சாதலும் புதுவது அன்றே: An Elephant Sitting Still

மன்சௌலி நகரில் தனது அன்றாடச் செயல்களிலிருந்து விலக்கம் கொண்டு விட்ட ஒரு யானை வெறுமனே அமர்ந்திருக்கிறது. அதனைப் பொது மக்கள் முட்கரண்டிகளால் குத்தியும் கழிகளால் அடித்தும் கேலி ஒலிகளெழுப்பிச் சீண்டியும் அது அசைந்து கொடுப்பதேயில்லை. எதிர்ப்பும் வேதனை வெளிப்பாடும் கூட இல்லை. தனக்களிக்கப்படும் உணவையும் அது மறுதலித்து விடுகிறது. அனைத்திற்கும் அப்பாற்பட்டு சலனமற்றுக் கிடப்பதன் நித்ய நெகிழ்வைப் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்ததன் விளைவல்ல இது. தனது வாழ்வை உதறித் துறந்து விட்ட இறுக்கத்தினால் ஏற்பட்ட ஒடுக்கம். நம்பிக்கையிழப்பின் வெற்றிடத்தை இட்டு நிரப்பும் நன்னஞ்சு. ஆரவாரக் கூச்சலுடன் கொட்டும் அருவியின் மடியில் மெல்லிய முணுமுணுப்புடன் நழுவிச் செல்லும் ஓடை போல. விரைவில் இச்செய்தி பரவி பல்வேறு ஊர்களிலிருந்தும் அந்த யானையைக் காணத் திரள் திரளாக மக்கள் கூடுகிறார்கள். உலகை உதாசீனப்படுத்தியபடி பேராற்றலும் பெருவலிமையும் கொண்டதோர் உயிர் மௌனத்தில் உன்னித்திருக்கிறது. அந்தப் பேருருவின் அசைவின்மையில் நிறைந்திருக்கும் துயர் நிர்க்கதியின் அருவ அடையாளமாகிறது.

ஹு போ (Hu Bo)

இது சீன இயக்குநர் ஹு போ-வின் (Hu Bo) முதலும் கடைசியுமானத் திரைப்படம். அவர் ஹங்கேரிய இயக்குநரான பேலா தாரின் (Béla Tarr) மாணவர். தனது இருபத்து ஒன்பதாவது வயதிலேயே தற்கொலை செய்து கொண்டவர். அவரது மரணத்திற்கான காரணம் அபத்தமாக இருப்பதாகச் சிலருக்குத் தோன்றலாம். அபிப்ராய பேதங்கள் இருக்கட்டும். தற்சமயம் எனக்கும் இருபத்து ஒன்பது வயதாகிறது. சொல்லிக் கொள்ளும்படி உருப்படியாக எதையுமே செய்யாமல் வாழ்வை நீட்டித்துக் கொண்டிருப்பதை விடவும் இப்படியொரு மகத்தான படைப்பை உலகிற்குக் கொடையாகத் தந்து விட்டுத் தம்மை மாய்த்துக் கொள்வதில் மேலதிக அர்த்தங்கள் உண்டெனக் கருதுகிறேன். நாமறியாத உச்சியில் தனித்திருக்கும் எவருக்கும் துணையெனப் பல்கிப் பெருகுவது அச்சமும் வெறுமையுமே! மற்றவர்கள் தொட முடியாத உயரம், அணுக அஞ்சும் மகோன்னதம், அடையத் துடிக்கும் விருப்புறுதி. அத்தகையவர்களை அண்ணாந்து நோக்கி வியக்க மட்டுமே நம்மால் இயலும்.

இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் நிகழும் கதை. நான்கு நபர்களைப் பற்றியது. தனது நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருக்கும் உள்ளூர் தாதா யு செங் (Yu Cheng), அந்தத் தாதாவின் தம்பியை எதிர்பாராத விதமாகத் தள்ளிவிட்டு அவன் படுகாயமடையக் காரணமானதால் தன் உயிருக்கு அஞ்சித் தப்பியோடும் பள்ளி மாணவன் வெ பு (Wei Bu), தாயுடன் பிணக்கும் துணைத் தலைமை ஆசிரியருடன் காதலும் கொண்டுள்ள பள்ளி மாணவி ஹுவாங் லிங் (Huang Ling), தனது மகனால் முதியோர் இல்லத்திற்குத் துரத்தப்படக் காத்திருக்கும் ஓய்வூதியப் பெறுநர் வாங் ஜின் (Wang Jin). இவர்களது வாழ்வின் அர்த்தமின்மையைச் சுட்டிக்காட்டி உணர்த்துவதற்கு இப்படத்தின் இயக்குநர் ஓர் யானையைத் தெரிவு செய்திருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். படத்தில் யானையைக் காட்டுவதேயில்லை. ஆனால் அதைக் குறித்த எண்ணமும் பிம்பமும் தொடக்கத்திலிருந்தே நம் மனங்களில் ஆழமாக விதைக்கப்படுகிறது. மெல்ல மெல்ல விரித்தெடுக்கப்படுகிறது.

யானைக்கு மாற்றாக சிங்கத்தையோ சிறுத்தையையோ குறியீடாக்கியிருக்கும் பட்சத்தில் இயக்குநர் உத்தேசித்திருந்த விளைவைப் பார்வையாளரிடையே எதிர்பார்த்திருக்க முடியாது என்பதை உறுதியாகச் சொல்லி விடலாம். ஏனெனில் குழைவும் கம்பீரமும் ஒருங்கே அமையப் பெற்ற உயிரினம் வேறில்லை. அதன் ஜீவனுள்ள கண்களில் நிறைந்திருக்கின்ற களங்கமின்மையின் மறுபக்கமாக மேவியிருக்கும் ஒருவித விலக்கமும் அபூர்வமானது. அதனுடைய மூர்க்கத்தை சமன் செய்திடும் குழந்தைமை எப்போதும் ஆச்சரியக் குதூகலத்துடனேயே என் நினைவிலாடியிருக்கிறது. மனிதரல்லாத ஓர் உயிரினம் ஞானமடைய முடியுமெனில் அது சந்தேகத்திற்கு இடமின்றி யானையாக மட்டுமே இருக்க முடியும் என நம்புகிறேன். இப்போதெல்லாம் யானையை ‘மிருகம்’ என்றழைப்பதே அதன் மீதான வன்முறையாகத் தான் தொனிக்கிறது.

வலிந்து பற்றியிருக்கும் வாழ்க்கையின் கைப்பிடியை வெடுக்கித் தள்ளி விலகி ஓடுபவர்களைப் பற்றிய படம். தாங்கள் அண்டி வாழும் மனிதர்களது சிறுமையைக் கண்டு தங்களைக் குறுக்கிக் கொண்டவர்கள். குறுகிக் குறுகிச் சிறுத்துச் சோர்வுற்ற மனங்களில் சிடுக்கேறுகிறது. வெல்ல முடியாத போரின் முடிவில் அவர்தம் அகம் கோணிக் கொள்கிறது. அவர்கள் முகம் திருப்பி விலகிச் செல்கிறார்கள். விலக்கத்தின் முதல் படி வீட்டிலிருந்து அந்நியமாவது தான். அங்ஙனம் அந்நியமாகி விட்டவர்களது உள்ளுள் புறுபுறுக்கும் கழிவிரக்கப் பொருமல்களுக்கு உடலதிர்ந்து விக்கித்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடுமாறி, நடுநடுங்கத் தொடங்குகிறது. தங்கள் கைமீறிச் செல்வதை எல்லாம் வெறுமனே வெறித்துப் பார்க்க மட்டும் அவர்கள் பழகிக் கொள்கிறார்கள்.

