ஸெஸீலியா அஹெர்ன்
அவள் விழித்து எழுகிறாள், ஒட்டிக் கொண்டிருந் கண்ணிமைகள் பிரிந்து கொள்ளும் முன்பே தன் செல்பேசியை எட்டி எடுக்கிறாள். தன் கடைசி இன்ஸ்டாக்ராம் பதிவைச் சோதிக்கிறாள், தன் ஒளிப்படங்களைப் பார்வையிடுகிறாள், உருவுக்கு அருகில் சென்று பெருக்கி நோக்கி, படத்தினுள் சுற்றி நோக்கி, மற்றவர்கள் தன்னை எப்படிப் பார்வையிடுவார்கள் என்றும், தன்னைப் பற்றி என்ன தோற்றம் அவர்களிடம் பதியும் என்றும் கற்பனை செய்து பார்க்கிறாள். தன் நண்பர்களை ஒவ்வொருத்தராக எண்ணிப் பார்க்கிறாள், இந்தப் படங்கள் அவர்கள் ஒவ்வொருத்தரையும் எப்படித் தாக்கும் என யோசிக்கிறாள். லைக் எனும் பதிவுகளைச் சோதிக்கிறாள். ஒரு மிலியனுக்கும் மேல் இருக்கின்றன. நேற்றளவு இல்லை. தன் பதிவுகளை விரும்புவோரின் பெயர்களைப் பார்க்கையில் அவளுடைய இதயம் சிறிது குதி போடுகிறது; யார் மதிப்பைப் பெற எண்ணியிருந்தாளோ அவர்கள் மதித்திருந்தார்கள், அல்லது இதயச் சின்னத்தைத் தொட்டு படங்கள் இருப்பதை அங்கீகரித்திருந்தார்கள். வேறு சிலரை அவர்கள் என்ன செய்கிறார்கள், யாரோடு, அவர்கள் ஏன் தன் பதிவுகளை விரும்பவில்லை என்று சோதித்தாள். இதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று, அது ஒரு நிமிஷம் போல இருந்தது.
அவள் குளிக்கிறாள், உடற்பயிற்சிக்கு அணியும் ஆடைகளை அணிகிறாள். ஒரு மணி நேரம் ஒப்பனை செய்து கொள்கிறாள், தோலில் தீற்றிய பூச்சுகளால் தாடை எலும்புகள் பார்வைக்கு உடனே தென்படுகின்றன, புருவங்கள் தடியாகி, அடர்த்தியாகி, வழுமூனாகின, உதடுகள் உப்பிக் கொள்கின்றன. மிகவும் பெரிய வில்லைகள் கொண்ட குளிர் கண்ணாடி ஒன்றைப் போட்டுக் கொள்கிறாள், பொழுது விடிந்ததிலிருந்து அவள் வீட்டு வாயிலருகே நிற்கிற பத்திரிகையாள ஒட்டுண்ணிகளிடம் விரல்களால் உலக அமைதிக்கான சைகையைக் காட்டி அசைத்தபடி வெளியேறுகிறாள். தன் உடல் தோரணை, முகபாவம் பற்றிக் கவனத்தோடு இருக்கிறாள், தன் உடலில் உள்ள ஒவ்வொரு தசையின் அனைத்தும் அவளுடைய புத்தியில் இருத்தி வைத்தபடி அவள் காரில் ஏறி அமர்ந்து, ஓட்டிச் செல்கிறாள். சிலர் தம் மோட்டர்பைக்குகளில் பின் தொடர்கிறார்கள். அவள் தன் உடல் பாவனையை மாற்றாமல் வைத்துக் கொண்டிருக்கிறாள், எதையும் பற்றி யோசிக்காமல் இருக்க மிக்க முயற்சி செய்கிறாள் – யோசிப்பது அவளுக்கு ஆழ்ந்த கவனிப்பின் அருவருப்பான முகச் சுளிப்பைத் தந்து விடுகிறது.
