மறைந்த நகரங்களும் பருவநிலை மாற்றமும்

கேட் மார்வல்

 Lost Cities and Climate Change என்கிற தலைப்பில் சைண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில் July 29, 2019 அன்று வெளியான கட்டுரை. 
பண்டையா “கஹோக்கியா” நகரத்தின் இடிபாடுகள் – இன்றைய தென் இலினாய். படம்: ஸ்டீவ் மோஸஸ்

என் பாட்டி வீட்டுக்குச் சற்றே தொலைவில் ஓர் அருவ நகரம் இருக்கிறது. எவன்ஸ்வில்லுக்கு எட்டு மைல்கள் தென்கிழக்கே, ஒஹையோ நதிக்கரையில் ஏஞ்சல் மௌண்ட்ஸில் மண் அமைப்புகள் சில கண்ணுக்குப் புலப்படுகின்றன, மரச்சட்டங்களில் சேற்றையும் வைக்கோலையும் குழைத்து மீண்டும் எழுப்பப்பட்ட ஒரு சுவரும் இருக்கிறது. இந்த மண்மேடுகளை உருவாக்கியவர்கள் யாரும் இப்போது இல்லை. கேவலப்படுத்தும் இறுதி துடைப்பாய், இங்கு கடைசியாய் பயிர் செய்த வெள்ளை இன விவசாயி பெயரால் இந்த இடம் இன்று அழைக்கப்படுகிறது.

ஒஹையோ, மிஸ்ஸிஸிபி ஆற்றங்கரைகளில் ஒரு காலத்தில் இருந்த கிராமங்கள் வேறு பலவற்றின் தடயங்கள் இன்னும் மறையவில்லை. இன்றைய இண்டியானா முதல் ஆர்கன்ஸா, ஆலபாமா என்று பல மாநிலங்களில் மணல்மேடுகள் சிதறிக் கிடக்கின்றன. மிஸௌரியின் எல்லைக்கு சில மைல்கள் தள்ளி, தெற்கு இலினாயில், ஆளரவமற்ற சோளம் மற்றும் சோயா வயல்களிடையே அழிந்த அந்த நாகரீகத்தின் விசை மையம் இருக்கிறது: கஹோக்கியா என்ற மறைந்த நகரம்.

கஹோக்கியா லண்டனைவிடப் பெரியதாக இருந்தது. அது திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம், அதன் காலத்து மான்ஹாட்டன். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள். அங்கு தற்காப்பு அரண்கள், விளையாட்டு மைதானங்கள், ஒரு மகத்தான ஆலயம் இருந்தது. புனிதச் சடங்குகளும் சுவையான வம்புப் பேச்சுகளும் இருந்திருக்கும். அது வாழ்வதற்கு பரபரப்பான இடமாக இருந்திருக்கும்.

“கஹோக்கியா” – மறைந்த நாகரிகம்

அதன்பின், ஒப்பீட்டளவில் திடீரென்று, அது இல்லாமல் போனது. அது விட்டுச் சென்றிருக்கும் பருண்மச் சுவடுகளைக் கொண்டுதான் நாம் இந்த நகரை அறிகிறோம். கஹோக்கியா குறித்துச் சில கதைகளே எஞ்சின; வாய்மொழி பாரம்பரியத்திலிருந்து அது மறைந்தது, அங்கு நடந்தது எதுவானாலும் அது மறக்கப்படுவதே நல்லது என்பது போல். மாபெரும் கொந்தளிப்புகளுடன் எப்போதும் இணைந்து நிகழும் ரத்தக்களரி மற்றும் பேரச்சத்தின்  சுவடுகள் தொல்லியல் ஆதாரங்களில் காணக் கிடைக்கின்றன: கைகள் கட்டப்பட்ட எலும்புக்கூடுகள், கழுத்து நெரித்து கொல்லப்பட்ட இளம்பெண்களைக் கொண்டு நிறைக்கப்பட்ட பிணக்குழிகள்.