அவர்களது உள்ளொடுக்கத்தின் இருட்குகைகளில் வௌவால்கள் அலறிக் கீரிச்சிடுகின்றன. அவற்றின் குருட்டு விழிகளில் எப்போதும் கடும் எச்சரிக்கை மின்னுகிறது. இறக்கைப் படபடப்பு கூட்டும் எதிரொலிப்பில் துடிப்பு எகிறுகிறது. நெஞ்சக் கொப்புளங்களைக் கூர் நகங்கள் பிராண்டுகின்றன. காயப்பட்டவர்களின் உள்ளக் கொதிப்பில் எழுந்ததொரு தீக்கொழுந்து இடைவிடாது எரிகிறது. கேலியும் தன்னிரக்கமுமாக மனம் வெதும்பிக் குமைகிறது. மேலும் மேலும் தசைகள் இறுகுகின்றன. நரம்புகள் முறுக்கிக் கொள்கின்றன. சந்தர்ப்பங்களின் ஆவேசச் சுழலில் சிக்கி, கால்களை உதறிக் கொள்ளாமல் மூழ்கிக் கொண்டிருப்பவர்களின் மூச்சுக் குமிழ்கள் மேற்பரப்பை எட்டிப் பட்பட்டென வெடிக்கின்றன. எல்லோரது வாழ்விலும் இப்படித் தானே எனும் எண்ணம் நம்மை நாமே சமாதானப்படுத்தித் தேற்றிக் கொள்ளும் விதமாக எப்படியோ தோன்றி விடுகிறது. இனி ஒருபோதும் துடைத்தெறிய முடியாத சலிப்பின் படலம் முகத்தில் படிகிறது.

மனம் இசைவதற்கும் நிகழ்பாடுக்குமான இடைவெளிகள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. நான்கு நபர்களுடன் சமரசம் செய்து இணங்கி வாழ இயலாதவர்களாயினும் தனித்து விடப்படுவதன் நிரந்தர வாதைக்குத் துணிந்தவரென எவருமில்லையே! வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்துச் சென்று சுதந்திர தாகத்தைத் தீர்ப்பதொன்றும் அத்தனை சுலபமான காரியமில்லை. விடுதலைக்கான நமது தீவிரப் பிரயத்தனங்கள் யாவும் மெய்மைத் தேடலை இலக்காகக் கொண்டவை அல்ல என்பது குறித்தும் நமக்குத் தெரியும். ஆனால், எவ்வளவு தான் தாங்கிக் கொள்வது? எத்தனையைத் தான் சகித்துக் கொள்வது? கும்பலில் தனித்திருப்பது வேறு. ஒட்டுமொத்தக் கும்பலும் ஒன்றுகூடி, தனியர்களெனத் தங்களை உணர்ந்தவர்களைத் துரத்துவது வேறு. தங்களுக்கு இந்தப் பரந்து விரிந்த உலகமும் ஆசுவாசமளிக்காது என்பதை வீட்டை விட்டு வெளியேறியவர்கள் அறிந்து கொள்வதற்கு அதிக அவகாசம் தேவைப்படப் போவதில்லை. புலி வாய்க்குத் தப்பி புதைகுழியில் விழுந்த கதை தான்.

இதன் அடுத்தக் கட்டம், வாழ்வின் மீதான அதீத வெறுப்பு அல்லது அலட்சிய விட்டேற்றி மனோபாவம். வாழ்வு உறுமுகிற போதெல்லாம் அவர்கள் மண்டியிட்டுப் பின்வாங்குகிறார்கள். அதன் ஆக்ரோஷ அழுத்தங்கள் உண்டாக்கிய கழுத்து நெரிப்பின் தடங்களில் இன்னமும் காந்துகிறது. கலங்கின கண்கள் பிதுங்கியிருக்க, மூக்கு விடைத்திருக்க, திறந்த வாய் உயிருக்குத் தவித்துக் கொண்டிருக்கிறது. விரிசல்களின் பெருக்கில் சுக்குநூறாக உடைவதற்கு முந்தைய கணம் கடைசியில் வந்தே விட்டது. அவர்களிடம் சென்று ‘நம்பிக்கையாய் இரு’ என்றோ ‘வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்’ என்றோ கடவுளை முன்னிறுத்திப் பிரசங்கிக்க முடியாது. சரமாரிக் கத்திக் குத்துகளுக்கு நடுவே கனவு காணச் சொல்வதைப் போன்றதொரு குரூரமானதும் ஆத்திரமூட்டுவதுமான அறிவுரை வேறுண்டா?

