ஜோவெல் கெர்கிஸ் [1]

பருவநிலை அறிவியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியர்களுடைய பிரதான அமைப்பு ஆஸ்திரேலிய வானிலை மற்றும் கடலாய்வு சங்கம் (Australian Meteorological and Oceanographic Society). அதன் வருடாந்திரக் கூடுகையில், பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியா எப்படி பாதிக்கப்படக்கூடும், அது நம் கொள்கைகளுக்கு எப்படிப்பட்ட சவால் விடுக்கிறது, என்பது குறித்து ஜூன் மாதம் நான் தலைமையுரை ஆற்ற வேண்டியிருந்தது. தேர்தலுக்குப்பின் நாம் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் அறிவியல் யதார்த்தம் குறித்து ஒரு சுருக்கமான சித்திரம் அளிப்பதற்கான வாய்ப்பு கிட்டியிருப்பதாக நினைத்தேன்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தேசங்களுக்கிடையிலான பருவநிலை மாற்ற குழு (United Nations Intergovernmental Panel on Climate Change’s (IPCC)) ஆறாம் மதிப்பீட்டு அறிக்கையை தற்போது தயாரித்து வருகிறது. அதன் பிரதான ஆசிரியர்கள் பத்து பன்னிருவரில் ஒருவள் என்ற வகையில் கோளெங்கும் விரியும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தையும் வேகத்தையும் ஆழமாய் கவனித்து வருகிறேன். கடந்த ஆண்டு நான் க்ளைமேட் கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டேன். பருவநிலை அறிவியல் மற்றும் அது சார்ந்த கொள்கை குறித்து பொதுமக்களுக்கு நிபுணத்துவ ஆலோசலனை அளிக்கும் சுதந்திர, ஆஸ்திரேலியாவின் பிரதான, அமைப்பு அது. சுருக்கமாய்ச் சொன்னால், பருவநிலை பேரழிவின் கலங்கச் செய்யும் நிதர்சனத்தைக் காணும் வெகுச் சில ஆஸ்திரேலியர்களில் ஒருவளாய் இருக்கும் நிலையை நான் எதிர்கொளள வேண்டியதாகிறது.
இதற்கான உரை தயாரிக்கும்போது குடலைப் பிடுங்கும் உணர்வொன்றை அனுபவித்தேன். உண்மையின் பயங்கரத்திலிருந்து தப்பி மறையும் இடம் எதுவும் இனி இல்லை என்ற புரிதல்தான் அது.
கடந்த முறை இந்த உணர்வு தோன்றியபோது நான் என் அப்பாவைக் காண மருத்துவமனை சென்றிருந்தேன். அவரது மூளையில் மிக மோசமான இரத்தக்கசிவு ஏற்பட்டு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சுயநினைவின்றி கிடக்கையில் நான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ஜன்களில் ஒருவருடன் சேர்ந்து அவரது சிடி ஸ்கானைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது மூளையின் படத்தில் கிட்டத்தட்ட கால்வாசி பகுதியை மறைத்திருந்த இருட்பகுதி, அங்கு குளமாய்த் தேங்கியிருக்கும் ரத்தம் என்பதை அவர் மிக மென்மையாய் விளக்கிச் சொன்னார். ரத்தக்கசிவைத் தடுத்து, அந்தப் பகுதியை வற்றச் செய்ய அவர்கள் தம்மாலான அனைத்தையும் செய்திருந்தபோதிலும், சேதத்தின் பேரழிவுத்தன்மை மறுக்க முடியாததாக இருந்தது. கண் முன் இருந்த ஆதாரம் மூர்க்க உண்மையைத் தெளிவாய் உரைத்தது- அதன் முழு எதார்த்தம் என் வயிற்றை முடிவில்லா பாதாளத்தை நோக்கி உந்தித் தள்ளியது.
இக்கணம் பருவநிலை அறிவியல் ஆய்வாளர்கள் அளிக்கும் ஆதாரங்கள், நிபுணர்களுக்கும்கூட, அதே போன்ற பேரச்சம் விளைவிக்கின்றன.
