகத்தில் அறைந்தபோது, சுளீரென்று வலித்தது. முன்பு உலகம் எங்களைப் பார்த்து அச்சப்பட்டிருந்தது. அனைத்தையும் காக்கும் அரசு வேண்டியதைக் கொடுத்திருந்தது. இப்போது எங்களுக்கு என்ன இருந்தது? தொற்று நோய்களும்,போதைகளுக்கு அடிமையாவதும்தான். பதின்மர்களாக நாங்கள் அரசுக்கு எதிராக முரண்டு நின்றோம், ஆனால் அதன் வலிமைதான் எங்களை உலகுக்கு மேலே உயர்த்தி, நிறுத்தி இருந்தது.

இருந்தாலும் அங்கு குதூகலம் இருந்தது. நாங்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டோம். அவர்கள் இந்த உலகுக்குள் கொழகொழப்புடன் மின்னிய தொப்புள் கொடியோடு, வெளுத்துப் போய், அலறலோடு நுழைந்தார்கள். இருமிக் கொண்டு, மூக்கு வாய்களிலிருந்து திரவத்தைத் தும்மி அகற்றியபடி வந்தார்கள், நாங்கள் எங்கள் கரங்களில் அவர்களை ஏற்றோம், சிரிப்பதற்கு அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோம். முதலாண்டு நிறைவின்போதும், முதல் எட்டு வைத்து நடந்த போதும் கைதட்டிப் பாராட்டினோம். எங்கள் குழந்தைகள் எங்களுக்கு எங்கள் அம்மாக்களோடு இருந்த உறவை என்றைக்குமாக அடியோடு மாற்றி இருந்தார்கள். முன்பு அவர்களை நோக்கியபோது நாங்கள் உணர்ந்த ஒரு இளக்காரமான உணர்வு போய், இப்போது இரக்கம் வந்திருந்தது, முன்பு எப்போதும் அவர்களை நேசிக்காத அளவு இப்போது நேசித்தோம், எங்களையே நாங்கள் நேசிக்குமளவு நேசித்தோம், ஏனெனில் நாங்கள் இப்போது அவர்களைப் போலவே ஆகி இருந்தோம்.

காலினாவின் முதல் படம் திரையரங்குக்கு வந்த போது, நாங்கள் அதைப் பார்க்க எங்கள் குழந்தைகளுடனும், அவர்களின் பாட்டிகளோடும் போனோம். காலினா இரண்டு மாடி உயரத்துக்கு நீட்டப்பட்டுத் தெரிந்த போது இன்னமும் கூடுதலாகவே அற்புதமாகவிருந்தாள். மர்மமும், சதிகளும் நிறைந்த ஒரு வலையில் சிக்கிய கதாநாயகியாக நடித்திருந்தாள். சி ஐ ஏ அமைப்பால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்தவள், தப்பிக்கிறாள். புத்தியிலும், உடலிலும் தனக்கு உள்ள வேகத்தை அவள் சாதகமாகக் கொண்டாள். கலக்கமில்லாது தந்திரபுத்தியோடு செயல்பட்டு, பெரும் ஆபத்து நேரவிருக்கும் கணங்களிலும் அவள் வாட்டும் ஒற்றை வரி வசனங்களை வீசினாள். விமர்சகர்கள் ‘வஞ்ச வலை’ படத்தைச் சிறிதும் நம்பகமற்ற கதை என்று வறுத்தெடுத்தாலும், நாங்கள் அதைச் சட்டை செய்யவில்லை. எங்களுடைய முன்னாள் பள்ளிக் கூடத் தோழி, எங்களுடைய சிறந்த தோழி, ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறாள், நாங்கள் இங்கே வந்து அதைப் பார்க்காமல் இருப்போமா?

பல வருடங்களுக்கு காலினா எங்களோடு ஏதும் தொடர்பு கொள்ளவில்லை. ஒரு குழந்தையை அவள் பெற்ற பிறகு பொது ஜனப் பார்வையிலிருந்து அவள் மறைந்து போயிருந்தாள், புதிதாக மிஸ்.சைபீரியா போட்டியில் வென்றவர்களும், இளம் நட்சத்திரங்களும் அவளுக்குப் பதிலாக வந்து விட்டனர். அவளுடைய படங்கள் திரை அரங்குகளிலிருந்து தொலைக் காட்சிகளுக்குப் போயின, பிறகு ஒளிபரப்புகளிலிருந்துமே மறைந்தன. அவளைப் பற்றிப் பேசுவதை நாங்கள் நிறுத்தி விட்டோம். கவலைப்பட எங்களுடைய வாழ்க்கையே இருந்தது.

வேலை நீக்கங்கள் சிசினியாவில் முதல் போர் முடிந்தபோது துவங்கின. தானியங்கி எந்திரங்கள் எங்கள் கணவன்மார்களை விட மேலும் திறமையோடு நிக்கலை வெட்டி எடுத்தன. ஓய்வூதியங்கள் அன்னிய பங்குச் சந்தையில் விலைகளின் இறக்கங்களை ஒட்டி மறைந்து போயின. வேலையில் இன்னும் இருந்தவர்களுமே மிகவும் கஷ்டப்பட்டார்கள். ரூபிள் மதிப்பிழந்த போது, சம்பளமும், ஓய்வூதியமும் கொடுக்கப்படாமல் பல மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன, பழக்கமான சோவியத் பிராண்ட் பொருட்களின் இடத்தில் வந்து நிறைந்த அன்னியப் பொருட்களை வாங்க யாரிடமும் வசதி இல்லை. மேலும் மென்மையான தட்ப வெப்பச் சூழல் உள்ள பிரதேசங்களுக்குக் குடிபெயர உத்தேசித்தோம், ஆனால் எங்களால் குடிபெயர்வதில் இருந்த செலவை ஏற்க முடியவில்லை. மேலும் எங்களுடைய குழந்தைகள், நான்காவது தலைமுறையினராக வாழ்ந்திருந்த ஆர்க்டிக் பகுதியைத் தங்கள் சொந்த ஊர்களாகக் கருதினர். அப்படி எண்ணுவதால் என்ன பயன் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அதற்கு ஏதோ அர்த்தமிருந்தது.

