பேத்திகள்

ஆந்தனி மார்ரா

கீரொவ்ஸ்க், 1937-2013

பாட்டிகளிடமிருந்து துவங்குவது மேல். காலினா உழைப்பு முகாமின் நட்சத்திரமாக இருந்தாள், எங்கள் முகாமியர்கள் எல்லாம் பார்வையாளர்கள். எங்கள் முகாமில் இருந்தவர்கள் ரொட்டிச் சமையல்காரர்கள், தட்டச்சாளர்கள், செவிலியர் மேலும் உழைப்பாளர்கள் ஆக இருந்தவர்கள், நள்ளிரவில் அவர்கள் வீட்டுக் கதவுகளை ரகசியப் போலிஸ் தட்டும் முன்னர். அது ஏதோ தவறாக இருக்க வேண்டும், அதிகாரிகளின் கவனப் பிசகு, என்று அவர்கள் அப்போது நினைத்தனர். குற்றமற்ற நிலையை உடனே தெரிந்து கொள்ளவில்லை என்றால் ஒரு போதும் தவறே செய்யாததாக சோவியத் நீதியமைப்பு எப்படி இருக்க முடியும்? சைபீரியப் புல்வெளிகளூடே ரயில் வண்டி கிழக்குத் திசையில் போகும்போது, சரக்குப் பெட்டிகளில் உட்காரக் கூட இடம் இல்லாமல் ஒருவரை ஒருவர் இடித்து அழுத்திக் கொண்டு நின்றபடி பிரயாணம் செய்த போதும், சிலர் இந்த மாதிரித் தவறான நம்பிக்கையைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெட்டியில் முன்பு பயணம் செய்த கைதிகளின் பெயர்கள் சாக்கட்டியால் எழுதப்பட்டு மங்கித் தேய்ந்தவை பெட்டிச் சுவர்களைப் பீடித்திருந்தன. அவர்களில் சிலர், நீராவி எஞ்சின்களால் செலுத்தப்பட்ட சரக்குத் தெப்பங்களில் தள்ளப்பட்டு, ஈனிசெய் ஆற்றில் வடக்குத் திசையில் கொண்டு போகப்பட்ட போதும் அந்த நம்பிக்கையைப் பற்றி இருந்தனர். ஆனால் கண்ணாடியாகத் தெரிந்த தந்த்ரா நிலத்தில் இறங்கியபோது, முடிவில்லாத கோடைச் சூரியனின் பளீரொளியில் அவர்களின் மனமயக்கங்கள் எரிந்து தொலைந்து போயின. தூரத்து நகரங்களில், தங்களுடைய சரித்திரங்களிலிருந்தே அவர்கள் அழிக்கப்பட்டனர். ஒளிப்படங்களில் அவர்கள் இந்தியா மசியாலான முகமூடிகளை அணிந்திருந்தனர். நாங்கள் அவர்களை அறிந்திருக்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதே அவர்கள் இருந்ததற்கான சான்று. ஆர்க்டிக் வட்டத்திலிருந்து வடக்குத் திசையில் நூறே கிலோமீட்டர்கள் தூரத்தில் அவர்கள் எங்கள் வீடுகளைக் கட்டினார்கள்.

ஆரம்பித்து விட்டோமா, மறுபடியும் எங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். காலினாவின் பாட்டியிலிருந்து துவங்குவோமே. போலிஷ் சதிக்கும்பலில் சம்பந்தப்பட்டவராகக் கருதப்பட்டு கைதாகும் முன்பு, கீரோவ் நகரின் பிரதம பாலே நடனக் கலைஞியாக ஐந்து வருடங்கள் இருந்தவர். குச்சி போன்ற மெல்லிய உடலும், உயரமும் கொண்ட அழகியாக இருந்தவர், நகரின் எந்த நெருக்கடியான தெருவிலும் தனித்துத் தெரிவார். எங்களுடைய பாட்டிமார்களைப் போலவே, ரயில் பாதைகளையும், ஆறுகளையும் கடந்தார் என்றாலும், சுரங்கங்களுக்கு அனுப்பப்படுவது அவருடைய தலைவிதியாக இருக்கவில்லை. கட்டாய உழைப்பு முகாமின் நிர்வாகி, ஒரு பாலே நடன ரசிகர், மேலும் மின்னும் சிறுமணிக் கண்கள் கொண்ட சமூக வெறுப்பாளர், மனச்சாட்சி இல்லாத நபர். அவர் காலினாவின் பாட்டி, லெனின்க்ராட் நகரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ரைமாண்டா நாடகத்தில் ஆடியதைப் பார்த்திருந்தார், அந்த அரங்கில் இருந்தவர்கள் எழுந்து கைதட்டத் துவங்கும்போது முதலில் எழுந்தவராக இருந்தவர். முகாமிற்கு வரப் போகிறவர்களின் பட்டியலில் நடன மணியின் பெயரைப் பார்த்ததும், அவர் புன்னகைத்தார்- அவருடைய தொழிலில் அபூர்வமான சம்பவம் அது. “ஆர்க்டிக் பகுதி வரையிலும் கூட வரப் போகிற சோவியத் கலையின் வலிமைக்கு” என்று சொல்லி, தன் உதவியாளருடன் ஒரு சிறு குடுவையை இடித்துக் கொண்டாடும் விதமாக மதுவை அருந்தினார்.

முகாமில் முதல் வருடத்தின் போது, காலினாவின் பாட்டி ஒரு விருந்தாளி போலத்தான் நடத்தப்பட்டார், முகாமின் கைதி போல அல்ல. அவருக்குக் கொடுத்த தனி அறை மிக எளிமையாக இருந்தாலும், சுத்தமாக இருந்தது, ஒற்றைப் படுக்கை, துணிகளுக்கு ஒரு அலமாரி, விறகு எரிக்க ஒரு அடுப்பு எல்லாம் இருந்தன. வாரத்தில் பல முறை, முகாமின் நிர்வாகி, அவரைத் தன் அலுவலகத்துக்குத் தேநீர் அருந்த அழைத்தார். பல பதிவுப்புத்தகங்கள், முகாமின் இலக்கு நிர்ணயிப்புகள், சுற்றுக்கு வந்த அறிவிப்புகள், கட்டளைகள் அடங்கிய காகிதங்கள் எல்லாம் இறைந்து கிடந்த மேஜை நடுவில் இருக்க, இருவரும் வாகனோவா முறை, முதன்மை நடனமணியின் தொடை எலும்பு சரியாக எத்தனை நீளம் இருக்க வேண்டும், சைக்கோவ்ஸ்கி இசையை வழிநடத்தும்போது தன் தலை கீழே விழுந்து விடும் என்று நிஜமாகவே அச்சம் கொண்டிருந்தாரா, அதனால்தான் தன் தலையை இடது கையால் பிடித்தபடி இசையை வழி நடத்தினாரா என்பன போன்ற விவகாரங்களைப் பற்றி உரையாடினர். முகாமின் நிர்வாகி மாஹியஸ் பெடிபாவின் மிக நுட்பமான, இருவருக்கான நடனம் ‘ஸ்வான் லேக்’ பாலே நாட்டியத்தில் இருப்பதாக வலியுறுத்திச் சொன்னபோது, காலினாவின் பாட்டி அவரை , ‘பெரும் பொய்களுக்கான மக்கள் குடியரசுடைய விசுவாசமுள்ள குடிமகன்’ என்று அழைத்தார். முகாம் நிர்வாகியின் ஆறு வயது மருமானைத் தவிர வேறு யாரும் அவரிடம் இத்தனை வெளிப்படையாகப் பேசியதில்லை, ஆனாலும் அவர் அவளுடைய தினசரி உணவுப் படியை வெட்டவில்லை, அல்லது அவளுடைய தலைக்குள் ஆறு கிராம்கள் ஈயத்தைச் [1]செலுத்தவில்லை. அவளை இன்னும் கொஞ்சம் தேநீர் எடுத்துக் கொள்ளச் சொன்னார், அடுத்த வாரச் சந்திப்பில் ஓர் உடன்பாடு (மேற்படி விஷயத்தில்) வரும் என்று அவர் யோசனை தெரிவித்தபோது, அவள் சொன்னாள், “உடன்படிக்கை என்பது அற்ப புத்திக்காரர்களுடைய குறிக்கோள்.” அவளை நாம் இன்னும் சிறிது கூடுதலாக நேசிக்காமல் இருக்க முடியாது. முகாமின் நிர்வாகியும் அப்படியே உணர்ந்தார்.