புவி வெப்பமடைதலின் விளைவுகளை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் அளவையொன்று, “சமன்வய பருவநிலை கூருணர்திறன்” (“equilibrium climate sensitivity”) என்று அழைக்கப்படுகிறது. புவி தொழில்மயமாவதற்கு முன் வளிமண்டத்தில் நிலவிய கரியமில வாயுவின் அளவு இரட்டிப்பதன் விளைவாய் புவிப்பரப்பில் அதிகரிக்கக்கூடிய வெப்பத்தின் முழு அளவு என்று அது வரையறை செய்யப்படுகிறது. பருவநிலை ஆய்வின் புனித லட்சியம் என்றும் அது சில சமயம் சொல்லப்படுகிறது- ஏனெனில், புவி தொடர்ந்து சூடேறுகையில் மானுட சமூகத்திற்கு ஏற்படக்கூடிய குறிப்பட்ட தன்மை கொண்ட வெவ்வேறு ஆபத்துக்களை எண்களைக் கொண்டு புரிந்து கொள்ள அது உதவுகிறது.

தொழில்மயமாவதற்கு முன் புவியில் மில்லியனுக்கு 280 பங்கு கரியமில வாயு இருந்தது (280 ppm). அது இப்போது கிட்டத்தட்ட 410 ppm என்று அதிகரித்திருக்கிறது. புவியில் குறைந்தபட்சம் மூன்று மில்லியன் ஆண்டுகள் இத்தனை கரியமில வாயு இருந்ததில்லை. இதைக் கட்டுப்படுத்த மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லையெனில், 2060ஆம் ஆண்டு 560 ppm என்ற அளவையும் நாம் தொடக்கூடும்.
2013ஆம் ஆண்டு ஐபிசிசியின் ஐந்தாம் மதிப்பீட்டு அறிக்கை பதிப்பிக்கப்பட்டபோது, கரியமில வாயு இது போல் இரட்டிக்கும்போது புவி 1.5°C முதல் 4.5°C வெப்பமடைந்து புதிய சமநிலையில் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளக்கூடும் என்று கணிக்கப்பட்டது. எனினும், 2021ஆம் ஆண்டு வரவிருக்கும் தற்போதைய ஐபிசிசி மதிப்பீட்டை அடைய பயன்படுத்தப்படும் புதிய உலகளாவிய பருவநிலை மாதிரிகளை (global climate models) கொண்டு கணிக்கும்போது முன்னிருந்த மாதிரிகளைக் கொண்டு அடையப்பட்ட வெப்பத்தைவிட அதிக வெப்பம் சாத்தியம் என்று அறிகிறோம். கரியமில வாயு இரட்டிப்பதன் விளைவாய், 2.8°C முதல் 5.8°C வெப்ப மிகுதல் சாத்தியம் என்று அறிகிறோம். இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில், யுனைடட் ஸ்டேட்ஸ், யுனைட்டட் கிங்க்டம், கனடா, பிரான்சு ஆகிய தேசங்களின் முன்னணி ஆய்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட புத்தம் புதிய மாதிரிகளில் குறைந்தபட்சம் எட்டு மாதிரிகள், 5°C அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு வெப்பம் அதிகரிப்பதைக் காட்டுகின்றன.
இந்த ஆண்டு மார்ச் மாதம் பருவநிலை வடிவமாதிரி கூட்டுரையாடல் (climate modelling workshop) ஒன்றில் இந்த முடிவுகள் முதலில் வெளியானபோது என் ஐபிசிசி சகாக்களிடமிருந்து வந்த பீதிவயப்பட்ட மின்னஞ்சல்கள் என் உள்பெட்டியை நிறைத்தன. வடிவமாதிரிகள் உண்மையாய் இருந்தால் என்னாகும்? பூமி சாய்புள்ளியை (tipping point) ஏற்கனவே கடந்து விட்டதா? நாம் இப்போதே அதிரடி பருவநிலை மாற்றத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோமா?