ஆமாம், இதுவொரு தத்துவார்த்தத் திரைப்படம். ஆனால், டெரன்ஸ் மாலிக் படங்களில் வருவது போல, வாய்ஸ் ஓவரில் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே ஒரு நிமிட இடைவெளி விட்டு, நம் பொறுமையின் எல்லையை அளந்து பார்த்துப் பரிசோதிக்கும் பரீட்சார்த்தங்கள் ஏதுமில்லை. அவரது Knight of Cups திரைப்படத்தைப் பார்த்து முடித்து தலையை அழுந்தப் பிடித்துக் கொண்டு வெளியே வந்த போது கட்டிப் பிடித்து ஆறுதல் கூற வாழ்வு காத்திருந்தது. ‘நாசமாப் போற மனுசன், To the Wonder-லும் இப்படித்தான் சவட்டி எடுத்திருந்தார்’ என்று அதனிடம் ஒரு பாட்டம் அழுதுப் புலம்பித் தீர்த்தேன். ‘இந்தப் படத்தையே தாக்குப் பிடித்துப் பார்த்து விட்ட பிறகு, வாழ்வின் துக்கங்கள் எம்மாத்திரம்?’ எனச் சம்மட்டியால் அடித்துத் தெளிய வைத்து அனுப்பிய இயக்குநர். அவர் வாழ்க!

பிறர் செய்ததைப் போல ஹூ போ-வின் படத்தில் தத்துவ விசாரங்களைத் திணித்து, பார்வையாளர்களுக்குப் பாடமெடுக்கும் முதிர்ச்சியற்ற அணுகுமுறை இல்லை. ஒரே ஒரு காட்சியில், பள்ளியின் தரையைத் துடைத்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் தன் உணர்ச்சியற்ற குரலில், “The World is a Wasteland” எனப் போகிற போக்கில் சொல்கிறான். அப்புறம் காலங்களும் மனிதர்களும் மாறிக் கொண்டிருந்தாலும் சாமானியர்களின் அன்றாடங்களில் பெரிய மாறுதலில்லை என்கிறார்கள். அவ்வளவு தான். எனக்கு அப்போதே யாரோ என் நெஞ்சிலொரு பாறாங்கல்லை வைத்தாற் போல கனத்தது. ‘அத்தனையும் வீண் தானா? அத்தனையும் வீண் தானா? புதிதாக ஒன்றுமே இல்லையா?’ என நாள் முழுக்க அரற்றிக் கொண்டிருந்தேன்.

படத்தில் நடித்திருப்பவர்கள் எவரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. அந்த முகங்களை வேறு படங்களில் பார்த்து விட முடியுமா என்றும் தெரியவில்லை. அதனாலேயே அவற்றில் ஓர் அமரத்துவம் குடியேறி விடுகிறது. இடி விழுந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் அல்லாடுகிறார்கள். சூன்யம் மூண்டு சடவு முறிக்கிறது. துக்கம் தரித்திரமாக மாறும் விபரீதத்தை எவ்வளவு முயன்றும் தவிர்க்க முடிவதில்லை. தரித்திரம் பீடித்த பிறகு அதன் நோவிலிருந்து மீட்பே இல்லை, இல்லையா? இரக்கமற்ற உலகின் இயங்கு விதிகளைப் பூதாகரமாக்கிக் காட்ட, கதையின் பிரதான கதாபாத்திரங்களைத் தீவினை ஆற்றாத புனித ஆத்மாக்களாக இயக்குநர் கட்டமைக்கவில்லை. நல்ல மனங்களுக்கு நேர்கிற அவலங்களைப் பார்த்தீர்களா என்பது போன்ற பச்சாதாப மன்றாடல்கள் இல்லை. அதனால் வழமையான இருமை ஒப்புமைகளைத் தாண்டி மீறிச் செல்ல முடிந்திருக்கிறது. தம்மை தூய்மையில் நிறுத்தி உலகின் கொடூரங்கள் பற்றிப் புலம்பிச் சாடுகிறவர்களின் யோக்கியதை என்ன என்று காட்டி விடுகிறார். தங்களது இருண்மைகளைக் கண்டுணர்ந்து தெளிந்தவர்களாகவே இருப்பினும் சக மனிதர்கள் மீதான அவர்களது கரிசனம் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது என்பதைத் துணிச்சலுடன் முன்வைக்கிறார். அந்த எல்லை அவர்தம் நிழலுக்குட்பட்டது என்பதையும்.