அடுத்த வருடம், அவர் காலினாவின் பாட்டியை, ஒரு சிறு பாலே குழுவை உருவாக்கி, பயிற்றுவித்து, அதை முன்னின்று நடத்துமாறு கேட்டுக் கொண்டார். அக்குழு அவருடைய தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவும், முகாமில் மன ஊக்கத்தை வலுப்படுத்தவும் என்று தெரிவித்தார். அந்தக் குழு மூன்று மாதங்கள் பயிற்சியை மேற்கொண்டது, பிறகே தன் முதல் நிகழ்ச்சியை நடத்தியது. அதன் சில உறுப்பினர்கள் சிறுபிராயத்தில் பாலே நடனப் பயிற்சியை மேற்கொண்டிருந்தனர், மற்றவர்கள் கிராமப் புற நடனங்களில் அனுபவம் கொண்டிருந்தனர். பல நீண்ட பிற்பகல் பயிற்சிகளுக்குப் பின்னர், முகாம் நிர்வாகியும், காலினாவின் பாட்டியும் ‘ஸ்வான் லேக்’ நாடகத்தின் ஒரு சுருக்க வடிவைத் தேர்ந்தெடுத்தனர். குழுவினர் சந்தேகத்துக்குரிய ஃப்ரெஞ்சுப் பெயர்கள் கொண்ட சுழற்சிகளை, அவர்கள் கால் நுனிகளைச் சுற்றிலும் கொப்புளங்கள் கிளம்பும்வரை பயின்றனர். இந்த மக்களின் எதிரிகள் குழுவை, காலினாவின் பாட்டி மிரட்டி, நேர்த்தியை அவர்களுக்குப் புகட்டிய பிறகு, அவர்களுடைய தசைகளின் நினைவு சக்தியே புதுப் பாடங்களைக் கற்றது. போகப் போக அவள் கைதியா, கைது செய்தவளா அல்லது இரண்டுமா என்பது அத்தனை தெளிவில்லாமல் போயிற்று. இழுத்துப் பிடித்துக் கொண்ட தசைகள் இறுகிய பிறகு, வீங்கியிருந்த கால் நுனிகள் சுருங்கியபிறகு, திரை திறக்கப்பட்ட பிறகு, முகாமின் கண்காணிப்பு விளக்கு காண்டீனின் கோடி வரை ஒளியைப் பாய்ச்சிய பிறகு, எல்லாருக்கும் புரிந்தது, அந்த மேடை அதிசயமான நிகழ்ச்சி ஒன்றுக்குத் தயாராகி விட்டது என்பது.

எங்களுடைய பாட்டிகள் காண்டீன் பெஞ்சுகளில் பார்வையாளர்களாக உட்கார்ந்திருந்தனர், அந்த நிகழ்ச்சி, நீங்கள் கற்பனை செய்ய முடியும் அதை, முழுத் தோல்வியாய் முடிந்தது. ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்த இசைக் குழுவோ அருகில் இருந்த ஒன்று, அதனால் ஒரு கிராமஃபோனுடைய துருப்பிடித்த உலோகக் கொம்பு வழியேதான் நாட்டியத்துக்கான இசை ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கொம்பில்தான் முன்பு வெங்காயங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த நாட்டிய அமைப்புக்கு பல டஜன் நடனக் கலைஞர்கள் தேவை; இருந்ததோ பத்துப் பேர் கொண்ட குழு, அதில் நான்கு பேர்கள் கரியால் வரையப்பட்ட மீசை அணிந்து ஸீக்ஃப்ரீட், ஃபான் ரோத்பார்ட், மற்றும் பல சேவகர்கள், ஆசிரியர்கள், அரசவை உறுப்பினர்கள் போன்ற பாத்திரங்களாக நடனமாடினர். ஏரியோ நீர்ப்பறவைகள் மிக அருகியதாகக் காட்சி தந்தது; அங்கு எம்கவெடெ இலாகாவின் (NKVD) [2]வேட்டையாளர்கள் முன்னதாகவே அங்கு வந்திருக்க வேண்டும் என்று பிற்பாடு சிலர் நகைத்தனர். அதில் பல தவறுகளும், பிழைபட்ட நடனங்களும் இருந்தன, இசை சில சமயங்களில் நடனமாடுபவர்களின் காலெடுப்புகளைத் தாண்டி விரைந்து போயிருந்தது. ஆனால் காலினாவின் பாட்டி, தனியாக மேடையேறி, ஓர் ஒளிக் குளத்தில் நழுவி நுழைந்தார். அவருடைய தலை முடி நன்கு கழுவப்பட்டிருந்தது, இறக்கைகளால் ஆன கிரீடம் அணிவிக்கப்பட்டிருந்தது, தோள்கள் துருவப்பகுதியின் கோடை போல வெளிறிட்டன, பாதங்களில் நிஜமான பட்டுக் காலணிகள் சூழ்ந்தன. கூட்டத்தில், எங்கள் பாட்டிமார்கள் மௌனத்தில் ஆழ்ந்தனர். சிலர் அவர்களின் முன்னாள் வாழ்க்கையில் இருந்த இசை அரங்குகளுக்கும், ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களுக்கும், ஷாம்பெய்ன் கோப்பைகளுக்கும் திரும்பக் கொண்டு போகப்பட்டிருந்தனர். சிலர் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் குட்டித் தூக்கம் போட்டனர். அனேகரும், (நாங்கள் அப்படி நடந்திருக்குமென்று சந்தேகப்படுகிறோம்,) பிரமிப்பில் ஆழ்ந்திருந்தனர். சுரங்கங்களில் பதினான்கு மணி நேர ஷிஃப்ட்களில் வேலை செய்து விட்டு வந்த பிறகு, அத்தனை நிக்கல் தூசியை முகர்ந்ததால் தும்முகையில் அவர்கள் வெள்ளிப் பொடியாக உதிர்த்தனர், அவர்கள் யாருமே கீரோவ் நகரின் பிரதம நடனமணியிடமிருந்து ஒரு தனிப்பட்ட பாலே நடன நிகழ்ச்சியை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இப்படிப் பல அசம்பாவிதங்கள் எல்லாம் இருந்தாலும், முகாமின் நிர்வாகிக்குக் குதூகலமாக இருந்தது. அடுத்த எட்டு வருடங்களில், கோடை, மற்றும் குளிர்கால சங்கராந்தி தினங்களில் பாலே நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்; ஆனால் இலவசமாக எதையும் கொடுத்து அவர் பதவியில் மேலுயரவில்லையே. தன் கைதிகளிடமிருந்து அவர்கள் சாகுமுன் உச்சநிலை உற்பத்தியைப் பிழிந்து எடுத்து விடுவதில் முழு முனைப்பாக இருந்த அந்த நபருக்கு, பாலே நடன நிகழ்ச்சி ஒரு சக்தி வாய்ந்த கட்டுப்பாட்டு ஆயுதமாகக் கிடைத்தது. நிகழ்ச்சிக்கான இருக்கைகளும்- அவற்றோடு அன்றாட உணவுப் படியில் சிறிது மேம்படுதலும்- தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி உற்பத்திக்கான அளவுகோல்களை மீறி உற்பத்தி செய்வோருக்கே ஒதுக்கப்பட்டிருந்தன. காலினாவின் பாட்டி இப்படிப் பலரின் வாழ்க்கையிலிருந்து பல வருடங்களை வெட்டிச் சுருக்க உதவி இருந்தார்.

இதெல்லாமே ஒன்பதாவது வருடம் முடிவுக்கு வந்தது. காலினாவின் பாட்டிக்கு விடுதலை நாளுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே இருந்தது, முகாமின் நிர்வாகி இந்நேரம் காதல் வயப்பட்டு விட்டிருந்தார். அவரை மாதிரி ஒருவர் இன்னொரு மனித உயிர் மீது காதல் கொள்ளுதலும் சாத்தியமா? ஆமாம், அவர் அப்படித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடும் என்று ஒத்துக் கொள்ளவே நாங்கள் துன்பப்படுகிறோம். இந்த மாதிரி நபர்களைப் பொருத்து எங்களுக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது, பெரும் திரளான மக்களைக் கொல்லும் அதிகார வட்டத்தினர் பற்றி இல்லை, ஆனால் சாராயத்துக்கு அடிமைப்பட்ட ஆண் நண்பர்கள், வன்முறையிலிறங்கும் கணவர்கள், சிறிதும் வேண்டப்படாத தங்களின் நெருக்கம் என்பது பிறருக்குத் தாம் கொடுக்கும் பாராட்டு என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் அன்னியர்கள் பற்றி எல்லாம் உண்டு. சுற்றிலும் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தூரத்து நிலப்பரப்பில் காலினாவின் பாட்டி ஒருத்திதான் முகாமின் நிர்வாகியைப் பார்த்து முழு முற்றாக வெறுப்பு கொள்ளாத ஒரே பெண்ணாக இருந்தாள். ஒருக்கால் அவளுடைய வெறுப்பு முழு முற்றாக இல்லாததை அவர் தன்பால் காமம் என்று நினைத்துக் கொண்டு விட்டாரோ? காரணங்கள் என்னவாக இருந்தாலும், அவளுடைய விடுதலைக்கு இன்னும் எண்பத்து ஐந்து நாட்கள் இருக்கும்போது ஒருநாள் அவளைத் தன் அலுவலகத்துக்கு வரச் சொல்லி இருந்தார். அலுவலக அறைக் கதவு அவள் நுழைந்ததும் மூடப்பட்டது. பின்னர் என்ன நடந்தது என்பது அலுவலகக் காவலர்கள் பரப்பிய வதந்திகளின் மூலமாகத்தான் தெரிய வந்தது. அங்கே காதல் பற்றிய அறிவிப்பும், அதைத் தொடர்ந்த ஒரு கணம், இது பல பத்தாண்டுகள் கழிந்தும், இன்னமும் ஆச்சரியமூட்டுவதாக உள்ள கணம், அதில் காலினாவின் பாட்டி முகாமின் நிர்வாகியிடம் மறுப்பைத் தெரிவிக்கிறார். கதையில் இந்த இடத்தில், அவளைப் பொருத்து இந்நேரம் உலர்ந்து விட்டிருந்த நமது அபிமானம் திரும்ப வெள்ளமாகப் பாய்கிறது, அவளை கைக்கூலியாகி விட்டதாகக் குற்றம் சொன்ன நாம் சிறிது குற்ற உணர்வு கொள்கிறோம். காவலாட்கள் சத்தமடங்கிய போராட்டத்தை, ஒரு அலறலை, துணிகள் கிழிவதை ஒடுங்கிய ஒலிகளாகக் கேட்கிறார்கள். இதர பகுதிகளில் முகாம் உறங்குகையில், முகாமின் நிர்வாகி காலினாவின் தாத்தாவாகிறார்.
இல்லை, அந்தக் காலகட்டத்தில் பூராவுமே அவர்களிருவரும் சேர்ந்திருந்தனரோ என்னவோ, நாம் யார் அதைப் பற்றிச் சொல்ல?

