ரவி நடராஜன்

நம்ம கையில் என்ன இருக்கு?
விரக்தியான தலைப்புடன் தத்துவம் பேசப் போகிறேனா? சத்தியமாக இல்லை. எனக்கு கொஞ்சம் தொழில்நுட்பம் தெரியும். ஆனால், அதன் மீது வெறி கிடையாது. பேச, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பவே திறன்பேசி என்று மிகவும் திருப்தி அடையும் ஜாதி நான்.
சில மாதங்களுக்கு முன் கோவையிலிருந்து சென்னைக்கு ஷதாப்தி விரைவு ரயில் பயணத்தில் இரண்டு இளைஞர்களுடன் நடந்த உரையாடலின் பதிவுதான் இந்தக் கட்டுரை.
ஒரு இளைஞரின் பெயர் உதய். மற்றவனின் பெயர் வருண். முதலில் உதய் (உ) பேச்சுக் கொடுத்தான்.
உ : “சார், நீங்க அதிகம் செல்பேசியை பயன்படுத்துவதில்லையா?”
“எனக்கு அது ஒரு பேச்சு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் கருவி. அவ்வளவுதான்”
உ : ”தப்பா நெனனச்சுக்காதீங்க சார். நீங்க எதிர்காலத்துல, இப்படி டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல் போய்விட்டோமேன்னு வருத்தப்படுவீங்க”
“நம்ம கையில் என்ன இருக்குப்பா?” (எஸ்.வி.சேகர் நாடகம் போல, ஆகா, கட்டுரைத் தலைப்பு வந்துருச்சு என்று இத்தோடு படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்)
உ: ”அப்படி ஏன் விரக்தியா சொல்றீங்க? எப்போதும் இல்லாத அளவுக்கு இன்னிக்கி எல்லாம் நம் கையில் இருக்கு சார். இந்த செல்பேசி இல்லைன்னா எனக்கு எதுவுமே ஓடாது”
“உன்னோட செல்பேசி காதல் புரியுது உதய். கொஞ்சம் விவரமாச் சொல்லேன் ஏன் உனக்கு அது இல்லாவிட்டால் கையும் காலும் ஓடலைன்னு”
உ: ”பல உதாரணங்கள் சொல்லலாம் சார். நான் பேச்சுக்கு ஒரு பயன்பாட்டைப் பற்றிச் சொல்றேன். வேஸ் (waze) -ன்னு ஒரு பயன்பாடு இல்லாம நான் கார் ஓட்டறதே இல்லை சார். நேரத்திற்கு ஆபீஸ் மற்றும் மற்ற இடங்களுக்குப் போவதற்கு இது ஜி.பி.எஸ் உலகின் சூப்பர் ஸ்டார்”
”இன்னிக்கி பலவகையான ஜி.பி.எஸ். வசதிகள் எல்லா கார்லயும் வந்து விட்ட்தே. இதில் என்ன அப்படி விசேஷம்?”
உ : “நானும் முதல்ல அப்படித்தான் நெனச்சேன் சார். கொஞ்ச கொஞசமா இந்த App –ஐ பயன்படுத்தின பின் இதன் முழுத் திறனும் புரிய ஆரம்பிச்சுது”
“கொஞ்சம் அந்த முழுத் திறனை விரிவாகச் சொல்லேன்”
உ : ”எங்க போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்குன்னு உடனே இந்த App –க்கு தெரிஞ்சு, உங்களோட பயணத்தை மாற்றி அமைக்கிறது”
“கேட்க நல்லாத்தான் இருக்கு. அதுக்கு அப்படி ஒரு சக்தி எங்கிருந்து வருது?”
