வரைபடத்தின் உள்ளே: போலோ ஓலாய்சராக்கின் இரு நாவல்கள் பற்றி

க்ரெய்க் எப்லின்

ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்ஸின் ( Jorge Luis Borge ) நெடுநாள் நீடித்திருக்கப் போகும் புனைகதைகளில் ஒன்று “டெல் ரிஹோர் என் லா சியென்சியா” (“அறிவியலில் துல்லியமானது”) என்ற ஒரே ஒரு பத்தி நீளமே உள்ள கதை. மூலாதாரம் உறுதியாகாத கால வரலாற்றின் ஒரு துண்டாகக் கட்டமைத்துக் கொடுக்கப்பட்ட அது, 1: 1 என்ற விகிதத்தில் ஒரு பிரதேசத்துடன் ஒத்த அதன் வரைபடத்தை கற்பனை செய்கிறது. வேறு விதமாகச் சொன்னால், ஒரு பரந்த காட்சியின் வரைபடம் (பிரதி), அது சுட்டும் நிலத்தின் மீது கச்சிதமாக முழுதாகப் படர்கிறது.. இந்தப் பிரும்மாண்டமான உருக்கொண்ட வரைபடத்தின் வாரிசுகள், “தங்கள் முன்னோடிகளைப் போலவே நிலப்படக்கலை ஆய்வை அத்தனை விரும்பாதவர்கள்,” அதை நிராகரித்து, பயனற்றதெனத் தீர்த்திருந்தனர், இயற்கையின் போக்கில் பாழாகி வதங்கும்படி விட்டிருந்தனர். ஆனால் அது முழுதும் காணாமல் போகவில்லை; அந்தப் பைத்தியக்கார சாம்ராஜ்யத்தின் “விலங்குகள் மற்றும் பிச்சைக்காரர்கள் வசித்து வந்த” குறுங்காடுகளில், தன் கிழிசல் துண்டுகளை விட்டுச் சென்றது. புவியியல் என ஒரு காலத்தில் அறியப்பட்ட அறிவுக் கிளையின் நினைவூட்டல்களாக இந்தத் துகள்கள் கிடக்கின்றன: அந்த நாட்டளவு பெரிதான அந்த வரைபடத்தின் பிற்கால வாழ்க்கை இப்படியாயிற்று.

போர்ஹெஸ்ஸின் வரைபடமும் குறிப்பிடத்தக்க பிற்கால வாழ்க்கை கொண்டது. ஷான் போத்ரியா(ர்) ( Jean Baudrillard ) தன்னுடைய ‘சிமுலாக்ரா மற்றும் சிமுலேஷன்’ (1981) புத்தகத்தின் தொடக்கப் பத்தியில், இந்தக் கதையை “உருவகப்படுத்துதலின் மிக அழகான உருவகம்” என்று அழைக்கிறார் – இந்த விளிப்பு, நமது இக்காலத்தில் ஒரு திரைப்படத்திலிருந்து ஒரு ட்வீட் வரை எல்லாச் சமூக ஊடகங்களையும் குறிக்கும். அந்தப் பாராட்டுதலை, நமது தற்போதைய காலம், அல்லது குறைந்தபட்சம் அவருடைய சொந்தக் காலமாவது, அந்தக் கதையின் வரையறைகளுக்குள் பொருந்தாது என்று அவர் வாதிடுவதற்கு முன்பு எழுதுகிறார். மாறாக, முன்னேறியுள்ள முதலாளித்துவத்தில், வரைபடம் பிரதேசத்திற்கு முந்தி எழுகிறது; உருவகப்படுத்துதல்களே நிஜத்தை உருவாக்குகின்றன; அல்லது, மாற்றாக, இரண்டிற்கும் இடையில் இருப்பதாகக் கருதப்படும் ஊகமான வேறுபாடு மறைந்துவிடுகிறது (அவரது கண்ணோட்டத்தில், போர்ஹெஸ்ஸின் வரைபடம் இன்று முதலில் வரும், அதன் பின்னர் உருவாக்கப்பட்ட பொருள் உலகம், அல்லது வரைபடமும் உலகமும் ஒரே இடமாக ஆகி இருக்கும்.) இத்தகைய சிந்தனை நமக்குத் தருவது, பல்வேறு கலாச்சாரக் கலைப் பொருட்களுக்கு இடையில், தி மேட்ரிக்ஸ் (1999) திரைப்படக் கதை, அதில் உருவகப்படுத்தப்பட்ட உலகமே மனிதர்கள் அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் முதல் உலகமாக ஆகி இருக்கும். புதிய தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட (செல்வத்) திரட்சி பயன்படுத்தும் மாயத்தோற்ற உத்திகளைப் புரிந்து கொள்ள முற்படும் இந்த திரைப்படம், பல சந்தர்ப்பங்களில் ‘போத்ரியா(ரை)’ வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. இங்கே, வரைபடம் “நிஜ” வாழ்க்கை மீது வெறுமனே ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல: நம்மை கவர்ந்திழுத்து, திசை திருப்பி, இறுதியில், நமக்கு எதிராக நம்மைப் பயன்படுத்துவதற்கான நெடுங்காலத் திட்டத்தோடு யதார்த்தத்தையே உருவாக்குகிறது.