வருடங்கள் கடந்தன. ஸ்டாலின் இறந்ததும், சிறைச்சாலை மீது குற்றச்சாட்டுகளும் அதை மூடக் காரணங்களாகின்றன. முகாமின் நிர்வாகிகள் உள்துறை அமைச்சரகத்திலிருந்து, இரும்புக் கனிமத் துறைக்கு மாற்றப்படுகின்றனர், அலுவலகங்கள் இடம் மாறவில்லை. அதே மனிதர்கள் தரையடியிலிருந்து நிக்கலை வெட்டி எடுக்கின்றனர். எங்கள் பாட்டிமார்கள் சுரங்கத் தொழிலாளர்களை, உலோகம் உருக்குபவர்களை, ஏன் முன்னாள் சிறைமுகாமின் காவலாளிகளைக் கூட மணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் லாபத்துக்காகவும், நடைமுறை வசதிகளுக்காகவும் அங்கேயே தங்கி விடுகின்றனர். ஆர்க்டிக் நிக்கல் சுரங்கங்கள் நாட்டிலேயே அதிகக் கூலி கொடுத்த அமைப்புகளாக இருந்தன, அங்கிருந்த முன்னாள் கைதிகளுக்கு அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிப் போக நுழைவனுமதி கிட்டுவது சாத்தியமாக இல்லை. காலினாவின் பாட்டி அத்தகையோரில் ஒருத்தி. தன் மகளை அவள் வளர்த்தாள், பள்ளிக் குழந்தைகளுக்கு கம்யூனிசத்தின் அடிப்படைகளைப் போதித்தாள். முகாம் நிர்வாகி பதவியில் கீழே இறக்கப்பட்டார், ஒரு கட்சித் தலைக்கு அந்த வேலை கிட்டியது. 1968 இல் சாகக் கிடந்த அவள் தன்னைக் கவனித்த தாதியின் கையைப் பற்றிக் கொண்டு, ‘நான் பார்க்கிறேன், நான் பார்க்கிறேன், நான் பார்க்கிறேன்.” என்று ரகசியமாகச் சொல்கிறார். செவிலியிடம் தான் எதைப் பார்த்தாள் என்று சொல்லுமுன் இறந்து விடுகிறாள்.

ஆனால் அவளுடைய கதை எங்கள் பாட்டிகளின் கதை. காலினாவின் கதை எங்களுடையது.

அவள் 1976 இல் பிறந்தாள். பிள்ளைப் பேறு மருத்துவர் குழந்தைகள் மீது சிறிதும் அன்பில்லாதவர், அதனால் அவர் இவளைப் பார்த்து முகம் சுளிக்காததைக் கவனித்தவர்கள், வருங்காலத்து அழகி ஒருத்தியை முன்கூட்டி அறிந்தார்கள். காலினா வளர்ந்து வருகையில், அந்த மருத்துவரின் தீர்க்க தரிசனத்தை நாங்கள் எல்லாரும் அங்கீகரித்தோம். காலினா தன் பெற்றோர்களை விட பாட்டி போலத்தான் இருந்தாள்.

அவள் ஒரு சுரங்கத் தொழிலாளருக்கும், உள்ளூர் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு தையல் வேலைக்காரிக்கும் பிறந்தாள், ஆமாம், எங்கள் பாட்டிகள் அந்தப் பெண்ணின் துவக்க வருடங்களில், அவளுடைய பெற்றோரை ஏற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைத்து விஷயங்களிலும் சரியாக நடந்து, சிறிதும் கவனிக்கப்படாதவர்களாக இருந்தனர். கம்யூனிசத்தைக் கட்டியமைத்தவர்களின் இரண்டாவது நடத்தை விதியான: சமூகத்தின் நலன் கருதி முழு மனதோடு உழைப்பது வேண்டும் – யார் வேலை செய்யவில்லையோ, அவர் சாப்பிடவும் மாட்டார், என்பதை ஒட்டி, தினசரி நீண்ட நேரம் வேலை செய்தனர். தங்கள் வீட்டில் அவர்கள் உரக்கவே பேசினர், அது எங்கள் அம்மாக்களுக்குச் சுவர்களைத் தாண்டிக் கேட்கும்படியே இருந்தது, அதனால் அவர்கள் வக்கிரமான ரகசியங்கள் ஏதும் மறைத்து வைத்திருக்கவில்லை என்பது தெளிவாக இருந்தது. ஆனால் விசித்திரமாக, எங்களோடு விளையாட காலினாவை அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு வந்த அழைப்புகளை அவர்கள் மறுத்தனர், பன்னாட்டு இளைஞர்களின் ஒற்றுமைக்கான தினக் கொண்டாட்டங்களிலிருந்து சீக்கிரமே வீட்டுக்குத் திரும்பி விட்டிருந்தனர். அது எங்கள் அம்மாக்களின் சந்தேகத்தை உசுப்பியது. “குறைஞ்சது திமிர் பிடிச்சவங்க, இல்லே சதிகாரங்களாத்தான் இருக்கும்,” என்று எங்கள் அம்மாக்கள், தங்கள் தேநீரில் இனிப்புப் பழக் கூழை எடுத்துப் போட்டுக் கொண்டபடியே ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். இதெல்லாம் எழுபதுகளின் கடைசி வருடங்களில், எண்பதுகளின் துவக்கத்தில், கூட்டமாக மக்களை ஒழித்துக் கட்டும் அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் நினைவிலிருந்தே போய் விட்டிருந்தன என்றாலும், க்ளாஸ்நெஸ்ட் [3] இன்னும் பல வருடங்கள் தள்ளியே இருந்தது. எங்களுடைய நகரம் சிறியது, ரகசியக் குரல்கள் எளிதாகவே தீர்ப்பாகி விடும். தன் அம்மாவையே குற்றம் சாட்டிக் காட்டிக் கொடுத்த வியெரா ஆண்ட்ரேயெவ்னாவின் கதையையும், மின்ஸ்க்கிலிருந்து வ்ளாடிவாஸ்டொக் வரையிலும் செய்தித்தாள்கள் அவளைக் கொண்டாடியதையும் யார் மறந்திருப்பார்கள்? காலினாவின் அம்மாவும் அப்படி ஒரு முடிவால் திண்டாடி இருப்பாள், நுரையீரல் புற்று நோய் முந்திக்கொண்டு விட்டிருந்தது.

துவக்கப்பள்ளியில் மூன்றாவது வருடம் வரை, காலினா ஏன் எங்களுடன் சேர அனுமதிக்கப்படவில்லை என்பது எங்களுக்குப் புரியாமல் இருந்தது. நாங்கள் பெருக்கல் வாய்ப்பாடுகளை ஒப்பித்தபின் நடுப்பகல் உணவுக்காக வெளியே விடப்பட்டோம்- அது ஒன்றும் கடினமான பாடமில்லை, ஏனெனில் நாங்கள் நெட்டுருப் போடுவதிலும், ஒப்பிப்பதிலும் சிறப்பாகச் செய்தோம். காலினா அவிழ்ந்திருந்த காலணிக் கயிற்றில் தடுக்கினாள், கீழே விழப் போனாள், அவளுடைய புத்தகங்கள் கை நழுவிக் காற்றில் பரவி, அவள் மேல் விழுந்தன. காலணியின் கயிறு இத்தனை ஆர்ப்பாட்டம் நடக்கக் காரணமாக இருந்ததை நாங்கள் முன்னர் பார்த்ததில்லை.