அவள் ஜிம்-முக்குப் போகிறாள், தன் உடற்பயிற்சிகளில் சிலவற்றைப் படமெடுக்கும்படி தன் பயிற்சியாளரிடம் சொல்கிறாள், அவற்றுக்கு வடிகட்டிகளைச் சேர்த்துத் தன் ஆப்-பில் சேமிக்கிறாள்; வீட்டிலிருந்து ஜிம்-முக்கு வரும்போது ஏற்கனவே பல இலவசப் படங்களைக் கொடுத்து விட்டாள், அவை எல்லாம் இந்நேரம் உலக வலையில் எங்கும் பரவி இருக்கும். ஒளியோடும், வடிகட்டிகளோடும் (ஃபில்டர்), படங்களைத் தயாரிப்பதும், ஒரு மணி நேரமாகிறது படங்களைத் துல்லியமாக ஆக்க. ஒரு புரத பானத்தை லாவிக் கொள்கிறாள், தன் உப்பிப் பெரியதாகத் தெரியும் உதடுகளில் பொருத்திய ஒரு உறிஞ்சு குழலால் அதை உறிஞ்சுகிறாள், அவளுடைய நீண்ட, புதிதாக நறுவிசு செய்யப்பட்ட, அவளுடைய சொந்த பிராண்ட் நகப்பூச்சு பூசப்பட்ட நகங்கள் குழலைப் பற்றி இருக்கின்றன. அவள் வீட்டுக்கு ஓட்டிச் செல்கிறாள். பிற்பகல் முழுதும் பத்திரிகைகள் படிக்கிறாள், ஃபாஷன் பற்றிக் கவனிக்கிறாள், ட்வீட்டுகிறாள், இன்ஸ்டக்ராமில் பதிக்கிறாள். மாலை உணவுக்கு ஒரு நண்பரைச் சந்திக்கிறாள், வம்புகளைத் தெரிந்து கொள்கிறாள். யார் யாருக்கு என்ன செய்தார்கள், அது எல்லாம் எப்படி அவளைப் பாதிக்கும். அவள் தன் உதடுகளுக்கு மறுபடி ஊசிகளைப் போட ஏற்பாடு செய்கிறாள். ஒரு புது விடுமுறைப் பயணத்துக்குத் திட்டமிடுகிறாள், இந்த ஏற்பாடுகளை ஒட்டி படமெடுக்க ஏற்பாடுகள் செய்கிறாள். அவளுக்கு அனுப்பப் பட்டுள்ள இலவச உடுப்புகளை அணிந்து பார்க்கிறாள். தன் பல வியாபாரங்களுக்குத் தேவையான மின்னஞ்சல்களைக் கவனித்துப் பதில் அனுப்புகிறாள், உலகவலையில் சிறிது மேய்கிறாள். ஒரு நண்பரோடு வார இறுதியில் ஒரு களி படகில் நாளைக் கழிக்கத் திட்டமிடுகிறாள். நீச்சலுடுப்புகளை வைக்கும் பெட்டி ஒன்றைத் தயாரிக்கிறாள்.
செய்திகள் வரத் தொடங்கியதும் தொலைக் காட்சியை அணைக்கிறாள், ஏதோ தேர்தலாம், வரப்போகிறதாம். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள அவளுக்கு விருப்பமில்லை, அது அவளைப் பாதிக்காது. தன் படுக்கை அறையில் ஒளி வசதியாக உள்ள ஒரு இடத்தைப் பார்க்கிறாள், சில பொருட்களை இடம் மாற்றி வைக்கிறாள், தன்னை ஒரு படம் எடுத்துக் கொள்கிறாள். மறுபடி பட வடிகட்டிகளோடு சிறிது விளையாடுகிறாள், பல மணிகள் கழிந்திருக்கின்றன. வெளியே இருட்டி விட்டது.
விழிப்பு வரும்போது தான் மிதந்து கொண்டிருப்பதாக ஒரு உணர்வு அவளுக்கு எழுகிறது. அது அவளைப் பயமுறுத்துகிறது, அவள் தன் முதுகின் மீது விழுவதாக உணர்கிறாள், வியர்த்துக் கொட்டி விழித்துக் கொள்கிறாள்.
நன்கு விழித்துக் கொண்டவள், தன் சமீபத்துப் பதிவைச் சோதிக்கிறாள். 15 லட்சம் லைக்-குகள் கிட்டி இருக்கின்றன.
