திங்கட்கிழமை காலை. மருத்துவ மையம்.
தன் அலுவலக அறைக்குள் அவசரம் அவசரமாக நுழைந்ததுமே அங்கே ஒரு முக்கியமான வித்தியாசம் என்ற உணர்வு. அதை அவளுக்குக் கொடுத்த மாற்றம் என்னவாக இருக்கும்? சந்திரா சுற்றிலும் பார்வையை ஒருமுறை வேகமாக ஓட்டினாள். ஒருவர் தரையில் கால்நீட்டிப் படுக்கமுடியாதபடி சிறிய அறை. சுவர் முழுக்க மனித உடலை வெட்டிக்கூறுபோட்ட பகுதிகளின் படங்கள். ஒரு பக்கத்தை ஆக்கிரமித்த மேஜை, ஒரு சுழல்நாற்காலி, இரண்டு சாதா நாற்காலிகள், மருத்துவப்பொருட்கள் வைத்த திறந்த அலமாரி. எல்லாம் அந்தந்த இடங்களில். இன்னொரு முறை நிதானமாகக் கவனித்து இருந்தால் வித்தியாசம் கண்ணில் பட்டிருக்கும். அதற்குமுன் பணிப்பெண் நடைவழியில் இருந்து, “பீட்டர் ஹியர்” என்று அழைக்கவே அவளைத் தொடர்ந்து நடந்தாள்.
அறையை ஒட்டிய கூடம். கூடத்தில் பத்துப்பன்னிரண்டு கட்டில்கள். அந்தரங்கத்தை உண்டாக்கும் திரைகள். நுழைந்ததும் வலப்பக்க சோதனைப்பகுதியில் பீட்டர், அவன் தோழி ட்ரிக்ஸி.
சந்திரா மருத்துவர் முகத்தை அணிந்துகொள்ளுமுன்…
“உன் நீண்ட ஆடை மிக அழகு, டாக்டர் சன்ட்ரா!” என்றாள் ட்ரிக்ஸி.
வெள்ளை அங்கியையும் தாண்டி சந்திராவின் புடவையை அவள் கவனித்திருக்கிறாள்.
“தாங்க்ஸ், ட்ரிக்ஸி! மற்ற என் ஆடைகள் எல்லாம் அழுக்கு. நேற்று துணிதுவைக்க நேரமே இல்லை.”
சந்திரா மற்றும் அந்த மையத்தின் நிர்வாத்தினர்களுக்கும், அவள் தினம் பார்க்கும் நோயாளிகளுக்கும் இடையில் பொருளாதாரப் பள்ளத்தாக்கு. அது அவர்கள் உடைகளிலேயே வெளிப்பட்டது. சந்திராவிடம் இருபது குட்டை முழுநீளப் பாவாடைகள், பற்பல நிறங்களில். அரைக்கை, முழுக்கை, கையில்லாதவை என சட்டைகள் இன்னும் அதிக எண்ணிக்கையில். ட்ரிக்ஸிக்கும் பீட்டருக்கும் நீலத்தை வெள்ளை வென்றுவிட்ட, ஒட்டுப்போட்ட ஜீன்ஸ். டென்னஸி டைட்டன்ஸ், அட்லான்ட்டா ப்ரேவ்ஸ் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கொடிகட்டிப்பறந்து பிறகு கடனில் மூழ்கிப்போன விளையாட்டு அணிகளின் சட்டைகள்.
சந்திரா கையுறைகளை அணிந்தாள். ஒரு காலத்தில் ஒரு நோயாளியை சோதித்ததும் குப்பையில் எறியவேண்டும் என்கிற நியதி. இரண்டு நாளைக்குள் ஒரு பெட்டி காலியாகிவிடும். பெட்ரோலியம் அருகிவிட்டதால், இரத்தக்கறை படிந்தாலோ, விரல்பக்கம் கிழிந்தாலோ மட்டுமே கையுறையை மாற்ற வேண்டும் என்பது புதிய விதி.
பீட்டருக்கு வலது உள்ளங்கையில் கட்டு. அதனால் திரையை விரிக்காமல் சோதித்தாள். மேல்புறத்தை பல இடங்களில் அழுத்தினாள்.
“வலிக்கிறதா?”
“இல்லையே.”
“கட்டைப்பிரிக்கலாம்.”
