ஜனனமரணம்

2017

அலைபேசியின் அழைப்பைக் கேட்டு சரவணப்ரியா அதை எடுத்துப்பார்த்தாள். உள்ளூர் எண், ஆனால் அதற்கு அடையாளம் தெரியாத எண். வணிகர்கள் அழைக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டில் அவள் அலைபேசி இருந்தாலும் சமீபத்தில் யாரும் அதை மதிப்பது கிடையாது. உல்லாசக்கப்பல் பயணம், குறைவான வட்டியில் கடனட்டை, மற்றும் மருத்துவ இன்ஷுரன்ஸ் விற்பவர்கள், ஐஆர்எஸ் அதிகாரி என்று சொல்லிக்கொண்டு பயமுறுத்துகிறவர்கள்…

பத்துநொடி ஒலித்துவிட்டு அலைபேசி கைவிட்டது.

யாராக இருந்தாலும் தங்கள் பெயருடன் தகவல் பதிக்கட்டும்!

பெரும்பாலான அழைப்புகள் அந்தக் கட்டம்வரை போகாது. அன்று அப்படியில்லாமல்…

அன்பும் மதிப்பும் மிக்க சரவணப்ரியா! என் பெயர் ஜனனி,  என் கணவன் கமலபதி. நாங்கள் ஃப்ராங்க்லினுக்கு வந்து இரண்டு மாதம் ஆகிறது. பொம்மியின் அறிமுகம் சென்ற வெள்ளிக்கிழமை ‘இன்டியா பஸாரி’ல் நேர்ந்தது. அன்றைக்கே அவள் வீட்டிற்குப் போயிருந்தோம். உங்கள் எண் எனக்கு அவளிடம் இருந்து கிடைத்தது. நேரம் கிடைக்கும்போது இந்த எண்ணுடன் நீங்கள் தொடர்பு கொண்டால் மகிழ்வேன். 615-…. மிக்க நன்றி! பை

சரவணப்ரியாவின் அலைபேசி எண்ணை பொம்மி யாருக்கும் சுலபத்தில் தரமாட்டாள்,  அதுவும் ஊருக்குப் புதிதாக வந்த ஒருத்திக்கு. முக்கியமான காரணம் இருந்தாக வேண்டும். அது என்னவாக இருக்கும்? உடனே ஜனனி கொடுத்த எண்ணை அழைத்தாள். முகமன்களுக்குப்பிறகு,

“நான் ‘கார்க்ஸ் காபிடல் வெல்த்’ல இருக்கேன். என் கணவன் ‘சன்ஷைன் ஹார்வெஸ்ட்’டின் சீனியர் ரிசர்ச் சயன்டிஸ்ட். மாடிசன், விஸ்கான்சின்ல ரெண்டுபேரும் படிச்சோம். கல்யாணம் ஆனதும் மில்வாகி. அங்கே சில காலம். சொல்லிவச்ச மாதிரி நாங்க வேலை பண்ணற ரெண்டு கம்பெனிகளும் ஃப்ராங்க்லினுக்கு இடம் மாறினதால நாங்களும் கூடவே வந்துட்டோம்.”  

“நாங்க ரொம்ப வருஷமா இங்கே இருக்கோம்.” 

“பொம்மி சொன்னா.”    

தயக்கத்தை வெளிப்படுத்திய சிறு இடைவெளி.  

“எங்க வீட்டுல ஒரு சின்ன சாப்பாட்டுக்கு நீங்க ரெண்டு பேரும் வரணும்!”  

“எப்ப…” 

“வர்ற சனிக்கிழமை சாயந்திரம். நீங்க மட்டும். முடியுமா?” 

சிறப்பான சந்திப்பு. சாமிக்கும் சேர்த்து சம்மதம் தெரிவித்தாள்.

“வீடு எங்கே?”

ஜனனி முகவரியைச் சொன்னாள். 

முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் ஒரே தளத்தில் கட்டப்பட்ட சிறிய வீட்டின் முன்னால் சாமி காரை நிறுத்தினான். வீட்டுப்பாதையில் சரளைக்கற்கள். பாதையின் முடிவில் ஒரேயொரு கார். இரண்டாம் தலைமுறை ப்ரையஸ்.

“இன்வெஸ்ட்மென்ட்ல இருக்கும் ஜனனி மாளிகையில குடியிருப்பா,  முன்னாடி ரெண்டு லெக்சஸ் புத்தம்புதுசா நிற்கும்னு எதிர்பார்த்தேன்.”

“நீ நினைக்கிற மாதிரி தொழில் இல்ல. அவ வேலை பண்ணற கம்பனியின் ஆரம்பப்பெயர் ‘ஹியுமன் காபிடல் அன்ட் நேசுரல் வெல்த்’.”

“அதாவது,  மனிதர்களின் சிந்தனை சக்தியும் இயற்கையின் புதுப்பிக்கும் வளமும்.” 

“அதே. சோஷலிச கம்பெனியோன்னு சந்தேகம் வராம இருக்க பெயரை மாத்திட்டாங்க.”