கீழ்த் தளத்துக்கு இறங்கிப் போகையில், தரையை அவளுடைய கால் தொட முன்னை விட நேரமாகிறது, ஏதோ புவி ஈர்ப்பு விசையே, அவள் சந்திரனில் இருப்பது போல, மாறி விட்டது போல இருக்கிறது.
புது நகங்கள், புதுச் சவரிகள், உடலில் பழைய தோல் செதில்களை அகற்றுதல் என்று ஒப்பனையில் ஒரு மணி நேரம். பல ஆடைகளைப் போட்டுப் பார்க்கிறாள், அவளால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எதுவும் நன்றாக இருப்பதாகத் தெரியவில்லை, வெளியே செல்லும்போது மனம் நிதானமில்லாமல் போக அவளுக்கு விருப்பமில்லை. பத்திரிகைகளைப் படிக்கிறாள், பெண்களின் குறைகளைச் சுட்டிக் காட்டும் பக்கங்கள்தாம் அவளுடைய விருப்பப் பகுதிகள்; அவை அவளுக்கு அச்சம் தருகின்றன, ஆனால் மற்றவர்களின் குறைகள் என்ன என்று தெரிந்து கொள்ள, அவற்றின் பால் அவள் இழுக்கப்படுகிறாள்.
அவள் தன் இன்ஸ்டக்ராமைச் சோதிக்கிறாள். தன் அடுத்த படத்தால் எப்படி அதிர்ச்சி ஊட்டலாம் என்று யோசிக்கிறாள். உதடுகள் உதவும். புட்டப் பாகத்தில் செயற்கை நுழைப்புகள் இருந்தால் அவை உடனே கண்டு பிடிக்கப்பட்டு விடும்.
தன் காரை நோக்கி நடக்கிறபோது, அவளுக்குத் தலையில் மிதக்கும் உணர்வு இருக்கிறது, வழக்கத்தை விடத் தான் மெதுவாகி விட்டது போல இருக்கிறது; கால்கள் தரையோடு சரியாகத் தொடர்பு கொள்வதில்லை. நூல்பின்னல் போன்று உடலொட்டிய உள்ளாடையுடன், வேண்டுமென்றே கிழிசல்கள் இடப்பட்ட, காலொட்டிய கருப்பு ஜீன்ஸோடு, தொடை உயரத்துக்கு அணிந்து கொண்டிருக்கிற புது பூட்ஸால் இப்படித் தோன்றுகிறதா என்று யோசிக்கிறாள்.
தன் கார் ஸீட் பெல்ட்டை இறுக்கி அணிகிறாள், அது அவளை பத்திரமாக இருக்கையில் அமர்த்தும் என்று நினைக்கிறாள்.
பதின்ம வயதினருக்கான ஒரு பத்திரிகைக்கு உதடுகளைத் தடியாக்கிக் காட்டும் தன் பிராண்ட்டின் பளபளப்புப் பூச்சைப் பற்றி ஒரு பேட்டி அளிக்கிறாள். கேள்விகளை எதிர் கொள்கிறாள், அதில் அவளைத் தடுக்கி விழச் செய்ய எதுவும் இல்லை; அவளுக்குத் தெரியாத விஷயங்கள் எதையும் அவர்கள் ஒருபோதும் கேட்பதில்லை. அவள் தான் போட்டுக் கொள்ளும் ஊசிகளைப் பற்றிப் பொய் சொல்கிறாள். அவளுடைய மனக் குறைகள் பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியத் தேவை இல்லை. உலகத்தின் கண்களே அவள் மீது படிந்திருக்கையில் இந்தத் தொழிலில் ஒரு பதின்ம வயதினளாக அவள் இருப்பது எவ்வளவு கடினமானது. தொடர்ந்து ஏதாவது கொடுக்கும்படி அவளுக்கு நிறைய அழுத்தம் இருக்கிறது. அந்த பேட்டியும், படமெடுப்பதும் அவளுடைய புது உறை-தயிர் விற்கும் ரெஸ்டாரெண்டில் நடக்கின்றன.