பணிப்பெண் கனமான கத்திரிக்கோலால்… கிர்… கிர்… கிர்…
நான்கு வாரங்களுக்குமுன் பீட்டரின் முன்கையை பனிக்கட்டியில் சுற்றி ட்ரிக்ஸி அவனை அழைத்துவந்தாள். சந்திரா அவன் விரல்களை மடித்து நீட்டி மணிக்கட்டை வளைத்து நிமிர்த்தினாள். அவன் வலியில் முகம்சுளித்தான்.
“ஐ’ம் சாரி, உன் நன்மைக்காக.”
அவள் எதிர்பார்த்ததுபோல நடுவிரல்களை முன்கையுடன் இணைத்த மூன்று எலும்புகள் இரண்டாக உடைந்திருந்ததை எக்ஸ்-ரே தெரிவித்தது.
“எப்படி நடந்தது?”
இதுபோன்ற நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்போது, ‘விபத்தில் நடந்ததா? அப்படியென்றால் யாருடைய தவறு?’ என்று மொய்க்கும் வக்கீலின் ஆட்கள் தற்போது இல்லை. அடிபட்டவர்கள் சார்பில் வழக்குத்தொடுத்து மில்லியன் கணக்கில் பணம் கறந்து அதில் கணிசமான பகுதியை வாயில் போட்டுக்கொள்ளும் வாய்ப்பு எப்போதோ போய்விட்டது.
“ஜன்னல் வழியாக ஏறிக்குதித்தபோது சட்டத்தில் கால்தடுக்கி நான் கீழே விழ, இடதுகையில் பிடித்திருந்த கனமான பொருள் நழுவி என் வலதுகைமேல் விழ…”
எந்த ஜன்னல், என்ன கனமான பொருள் என்பதெல்லாம் சந்திராவின் கற்பனைக்கு.
பத்து ஆல்டர்னேட்டர் வேணும்.
நோ ப்ராப்ளம்.
எவ்வளவு?
ஆயிரம் டாலர்.
பத்துக்குமா?
நல்ல ஜோக். சிரிப்புதான் வரவில்லை. ஒவ்வொன்றுக்கும்.
சரியான பகல் கொள்ளை.
நான் எவ்வளவு சிரமப்பட்டு தள்ளிக்கொண்டு வரணும் என்று உனக்குத் தெரியாது. காவலாளிகள் கண்ணில்பட்டால் ஒரு குண்டு. கேட்பார் கிடையாது.
சொல்லிக்கொடு!
பத்து வாங்குவதால் ஐயாயிரம். உனக்கு இவ்வளவு மலிவாகக்கொடுப்பது என் கூட்டாளிகளுக்குத் தெரிந்தால் என்னை உண்டுஇல்லை என ஆக்கிவிடுவார்கள்.
எப்போது கிடைக்கும்?
நாளை இதே நேரத்தில், இங்கே…
பல ஆண்டுகளுக்குமுன் பெட்ரோலியம் ஆறாக ஓடியபோது ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கப்பட்ட ஊர்தித்தொழிற்சாலை. பொருளாதார மந்தத்தில் தயாரிப்பு சிலகாலம் நின்று மறுபடித் தொடங்கி, பிறகு போக்குவரத்துக்கு கார்கள் பெரும்பாலும் பயனற்றுப்போனதும் முழுக்க கைவிடப்பட்டது. தொழிற்சாலையின் பாகங்களையும் ஊர்திகளின் பகுதிப்பொருட்களையும் கடத்திவந்து விற்பதற்கு ஒரு கும்பல்.
கட்டை எடுத்ததும் சுருங்கிய வெளிறிய தோல். சந்திரா புறங்கையை அழுத்தி விரல்களை மடக்கி நீட்டினாள். பீட்டர் முகத்தில் மாறுதல் இல்லை. கையுறைகளை ஜாக்கிரதையாகக் கழற்றி கோட்டின் பையில் திணித்துக்கொண்டாள்.
“முறைப்படி குணமாகி வருகிறது.”
“தாங்க்ஸ், டாக்!”
“ட்ரிக்ஸி! நான் செய்ததுபோல பீட்டரின் விரல்களுக்கு நீ பயிற்சி தரவேண்டும். தினம் இரண்டு முறை.”
“யெஸ், டாக்!”
“உள்ளங்கைக்கு மட்டும் ஒரு சின்ன காப்பு உறை நர்ஸ் கொடுப்பாள். குளிக்கும்போது அதை எடுத்துவிடலாம். மற்ற நேரங்களில் பாதுகாப்பாக அணிவது நல்லது.”
“மறுபடி ஒரு தாங்க்ஸ்.”
“நோ மோர் தாங்க்ஸ். சரியா?” என்று சந்திரா நோயை விரட்டும் புன்னகையைக் கொடுத்தாள்.