போலா ஓலாய்ஸராக்

ஆர்ஹென்டீன நாவலாசிரியர் போலா ஓலாய்ஸராக்கின் ( Pola Oloixarac ) படைப்புகள் பதிலி செய்தலும் யதார்த்தமும், மற்றும் மாயத் தோற்றம் தரும் இன்பமும், தேவைக்கான நடைமுறைச் செயலும் போன்ற எதிரெதிர் நிலைகள் பற்றி அதே கேள்விகளை எழுப்புகின்றன. 2007 இல் வெளியான அவரது, முதல் நாவலான லாஸ் டெயோரியாஸ் சால்வாஹெஸ். ஆங்கில மொழி மொழிபெயர்ப்பு (ஸாவேஜ் தியரிஸ்) 2017-ல் வெளி வந்தது. கூகிள் எர்த் செயலி என்பது இன்றைக்கான அறுதியான நிலவரைபடம்: நிஜமான நிலப்பரப்புக்குச் சவாலாக நிற்கும் அந்த வரைபடச் செயலி மீது நடக்கும் வைரஸ் தாக்குதலை மையமாகக் கொண்டு, ஒரு முடிவை நோக்கிப் பயணிக்கும் அந்த நாவலில்,போர்ஹெஸ்ஸைப் பற்றிய பல குறிப்புகள் கிட்டுகின்றன. அவரது இரண்டாவது நாவலான ‘லெ கான்ஸ்டெலெஸியானெஸ் ஒஸ்கூராஸ்’ (2014) – ஆங்கிலத்தில், 2019 இல், டார்க் கான்ஸ்டெலேஷன்ஸ் என்று வெளி வந்தது-இதேபோல் ஒரு உலக அளவிலான அமைப்பின் மீது – அந்த அமைப்பு நம் மரபணுக்களை நம் நிலங்களுடன் அடையாளப்படுத்த டி.என்.ஏ மாதிரிகளைப் பயன்படுத்துகிற ஒரு மாபெரும் கண்காணிப்பு முயற்சி- நடக்கும் வலைக் கொந்தல் தாக்குதலுடன் முடிவடைகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், பூமியின் விரிவான, ஏராளமான விவரங்கள் கொண்ட வரைபடம், உலகளாவிய முதலாளித்துவத்தின் நிஜத்தை மறைக்கும் மாய்மாலக் கருவியாகச் செயல்பட்டு, எதிர்வினைகளைத் தூண்டி, அவை வரைபட அமைப்பினுள் செயலற்ற சக்தியாகவோ அல்லது மழுங்கடிக்கப்பட்ட எதிர்ப்பாகவோ (அல்லது இரண்டின் பிரித்தறிய முடியாத சில கலவையாக) இருக்கும்படி ஆக்குகிறது.

இருப்பினும், ஒலாய்சராக்கின் படைப்பின் தனித்தன்மையாக இருப்பது என்னவென்றால், அது அவர் அன்றாட வாழ்க்கையைச் சித்திரிக்கும் விதம், அன்றாட வாழ்க்கையின் செழுமையும் வண்ணமும் போர்ஹெஸ் மற்றும் போத்ரியொ(ர்) ஆகியோரால் சிறு குறிப்பாக மட்டுமே உணர்த்தப்படுகின்றன. இவரது நாவல்கள், அறிவுத் தேட்டையை உருவகப்படுத்துவதையோ அல்லது உண்மையற்ற யுகத்தில், துவக்க நிலையில் நிஜத்தின் தரம் எப்படி என்பதைக் கருதுகோளாக்குவதையோ செய்யாமல் அவற்றைத் தாண்டிச் செல்கின்றன. அவரது பன்முகத் தன்மை கொண்ட கதாபாத்திரங்கள், பதிலியானவற்றால் நிரம்பி வழியும் உலகில்- அதாவது, நம்முடைய இந்த உலகில் – சதையால் ஆன உடலில் வசிப்பது எப்படி இருக்கிறதென்பதை ஓரளவு காட்டுகின்றன.

