புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!

சர்வசித்தன்

பொதுவாகப் புதிய கண்டுபிடிப்புகள்,புத்திலக்கியங்கள், புதுமையான சிந்தனைகள் இவற்றுக்குச் சொந்தக்காரர்களான அதி தீவிர அறிஞர்களில் பலர் கிறுக்குத்தனமான நடவடிக்கைகள் கொண்டவர்களாகவோ அல்லது தம்மைச் சுற்றிலும் நடப்பனவற்றைப் பற்றி அறியாதவர்களகவோ இருப்பதைப் பலர் கவனித்திருக்கலாம்!

இந்த மேதாவித்தனமும் அதனுடன் ஒட்டிப்பிறந்த கிறுக்குத்தனமும் எவ்வாறு ஒரே மனிதரிடத்தில் உருவாகின்றன என்பதை ஆராயும் கட்டுரையே இதுவாகும்.

கிரேக்க தத்துவ ஞானிகள் எனப் போற்றப்படும் அரிஸ்ரோட்டில், பிளேட்டோ ஆகியவர்களே இந்தப் படைப்பாக்க சிந்தனையாளர்களான கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், புத்திலக்கியம் படைபவர்கள் போன்றோரைப் பற்றி முதன்முதலாகக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் படைப்பாக்கசிந்தனையாளர்களுக்கும் மனப்பிரமைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டதாக அவர்கள் கருதியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் நீண்ட காலங்கள் கழித்து, சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இத்தாலியைச் சேர்ந்த குற்றவியல் ஆய்வாளரான சீஸாரே லொம்ப்ரோஸோ ( Cesare Lombroso )  தனது ‘ த மான் ஆஃப் ஜீனியஸ்’ (The Man of Genius ) என்னும் நூலில், இவ்வாறான பிரசித்தி பெற்ற மேதைகளின்  பழக்கவழக்கங்கள் குறித்த பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இவரது நூலில், மேதாவித்தனம் கொண்டவர்களிடம் காணப்பட்ட மனப்பிரமைக்கும், பயங்கர குற்றவாளிகள் சிலரது நடத்தைகளுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எனினும் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்புதான், இந்தப் புத்துருவாக்க சிந்தனைக்கும் புரியாத நடத்தைகளுக்கும் இடையேயான தொடர்புகள் பற்றிய ஆய்வுகளில் உளவியலாளர்களும் ஏனைய அறிஞர்களும் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்கள் இவற்றின் தன்மையினை அளவிடும் பொருட்டுத் தமக்கெனச் சில நெறிமுறைகளையும் ஏற்படுக்க் கொண்டார்கள்.

இவற்றுள், புத்துருவாக்க சிந்தனையாளர்களை அறிந்துகொள்ள அவர்களது புத்துருவாக்கம் தொடர்பான பதிவுகள், அவர்கள் அத்துறையில் ஈடுபட்டிருந்தமைக்கான ஆதாரங்கள், அவர்களது புத்துருவாக்க ஆற்றல்- இதில் ஒரு பொருளைப் பற்றிப் பல கோணங்களில் சிந்திக்கும் ஆற்றலும் அடங்கும்- என்பனவற்றின் அடிப்படையில் இதனைத் தீர்மானிக்கும் முடிவினை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதே சமையம் புரியாத அல்லது கிறுக்குத் தனமாகச் செயல்படுவதைத் தெரிந்து கொள்ள மனச்சிதைவுடன் தொடர்புடைய நடத்தைகள் ஆராயப்பட்டு அதனை அலகாகக் கொள்ளும் முறையினை ஏற்படுத்தியிருந்தனர்.

இது, ஆங்கிலத்தில் ஸ்கிட்ஸொடைபல் ( Schizotypal ) ஆளுமை எனக் குறிப்பிடப்படுகிறது.

இதன் கீழ் விசித்திரமான நம்பிக்கைகள்- அதாவது இன்று நாம் பெற்றுள்ள திறமைகளிற் சில, முன்பு அத்துறையில் பிரபலமாக இருந்தவர்கள் வழங்கும் கொடை என நம்புவது- உணர்வில் தடுமாற்றம் ஏற்படுவது; தானறியாமல் யாரோ தன்னைத் தொடர்கிறார்கள் என நினைப்பது போன்ற மனப் பிரமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இது போன்ற மன நிலையில் உள்ளவர்கள், மருத்துவ ரீதியில் ஓரளவு மன நலன் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கருதப்படுகிறது.