“இன்னொரு தாங்க்ஸ் சொல்லப்போகிறேன்.”
“நானும் தான்” என்றாள் ட்ரிக்ஸி.
“எதற்கு?”
சுற்றிலும் தயக்கத்துடன் பார்த்துவிட்டு, தழைந்த குரலில்…
“தாராவுக்கும் தாமஸுக்கும் கொடுத்த மாதிரி எங்களுக்கும் நீ…”
மருத்துவருக்கு உரிய உணர்ச்சியற்ற குரலில், “ஓ! ஷுர்! இங்கே உங்கள் வேலை முடிந்ததும் அடுத்த அறையில்…” என்றாள்.
அந்த அறைக்குள் மறுபடி நுழைந்ததும் அவள் கண்ணில் உடனே பட்டது. சுவரின் உயரத்தில் மனித இனத்தொடர்ச்சி விவரம் இருந்த இடத்தில், புனித தெரஸாவின் படம். செயின்ட் தெரஸா மெமோரியல் ஹாஸ்பிடல் என்ற பெயருக்கு ஏற்றபடி, ஒன்றிரண்டு அறைகளைத்தவிர, அந்த மருந்தகத்தின் மற்ற எல்லா இடங்களையும் அது அலங்கரிக்கும் – ஒரு காரணத்துக்காக.
அந்தக் காரணம் அந்த அறைக்குள்ளும் இப்போது புகுத்தப்பட்டு விட்டது. ஆக்கிரமிப்பு அவள் எதிர்பார்த்தது தான்.
ட்ரிக்ஸியும் பீட்டரும் கேட்டதை அப்படத்தின் முன்னிலையில் இனி அவள் தருவது நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு விரோதமானது. கட்டடத்துக்கு வெளியே அழைத்துப்போய் கொடுத்தால் பிரச்சினை இராது என்ற நம்பிக்கை.
மேஜையின் உயரமான இழுப்பறையை கொத்தில் இருந்த ஒரு சாவியால் திறந்தாள். பத்து அடங்கிய ஒரு பெட்டி மட்டுமே. ஒரு மாதத்துக்கு முன்னால் ஐம்பது பெட்டிகளுக்கான ஆர்டர் கொடுத்தது நினைவுக்கு வர, நிர்வாக அலுவலகம் நோக்கி நடந்தாள்.
பயிற்சி முடித்து முழு டாக்டராக சந்திரா சேர்ந்தபோது அது மாவட்ட மருத்துவ மையம். ஊர்திகளின் பாகங்களை இணைக்கும் தொழிலாளர்களும் அவர்கள் குடும்பங்களும் கொடுத்த ஆதரவு அதன் சுவாசம். முக்கியமாக, இளம் தம்பதிகளின் எதிர்கால நம்பிக்கை மகப்பேறுப் பிரிவை மையத்தின் பாதியாக வளர்த்தது. தொழிற்சாலையின் ஆரோக்கியம் குறையக்குறைய மையத்தின் நிதிநிலைமையும் நோய்வாய்ப்பட்டது. கத்தோலிக்க க்ரௌன் நிறுவனம் மருந்தகத்தை மலிவாக வாங்கி புதிய பெயரில் நடத்தத்துவங்கியது.
புனித தெரஸா மருத்துவசாலையாக மாறியபிறகு, பிஷப் சர்க்கின் ஏற்கனவே பணிபுரிந்த ஒவ்வொரு மருத்துவருடனும் சந்தித்துப் பேசினார். சந்திரா குணப்படுத்திய நோயாளிகளின் பட்டியலை பார்வையிட்டார். மகா அதிருப்தி அவர் முகத்தில்.
“செயற்கை கருத்தடை சாதனங்கள் பற்றிய உன் எண்ணம்…”
‘கேட்பவருக்கு எல்லாம் வழங்குது என் கொள்கை, நோக்கம், திட்டம், விருப்பம்’ என்றால் ஆபத்து. அதனால்…
“பெற்றோர் ஆவதற்குப் பொறுப்பு வராத இளையவர்கள், சக்திக்குமீறி குழந்தைகள் பெற விருப்பம் இல்லாத தம்பதிகள் ஆகியோருக்குக் கொடுப்பதில் தவறு இல்லை என நினைக்கிறேன்.”
அந்த பதில் கூட அவருக்கு அதிர்ச்சி. அதை மறைக்கவில்லை.