செர்ரிப் பழ நிறம் கொண்ட நகப் பூச்சுடன், தன்னுடைய புது செர்ரிப் பழ நிற உதட்டுப் பூச்சை அணிந்து கொண்டு, ஒரு செர்ரிப் பழத்தை நக்குவது போல எடுத்த ஒரு படத்தை அவள் இன்ஸ்டக்ராமில் போடுகிறாள். பசியுள்ள, மயக்கும் கண்கள். பிற்பாடு அவள் தனக்குக் கிட்டிய லைக்-குகளைச் சோதிக்கிறாள்: இருபது லட்சம்.
தன் காரை நோக்கி அவள் நடக்கையில், அவளுடைய கால்கள் தரையிலிருந்து எழும்பி இருக்கின்றன, அவளால் கீழே இறங்க முடியவில்லை. பத்திரிகையாளர்கள் அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள், படமெடுக்கிறார்கள். அவள் மேலும் உயர மிதக்கிறாள், அவர்கள் தொடர்ந்து படமெடுக்கிறார்கள். எல்லாரும் க்ளிக்கிக் கொண்டிருக்கிறார்கள், அவள் ஒளி மின்னல்களைப் பார்க்கிறாள்; உள்ளே இழுக்கப்பட்ட கன்னத்து எலும்புகளோடு அவளுடைய அமைதியான புறத் தோற்றத்தைத் தக்க வைக்க அவள் முயல்கிறாள், ஆனால் அவளுக்கு கலக்கம் எழுகிறது. என்ன ஆகிக் கொண்டிருக்கிறது? அவள் அமைதியை இழக்கத் தொடங்குகிறாள், கால்களை உதைக்கவும், அலறவும் துவங்குகிறாள். அவளுடைய கால்கள் அவளின் காரின் கூரை உயரத்துக்கு வந்திருக்கின்றன; காற்றில் நடப்பது போல அவள் தன் கால்களை ஆத்திரத்தோடு உதைக்கையில் அவளுடைய காலணிகளின் ஆணி போன்ற குதிகால் பகுதிகள் அவளுடைய புதிய காரின் மேல் கூரையில் கீறல்களைப் போடுகின்றன. அவளால் கீழே இறங்க முடிவதில்லை.
இறுதியாக, உறைந்த தயிரை விற்கும் ரெஸ்டாரெண்டிலிருந்த பதின்மர் பத்திரிகையின் ஃபோட்டோக்ராஃபர் ஓடி வந்து அவளைக் கணுக்கால்களைப் பற்றிக் கொள்கிறான். அவளைக் கீழே இழுக்கிறான். மிக ஆடிப் போயிருக்கும் அவள், அந்த ரெஸ்டாரெண்டுக்குள் ஓடுகிறாள். அந்த ரெஸ்டாரெண்டைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து முற்றுகையிடுகிறார்கள். அவள் மேலே மிதந்த சம்பவம் உலகெங்கும் விஷக்கிருமிகளைப் போலப் பரவி விட்டது. அங்கு வியாபாரம் நின்று விடுகிறது. அவளுக்கு இப்போது 50லட்சம் புது விசிறிகள் சேர்ந்திருக்கிறார்கள். அவள் எல்லா இடங்களிலும் தலைப்புச் செய்தியாகி விட்டிருக்கிறாள், சில சானல்களில் தேர்தல் செய்திகளைக் கூடப் பின்னே தள்ளி விட்டாள்.
அவளுடைய மானேஜரான அம்மா, கடைக்குள் வெகு வேகமாக நுழையும்போது, அவள் தன்னைப் பற்றிய செய்தியை செல்ஃபோனில் வாசித்துக் கொண்டிருக்கிறாள், அவளுடைய முதுகு அறையின் கூரையில் ஒட்டி இருக்கிறது.
அவசர உதவி சர்வீஸ்காரார்கள் வந்து அவளைக் கூரையிலிருந்து பிரித்து எடுத்து இறக்குகிறார்கள். அவளை அழைத்துப் போகிறார்கள், தன்னைப் பற்றிய செய்தி அறிக்கைகளை அவள் செல்ஃபோனில் வாசித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் பத்து லட்சம் பேர் புதிதாக அவளைப் பற்றி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்; அவளுக்கு இப்போது 70 லட்சம் பேர் பின்பற்றுவோர். அவள் மறுபடியும் மிதக்க ஆரம்பிக்கிறாள்.