“சன்ஷைன் ஹார்வெஸ்ட் புதுசாத்தொடங்கின ஆராய்ச்சி நிறுவனம் மாதிரி தெரியுது.”

“கரெக்ட். மெக்னீஷியமும் கார்பனும் வச்சு ஒரு சோலார் பாட்டரி பண்ணியிருக்காங்க. அதை லோ-டெக்ல தயாரிக்கத்தான் மில்வாகிலேர்ந்து இங்கே வந்திருக்காங்க. அதைப்பத்தி கமலபதியோட பேசலாம்னு இருக்கேன்.”

“அது சீக்கிரம் மார்க்கெட்டுக்கு வரும்னு சொல்.”

“யாராவது ஆரம்பப்பணம் கொடுத்தா…” 

கார் வந்து நின்றதை ஜன்னல் வழியே பார்த்து ஜனனியும் கமலபதியும் வாசலில் வந்து நின்றார்கள். சரவணப்ரியாவும் சாமியும் காரில் இருந்து இறங்கி நடந்தார்கள்.

ஜனனி கொடுத்த விவரங்களுடன் அவர்கள் தோற்றம் ஒத்துப்போனது. அவனுக்கு நரையின் ஆரம்பக்கட்டம். அவள் உடலில் பருமன் சேரவில்லை,  ஆனாலும் இளமையின் பிற்பகல். முகத்தில் அசாதாரண அமைதி. அவன் சாதாரண சட்டை பான்ட்ஸில்,  அவள் சூடிதாருக்குமேல் ‘சன் ஈஸ் ஃப்ரீ’ என்ற வாசகத்துடன் டி-சட்டை.

வரவேற்பும்,  நலன் விசாரிப்பும். 

வீட்டின் உள்புறம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். சமையலறையின் அடுப்பு முதல் குளியலறையின் தொட்டி வரை பளிச்சிட்டன. மர நாற்காலிகள். தொலைக்காட்சி தொங்காத வெற்றுச்சுவர். திறந்த ஜன்னல்களும் மின்விசிறிகளும்.

வீட்டில் அதிக சாமான்கள் இல்லை. ஊர்மாறியபோது பலவற்றை கழித்துக்கட்டி யிருக்கலாம்.

“குடிக்க எதாவது வேணுமா?” 

“சாப்பிட்டிரலாமே. நடக்கறதுக்கு அப்புறம் நேரம் கிடைக்கும்” என்றாள் சரவணப்ரியா.

“அப்ப நீங்க ஆரம்பிங்க!”   

ஜனனி நீட்டிய அகன்ற கார்னிங் தட்டையும் கரண்டிகளையும் வாங்கிக்கொண்டாள். மேஜைமேல் இருந்த பாத்திரங்களை வரிசையாகப் பார்வையிட்டு வியந்து நின்றாள்.

“என்ன யோசிக்கறீங்க?” 

“சின்ன சாப்பாடுன்னு சொல்லிட்டு ஏழெட்டு செய்திருக்கியே.” 

“உங்க கிட்ட எனக்கு ஒரு அறிவுரை வேணும்.”

“விருந்து வைக்காம வெறுமனே கேட்டிருந்தாலே நான் உனக்கு உதவிசெய்வேன்னு பொம்மி சொல்லலியா?” 

“சொன்னா. நான் தான் அவ பேச்சைக் கேக்காம உங்களை சாப்பிடக் கூப்பிட்டேன்” என்று ஜனனி புன்னகைத்தாள்.  

“எல்லாத்துக்கும் பொதுவான அம்சம் ஒண்ணு இருக்குன்னு தோணுது.”  

“காய் பழங்கள் ஃப்ராங்க்லின் ஃபார்மர்ஸ் மார்க்கெட்ல இன்னிக்கி காலையிலதான் வாங்கினேன்.” 

“அதுக்குமேல ஒண்ணு.” 

காரட்,  முழுப்பயறு சாலட். கோதுமையில் தயாரித்த ரொட்டி. காய்கள் அதிகம் வேகவைக்காமல் தாளித்த கூட்டு. பொடித்தக்காளியும்,  வெள்ளரிக்காயும் போட்ட பச்சடி. பீச்,  பெர்ரி வகைகள்,  திராட்சை ஆகியவற்றின் கலவை.

“தானியங்களும் பருப்புகளும் ஊறவைத்து முளைவிட்ட மாதிரி தெரியுது. மொத்தத்தில எரிசக்தி குறைச்சலான சமையல். சரியா?”  

“டாண்ணு கண்டுபிடிச்சிட்டீங்களே. உங்களைப்பத்தி பொம்மி சொன்னது சரிதான்.” 