“அவளுடைய பாட்டியின் பெயரைக் காப்பாற்ற மாட்டாள் போலிருக்கிறது,” என்றார் எங்கள் ஆசிரியர். அப்படி ஏதும் பரம்பரை மரியாதையைக் காப்பாற்றும் கடமை இல்லாதவர்களுக்கே உரிய இளக்காரத்தோடு நாங்கள் எல்லாம் சிரித்தோம்.

“நீங்க என்ன சொல்றீங்க?” காலினா கேட்டாள். அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. எங்களால் நம்ப முடியவில்லை. நாங்கள் எல்லாம் கொட்டித் தீர்த்தோம், ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிக் கொண்டு பேசி, அவளிடம் அந்த பாலே நடனக் குழு பற்றி, கெடுமதி முகாம் நிர்வாகி பற்றி, காலினாவின் பாட்டியுடைய அதிசயமான தலைவிதி பற்றி எல்லாம் சொன்னோம். அவள் ஆச்சரியமும், குழப்பமும், இறுதியில் பெருமையோடும் தலையை ஆட்டினாள்.
அன்று மாலை வீட்டில், அவள் பாலே நடன வகுப்புகள் வேண்டும் என்று கேட்டாள்.

“பாலேயா?” நிக்கல் புழுதியால் புண்ணான தொண்டையின் கரகரத்த குரலில் அவளுடைய அப்பா கேட்டார். அவர் ஐம்பத்தி இரண்டு வயதிலேயே இறந்து போகவிருந்தார், மற்ற சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்வு நாள் எதிர்பார்ப்புகளை விட மூன்று வருடம் கூடுதலாக உயிரோடு இருந்திருந்தார். “நீ இளம் முன்னோடிகள் பயிற்சிக் குழுவில் இந்த வருடம் சேரவிருக்கிறாய். தலைமை வகிப்பதையும், குழுக்களைக் கட்டுவதற்கான திறமையையும் கற்பதில் நிறைய நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும்.”

ஆனால் காலினா பிடிவாதம் பிடித்தாள். “என் பாட்டியைப் போல நான் பாலே நடனம் ஆட வேண்டும்.”

அவள் அப்பா பெருமூச்சு விட்டார், அறையை உஷ்ணப்படுத்தும் வெப்பக் கதிர் வீச்சுக் கருவியின் வெப்ப அலையூடே தன் கைகளை அலைய விட்டார். வருடக்கணக்காக தாங்கள் ஏன் மகளிடமிருந்து அப்படி ஒரு பிரபலமான முதாதையரைப் பற்றிய செய்தியை மறைத்தோம் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார், ஆனால் விடை எளியதுதான்: அவர்கள் விசுவாசமான கம்யூனிஸ்டுகள், கட்டாய உழைப்பு முகாமின் குழந்தைகள், பாட்டியைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு மகளும் அவர்களுக்கு வாய்த்திருந்தாள். காலினாவின் அப்பாவுக்கு அது நன்றாகத் தெரிந்திருந்தது, தங்கள் மகளின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டுமானால், எதெல்லாம் அவளைத் தனித்த சிறப்புள்ளவளாகக் காட்டியதோ அதையெல்லாம் மங்கலாக்கிக் காட்ட வேண்டும், ஊரின் கூட்டுக் குரல் அவளைத் தங்களில் ஒருத்தியாக ஏற்கும் வரை இப்படியே இருக்க வேண்டும் என்பது புரிந்திருந்தது. சந்தேகத்துக்கு இடமில்லாதபடி அவர், பீத்தோவெனின் 23ஆவது ஸொனாடாவைப் பற்றிய லெனினின் பிரபலமான குறிப்பைக் கேட்டிருந்திருப்பார்: அது விந்தை நிரம்பியது, மிகு நுட்பமான இசை. ஆனால் நான் அதைக் கேட்க முடியாதவனாக இருக்கிறேன். பயங்கரமான நரகத்தில் அவர்கள் வாழ்ந்திருந்த போதும், இப்படி ஒரு அழகான இசையைப் படைக்க முடிகிறவர்களாக உள்ள என் சக மனிதர்களின் தலைகளைத் தடவிக் கொடுக்கும்படி என்னை இந்த இசை உந்துகிறது. அந்தத் தலைகளை நொறுக்க வேண்டும், சிறிதும் கருணையின்றி தூளாக்க வேண்டும்.

ஆனால் தன் மனைவி காலமான பிறகு, அவர் ஓரளவு செல்லம் கொடுப்பவராகவும், தலைவிதியை நம்புபவராகவும் ஆகி இருந்தார். “வேறென்ன செய்ய முடியும், கால்யா,” என்றார். அடுத்த நாள் அவள் எங்களிடம் இதை எல்லாம் சொன்னாள்.

கார்பசோவ் அதிகாரத்துக்கு வந்த வருடம் காலினா தன் பாலே நடனப் பயிற்சியைத் துவங்கினாள், அவர் தன்னோடு, க்லாஸ்நெஸ்டை, பெரிஸ்ட்ரொய்காவை, மேலும் டெமொக்ராடிஸாட்ஸியாவை எல்லாம் கொணர்ந்தார். எங்கள் அம்மாக்கள் கொஞ்சம் உரக்க ரகசியம் பேசினர், நாங்கள் துவக்க வருட இளம் பிராயத்திலிருந்து முதிர் இளம் பருவத்துக்கு நகர்ந்தபோது, எங்களுக்கான குரல் கிட்டி இருந்தது. நாங்கள் மென்மையாக ஆரம்பித்தோம், அப்படி எச்சரிக்கையாக இருந்தது புத்திசாலித்தனம்; நகரத்தின் கட்சித் தலை அந்த முகாமின் நிர்வாகிஇருந்த அளவு கொடூரமானவனாக இருந்தான், பாப் இசைப் பாடல்களைப் போல மாஸ்கோ போன்ற பெரு நகரங்களில் ஒலிபரப்பப்பட்டு வெகு நாட்களுக்குப் பின்னரே எங்கள் சிற்றூர்களுக்கு அரசியல் சீர்திருத்தங்கள் வந்தன. குளிர்காலத்தில், சூரியன் மூன்றுமாத இரவுக்குப் பின்னே மறைந்த போது, பூங்காக்களிலும் கூடினோம், கைவிடப்பட்ட வீட்டு மனைகளிலும், வெள்ளைக் காட்டின் துருப்பிடித்த உலோகக் கிளைகளின் கீழே, யாருமற்ற அனாதை அடுக்ககக் கட்டடங்களில் வெப்பத்தை நாடினோம், கிழிந்து கொண்டிருந்த சாமிஸ்டாட் கையெழுத்துப் பிரதிகளில் ஸோல்ஷெனிட்ஸினின், ஜோசஃப் ப்ரோட்ஸ்கியின் படைப்புகளின் பக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம், த க்வீன் குழுவினரின் நீண்ட நேரம் ஓடும் இசைத் தட்டுகளை ஒலிக்க விட்டு அவற்றுக்கு நடனமாடினோம், அவை யூரோப்பிலிருந்து யாரோ ஒருவருடைய இரண்டாவது ஒன்று விட்ட சகோதரரின் வயலின் ஆசிரியர் கொணர்ந்தவை, அவை பார்வைக்குச் சிறப்பாக இருந்த அளவு அணிவதற்கு வசதியாக இல்லாத போதும் – கருப்புச் சந்தையில் வாங்கிய லீவைஸ் ஜீன்ஸ்களை அணிந்து திரிந்தோம். பழைய ரியோப்ரா- ‘விலா எலும்பு’ இசைத்தட்டுகள், ‘எலும்பு’ இசை (bone music), ‘எலும்புக் கூட்டுப்’ பாடல்கள்[4]- இசைத் தகடுகளில் தடை செய்யப்பட்ட ஐம்பதுகளின், அறுபதுகளின் ராக் அண்ட் ரோல் பாட்டுகளை- பழைய ஃபோனோக்ராஃப்களால் பழைய, (பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படவிருந்த) எக்ஸ்ரேப் படத் தகடுகளில் பதிவு செய்து, அவற்றை க்ராமஃபோன்களில் அவற்றின் ஒலியை அடக்கி வைத்துக் கேட்டோம். உடைந்த விலா எலும்புகள், பிரிந்து போன தோள் மூட்டுகள், புற்று நோய்க் கட்டிகள், நசுங்கிய முதுகெலும்புக் கணுக்கள் போன்றவற்றின் ரேடியோக்ராஃப் படங்கள் சுமாரான வட்டங்களாக வெட்டப்பட்டு, அவற்றின் மேல் பரப்பில் வட்டமான வரிகளாக இசை செதுக்கப்படும், வட்டத்தின் நடுவில் ஒரு துளை சிகரெட் நுனி நெருப்பால் இடப்படும், இந்த மனித வலிகளின் படங்களின் வரி வட்டங்களில், ப்ரையன் வில்ஸனின் குரல் போன்ற சுத்தமான குதூகலம் பொதிந்து மறைந்திருக்கும் என்று தெரிவதே போற்றத் தக்கதாக இருந்தது. எங்களுடைய பெற்றோர்கள் இசையை முதலியத்தின் மாசு என்று சொன்னார்கள், ஏதோ அந்த எக்ஸ்-ரே தகடுகளில் படமாகத் தெரிந்த புற்று நோய்க் கட்டிகள் உலகின் மறு புறத்திலிருந்து வந்த இசையால் நேர்ந்தன என்பது போல, எங்கள் ஜன்னல்களுக்கு வெளியே இருந்த புகைக் கூண்டுகளிலிருந்து பெருகி, எங்களுக்கெல்லாம் இலவசமாகக் கொடுக்கப்பட்ட மாசு அவற்றுக்குக் காரணம் இல்லை என்பது போல.