உ : “எல்லாம் என் போன்ற பயன்பாட்டாளர்கள் கிட்ட இருந்துதான்.முதல்ல நானும் இதை ஒரு மேஜிக் போலப் பார்த்தேன். என்னைப்போல, பல பயன்பாட்டாளர்கள் இந்த வேஸைப் பயன்படுத்துகிறார்கள். எங்காவது நெரிசல் ஏற்பட்டா உடனே இந்த App -ஐ அப்டேட் செய்துடுவோம். இந்த வேஸ் அந்த அப்டேட்டை வைத்துக் கொண்டு மற்ற பயன்பாட்டாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. அவர்களின் பாதையில் இந்த நெரிசலைத் தவிர்த்து விரைவில் அவர்களது இலக்கை அடைவதற்கு வழி காட்டுகிறது”
“ஆக, வேஸ் சொல்வதை நீங்கள் முழுவதும் நம்புகிறீர்கள். இல்லையா?”
உ : ”அதிலென்ன சந்தேகம்? இன்னிக்கி வேஸ் இல்லாம நான் பயணம் செய்யறதே இல்லை”
”ஆரம்பத்திலிருந்தே நீங்க வேஸை முழுசா நம்பினீங்களா?”
உ : ”ஆரம்பத்தில் அரை குறையாய் நம்பினேன். இப்போ, வேஸைப் பயன்படுத்தி, முழுசா நம்பறேன்”
“ஆரம்பத்தில், ஒரு சந்திப்பில் நீங்க இடது பக்கம் போகணும்னு நினைக்கிறீங்கனு வச்சிப்போம். வேஸ் உங்கள வலது பக்கம் போகச் சொல்லுதுன்னா என்ன செய்வீங்க?”
உ : “சந்தேகமாகத்தான் இருந்துது. ஆனால் வேஸ் சொல்படி போகாவிட்டாலும், அது, உங்களை நெரிசலிலிருந்து கப்பாற்ற மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும். கடைசியில ஒரு நாள், ’வேஸ் சொல்றபடி போய்தான் பார்ப்போமே’ –னு தோணிச்சு. அப்படி செஞ்சதுல, என்னுடைய ஏரியாவில இருக்கும் சில சக ஊழியர்களை விட முன்னமே ஆபீஸ் போய்ச் சேர்ந்தேன். அப்புறம் என்ன, எல்லாம் வேஸ் புகழ்தான்”
இந்த உரையாடலில் வருண் (வ) சேர்ந்து கொண்டான்.
வ: “சார், உதய் வெறும் வேஸின் புகழ் மட்டும் பாடுகிறான். நான் இதை எல்லாம் தாண்டி, கூகிள் அஸிஸ்டென்ட் செய்யும் சாகசங்களைச் சொன்னால், அசந்து போயிடுவீங்க”
”அப்படி கூகிளில் என்ன விசேஷம்னு நீயே சொல்லு வருண்”
வ: “போக்குவரத்து நெரிசலுக்கேற்ப வாகனங்களை சேர வேண்டிய இடத்திற்கு குறுகிய நேரத்திற்குள் அழைத்துச் செல்வது, மற்றும் ஜி.பி.எஸ். கூகிளின் ஒரு சின்ன அம்சம். முதலில் கூகிளை நம்ப நான், தயாராக இல்லை. அப்புறம், அது எவ்வளவு அபத்தம்னு புரிஞ்சுது”
“ஆக, கூகிளை நம்பாதது அபத்தம்னு சொல்றயா”
வ: ”பின்ன என்ன சார்? கூகிளிடம் நம்மைவிட ஏராளமான டேடா இருக்கு. அதை வச்சு அவங்க நமக்கு பயனான விஷயத்தைச் செய்யறாங்க”
”அப்படி என்ன செய்யறாங்க கூகிள்”
வ: “சில உதாரணங்கள் சொல்றேன் சார். என்னுடைய காருக்கு எண்ணெய் மாற்றுவது போன்ற விஷயத்தை கூகிள் சரியாக ஞாபகப் படுத்திவிடும்”
“டீலர் உங்க கார்ல ஸ்டிக்கர் ஒட்டறதில்லையா?”