பழம்பெரும் மரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிடைக்கும் வளையங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட பருவநிலை வரலாற்று ஆவணம், த நார்த் அமெரிக்கன் ட்ரௌட் ஆட்லஸில், என்ன நடந்திருக்கும் என்பதைச் சுட்டும் குறிப்புகள் அளிக்கிறது. கிறித்தவ சகாப்தத்தின் பத்தாம் நூற்றாண்டில், கஹோக்கியா நாகரீகம் வளர்ச்சியடைந்து விளங்கிய காலத்தில், அமெரிக்க பிரதேசத்தின் பருவநிலை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் மாற்றமடைந்தது. தொடர்ந்து நீண்ட வறட்சி நிலை மாறி விவசாயம், மைய அரசு, நாகரீகம் ஆகியவற்றுக்கு இணக்கமான மழை பெய்யும் பருவநிலை ஏற்பட்டது.

ஆனால் இந்த நல்ல காலம் நிலைக்கவில்லை. பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில், பருவநிலை மீண்டும் வறட்சியை நோக்கித் திரும்பியது. இதற்கு காரணம் கடற்பரப்பின் தட்பவெப்ப நிலை மாறியது காரணமாக இருக்கலாம்- கடற்பரப்பின் தட்பவெப்பம், ஜெட்ஸ்ட்ரீம் என்று அழைக்கப்படும் காற்று விசையை பாதிக்கிறது, ஆர்க்டிக் கண்டத்திலிருந்து குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து மழை பெய்முறையின்மீது தாக்கம் ஏற்படுத்துகிறது. இயற்கையில் புவிக்குரிய பருவநிலை ஊசலாட்டங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் – இவற்றுடன் சூரிய எரிமாற்றமும் எரிமலை வெடிப்புகளும் சேர்ந்திருக்க வேண்டும். அவற்றின் விளைவுகள் பயங்கரமாக இருந்தன.

இதே காலகட்டத்தில் யூரோப்பாவில், 1314ஆம் ஆண்டு கோடையில் பலத்த மழை பெய்தது. மிஸ்ஸிஸிப்பி சமவெளியை வற்றச் செய்து கொண்டிருந்த இயற்கைச் சக்திகள் இதற்கும் காரணமாக இருந்திருக்கலாம், அல்லது இல்லாதிருந்திருக்கலாம். கோடையில் துவங்கிய மழை குளிர்க்காலத்திலும் தொடர்ந்தது, பின் தொடர்ந்து அடுத்த ஆண்டும் நீடித்தது, நில்லாமல் இன்னொரு ஆண்டும் பெய்தது. வயல்களில் பயிர்கள் அழுகிப் போயின, யூரோப்பிய கண்டமே பட்டினி கிடந்தது. அப்போது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மழையையும் பஞ்சத்தையும் குறைபட்டுக் கொள்கின்றன, கிராமங்களில் வாழ்ந்தவர்கள் நாய்களையும் பூனைகளையும் உண்ண வேண்டியிருந்தது, பின்னர் பிரேதங்களை, கடைசியில் சக மனிதர்களையும் கொன்று தின்றார்கள்.

யூரோப்பிய மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி மரங்களின் தொகுப்பு, தி ஓல்ட் வோர்ல்ட் ட்ரௌட் ஆட்லஸ். 1300களில் துவங்கி, தொடர்ந்து அப்பகுதி ஈரமாக இருந்ததற்கு சாட்சியம் சொல்கின்றது, இந்த வரலாற்று விவரணைகளின் உண்மைக்கும் ஆதாரமாகின்றது. நம் குழந்தைகளிடம் நாம் சொல்லும் கதைகளில் இந்தப் பஞ்சங்களை நாம் நம்மையறியாமல் நினைவுகூர்கிறோம். ஹான்செல் க்ரெடெல் கதை- மனிதர்களைத் தின்னும் சூனியக்காரி சுற்றித் திரியும் காட்டில் தொலைக்கப்பட்டு பசியால் வாடும் குழந்தைகள் – இக்காலத்தில் உருவான கதை என்று கிட்டத்தட்ட உறுதியாகச் சொல்லலாம்.