அவர்களுக்குண்டான பலவீனங்களினால் சில சமயங்களில் கும்பலில் பொருந்திப் போகவும் செய்கிறார்கள். உதாரணமாக, துணைத் தலைமையாசிரியரை ஹுவாங் லிங் காதலிப்பதை அறிந்தவுடன் வெ புவிற்கு ஆத்திரம் பொங்குகிறது. தனது கையாலாகத்தனத்தைத் தன் ஆண்மைக்கு நேர்ந்த இழுக்காகப் புனைந்து கொள்கிறான். அவளை இரகசியமாகப் பின்தொடர்வதற்கோ அம்பலப்படுத்தி விடுவதாக மிரட்டுவதற்கோ அவன் தயங்குவதில்லை. அவர்கள் தங்களது குற்றங்களுக்கு பலியாடுகளைத் தேடுபவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றவர்கள் மீது பழிகள் சுமத்தி தமது பாரங்களை இறக்கி வைக்கப் பார்க்கிறார்கள். காலம் நிரப்பி வருகிற அற்ப மனிதர்களின் வரிசையில் முகங்களின் சாயல்கள் வேறானாலும் சரிவுகள் பொதுவானவை என்கிற புரிதலுடன் தலை குனிந்தவாறு கூட்டத்தில் இணைந்து கொள்கிறார்கள். கபடத்தனங்களில் இருந்து தப்பிக்க முயன்றவர்களையும் தலையில் தட்டி வைத்து சேர்த்துக் கொண்டதில் கூட்டம் கெக்கலிக்கிறது.

‘என்னைப் போல உதவாக்கரையாக ஆகி விடாதே’ என யு செங் புலம்புகிற போது, ‘நான் உருப்பட்டு விட்டால் மட்டும் இங்கே என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது?’ என்கிறான் வெ பு. வாழ்வைப் பற்றிய அடிப்படைப் புரிதலை அடைவதற்குள்ளாகவே இருபது முப்பது வருடங்கள் கடந்து விடுகின்றன. நான்கு சுவர்களுக்கு வெளியே ஒவ்வொருவரும் நீதிமான்கள். பண்பாட்டைக் காக்கப் புறப்பட்ட கனவான்கள். பல்வேறு வேடங்கள் பூண்டு நடிப்பதையே நிஜமென நம்பத் தொடங்கி விட்டவர்கள். அவர்களையும் இயக்குநர் விட்டு வைக்கவில்லை. வாய் கிழிய தத்துவச் சொற்பொழிவாற்றிய துணைத் தலைமையாசிரியரின் மைனர் பெண்ணுடனான காதல் பொதுவில் அறியப்பட்டதும் அவர் பதறிப் பம்முவதைப் படத்தில் பார்க்கலாம். தனது துணைக்கு நேர்ந்த களங்கத்தைச் சேர்ந்து சுமக்கவும் அவர் தயாராக இல்லை. எதிர்காலக் கணக்குகள் பாழானதே அவரது முதன்மைக் கவலையாக இருக்கிறது. ஓர் உறவின் மகிழ்ச்சிகரங்கள் சடுதியில் காணாமற் போகின்றன. ‘அடச்சீ’ எனக் கடுமையேறிய பின்பு மனிதர்களது ஆதாரக் குணங்கள் மீது அசூயை உண்டாகிறது. ‘நான் இப்படித் தான் இருந்தேன். நீயும் இப்படித் தான் இருப்பாய். வாழ்க்கை மேம்பட வாய்ப்பேயில்லை’ என்கிற அறுதியான முடிவை எட்டி விடுகிறார்கள்.