1990களின் துரதிர்ஷ்டங்களின் நடுவே ஒன்று தலைதூக்கி நிற்கிறது. அது லிடியாவின் கதை, அவள் வலைத்தளம் மூலம் தொடர்பு கிட்டி, பியானோ வாத்தியத்துக்குச் சுருதி சேர்ப்பவர் ஒருவரை மணந்து கொள்ளவென, நாட்டை விட்டுப் போய், லாஸ் ஏஞ்சலஸுக்குக் குடி போனாள். அந்தத் திருமண உறவு முடிவுக்கு வந்தது- நாங்கள் அதை முன் கூட்டியே அறிவித்திருந்தோம்- லிடியாவும் கீரோவ்ஸ்க் நகருக்குத் திரும்பி வந்து தன் அம்மா, வியேரா ஆண்ட்ரேயெவ்னாவுடன் வாழத் தொடங்கினாள். வியேராவை உங்களுக்கு நிச்சயமாக நினைவிருக்குமே, சிறுமியாக இருக்கையில், எம்கவெடெ இலாகாவிடம் (1) அவள் தன் தாய் மீது குற்றம் சாட்டினாள் இல்லையா? அவள் சோவியத் வருடங்களில் நன்கு பராமரிக்கப்பட்டிருந்தாள், ஆனால் செங்கொடி வீழ்ந்தபோது அவளுடைய வசதிகளும் வீழ்ந்தன. லிடியா திரும்பி வரும் காலத்தில், கோல்யா போரிலிருந்து திரும்பி வந்த பிறகு அவனை வேலைக்கு வைத்துக் கொண்ட அதே போதை மருந்து தயாரிப்புக் கும்பலோடு வியேராவுக்கும் தொடர்பு ஏற்பட்டிருந்தது. லிடியா தன் குழந்தைப் பிராயத்து வீடு இப்போது குற்றக் கும்பலுக்குப் புகலிடமாக ஆனதைப் பார்த்துப் பெரும் அதிர்ச்சியுற்றாள். அவளுடைய நெருங்கிய நண்பர்களான எங்களிடம் தன் ஆத்திரத்தையும், ஏமாற்றத்தையும் கொட்டித் தீர்த்தாள் என்பது இயற்கையானதுதான் இல்லையா? ஒரே வாரத்தில் அந்த விஷயம் நகரத்தின் குற்றக் கும்பல் தலையிடம் போய் விட்டது, அவன் கொலை செய்யக் கட்டளையிட்டான். நிக்கல் தீர்ந்து விடும் வளம், அதனால் அது பங்கு பிரிக்கப்பட்டு, எத்தனையோ உருக்களில் பொருத்தப்படுகிறதைப் போலத்தான் குற்றத்துக்குப் பொறுப்பு என்பதும். அந்தக் கொலைக்குப் பொறுப்பில் பெரும் பங்கு துப்பாக்கியின் குதிரையை இழுத்த கோல்யாவுக்கும், துணை போன களவாணிகளுக்கும் என்றாலும், அந்தத் தண்டனையைப் பிறப்பித்த குற்றக் கும்பல் தலைவனுக்கு இரண்டாவது பெரும் பங்கு சேரும், பிறகு அந்தக் குற்றக் கும்பலுடன் ஒத்துழைக்க முடிவு செய்த வியேராவுக்கு ஒரு பங்கும், அதற்கு முன்பு முக்கியமான வதந்திகள் எதையும் எங்களிடம் பகிராதிருந்தவள், இந்தச் செய்தியைப் பகிர்ந்திருக்கவே கூடாத லிடியாவுக்கு ஒரு பங்கும் சேரும். நாங்கள் அந்தப் பட்டியலில் எங்கோ கீழே உள்ளோம், குற்றத்தில் ஒரு சிறு துண்டைத்தான் ஏற்றோம், அந்தத் துண்டும் ஆறு பங்குகளாகப் பிரிக்கப்பட வேண்டும். அப்போதுதான், முன்பு லிடியாவையும் சேர்த்து எழுவராக இருந்து, இப்போது ஆறுபேராக ஆகி விட்ட எங்களில் யாரும், லிடியாவின் கொலைக்குக் காரணமாகிய அந்த வதந்திகள் பரவியதற்குத் தன் பொறுப்பை ஒரு போதும் ஏற்காமலிருக்க முடியும்.

கெகபெயின் [2] ஆள் (ரஷ்ய) அதிபர் பதவியை 2000 ஆவது ஆண்டில் வென்றபோது, நாங்கள் அதைக் கொண்டாடினோம்.

