கவிதைகள்- இன்பா அ.

புகை முடிச்சுகள்

புத்தன் அமைதியாக
அமர்ந்திருக்கிறான்
பெயர் தெரியா
மிருகங்கள் குரலற்று உறுமின
காற்றுவெளியில்
ஒளிப்பிழம்பு ஊடுருவிச் சென்றது
அவனைச் சுற்றி நாய்கள்
குரைக்கின்றன
அமைதியைக் கைவிடாமல்
அமர்ந்திருக்கிறான்
இரவு பெருகி
குளிர் கசிந்து பின்
தணல் வரலாயிற்று
பதிவுகள் தொடர ஆங்காங்கே
புகை முடிச்சுகள் கசிந்தன
போவோர் வருவோர்
மத்தியில் சலசலப்பு
சில போர்க்கொடிகள்
தூக்கிய வேகத்தில் பறந்துபோய் விழுந்தன
எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது
கற்பூரத்தைக் கொளுத்தும்படி
அகத்தில் கிளைபடர்ந்து
உதிரம் பாய்ந்து புதுவேகத்துடன்
உயிர்ப்பித்து நின்றன அசட்டு நரம்புகள்
தினவுகளை ஈரநெருப்பில் எறிந்துவிட்டு
கல்பீடத்தில் அமர்ந்திருக்கிறான்
புத்தன் மேலும் அமைதியாக.

வாழ்த்து

எல்லா வாழ்த்துகளும்
எல்லா நன்றி நவில்தலும்
கொஞ்சம் எச்சரிக்கை செய்கின்றன
 
எல்லாப் பாராட்டுக்களும்
ஏதோ ஒரு தொடக்கத்திற்காகவே
ஆரம்பிக்கின்றன
 
பதில் பாராட்டை எதிர்பார்த்தே
ஒவ்வொரு வாழ்த்தும்
கடந்து போகிறது
 
எல்லாவற்றையும் உதறிவிட்டால்
பிரியத்தின் ஈரம்
காய்ந்துவிடக் கூடும்
 
எல்லாவகை பாராட்டுகளும்
எல்லையற்றது
சில்லிட்ட வார்த்தைகளையே
தேடிக்கொண்டுவருகிறது
 
எச்சரிக்கையாய் இல்லாவிட்ட்டல்.
மனச்சந்துக்குள் புகுந்துகொண்டு
நச்சரித்துவிடுகிறது
 
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
மனத்திற்கு போட்டுவிட்டேன்
வேலி
தேவைப்படும்போது திறந்துகொள்ளட்டும்.

கடந்து போகிறது
 
ஒரு தோசையில்
என்னதான் இருக்க முடியும்?
 
முறுமுறுப்புக் குறைந்தால்
முறைக்கும் மகள்
அடுத்தத் தோசை
மொத்தமாகிவிட்டால்
சத்தம் போடும் மகன்
ஆனாலும்
சலிக்காமல் சுட்டுத்
தரும் அம்மாவுக்கு
தோசை தான் தெய்வம்
 
ஒவ்வொரு வளையத்திலும்
முந்திக்கொள்ளும்
சின்னஞ்சிறு குமிழிகளை
ரசித்தபடியே சுடுவாள்
 
ஒவ்வொன்றும்
ஒருவித ருசி
என்னதான் ஒரே
கைப்பக்குவமாய்ச் சுட்டாலும்
ஒரு தோசையின் ருசி
மற்றொரு தோசையில்
வருவதில்லை ஏனோ
 
வீட்டில் தோசை மாவு
இருக்கிறாதென்றாலே
மனம் இளைப்பாறிவிடுகிறது
 
அதுவே போதுமானதாக இருக்கிறது
அவளுக்கு
அந்த நாளைக் கடந்து போவதற்கு.

இன்பா அ.