புத்தக விமர்சனம்: வாஸ்லாவ் ஸ்மீல் Energy and Civilization -A History

https://images-na.ssl-images-amazon.com/images/I/51TDsIx7KqL._SX348_BO1,204,203,200_.jpg

 இந்த புத்தகத்தை எனது உறவினர் ஒருவரிடமிருந்து இரவல் வாங்கியிருந்தேன். சமயத்தில் இப்படி யாரிடத்திலிருந்தோ அல்லது நூலகத்திலிருந்தோ புத்தகங்களை கடன் வாங்கினால் திருப்பித்தர வேண்டிய நாள் நெருங்க நெருங்க படிக்கும் வேகம் அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்தக்கேசில் அப்படியெல்லாம் யாரும் கழுத்தில் கத்தி வைக்காததால், மெதுவாக இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டுதான் படித்து முடித்தேன். இது ஒன்றும் கதைப்புத்தகம் இல்லை என்றாலும், சொல்ல வந்த விஷயங்களை சுவாரஸ்யமான ஒரு கதையைக் கோர்வாக சொல்லுவது போல் இல்லாமல், இந்த ஆற்றலின் வரலாறு பற்றிய புத்தகத்தை மூட்டை மூட்டையாக எண்களை அள்ளி வீசும் ஒரு தரவுக் களஞ்சியமாக எழுதியிருக்கிறார் ஸ்மீல். எண்களால் நிரம்பி வழியும் தலையைக் கொண்ட ஒரு கல்வியாளர் இவர். கையில் கிடைத்த நூற்றுக்கணக்கான தரவுகளை ஆயிரக்கணக்கான வழிகளில் வெட்டி, சேர்த்து, அலசி, ஆராய்ந்து, தோய்த்து தொங்க விட்டிருக்கிறார் என்பதென்னவோ நிஜம். அவரது சிந்தனை எவ்வாறு செயல்படுகிறது, எத்தனை விதமான தரவுகள் அவர் தலைக்குள் சுழன்று கொண்டிருக்கின்றன, அந்த எண்களின் மூலம் அவர் உலகை எவ்வாறு உணர்கிறார் என்பதை எல்லாம் புரிந்துகொள்ள அவரது மூளையின் உட்புறங்களைப் பார்வையிட முடிவதுபோல் ஒரு mind-meld செய்ய முடிந்தால், அது வெகு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Related image

 ஒரு வகையில் இந்தப் புத்தகம் ஜாரெட் டயமண்டின் Guns, Germs and Steel போன்ற புத்தகங்களுக்கு சமமானது. ஏனெனில் இதுவும் பல ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் காலவெளியை ஒரு குறிப்பிட்ட லென்ஸ் மூலம் ஆய்ந்து ஒரு பரந்த பார்வையை நமக்கு அளிக்கிறது. மனித நாகரிகத்தின் பல பரிணாமங்களை  கண்டுபிடித்து கொடுக்க விழைகிறது. ஆனால் G,G&S புத்தகத்தின் அடித்தளமாக ஒரு பிரம்மாண்டமான புதிய புரிதல் இருந்தது. அந்தப் புரிதல், வழங்கப்பட்ட தரவு மற்றும் ஆதாரங்களின் ஆதரவுடன் ஒரு ஒத்திசைவான கதையாக வெளிவந்தது. இந்த புத்தகம் அப்படி பெரிய புதிய ஆய்வறிக்கையையோ, புதிய பிரமாதமான புரிதலையோ அல்லது ஆக்கபூர்வமான சிந்தனையையோ முன் வைக்கவில்லை. பதிலாக கிடைத்த தரவுகள் அனைத்தையும் வெறுமனே வழங்கும் ஒரு தட்டையான ஆராய்ச்சி அறிக்கை போல எழுதப்படிருக்கிறது. இந்த சுவையற்ற அணுகுமுறை இறுதியில் வாசகரை சற்று அதிருப்தியடையச் செய்யலாம். இந்த அம்சத்தில், இந்த புத்தகம் யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari) எழுதிய சேபியன்ஸ் – மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு (Sapiens – A Brief History of Humankind) போன்றது என்று சொல்லலாம். அந்தப் புத்தகமும் வரலாற்றை வெறுமனே ஆவணப்படுத்துவதுடன் நின்று விடுகிறது. புத்தகங்களின் தலைப்பிலேயே “ஒரு வரலாறு” என்று இந்த இரண்டு ஆசிரியர்களும் சொல்லி இருப்பதால், இதற்கு மேல் அவர்களைக் குறை சொல்ல முடியாது. 