_______________________________

இந்த உலகில் காதல் புரிவது, மேலும் நட்பு கொள்வதில் உள்ள மரபான நடைமுறைகள் என்ன? அலுவலக வேலை, ஆய்வக வேலை, பள்ளி வேலைகளில் என்ன உள்ளன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஓலாய்ஸராக்கின் நாவல்கள் சுட்டுகின்றன; கடந்த சிலப் பத்தாண்டுகளின் ஆர்ஹென்டின நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை (கல்வித்துறை, கலைகள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளோடு தொடர்புள்ள உபகலாச்சாரங்கள் மீது குவிந்த கவனத்தோடு) டிஜிட்டல் தகவல்களால் நிரம்பிய வெளிகளில் வழி தேடிப் பயணிப்பதைப் பற்றிச் சில பார்வைகளைத் தருகின்றன.

இவை இனவியல் கேள்விகள், எனவே ஓலாய்ஸராக்கின் புனைவுகளில் மானுடவியல் முக்கிய இடத்தைப் பிடிப்பது பொருத்தமானது. ‘ஸாவேஜ் தியரிகள்’ புத்தகம், பப்புவா நியூ கினியின் ‘ஆரகைவா’ ( Orokaiva ) மக்கள் கடைப்பிடிக்கும் வயதுக்கு வருவோருக்கான சடங்கு முறைகளை விவரிக்கும் ஒரு பத்தியுடன் தொடங்குகிறது; அடுத்து உரையில் ஒரு இடைவெளி கதை முழுவதும் ஆதிக்கம் செலுத்தப் போகிற ஆர்ஹென்டினச் சமூகச்சூழலை அறிமுகப்படுத்துகிறது, நாம் படிப்பன இவை, “சிறுமி காம்ட்சௌஸ்கியின் வாழ்க்கை ப்யோனஸ் ஐரிஸ் எனப்பட்ட நகரில், 1970களின் பிற்பகுதியில் ஈய வருடங்கள் என அறியப்பட்ட காலத்தின் வன்முறையின் நடுவில் துவங்கின; அவளுடைய ஆரம்ப கால நினைவுகள் ஆர்ஹெண்டினாவில் ஜனநாயகம் மீண்ட, அல்ஃபான்ஸனிய வசந்தம் என்று அறியப்பட்ட வருடங்களில் துவங்குகின்றன.” இந்தத் துவக்கம் பற்றிய பகுதியில், ‘எனப்பட்ட நகரில்’ மற்றும் ‘அறியப்பட்ட’ என்று வரும் சொற்கள், இந்தப் பின்னணியில் அதிகப் பரிச்சயம் இல்லாத வாசகர்களிடம் பேசுவது போல அமைந்துள்ளன. வேறு வார்த்தைகளில் சொன்னால், காம்ட்சௌஸ்கியின் அறிமுகம், நாவலைத் தொடங்கும் இனக் குழுவியல் முறை தொடருமென்று உறுதி கொடுப்பது போலத் தெரிகிறது. ஆனால் இப்படி மானுடவியல் வழியாக, விலகி இருந்து கவனிக்கப் போகும் நோக்கம், அடுத்து வரும் கதை விரிப்பில் இல்லாததால் உறுதிமொழி பொய்யாகிறதோடு, வாசகர்கள் ப்யோனஸ் ஐரிஸின் கலாச்சாரம் மற்றும் புலம் பற்றி ஆழ்ந்த பரிச்சயம் கொண்டிருப்பார்கள் என்று பெரும்பாலும் நம்பியே கதை வளர்கிறது. ஒரு கதை மாந்தரின் பாத்திரம் வெளிநின்று கவனித்தலும், கூர்ந்த சுயபரிசீலனையும் கலந்த நிலையை கடைப் பிடிக்கிறது, அவர் தன்னையும் தன் சகாக்களையும் “சுய-மையம் கொண்ட மத்திய வர்க்க இனவியலாளர்கள்” என்று விவரிக்கிறார். ஒரு டிஜிட்டல் வரைபடத்தைப் போலவே, ஓலாய்ஸராக்கின் கதைவிவரணை மிக அருகில் சென்று, தனி நபர்களின் அந்தரங்க வாழ்வையும், அதோடு மிக விரிந்து உலகளாவியும் சித்திரிக்கிறது.