பள்ளியில் எங்கள் குழந்தைகளுக்குப் புது வரலாற்றுப் புத்தகங்கள் கொடுக்கப்பட்டன, அவர்களின் வீட்டுப் பாட வேலைகளில் நாங்கள் உதவி செய்தோம். நெவ்வா ஆற்றின் கரையிலிருப்பது புனித பீட்டர்ஸ்பர்க் நகரத்தை நிர்மாணித்த பேரரசன் பீட்டரைப் பற்றி அவர்கள் படித்தார்கள். அதை நிர்மாணிக்க ஒரு லட்சம் அடிமைகளின் உயிர்கள் விலையாகக் கொடுக்கப்பட்டது, இருப்பினும் உலகமெங்கும் அந்த நகரம் மானுட நாகரீகத்தின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜார் அரசர்களைப் பற்றி, ஏகாதிபத்திய அரசின் விரிந்த அதிகாரத்தைப் பற்றி, தொழிலாளர்களின் கலக்கங்களைப் பற்றி, அக்டோபர் புரட்சியைப் பற்றி எல்லாம் படித்தார்கள். ஸ்டாலினைப் பற்றியும் படித்தார்கள், நாங்களும் அவர்களோடு சேர்ந்து அதைப் படித்தோம், எங்களுடைய காலப் புத்தகங்களை விட பெருந்தன்மையாக, அவரைப் பற்றி இந்தப் புத்தகங்கள் பேசின என்பது எங்களுக்கு வியப்பைத் தந்தது. இந்தப் புத்தகத்தின் படி, ஸ்டாலின் ஒரு திறமிக்க ஒரு நிர்வாகி, அவர் முற்றிலும் பகுத்தறிவு சார்ந்தே செயல்பட்டார், சோவியத் ரஷ்யாவின் தலைவர்களில் மிகுந்த வெற்றி கண்டவர் அவரே. ஆர்க்டிக் பகுதிக் கட்டாய உழைப்பு முகாம்கள் நாட்டை பெருமை வாய்ந்ததாக ஆக்க அவர் மேற்கொண்ட பெரும் முன்னெடுப்பில் மிக அவசியமான பங்காற்றியவை. இப்போது, நாங்கள் எங்கள் பாட்டிகளைப் பற்றி மறு பார்வையை மேற்கொண்டோம். ஒருக்கால் பெரியதொரு நன்மையை அடைய அவர்கள் பட்ட பெரும் துன்பம் அவசியமான தீவினையோ? அவர்கள்தான் எங்களுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்திருந்தார்களே. சோவியத் யூனியனின் வீழ்ச்சி இருபதாம் நூற்றாண்டின் உலகளவு அரசியலில் ஏற்பட்ட பெரும் நஷ்டம் என்று அந்தப் புத்தகத்தில் எங்கள் குழந்தைகள் படித்த போது நாங்கள் ஆமோதித்தோம், “அது உண்மைதான்,” என்றோம்.

சிச்சின்யாவில் இன்னொரு போர் நடந்தது- அல்லது அது பல நூறாண்டுகளாக நடக்கும் ஒரே போரின் மறு தொடர்ச்சிதானா, அதை பாடப்புத்தகங்களை எழுதும் சரித்திர ஆசிரியர்களின் தீர்ப்புக்கு விடுவோம்- அதை ஒட்டி காலினாவின் கதையில் இன்னொரு திருப்பம் நேர்ந்தது, அதைப் பற்றி நாங்கள் பிற்பாடுதான் அறிந்தோம், அதாவது அவள் மறுபடி எங்களில் ஒருத்தியாக ஆன பிறகுதான். கலகத்தை ஒடுக்கும் சிறப்புப் படையினர் அங்கிருந்த போர்வீரர்களுக்குப் பதிலாகப் போய்ச் சேர்ந்தனர், குடியரசு உயிர்த்தெழுவதற்கான முதல் அறிகுறிகளைக் காட்டத் துவங்கியது, அந்தக் குறுங்குழு ஆட்சியாளர் க்ராஸ்னிக்கு ஒரு தொழில் நிமித்தப் பயணத்திற்காகப் போனபோது காலினாவும் உடன் பயணித்தாள். வோரனாஃப் தன் பெரும் செல்வத்தை கனிமச் சுரங்கங்களிலிருந்துதான் சேகரித்திருந்தார், இப்போது எண்ணெய்த் துறையில் இறங்க துடிப்பாக இருந்தார். சிச்சென் எண்ணெய்த் தலங்கள், பத்தாண்டு காலப் போரின் போது சும்மா கிடந்தவை, சிறப்பான துவக்கப் புள்ளியாகத் தெரிந்தன. வோரனாஃப் பல அமைச்சரகங்களோடு சந்திப்புகளை நடத்தியபோது, காலினா கோல்யாவைப் பற்றிய செய்தியைத் தேடினாள். லிடியா சம்பந்தமான கேவலமான சம்பவத்திற்குப் பிறகு, அவன் ஒப்பந்தப் படைவீரனாக மறுபடி சேனையில் சேர்ந்திருந்தான், அவள் அவனைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகி இருந்தன. அவன் தன் இரண்டு வருட ராணுவ வேலையை முடித்த போது, அவள் முன்னால் அடுக்காக அமைந்த விளம்பரக்காரர்கள், நிர்வாகிகள், மேலும் பல ஏஜெண்டுகள், அவன் போன்றவர்கள் துளைக்க முடியாத அணிவகுப்பாக நின்றார்கள். அவன் தன்னோடு தொடர்பு கொள்ள முயன்றானா என்று அவள் யோசித்தாள், தன்னுடைய மௌனம் அவனை லிடியாவின் கொலைக்குக் காரணமான பாதைக்குத் தள்ளியதா என்றும் வியந்தாள்.