பிங்கர்ட்டன் பார்க். கோடைகாலம் என்றாலும் வெயில் சாய்ந்த வேளை. மரங்களின் நீண்ட நிழல்கள். பல நிறத்து,  பல இனத்துக் குழந்தைகள். பெற்றோர் மேற்பார்வையில் ஊர்ந்த மழலையர்கள். பதின்பருவத்தைத் தொடப்போகும் தான்தோன்றிகள். இரண்டிலும் சேராத சிறுவர்கள். மணலில் கைகளை கால்களைப் புதைத்து,  ஊஞ்சல்களில் வேகமாக ஆடி,  கீழேகுதித்து,  சறுக்குமரங்களில் இறங்கி,  சங்கிலிகளில் தொங்கி… ஒரே கூச்சல். சரவணப்ரியாவும் ஜனனியும் அந்தக்காட்சியை ரசித்துக்கொண்டு நடந்தார்கள். விளையாடும் இடத்தைத் தாண்டியதும்,  

“நீங்க கவனிச்சிருக்கலாம். குடும்பத்தில நாங்க ரெண்டுபேர் மட்டும் தான். இங்கே வர்றதுக்கு முன்னால தான் பத்தாவது மேரேஜ் டேயை கொண்டாடினோம்.” 

சவரணப்ரியாவின் எண்ணங்கள் நான்கு பத்தாண்டுகளைத் தாண்டி பின்னால் சென்றன. ஜனனிக்கு என்ன அறிவுரை தேவை என்பது தெரிந்தது.

“உங்களுக்கும் அப்படியொரு பிரச்சினை இருந்ததுன்னு பொம்மி சொன்னா.” 

“உண்மை தான்.” 

“இது உங்க காலம் மாதிரி இல்ல. நிறைய பெண்கள் விரும்பியே குழந்தை இல்லாத வாழ்க்கையை தேர்ந்தெடுக்கறாங்க. எப்ப குடும்பம் பெரிசாகப்போறதுன்னு கேட்டு யாரும் எங்களுக்கு சங்கடம் கொடுத்தது இல்ல.” 

“அதுவும் உண்மை. எங்க கதை வேற. ரெண்டு பேருடைய படிப்பு முடிஞ்சதும் இந்தியாவுக்கு திரும்பிப்போனோம். சுத்தில இருக்கறவங்க குழந்தை இல்லாத எங்களைப் பார்த்து அநுதாபத்துடன் நடந்துக்கல. இங்கேயே திரும்பிவந்துட்டோம்.” 

“திரும்பிவந்து…”  

“நாங்க அப்ப சால்ட்லேக் சிடில இருந்தோம்…

கனவா இல்லை நிஜமான நிகழ்வை சரவணப்ரியாவின் மூளை அசைபோடுகிறதா? தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையின் குழப்பம்.

யூடா மருத்துவமையத்தில் இருந்து நடக்கும் தொலைவில் அவர்கள் வசித்த அடுக்கு இல்லம். அதன் உச்சித்தளத்தில் இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பம். மின்தூக்கிக்கு காத்திருந்தபோது அந்த குடும்பத்தை சந்தித்தார்கள். தாய் அவர்களை உடனே அடையாளம் கண்டு தன் பெரிய பையனிடம்,  

“க்ரிஸ்! மிஸ் சாராவும் மிஸ்டர் நேதனும் அக்கறை எடுத்து எனக்கு வேதியியல் சொல்லிக்கொடுத்ததால் தான்,  நான் நர்ஸ் பட்டம் வாங்கினேன்” என்று தன் பையனுக்கு அவர்களை அறிமுகம் செய்தாள்.

ஏழெட்டு வயது க்ரிஸ் முகத்தில் புள்ளிகள்,  சுருட்டைத்தலைமயிர். தன் தாய்க்கே பாடம்சொன்னவர்கள் என்றால் எவ்வளவு புத்திசாலிகள் என்ற பிரமிப்புடன் அவர்களைப் பார்த்தான். அப்போதிருந்து சரவணப்ரியாவையோ சாமியையோ நடைவழியில்,  கட்டடத்துக்கு வெளியில் சந்திக்க நேரிட்டால் மௌனமாக ஒரு மதிப்புப்புன்னகை.

முந்தைய தினம் துணிதுவைத்து உலர்த்தும் இயந்திரங்களின் கூடம். சரவணப்ரியாவும் சாமியும் இரண்டு துணிக்கூடைகளுடன் நுழைந்தபோது தன் தாய்க்கு துணிகளை மடிப்பதில் உதவிசெய்த க்ரிஸ். அவர்களைக் கண்டதும் அவனாக சாமியின் அருகில்வந்து,  “ஹாப்பி ஃபாதர்ஸ் டே! மிஸ்டர் நேதன்!” என்றான். இருவருக்கும் ஆச்சரியத் தாக்குதல். அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியும்…

“தாங்க்ஸ்,  க்ரிஸ்! நான் இனிமேல் தான் தந்தையாக வேண்டும்.”

“யூ வில் பி,  ஒன் டே!”

வயதில் பெரியவர்கள் தான் ஆசீர்வாதம் வழங்க வேண்டுமா?

இருவருக்கும் கண்களில் ஈரம். கூடைகளைத் தரையில் வைத்துவிட்டு க்ரிஸ்ஸை அணைத்துக்கொண்டு இன்னொரு முறை நன்றி சொன்னார்கள்.