கோடையில், பூமிக்கு விளைவித்த நாசம் மேகங்களில் கூடப் பரவியிருக்கும். நகரை மஞ்சள் நிற மூடுபனி சுற்றிப் போர்த்தி, காற்றில் உலரும் வார்னிஷ் போல இருக்கும். சல்ஃபர் டை ஆக்ஸைட் அந்தப் பன்னிரண்டு முதன்முதல் கிருஸ்தவப் பிரச்சாரகர்களிலிருந்து, அந்தப் பனிரெண்டு நிக்கல் உருக்காலைகளிலிருந்து- அவை தொழிற்சாலைக் கழிவுகளால் நிரம்பிய ஏரியைச் சுற்றி இருந்தன – காற்றில் எழும். அந்த மாசு அடர்த்தியாகி ஒரு கூரை போலக் காற்றில் பரவி சூரியனையே மறைக்கும். சந்திரனோ பாட்டிகளின் கடந்த காலத்தில்தான் தெரிந்து இருந்தது. நாங்கள் எங்களுடைய கோடைக்காலத்தை எத்தனை பயன்படுத்த முடியுமோ அத்தனை செய்தோம்: பள்ளிக் கூடம் இல்லாத நாட்கள், இருட்டு இல்லாத இரவுகள். காதலரைத் தேடும் முதல் சந்திப்புகள், முதல் முத்தங்கள். நாங்கள் அத்தனை கோணங்கிகளாக இருந்தோம், கண்ணாடியில் காலையில் தெரியும் முகப்பருக்கள், எங்களுக்குத் தேவை இல்லாத இடங்களில் முடி, ஆனால் நாங்கள் நுரையீரல் புற்றுநோயின் படங்களில் இருந்த ‘ஸர்ஃபிங் ஸஃபாரி’ இசைத் தொகுப்பு பற்றித்தான் உளைச்சல் கொண்டோம், உடல் எப்படி எல்லாம் ஆத்மாவைக் காட்டிக் கொடுக்கிறது என்று யோசித்தோம், வளர்ந்த மனிதராவதே ஒரு விதமான நோயோ என்றும் யோசித்தோம். ஜுரம் வந்து போகும் வேகத்தில் காதல் வயப்பட்டோம், காதலிலிருந்து வெளியே வந்தோம். பின்னாளில் நாங்கள் எண்ணி வருத்தப்படும் விதமான மனிதர்களாக அடிக்கடி ஆனோம்.

தெளிவாக இருந்த இரவுகளில் வெண்காட்டின் ஊடாக நாங்கள் நடந்து போனோம். ப்ரியெஷ்னெஃப் அதிபராக இருந்த வருடங்களில், உள்ளூர் கட்சித் தலையின் மனைவி தன் இளமைப் பருவத்து பிர்ச் மரக் காடுகள் பற்றி ஏக்கம் கொண்டதால், இந்தக் காடு ப்ளாஸ்டிக் இலைகள் கொண்ட உலோக மரங்களால் உருவாக்கப்பட்டது. நாங்கள் இவற்றூடே நடந்து போகும் காலத்தில், கடந்திருந்த வருடங்கள் இந்த உலோகக் காட்டையும், கட்சித் தலையின் மனைவியையும் சிதைத்திருந்தன, தலைக்கு மேலே இருந்த ப்ளாஸ்டிக் இலைகள் சோர்ந்து தொங்கின, வயதான கல்லீரலால் தோலில் வரும் புள்ளிகள் அவரின் முகத்தில் தெரிந்ததைப் போலப் புள்ளிகள் அவற்றில் இருந்தன. நாங்கள் கடந்து போனோம். சேறு நாங்கள் கால்களை இழுத்து நடந்தவிடங்களில் அரைபட்ட கடுகு போல மஞ்சள் நிறத்தில் இருந்தது. காட்டின் தூரத்துப் புறத்தில், தொடுவான் வரை பரவி இருந்த கந்தகக் கழிவை நாங்கள் பார்த்தோம். நாங்கள் உரக்கக் கூவினோம். அறிவிப்புகள் செய்தோம். இங்கு நாங்கள் ரகசியமாகப் பேசத் தேவை இருக்கவில்லை. ஜூலையில் சில சுருக்கமான வாரங்களில், ஆக்ஸிடைஸ் ஆன இந்த கழிவு நிலத்தில், சிவப்பு நிறக் காட்டுப் பூக்கள் வெளியே வந்தன, மொத்த பூமியும் புவி வாழ்வின் கடைசி நாளுக்கான எழிலோடு கொதித்தது.

ஆனால் தரைக்கடியில் இருந்த ஒரே நிறம், வெள்ளி நிற உலோகப் பளபளப்புதான். எங்கள் தகப்பன்மார்கள் உலகிலேயே மிக்க உற்பத்தி செய்த நிக்கல் சுரங்கத்தில் பனிரெண்டு மணி நேர வேலைப் பிரிப்புகளில் கனிமங்களை வெடி வைத்துப் பிளந்தார்கள். சுரங்கப் பள்ளங்கள் தரையடியில் ஒன்றரைக் கிலோ மீட்டர்கள் ஓடின, அடித்தளத்தில் ஜனவரி மாதக் குளிரில் கூட அத்தனை வெப்பமாக இருந்ததால் எல்லாரும் மேல் சட்டைகளை எல்லாம் கழற்றி விட்டு உள்ளாடைகளோடு வேலை செய்தார்கள். பல மணிகள் கழிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பும்போது, குளியலறையை நோக்கித் தடுமாறியபடி போனார்கள், வழியில் மேலங்கிகள், ஸ்வெட்டர்கள், சட்டைகள், கால் சட்டைகள் ஆகியவற்றை கழற்றிப் போட்டபடி, அவர்களின் நெஞ்சுப் பகுதிகளிலும், முதுகுகளிலும், கால்களிலும் காய்ந்து போயிருந்த நிக்கல் தூசியையும் உதிர்த்துப் போனார்கள். அவர்கள் குளிப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பு வரை, உலோகத்தால் ஆன மனிதர்களாக, மின்னுகிற மனிதர்களாகவிருந்த எங்கள் அப்பாக்கள் அழிக்கப்பட முடியாத மனிதர்களாகத் தெரிந்தார்கள்.

மற்ற உலோகங்களும் தோண்டி எடுக்கப்பட்டன – தங்கம், செப்பு, பல்லேடியம், ப்ளாடினம் – ஆனால் வடக்குப் பகுதியின் நிக்கல்தான் எங்கள் வாழ்வாதாரம். பனிரெண்டு முதன்முதல் கிருஸ்தவப் பிரச்சாரகர்கள் இரண்டாயிரம் டிகிரி வெப்பத்தில் அந்த நிக்கலைக் கனிமத்திலிருந்து எரித்து எடுத்தார்கள், வெளியே பொழியும் பனிமழை அந்த உருக்கு உலையில் முதல்நாள் என்ன உருக்கப்பட்டதோ அதை ஒட்டிய நிறத்தில் இருந்தது: இரும்பானால் சிவப்பு, கோபால்ட் ஆனால் நீலம், நிக்கல் என்றால் முட்டை மஞ்சள் நிறம். எங்கள் தோல்களில் பரவிய சொறிகளின் தீவிரத்தை வைத்து எங்கள் பொருளாதாரத்தின் நிலையை நாங்கள் கணக்கிட்டோம். ஒரு சிகரெட்டைக் கூடப் பற்ற வைக்காதவரும் கூட புகைபிடிப்பவர்களின் இருமலைப் பெற்றிருந்தனர். ஆனால் சுரங்க நிறுவனம் எங்களைப் பராமரித்தது: கனிம ஊற்றுத் தலங்களில் விடுமுறை நாட்கள், பன்னாட்டுத் தொழிலாளர் தினங்களின் போது நகரம் முழுதும் விழாக்கள், ஆறு வித நேரப் பிரிவுகளில்[5] இருந்த எந்த நகரத்தையும் விட அதிகமான முனிஸிபல் ஊதியங்கள். எங்கள் அப்பாக்கள் நோய்வாய்ப்பட்டால், நிறுவனம் மருத்துவ மனைகளில் படுக்கைகளைக் கொடுத்தது. அவர்கள் இறந்தால் புதைக்க சவப்பெட்டிகளையும் கொடுத்தது.