2013 –ஆம் ஆண்டில், n+1 என்ற பத்திரிகையில் ஒரு பதிப்பாசிரியர் குறிப்பில், “தைக்கும் முள்” போன்ற பல நாட்டு முனைப்புடன், “சமரசமற்ற படைப்புகளை”க் கொடுக்கும் எழுத்தாளருக்கு ஓர் உதாரணமாக ஓலாய்ஸராக் சுருக்கமாகச் சுட்டப்படுகிறார்.“பிசிரற்றுச் சீராகவிருக்கும் உலகத்தை”ச் சித்திரிப்பதும், நாம் உலக இலக்கியம் என்று அறிந்து கொண்டிருப்பதுமான ஒன்றுக்கு “எதிரானது” அவரது படைப்பு. இப்படி- உள் நாட்டு எல்லைகளைத் தாண்டி உள் சூழ்நிலைகளை வெளிப்படுத்தும் “முள்”ளான முயற்சிகள் ஒருபுறமும், உலக மேல் தட்டினரிடையே உள்ள கருத்து ஒற்றுமையைக் கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு பார்வையையும் முனை மழுக்குவது மறுபுறமும்- என எதிரெதிர் நிலைகளை முன்வைப்பதன் மூலம், இங்கு சமநிலையைத் தேடும் அவரது செயலை அந்தத் தலையங்கம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உண்மையில், ‘ஸாவேஜ் தியரிஸ்’ மற்றும் ‘டார்க் கான்ஸ்டலேஷன்ஸ்’ நூல்கள் இரண்டும், நாம் வசிக்கும் பிரதேசங்களின் முள் தன்மைக்கும், நம் அனுபவங்களை உலக நிர்வாகத்திற்கான வரைபடமாக உருமாற்றுவதற்கும் இடையிலான உறவைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த இரண்டு இடஞ்சார்ந்த வரையறுப்புகள் எவ்வாறு சமூக வடிவங்களை ஒன்றின் மீது மற்றொன்று மீதூறி சமூகக் கட்டமைப்புகளை, அனேக நேரம் கறாரான அடுக்கு வரிசையானவற்றை, ஒரு தளத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுகின்றன என்பதைத் தூலமான விதத்தில் ஓலாய்ஸராக் காட்டுகிறார். இன்னொரு விதமாகச் சொல்லலாம்: இன்றைய வரைபடங்கள் தம்மை நிலப்பரப்பின் மீது சுமத்துவதற்கு எவ்வளவு முயற்சி எடுக்கின்றன என்று காட்டுகிறார். ‘

‘ஸாவேஜ் தியரீஸ்’ நாவலில், அன்றாட வாழ்க்கையின் விரிவான காட்சிகளின் மூலம் காம்ட்சௌஸ்கியின் கதை சொல்லப்படுகிறது; அவள் ப்யோனஸ் ஐரிஸ் நகரில் வளர்கிறாள், சர்வாதிகாரம் (1976–83), மிகை பணவீக்கம் (1980 களின் பெரும்பகுதி), கார்லோஸ் மேனம் அரசின் புதிய தாராளமயமாக்கல் ஆட்சி (1989 –99), மற்றும் வெளிநாட்டுக் கடனின் எடையின் கீழ் தேசியப் பொருளாதாரம் நொறுங்குவது (டிசம்பர் 2001 இல் ஒரு நெருக்கடி ஏற்பட்டது) போன்ற பொருளாதார புறச் சூழல்கள் காட்டப்படுகின்றன. காம்ட்சௌஸ்கி பல்கலைப் பட்டதாரிகளின் மகள். அவரது அத்தை 1970 களில் ஒரு இடதுசாரி போராளியாக இருந்தவர். அவர் தனது டைரிக் குறிப்புகளை மாவ் ட்ஸெ-டுங்கிற்கு (அவர் பெயர் “மூ” என சங்கேதமாகக் குறிக்கப்பட்டுள்ளது) எழுதுகிறார். இளம் வயதில், ஒரு வீடியோ கலைஞராக ஆகும் காம்ட்சௌஸ்கி, உள்ளூர் கிளப் நிகழ்ச்சிகளில், போதைப்பொருளுடனும், பாலுறவுகளிலும் தனது அனுபவங்களைச் சித்திரிப்பதன் மூலம் அவப்பெயரைச் சம்பாதிக்கிறார். நாவலின் முடிவில், கூகிள் எர்த்தை ஹேக் செய்வதில் அவர் பங்கேற்கிறார், இது ’டர்ட்டி வார்ஸ் 1975’ என்ற வீடியோ கேம் மூலம் நிகழ்கிறது.