முழு விழிப்பு தட்டியது. அருகில் சாமி இல்லை. உடலை அசைக்காமல் கைநீட்டி மேஜைமேல் இருந்த வெப்பமானியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டாள்.

க்ரிஸ் வாழ்த்து சொன்ன காட்சி இன்னொருமுறை மனதில் படர்ந்தது. கள்ளம்கபடு அறியாத அச்சிறுவனின் வாக்கு பலிக்கப்போகிறது.

வெப்பமானியைப் படித்ததும் சரவணப்ரியாவின் கண்கள் விரிந்தன. உறுதிசெய்ய அன்றைய வெப்பநிலையை முந்தைய தினம் எடுத்து எழுதிய எண்ணுடன் ஒப்பிட்டாள். சந்தேகமே இல்லை. எழுந்து வேகமாக சமையலறைப்பக்கம் வந்தாள். சாமி காப்பி கலப்பதற்காக பாலை சுடவைக்க இருந்தான். 

“இன்னைக்கி கிட்டத்தட்ட கால் டிகிரி அதிகம்.” 

அதைக்கேட்டு,  மருத்துவர் அறிவுரையின்படி ஒரு வாரம் சேர்ந்துவிட்ட தாகத்தைத் தணிக்கும் எதிர்பார்ப்பில் சாமிக்கு உற்சாகம். காப்பியை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில்…

“உன்னோட செமினல் ஃப்ளுய்டை உடனே எடுத்திட்டுப்போகணும்.”

“நான் ரெடி. அதுக்கு உன் ஒத்துழைப்பு அவசியம்” என்று அவளை ஆசையுடன் முத்தமிட்டான்.

கொஞ்சம் விலகி,  “இப்படிச் செய்தா அதுக்கு வீரியம் அதிகமா இருக்கும்னு நினைக்கறியா?” என்று அவனை வம்புக்கு இழுத்தாள். 

“நாம ரெண்டுபேரும் சயன்டிஸ்ட்ஸ். அதை இப்ப டெஸ்ட் பண்ணிப் பார்த்திடுவோம்.”  

அடுத்த அரைமணி ஒரு கணமாக நீண்டது. மருத்துவக்குப்பியில் சேகரித்த வெண்ணிற திரவத்தை சரவணப்ரியா பனிக்கட்டிகளுக்கு நடுவில் பத்திரப்படுத்தினாள். காப்பிக்கும் அவசர ஒப்பனைக்கும் பிறகு அவள் அதைக் கையில் எடுத்துக்கொண்டாள்.

“குட் லக்!” 

புன்னகையுடன் கிளம்பி நடந்தாள்.  

மருத்துவமையத்தில்… இளம் மருத்துவர் பெர்ன்ஹைஸல் மேற்பார்வையில்… சாமியின் வேகமாக நகரும் ஆண்கருக்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு,  பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஊடகத்தில் வைக்கப்பட்டு,  சரவணப்ரியாவின் கருப்பைக்கு அருகில் செலுத்தப்பட… அவள் அரைமணி அசையாமல் படுத்திருக்க…

அப்படி அவள் செய்தது கடைசி தடவை.

இக்காலத்தில் நோய்கள்,  உடற்குறைகள் பற்றிய மருத்துவ விவரங்களை வலைத்தளத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படைக் காரணங்கள்,  குணப்படுத்தும் வழிகள் எல்லாம் படங்களுடன். அதனால்,  சரவணப்ரியா சுருக்கமாக…

“டாக்டர் பெர்ன்ஹைஸலின் சாமர்த்தியத்தில்,  ஐயுஐ (இன்ட்ரா-யுடரைன் இன்செமினேஷன்) முறையில நான் ப்ரெக்னென்ட் ஆனேன். அப்படிப்பிறந்த பையன் சூரன். எல்லாவிதத்திலும் எங்களுக்கு சந்தோஷமும் பெருமையும் கொடுத்திருக்கான்.” கடைசி வாக்கியம் உணர்ச்சியில் நனைந்து கரகரத்தது. 

மௌனமாக சில தப்படிகள்.

“தப்பா நினைக்க மாட்டீங்கன்னு கேக்கறேன். ஏன் இன்னொரு குழந்தைக்கு அதேமாதிரி முயற்சி பண்ணல?” 

“மக்கள்தொகையை குறைச்சாலே,  நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் முக்கால்வாசி சரியாயிடும்னு எங்கள் கொள்கை. ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தைன்னு இருந்தா இரண்டு தலைமுறையில ஒரு பில்லியனுக்கு (நூறு கோடி) போயிடலாம்.” 

“ம்ம்ம்,  உங்க மாதிரி அந்தக்காலத்தில எல்லாரும் நினைச்சிருந்தா இப்ப உலகம் நல்லநிலையில இருந்திருக்கும்.” 

ஒரு சுற்று முடிந்து அடுத்தது. ஜனனியின் முறை.