இத்தனைக்கும் நடுவில், காலினா எங்கள் எதிர்பார்ப்புகளைத் தோற்கடித்தாள், நாங்கள் அவற்றை கீழே இறக்க முயன்ற வேகத்தைக் காட்டிலும் வேகமாக அவள் தோல்விகள் இருந்தன. அவள் பெயரை வகுப்புப் பட்டியலில் பார்த்த பாலே நடனப் பயிற்சியாளரின் முதல் கட்ட உற்சாகம் சீக்கிரமே வற்றிப் பெரும் ஏமாற்றமாயிற்று. பாட்டியின் அழகான உடல் வாகை அவள் பெற்றிருந்தாலும், காலினாவின் நடனம் அச்சத்துக்குள்ளான நெருப்புக் கோழியின் நளினத்தைத்தான் கொண்டிருந்தது. அடிப்படை பார் தேகப்பயிற்சிகள் அவளைக் குப்புறத்தின. நிகழ்ச்சிகளில், நல்ல வேளையாக, அவள் மிகச் சிறிய பாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்டாள். ஆனால் நாம் அத்தனை கடுமையாக இருக்கக் கூடாது: அவள் வேறு யாருடைய பேத்தியாகவோ இருந்திருந்தால், அவளுடைய நடனத்தைப் பார்க்கையில் அவளுக்கு உள்காதுகளில் கோளாறு இருப்பதால் கஷ்டப்படுகிறாள் என்று நினைத்திருப்போம். தவிர, எங்கள் மீது எந்த எதிர்பார்ப்புகளின் பளுவும் இல்லை- யாரும் நாங்கள் எதிலும் மேன்மை பெறுவோம் என்று முன்கூட்டிச் சொன்னதில்லை – அதனால் எங்களுக்கு ஒருத்தர் வெற்றி பெறுவது விதிக்கப்பட்டது என்பது போலத் தெரிகையில், அது தோல்வியானால் என்ன ஆகும் என்பது பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை. அதனால் எங்களைத் தூண்டிக் கொண்டிருக்காதீர்கள். நாங்கள் உண்மையிலேயே அன்பாக இருக்கத்தான் விரும்பினோம்.

எங்களுடைய புது தாராள மனநிலையில், காலினா வேறு எதில் திறமையானவளாக இருந்தாள் என்று பார்ப்போம்: தன்னை எதிலும் பிறர் கவனத்தை ஈர்ப்பவளாக ஆக்கிக் கொள்வதில் அவள் தேர்ந்திருந்தாள். தன் அம்மாவின் தலைக் குட்டைகளிலேயே படுமோசமானவற்றைக் கொண்டு தைக்கப்பட்ட ஓர் ஆலிவ் பச்சை குட்டைப் பாவாடையில், எங்களது உயர்நிலைப்பள்ளிக் காலத்தில் முதல் வருடத்து விருந்து ஒன்றுக்கு அவள் வந்தாள். நாங்கள் அப்படி ஒரு உடுப்பை அதற்கு முன் பார்த்ததே இல்லை- அந்த மிக அடக்கமான ஆடை அவளுடைய இடுப்பைச் சுற்றியிருக்கையில் மிகவும் மானக் கேடான ஓர் ஆடையாக ஆகி இருந்தது. அந்தப் பாவாடை தொடையில் பாதியில் முடிந்தது, குளிக்கையில் உடலைத் தேய்க்கப் பயன்படுத்தும் கைத்துணி அளவுதான் இருந்தது, அவளுடைய கால்களின் மற்றப் பகுதிகளில் தோலில் முள்ளாகப் புடைப்புகள். பையன்கள் நன்றியுணர்வோடு வாயைப் பிளந்து கொண்டு அவளைப் பார்த்தார்கள், பிறகு திரும்பிக் கொண்டார்கள், காலினாவின் தோற்றம் ஏதோ கீழ்த் தரமான ஒரு காட்சி என்பது போல. என்ன சொல்வதென்று யாருக்கும் தெரியவில்லை. எங்களுக்குள் ரகசியமாகச் சொல்லிக் கொண்டோம், காலினா ஒரு பரத்தையாகி விட்டாள் என்று. ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும், நாங்களெல்லாம் எங்களுக்கென ஒரு மினிஸ்கர்ட்டைத் தைக்கத் துவங்கினோம்.

இந்த மினிஸ்கர்ட் கோல்யாவின் கவனத்தை ஈர்த்தது. காலினாவின் பாட்டியை தணிக்கையாளர்கள் அவள் தோற்றம் தந்திருந்த ஒளிப்படங்களிலிருந்தெல்லாம் முழுதுமாக எப்படி அழித்திருந்தார்களோ அதே போல, எங்களால் முடியுமென்றால், அவனை எங்கள் கதையிலிருந்து சுத்தமாக அழித்து விடுவோம். கவனியுங்கள், கோல்யா தன் இரண்டு மீட்டர் உடலில் நூறு மீட்டர் திமிரை ஏற்றி இருந்தவன். அவனிடம் நீங்கள் சிறிது மதிப்பைக் கூடப் பெற முடியவில்லை என்பதால், உங்களை சுயமதிப்பிழக்கச் செய்யக் கூடியவன். எப்போதும் சாய்ந்தபடியோ, படுத்தபடியோ, பக்கவாட்டில் நகர்ந்தபடியோ இருந்தவன், அவனுடைய இருப்பே அவனுடைய கோணலான தொப்பியால் முத்திரையிடப்பட்டிருந்தது. இன்னொரு நாட்டில் அவன் ஒரு முதலீட்டு வங்கியாளனாக ஆகி இருப்பான், ஆனால் இங்கே அவன் ஒரு வளர்ந்து ஒரு கொலைகாரனாகத்தான் ஆனான், அதுவும் மிக மோசமான வகைக் கொலைகாரனாக, எங்களிலேயே ஒருத்தரைக் கொன்றவனாக ஆனான்.

காலினாவுக்கு அது முன்கூட்டித் தெரிந்திருக்க ஏதுவில்லை. எங்களில் யாருக்குமே அது தெரியவில்லை. முதல் சந்திப்புக்கு அவன் காலினாவை மெர்குரி ஏரியைச் சுற்றி நடக்க அழைத்தான். ஆமாம், அந்த மெர்க்குரி ஏரிதான். நகரத்தின் உருக்கு ஆலைகளிலிருந்து பெருகும் மோசமான வேதியல் கழிவுகள் நிரம்பிய, மனிதரால் உருவாக்கப்பட்ட ஏரி. அதுவும் முதல் சந்திப்புக்கு. சும்மா சொல்லவில்லை. ஆனால் இது நினைக்கவே சோகத்தைக் கொடுப்பது. நாங்கள் மறக்காவிட்டாலும், நீங்களாவது கோல்யாவை மறக்கலாம்.

அவளுடைய மினிஸ்கர்ட் பள்ளிக் கூடத்தையே அதிர வைத்தது என்றாலும், சுரங்க நிறுவனங்களின் கூட்டமைப்பு தன் ஐம்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியபோது அந்தக் கொண்டாட்டத்தில் காலினா நடனமாடாமல் இல்லை. க்ரெம்லினிலிருந்து அதிகாரிகள் ப்ரொபெல்லர் விமானத்தில் எங்கள் பகுதிக் கட்சித் தலையைக் கொண்டாட வந்தார்கள். எங்களுடைய சிறிதும் திறமையே அற்ற அதிகாரிகள் பதக்கங்களும், பாராட்டுப் பத்திரங்களும் பெற்றார்கள். கார்பசொவின் ஆட்கள் எங்களிடம், நீங்கள் உலகின் மேல் நிலையில் வசிக்கிறீர்கள், அதனால் உலகின் இதர மக்கள் உங்களை அண்ணாந்து பார்க்கிறார்கள் என்று சொன்னார்கள். கட்சியின் பொதுச் செயலாளர், ஒரு விடியோ பதிவு மூலம் அவர்களுக்கு நன்றி சொன்ன போது எங்கள் அப்பாக்கள் பெருமிதத்தோடு சிரித்தார்கள். நீங்கள் சோவியத் யூனியனின் எரிபொருளை மட்டும் தோண்டி எடுக்கவில்லை, அவர் அறிவித்தார், சோவியத் யூனியனின் எரிபொருளே நீங்கள்தான். இறுதி நாள் இரவில், நகர மைய அரங்கில் ஒரு பாலே நடனத்தோடு கொண்டாட்டங்கள் முற்றுப் பெற்றன. பால்ஷாய் மேலும் கீரோவ் நாட்டியக் குழுவினர் முக்கியமான பாத்திரங்களுக்கென விமானங்களில் வந்திறங்கினர். எல்லா எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி, மேடையில் பின்பகுதியில் ஆடும் துணை நாட்டியக்காரிகளில் ஒருத்தியாக காலினா தேர்ந்தெடுக்கப்பட்டாள். பனிரெண்டு கிருஸ்தவ பிரச்சாரகர்கள் இரண்டு வாரங்கள் முன்னர் மூடப்பட்டிருந்தனர், அதனால் ஜூலை சூரியன் மிச்சமிருந்த மேக மூட்டத்தை ஊடுருவி உள்ளே ஒளி பாய்ச்சியது, காலினாவை அது ஒளியூட்டிக் காட்டியது.