வடிவமாதிரியின் சோதனை ஓட்டங்கள் அனைத்தும் இன்னும் பகிரப்படவில்லை. ஆனால் உலகின் முதனிலை வடிவமாதிரிகள் தனிப்பட்ட சோதனைகளில் அதே பதற வைக்கும் முடிவுகள் அளிக்கின்றன என்றால், கவலைப்படாதிருப்பது கடினம்.
டிசம்பர் 2015ல் ஐக்கிய நாடுகளின் பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, அது குறிப்பிட்ட ஒரு இலக்கை வரையறை செய்தது: 1850-1900 காலத்தில், இயந்திரமயமாவதற்கு முன் நிலவிய பருவநிலையுடன் ஒப்பு நோக்க, உலகின் வெப்பம் கூடுதலை 2°C என்ற அளவுக்கு மிகவும் கீழே வைப்பது,1.5 °C என்ற அளவையொட்டி கூடுமானவரை நிலைநிறுத்துவது. போற்றத்தக்க நோக்கம்தான் எனினும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தேசங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் எதுவும் சுமத்தப்படவில்லை, ஒப்பந்தப்படி நடந்து கொள்ள அவற்றை நிர்பந்திக்கும் நடைமுறையும் இல்லை. மாறாய், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில், பொதுவெளியில் அறிவிக்கப்பட்ட தீர்மான தேசீய பங்களிப்புகளின் (Nationally Determined Contributions (NDCs)) வரம்புக்குள் உமிழ்வைக் கட்டுப்படுத்த அத்தனை தேசங்களும் ஒப்புக் கொண்டன. அடிப்படையில், ஒவ்வொரு தேசமும் தான் விரும்பிய அளவில் பொதுநலம் கருதி நடந்து கொள்ளும்.

டிசம்பர் 2015ல் ஐக்கிய நாடுகளின் பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, அது குறிப்பிட்ட ஒரு இலக்கை வரையறை செய்தது: 1850-1900 காலத்தில், இயந்திரமயமாவதற்கு முன் நிலவிய பருவநிலையுடன் ஒப்பு நோக்க, உலகின் வெப்பம் கூடுதலை 2°C என்ற அளவுக்கு மிகவும் கீழே வைப்பது,1.5 °C என்ற அளவையொட்டி கூடுமானவரை நிலைநிறுத்துவது. போற்றத்தக்க நோக்கம்தான் எனினும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தேசங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் எதுவும் சுமத்தப்படவில்லை, ஒப்பந்தப்படி நடந்து கொள்ள அவற்றை நிர்பந்திக்கும் நடைமுறையும் இல்லை. மாறாய், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில், பொதுவெளியில் அறிவிக்கப்பட்ட தீர்மான தேசீய பங்களிப்புகளின் (Nationally Determined Contributions (NDCs)) வரம்புக்குள் உமிழ்வைக் கட்டுப்படுத்த அத்தனை தேசங்களும் ஒப்புக் கொண்டன. அடிப்படையில், ஒவ்வொரு தேசமும் தான் விரும்பிய அளவில் பொதுநலம் கருதி நடந்து கொள்ளும்.
மிக உயர்ந்த இலக்காய்த் தோன்றும் 1.5 °C டிகிரி அதிகரிப்பு என்ற அளவும்கூட கடற்பாறைகளை உருவாக்கும் பவளங்களை 70 முதல் 90 சதவிகிதம் அழித்துவிடும் என்று ஐபிசிசியின் “1.5°C புவி வெப்பமடைதல் குறித்த சிறப்பு அறிக்கை” (“Special Report on Global Warming of 1.5°C”) கூறுகிறது. இது சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. 2 °C கூடுதல் வெப்பமடையும்போது, வெப்பமண்டல கடற்பகுதிகளில் உள்ள பவளப்பாறைகளில் திடுக்கிட வைக்கும் அளவு, 99 சதவிகிதம் அழிந்து விடும். புவியின் உயிரி மண்டலம் (Earth’s biosphere) கோளளாவிய உயிர்க்காப்பு அமைப்பு, அதன் ஒரு கூறு முழுமையும் அழிக்கப்படும். பவளப்பாறைகளைச் சார்ந்து வாழும் கடல்வாழ் உயிர்களில் 25 சதவிகிதம் இதனால் ஆழமான, அளவிட முடியாத பின்விளைவுகளைச் சந்திக்கும்.