“பத்து வருஷத்தில பலதடவை பீரியட்ஸ் ஒருவாரம் பத்துநாள்னு தள்ளிப்போயிருக்கு. முதல் இரண்டு வருஷம் எதிர்பார்ப்பு,  அதைத்தொடர்ந்து ஏமாற்றம். பிறகு எனக்கே குழந்தை அவசியமான்னு கேள்வி.”  

சரவணப்ரியாவின் பார்வையில்,  ஏன்?

“நீங்க பயாலஜி படிச்சது உண்டா?”

“மேஜரா இல்ல. ஆனா அதில நிறையத்தெரியும்.” 

“அப்ப உங்களுக்கு என் நிலமை புரியும். இந்தக்காலத்தில,  மார்க்கெட்டிங்,  ஃபார்மகாலஜி,  ப்ரோக்ராமிங்,  கைனிஸியாலஜின்னு காலேஜ்ல எத்தனையோ படிப்புகள் பட்டங்கள். அப்பறம் படிப்புக்கேத்த வேலைகள். ஆனா கான்செர்வேஷன் பயாலஜி மாதிரி வேற எதுவும் அவ்வளவு சோகம் தராது.

உயிரிகளைப்பேணும் உயிரியலாளர்களின் விரக்தி

ஜனனி ராமசந்திரன்

உயிரினங்களின் அழிவைத் தடுத்து அவற்றின் பலவகைகளைக் காப்பற்றுவது எங்கள் அறிவுத்துறையின் குறிக்கோள். அதை நிறைவேற்ற சுற்றுச்சூழலின் தூய்மை,  உயிர்களைப் பராமரித்தல்,  இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற பிற துறைகளிலும் பயிற்சி பெறுகிறோம்.   

கற்றதைப் பயன்படுத்தி நாங்கள் செய்யும் முயற்சிகளில் எப்போதாவது ஒன்றிரண்டு நல்ல சேதிகள் – அழியக்கூடிய நிலையில் இருந்த வழுக்கைக்கழுகு இனத்தின் எண்ணிக்கை பெருகிவருகிறது. ஆனால்,  தினமும் நாங்கள் சந்திக்கும் சோகசித்திரங்கள் – வெப்பநிலையின் தீவிர ஏற்ற இறக்கங்கள்,  இரட்டித்துக்கொண்டே போகும் மக்கள்தொகை,  பசுமைப்புரட்சி என்கிற மாயை,  பொறுக்கமுடியாத ஏழ்மை,  எல்லாவகையான காடுகளின் அழிவு,  கனிமங்களின் இழப்பு,  சூழலின் நச்சுப்பொருட்கள்.

சாம்பல்நிற ஓநாய்கள் பத்தாயிரம் இருந்தால் அதிகம். ஓநாய்க்கூட்டம் பலவீனமான இரையைக் குறிவைத்து வீழ்த்துவது அற்புதமான வேட்டைக்கலை. வலிமையும் அறிவும் தீரமும் மிக்க அந்த இனத்தில் இருந்து வந்து மனிதனை அண்டிவாழும் நூறு மில்லியன் நாய்களுக்கோ மழைக்காடுகளை அழித்துத் தயாரித்த உணவு. சுதந்திரமாகத் திரியும் சிங்கங்கள்,  புலிகள்,  மலைச்சிங்கங்கள்,  கரும்புலிகள்,  சிறுத்தைகள்,  காட்டுப்பூனைகள் அழிவுநாளை நோக்கிப்போகும்போது,  மனிதனைவிட தன்னலமிக்க வீட்டுப்பூனைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.   

இதையெல்லாம் பார்த்து நம்பிக்கை இழந்து,  மனச்சோர்வு அடையாமல் நாங்கள் எப்படி இருக்கமுடியும்?

சின்னவயசில நான் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப்படுவேன். வெள்ளை யூனிஃபார்ம் சுத்தமா இருக்கணுமே,  பென்சிலின் ஊக்கு உடையாம இருக்கணுமே,  இப்படி. பிஎச்.டி. முடிச்சதும் முழு பெசிமிஸ்ட் ஆயிட்டேன்.”

மறுத்துச்சொல்ல ஒன்றும் இல்லை. அதனால்… 

“கமலபதி எப்படி?” 

“பெட்ரோலியம் குறைஞ்சுபோனாலும் சூரியனின் சக்தியை சேர்த்துவச்சு நிலமையை ஒருமாதிரி சமாளிக்க முடியும்னு அவனுக்கு நம்பிக்கை.” 

அந்த நம்பிக்கைக்கு ஒரு புதுவழி வேறு கண்டுபிடித்திருக்கிறான்.