குறுங்குழு ஆட்சியாளரின் மனைவிக்கு, மருத்துவ ஆவணங்களையும், வேலை சம்பந்தமான ஆவணங்களையும் ராணுவ அதிகாரிகள் மகிழ்வோடு கொடுக்க முன் வந்தார்கள். ஏனெனில், ஒரு ராணுவ வீரனின் பெயரைக் கூட அறிந்திருக்கத் தேவை இல்லாத அளவு, ஏராளமான செல்வமும், மிக்க அதிகாரமும் கொண்ட குறுங்குழு ஆட்சியாளர்கள், அரசியலாளர்கள், மேலும் வஞ்சகர்களுக்கு உதவ வேண்டி, திறமையோடு செயல்படும் உதவியாளர்களின் குழு ஒன்று, தொழில் திறமையே இல்லாதது என்று உலகுக்கே தெரிய வந்திருக்கிற ராணுவ அதிகாரிக் கூட்டத்தின் நடுவில் இருக்கும். ஒரு மாலை நேரத்துக்குள், ஒரு கடை நிலை அதிகாரி,  ‘வஞ்ச வலை’  திரைப்படத்தின் விசிறி, காலினாவிடம் கோல்யாவின் கோப்பு ஒன்றைக் கொண்டு வந்தார். அது இறங்கு வரிசையில் அவனுடைய பிரிகேடின் பெயரிலிருந்து அவனுடைய ரத்தத்தின் பிரிவு வரை எல்லாத் தகவல்களையும் கொண்டிருந்தது.

“ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அவனுடைய ராணுவக் குழு இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில்தான் முகாமிட்டிருக்கிறது,” அந்தக் கடை நிலை அதிகாரி சொன்னார், “கெட்ட செய்தி என்னவென்றால் கோல்யா களத்தில் செயல்பட்டபோது கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.”

காலினா அதை இறுகிய முகத்தோடு ஏற்றாள்.

“அவ்வளவு சோகம் வேண்டாம்!” அந்த அதிகாரி சொன்னார். “நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கிற வீரர்களைக் கூட களத்தில் இறந்தவர்களாக நாங்கள் நிறைய நேரம் அறிவிக்கிறோம். இறந்த வீரனுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாமே, இல்லையா? களத்தில் இறப்பது என்பது ஒரு அலுவலகக் குறிப்புதான், நிஜ வாழ்வு நிலை என்று ஆகாது. கோல்யாவின் அணியிலிருந்தே ஒரு நோயாளியை களத்தில் இறந்தவனாக, அவனோடு சேர்த்து நாங்கள் அறிவித்திருந்தோம்.”

அந்த நோயாளியின் பெயர் டானிலோ. அந்த கடை நிலை அதிகாரி அந்தக் கோப்பை மேலும் படித்து விட்டு, டானிலோ, பெனாய் அருகே உள்ள மலைப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டான் என்றார். அவன் பல மாதங்களாகக் காணாமல் போயிருந்தான், அவன் மட்டும் இறந்து போனவனாக அறிவிக்கப்படாமல் இருந்தால், அவனை ராணுவ முறைப்படி பொறுப்பைத் தட்டிக் கழித்து ஓடிப்போனவனாகக் கருதித் தண்டித்திருப்பார்கள். அவன் மருத்துவ மனைக்கு வந்து சேரும் நேரம், காயம்பட்டிருந்த அவனது பாதம் அழுகிப் போயிருந்தது, அதை வெட்ட வேண்டி வந்தது, அங்கிருந்த அறுவை சிகிச்சைக் குழுவினருக்கு அதில் சிறப்புப் பயிற்சி இருந்தது. அதற்குள் டானிலோவுக்கு அதற்கு முன்பு இருந்த சிறு அளவு புத்தியும் அழிந்து போயிருந்தது, ஆனால் ராணுவக் காவல் துறையினர் சேகரித்த தகவலின்படி அவன் அந்தப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளரால் பிடிக்கப்பட்டு, ஒரு கிணற்றின் அடித்தளத்தில் சிறை வைக்கப்பட்டிருந்திருக்கிறான்.

கடை நிலை அதிகாரி கோப்பிலிருந்து ஒரு ஒளிப்படத்தை எடுத்துக் காட்டினார். அந்தப் படம் பல முறைகள் மடிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு அதில் இருந்த பிம்பம், கட்டங்களாலான ஒரு க்ராஃப் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது போல இருந்தது. அவர் அதை காலினாவிடம் கொடுத்தார், அவள் அதில் சிறுத்தைத் தோல் போல அச்சாகி இருந்த இரு துண்டு நீச்சலுடை அணிந்த பெண் ஒருத்தி, சிறுத்தைத் தோல் போல அச்சான நீச்சல் நிஜார் அணிந்த இரண்டு பையன்கள் நடுவே நின்றிருந்தாள். பின்னணியில் துவக்க கால கிருஸ்தவப் பிரச்சாரகர்கள் பனிரெண்டு பேர் போலத் தோற்றம் தரும் புகைக் கூண்டுகளிலிருந்து மஞ்சள் நிறப் புகை அலைந்து திரிந்தது. காலினா கோல்யாவைச் சந்திப்பதற்குப் பல்லாண்டுகள் முன்பு அந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. அவள் இரு பையன்களில் உயரமானவனாக அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.