ஆக, பாரிஸ் ஒப்பந்தம் உண்மையில் என்ன செய்திருக்கிறது?
இயந்திரமயமாதலுக்கு முற்பட்ட நிலையை ஒப்பிடும்போது 2017ஆம் ஆண்டில் புவி 1°C வெப்பம் கூடியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் செயல்திட்டத்தின் “உமிழ்வு இடைவெளி அறிக்கை” (“Emissions Gap Report”) நவம்பர் 2018ல் வெளியிடப்பட்டது. அதன்படி, இன்றுள்ள முன்நிபந்தனையற்ற என்டிசிக்கள் உலகின் சராசரி வெப்பத்தை இயந்திரமயமாதலுக்கு முற்பட்ட நிலையுடன் ஒப்பிட இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.9°C முதல் 3.4 டிகிரி°C அதிகரிக்கும்.
தொழில்மயமாவதற்கு முற்பட்ட நிலையுடன் ஒப்பிட 2°C என்ற அளவில் வெப்பத்தை தடுத்து நிறுத்த இவ்வுலகு தன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும். இதுவே மோசமென்றால், உலகளாவிய வெப்பமாதலை 1.5°C என்ற அளவில் நிறுத்த, இந்த இலக்குகள் ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மைய அரசு, 2030 ஆம் ஆண்டுக்குள் 2005ஆம் ஆண்டில் நிலவிய உமிழ்வு அளவுக்குக் கீழ் 26 முதல் 28 சதவிகிதம் குறைப்பது தன் இலக்கு என்று அறிவித்திருக்கிறது. பருவநிலை நிபுணர்கள் அத்தனை தேசங்களும் இந்த இலக்கு கொண்டால், அது நூற்றாண்டு இறுதியில் 3°C முதல் 4°C வெப்பமாதல் என்ற அளவில் உலகைக் கொண்டு நிறுத்தவே உதவும் என்று கணிக்கின்றனர். ஆஸ்திரேலியா தன் பாரிஸ் ஒப்பந்த வாக்குறுதிகளை “ஒரே ஓட்டத்தில்”எட்டி விடும் என்று பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகிறார். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் செயல்திட்ட அறிக்கை, உள்ளபடியே அளவில் குறைந்த என்டிசிக்களை (தீர்மான தேசீய பங்களிப்புகள்) அடையத் தவறும் இருபது வளர்ந்த தேசங்களில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இருக்கும் என்று தெளிவாக அடையாளப்படுத்துகிறது.
