மண்டை பத்திரம்!

இலவசக் கொத்தனார்

இன்று (செப்டம்பர் 2, 2019) இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு முன் விளையாடப்பட்ட 2358 போட்டிகளில் நடக்காத ஒரு நிகழ்வு இந்தப் போட்டியில் நடந்துள்ளது. அது என்னவென்று தெரிந்து கொள்ள இந்த போட்டியில் மேற்கிந்திய அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஸ்கோர்கார்ட்டைப் பாருங்கள். 

(பட உதவி: espncricinfo.com)
என்ன வித்தியாசம் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? ஒரு நாளும் இல்லாத திருநாளாய் பன்னிரண்டு வீரர்கள் அந்த அணிக்காக பேட்டிங் செய்திருப்பதைப் பாருங்கள். இப்படி நடக்கக் காரணம் சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு விதி மாற்றம்தான். தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு நடிகர் தொடர்ந்து நடிக்க முடியாத சூழ்நிலை வரும் பொழுது இன்றிலிருந்து இந்த வேடத்தில் இவருக்குப் பதில் இவர் என ஒரு அறிவிப்பினை செய்து எளிதாக அந்த வேடத்திற்கான நடிகரை மாற்றிவிடுவார்கள். இந்த விதி மாற்றமும் கிட்டத்தட்ட அது போலதான். 


பொதுவாக ஒரு வீரருக்கு அடிபட்ட நேரத்தில் அவருக்குப் பதிலாக விளையாட மாற்றாள் (Substitute) ஒருவரைக் கொண்டு வருவது அனுமதிக்கப்படும். ஆனால் அந்த மாற்றாள் பௌலிங்கோ பேட்டிங்கோ செய்ய முடியாது. தற்பொழுது நடந்துள்ள விதிமாற்றத்தால் வரும் மாற்றாள் பௌலிங்கும் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பதே முக்கிய வித்தியாசம். ஆனால் நினைத்த பொழுதெல்லாம் இப்படி மாற்றாள் கொண்டு வர முடியாது. ஒரு விளையாட்டு வீரரின் தலையில் அடிபட்டு அதன் காரணமாக அவருக்கு தாற்காலிக மூளை அதிர்ச்சி ஏற்படுமானால் (Concussion) அந்த சமயத்தில் மட்டுமே இப்படி மாற்றாள் கொண்டு வர முடியும். இந்த மாற்றாளையே உட்காய மாற்றாள் (Concussion Substitute) என மற்ற மாற்றாள்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். 


கடந்த மூன்று ஆண்டுகளாக ஆஸ்திரேலிய உள்நாட்டுப் போட்டிகளில் அமல்படுத்தப்பட்டு, பல வகைகளில் மேம்படுத்தப்பட்டது இந்த விதி. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து சர்வதேச ஐந்து நாள் போட்டிகளிலும் உட்காய மாற்றாள் குறித்த விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஏன் ஆஸ்திரேலியா? சில வருடங்கள் பின்னே செல்லலாம். 


நவம்பர் 25, 2014. சிட்னி கிரிக்கெட் மைதானம். நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் தென் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெறும் ஷெப்பீல்ட் கோப்பைக்கான ஆட்டம். தென் ஆஸ்திரேலியா அணிக்காக பேட்டிங் செய்பவர் ஆஸ்திரேலியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம், 25 வயதே ஆன பிலிப் ஹ்யூக்ஸ். ஷான் அபாட் என்ற பந்து வீச்சாளர், பௌன்ஸர் ஒன்றினை வீசுகிறார். அது எக்குத்தப்பாக பிலிப்பின் தலையில் படுகிறது. அப்படியே தரையில் சுருண்டு விழுந்த பிலிப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். இரண்டு நாட்கள் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் செப்டம்பர் 27ஆம் தேதி மரணமடைந்து விடுகிறார். மிகுந்த திறமைசாலியான இவரது மரணம் ஆஸ்திரேலியாவையே நிலைகுலையச் செய்கிறது. இந்த சம்பவத்திற்குப் பின் தலையில் அடிபடுவது பற்றிய விழிப்புணர்வும், அதற்குத் தேவையான விதி மாற்றங்களும் ஆஸ்திரேலிய அணியினரால் முன்வைக்கப்படுகிறது. தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் அளவிலும் இந்த விதிமாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