“எதிர்காலத்தில நிலமை மோசமாகும்போது எப்படியாவது பிழைச்சிக்கலாம்னு நானும் ஒருகாலத்தில நினைச்சேன். ஒவ்வொரு வருஷமும் என் நம்பிக்கை குறைஞ்சிண்டே வர்றது. இயற்கையின் எல்லைகளைத் தாண்டினதால சிறியா,  ஏமன்,  எகிப்து இங்கெல்லாம் நடக்கற அக்கிரமங்கள்,  வயல்கள் காஞ்சுபோனதினால ஆஃப்ரிக்க மக்கள் படற அவதிகள். அதெல்லாம் இங்கே வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்? அதுவும் யூ.எஸ்.ல எல்லார்கிட்டயும் கைக்கு அடக்கமான க்ளாக் பிஸ்டல்லேர்ந்து தோளில் சுமக்கற மெஷின் ன்கள் வரைக்கும். துளி அதிருப்தின்னா உடனே துப்பாக்கியை தூக்கிடுவாங்க. நீங்களே வருங்காலத்தை யோசிச்சுப் பாருங்கோ!”

சரவணப்ரியா அப்படியே செய்தாள்.

“சிரமப்பட்டு பெத்து பலவருஷம் வளர்த்த குழந்தை பட்டினியில,  துப்பாக்கி முனையில சாகற மாதிரி,  இல்ல வெளிநாட்டில போய் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஆகாசத்திலேர்ந்து குண்டுபோட்டு சாகடிக்கிற மாதிரி எனக்கு மனச்சித்திரங்கள்.”

ஆழ்ந்த யோசனைக்குப்பிறகு சரவணப்ரியா,     

“குழந்தையின் எதிர்காலத்தை பத்திய உன் கவலை எனக்குப் புரியுது. உன்னளவுக்கு இல்லாட்டியும் எங்களுக்கும் நிச்சயமின்மை இருந்தது,  எல்லாக்காலத்திலும் இருந்திருக்கு. பையன் பிறந்தப்போ எங்க ரெண்டு பேருக்கும் நிலையற்ற ஆராய்ச்சி வேலை. சயன்ஸில ஏபிசிடி கூடத்தெரியாத யூ.எஸ். காங்க்ரஸ் மானியத்தை வெட்டினா எங்களுக்கு சம்பளம் கிடையாது. அப்படி நடந்தா குழந்தையை எப்படி காப்பாத்தி படிக்கவைப்போம்னு நாங்களும் கவலைப்பட்டோம். புராணத்தில மார்க்கண்டேயர் கதை. நீ கேள்விப்பட்டு இருக்கலாம். அவர் பதினாறு வயசில சாகப்போறார்னு பிறக்கறதுக்கு முந்தியே தெரியும். ஆனாலும் அவரோட அப்பா அம்மா குழந்தையை பெத்து வளர்த்தாங்கன்னு வரும். எதிர்காலத்துக்கு யார் கேரன்ட்டி தரமுடியும்? தவிக்கப்போறாங்கன்னு தாய்மையை தவிர்க்கமுடியுமா?” 

சரவணப்ரியாவின் இறுதி வாக்கியம் ஜனனியின் இதயத்தைத் தொட்டது.

“கமலபதியும் அதைத்தான் சொல்றான்.”

“நாம பாத்துக்கற வரைக்கும் அவங்க சந்தோஷமா இருக்கட்டும். அப்பறம் எல்லாரும் கூண்டோட கைலாசம்,  வைகுண்டம்,  இயேசுவின் வீடு,  ஜன்னா…” 

“ஒருவேளை,  காலாகாலத்தில குழந்தை பிறந்திருந்தா நானும் அப்படி நினைச்சிருப்பேனோ என்னவோ? இப்ப சாய்ஸ் இருக்கறதனால சஞ்சலம்.”

சஞ்சலத்துக்கு நிவர்த்தி? மௌனமாக சில நிமிடங்கள் கடந்தன. மூன்றாம் முறையாக குழந்தைகளின் கூச்சலை ரசித்தபடி நடந்தார்கள்.

“யார்மேல குறைன்னு தெரியுமா?”

“இங்கே வர்றதுக்கு முன்னால கமலபதி யுராலஜிஸ்ட்டை போய்ப்பார்த்தான். டெஸ்ட்ல ஸ்பெர்ம் எண்ணிக்கை ஓகே,  ஆனா மொடிலிடி குறைச்சல்.” 

“சாமிக்கு இருந்த அதே குறைதான். அப்ப டாக்டர் பெர்ன்ஹைஸலுக்கு ஒரு சான்ஸ் கொடு! அவர் இப்ப நாஷ்வில்லிலே ஃபெர்டிலிடி க்ளினிக் நடத்தறார். நான் ஒவ்வொரு தாங்க்ஸ்கிவிங் போதும் அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து அனுப்பவேன். அவரும் தன்னுடைய முதல் வெற்றின்னு என்னை ஞாபகம் வச்சிருக்கார்.”

ஜனனி நின்றாள். சவரணப்ரியாவின் வெம்மையான கைபட்டு பனிக்கட்டியின் மேல்பரப்பு இளகி ஈரம் படரத் தொடங்கியது.

“ஒவ்வொரு குழந்தையும் ஒரு புது நம்பிக்கை.”

“அவர் நம்பர் கொடுங்கோ!” என்று சொன்னாலும் ஜனனி குரலில் ‘இருந்தாலும்…’ ஒளிந்திருந்தது. 