வ: ”ஒட்டுவாங்க சார். ஆனால், காருக்குள் போனப்பறம் ஆயிரம் அவசரம். யாருக்கு ஸ்டிக்கர் பார்க்க நேரமிருக்கிறது? கூகிள் காலை எழுந்தவுடன், ’இன்று காருக்கு எண்ணெய் மாற்றிவிடு’ என்று ஞாபகப்படுத்துவதோடு நிற்பதில்லை. அதற்கு ஒரு வாரம் முன்பே டீலரிடம் முன்னேற்பாடு செய்து கொள்ளவும் நினைவூட்டுகிறது”
“வேற என்ன உதாரணம்?”
வ: “நான் வழக்கமா போற ஜிம், நகர மையத்தில் இருப்பதால், பார்க்கிங் கொஞ்சம் கஷ்டம். ஒரு முறை பார்க்கிங்கிற்காக சுற்றிச் சுற்றி வரும் பொழுது, கூகிள், முன்னம் நான் பார்க் பண்ணிய இடத்தை ஞாபகப்படுத்தியது. அப்பதான், ‘எதுக்கு இப்படி சுற்றிச் சுற்றி வரோம்னு’ ஆயிடிச்சு. இப்பெல்லாம் சுத்தறதே இல்லை. கூகிள் சொன்ன இடத்திற்குச் சென்றால், பார்க்கிங் எளிது”
“கூகிள் காரோட்டுதுனு கேள்விப் பட்டேன். பார்க் செய்யுதுனு இப்பத்தான் தெரியும்”
வ: ”கடந்த இரண்டு வருஷமா எவ்வளவு பிஸியாக இருந்தாலும், என்னோட மனைவியோட பிறந்த நாளன்று கொண்டாடுவதைத் தவறுவதில்லை”
“அதுக்கும் கூகிளுக்கும் என்ன சம்மந்தம்?”
வ: “கூகிள் என்னோட மனைவியின் பிறந்தநாள் வருவதற்கு ஒரு வாரம் முன்னிருந்தே, அவளுக்கு பரிசு வாங்க நினைவுபடுத்தும். அத்தோடு, பிறந்த நாளுக்கு முன் தினம் மீண்டும் நினைவுபடுத்தும். இதனால், நான் இந்த விஷயத்தில் இப்பல்லாம் தவறுவதே இல்லை”
”அப்ப, உங்க குடும்ப வாழ்க்கைக்கு கூகிள் ரொம்ப உதவுது இல்லையா?”
வ: ”குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம் இருக்கட்டும். இ.எம்.ஐ. கட்டுவது, ஜிம் மெம்பர்ஷிப் என்று எதையும் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எல்லாத்துக்கும், கூகிள் நினைவுபடுத்தும்”
“இது கேக்க நல்லாத்தான் இருக்கு. புத்திசாலி நாய்க்குட்டி போல”
வ: ”சமீபத்துல எங்க குடும்ப நண்பருடைய வீட்டில் கல்யாண ரிசப்ஷன். அதை ஞாபகப்படுத்துவது பழைய விஷயம் சார். ஆறு கடைகளில் கல்யாண ரிசப்ஷனுக்காக நான் கூகிளில் பரிசுகள் வாங்கப் பட்டியல் வைத்திருந்தேன். அந்த ஆறு கடைகளையும் நினைவுபடுத்தியதோடு நிற்காமல், எங்கு எத்தனை ரூபாய்க்கு பரிசு வாங்கினேன்னு ஒரு பட்டியல் காட்டியவுடன் நான் கூகிளிடம் சரணம். இப்ப நீங்க சொல்லுங்க. டெக்னாலஜியை மிஸ் பண்ணறீங்களா?”