அமெரிக்காவின் மன நலக் கூட்டமைப்பு ( American Psychiatric Association ) இதனை ஒரு வகை ‘பிறழ் மைய நடத்தை’ என வகைப்படுத்தியிருக்கிறது.

இது பற்றி ஆழமாக ஆராய்ந்த போது, இம் மன நிலை கொண்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் மனச் சிதைவு ( Schizophrenia ) நோய்க்கு ஆளானவர்களாய் இருப்பது/இருந்தது தெரியவந்தது.

பொதுவாக இப்பாதிப்பினுக்கு ஆளானவர்கள், விநோதமாக உடை அணிபவர்களாக, வழக்கமாகப் பேசுவதிலிருந்தும் மாறுபட்ட பேச்சினை உடையவர்களாக, சமூகத்தில் இருந்தும் விலகி இருப்பவர்களாக, மாறுபாடான உணர்வு நிலை கொண்டவர்களாக, சகுனம், டெலிபதி போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்களாக, நெருக்கமாக உறவாடும் மனப்போக்கு இல்லாதவர்களாக…..  இவ்வாறு மேற் குறிப்பிட்ட ஏதாவதோர் குறைபாட்டினைப் பெற்றிருப்பார்கள்.

எனினும், ஸ்கிட்ஸொடைபல் அளவீட்டின்படி, இதில் அடங்கும் யாரும் ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களாக இருக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை.இந்த அளவீட்டின்படி சராசரிக்கும் மேல் இடம்பெற்ற பலர் புத்துருவாக்க சிந்தனை மற்றும் புத்திசாலித்தனம் போன்றவற்றில் சிறப்பாக இருப்பதை, ஹார்வாட் ( Harvard ) பல்கலைக கழக ஆய்வொன்று உறுதி செய்துள்ளது.

இயல்பும் வளர்ப்பும்.

1966 இல், அமெரிக்க மரபணு வல்லுநராக விளங்கிய லெனார்ட் ஹெஸ்டன் ( Leonard Heston) மனச் சிதைவு கொண்ட தாயர்களிடம் இருந்து பிரித்தெடுத்து வளர்ககப்பட்ட குழந்தைகளையும், எவ்வித மனச் சிதைவுமற்ற தாயர்களது குழந்தைகளையும் வைத்து நடாத்திய ஆய்வின்படி மனச்சிதைவுற்ற தாயார்களின் குழந்தைகள் மற்றவர்களை விடவும் புத்திக்கூர்மை, புத்துருவாக்க சிந்தனை என்பனவற்றில் மேம்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர், 40 வருடங்கள் கழித்து,ஹார்வாட் பல்கலைக்கழக ஆய்வாளரான டென்னிஸ் கின்னி (Dennis Kinney )  முன்பு ஹெஸ்டன் மேற்கொண்ட ஆய்வுகளை ஒட்டித் தமது ஆய்வினை நடாத்தியிருந்தார். இதில் சுமார் 36 குழந்தைகள் மனச்சிதைவுள்ள தாய்மார்களிடமிருந்தும், வேறு 36 குழந்தைகள் சாதாரண தாய்மார்களிடமிருந்தும் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

மனச் சிதைவுக்கு ஆளான தாய்மார்களது குழந்தைகளிடம் ஸ்கிட்ஸோடைப்பல் இயல்பும் காணப்பட்டது அதே சமையம் மற்றவர்களைவிடவும் மிக உயர்ந்த கற்பனை வளமும், படைப்பாக்க சிந்தனையும் இணைந்திருந்தது.

இது போன்ற கற்பனை வளமும், படைப்பாக்கத் திறனும் கொண்டவர்களிடையே எதிர்காலத்தைப் புலப்படுத்தும் கனவுகள், ரெலிபதி, கடந்த காலம் பற்றிய உணர்வு என்பன குறித்த நம்பிக்கைகள் ஆழமாக இருப்பதையும் ஆய்வுகள் புலப்படுத்தின.