“உடலுறவின்போது சிலமாதங்களில் குழந்தை வரலாம் என்கிற உறுத்தல், அச்சம், குற்றஉணர்வு பெண்களுக்கு எப்போதும் மனதின் மேல்மட்டத்தில் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் நிம்மதியாக அதை அனுபவிப்பது மகாபாவம். அதற்கு நாம் உடந்தையாக இருக்கக்கூடாது.”
‘கர்ப்பத்தின் சுமையையும் பிரசவத்தின் வலியையும் ஏற்கும் பெண் தான் உடலுறவின் அகலத்தையும் ஆழத்தையும் முழுமனதுடன் அனுபவிக்க வேண்டும். அப்போது அவள் மனதைச் சிதறவிடுவதில் நமக்கு என்ன லாபம்?’
நல்லவேளை! வார்த்தைகள் மனதிலேயே தங்கின.
“சந்தோஷத்தில் கடவுளை மறந்துவிடுகிறோம். உடல்வேதனை தான் கடவுளை உணரவைக்கும் பாதை…”
‘மனித உடல்களுக்குள் இயற்கை பின்னித்தைத்திருக்கும் இன்ப வேட்கை எப்படி தணிக்கப்படுகிறது என்பதை மேற்பார்வை பார்ப்பது தான் கடவுளின் தினசரி வேலையா?’
இன்னொரு மௌனம்.
சந்திரா சுதந்திரமாகக் காரியம் செய்கிறவள் என்பதை ஊகித்து, விட்டுக்கொடுக்கும் குரலில்…
“எந்தவிதமான கருத்தடை சாதனம் கொடுத்தாலும் அது உன் சொந்த செலவில், க்ரௌன் நிறுவனத்தின் கணக்கில் அது வராது. உன் அலுவலக அறையில் மட்டுமே அதைச்செய்யலாம். ஞாபகம் இருக்கட்டும்!”
யாரோ இருவர் பாவகாரியத்தை அனுபவிப்பதற்கு தன் கைவிட்டு செலவழிக்க அவளுக்கு மனம் வராது என்கிற உயரிய உன்னத நம்பிக்கை அவருக்கு.
கட்டுப்பாடுகளுக்கு நடுவில் அங்கே பணிசெய்வதா வேண்டாமா என சந்திரா யோசித்தாள். மருத்துவர்களுக்கு வாய்ப்புகள் பெரிதும் குறைந்துவிட்டாலும் நாஷ்வில் நகரத்துக்குள் நிச்சயம் வேலை கிடைக்கும். சரவணப்ரியாவை ஆலோசனை கேட்டாள்.
“அது உன் கேரக்டரைப் பொறுத்தது.”
“அதற்கு என்ன அர்த்தம்? ஆன்ட்டி!”
“ஏற்கனவே தொடங்கிவிட்ட பொருளாதார இறக்கம் நெருக்கடியாக மாறும்போது முதலில் பாதிக்கப்படுவது சிற்றூர் மக்கள். அன்றன்று நிலைமையை சமாளிப்பதே அவர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. செயின்ட் தெரஸா ஹாஸ்பிடலில் நீ தொடர்ந்தால், அப்படிப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் கிடைக்கும் மனதிருப்தி. இல்லையென்றால் பணக்கார வயோதிகர்களுக்கு அவசியம் இல்லாத…”
“இரண்டாவது பாதை எனக்கு வேண்டாம். இதுவரை மகிழ்ச்சியும் வளமும் நிறைந்தது என் வாழ்க்கை. பொருளாதார அகதிகளுக்கு உதவி செய்வது அதன் நன்றிக்கடனாக இருக்கட்டும்!”
“நீ இப்படிச் சொல்வாய் என்று தான் நானும் எதிர்பார்த்தேன்.”
சரவணப்ரியா கணக்கிட்டபடி மருத்துமனையைச் சுற்றி வாழ்ந்தவர்களின் நிதிநிலமை வேகமாகத் தாழ்ந்துபோனது. தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இருபதில் இருந்து முப்பத்தைந்து வரையிலான இளைஞர்களை சந்திரா நன்றாக அறிவாள். கல்லூரிக்குப் போனது இல்லை. நிரந்தர வேலை என்று ஒன்றும் கிடையாது. நின்றுபோன தொழிற்சாலையில் இருந்து சாமான்களை பெயர்த்துவந்து விற்பது, பண்ணைகளில் களை பிடுங்குதல் அறுவடை காலத்தில் உதவி, சொந்தவீடு வைத்திருக்கும் ஒருசில அதிருஷ்டசாலிகள் வீடுமாற்றினால் சாமான்களைச் சுமப்பது, சுவர்களுக்கு வர்ணம் பூசுவது. இந்நிலையில், இன்னொரு உயிரைக் கொண்டுவர எப்படி ஆசை இருக்கும்?