இதுவரை அனுபவப்பட்ட 1°C வெப்பமாதலே கிரேட் பாரியர் பவளப்பாறைகளில் பாதியளவு சாகக் காரணமாக இருந்திருக்கிறது. புவியின் மிகப் பெரிய உயிரியின் சூழமைப்பு பேரழிவுக்குட்பட்டு நாசமடைவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த தேசத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் பேசும்போது கலவரப்படுத்தும் இத்தகவலைப் பகிர்கையில் நான் சற்று மௌனமாய் இருந்து உரை கேட்டுக் கொண்டிருப்பவர்கள் இதன் பொருளை உண்மையாகவே உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்யட்டும் என்று அவகாசம் அளிக்கிறேன்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம், நான் பேசும் நிகழ்வுகள் முடிந்தபின் என் ஹோட்டல் அறையிலோ ஊர் திரும்பும் விமானப் பயணத்திலோ இப்போதெல்லாம் நான் எதிர்பாராத வகையில் அடிக்கடி என்னையறியாமல் அழுது விடுகிறேன். என் பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று நான் தக்க வைத்துக் கொண்டிருக்கும் உறைந்த உணர்வுகளை அறிவியல் சுட்டும் நிதர்சன உண்மை இளக்கி விடுகிறது.இக்கணங்களில் என்னில் உடைந்து எழுவது தூய துயரமே. என் அப்பாவின் மூளையில் ஏற்பட்ட உடைப்பின் தீவிரத்தை உள்வாங்கிக் கொள்ளும்போது என் மனதில் ஏற்பட்ட வலியின் நிகர் உணர்வு இதுவொன்றே. திரும்பிச் செல்ல முடியாத இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது ஒரு வீரச் செயல்.
ஆனால் இந்நாட்களில் என் துயரம் வேகமாக ஆத்திரமாக மாறி வருகிறது. எரிமலையென வெடிக்கக்கூடிய ஆத்திரம். ஏனென்றால், எந்த ஐபிசிசி அறிக்கை வரப்போகும் பேரழிவு குறித்த ஒரு கோட்டுச் சித்திரத்தை அளிக்கிறதோ, அதில் பருவநிலை அறிவியல் விஞ்ஞானிகள் புவி வெப்பமடைதலை 1.5°C என்ற அளவில் கட்டுப்படுத்தும் சாத்தியத்துக்கு புவித்திட்பம் இடம் தருகிறது (geophysically possible) என்றும் தெளிவாகச் சொல்கின்றனர்.
இதுவரை நிகழ்ந்துள்ள உமிழ்வுகள் மட்டுமே உலகளாவிய தட்பவெப்பத்தை தொழில்மயமாவதற்கு முற்பட்ட நிலையோடு ஒப்பிட 1.5°C டிகிரி மேல் உயர்த்த வாய்ப்பில்லை. மனிதனால் ஏற்படும் புவிவெப்ப வாயுக்களின் உமிழ்வு உடனடியாக சூன்யத்தைத் தொட்டால், இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 1°C என்ற அளவுக்கு மேல் தொடர்ந்து வெப்பமடைவதுஎன்பது அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் 0.5°C என்ற அளவே உயரக்கூடும் என்று ஐபிசிசி அறிக்கை கூறுகிறது. அதாவது, நாம் உடனே செயல்பட்டால், நிலைமையைச் சரி செய்யும் தொழில்நுட்பச் சாத்தியம் உண்டு. இதைச் சாதிக்கும் வகையில் வலுவான உலகளாவிய கொள்கைத் திட்டம் எதுவும் இல்லை என்பதே குறை.
மனித நாகரீகத்தின் அடித்தளமே அச்சுறுத்தப்படுகிறது என்ற நிலையில் இவ்வுலகு ஐநா இலக்குகளைத் தாண்டி வெகு தூரம் செல்லும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதைவிட மோசம், உலகளாவிய கார்பன் உமிழ்வுகள் இப்போதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாய், புவி வரலாற்றில் வெப்பமடைந்த பிற காலகட்டங்களில் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டன என்ற ஆய்வுக்கு விஞ்ஞானிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
பூமியின் அண்மைக்கால வரலாற்றில் புவி வெப்பமாதல் எத்தகைய நிலையை உருவாக்கியது என்பதன் மிக முழுமையான சுருக்கச் சித்திரம் ஜூன் 2018ல் முதல்நிலை இதழ்களில் ஒன்றான ‘நேச்சர் ஜியோசயன்ஸ்’சில் பதிப்பிக்கப்பட்டது. அது 17 தேசங்களைச் சேர்ந்த 59 முன்னணி நிபுணர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரை. கடந்த காலங்களில் 1.5°C முதல் 2°C வெப்பம் கூடியபோது அது தட்பவெப்ப மண்டலங்கள் இடம் பெயரப் போதுமானதாக இருந்தது, நிலம் மற்றும் கடலின் சூழியலமைப்புகள் ‘பரப்புவெளிகளை மாற்றியமைத்துக் கொண்டன’ (“spatially reorganize”).