”எனக்கு இன்னும் இந்த வசதிகள் தேவையாகப் படவில்லை. என்னை விடுங்க. நான் சில கேள்விகள் கேட்கிறேன். சாய், நீயும், வருணும் ஆரம்பத்தில் உங்கள் செல்ல App -ஐ நம்பவில்லைதானே?”
இருவரும் (இ): “அதைத்தான் நாங்க ஏற்கனவே சொல்லிட்டோமே. ஆரம்பத்தில் நம்பத்தான் இல்லை”
“பிறகு நம்பித்தான் பார்ப்போமே. இதிலென்ன பெரிய ரிஸ்க் இருக்கப் போகிறது? அப்படித்தானே அடுத்த படிக்கு போனீங்க?”
இ: ”முதல்ல , கொஞ்சம் நம்பிப் பார்த்தோம். வேஸ் மற்றும் கூகிள் நம்பிக்கைக்கு தகுந்தவாறு பயனளித்தது. நம்பிக்கை அதிகமாக, பயனும் அதிகமாகியது. அதோடு, முழுசா நம்பாத போது, நம் மீது கோபித்துக் கொள்வதில்லை. பொறுமையாக நம் வழியில் சென்று முடிந்த அளவு உதவுகிறது”
“என்ன ஒரு மனித நேயம். புல்லரிக்கிறதப்பா! சரி, முழுசா நம்பினதுக்கப்புறம், எப்படி இந்த Apps உங்களது நன்மைக்காகவே இயங்குகிறதுன்னு தெரியும்”
வ:”இதென்ன வினோதமான கேள்வி சார். கூகிள் என்ன நம் கார் ஸ்பீக்கரில், ‘உன்னை மெச்சினேன் பயனாளியே’ –ன்னு சொல்லணும்னு எத்ரிபார்க்கறீங்களா? நமக்கே புரியும் , கூகிள் எப்படி நம்முடைய டேட்டாவை வைத்து நமக்கு உதவுகிறதுன்னு.”
“ஒரு உதாரணம் சொன்றேன் உதய். உங்களது நாள்தோறும் போகிற பாதையில் ஏகமான நெரிசல்னு வைத்துக் கொள்வோம். வேஸ் வைத்திருக்கும் அனைவரையும் புதிய வழியில் அனுப்பினால், புதிய வழியில் நெரிசலாகிவிடும். சரி, பாதி வேஸ் பயன்பாட்டாளர்களை அங்கேயே இருக்கச் செய்து, மற்ற பாதி பயன்பாட்டாளர்களை புதிய வழியில் அனுப்பினால், இரு சாராரும் தங்களுடைய இலக்கை விரைவில் அடைய முடியும், இல்லையா? இதில் உங்களுக்குப் பழைய வழியா அல்லது புது வழியா என்று வேஸ் எப்படி முடிவு செய்கிறது? நீ மெச்சிய வேஸ் எப்படி உன்னை அழைத்துச் செல்லும்?”
உ: “புரியாம பேசறீங்க சார். ஒரு நாள் நெரிசலில், என்னைப் புது வழியில் போக வேஸ் சொல்லலாம். மற்றொரு நாள் அதே வழியில் போகச் சொல்லலாம். மாதக் கடைசியில், கூட்டிக் கழித்துப் பார்த்தால், வேஸ் உங்களுக்கு உதவியதைப் புரிஞ்சுக்கலாம்”
”வருண். உனக்கு இன்னொரு உதாரணம் சொல்றேன். நீ சொன்னாயே, ரிசப்ஷன் பரிசு வாங்க 6 கடைகளை கூகிள் பரிந்துரைத்தது என்று. இந்த ஆறு கடைகளில் எந்தக் கடைக்கு முதலிடம் தந்தது கூகிள்? நீ முதலில் வாங்கிய கடையா அல்லது வேறா?”