புத்தகம் ஆற்றலுக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் இடையிலான நெருங்கிய உறவிலிருந்து தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து கற்காலம்,  பழையகால விவசாயம், பத்தொம்பதாம் நூற்றாண்டில் உலகம் தொழில் மயமானது, புதைபடிவ எரிபொருள்கள், மின்சாரம், இவை எல்லாவற்றிலும் ஆற்றலின் பங்கு பற்றிய, பெரும்பாலும் காலவரிசைப்படியான விவரிப்பு. இறுதியில் உலக வரலாற்றில் ஆற்றல் என்ற கடைசி அத்யாயத்துடன் புத்தகம் முடிவடைகிறது. கடைசி அத்தியாயமும் பெரிதாக முழு புத்தகத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் எல்லாம் இறங்காமல், உலக வரலாற்றின் எத்தனை அம்சங்கள் ஆற்றலால் பாதிக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறது, அதே நேரத்தில் பல அம்சங்கள் ஆற்றலால் பாதிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. படித்து முடிக்கும்போது நீங்கள் ஒரு பாடப்புத்தகத்தையோ அல்லது பெரிய அறிக்கை ஏதோ ஒன்றையோ படித்து முடித்ததைப் போல உணர்கிறீர்கள். பெரிய நுண்ணறிவு அல்லது இதுவரை அறியப்படாத நோக்குகள் ஏதும் இல்லை. ஆனால் கிடைக்கக்கூடிய தரவுகளைத் துளைப்பதிலும், போட்டு துவைத்து எடுப்பதிலும் ஆசிரியர் உண்மையிலேயே ஒரு பெரிய நிபுணர்தான். எடுத்துக்காட்டாக, நிலத்தில் ஓடும் மனிதர்களைப் பற்றி பேசும்போது, ​​தரவை அவர் இவ்வாறு பகுப்பாய்வு செய்கிறார்: ஓடுவதற்கு பெரும்பாலும் 700 முதல் 1,400 வாட் வரை ஆற்றல் தேவைப்படுகிறது, இது அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தைப்போல் 10-20 மடங்கு அதிகம். மனிதர்களுக்கான இயங்கும் ஆற்றல் செலவு நிறைய. ஆனால் இந்த செலவை வேகத்திலிருந்து விலக்குவதற்கான தனித்துவமான திறனை மக்கள் கொண்டுள்ளனர். இயங்கும் மொத்த செலவில் 80% உடல் எடை ஆதரவு மற்றும் முன்னோக்கி நம்மைச் செலுத்தும் உந்துவிசைக்கே ஆகிறது. கால்களை முன்னும் பின்னுமாக இயக்குவதற்கு 7% செலவு. பக்கவாட்டு சமநிலையை பராமரித்தலுக்கு 2%. ஆனால் கைகளை ஆட்டி பேலன்ஸ் செய்வது ஒட்டுமொத்த செலவை சுமார் 3% குறைக்கிறது. இந்த மாதிரியான கூற்றுகளுக்கு ஆதாரம் கொடுக்க ஸ்மீல் தனது சொந்த ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகளை மேற்கோள் காட்டுகிறார்.