இயற்கையான பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் பல வரலாற்று நிகழ்வுகள் சம்பவித்திருக்கின்றன. ஹங்கேரிக்கு கிழக்கே இருந்த ஸ்டெப் புல்வெளிகளில் வறட்சி ஏற்பட்டபோது வேட்டைக்கார ஹனர்கள் மேற்குத் திசைக்கு தள்ளப்பட்டார்கள், அவர்கள் ரோமானியப் பேரரசை அழித்தார்கள். எரிமலைகள் வெடித்தபோது புரட்சிக்கு முந்தைய ஃபிரான்சில் பயிர்ச் சாகுபடி குறைந்தது, பசியால் தீவிரமாய் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான எதிர்வினையாற்றினார்கள். ஆனால் மனித வரலாற்றில் பருவநிலை ஒற்றைக்  காரணியாக கிட்டத்தட்ட எப்போதும் இருந்ததில்லை. ரோமானிய பேரரசு ஆட்சி செய்ய முடியாத அளவு விரிந்திருந்தது, தளர்ந்திருந்தது, வெளியிலிருந்து தாக்கிய எதிரிகள் அளவுக்கு உட்பூசல்களும் உட்பகையும் அதைச் சிதைத்திருந்தது. உயர்வர்க்கத்தினர் சுமத்திய கொள்கைகள் ஃபிரெஞ்சு கீழ்வர்க்கத்தை பட்டினி போட்டது.

தட்பவெப்ப நிலைகளோ மழைநாட்களின் மாற்றங்களோ மனிதர்களாகிய நம்மை ஏதும் செய்ய இயலாதவர்களாய் இழுத்துச் செல்வதில்லை.  பருவநிலை மாற்றம் எப்படி வட யூரோப்பில் வாழ்ந்தவர்களை செல்லப் பிராணிகளைத் தின்னவோ தம் குழந்தைகளைக் கைவிடவோ செய்யவில்லையோ, அதே போல் கஹோக்கியா வீழவும் அது மட்டும் காரணமல்ல. ஆனால் பருவநிலை மாற்றம் உருவாக்கிய கடும் அழுத்தம் சமூகங்கள் உடைய காரணமானது. அது ஏற்கனவே இருந்த பிளவுகளைப் பெரிதாக்கியது, வாழ வழியற்றவர்களில் ஆபத்தானவர்கள், வாழ வழியற்றவர்களில் பிறரைச் சுலபமாய் பலி கொள்ளச் செய்தது.

இன்று நம்முன் உள்ள சவாலின் அளவை குறைத்து மதிப்பிட விரும்புபவர்கள், “இதற்கு முன்னும் பருவநிலை மாறியிருக்கிறது,” என்று சொல்கிறார்கள். இதில் எப்படி ஒருவருக்கு ஆறுதல் கிடைக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்ததேயில்லை. மனித வரலாற்றை வடிவமைத்த இயற்கை பருவநிலை மாற்றங்கள் எப்போதும் சிறிய அளவில் இருந்திருக்கின்றன, குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை மட்டும் பாதித்திருக்கின்றன. ஆனால், அதற்கு மாறாய், மனிதனால் உருவான, புவியளவு விரியும் பருவநிலை மாற்றத்தை நாம் இன்று அனுபவப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தச் சிறிய மாற்றங்களே கூடத் துயர் விளைவித்திருக்கின்றன, பலி கொண்டிருக்கின்றன, நாகரீகங்கள் அழியக் காரணமாயிருக்கின்றன.

பருவநிலை மாற்றத்தை நினைக்கும்போது எது என்னை மிகவும் அச்சுறுத்துகிறது என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. கடல்களில் பிராணவாயு குறைவது அல்லது ஆர்க்டிக் உறைபனி உருகுவது என்று ஏதாவதொரு பின்னூட்டு இயக்கத்தைக் குறிப்பிட்டு, அது மோசமான விளைவை பேரழிவாய் மாற்றி விடும் என்று கவலைப்பட்டுக் கொண்டு இரவு உறக்கம் வராமல் இருக்கிறாயா என்று கேட்கிறார்கள். சுரம் கூடும் கோளில் நமக்காகக் காத்திருக்கும் பௌதீக மாற்றங்களை நினைத்தால் எனக்கு கலக்கமாக இருக்கிறது, ஆனால் பின்னூட்டு இயக்கங்களில் மிக முக்கியமான ஒன்று மிகவும் குறைவாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பருவநிலை மாற்றத்தில் மிகவும் கலவரப்படுத்தும் விஷயம் அது நாம் ஒருவரையொருவர் என்ன செய்து கொள்ளச் செய்யும் என்பதுதான். 

(தமிழாக்கம்: விசனன்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.