இது போன்ற விபரீத எண்ணப்போக்கினுக்கும், புத்துருவாக்கத் திறனுக்கும் இடையே காணப்படும் தொடர்பு, பல ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

ஹார்வாட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷெல்லி கார்சன் ( Shelley Carson ) இது பற்றிக் குறிப்பிடும்போது, “ சாதாரணமாக எமது மூளைக்கு அனுப்பப்படும் வெளியுலகத் தகவல்கள் யாவும் ஏதோவொரு வகையில் வடிகட்டப்பட்ட பின்பே , அவை மூளையால் உணரப்படுகின்றன. இந்த வடிகட்டல் முறை, அதிபுத்திசாலிகள், ஸ்கிட்ஸோடைப்பல் ஆளுமை கொண்டவர்கள், கற்பனை வளம் கொண்டவர்கள் ஆகியோரிடையே ஏதோ ஒரு வகையில் தடுக்கப்பட, மூளையைச் சென்றடையும் அனைத்துத் தகவல்களும் உணர்வூட்டப்பட்டு விடுகிறன. என்றாலும் இவ்வகை மித மிஞ்சிய உணர்வூட்டல்கள், ஆளுக்கு ஆள் வேறுபடும் சாத்தியம் உள்ளது.” என்கிறார்.

அதிலும் குறிப்பாக, ஸ்கிட்ஸோடைப்பல் மற்றும் மனச்சிதைவுத் தன்மை உள்ளவர்களிடம் இந்த வடிகட்டல் முறை மிகவும் குறைந்தே காணப்படுவது நிரூபணமாகியுள்ளது.

லேடண்ட் இன்ஹிபிஷன் ( Latent Inhibition) அல்லது எல் 1 ( L 1) எனக் குறிப்பிடப்படும் இந்த வடிகட்டல் செயல்பாடு குறைவுபடும் போது, ஆழ்மனத்திரையில் அனைத்துத் தகவல்களும் ஓடவாரம்பிக்கிறது. இதன் விளைவாக விசித்திர எண்ணங்களும், பிரமைகளும் உருவாகின்றன என்கிறார்கள்.

புத்துருவாக்க சிந்தனையில் ஈடுபடும் ஒருவர் மற்றவர்களை விடவும் தனது மூளையிலிருந்து சுமார் 8 முதல் 12 ஹெர்ட்ஸ்க்கும்( Hertz) அதிகமான ஆல்ஃபா வீச்சினை ( Alpha Range ) வெளிவிடுகிறார் எனவும் கண்டுள்ளனர். இந்த ஆல்ஃபா ஆற்றல், சம்பந்தப்பட்டவரை அவரது துறையில் மிகத் தீவிரமாக ஈடுபடவைக்கும் தன்மை கொண்டது. இவை ஒருவரை மேன்மேலும் அக உலகை நோக்கி இழுத்துச் செல்வதால் அவர்கள் புற உலக எண்ணங்களில் இருந்தும் விடுபட்டுவிடுகிறார்கள் என்னும் கருத்தினை, ஆண்ட்ரேயாஸ் ஃபிங் ( Andreas Fink) என்னும் ஔஸ்ட்ரியா நாட்டு ஆய்வாளர் முன் வைத்துள்ளார். இதுவே அவர்களை ஸ்கிட்ஸோடைப்பல் நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பது அவரது வாதமாகும்.

இந்த ஆல்ஃபா அலைகள் குறித்து 2009ல் குனியோஸ்(Kounios) மற்றும் பீமன்(Beeman) என்னும் இரு ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது, தொடர்ச்சியான ஆல்ஃபா அலைகள், முடிவில் ‘காமா’ ( Gamma) அலைகளாக, அதுவும் சுமார் 40 ஹெர்ட்ஸ்ஸுக்கும் மேலான அலைவரிசைக்கு மாற்றமடையும் எனவும், இது மேலும் ஆழ்மன நிலைக்கு இட்டுச்செல்ல வல்லது எனவும் கண்டுள்ளனர். [1]