விதி மாற்றம்தான் என்ன? ஆட்டத்தின் பொழுது ஒரு வீரருக்கு தலையிலோ கழுத்திலோ அடிபட்டால் அணியின் மருத்துவர் அந்த வீரரை சோதித்து அவருக்கு தாற்காலிக மூளை அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறதா எனச் சோதனை செய்ய வேண்டும். அப்படி அதிர்ச்சி உண்டாகி இருக்கும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக மாற்றாள் ஒருவரை அணியில் சேர்க்க மேட்ச் ரெபரியிடம் வேண்டலாம். அந்த மாற்றாள் அடிபட்ட வீரருக்கு ஒத்த திறமை உள்ளவராக இருக்க வேண்டும். இந்த மாற்றம் அடிபட்ட நேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் வேண்டப்படலாம். மேட்ச் ரெபரி, இந்த மாற்றாள் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படலாமா என்பதை முடிவு செய்வார். அவர் அனுமதி அளித்தால் அடிபட்ட வீரருக்குப் பதிலாக மாற்றாள் அணியில் முழுத்தகுதி உள்ள ஆட்டக்காரராய்ச் சேர்த்துக் கொள்ளப்படுவார். இதுதான் மாற்றள் குறித்த விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம். 
2019 ஆஷஸ் சீரிஸின் இரண்டாவது போட்டி. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்க்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்க்ஸ். வேகப்பந்து வீச்சாளர், ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் கழுத்தைப் பதம் பார்க்கிறது. அடிபட்ட உடன் மைதானத்தில் சுருண்டு விழுகிறார் ஸ்டீவன் ஸ்மித். ஆனால் உடனே எழுந்து தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்கிறார். தலையிலோ கழுத்திலோ அடிபட்டால் உடனே மருத்துவர் மூளை அதிர்ச்சி சோதனைகளை செய்து அவர் தொடர்ந்து ஆடலாமா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும் என்பதால் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்படுகிறார். நல்ல வேளையாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்த இன்னிங்க்ஸிலேயே திரும்ப வந்து கிட்டத்தட்ட 100 ரன்களை அடிக்கிறார் ஸ்மித். ஆனால் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்க்ஸில் பீல்டிங் செய்ய ஸ்மித் களத்தில் இறங்கவில்லை. அவருக்கு தாற்காலிக மூளை அதிர்ச்சி இருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட ஆஸ்திரேலிய அணி, அவருக்குப் பதிலாக மார்னஸ் லபூஷேன் (Marnus Labuschagne) உள்காய மாற்றாளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் முதல் உள்காய மாற்றாள் என்ற அடையாளம் இவருக்கு வந்து சேர்கிறது. இவர் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்டிங்கும் செய்கிறார்.  அணியிலே அதிகமாக 59 ஓட்டங்களும் எடுக்கிறார். ஆனால் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஸ்மித் பேட்டிங் செய்யவில்லை என்பதால் ஆஸ்திரேலிய அணியில் 11 பேர்கள்தான் பேட்டிங் செய்தனர். அதனால் அதிகக் குழப்பமில்லை. 
இதுவே மேற்கிந்திய தீவுகளில் கொஞ்சம் குட்டையைக் குழப்பிவிட்டது. இந்திய – மேற்கிந்திய தீவுகள் தொடரின் இரண்டாவது போட்டி. மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸ். மூன்றாம் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரில் பும்ராவின் பந்து ப்ராவோவின் தலையில் படுகிறது. இறுதி ஓவர் என்பதால் ப்ராவோ எப்படியோ சமாளித்துவிடுகிறார். மறுநாள் காலை தொடர்ந்து ஆட முயன்றார் ப்ராவோ. ஆனால் அவரால் முடியவில்லை. 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அடிபட்டதாக தன் ஆட்டத்தை முடித்துக் கொள்கிறார். அவருக்குப் பதிலாக ப்ளாக்வுட் உள்காய மாற்றாளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் நல்ல விதமாக ஆடி 38 ஓட்டங்கள் எடுக்கிறார். ப்ராவோவும் ப்ளாக்வுட்டும் இரண்டாவது இன்னிங்க்ஸில்  ஆடியதால் மேற்கிந்திய அணியில் 12 ஆட்டக்காரர்கள் ஆடினர். இதுதான் மேலே கண்ட படத்தில் உள்ள விசித்திரம். 