அவளுடைய கதை, தன்னிலையை கதையாகச் சொல்லும் ஒரு பல்கலை மாணவியின் கதையோடு மாறி மாறி சொல்லப்படுகிறது. அந்த மாணவி ஒரு பேராசிரியர் தன் பணியில் தொடர்ச்சியாகச் செய்யும் பிழைகளைச் சரி செய்ய முனைபவள். அவருடைய தவறுகளைச் சரிசெய்யும் குறிக்கோளைப் பின் தொடரும் அந்த மாணவி, அதன் மூலம் “ஈகோயிக் டிரான்ஸ்மிஷன்ஸ்” கோட்பாட்டை முழுமையாக்குகிறார். அது நிகழ்காலத்தைப் பாதிக்கும் வரலாற்று நிகழ்வுகள் உலக நிலப்பரப்புகளில் பரவியிருக்கும் விதத்தை விளக்க முயல்கிறது. அந்தப் பெண்ணின் முயற்சிகள் கேலி செய்யப்பட்டு, ஏற்பு மறுக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம். அவரது பல்கலைக்கழகத்திலும் அதன் அறிவுசார் கலாச்சாரத்திலும் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றில் பிறக்கும் ஏற்றத்தாழ்வுகளை அவர் கடக்கும் விதத்தை நாம் தொடர்கிறோம். அவரும் காம்ட்சௌஸ்கியும், இருவரும் தற்போதைய சூழ்நிலைகளைப் பற்றித் தெளிவான தரிசனங்களைக் கொண்ட இளம் பெண்கள். கடந்த காலத்துடனான உறவில் இந்த தரிசனங்களை வெளிப்படுத்த, ஆனால் நிறுவப்பட்ட வரலாற்றின் புனிதம் குறித்த நம்பிக்கைகளுக்கு இரையாகாத வழிகளில், இருவரும் முயற்சி செய்கிறார்கள்.

‘டார்க் கான்ஸ்டலேஷன்ஸ்’, மூன்று கதாபாத்திரங்களின் கதைகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நிக்லாஸ் ப்ரூன் 19 ஆம் நூற்றாண்டின் இயற்கையியலாளர் ஆவார், அவரது எழுத்துக்கள் மற்றும் ஓவியங்களின் அடிப்படையில் படகோனிய நகரமான பாரிலோச்சில் ஓர் அறிவியல் திட்டம் துவங்கப்படுகிறது. அந்த நகரம் பல ஆண்டுகளாக புறவெளியில் சாகசங்களை விரும்பும் சுற்றுலாப் பயணிகளையும், நீதி விசாரணையில் இருந்து தப்பிக்க வழி தேடும் நாஜி அதிகாரிகளையும் ஈர்க்கிறது. தனி நபர்களின் வாழ்வுப் பாதையை உருவமைக்கும் வரைபடத் தயாரிப்பிற்காக, பல லத்தீன் அமெரிக்க நாடுகள் சேகரித்துத் தம்மிடையே பகிரும் பயோமெட்ரிக் தகவல்கள், ப்ரூனின் கருதுகோள்களோடு அங்கு இணைக்கப்படுகின்றன. இணையத்தின் விரிவுபடுதலுடன் வளர்ந்த கேசியோ, ஒரு ஹேக்கர் மற்றும் விளையாட்டாளர், மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணி புரிந்த பின் பாரிலோச்சிற்கு வந்திருக்கிற இளம் விஞ்ஞானி பியெரா, இருவரும் ஸ்ட்ரோமாடோலைடன் என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் இணைந்து பணி புரிகின்றனர். அதன் செயல்பாடுகளை ஹேக் செய்வதற்குக் கருவிகளாகின்றனர், அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவலை எந்த ஒரு அரசின் பிடிக்கும் எட்டாத தொலைவுக்குக் கொண்டு செல்கின்றனர், இந்த நிகழ்வு பெரும் குழப்பத்தைக் கொணரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இறுதியில் இதனால் அனேகமாக எதுவுமே நேர்வதில்லை. “சந்தையின் வீழ்ச்சி அதிர்ச்சியூட்டியது, ஆனால் ஒரு மில்லிவினாடியின் பின்னத்தளவே நீடித்தது; அந்த சின்னஞ்சிறு பிழையில், எக்கச்சக்கமான பணம் கைமாறியது, எனவே எல்லாம் இருக்கிறபடியே கச்சிதமாக அப்படியே மாறாமல் இருக்க முடிந்தது.” இந்த நாவல் சற்றேறக் குறைய இந்த இடத்தில், முதலியத்தின் விட்டேற்றியான அழிவு நோக்கையும், சூழலுக்கேற்ப வளைந்து கொடுத்து மாறி எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் அதன் திறனையும் பற்றிய சித்திரிப்போடு நம்மை விட்டுச் செல்கிறது. இயற்கையைப் பற்றிய விவரிப்புக்கு சுருக்கமாகத் திரும்பும் ஓலாய்ஸராக், நிகழ்காலத்தில் ஆக்கலும் அழித்தலும் ஜீவராசிகளிடையே இடையறாமல் நிகழ்கிறது என்ற இறுதி யோசனையோடு நிறுத்திக் கொள்கிறார்.