விளையாட்டுப் பந்தயங்களைப் பார்த்து ரசிப்பதில் எனக்கு பெரிய ஈடுபாடு ஒன்றும் கிடையாது. விளையாட்டுக்கள் மக்களிடையே ஊக்குவிக்கும் நல்ல பண்புகள் எனக்குப் புரியாமலில்லை (எ.கா. வெற்றிகளையும் இழப்புகளையும் சமமாக எடுத்துக்கொள்வது, ஒரு அணியாக வேலை செய்வது). எனக்கு எரிச்சலூட்டுவது எல்லா விளையாட்டுகளிலும் விரவிக் கிடக்கும் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகள்தான். இதன் விளைவாக, விளையாட்டு சம்பந்தமான பதிவுகள் அல்லது எண்கள் எதுவும் எனக்கு உண்மையானவையாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ தெரிவதில்லை. ஸ்மீல் என் கட்சியைச் சேர்ந்தவர் போலும். எனவே புத்தகத்தில் இப்படி இரண்டு வரிகளை எழுதி ஒரு ஆப்பு வைத்திருக்கிறார்: மிகப்பெரிய ஆற்றல் வீணடிப்புகள் என்ற லேபிளை ஒட்டுவதற்கு, விளையாட்டு மைதானங்கள் என்ற பெயரில் நாம் கட்டும் ஆடம்பர, சுவையற்ற, கட்டிடங்கள்தான் தகுதியானவை. இந்த கிறுக்குத்தனமான விரயங்களுக்குள் நமது நவீன கிளாடியேட்டர்கள் விதவிதமான பந்துகளைக் உதைப்பது, எறிவது, அல்லது அடிப்பதை ஒரு உபயோகமுமின்றி பார்த்து கைதட்டிக் கொண்டிருக்கிறோம். பல்வேறு வகை பார்வையாளர்களுக்கான (spectator sports) விளையாட்டுகளுக்குமாகச் சேர்த்து மொத்தமாய் ஒரு கிண்டல். 

அத்தகைய கிண்டல்களை ஈடுசெய்ய போதுமான பகுதிகளும் புத்தகத்தில் உள்ளது. “ஸ்காட்லாந்தில் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியைச் சுமந்து செல்லும் பெண்களின் நிலை” என்ற தலைப்பில் ஒரு பெட்டிச் செய்தி உள்ளது. சுமையாளிகள் (Bearers) என்றழைக்கப்படும் அவர்களின் அந்நாளைய நிலை படிப்பவர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும். தங்கள் தாய்மார்களுடன் வெறும் ஏழே வயதான இளம் பெண் குழந்தைகள் நிலக்கரியை தங்கள் தலைகளில் சுமந்து புரிந்த பணிகளை இந்தப் பத்தி விவரிக்கிறது. 

தாய் தனது இளம் மகள்களுடன் சுரங்கத்துக்குள் இறங்குகிறார். ஒவ்வொவர் தலைக்கும் பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு கூடையை அவர்கள் கீழே வைக்கவும், ​அதில் பெரிய நிலக்கரிகள் துண்டுகள் உருட்டி நிரப்பப்படுகின்றன; நிரம்பிய கூடையின் எடை அவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதால் இரண்டு ஆண்கள் சேர்ந்து கூடையைத் தூக்கி ஒரு பெண்ணின் தலையில் வைக்க வேண்டி இருக்கிறது. சுரங்கம் முழுவது இருட்டு என்பதால் ஒளிரும் மெழுகுவர்த்தியை பற்களில் கடித்துப் பிடித்தபடி தாய் முதலில் புறப்பட்டுச் செல்கிறாள். பெண்கள் தாயைப் பின்தொடர்கிறார்கள். சோர்வுற்ற தளர்ந்த தப்படிகளை மெதுவாக எடுத்து வைத்து மிகுந்த சிரமத்துடன் படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள். அவ்வப்போது மூச்சு வாங்க நின்று தடுமாறுகிறார்கள். இப்படி நாள் பூராவும் செய்யும் வேலையின் கடுமை தாங்காமல் அந்தப் பெண்கள் மனம் கசந்து அழுதுகொண்டே செல்வதை எளிதாக தினசரி பார்க்க முடியும். ஒரு நாளில் ஒரு பெண் சுரங்கத்திலிருந்து குழியின் உச்சியில் கொண்டு வரும் நிலக்கரியின் எடை சுமார் 4080 பவுண்டுகளிருந்து இரண்டு டன் வரை இருக்கும். வருடக்கணக்கில் பெண்கள் செய்யும் இந்த வேலையை நினைத்துப் பார்ப்பதே கருத்தாக்கத்திற்கு அப்பாற்பட்டது.

புத்தகத்தின் அடுத்த பத்தி 60 கிலோ எடையுள்ள ஒரு பெண் இந்த வேலையைச் செய்யும்போது செலவாகும் ஆற்றல் எண்களை கணக்கிடுகின்றது. 35 மீ ஆழத்தில் இருந்து 1.5 டன் நிலக்கரியை தூக்குவதற்கு 1 எம்.ஜே ஆற்றல் தேவைப்படும் என்று உரை தொடர்கிறது. 