இந்த மாற்றங்களின் விளைவாக க்ரீன்லாந்திலும் அன்டார்க்டிகாவிலும் கணிசமான அளவில் பனிப்பாறைகள் உருகத் துவங்கி நீண்ட காலம் நீடித்தது, உலகெங்கும் கடல் மட்டம் ஆறு முதல் பதின்மூன்று மீட்டர்கள் உயர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருந்தது.

புவியின் தட்பவெப்ப கடந்தகாலத்தை ஆய்வு செய்யும்போது 1.5°C முதல் 2°C அளவு வெப்பமாதலும்கூட நாம் இதுவரை புரிந்து கொள்ளாத வகையில் உலகை மாற்றியமைப்பதைப் பார்க்கிறோம். 3°C முதல் 4°C என்றால் எதையும் அனுமானிக்க இடமிருக்காது, ஆனால் நாம் இன்று அங்குதான் சென்று கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் வாழ முடியாதவையாகும், நம் தேசத்தின் பிற பகுதிகளை உச்சபட்ச பருவகால நிகழ்வுகள் நாளுக்கு நாள் மோசமாகச் சூறையாடும்.
இவ்வாண்டு ஆஸ்திரேலிய வானிலை மற்றும் கடலாய்வு சங்கத்தின் வருடாந்திர கூடுகை டார்வினில் நடந்தது. 1974ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் தினத்தன்று ட்ரேசி புயல் அந்நகரைத் தாக்கி கிட்டத்தட்ட மொத்தத்தையும் தரைமட்டமாக்கியது. அதன் வீடுகளில் 80 சதவிகிதம் உட்பட, நகரின் 70 சதவிகித கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 71 பேர் இறந்தனர், 48000 பேர் வீடிழந்தனர். 36000 பேர் ஊரை விட்டு வெளியேற்றப்படும் அளவுக்கு, அதிலும் பலர் ராணுவ ஹெலிகாப்டர்களில் மீட்கப்படும் அளவு, நிலைமை மோசமாக இருந்தது. பூதாகர பேரழிவு அது.
என் உரையில் அளிப்பதற்காக தகவல்கள் தொகுகையில் ட்ரேசி புயல் ஒரு எச்சரிக்கை விடுப்பது எனக்கு தெளிவாகியது. பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தாலன்றி, வெப்பமண்டல புயல்கள் தற்போதுள்ள புயல் மண்டலங்களின் தென் விளிம்புக்கு நகர்வதைப் பார்க்கப் போகிறோம்- தென்கிழக்கு க்வீன்ஸ்லாந்து, வட நியூ சவுத் வேல்ஸ் போன்ற பகுதிகளின் கட்டமைப்பு புயல் சேதங்களை எதிர்கொள்ளும் நிலையில் அமைக்கப்படவில்லை.
இப்பகுதிகளில் 36 லட்சம் பேர் வசிக்கிறார்கள்; நமக்கு வரப்போவதை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இல்லை என்பதுதான் எளிய எதார்த்தம்.
ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள் ஏன் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள் என்பதற்கு மிகவும் தர்க்கப்பூர்வமான காரணம் இருக்கிறது- பிணை வைக்கப்பட்டிருப்பதன் பெருமதிப்பு உண்மையாகவே திடுக்கிடச் செய்வதாக இருக்கிறது. கோள் தழுவிய அவசரநிலைக்கெதிர் மௌனமாய் இருப்பது இனி எனக்கும் ஒரு தேர்வாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அறிவியல் உண்மையிலிருந்து அரசு கொள்கை இந்நாட்டில் எவ்வளவு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, ஒரு அவசரமான, ஆனால் நடைமுறைக்கேற்ற தேசிய உரையாடல் இப்போது தேவைப்படுவது தெரிகிறது. இல்லையெனில், நிலைகுலைந்த கோளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பயங்கர உண்மையை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நம் வரலாற்றின் அச்சம் நிறைந்த இக்கட்டத்தில் வாழும் பருவநிலை விஞ்ஞானியாய், நான் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி, என் அப்பா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த இரவில் மருத்துவர் வெளிக்காட்டிய தொழில்முறை நிபுணத்துவத்தை நானும் அளிப்பதுதான். தரவுகளை தெளிவாக, கருணைக்கண் கொண்டு காண வேண்டும்.