தலைமம் அல்லது மூளையின் உள்ளறையில் (thalamus) இடம் பெற்றிருக்கும் துணைப்புறணிப்பகுதியில் ( sub cortical)  இருக்கும் டோபமீன் 2 ( D 2 ) இருக்கும் அடர்த்திக்கும், சிந்தனைத் திறனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்த ஓர்ஜான் டெ மன்ஸானோ ( Örjan De Manzano), ஃப்ரீட்ரிக் யுல்லென் (Fredrik Ullén) ஆகியோர், 14 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் வழி,இந்த டோபமீனின் அடர்த்தி குறைவிற்கும் சிந்தனைத் திறன் குறைவிற்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்துள்ளனர். [2]

அதே சமயம், இந்த நியூரோ டிரான்ஸ்மிட்டர் டோபமீனால் ஏற்படும் புத்துருவாக்க சிந்தனை மற்றும் தன்னிலை மறக்கும் தன்மை என்பன மரபணுக்களோடு தொடர்பு உடையன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றிய ஆய்வினை மேற்கொண்ட ஹங்கேரி நாட்டவரான, ட்ஸபோச் கியெரி ( Szabolcs Keri ) 2009 ஆம் வருடம், நியூரெகுலின் 1 (Neuregulin-1 ) என்னும் மரபணு, மனச்சிதைவினால் பாதிப்புறுபவர்களிடம் காணப்படுவதை உறுதி செய்தார்.

இதன் மூலம் மரபணுவில் உண்டாகும் மாறுதல்களுக்கும், புத்துருவாக்கச் சிந்தனை மற்றும் தன்னிலை மறந்து செயல்படுதல் ஆகியவற்றுக்கும் இடையே தொடர்பு இருபதாக நம்பப்படுகிறது.

பொதுவாகக் கிறுக்குத்தனமும், தன்னிலை மறந்து செயல்படுவதுமே ஒருவரைப் படைப்பாக்கச் சிந்தனையாளராக மாற்றிவிடாது. எனினும் அத்தகைய திறமை மிக்கவர்களிடம் ஒருவித கிறுக்குத்தனமும், தன்னிலை மறந்த செயலும் காணப்பட வாய்ப்புகள் உள்ளன.

மேலும் இது போன்ற திறமைகள் வாய்ப்பதற்கு, அவரது புத்திசாலித்தனமும் துணைசெய்தல் வேண்டும்.

இன்றைய விளம்பர உலகில், விநோதமாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களுக்குப் பல வித வேலை வாய்ப்புகள் கிட்ட வாய்ப்பு உள்ளதை மறுப்பதற்கில்லை.

மற்றெவரும் சிந்திக்காத வகையான புதுமையான எண்ணங்களை உருவாக்கும் வகையில், இன்று பல பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. கொக்கோ கோலா, டூ பொன்ற், ஹுமானா போன்ற மிகப் பெரும் உலக வர்த்தக நிறுவனங்கள் இது போன்ற புத்துருவாக்கச் சிந்தனை கொண்டவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் காலம் உருவாகியிருக்கிறது.

எனவே புத்திசாலிகளான, புத்துருவாக்க சிந்தனையாளர்களது காட்டில் இனிமேல் அடை மழைதான்!

***

அடிக்குறிப்புகள்:

[1] குனியோஸ் ட்ரெக்ஸல் பல்கலையில் உளவியல் துறைப் பேராசிரியர்.  ஆஹா கணங்களைப் பற்றிய அவருடைய ஆய்வுகள் குறித்து அவரே பேசும் ஒரு சிறு காணொளியை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=J1IWm8tJroo

[2]  ஒர்ஜன் டெ மன்ஸானோவின் உரை ஒன்றுக்கான காணொளிக்குச் சுட்டி இங்கு: https://www.youtube.com/watch?v=zaWz3BlACWo

இக்கட்டுரைக்கான ஆதாரங்கள்:

1. Creativity and Psychopathology.

    Canadian Journal of Psychiatry 2011. S.H.Carson

2. Thinking Outside a Less intact Box.

    PLoS   2010.

3.Genes for Psychosis and Creativity.

   Psychological Science  2009; S.Keri

4. The Aha Moment

    Current Directions in Psychological Science Aug 2009.

5. Creativity in Offspring of Schizophrenic and control Parents.

   Creativity Research Journal . Jan 2001

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.