“உங்க முயற்சியின் முடிவை இயற்கை தீர்மானிக்கட்டும்!”

அடுத்துவந்த வாரங்களில் ஜனனி அழைத்தபோதெல்லாம் குழந்தைபற்றிய பேச்சை சரவணப்ரியா எடுக்கவில்லை. அவளாகவே மூன்றுமாதம் கழித்து…

“டாக்டர் பெர்ன்ஹைஸலுக்கு பதிலா இனி வேறொரு டாக்டரை நான் பார்க்கணும்” என்றாள். 

“பாராட்டுகள்!”

“எல்லாம் உங்களால.” 

டிசம்பர் முதல் வாரம். திங்கள்கிழமையே தெரிந்துவிட்டது,  மறுநாள் நிதித்தாள்களின் ஒரு மூலையில் செய்தி வெளிவந்து வதந்தியை உறுதிப்படுத்தியது. கமலபதிக்கு ஒரே சந்தோஷம். சன்ஷைன் ஹார்வெஸ்ட்டை ஒரு பெரிய நிறுவனம் விழுங்கப்போகிறது. சூரியவொளியை சேமிக்கும் சாதனத்தின் தயாரிப்பு வேகமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். சாட்டனூகாவில் பல பருஷங்களாக மூடிக்கிடந்த ஒரு தொழிற்சாலையை மலிவாக வாங்கி புதுப்பித்து… 

ஜனனியின் வயிற்றில் வளரும் குழந்தையின் அதிருஷ்டம். அதற்கு எதிர்காலம் இருக்கிறது.

“யார் வாங்கறா?”

“யாருன்னு தெரியாது. ஒருவேளை,  மத்தவங்க போட்டிக்கு வரக்கூடாதுன்னு ரகசியமா வச்சிருக்கலாம். ஆனா நல்ல விலை கொடுக்கறாங்க. வாங்கினப்பறமும் நிறைய செலவு செய்வாங்கன்னு எதிர்பார்க்கலாம்.”

அது போதும்.

தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்,  உயர்மட்ட பயணங்கள். 

வெள்ளிக்கிழமை இரவு. கமலபதி தூங்கிவிட்டான். ஜனனிக்கு காலைநேரத் தூக்கத்தால் இரவுத்தூக்கம் தள்ளிப்போனது. பதினோரு மணிக்காவது தூங்க வேண்டும் என எண்ணத்துடன் கமலபதியின்மேல் படாமல் படுக்கையில் படுத்தாள். 

கூடத்து மேஜைமேல் இருந்த அலைபேசியில் புதிய செய்தியை அறிவிக்கும் டிங்.

நான்குவயதுப் பையன் வீணை வாசிக்கும் அதிசயத்தையோ,  வளர்ப்புப்பிராணிகளின் அழகுப் படங்களையோ யாராவது அனுப்பியிருப்பார்கள். காலையில் பார்த்துக்கொள்ளலாம். 

ஐந்து பத்து பதினைந்து நிமிடங்கள். மனம் டிங்கையே நினைத்து அலைபாய்ந்தது. யாரிடமிருந்து வந்திருக்கும்?

ஒன்றும் பிரமாதமாக இராது என்ற சமாதானம் தூக்க தேவதைக்கு திருப்தியாக இல்லை. அவளை அரவணைக்காமல் டிங்கையே வலம் வந்தது.

எழுந்துவந்து தொட்டதும் திரை ஒளிர்ந்தது. கமலபதிக்கு சன்ஷைன் ஹார்வெஸ்ட்டின் டிரெக்டர் ஐஸக் மில்டன் அனுப்பிய மின்-அஞ்சல்.  

அனைவருக்கும்…

சஸ்பென்ஸ் தீர்ந்துவிட்டது. ஒப்பொந்தம் இப்போதுதான் கையெழுத்திட்டு உறுதியானது.

இனி நாம் ‘கோக் இன்டஸ்ட்ரீஸி’ன் ஒரு அங்கம்.

வேலை பற்றி யாரும் கவலைகொள்ள வேண்டாம். நம் எல்லாரையும் அதே பதவி மட்டங்களில் கோக் நிறுவனம் அள்ளிக்கொள்ளும். 

நன்றாகத்தூங்கி வாரக்கடைசியை ஆனந்தமாகச் செலவிடுங்கள்!

திங்களில் இருந்து நமக்கு ஒரு புதிய அத்தியாயம்.

திரும்பிவந்து படுத்ததும் வெகுநேரம் புரண்டாள். அவள் சலசலப்பு கமலபதியை எழுப்பிவிடுமோ என இன்னொரு அறையில் இருந்த படுக்கைக்குப் போனாள். திங்களில் இருந்து புதிய அத்தியாயம். மனதில் திரும்பத்திரும்ப வந்தது. அந்தப்புதிய அத்தியாயம்? சூரியவொளியை மூட்டைகட்டி வைத்துவிட்டு,  இனி கனடாவின் கருமணலில்,  பெர்மியன் படிவுகளில், வயோமிங்கின் நிலக்கரியில்,  ஆர்க்டிக்கின் அடியில் பெட்ரோலியத்தின் தேடல். இந்நூற்றாண்டுக்கு மத்தியில் இரண்டு என்ன,  நான்கு டிகிரியே பூமி சூடாகலாம்.