புத்தகத்தில் உள்ள சில நேர்த்தியான விவரங்கள் நம் மனதை ஈர்க்கக்கூடியவை. எடுத்துக்காட்டாக, ருடால்ப் டீசல் டீசல் இயந்திரத்தை உருவாக்கியது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் வெறும் பணம் பண்ணுவதற்காக மட்டும் டீசல் அந்த இயந்திரத்தை உருவாக்கவில்லை என்கிறது புத்தகம். அவர் அதை ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவியாகப் பார்த்தார். 1800களின் பிற்பகுதியில், நீர் சக்கரங்கள் (water wheels) அல்லது நீராவி என்ஜின்கள் போன்ற பிரைம் மூவர்ஸ் (Prime Movers) உருவில் மிகவும் பெரியவையாகவும், எளிதில் வேண்டிய இடங்களில் நிறுவி இயக்க முடியாதவையாகவும் இருந்தன. எனவே, அந்த மாதிரியான ராட்சச இயந்திரங்களை முதலில் அமைத்துக்கொண்டு அவற்றைச் சுற்றி அந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளும் தொழிற்ச்சாலைகளை அமைப்பதுதான் அந்நாளைய வழக்கம்.  டீசல் இந்த அமைப்பை மாற்றி தனிநபர்கள் சிறிய அளவில் தங்கள் சொந்த கடைகளை அமைப்பதற்காக வாங்கக்கூடிய வாகான ஒரு இயந்திரத்தை உருவாக்க விரும்பினார். இந்த உத்வேகம் ஒரு தையல் இயந்திர அளவே உள்ள மலிவான இயந்திரத்தை உருவாகுவதற்கு டீசலை உந்தியது. இந்த குட்டி என்ஜின்களை சுற்றி பற்ப்பல சிறு தொழிலாளர் கூட்டுறவுகள் அமைய வேண்டும் என்பது அவர் விருப்பம். குறைந்த விலைக்கு விற்கும் இந்த என்ஜின்கள் தேவையான எங்கும் உற்பத்தி முறைகளை அமைப்பதை மிகவும் எளிதாக்கும், நேர்மை, நீதி, அமைதி, இரக்கம் மற்றும் அன்பு எல்லாம் மிகுந்த சமூகத்துக்கு வழிவகுக்கும், சின்னச்சிறு கிராமப்புறங்களில் கூட இத்தகைய தொழிற்ச்சாலைகள் தோன்றி சமூகம் வளம்படும் என்றெல்லாம் அவர் கனவு கண்டிருக்கிறார். இந்த சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக அவர் எழுதிய ஒரு புத்தகம் 300 பிரதிகள் மட்டுமே விற்றது என்றாலும், டீசல் என்ஜினை வடிவமைத்ததின் மூலம் அவர் ஒரு பெரிய சமூகப் பிரச்சினையைத் தான் தீர்த்ததாகக் கூறினார்/நம்பினார். இறுதியில் என்னவோ தொழிலாளர் கூட்டுறவுகளைச் சுற்றி சமூகம் தன்னை ஒழுங்கமைக்கவில்லை. சின்னச்சிறு தொழிற்சாலைகளைவிட பெரிய கனரக இயந்திரங்களில் அவரது என்ஜின் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இருந்தாலும் டீசல் என்ஜினை ஒரு என்ஜினாக மட்டும் பார்க்காமல், ஒரு சமூகத்தையே மாற்றி அமைக்கும் திட்டத்தின் அஸ்திவாரமாக அவர் அனுமானித்த முற்போக்கு  சிந்தனை பற்றி அறிவது மனதிற்கு இதமாக இருந்தது.