எதிர்காலம் நிகழ்காலத்தைவிட இன்னும் மோசம் ஆனாலும் ஆகலாம் என்ற நிலையில், மனமகிழ்வு என்று சொல்ல அவர்களுக்கு அது ஒன்றுதான். அதற்குத் தன்செலவில் வழிசெய்வதை வாழ்க்கையின் கடமையாக சந்திரா மேற்கொண்டாள். அவள் சேவை வாய் வார்த்தைகளால் பரவியது.
ஆண் பெண் இருவராகச் சேர்ந்துவந்து அவளிடம் உதவி கேட்க வேண்டும் என்பது நியதி. ஒன்று, அது மலிவான பொருள் இல்லை. இரண்டு, கர்ப்பத்தைத் தொடாமல் உடலுறவு அனுபவிப்பதை இருவர் மனமொப்பிச் செய்ய வேண்டும்.
அதற்காக அவர்களுக்குக் குழந்தைப்பாசம் இல்லை என்றும் சொல்லமுடியாது.
சில மாதங்களுக்கு முன்னால். ஒருநாள் வேலைமுடிந்து பழைய நிஸான் காரை நோக்கி சந்திரா நடந்தபோது, அவள் அருகில் வேகமாக சைக்கிளில் இருந்து இறங்கிய தாரா.
“டாக்! டாக்! எங்களுடன் வசிக்கும் எட்டுவயதுப் பெண்ணுக்கு நல்ல ஜுரம். எங்களிடம் ஆஸ்ப்ரின் தீர்ந்துவிட்டது. பத்து மாத்திரை கொடுக்கமுடியுமா?”
ஜுரம் உடல்நல பாதிப்பின் அடையாளம். அதனால்…
“எதற்கும் அவளை சோதிப்பது நல்லது. இங்கே அழைத்துவர முடியுமா?”
“எங்கள் எல்லாரிடமும் சைக்கிள் தான்…”
சந்திரா மருத்துவம் படித்தபோதே வீட்டுக்குவந்து டாக்டர் நோயாளியைப் பார்ப்பது அரிஸோனாவின் மழைபோல் ஆகிவிட்டது. அந்தப்பழக்கத்தைப் புதுப்பிக்க வேண்டிய நேரம்.
“அவளை நானே வந்து பார்க்கிறேன்.”
தாரா சைக்கிளில் போக சந்திரா அவளைக் காரில் பின்தொடர்ந்தாள்.
பாழடைந்த வீடுகள், காலியான சிறப்பங்காடிகள். கடைசியில்… தாரா சைக்கிளில் இருந்து இறங்கி அங்கே ஏற்கனவே நிறுத்தியிருந்த பதினைந்து இருபது வாகனங்களுடன் அதைச் சேர்த்தாள். தெருவோரத்தில் காரை நிறுத்தி சந்திரா இறங்கினாள்.
அந்த நான்குமாடிக் கட்டடத்தைப் பார்த்ததுமே முன்பு எப்போதோ அதன் மேல்தளத்தில் ஒருசில நாட்கள் தங்கியது சந்திராவின் நினைவுக்கு வந்தது. இரண்டாம் உலகப்போருக்குமுன் ஒரு செல்வச்சீமானின் மாளிகை. சிற்சில மாற்றங்களுக்குப்பிறகு, ‘அமான்டா’ஸ் பெட் அன்ட் ப்ரேக்ஃபாஸ்ட்’ என்ற சிறிய சுமுக விடுதியாக அரை நூற்றாண்டு. தற்போது தாரா போன்றவர்களின் கூட்டு வசிப்பிடம்.
நுழைவிடத்துக் கூடத்தை வீணாக்காமல் அங்கேயும் படுக்கைகள். மூலையில் இருந்த கட்டிலில் கிடந்த பெண். அவளை அனுதாபத்துடன் பார்த்து அமர்ந்திருந்த ஐந்தாறு இளைஞர்கள் எழுந்து தள்ளிநின்றார்கள்.
சந்திரா கட்டிலை ஒட்டி நின்றாள். பெண்ணுக்கு ஆறேழு வயதுதான் சொல்லலாம். நீண்ட கறுப்புத் தலைமயிர் எண்ணெய்ப்பசை இல்லாமல் பரந்துகிடந்தது. ஜுரத்தில் மங்கிய களையான இளம்பழுப்பு முகம்.