மேலே கொடுக்கப்பட்ட கதைச் சுருக்கங்கள் அந்தந்த நாவல்களின் கதைக் கருக்களுக்கு நியாயம் செய்யத் தவறுகின்றன. இப்படி அந்த கதைவிரிப்புகளைச் சுருக்குவதில் உள்ள துன்பம், ஓலாய்ஸராக்கின் படைப்புகளின் இரண்டு முக்கியமான அம்சங்களைக் காட்டுகின்றன. முதலாவது, அவருடைய பாத்திரங்கள் மேலும் பின்புலன்களின் குறிப்பிட்ட தன்மைகளை அவற்றை விட விரிதளத்துக் கதையில் பொருத்துவதற்கான அவரது பேராவல்: அந்த விரிதளம் அறிவியலின், கோட்பாடுகளின் அல்லது முதலியத்தின் கதை. மனித வாழ்க்கையில் இந்த செயல்துறைகள் ஒவ்வொன்றும், குறிப்பிட்ட சூழல்களை மாற்றவே முயல்கின்றன, அப்படி நிகழ்த்தப்படும் மாற்றங்கள் அச்சூழல்களை அவற்றின் உடனடி காலவட்டம் அல்லது இடத்தைத் தாண்டியும் அர்த்தமுள்ளவையாக ஆக்குகின்றன. குறிப்பிட்டவை, பொதுமை ஆகிய இவ்விரு தளங்களையும் அவற்றின் பரஸ்பர வடிவமைப்பைப் பற்றி நமக்குச் சமிக்ஞை செய்தபடி, ஓலாய்ஸராக் மிக உன்னிப்பாகக் கவனிக்கிறார்.

இந்த இரட்டை கவனத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஸாவேஜ் தியரிஸில் கிடைக்கிறது. கதை சொல்பவர் ஒரு பேராசிரியருடன் இரவு உணவு உண்டு முடித்திருக்கிறார். அந்தப் பேராசிரியரை இளம் பிராயத்தினரின் குழு ஒன்று தாக்கி வழிப்பறி செய்கிறது. அந்த இளைஞர்கள் சமூகவியல் ரீதியான குழுப்பெயர்களாலும், அன்றாட வாழ்வின் வர்ணனையாலும் சித்திரிக்கப்படுகின்றனர். “முதலியத்தின் வக்கிரங்களோடு நேரடித் தொடர்புள்ள இரண்டில் ஒருவன்,” அந்தக் கதையாளர் சொல்கிறார், “ஒரு ப்ளாஸ்டிக் பையிலிருந்து எதையோ ஆழ்ந்து உள்ளிழுத்து விட்டு, என்னை முறைக்கிறான். லோகி ஒல்லியாக இருந்தான், துரிதமாக ஓடக் கூடியவனானவன், வறண்ட தோல் அவனுடைய பாட்டாளி எலும்புகள் மீது இறுக இழுத்து மூடியிருந்தது.” (பக் 150) இந்த இளைஞன் நிஜமாக, நம்மால் தொடப்படக் கூடியவன் போலத் தெரிகிறான்; இருந்தாலும், அவன் அதே நேரம் அவனுடைய உடனடி எதார்த்தத்தைக் கடந்து, ஒரு அமைப்பின் நோய்க்குறி போலச் சித்திரிக்கப்படுகிறான்.

இது போலவே, ‘டார்க் கான்ஸ்டலேஷன்ஸி”ல் 1960 களின் மாறுபட்ட கலாசாரத்தின் ”சுதந்திரம்” என்ற புழங்கு மொழியிலிருந்து, (பின்னர் நடந்த) பொருளாதார இயக்கத்தைப் பணமயமாக்குதல் வரை கவனிக்கும் ஒரு சிறு பத்தியில், வரலாற்று அலைக்கும், வாழ்வின் அனுபவங்களின் துளிகளுக்கும் உள்ள தொடர்பு காட்டப்படுவதை நாம் பார்க்கிறோம். வாழ்வின் நடைமுறைகளிலும் பண்பாட்டிலும் ஏற்படும் மாறுதல்கள், பொதுவான உருவமற்ற நிலைகளோடு தொடர்பு உள்ளவையே எனக் காட்டுகிறார். “காகிதப் பணம் தனக்கென ஒரு வளைகோட்டை வரைந்து கொண்டு, தான் எதற்குப் பதிலியாக நிற்க வேண்டுமோ அதிலிருந்து, படிப்படியாக விலகிப் போய்விடும். இதே போக்கை அருவக் கலையும், கருத்தை முன்னிலையில் வைக்கும் கலையும் பகிர்கின்றன.” ஈவ் சியபெல்லோவும், லூக் போல்டான்ஸ்கியும் பல வருடங்களுக்கு முன்னர் சுட்டிய ‘முதலியத்தின் புதுக் குணம்’ என்பது, புழங்கும் பணம் தன் உண்மையான இருப்பை ப்ளாக்செயினில் உருவாக்கப்படும் பணத்தில் கண்டு கொள்வதில் இருப்பதாகக் காட்டப்படுகிறது: “எந்த வகையிலும் உண்மையான யதார்த்தத்துடன் தொடர்பற்றுப் போய், தன்னுடைய ஹேகலிய சுயத்தை கிரிப்டோ கரன்ஸியில் அது கண்டு கொள்ளும்.”