இன்னொரு கண்டத்தில் ஒரு சுவர் விழுந்தது, சீக்கிரமே எங்களுடைய சோவியத் சோஷியலிஸ்ட் குடியரசுகளின் ஒன்றியம் கரைந்து போய் விட்டது. ஆலியக் வோரனோவ், “ஒரு புது ரஷ்யர்”, மேலும் எதிர்கால ஆளும் குறுங்குழுவினர், உள்ளூர் கட்சித் ‘தலை’க்குப் பதிலாக வந்தார். எழுபது வருடங்களில் முதல் தடவையாக, எங்கள் நகரம் திறந்து கொண்டது, எங்களில் சிலர் வெளியேறினார்கள். ஒருத்தி ஓம்ஸ்க்-நவஸிபிர்ஸ்க் ரயில் பாதையில் பயணச் சீட்டு சோதனையாளராக வேலை கிட்டிப் போனாள், ஒரு ரயில் பொறியாளரை மணந்து கொண்டு, மூன்று பையன்களையும் பெற்றுக் கொண்டாள். ஒருத்தி வொல்கொ க்ராட் நகரில் இயற்பியல் படிக்க உபகாரச் சம்பளம் பெற்றுப் போனாள். இன்னொருத்தி தான் வலைத் தொடர்பு மூலம் சந்தித்த ஒரு பியானோ சுருதி கூட்டுபவரைத் திருமணம் செய்து கொள்ள அமெரிக்காவுக்குப் போனாள். ஆனால் எங்களில் பெரும்பாலார் தங்கினார்கள். உலகம் தவறான பாதையில் சுழன்றது. அது வீட்டிலிருந்து தொலைவில் அலையும் நேரமாகத் தெரியவில்லை.

கோல்யா – லஞ்சம் கொடுத்துப் பல்கலையில் நுழைய முடியாத எங்கள் வயதொத்த பல பையன்களைப் போலவே – செச்சென்யாவில் போர் வலுக்கத் தொடங்கியபோது ராணுவத்தில் சேரக் கட்டாயமாக அழைக்கப்பட்டான். போகுமுன், காலினாவிடம் தன்னை மணந்து கொள்ளும்படி ஒரு மளிகைக்கடையில் காய்கறி விற்கும் பகுதியில் நிற்கையில் அவன் கேட்டான், அவனுடைய காதல் எத்தனை கற்பனை வளம் கொண்டது என்பதை உங்களுக்குக் காட்ட அது ஒன்றே போதுமானது. மேலும் அவள் அப்போது கர்ப்பம் தரித்திருந்தாள். ராணுவம் அப்போது ஒரு குழந்தைக்கு முழுப் பொறுப்பாக இருந்த, அல்லது இரு குழந்தைகளோ அதற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, தந்தை என்றால் அவர்களுக்குக் கட்டாய ராணுவ சேவையைச் சில வருடங்கள் தள்ளி வைக்க ஒத்துக் கொண்டிருந்தது. எனவே இது காலினாவுக்கும், கோல்யாவுக்கும் சில தேர்வுகளைக் கொடுத்தது: அவர்கள் உடனே திருமணம் செய்து கொண்டு, சீக்கிரமே விவாக ரத்தும் செய்து கொண்டால் கோல்யா தான் குழந்தைக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டி இருப்பதாகக் காட்டலாம், அல்லது திருமணம் செய்து கொண்டு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்று நம்பி இருக்கலாம். நாங்கள் காலினாவை இரண்டையும் செய்யாமல் இருக்கும்படி தூண்டினோம். அவளுக்குப் பதினெட்டு வயதுதான் ஆகி இருந்தது. அவளுக்கு இன்னும் முழு வாழ்வும் இருந்தது, அவசர முடிவுகளையோ, அல்லது மாற்ற முடியாத முடிவுகளையோ செய்ய அதில் நிறைய அவகாசம் இருந்தது. இப்போது புத்திசாலித்தனமாக நடந்து கொள். கர்ப்பத்தையும், அந்த உதவாக்கரை ஆண் நண்பனையும் ஒரே ஒரு தடவை டாக்டர் ஒருத்தரிடம் போய் வந்தால் வேறு விதமாகக் கவனித்துக் கொண்டு விடலாம். எங்களுடைய நன்கு யோசித்துச் சொல்லப்பட்ட புத்திமதிகளை எல்லாம் தாண்டி, அவள் கோல்யாவை இன்னும் காதலித்தாள். நாங்கள் வளர்ந்த போது பார்த்த தொலைக்காட்சி நாடகங்களும், சோகத்தில் முடிந்த காதலர்கள் வாழ்க்கைக் கதைகளும், எல்லாத் தடைகளையும் மீறி விடும் காதலர் கதைகளும், பார்க்கப் போனால், எல்லாமே அற்புதங்களை விரிக்கும் கதைகள், தொலைக் காட்சி செய்திகளைப் போலவே: ஆனால் எதுவும் எப்போது தெளிவாகப் புரிகிறது என்றால் அது பிறருக்கு நடக்கும்போதுதான் அப்படித் தெளிவாகத் தெரிகிறது. நாங்களுமே மணந்த நபர்கள் எல்லாம், அவர்களை வேறு பெண்கள் மணந்திருந்தால் நாங்கள் அப்பெண்களைப் பார்த்து இரக்கப்பட்டிருக்கக் கூடிய வகை ஆட்கள்தான். கோல்யா ராணுவத்தால் போருக்கு அனுப்பப்பட்ட பிறகு, காலினா ஏதோ சிறுத்துப் போனவளாக, துன்பப்பட்டவளாக, வெறுமனே குறைந்தவளாக ஆகி இருந்தாள். நாங்கள் அந்த உறவின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டோமா? காலினா அதற்கு முன்பு பெரும் கட்டிடங்களில் இருக்கும் பலவண்ணக் கண்ணாடிகளைப் போல மின்னினாள், ஆனால் அவளுக்கு சூரிய ஒளியாக இருந்தவன் கோல்யா என்று நாங்கள் கற்பனை கூடச் செய்யவில்லை.

அந்த மருத்துவ மனைக்கு நாங்கள் அவளை நடத்தி அழைத்துப் போனோம், முடிந்த பிறகு வீட்டுக்கு நடத்தி அழைத்து வந்தோம். நாங்கள் அவளைப் பற்றி பெருமிதம் கொண்டிருந்தோம். நாங்கள் அவளுக்காக வருத்தப் பட்டோம். அவளுக்குத் தேவைக்கு உதவ நாங்கள் அங்கே இருந்தோம்.

நிக்கல் கூட்டு நிறுவனத்தில், காலினா ஒரு டெலிஃபோன் ஆபரேட்டராக வேலை பார்த்தபடியே, செவ்வாய் மாலைகளில் கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கும் சென்றாள். முதலாவது மிஸ் சைபீரிய அழகிப் போட்டிக்கான முதல் சுவரொட்டி எங்கள் மர பஸ் நிறுத்தத்தில் ஒட்டப்பட்டதை நாங்கள் பார்த்திருந்த போது காலினாவும் எங்களோடு இருந்தாள். அது இளமை, அழகு, திறமை எல்லாம் உள்ள பெண்களை நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு வர அழைத்தது. நாங்கள் காலினாவைப் பார்த்தோம். அவள் தன் இடுப்பை நோக்கினாள்.

இரண்டு வாரங்கள் கழித்து எங்களது பழைய பள்ளியின் நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டபத்தில் ஒத்திகைகள் துவங்கின. நாங்கள் ஒவ்வொருவராக மேடை ஏறினோம், எங்கள் ஒப்பனை பல அடுக்குகள் கொண்டிருந்தது, எங்கள் கால்கள் ஆடைகளால் மறைபடாமல் தெரிந்தன. அந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பவரைத் தேர்ந்தெடுக்கும் இயக்குநர், எங்களைச் சுற்றி வந்தார், பீட் கிழங்கை பாட்டிகள் அழுத்திப் பார்ப்பது போல எங்கள் உடலின் திண்மையைச் சோதிக்க,தொடைகளைத் தட்டினார், இடுப்புகளைப் பிடித்துப் பிசைந்தார். ஒரு சுற்றுக்குப் பிறகு எங்களில் பெரும்பாலானரை வெளியேற்றினார்கள். காலினாவை அல்ல. அவளுடைய தலைக்குட்டை மினிஸ்கர்ட்டில் பார்த்த போது அந்த இயக்குநர் தன் பாடு தீர்ந்த மாதிரி பெருமூச்சு விட்டார். அவளைச் சுற்றிச் சுற்றி வந்தார், அவளுடைய தோலைத் தொடாமல், ஸ்கர்ட்டின் கீழ் நுனியை மேய்ந்தார். “உன்னுடைய திறமை என்ன?” என்று கேட்டார். “பாலே,” என்றாள் காலினா. அவர் தலையசைத்து ஏற்றார், “உன்னுடைய கால் நுனிக் காலணிகளோடு நவஸிபிர்ஸ்க்குக்கு வா.”