சந்திராவின் தோற்றத்தில் இருந்து மருத்துவர் என்பதை உணர்ந்த பெண் நம்பிக்கையோடு புன்னகைத்தாள்.
“உன் பெயர்…”
“லூசியானா.”
“லூசியானா! என் பெயர் சந்திரா. நம் இருவரின் பெயர்களுக்குமே நிலவு என்று அர்த்தம். என்ன பொருத்தம்!”
லூசியானாவுக்கு அது வேடிக்கையாகப் பட்டது. கலகலவென அவள் சிரிக்க சந்திராவும் சேர்ந்துகொண்டாள்.
அவள் மேல் அமான்டா’ஸ் பெட் அன்ட் ப்ரேக்ஃபாஸ்ட் பெயரிட்ட போர்வை. அதற்கு சந்திராவின் வயது இருக்கும். போர்வையை விலக்கி அவளை சோதித்தாள். தாரா சொன்னதுபோல நல்ல ஜுரம். மற்றபடி இதயத்துடிப்பில், நாக்கின் நிறத்தில் மாறுதல் தெரியவில்லை. கூடத்தைச் சுற்றிலும் பார்வையைப் பரவவிட்டாள். கிழிந்த கம்பளம், விரிசலான தரை இரண்டும் சுத்தமாகவே இருந்தன. ஓரத்தில் அமான்டா ஒருகாலத்தில் ஆட்சி செலுத்திய உயர்மேஜை. சந்திராவும் அவள் கணவனும் அங்கே தங்குவதைப்பற்றி விசாரித்தபோது, ‘உச்சித்தளத்தில் மட்டுமே தனிப்பட்ட குளியலறை, கீழ்த்தளங்களில் நாலந்து அறைகளுக்குப் பொதுவாக ஒன்று’ என்று அமான்டா சொன்னது ஞாபகம்வர… லூசியானாவின் காதருகில் குனிந்து,
“சிறுநீர் போக்கும்போது வலிக்கிறதா?”
பெண் உடன்பாடாக தலையசைத்தாள்.
“அடிக்கடி?”
இன்னும் வேகமாக அசைத்தாள்.
நல்லவேளை, சீரியஸான குறைபாடு இல்லை.
சந்திரா எழுந்து நின்றிருந்த இளைஞர்களிடம் வந்தாள்.
“இவள் யாருடைய குழந்தை?”
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“இவளுடைய அம்மா இல்லை, அப்பா யார்?”
பொறுப்பானவர் அனுமதி இல்லாமல் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்து தருவதில் சந்திராவுக்குத் தயக்கம்.
தாரா தான் பதில் சொன்னாள். “நிச்சயமாகத் தெரியாது.”
அப்படியென்றால் அங்கே இருப்பவர்கள் எல்லாம் அவளுக்கு யார்?
“பஸ் நிலையத்தின் உணவு விடுதியில் எனக்கு வேலை. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நாள் மாலை. கடையை மூடுவதற்குத் தயார்செய்தபோது ஒரு சின்னப்பெண் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்ததைக் கவனித்தேன். அவளும் அவள் தாயும் சான்ட்விச், வறுவல், சாலட், இனிப்பு என நிறைய சாப்பிட்டது ஞாபகம் வந்தது. தன் அம்மா பஸ் ஏறிப்போய்விட்டாள், அப்புறமாக வருவாள் என்று அவள் சொன்னாள். அம்மா திரும்பி வரும்வரை எங்களுடன் இருக்கட்டும் என இங்கே அழைத்துவந்தேன். அவள் வரவில்லை. லூசியானா யார் வீட்டில் என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிடுவாள். கார்ஸியா குடும்பத்தின் இரண்டு குழந்தைகளையும் அவர்கள் வேலைக்குப் போகும் நேரத்தில் கவனித்துக்கொள்வாள்.”
சந்திராவுக்கு பூனை ஹீலி நினைவுக்கு வந்தது. அவள் மருத்துவ மாணவியாக இருந்தபோது ஒரு ஆண்டு ஏழெட்டு பேருடன் ஒரு பெரியவீட்டில் தங்கியிருந்தாள். யாருடையது என்று தெரியாத ஒரு பூனை. ஒருவர் காலி செய்து அந்த இடத்துக்கு இன்னொருவர் வந்தால் ஹீலி அவர்கள் மடியில் அமர்ந்து சொந்தம் கொண்டாடும். உறவும் நட்பும் உயிரின் அடையாளம்.
