மினியாப்பொலிஸில் திருப்பள்ளியெழுச்சி

முற்றத்து மணியசைத்து  
விளையாட
அழைத்து நிற்கும் காற்று
பொறுமையிழந்து
அனுமதியில்லாமல்
அறைக்குள் நுழைகிறது.

கூடமெங்கும்
உனை தேடிய பின்
படுக்கையறைக்கு
பதுங்கி செல்கிறது. 
வாழைநிற
விரிப்பை உதறி
நீ வழக்கமாய் ஒளியும்
திரைச்சீலையை
தள்ளிப்பார்க்கிறது.

வரவேற்க ஆளின்றி 
சலித்து வெளியேறி
தோட்டத்து பனிக்காய்களை
அடித்து உதிர்க்கிறது.
இலையின்றி நிற்கும்
பிர்ச் மரத்தை உலுக்கி
அதன்
தியானத்தை கலைக்கிறது.
இறங்கி வந்து
பனிக்குவியலில்
எதையோ எழுதிப்பார்த்து
பறத்தி அழிக்கிறது.

நிதானித்து
தெருவைக்கடந்து 
உறைந்த ஏரியின்
கண்ணாடிப் பாளத்தின்
ஆழத்துள்
யதேச்சையாய்
சந்தித்த மீன்கள்
பேசுவதன் கிசுகிசுப்பை
கவனித்து கேட்கிறது.
பனிமணலை
எண்ணிக்கொண்டு 
ஊளையிட்டு
ஒற்றைக்காலில்
சுழன்று ஆடுகிறது.

செல்லக்குட்டி,
இன்றைக்கு விடுமுறைதான்
இருக்கட்டும்.
நீ கிறுக்கப்போகும் ஓவியத்தில்
உதிப்பதற்கென்று 
தயாராகி விட்டது
சூரியன்.
எழுந்துவிடு சீக்கிரம்.

பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள்

கதாயுதமும் வாளும் ஏந்தி 
கோயில் முற்றத்தில்
காவல் காக்கும்
பூத கணங்கள்,
புஜம் புடைத்து
நெஞ்சம் நிமிர்த்து
நாள் முழுக்க  கால் கடுக்க
நின்ற களைப்பில்,
கண்ணயரும்
நடுநிசியில்.

கழற்றிய கவசங்கள்,
பிடி தளர்ந்து
தரையில் நழுவிய
பட்டாக்கத்திகள்,
சுழன்று தீர்ந்த
பம்பரம் போல்
சாய்ந்து கிடக்கும்
கதாயுதங்கள்
இடையில்,
கையை மடித்து தலைக்கு வைத்து
குட்டையான காலாடையில்
குறட்டை விட்டபடி
பிரம்மாண்டமான
குழந்தையைப்போல துயிலும்
பச்சை நிற பூதங்கள்.

கோரைப்பற்கள்
புடைத்து நீண்டிருக்கும் வாயோரம்
எச்சில் ஒழுகி உதடுகள் துடிக்க
தொந்தி வயிறு ஏறிஇறங்கும்
வேகம் மிதமாகி
இமைகளுக்குள்
கருவிழிகள்
உருளும் ஆழ்துயிலில்,
தேவதைகள் தோன்றும்
கனவில்.

தேவதையின் முகம் கண்டு
குழந்தையைப்போல
முறுவல் பூக்கும்
பூத முகம்.

இறுக்கம் அவிழ்ந்து
தான் ஒரு பூதம்
என்பதை மறந்து
புன்னகை
இடம் மாறி குடிகொள்கையில்
பூதமும்
தேவதையும்
ஒன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.