“அந்த சம்பவத்தில் இன்னொரு வினோதம் உண்டு, உங்களை மாதிரிக் கலைஞர் அதை மர்மமானதாகப் பார்க்கக் கூடும்,” அந்த கடைநிலை அதிகாரி தொடர்ந்தார், காலினாவின் முகத்தில் வருத்தம் கூடிக் கொண்டு வருவதைச் சிறிதும் கவனியாமல். “அந்த மலைப்புறத்து புல்வெளியில், இரண்டு படைவீரர்கள் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கப்பட்டது நன்கு தெரிந்த விஷயம். உள்ளூர்க்காரர்களுக்காவது அது தெரிந்திருந்தது, ஏனெனில் அது ஒரு காலத்தில் க்ராஸ்னி வட்டாரக் கலை அருங்காட்சியகத்தில் தொங்கிய ஒரு ஓவியத்தின் கருப்பொருளாக இருந்தது.”

காலினா இன்னும் அந்த ஒளிப்படத்திலிருந்து தன் பார்வையை மேலே எழுப்பவில்லை. அவள் இன்னும் கோல்யாவை காலத்தூடே பார்ப்பது போல நோக்கிக் கொண்டிருந்தாள், ஓர் ஒளிப்படத்தை அப்படித்தான் பார்க்க முடியும், சிச்சின்யாவிலோ அல்லது உள்நாட்டிலோ, கண்ணி வெடிகுண்டுகளாலோ துப்பாக்கிச் சூட்டாலோ, போதை மருந்து அளவு மீறியதாலோ, மட்டு மீறிய மதுவாலோ, சுரங்கத்து விபத்துகளாலோ, தறிகெட்ட வாகன ஓட்டுநர்களாலோ, காச நோயாலோ, எச் ஐ வி நோயாலோ கொல்லப்பட்ட எங்களுடைய பதின்ம வயது ஆண் நண்பர்களை அப்படித்தான் நாங்கள் பார்த்தோம். எங்களுக்கு நன்கு பரிச்சயமான அந்த சோகத்தையே காலினா உணர்ந்திருக்க வேண்டும், அத்தனை பரவலாக அனுபவிக்கப்பட்டதால் அந்த சோகம் எங்கள் தலைமுறையினருக்கான உரைகல்லாக ஆகி இருந்தது, நம்முடைய பதின்ம வயது ஆண் நண்பன் அகாலமாக, அறிவுக்கு ஏற்காத விதத்தில் வன்முறையால் இறக்கும்போது அந்த கணத்தில் துவங்கும் சோகம் அது. அவர்களின் சாவு எங்கள் வயதுகளை உடனே கூட்டியது, ஏதோ அவர்கள் இன்னும் வாழ்ந்திராத வருடங்கள் எங்களின் வாழ்ந்து முடிந்த வருடங்களோடு சேர்க்கப்பட்டது போல, இரண்டு வாழ்வுகளும் வாழ்ந்த காலத்திலும், இன்னும் வாழாத காலத்திலும் இருந்து ஏமாற்றங்களை நாங்கள் சுமக்கிறோம். அதனால் நாங்கள் தனியாக இருக்கும் நேரங்களில், எங்களது அமைதியான குளியலறைகளில் பல் துலக்கும்போதும், காலியான படுக்கைகளில் படுத்துக் கிடந்து விழித்திருக்கும்போதும், எங்கள் குழந்தைகள் உறங்கப் போட்ட பின்னர், எங்கள் நண்பர்கள் அவர்களின் மௌனமான குளியலறைகளில் பல் துலக்கும்போதும், தங்கள் காலிப் படுக்கைகளில் படுத்துக் கிடந்து விழித்திருக்கும்போதும், கதவு மூடியிருக்கும்போதும் கூட, வேறு யாரும் எங்களைப் பார்க்கவோ, கேட்கவோ முடியாமல் இருக்கும் நிலையிலும், நாங்கள் தனியானவர்களாக இல்லை, இன்னும் பன்மைக் குரல்களில்தான் சிந்திக்கிறோம்.

கோல்யா நிஜமாகவே போரில்தான் இறந்தானா என்று காலினா கேட்டாள். அந்தக் கடை நிலை அதிகாரி கோப்பில் மீதமிருந்தவற்றை ஒரு பார்வையிட்டார்.

“சரியான நோக்கில், இல்லை. அவன் கைதியாக இருக்கையில் கொல்லப்பட்டான். ஆனால் செத்தது என்னவோ நிஜம்.” ஓர் ஒழுங்கான, நல்ல தினத்தை வரவேற்கும் அதே குரலில் அந்த அதிகாரி இந்தச் செய்தியைக் கொடுத்தார். “நாங்கள் சடலத்தை மீட்கவில்லை, ஆனால் பிணைக்கைதிகளின் விஷயத்தில், ஒரு படைவீரர் தப்பித்து வரும்போது, இன்னொருவர் தப்பவில்லை என்றால், என்ன சொல்ல, அவர் போன மாதிரிதான். டானிலோ சொன்னதன்படி அவன் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட புல்வெளியில் இறந்தான்.”

“அவன் எங்கே இறந்தானோ, அந்த இடத்தை நான் பார்க்க வேண்டும்,” காலினா சொன்னாள்.