பேரழிவின் அளவைக் குறைக்க முயற்சி செய்ய நமக்கு இன்னும் சற்று அவகாசம் இருக்கிறது. ஆனால் அவசர நிலையில் நடந்து கொள்வது போல் நாம் நடந்து கொள்ள வேண்டும். கேள்வி இதுதான், நம் மானுடத்தின் மிகச் சிறந்தவற்றை நம்மால் காலத்தே ஒன்று திரட்ட முடியுமா?
***
இங்கிலிஷ் மூலக் கட்டுரை: எழுதியவர் ஜோவெல் கெர்கிஸ். அது த மன்த்லி என்ற ஆஸ்த்ரேலியப் பத்திரிகையில் ’ The Terrible Truth of Climate Change’ என்ற தலைப்பில் பிரசுரமானது. [2]
மூலக் கட்டுரையை இங்கே காணலாம்: https://www.themonthly.com.au/issue/2019/august/1566136800/jo-lle-gergis/terrible-truth-climate-change
அல்லது இங்கு: https://www.commondreams.org/views/2019/08/05/terrible-truth-climate-change
தமிழாக்கம்: விசனன்
———————————
பின் குறிப்புகள்:
[1] ஆஸ்த்ரேலியாவின் தட்ப வெப்ப நிலை ஆய்வாளர் ஜோவெல் கெர்கிஸ் இன்று நன்கு தெரிய வந்த ஆய்வாளராகி இருக்கிறார். இவரது புத்தகம் ‘Sunburnt Country’ என்பது இன்று பிரபலமாகி வருகிற புத்தகம். இது ஆஸ்த்ரேலியாவின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களின் வரலாற்றையும், ஆஸ்த்ரேலியா என்ன மாதிரி கத்தி முனையில் நிற்கிறது, தட்ப வெப்ப நிலையில் இன்று ஏற்பட்டு வரும் மாறுதல்கள் எப்படி அந்த நாட்டைப் பாதிக்கக் கூடும் என்பதைப் பற்றிப் பேசுகிறது. இந்த ஆய்வாளரின் ஒரு நீண்ட உரையை இங்கே கேட்கலாம். https://youtu.be/8AGKOPkF6Kk
[2] ஜோவெல் கெர்கிஸின் வாழ்க்கை மிக ஏறுமாறாக அமைந்த ஒன்று. படித்து முடித்த பிறகு, வேலையில்லாது திண்டாடிய இவர் அரசுடைய உதவித் தொகை வேலைத் திட்டத்தில் அன்றாடக் கூலியாகக் கூட வேலை செய்திருக்கிறார். இவர் மீது தொடுக்கப்பட்ட பல தாக்குதல்கள்- இவரது ஆய்வுகளை மோசமான புள்ளியியல் அலசல் என்றும், அரசியல் என்றும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், அவை 2018 இல் உள்ளீடற்றவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும், இன்று இவருடைய ஆய்வின் முடிவுகள் கிட்டத்தட்ட நிஜமாக நடந்து வருகின்றன என்றும் ஒரு செய்தித்தாள் சொல்கிறது. கட்டுரையை இங்கே படிக்கலாம்: https://www.smh.com.au/environment/climate-change/in-the-hot-seat-joelle-s-journey-from-the-dole-to-a-global-role-20181218-p50n13.html