சார்ல்ஸ் புக்காவ்ஸ்கி
என் இதயத்துள் இருக்கிறது
வெளியேற விரும்பும் நீலப்பறவையொன்று
ஆனால் அவனால் சமாளிக்க முடியாத அளவுக்கு
கடுமையானவனாக இருக்கிறேன்,
நான் சொல்கிறேன், அங்கேயே இரு, நான் எவரையும்
உன்னைப் பார்க்க விடப் போவதில்லை.
என் இதயத்துள் இருக்கிறது
வெளியேற விரும்பும் நீலப்பறவையொன்று
ஆனால் அவன் மேல் நான் விஸ்கியை ஊற்றுகிறேன்
சிகரெட் புகையை உள் இழுக்கிறேன்
மாதுக்கள், மது ஊற்றிக் கொடுப்பவர்கள்
மளிகைக்கடை குமாஸ்தாக்கள்
எவருக்கும் தெரியாது
அவன் உள்ளே இருப்பது.
என் இதயத்துள் இருக்கிறது
வெளியேற விரும்பும் நீலப்பறவையொன்று
ஆனால் அவனால் சமாளிக்க முடியாத அளவுக்கு
கடுமையானவனாக இருக்கிறேன்,
நான் சொல்கிறேன்,
உள்ளேயே கிட, நீ எனக்குக் குழப்பம்
விளைவிக்க விரும்புகிறாயா?
என் பணிகளைக்
கெடுக்க விரும்புகிறாயா?
ஐரோப்பாவில் என் புத்தக விற்பனை
அடி வாங்க விரும்புகிறாயா?
என் இதயத்துள் இருக்கிறது
வெளியேற விரும்புகிற நீலப்பறவையொன்று
ஆனால் நான் அதிபுத்திசாலி,
எல்லோரும் தூங்குகின்ற இரவில் மட்டுமே
சிலநேரங்களில் அவனை வெளியே போக விடுகிறேன்.
நான் சொல்கிறேன், எனக்குத் தெரியும் நீ அங்கிருக்கிறாய் என,
ஆகையால் வருத்தப்படாதே.
மீண்டும் அவனை உள்ளே வைக்கிறேன்,
ஆனால் அவன் உள்ளிருந்து பாடுகிறான் சன்னமாக,
நானொன்றும் அவனை சாகடிக்கப் பார்க்கவில்லை
மேலும் நாங்கள் ஒன்றாக உறங்குகிறோம்
எங்கள் இரகசிய ஒப்பந்தத்துடன்,
ஒரு ஆணை அழ வைக்க அது
நன்றாகவே போதுமானதாக இருக்கிறது,
ஆனால் நான் அழுவதில்லை,
நீங்கள்?
*
மூலக் கவிதை ஆங்கிலத்தில்.. : ‘Bluebird’ by Charles Bukowski
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
**
சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்ல்ஸ் புக்காவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.