நிறைய நேரம் எடுத்து அந்தக் கடைநிலை அதிகாரி விளக்கினார். ஒரு முக்கியப் புள்ளியின் மனைவி, மேலும் வஞ்ச வலை திரைப்படத்தின் நட்சத்திர நாயகியின் வேண்டுகோளை மறுக்க வேண்டியது பற்றித் தனக்கு எழும் மனச் சங்கடத்தைச் சொன்னவர், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பகுதி என்ற பகட்டு வருணனை எல்லாம் இருந்த போதும், அந்த மலைப் பகுதி இன்னும் போர் நடக்கும் பகுதி என்றார்,

“நீங்கள் சொன்னீர்களே ஒரு ஓவியம், அது என்ன? கோல்யா இறந்த இடத்தைக் காட்டுகிறதே அது?” காலினா பிற்பாடு, மாலையில் கேட்டாள். “அதை நான் பார்க்க வேண்டும்.”

மூன்று நாட்கள் கழிந்த பின்னர், காலினா பிராந்தியக் கலை அருங்காட்சியகத்தின் முன்னாள் துணை இயக்குநரைச் சந்தித்தாள். அந்த அருங்காட்சியகம் பல ஆண்டுகள் முன்பே அழிக்கப்பட்டிருந்தது, அந்தத் துணை இயக்குநர் சுற்றுலா வழிகாட்டியாக வேறொரு வாழ்வைத் துவங்கி இருந்தார்.

சிச்சின்யாவிலிருந்து திரும்பிய பிறகு காலினா முன்போல இல்லை என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அவள் கொஞ்சம்தான் சாப்பிட்டாள். சோகமயமாக ஆனாள். தன் மகளை பூங்காவுக்கு அழைத்துப் போக நடந்து போன நாட்களில் கூட, திரும்புகையில் சோர்வாகி, வெளிறிப் போய்த் திரும்பினாள். சிச்சின்யாவில் அவள் எதைப் பார்த்தாளோ அது அவளை மாற்றி இருந்தது- எங்களுக்கு அவள் என்ன பார்த்தாள் என்பது தெரியவில்லை, நாங்கள் சொல்வது வதந்திகளும், யாராரோ சொன்னதும்தான், அவை காலினா போன்ற ஒரு நபரின் வாழ்வைப் பற்றியானால் கிட்டத்தட்ட புராணக் கதை போலாகி விடுகின்றன.

சுருக்கமாகச் சொல்லப் போனால், அமைப்புக்கு எதிரானவளாக ஆகுமளவு முட்டாளாக ஆகி இருந்தாள். சிச்சின்யாவின் நிலைமை பற்றி மேலும் கற்றிருந்தாளானால், நாட்டு அதிபர் எடுத்த நடவடிக்கைகள் மிக ஏற்றவைதான் என்பதைத் தெரிந்து கொண்டிருந்திருப்பாள், அவரோ எல்லா விஷயங்களிலுமே மிகச் சரியான தேர்வைத்தான் மேற்கொள்பவர். எனவே அவளைப் பெருமைப்படுத்திப் பார்க்காதீர்கள். ஆளும் கூட்டத்திடமிருந்து தனக்குக் கிட்டிய ஆடம்பர வாழ்வை அனுபவித்தபடியே, அந்தக் குழுவினரின் செயல்களுக்கு அறப்பொறுப்பேற்க விரும்பாதவளாக இருக்கத் தேவையான விலகலை மட்டும்தான் ஏற்படுத்த முயன்றாள். அங்கு வெறும் வதந்திகள்தான் இருந்தன. காலினா ஒரு போராட்டக்காரி இல்லை. இருந்தாலும் காலினாவின் திரைப்படங்களில் ஒரே ஒரு படத்தைப் பார்த்தவர்களுக்கும், மற்ற பார்வையாளர்கள் முழு மௌனம் காக்கும்போது சிறு முணுமுணுப்பே கூட பெரிய சலசலப்பை உண்டாக்கும் என்பது தெரிந்திருக்கும்.

விருந்துகளிலும், ஓவியக் கண்காட்சித் திறப்பு நிகழ்ச்சிகளிலும் அவளிடமிருந்து வெளிப்பட்ட நாசூக்கில்லாத குறிப்புகளை யாரும் சட்டை செய்யவில்லை. ஆனால் ஒரு வானொலி நிகழ்ச்சியில், தொலைபேசி மூலம் பங்கெடுத்த காலினா, மூச்சு விடாமல் பேசிய முதல் சில வார்த்தைகளை நாங்கள் கேட்டபோது, தான் செய்வதைப் பற்றி அவள் ஒழுங்காக யோசித்திருக்கவில்லை என்பது எங்களுக்கு உடனே தெரிந்தது. அவளை எது அப்படித் தூண்டி இருக்கும்? அவளுக்கு அத்தனை கொடுத்திருந்த ஒரு அரசிடம் அவள் எப்படி இத்தனை தூரம் நன்றியுணர்வு இல்லாதிருக்க முடியும்? அவளுக்கு அதற்கு என்ன உரிமை இருந்தது! அவளுக்கு எல்லாமே கிட்டி இருந்தன! பிற்பாடு எங்களுக்கு, அந்த வானொலி நிலையம் ஒரு ஊடக நிறுவனத்தின் கிளை என்பதும், அந்த ஊடக நிறுவனமும் இன்னொரு பெரும் கூட்டமைப்புடைய கிளை நிறுவனம் என்பதும், அந்த கூட்டமைப்புடைய முதன்மை நிலைப் பங்குதாரர் வேறு யாருமில்லை, ரஷ்யாவின் பதின்மூன்றாவது பெரும்பணக்காரர் என்பதும், அதாவது நமது அன்புக்குரிய குறுங்குழு ஆட்சியாளர்தான் என்பதும் தெரிய வந்தன. அந்தப் பேட்டியில், நாட்டின் பிரதம மந்திரிக்கு விளையாட்டுப் போட்டிகளில் இருந்த ஆர்வத்தைக் கேலி செய்ய முனைந்து, அவரை ’திறந்த மார்புடைய காட்டாள்’ என்று அவள் அழைத்த போது, இதெல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்ததா? அதற்குச் சற்றும் வாய்ப்பில்லை. ஏனெனில், புதிதாக நாட்டின் பதின்மூன்றாவது பெரும் பணக்காரராக உருவாகி இருந்த குறுங்குழு உறுப்பினர், அனேகமாக எல்லாவற்றிலுமே முதன்மைப் பங்குதாரராகத்தான் இருந்தார். தன் பெரும் செல்வத்துக்கும், சுதந்திரத்துக்கும் க்ரெம்லினின் சாதகமான பார்வையைப் பெரிதும் நம்பி இருந்த அந்த குறுங்குழு உறுப்பினரைப் போன்ற மனிதருக்கு, அரசியலுக்காகச் செய்யும் திருமணங்கள், ஆசைக்குச் செய்யும் திருமணங்களை விட எப்போதுமே மேலானவையாகத்தான் இருக்கும்.