“நீ எப்படி சிகிச்சை செய்தாலும் நாங்கள் யாரும் சண்டைக்கு வரமாட்டோம். கொடுக்க பணம் தான் எங்களிடம் கிடையாது.”
“அவசியமே இல்லை. இப்போது நானும் லூசியானாவின் நீண்ட குடும்பத்தில் ஒருத்தி.”
லூசியானா அருகில் சென்று அவள் கையைத் தடவிக்கொடுத்து பை சொன்னாள். அவள் எழுந்திருக்க முயற்சித்தாள்.
“நாளைக்கு நீ எழுந்து நடமாடலாம். இன்று படுத்துக்கொள்!”
“தாங்க்ஸ், டாக்டர்!” என்றாள் ராகத்துடன்.
சந்திரா தாராவை மருந்தகத்துக்கு அழைத்துவந்து ஒரு புட்டி ஆன்ட்டை-பயாடிக் கொடுத்தாள்.
“இதை ஒரு நாளைக்கு மூன்று வேளை, ஐந்து நாள் தர வேண்டும்.”
தாராவின் வசிப்பிடத்திற்கு திரும்பிவரும் வழியில் ஒரு பல்பொருள் அங்காடி. அங்கே சந்திரா சிறுபெண்ணுக்கான பருத்தியில் செய்த உள்ளாடை ஆறு வாங்கி ஒரு பையில்வைத்து அதையும் தாராவிடம் கொடுத்தாள். அவளை இறக்கிவிடுமுன்…
“இன்னொரு விஷயம். பலர் புழங்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது சிரமம் தான். இருந்தாலும் முறைபோட்டுக்கொண்டு குளியலறையை சுத்தம்செய்வது நல்லது.”
மருத்துவமையத்தின் நிர்வாகப்பகுதி. ஆழமான கம்பளம், பிரகாசமான விளக்குகள், அலங்கார மரச்சட்டங்கள் என காலாவதியான செல்வச்செழிப்பைக் காட்டியது. அங்கே பணிசெய்கிறவர்கள் மேற்கத்திய நாகரிகமும் அதன் அடிப்படையான பொருளாதாரமும் உச்சத்தைத்தாண்டிவிட்டன என்பதை உணராதவர்கள்.
மருந்தகத்தில் பயன்படுத்தும் பிரத்தியேகமான பொருள்களை வாங்கவும், அவற்றுக்குக் கணக்கு வைக்கவும் இந்தியாவில் இருந்து அதற்கென்றே இறக்குமதி செய்யப்பட்ட நிர்மலா. அவளுக்கு சந்திராவின் நோயாளிகள் மட்டும் அல்ல அவளும் கூட அலட்சியம். ஒழுக்கம்கெட்ட பாவிகள், ஹீத்தன்கள்.
மருந்தகத்தின் வழியாக வாங்கினால் இருபது சதம் தள்ளுபடி என்பதால் நிர்மலாவின் அலட்சியத்தை சந்திரா சட்டை செய்யாமல் அவள் மேஜைக்குச் சென்று நின்றாள். மற்றவள் வேலையில் சிலநிமிடங்கள் கவனம்செலுத்துவதுபோல் பாசாங்கு காட்டிவிட்டு…
“என்ன வேண்டும்? டாக்டர் ஏப்ரஹாம்!”
“சென்ற மாதம்…”
“சென்ற மாதம்?”
“நான் சொந்தக்கணக்கில் கொடுத்த ஆர்டர்…”
அதன் விவரம் அவளுக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே தெரியாத முகத்தை மாட்டிக்கொண்டு,
“எது?”
“ட்ரோஜன்… ஐம்பது பெட்டிகள்…”
“ஓ! அதுவா? பார்க்கிறேன்.”
உள்ளறைக்குப் போனாள். பெட்டிகளை எடுத்துத்தருமுன் அவை சுட்டுவிடுமோ என அவள் கையுறை அணிவது வழக்கம். அன்று அப்படிச்செய்யவில்லை. திரும்பிவந்து கோப்புகளில் தேடினாள்.
கடைசியில் ஒரு கடிதத்தைப் பிரித்துப்படித்துவிட்டு…
“வருத்தத்துடன் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தாள். உண்மையில் அவள் குரலில் துளியும் வருத்தம் கலவாத மகிழ்ச்சிப்பரவசம். ‘சனியன்கள் அதை அனுபவிக்காமல் கொஞ்சகாலம் அவதிப்படட்டும்!’
“பாலியுரெதேன் மருத்துவக் குழாய்களை உருவாக்கத் திருப்பிவிடப்பட்டதால் ஆணுறைகளின் தயாரிப்பு சிலகாலம் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.”