அவள் பறக்கத் துவங்கியதும், மருத்துவ மனை எந்திரங்கள் கத்துகின்றன, உடலில் பொருத்திய குழாய்கள் இழுக்கப்பட்டுப் பிய்ந்து விடும்போலாகின்றன.
நிபுணர் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவளுடைய அம்மா-னேஜர் பீதியில் அவரைப் பார்த்து ஏதாவது செய்யச் சொல்லிக் கத்துகிறாள். அந் நிபுணர் தன் வாழ்க்கையில் இந்த மாதிரி எதையும் பார்த்ததில்லை.
“அவள் ஃபோனில் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?”
“அவள் இன்ஸ்டக்ராமில் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். செல்லம்?”
“நான் எல்லா செய்தி அறிக்கைகளிலும் இருக்கேம்மா,” அறையின் கூரையிலிருந்து அவள் சொல்கிறாள், அந்தத் திரையிலிருந்து பார்வையை அவளால் அகற்ற முடியவில்லை. “அம்மா, அந்த உதட்டுப் பூச்சு சுத்தமா வித்துப் போச்சு.”
தரைக்கும் கூரைக்குமாக உதட்டுப் பூச்சைப் பற்றி அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
“அவள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டாளா?
“ஆமாம்.”
“மத்தவங்களோட நல்லபடியாப் பழக்கம் உண்டா?”
“அவள் வீட்லேருந்துதான் படிச்சா.”
“கல்லூரி? மேல ஏதும் படிச்சாளா? பகுதி நேர வேலை ஏதும்?”
“அவளுக்கு அதெல்லாம் தேவைப்படல்லை. அவளோட பிஸினெஸ்ஸே இருக்கே.”
“அவளேதான் அந்த பிஸினெஸ்ஸை எல்லாம் நடத்தறாளா?”
“அவளுடைய குழு நடத்தறது. அவள் அதோட புதுப்படைப்பு இயக்குநர்.”
“அப்படியா. உனக்குப் படிக்கறது பிடிக்குமா?”
“நான் இப்பப் படிச்சுகிட்டிருக்கேனே,” அவள் பதில் சொல்கிறாள், ஃபோனில் கண்ணை நாட்டியபடி.
“புத்தகங்கள்?”
அவள் தன் முகத்தைச் சுருக்கியபடி, தலையை அசைக்கிறாள்.
“சரி. செய்திகளைப் பார்க்கிறியா? தகவல் படங்கள் பார்ப்பியா?”
“நான் தொலைக்காட்சியே பார்க்கிறதில்லை. எனக்கே ஒரு ரியாலிடி ஷோ இருக்கு. நானே டிவி காட்சிகளை உருவாக்கறேன்.” அவள் சிரிக்கிறாள்.
“என்ன நடந்துகிட்டிருக்குன்னு எனக்குப் புரியறதா நான் நினைக்கிறேன்.” அம்மா-னேஜரைப் பார்த்து நிபுணர் சொல்கிறார்.
“அவளோட மூளை காலியா இருக்கு. அது ரொம்ப வேகமாவும் இயங்கறது, ஆனால் அவளைப் பத்தின எண்ணங்களாலேயே அது நிரம்பி இருக்கு. அதனால அவளுடைய மூளைல உருப்படியா எதுவுமே இல்லை. அவளுக்கு வேரா இருக்க, கனமா இருக்க எதுவும் இல்லை.”
“இதெல்லாம் மடத்தனம். அவள் ஒரு பிஸினெஸ் நடத்தற பெண். ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த வருஷத்தில கவனிக்கப் பட வேண்டிய முதல் பத்துப் பெண்கள்ல ஒருத்தியா இவளைச் சொல்லி இருக்கு. அவளுக்கு பல நூறு மிலியன்கள் சொத்து இருக்கு.”