உருவமற்ற தன்மையை இப்படிப் பொதுமைப்படுத்துதல், ஓலாய்ஸராக்கின் விவரணைகள் சுருக்கத்திற்கு எளிதில் இணங்குவதில்லை என்பதற்கான இரண்டாவது காரணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவரது கதைக் கருக்கள் எல்லாவற்றையும் உள்ளே சேர்க்கவும், சிறிய விவரங்களின் முக்கியத்துவத்தையும் அடையாளம் காணவும் விரும்புவதாகத் தெரிகிறது. எனினும், அனைத்து விவரிப்புகளிலும் விலக்கப்படுவது என்பது உள்ளியல்பு: ஒரு கதவைத் திறப்பது என்பது மற்ற கதவுகளை மூடிவிடுவதைச் சொல்கிறது. இந்தக் காரணத்தினால், கதை சொல்லலில் பல சோதனை முயற்சிகளும், எல்லாவற்றையும் சேர்க்க முயற்சிக்கும்போது, அவசியம் என்பதாலும், அனேக நேரம் வேண்டுமென்றேயும் சலிப்பாகின்றன. ஜார்ஜ் பெரெக், ஆண்டி வார்ஹால் மற்றும் சண்டால் ஆக்கர்மன் ஆகியோரின் படைப்புகள், இந்த வகைப் பிரிப்பில் பொருந்துகின்றன, மாரியோ பேயாடின் மற்றும் பிரான்சிஸ் அலீஸ் ஆகியோரின் சில படைப்புகளும், ஓலாய்ஸராக்கின் அண்மையரான (ஆர்ஹெண்டீனியர்) ஸெசார் ஐரா வின் பல நாவல்களும், எதைச் சேர்க்க வேண்டும், எதை விட்டு விட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமத்தை பகடி செய்கின்றன, போர்ஹெஸ்ஸின் ஆலெஃப்-ஐப் போலவே. அது கிரகத்தின் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக் காட்டக்கூடிய பளபளக்கும் கோளம், விவரணைக்கு எதிரான மகத்தான ஒரு சாதனம்.

கூகிள் எர்த் ஹேக்கைப் பற்றி எழுதுகையில் ஓலாய்ஸராக் தனது சொந்த ஆலெஃப்-ஐ விவரிக்கிறார், இது போர்ஹெஸ் மற்றும் அவரது நண்பர்கள், ஒளிரும் ஆலெஃப், மேலும் ஆர்ஹெண்டின இலக்கிய வரலாற்றிலிருந்து பிற கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை உள்ளடக்கிய ஒரு காட்சி. [1] எழுத்தாளர்கள் கடந்த காலம் பற்றிய தம் வாசிப்புகளின் படைப்புத் திறனாலும், அவற்றில் உள்ள தவறுகளாலும், தம் முன்னோடிகளைத் தாமே உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று போர்ஹெஸ்ஸே முன்பு எழுதியது பிரபலமானது. இந்தக் கருத்து ஸாவேஜ் தியரிஸில் ஒரு மாற்றியமைக்கப்பட்ட மேற்கோளாகத் தோன்றுகிறது -“ஒவ்வொரு ஆபாச நட்சத்திரமும் தனது முன்னோடிகளை உருவாக்குகிறார்”- மேலும் நுண் விவரம் மற்றும் பொதுப்படுத்தல் ஆகியவற்றின் விவரிப்பை ஓலாய்ஸராக் கையாளும் விதத்தில் ஒரு பகுதியாவது, தன் முன்னோடிகளை அவர் கடக்கும் முறையாகத் தெரிகிறது.
இலக்கிய வரலாற்றோடு நடக்கும் இந்த உரையாடலுக்கு, தொழில்நுட்ப மாற்றம் கொணரும் அதிர்ச்சிகளைப் பற்றிய ஊக முடிவுகளை அவர் சேர்க்கிறார். குறிப்பாக, தேடல் மற்றும் கண்காணிப்புக்கான தொழில்நுட்பங்கள் எவ்வாறு சுயத்தை மறுகட்டமைப்புச் செய்கின்றன என்பதைப் பதிகிறார். நாம் கதாபாத்திரங்களே, என்று வேறிடத்தில் எழுதும்போது, ஓலாய்ஸராக், “பிரதிநிதித்துவம் வேண்டி மனிதர் கற்பனை செய்திருக்கக் கூடிய ஒப்பில்லாத அளவு சிறந்த நாவலுக்கான முயற்சிதான் கூகிள்.” என்று சொல்கிறார். இந்த “நாவல்” விவரிப்பு முறையின் கண்டிப்புக்களை மீற முயல்கிறது, எல்லா விவரங்களையும் தனக்குள்ளேயே பொருத்திக் கொண்டு, அனேக கதை உரைத்தலுக்கும் பொதுவானதாக இருக்கும், ஒரு சம்பவம் இன்னொரு சம்பவத்துக்கு இட்டுச் செல்லும் நேர்கோட்டு காரண காரியார்த்தத்தைத் தவிர்த்து விடுகிறது.

ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்

போர்ஹெஸ்ஸின் கற்பனை சாம்ராஜ்யத்தில் வசித்தவர்கள் மொத்த நிலப்பகுதியையும் மூடி மறைத்த வரைபடத்தை நிராகரித்ததைப் போல் இந்த அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தச் செய்யப்படும் முயற்சியை நம்மில் பெரும்பாலோர் நிராகரிக்கவில்லை. நான், உதாரணமாக, எல்லா நேரமும் கூகிள் வரைபடத்தைப் பயன்படுத்துகிறேன். எனினும், நம் முன்னிருக்கும் சவால், வரைபடத்தை நிராகரிப்பதிலோ அல்லது ஏற்றுக்கொள்வதிலோ இல்லை, மாறாக அதன் கட்டளவுகளுக்குள் நம் வாழ்க்கையை விவரிக்க திருப்திகரமான வழிகளைக் கண்டுபிடிப்பதில்தான் உள்ளது. ஓலாய்ஸராக்கின் நாவல்கள் இந்த இருள் சூழ்ந்த கேள்விக்கு ஒரு தீர்வை வழங்கவில்லை, ஆனால் அவை அதன் ஆழத்திற்குள் நம்மை இருத்துகின்றன- தவல்களின் கடல், நமது உடல்களில் குடி கொண்ட சுயங்களைப் போர்த்தி மூடுகிறது, அங்கு நாம் நம் சுயங்களை ஒரே நேரத்தில் தொகுக்கும் விதியாகவும், சதையாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

இது, நம்பக் கடினமான அளவு பிரும்மாண்டமானதாகவும், எதார்த்தமே வினோதமாகவும், நளிந்ததாகவும் இருக்கும் ஓர் இடம்; இங்குமே, துரிதமாய் நெருங்கி நோக்கினால், எல்லாமே நாம் விட்டபடியே இருக்கின்றன, எதுவும் மாறுவது போலத் தெரியவில்லை. எனவே ஒருக்கால் ஓலாய்ஸராக்கின் பரிந்துரை இதுவாக இருக்கலாம், விவரிப்புச் செயலை நடத்துவதற்கு, மற்ற எந்த இடத்தையும் போலவே இதுவும் ஒரு நல்ல இடம்தான்.


*** "த போர்ஹெஸியன் மோனாட் கண்டாமிநேடட் அண்ட் ப்யோனெஸ் ஐரஸ் ஃபோட்டோபாம்ப்ட்” என்ற யுவான் காபல்லெரோவின் கட்டுரை, லூஸெரோ என்ற பத்திரிகையின் 22 ஆம் இதழில் 2012 இல் பிரசுரமாகியது. அதில் போர்ஹெஸ்ஸின் ஆலெஃப், ஓலாய்ஸராக்கின் நாவலில் எப்படிக் கையாளப்படுகிறது என்பது பற்றிய தெள்ளிய விளக்கத்தைக் காணலாம். ***
மொழிபெயர்ப்பு: ந.பானுமதி |  உதவி: மைத்ரேயன் |  கட்டுரை மூலம்:  https://www.publicbooks.org/inside-the-map-on-two-novels-by-pola-oloixarac/ 

One Reply to “வரைபடத்தின் உள்ளே: போலோ ஓலாய்சராக்கின் இரு நாவல்கள் பற்றி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.