அடுத்து வந்த வாரங்களில், அவளுடைய திரைப்படங்கள் டிவிடி விற்கும் வீதிக் கடைகளிலிருந்து மாயமாகின, சத்தமே இல்லாமல், ஆனால் அதிகார பூர்வமாக அவளுடைய மிஸ். சைபீரியா பட்டம் அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது. அவளுடைய பாட்டியைப் போல எல்லா ஒளிப்படங்களிலிருந்தும் அவளை காற்று விசையால் அகற்றவில்லை என்றாலும், மிஸ். சைபீரியா விளம்பரங்களிலிருந்து அவள் ஃபோட்டோஷாப் முறையில் அகற்றப்பட்டிருந்தாள். நாங்கள் குறுங்குழு உறுப்பினரைக் குற்றம் சொல்லவில்லை. கதர்கோவ்ஸ்கிக்கு நேர்ந்த கதி இன்னமும் செய்தித்தாள்களில் முதல் பக்கங்களில் இருந்தது. பீடர்ஸ்பர்க் மேலும் மாஸ்கோவில் இருந்த தன் அடுக்ககங்களை, விசேஷ ஓட்டுநர்கள் செலுத்திய கருப்பு சொகுசுக் கார்களை, முத்துமாலைகளை, உரோம மேலங்கிகளை எல்லாம் காலினா இழந்தாள். எதற்கெல்லாம் சட்ட பூர்வமான உரிமைக்கான தஸ்தாவேஜ்களோ, ரசீதுகளோ, பெயர்ப் பதிவுகளோ அவளிடம் இல்லையோ அதெல்லாம் அவளிடமிருந்து அகற்றப்பட்டன. குழந்தைகள் மீது பரிவேதும் இல்லாத, குறிப்பாகத் தன் குழந்தைகள் மீது பாசமேதுமில்லாத அந்தக் குறுங்குழு உறுப்பினர், அதிசயமாகக் காலினாவுக்கு ஒரு சலுகையை மட்டும் கொடுத்தார், அவர்களுடைய பெண்ணை கீரொவ்ஸ்க் நகரில் வளர்க்க அனுமதித்தார்.

நாங்கள் காலினாவை எல்லா நேரமும் இப்போது பார்க்கிறோம். சினிமாத் திரைகள் பற்றிய சுவரொட்டிகளில் இல்லை, மாறாகக் கடைகளில், தெருவில் நடக்கும்போது, பஸ்களுக்காக நிறுத்தல் இடங்களில் காக்கும்போது.  அவளுடைய முகம் எங்கள் முகம் போலத்தான் இருக்கிறது. இன்னமும் கூடுதல் அழகாக இருக்கிறது, அது அவளுக்குச் சேரவேண்டிய பெருமைதான், ஆனால் நாங்கள் இப்படிப்பட்ட சின்ன புத்திப் பொறாமைகளை எல்லாம் வெகு நாட்கள் முன்பே தாண்டி விட்டோம். எண்ணெயின், இயற்கை எரிவாயுவின் விலை உயர்வுகள் ரூபிளின் மதிப்பை நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. சுரங்க நிறுவனங்களின் லாபம் சீனாவின் பொருளாதாரத்தின் நிலையை ஒட்டி அமைகிறது. உலகத்தின் காடலிடிக் மாற்றிகளில் தொண்ணூற்றி ஐந்து சதவீதம், கீரோவ்ஸ்க்கின் பல்லேடியத்தை நம்பித்தான் உற்பத்தியாகிறது. அமெரிக்க, யூரோப்பிய சூழல் போராட்டக் காரர்கள் தம் நாட்டு ஆகாயம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருப்பதால், எங்கள் நகரம் மேலும் அடர்ந்த அடுக்குகளாகி வரும் சூழல் மாசுகளுக்குக் கீழே தழைக்கிறது. அவ்வப்போது காலினாவின், மற்றும் அவளுடைய பாட்டியின் கதைகளைப் போன்ற கதைகளை நாங்கள் கேட்கிறோம், அளவு மீறி உரக்கப் பேசிய சிலர், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சைபீரியச் சிறைகளுக்கு அனுப்பப்படுவதைப் பற்றிக் கேட்கிறோம். அவர்களின் வாழ்வுகள் சிறு பலிகள்.