புத்தகத்தில் எங்கும் சிக்கலான கணிதம் எல்லாம் ஏதும் இல்லை. ஆனால் ஸ்மீல் கிடைக்கக்கூடிய தரவை பல வழிகளில் பகுப்பாய்வு செய்வதில் மன்னர் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக, பிரைம் மூவர்ஸை மதிப்பிடும்போது அவை எவ்வளவு ஆற்றலை தரவல்லது என்ற ஒரு எண்ணை மட்டும் பார்த்து ஏமார்ந்து விடாமல், ஆற்றல் வெளியீட்டுக்கும் என்ஜினின் எடைக்குமுள்ள விகிதத்தை அளந்து அலசுவதின் மூலம், திறன் மிகுந்த வடிவமைப்புகளை (Efficient Designs) அவர் இனம் பிரித்துக் காட்டுகிறார். காலம் செல்லச்செல்ல எவ்வளவு பெரிய அளவில் ஆற்றல் நம் கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை இரண்டொரு உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டுகிறார். 1900ல் ஒரு பெரிய வண்டியை இழுக்கவோ, நிலத்தை உழவோ முயலும் ஒரு விவசாயி ஆறு குதிரைகளைப் ஒருங்கிணைத்து பூட்டி அதிகப்பட்சம் 5 கிலோவாட் சக்தியைத் திரட்டி பயன் பெற்றார். கி.பி. 2000 வருஷத்தில் அவர் பேரனோ பேத்தியோ, ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டமான டிராக்டர் ஒன்றிற்குள் வசதியாக உட்கார்ந்தபடி, எளிதான கையசைவுகளில் 250 கிலோவாட் ஆற்றலை மிகச் சாதாரணமாக கையாளுகிறார்கள்.  அதேபோல் 1900 ஆம் ஆண்டில் பணியாற்றிய ஒரு ரயில் பொறியியலாளருடன் அவர் இன்னொரு ஒப்பீடு செய்கிறார். அந்தக்கால நீராவி இயந்திரம் அதிகபட்ச திறன், கொள்ளளவுடன் இயங்கும் போது சுமார் 1 மெகாவாட் திறன் கொண்டதாக இருந்து, மணிக்கு சுமார் 100 கிமீ வேகத்தில் ரயிலை இழுத்துச் செல்லும். மாறாக 2000 ஆம் ஆண்டில் ஒரு போயிங் 747 விமானத்தை இயக்கம் விமானி மணிநேரத்திற்கு 900 கிமீ வேகத்தில் பூமியிலிருந்து 11 கி.மீ உயரத்தில் பறக்கும் விமானத்தில் நான்கு எரிவாயு விசையாழி (Gas Turbine) இயந்திரங்களிலிருந்து வரும் 120 மெகாவாட் ஆற்றலை விரல் நுனிகளில் வைத்திருக்கிறார்.

இந்தப்புத்தகதிற்கு வெளியேயும் ஸ்மீலின் யூட்யுப் நேர்காணல்களில்  எண்கள் மழை சகஜமாய் கொட்டுகிறது. இப்படி எப்போதும் தரவுகளையும் எண்களையும் வாரியிறைக்கும் அவர் திறன் கொஞ்சம் பயமுறுத்தும் அளவு இருக்கிறதே என்று நான் நினைத்த சமயம், புத்தகத்தின்  ஒரு பக்கத்தில் அவர் ஒரு துல்லியமான எண்ணை (756 கிலோவாட்) பற்றிப் பேசிவிட்டு மற்றொரு பக்கத்தில் அதே விஷயத்தைப் பற்றிப் பேசும்போது பொத்தாம்பொதுவாக ஒரு எண்ணைக் (700 கிலோவாட்டிற்கு மேல்) குறிப்பிட்டிருந்ததை கவனித்தேன். அப்பாடா தேவர்கள் போல் இல்லாமல், மனிதர்கள் போல் அவரும் தேவையான எண்களை தரவுகளில் இருந்து தேவையான போது தேடி எடுத்துதான் எழுதி இருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாயிற்று. அட .. நான் யாருடனும் போட்டியிட முயற்சிக்கவில்லை என்றாலும், என் மண்டைக்குள் இவ்வளவு தரவுகளையும் ஒரேயடியாய் நிறுத்தி பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை பாருங்கள். 🙂

அடடடா என்று வியக்க வைக்கும் பிரம்மாண்டமான புதிய கருத்துக்கள் ஏதும் புத்தகத்தில் இல்லை என்றாலும், ஆற்றல் என்ற ஒரு குறிப்பிட்ட லென்ஸின் வழியே உலகைப் பார்க்கும்போது கிடைக்கும்  வரலாற்றின் விரிவான விளக்கத்தை நீங்கள் ரசிப்பவரானால் புத்தகத்தை ஒருமுறை படிக்கலாம்.