இந்த விதிமாற்றம் குறித்து பெருமளவில் சர்ச்சைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வர்ணனையாளர்களாக வரும் பழைய ஆட்டக்காரர்கள் பொதுவாக இந்த மாற்றத்தை விரும்புவதாகத் தெரியவில்லை. தலையில் அடிபட்டால் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்பதில் இரு கருத்து இல்லை. ஆனால் அப்படி அடிபட்டால் மட்டும் ஏன் முழுத்தகுதி உள்ள மாற்றாள் வர வேண்டும் என்பதே இவர்கள் கேள்வியாக உள்ளது. பேட்டிங் செய்யும் பொழுது கையில் பந்து பட்டால் கை எலும்பு ஒடியும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அப்பொழுது ஏன் இப்படி முழுத்தகுதி உள்ள மாற்றாள் தரக்கூடாது? ஒன்று எல்லா வித அடிகளுக்கும் முழுத்தகுதி மாற்றாள் வசதி வர வேண்டும் இல்லை எதற்குமே இருக்கக்கூடாது என்பது இவர்களது வாதம். உயிர் போகும் ஆபத்து இருப்பதால் அணிக்காக தன் வலியையும் உடல்நலத்தையும் கவனத்தில் கொள்ளாமல் களமிறங்குவர். எனவே அதைத் தடுக்க இப்படி முழுத்தகுதி மாற்றாள் அளிப்பதுதான் வழி என்பது எதிரணியினர் வைக்கும் வாதம். 
இந்த மேற்கிந்திய தீவின் இன்னிங்க்ஸையே எடுத்துக் கொண்டோமானால் ப்ராவோவின் 23 ஓட்டங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, ப்ளாக்வுட்டின் 38 ஓட்டங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இது 11 பேர் கொண்ட இந்திய அணி 12 பேர் கொண்ட மேற்கிந்திய அணியுடன் விளையாடுவதற்கு ஒப்பாக இருக்கிறது. இது இந்திய அணிக்கு நியாயமான ஒன்றாகப்படவில்லை என்பது வேறு ஒரு வாதம். முழுத்தகுதி மாற்றாள் வந்தால் அடிபட்ட வீரரின் ஓட்டங்களை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கேள்வி. 
இது போக ட்விட்டரில் கௌரவ் என்பவர் இன்னும் ஒரு கோணத்தில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். வெற்றி பெற ஐந்து ரன்களும் ஒரே ஒரு விக்கெட்டும் இருக்கும் சமயத்தில் ஒரு வீரருக்குத் தலையில் அடிபடுகிறது என வைத்துக் கொள்வோம். அவருக்கு தாற்காலிக மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதா என சோதனை செய்து அதன் பின் அவருக்குப் பதிலாக முழுத்தகுதி மாற்றாள் வந்து விளையாடும் வரை விளையாட்டு நிறுத்தி வைக்கப்படுமா? எவ்வளவு நேரம் எதிரணியினர் காத்துக் கொண்டு இருக்க வேண்டும்? என்பது அவர் வினா. கூடவே அணியில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர்தான் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு அடிபட்டால், அவரை ஒத்த தகுதி உடைய மாற்றாள் இல்லாத நிலையில் யாரை மாற்றாளாக தேர்வு செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.  முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரருக்கு அடிபட்டால் மாற்றாள் வருகிறார். அவருக்கு அடிபட்டால் மற்றொரு மாற்றாள் வருவாரா என நகைச்சுவையாக ஒருவர் வினவினாலும் விதி மாற்றம் செய்யும் பொழுது இது போன்ற நிகழ்வுகளை எதிர்ப்பார்த்தார்களா என்பது கேள்விக்குறியே. 
தலையில் அடிபடுவது குறித்த விழிப்புணர்வு எல்லா விளையாட்டுகளிலும் இப்பொழுது பெருமளவில் வந்திருக்கின்றது. அதற்கு ஏற்றவாரு விதிமுறைகளில் மாற்றங்கள் செய்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் கிரிக்கெட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் இத்தகைய கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் இது குறித்து மேலும் விவாதித்து இரு அணிகளுக்கும் பாதகமில்லாத வகையில் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.