தெருவுக்கு அந்தப் பக்கம் பாருங்கள். ஜங்கிள் ஜிம் ஒன்றில் இருப்பது காலினாவின் மகள், எங்கள் மகள்களோடு உரக்கக் கூவிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சறுக்கு மரத்தில் இறங்குகிறாள். மிக அழகான பெண், அதை நாங்கள் மறுக்கவில்லை. சாதாரணமாக காலினா எங்களோடு ஒரு பெஞ்சில் அமர்கிறாள், நாங்கள் பழைய நினைவுகளை அசை போடுகிறோம், எங்கள் எரிச்சல்களை வெளியிடுகிறோம், மகிழ்ச்சிகளைப் பகிர்கிறோம். முக்கியமாக, எங்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம். அவர்கள் எங்களுக்கு எப்படி ஆத்திரமூட்டுகிறார்கள்; எப்படிக் கவலைப்படச் செய்கிறார்கள்; அவர்களைச் சரியாகப் பராமரிக்காமல் தோற்று விடுவோமோ என்ற அச்சம் எங்கள் தூக்கத்தை எப்படிக் குலைக்கிறது, இப்படி. ஆனால் யாரும் சுயப் புகழ் பாடுவதில்லை, நம்முடைய குழந்தைகளைப் புகழ்வது அவர்களுக்கு துரதிர்ஷ்டம் நேர அழைப்புதான். ஆனால் எங்களுக்குள்ளேயே, அதை நாங்கள் ரகசியமாக ஒத்துக் கொள்கிறோம்.  நாங்கள் பெருமிதம் கொண்டுள்ளோம், அவர்களைப் பற்றி கர்வம் கொண்டிருக்கிறோம். எங்களால் முடிந்ததை எல்லாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம், ஆனால் எங்களுடைய மிகப் பெரிய பரிசு, எங்களுடைய சாதாரணத் தன்மையை அவர்கள் மீது பதித்திருப்பதுதான். இதற்காக அவர்கள் எங்களைப் பற்றிக் குறை சொல்லக் கூடும், நாங்கள் குறுகிய மனமுள்ளவர்கள் என்றோ, எங்களுக்கு பெரிய லட்சியங்கள் இல்லை என்றோ நினைக்கக் கூடும், ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லாதிருப்பதால்தான் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை என்றாவது ஒரு நாள் அவர்கள் உணர்வார்கள். இன்னும் சில வருடங்களில் அவர்கள் திருமணம் செய்து கொண்டு, தமக்கெனக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள். எங்களுடைய பேரன் பேத்திகள் எங்களுக்கு என்ன கதைகளைச் சொல்வார்கள் என்றும், அந்தக் கதைகள் எங்கள் கதைகளைப் போல இருக்குமா என்றும் நாங்கள் யோசிக்கிறோம்.

***

இங்கிலிஷ் மூலம்: ஆந்தனி மார்ரா  தமிழாக்கம்: மைத்ரேயன்

மூலக் கதை: Granddaughters. இது நாரெடிவ் பத்திரிகையில் 2011 ஆம் ஆண்டு பிரசுரமான சிறுகதை. பார்க்க: https://www.narrativemagazine.com/issues/winter-2011/fiction/granddaughters-anthony-marra

நன்றி: நாரெடிவ் பத்திரிகைக்கு

[பிற்பாடு 2015 ஆம் ஆண்டு மார்ராவின் சிறுகதைத் தொகுப்பு நூலான  ’த ட்ஸார் ஆஃப் லவ் அண்ட் டெக்னோ’ என்ற புத்தகத்தில் பிரசுரமாகி இருக்கிறது.]

ஆந்தனி மார்ராவின் ஒரு பேட்டியை இங்கே காணலாம்:

https://www.foyles.co.uk/anthony-marra

பின் குறிப்புகள்:

  • எம்கவெடெ என்பது ரஷ்ய உச்சரிப்பு. பெயர்ச்சுருக்கம். ரஷ்ய மொழியில் இதை НКВД  என்றும், இங்கிலிஷில் NKVD என்றும் குறிக்கப்படும். ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு இலாகா. இந்தியாவின் சிபிஐ போன்றது.
  • கெகபெ என்பது ரஷ்ய உச்சரிப்பு. இங்கிலிஷில் KGB என்றும் ரஷ்ய மொழியில் КГБ என்றும் சுருக்கப் பெயரால் உலகெங்கும் அறியப்படும் இந்த அமைப்பு, சோவியத் ரஷ்யாவின் தலைமை உளவு மேலும் பாதுகாப்பு அமைப்பாக இது செயல்பட்டது, ஆனால் இது ராணுவ விதிகளுக்குட்பட்டது. உள்நாட்டில் அன்னிய உளவாளிகள், அல்லது அப்படிச் சந்தேகிக்கப்பட்டவர்களை இந்த அமைப்பு கண்காணித்து, கைது செய்து, சிறையிலடைக்க அதிகாரம் பெற்றிருந்தது. உலகின் கடுமையான அரசு அமைப்புகளில், தொடர்ந்து நெறிமுறைகளை மீறுவதில் இந்த அமைப்பு முதல் வரிசையில் இருந்த ஒன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.