நாக்கு உலர்ந்தது,  தொண்டை எரிந்தது. எழுந்துவந்து ஒரு தம்ளர் தண்ணீர். பிறகு அரைகுறைத் தூக்கம். 

ஜனனி ‘ஸ்டான்டிங் ராக்’கில் நிற்கிறாள்,  பொருத்தம் தானே? சுற்றிலும் கூடாரங்கள்,  கட்டை வீடுகள். பெட்ரோலியம் எடுத்துச்செல்லும் தரையடிக்குழாய் அமைப்பதை எதிர்க்கும் ஆதி அமெரிக்கர்கள்,  பலர் மரபு ஆடைகளில். அவர்களுக்குக் குரல்கொடுக்கும் தைரியம்,  மென்மையாகப்பேசும் அவளுக்கு எப்போது வந்தது?

எதிர்ப்பக்கத்தில் அரசாங்க அதிகாரிகள்,  அவர்களுக்குப் பின்னால் இராணுவத் துணைக்கலன்களுடன் காவல்படையினர்.

“உன் குரல் புதிய அரசின் காதில் விழாது. அதனால்,  நல்லதனமாகச் சொல்கிறேன். தனியார் நிலத்தில் அத்துமீறி நுழைகிறவர்களை உடனே கொல்லலாம் என்று புதிய ஆணைச்சட்டம். இடத்தைக் காலிசெய்! நம் இருவருக்குமே அது நல்லது.”

“நானும் நியாயமாகத்தான் சொல்கிறேன். குழாயில் இருந்து ஒழுகப்போகும் கசடு எண்ணெய் இங்கே வசிக்கும் ஆதிக்குடிகளின் குடிநீரைக் கெடுத்துவிடும்.”

“குழாய் இடாவிட்டால் காஸோலின் (பெட்ரோல்) விலை நான்கு மடங்கு ஆகும். அது சரியா?” 

“எட்டு மடங்கு ஆனாலும் என்ன? சூரியவொளி எல்லாருக்கும் இலவசம்.”

“அதை டாங்க்கில் நிரப்பி வாகனங்களை ஓட்டமுடியாது.” 

“ஆனால்,  அதை சேகரித்து வேறு பல விதங்களில் பயன்படுத்தலாம். சமைக்க,  விளக்கேற்ற,  மாவு அரைக்க. சன்ஷைன் ஹார்வெஸ்ட்டின் கண்டுபிடிப்பு விரைவில் சந்தைக்கு வந்து…” 

ஹெஹ்ஹெஹ்ஹே என்ற கேலிச்சிரிப்பு. 

“அது நேற்றோடு போயாச்சு,  மேடம்! இன்றுமுதல் அங்கே பறக்கிறது கோக் இன்டஸ்ட்ரீஸின் கொடி. நீ ஏற்கனவே யுத்தத்தில் தோற்றுவிட்டாய். சமர்த்தாக ஓடிவிடு!” 

“அப்படியென்றால் இனி இழக்க எதுவும் இல்லை. சாகும் வரை போராட்டம்.” 

“ஷுட்!” 

“ஒன்று ஞாபகம் இருக்கட்டும்! எங்கோ தொலைவில் இருந்து உன்னை ஆட்டுவிக்கும் உன் எஜமானன்கள் எதிர்காலத்தில் உன்னையும் விட்டுவைக்கமாட்டார்கள்.” 

“வம்புபேசி நேரத்தை வீணடிக்கிறாய்.” பின்னால் திரும்பி,  “அவளும் அவள் குழந்தையும் ஒரே சமயத்தில்… ம்ம்ம்!”

அவள் கருப்பையை நோக்கிக் குறிவைத்த இரக்கமற்ற குழல். டிஷ்ஷ்ஷ்…

அடிவயிற்றில் சுரீர் என்று கதிகலங்கவைக்கும் வலி. “ஐயோ! அம்மா!!” அதைத்தொடர்ந்து இரத்தம் கசியும் உணர்வு. எல்லாம் கனவு,  விழித்தால் பயங்கரக் காட்சி மறைந்துவிடும் என்ற நம்பிக்கை சிதைந்தது. ஜனனி கையால் துழாவினாள். விரல்களில் இரத்தத்தின் பசபசப்பு,  தசைத்துணுக்குகளின் கரகரப்பு. உடலைப் பிழிந்தெடுக்கும் வலியிலும் அவள் மனதை வாட்டிய அந்தக் கேள்வி.

வயிற்றில் தானே குண்டு பாய்ந்தது,  ஏன் இரத்தப்போக்கு வேறொரு இடத்தில்?

காப்பியுடன்,  குட் மார்னிங்குடன் வந்த கமலபதி.

“கமல்! என்னை மன்னித்துவிடு!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.