அதில் அதிக லாபம் கிடைத்திருக்கும்.
“மறுபடி தொடங்க எவ்வளவு நாள் ஆகும்?”
“எனக்கு என்ன தெரியும்? ஒரு மாதம் ஆகலாம், ஆறு மாதங்களும் ஆகலாம்.”
பின்னது என்றால் இன்னும் திருப்தி என்பது அவள் உச்சரிப்பில் வெளிப்பட்டது.
“தாங்க்ஸ்.”
“நோ மென்ஷன்.”
சந்திரா வெளியே வந்தாள். ஒருகணம் நின்றாள். விரக்தியில் செயலிழக்கும் காலம் இல்லை. கையில் இருப்பதை வைத்து பயன்படுத்தும் வித்தையின் காலம்.
அடுத்ததே சாமான்கள் அறை. அதை நிர்வகிக்கும் சோன்யா நிர்மலாவுக்கு நேர்எதிர். எந்த விதத்திலாவது உதவமுடியும் என்றால் கட்டாயம் செய்வாள். முந்தைய வாரம் சந்திரா கையுறைகளுக்காகப் போனபோது, “பெண்களுக்கு சிறியது இல்லை நடுவளவு, ஆண்கள் என்றால் பெரியது. மிகப்பெரிய அளவு டாக்டர் வோகல் ஒருவருக்கு மட்டும் தான். மாதத்துக்கு இரண்டு பெட்டி இருந்தால் போதும், பத்து அனுப்பிவிடுகிறார்கள். வைத்துக்கொண்டு என்ன செய்வது?” என்று முறையிட்டது நினைவுக்கு வந்தது.
ஆகா!
“சோன்யா! நைட்ரைல் கையுறைகள் மிகப்பெரிய அளவு வேண்டும்.”
“எத்தனை?”
“எவ்வளவு தரமுடியும்?”
“எவ்வளவு வேண்டுமானாலும். இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கிறது.”
“பத்து பெட்டிகள்.”
“தாராளமாக எடுத்துக்கொள்!”
ஆளுக்கு ஐந்து பெட்டிகளாக சந்திராவும் சோன்யாவும் முன்னவளின் சிற்றறைக்கு எடுத்துவந்தார்கள். அங்கே பீட்டரும் ட்ரிக்ஸியும் ஆவல்ததும்பும் முகத்துடன். எடுத்துவந்த பெட்டிகளை சந்திரா அலமாரியில் அடுக்கினாள்.
“தாங்க்ஸ், சோன்யா!”
“நோ ப்ராப்ளம், சன்ட்ரா!”
அவள் அகன்றதும் சந்திரா வியாபாரக்குரலில்…
“ஐ’ம் சாரி! என்னிடம் இருந்தவை தீர்ந்துவிட்டன. சரக்கு மறுபடி என் கைக்கு எப்போது வரும் என்று நிச்சயமாகத் தெரியாது.”
இருவர் முகங்களிலும் வருத்தம் தோய்ந்த ஏமாற்றம்.
அதில் அவர்கள் மூழ்க சிறிது நேரம் கொடுத்தாள். பிறகு, அட்டைப்பெட்டிகளில் ஒன்றைப் பிரித்து இருபது கையுறைகளை ஒரு காகிதப்பையில் செருகினாள்.
இழுப்பறையில் இருந்து ஒரு கிண்ணத்தை எடுத்து அதன் பக்கத்தில் வைத்தாள். அதுநிறைய கட்டைவிரல் அளவுக்கு மருத்துவத்தரத்தின் ரப்பர் வளையங்கள். விரலில் கட்டுப்போட்டால் அது நழுவாமல் இருக்க.
“ட்ரிக்ஸி! பையையும் வளையத்தில் நாற்பதையும் எடுத்துக்கொள்!”
அவளுக்கு அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது.
“யூ’ர் அ ஜீனியஸ். தாங்க்ஸ் டாக்!”
பீட்டருக்கு புரிந்துகொள்ள சிறிது நேரம் எடுத்தது. அவனும், “தாங்க்ஸ், டாக்!” என்று சந்தோஷப்பட்டான்.
மருத்துவருக்கான குரலில் சந்திரா…
“இது எப்படிப் போனது என்று எனக்கு நீங்கள் உடனே தெரியப்படுத்த வேண்டும்!”
உயிரின் ஆதாரத்தின் பயத்தை ஒரு டாக்டரின் ஆதங்கத்துடன் இவ்வளவு நாசுக்கான மொழியில் வெளிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.