சீக்கிரமே காலினா எல்லா இடங்களிலும் இருந்தாள். செய்தித்தாள்களில் ஐம்பத்து ஏழு நாட்கள் தொடர்ந்து அவள் பெயர் வந்தது. அவள் எங்களுடைய ஒரே பிரதிநிதியாக மட்டும் இல்லை நவஸிபிர்ஸ்க்கில், மிஸ் சைபீரியா போட்டியை விளம்பரப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று போட்டியாளர்களில் ஒருத்தியாகவும் இருந்தாள். எங்களுடைய பெற்றோர் அல்லது ஆண் நண்பர்களின் முகங்களை விட அவள் முகத்தை அதிக தடவைகள் பார்க்கும்படி ஆயிற்று. எங்களுடைய முகங்களைக் கண்ணாடியில் நாங்கள் பார்த்ததையும் விட அதிகம் தடவைகள் அவள் முகத்தைப் பார்த்தோம்; அந்த முகம் எங்கள் கொடியாக ஆயிருந்தது.

காலினா இன்னமும் கோல்யாவைக் காதலித்திருக்கக் கூடும், ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் வெள்ளி நிற மெர்ஸீடிஸ் பென்ஸ் ஒன்றில் அவள் ஏறிக்கொள்ள அது தடையாக இல்லை. “அவள் பெரிய ஆளாகி விட்டாள்,” என்றார்கள் எங்கள் அம்மாக்கள், நாங்கள் அவர்கள் இருவரையும் சேர்ந்து பொதுவில் பார்க்கவில்லை என்றாலும் நாங்களும் ஒத்துக் கொண்டோம். ரஷ்யாவின் பதினான்காவது பணக்காரனாக ஆகும் வயதில்லை ஆலியெக் வோரனோவுக்கு. முப்பத்தி ஐந்து வயதுதான் ஆகி இருந்தது. நிக்கல் கூட்டமைப்பு ஏலத்தில் விற்பனைக்கு விடப்பட்ட போது, அவன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், விலை போன அதிகாரிகள், குற்றக்கும்பல் தலைவர்கள் போன்றாரிடம் இருந்து திரட்டிய நிதியை வைத்து அதை வாங்கினான். அந்த ஏலம் நான்கரை வினாடிகள்தான் நீடித்தது. 250,100,000 டாலர்கள் கொடுத்து வாங்கினான். ஏலத்தைத் துவக்கப் பயன்படும் முதல் விலையை விட 100 டாலர்கள்தான் கூடுதலாகக் கொடுத்தான். வருடந்தோறும் பல பிலியன் டாலர்கள் வருமானமாகக் காட்டும் ஒரு நிறுவனம் எப்படி இருநூற்றைம்பது மிலியன் டாலர்களுக்கு விற்கப்பட முடியும்? அந்த நிறுவனத்தின் சொத்துடைமையோ பங்குகளாகப் பிரிக்கப்பட்டு அந்தக் கூட்டமைப்பின் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டு இருந்தது. அந்த பங்குகள் முழு விலைக்கு விற்பதானால் அல்லது வேறு எதற்கோ ஈடாக மாற்றப்பட வேண்டுமானால், மாஸ்கோவுக்கு நேரடியாகப் போய்த்தான் அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஆக்கப்பட்டிருந்தன. எங்கள் அப்பாக்களுக்கு வேறு வழியில்லாமல், லெனின்ஸ்கி ப்ராஸ்பெக்டில் (பெருவீதியில்) நிறுவப்பட்டிருந்த சிறு கடைகளில் அவற்றை விற்க வேண்டி வந்தது. அந்தக் கடைகளோ வோரனோவின் எடுபிடிகளால் நடத்தப்பட்டவை, அந்த பங்குகளின் முழுவிலையில் சிறு பாகத்துக்குத்தான் அவை பங்குகளை வாங்கின. படுமோசமான சுவாச நோய்களுக்குச் சிகிச்சைக்கு ஆகும் செலவுக்குப் போதுமான வருமானம்தான் அந்த விற்பனையில் கிட்டியது. அதற்குப் பிறகு சிறிது நாட்களிலேயே வோரனோவின் வெள்ளி மெர்ஸீடிஸ் கார் காலினா வசித்த அடுக்ககக் கட்டடங்களின் வாயிலில் காத்திருப்பதாக எங்களுக்கு வதந்திகள் கிட்டின, மிஸ் சைபீரியா விளம்பரங்கள் பங்குகளை வாங்கும் கடைகளின் ஜன்னல்களில் தோன்றத் துவங்கின.

(தொடரும்)

மூலக் கதை: ஆந்தொனி மார்ரா: ‘க்ராண்ட் டாட்டர்ஸ்’ எனும் கதை. இது நாரெடிவ் பத்திரிகையில் 2011 ஆம் ஆண்டு பிரசுரமான சிறுகதை. பார்க்க: https://www.narrativemagazine.com/issues/winter-2011/fiction/granddaughters-anthony-marra
நன்றி: நாரெடிவ் பத்திரிகைக்கு

[பிற்பாடு 2015 ஆம் ஆண்டு மார்ராவின் சிறுகதைத் தொகுப்பு நூலான ‘த ட்ஸார் ஆஃப் லவ் அண்ட் டெக்னோ’ என்ற புத்தகத்தில் பிரசுரமாகி இருக்கிறது.]

மொழிபெயர்ப்பு: மைத்ரேயன்


பின் குறிப்புகள்:

[1] ஆறு கிராம்கள் ஈயம் = துப்பாக்கிக் குண்டு

[2] எம்கவெடெ (ரஷ்ய மொழி உச்சரிப்பு) = NKVD என்று இங்கிலிஷில் சுருக்கி அழைக்கப்படும் இந்த அமைப்பு ரஷ்ய மொழியில் НКВД என்று வரும். முழுப் பெயர் ரஷ்ய மொழியில் Народный комиссариат внутренних дел. இங்கிலீஷில் Narodnyy Komissariat Vnutrennikh Del என்பது. ரஷ்ய உள்துறை அமைச்சர் அலுவலகம். இது 1934 இல் சோவியத் அரசின் காவல் மற்றும் உளவுத்துறையாக மாற்றப்பட்டது. ஸ்டாலினியக் கொடுங்கோலாட்சியில் பல லட்சம் மக்கள் எந்த நீதிமன்றத்திலும் நிறுத்தப்படாமல், அடாவடியாகக் கொல்லப்பட்டதும், கட்டாய உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டதும் இந்தத் துறையின் ‘அரிய சாதனைகள்’.

[3] гла́сность என்று ரஷ்ய மொழியில் எழுதப்படும் சொல். க்லாஸ் நெஸ்ட் என்று ரஷ்யர்களும், க்லாஸ்நோஸ்ட் (Glasnost) என்று இங்கிலிஷிலும், க்லாஸ்நாஸ்ட் என்று பல யூரோப்பிய மொழிகளிலும் உச்சரிக்கப்படும் சொல். 80களின் இறுதிச் சில வருடங்களில் கார்பசோஃப் எனும் முன்னாள் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், நாட்டு அதிபருமாக இருந்தவர் கொணர்ந்த அரசியல் கொள்கை மாறுதல். ரகசியத்தாலேயே இயங்கி வந்த சோவியத் யூனியனின் நிர்வாக முறையை, அரசை, திறந்த முறைக்கு மாற்றப் போவதாகச் சொல்லி கார்பசோஃப் கொணர்ந்த மாறுதல், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குக் காரணங்களில் ஒன்றாகியது. இவருடைய க்ளாஸ்நெஸ்ட் கொள்கை நிலவிய காலகட்டத்தில் சோவியத் யூனியனில் ஓரளவு கூடுதலான சுதந்திரம் குடிமக்களுக்குக் கிட்டியது என்பது நிஜம்.

[4] இவை அன்று யூரோப்பில் பிரபலமாகி இருந்த வகை பாப் இசைக் குழுக்களின் இசை. Rib Records, Bone music, Skeleton songs என்று இங்கிலிஷில் இவை அறியப்பட்டிருந்தன. மேலும் தகவல்களுக்கு இங்கே செல்லவும்: https://www.artsjournal.com/rifftides/2011/03/rib-music.html

[5] இன்றைய ரஷ்யா, அன்றைய சோவியத் சாம்ராஜ்யம், உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பு கொண்ட நாடாக இருந்தது. மொத்தப் பரப்பில் இன்றைய ரஷ்யாவுமே உலகின் மிகப் பெரிய நாடு, நிலப்பரப்பில் மிகப் பரந்த நாடும் கூட. அது அகல விரிந்திருப்பதால் அந்த நாட்டில் ஆறு கால அளவுகள் நிலவுகின்றன. கிழக்குக் கரையோரத்து நகரத்துக்கும், மேற்குக் கரையோரத்து நகரத்துக்கும் இடையே ரஷ்யாவில் பதினோரு காலக் கட்டங்கள் உண்டு. அவற்றில் இங்கு ஆறு தொழில் மயமான நிலப்பகுதிகளின் கூலிகள் ஒப்பிடப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.