வ: ”நிச்சயமாக நான் முதலில் வாங்கிய கடை இல்லை. ஆனால், இப்பெல்லாம் டிவில கூட அதிகமாக விளம்பரம் வருதே, அந்தக் கடைதான் முதலில் வந்தது என்று நினைக்கிறேன்”
“இந்தக் கடை உங்கள் ஆறு கடைகளில் மிக அதிகமாக விளம்பர பட்ஜட் உள்ள கடைன்னு கவனிச்சயா?”
வ: “நான் அப்படியெல்லாம் யோசிக்கல. ஆனால், தேடிப் பார்த்த பிறகு, அந்த முதல் கடையில் வாங்கவில்லை. இரண்டாம் கடையில்தான் வாங்கினேன். இதிலென்ன தப்புன்னு நீங்க நினைக்கிறீங்க?”
“தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனால், உங்களது வாங்குதலில் (purchasing) கூகிள் சற்று தனது சந்தைப்படுத்தல் செல்வாக்கைப் (marketing influence) பயன்படுத்துகிறது. கூகிளின் வரிசைப்படுத்தல் எப்படி வேலை செய்கிறது? கூகிளிடம் அதிகமாக விளம்பரம் செய்யும் கடைப் பட்டியலின் முதலிடம் வகிக்கும். சற்றுக் குறைவாக விளம்பரம் செய்யும் கடை அடுத்தபடி என்று இந்தப் பட்டியலை கூகிள் கணினிகள் மின்னல் வேகத்தில் தயார் செய்து உங்களிடம் காட்டுகிறது. அதில் நீங்கள் கிளிக் செய்தால், கூகிளுக்கு வருமானம்”
வ: “நான் தேடிப் பார்த்து, முதல் கடையில் வாங்கவில்லையே. இதில் நம்முடைய வாங்கும் சுதந்திரம் எங்கே குறைஞ்சது? நீங்க ஓவரா சிந்திக்கறீங்கன்னு தோணுது”
“இரண்டாவது மற்றும் முதலாவது கடையில் நீ கிளிக் செய்ததில் கூகிளுக்கு வருமானம். முதல் கடைக்கு இல்லை. வருணிற்கு பதில் பரத் முதல் கடையின் சுட்டியில் கிளிக் செய்து வாங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். கடைசியில், கூகிளும் பயனடைகிறது, அதன் மூலன் விளம்பரம் அளிக்கும் கடைகளும் பயனடைகிறது”
வ: “எனக்கு கூகிள் செய்யும் சேவை பிடித்திருக்கிறது. இல்லையேல், இந்தப் பெரிய நகரத்தில், எது எங்கே அவசரத்திற்குக் கிடைக்கிறது என்று தெரியவே வாய்ப்பில்லை. என் அளவில் இந்த டேடாவை வைத்துக் கொண்டு நமக்கு பயனான விஷயத்தை தானே கூகிள் செய்கிறது”
”உதய், உன்னுடைய வேஸ் எப்படி உன்னை தகுந்த நேரத்திற்கு உன் இலக்கிறகுக் கூட்டிச் செல்லுகிறது என்பதைப் பற்றி அதிகம் கவலையில்லை. மாதக் கடைசியில் உன் நன்மைக்காக அது இயங்குகிறது என்று சொன்னாய். வருண், கூகிளைப் பற்றிச் சொல்லுகையில், அதன் சிபாரிசுப் பட்டியல் எப்படித் தயாராகிறது என்பதைப் பற்றி நீ அதிகம் கவலைப் படவில்லை. உன்னுடைய நுகர்வில் (consumption) கூகிள் அதிகம் தனது விளம்பரச் செல்வாக்கைப் பயன்பத்துவதாக நீ நினக்கவில்லை”
இ: “இப்ப என்ன சொல்ல வர்ரீங்க நீங்க?”
”இந்த உரையாடலின் ஆரம்பத்தில், எல்லாம் நம் கையில் இருப்பதாக இருவரும் சொன்னீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள், உங்க கையில் என்ன இருக்கு?”
***