“அதெல்லாம் இங்க விஷயமே இல்லை.” அவர் முகத்தைச் சுருக்குகிறார். “அந்த பிராண்டெல்லாமே அவளைப் பத்தினதுதான். அந்த பிராண்ட்களெல்லாமே பணம் பண்ணற திட்டங்கள், நான் என்ன ஊகம் செய்றேன் என்றால், எல்லாமே சுய-தம்பட்டம் தட்டற விஷயங்கள்.”
“எல்லா வியாபாரமுமே அதைத்தானே செய்யறது.”
“பலருக்கு தங்களோட துறை மேல ஒரு பிடிப்பு இருக்கும். அப்படி ஆழமா உணர்வதால ஒரு விதமான தீவிரம் எழும், ஒரு பொருள் மேல நிச்சயமான ஒட்டுதல் இருக்கும், பராமரிக்கிற உணர்வு, முன்னேறும் ஊக்கம், சாதிக்கும் எண்ணம் இப்படிப் பலதுக்கும் ஒரு வித கனம் உண்டு. உங்களோட மகளுக்கு தற்பெருமையும்,தன்னை முதல்லெ நிறுத்தற ஆசையும், தன்னையே கவனிக்கிறதும்தான் தீவிரமா இருக்கு. தன் மேலயே தீவிரம். உங்களோட புத்தியை உங்களோட சுயத்தாலேயே நிரப்ப முடியாது. அதற்கு கனமே இருக்காது.”
அவள் ஜன்னலைப் பார்க்க மிதந்து போய் வெளியே அவளுடைய பெயரைக் கோஷம் போடும் தன் ரசிகர்களைப் படமெடுக்கிறாள். அதை ஸ்னாப்சாட்டில் போடுகிறாள், ஆனால் அவள் கவனமாக இல்லாததால், திறந்த ஜன்னல் வழியே மிதந்து வெளியே போய் விடுகிறாள், தன் அம்மாவிடம் இருந்து தூரப் போனவளை அம்மாவால் எட்டிப் பிடிக்க முடிவதில்லை, நிபுணரிடமிருந்தும் தூரத்தில் இருக்கிறாள். தன் ரசிகர்களின் தலைகளுக்கு மேலாக மிதந்து போகிறாள், அவர்கள் உதவுவதற்குப் பதில் அவளைப் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் உயர உயர மிதந்து போய், கண்பார்வையிலிருந்தே முழுதும் மறைந்து விடுகிறாள்.
அதற்குப் பிறகு அவளுக்கு மேலும் ஒரு கோடி பேர்கள் பின் தொடர்கிறவர்களாகிறார்கள், இன்ஸ்டக்ராமிலேயே மிக அதிகமானவர்களால் கவனிக்கப்படுபவளாகிறாள், பத்துக் கோடி மக்கள் அவளுக்கு ரசிகர்கள் இப்போது, ஆனால் அவள் இதை ஒரு போதும் தெரிந்து கொள்ளவில்லை. தன் செயல்களையும், சிந்தனைகளையும் தன்னாலேயே நிரப்பி இருக்கிறாள்; உள்ளீடு உள்ளதோ, கனமானதோ, அர்த்தமுள்ளதோ எதுவும் அங்கே நுழைய இடமே இல்லை.
அவள் அத்தனை இலேசாக ஆனதால், அவள் தலையில் வெற்றிடம் நிரம்பி, அவள் காற்றோடு அடித்துப் போகப்படுகிறாள்.
குறிப்பு: இங்கிலிஷ் மொழி மூலக்கதை: ஸெஸீலியா ஆஹெர்ன்
தமிழாக்கம்: பஞ்சநதம்
இக்கதை, ஸெஸீலியா ஆஹெர்னின் சிறுகதைத் தொகுப்பான ‘ரோர்’ (Roar) என்ற புத்தகத்தில் சேர்க்கப்பட்ட கதை. மூலக் கதைத் தலைப்பு: ’த உமன் ஹூ ப்ளூ அவே’ (The Woman Who Blew Away)
க்ராண்ட் சென்ட்ரல் பப்ளிஷிங் நிறுவனம் 2019 இல் வெளியிட்ட நூல்.