இந்தக் கதைக்கான உளச்சோர்வு மனநிலையைப் பார்வையாளரிடையே கச்சிதமாக சிருஷ்டிக்க அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட இடைவெளிகளை (Constrained Space) மனதிற் கொண்டு திட்டமிடப்பட்ட சட்டக உருவாக்கத்தினால் ஒருவிதமான க்ளாஸ்ட்ரோஃபோபிக் தன்மையை வெற்றிகரமாகத் தோற்றுவிக்க முடிந்திருக்கிறது. படம் தேர்ந்தெடுத்துக் கொண்ட வண்ணங்களிலோ வெளிப்புறக் காட்சிகளுக்கான பின்புலக் கட்டமைப்பிலோ ஜிகினா மேற்பூச்சுகள் ஏதுமில்லை. பெரும்பாலான சமயங்களில், மையக் கதாபாத்திரங்களைப் பின்தொடர்ந்திருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும் காமெரா கோணங்களில் அவர்களது ஆகிருதியே திரையில் பாதியை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஏராளமான அண்மைக் காட்சிகள், Medium Shot-கள். தேவைப்பட்டாலொழிய, சட்டகத்தின் தெளிக்குவி நடுவத்தில் ஏனைய கதாபாத்திரங்கள் காட்டப்படுவதில்லை. பிரதான கதை மாந்தர்களுடனான உரையாடலின் போது கூட துணைக் கதாபாத்திரங்கள் மங்கலான குவியத்திலேயே (Shallow Focus) விலக்கி வைக்கப்படுகிறார்கள். இசைவான தொலைவிலிருந்து கொண்டு இயங்குகிறார்கள். காமெரா நகர்வுகளில் மந்தமான செயலூக்கமின்மை நிறைந்திருந்தாலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கையில் அது முனைப்பு கொள்கிறது. அத்தகைய தருணங்களில் மட்டும் அவர்களது உருத்தோற்றங்கள் தெளிவு பெறுகின்றன.

நேர்க்கோடெனச் செல்லும் சம்பவங்களின் தொகுப்பில் செய்யக் கூடிய சாகசங்களை எல்லாம் உறுத்தலின்றி மேற்கொண்டு விடுகிறார்கள். எங்கும் எதிலும் நாம் முகஞ்சுளித்து மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டிய சமாச்சாரங்களைக் கொட்டி வைத்திருக்கிறார்கள். தொழிற்சாலைக் கழிவுகள் தெருக்களில் குவிக்கப்படுகின்றன. பள்ளிகள் மூடப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து கிடக்கிறது. வீட்டின் கழிப்பறை ஒழுகி நாறுகிறது. ஓய்வூதியப் பணம் இன்னமும் வந்து சேரவில்லை. நாய்கள் குதறிக் கொள்கின்றன. நாய்க்காக மனிதர்கள் அடித்துக் கொள்கிறார்கள். திருடுகிறார்கள். விலை போகிறார்கள். கேக்கைக் கூட இரசித்து உண்ணாமல் லபக் லபக்கென நளினமின்றி அவசர அவசரமாக விழுங்குகிறார்கள். பணமில்லை. ஒண்ட இடமில்லை. சிகரெட் இழுப்பில் இரத்தக் கறை.

அத்தனை கீழ்மைகளுக்கு நடுவிலும், வாழ்வை அஞ்சி வெறுத்து ஒதுக்கி கண்ணீருடன் விடைபெறாது, அவர்களை மீண்டும் வாழ்வினுள் அடைக்கலமடையச் செய்ததிலேயே இப்படத்தின் பெருவெற்றி அடங்கியிருக்கிறது. எது நிகழ்ந்தாலும் நமது நம்பிக்கையை முற்றிலுமாக இழக்க வேண்டியதில்லை எனச் சொல்கிறார்கள். கசப்புகள் இருந்தால் என்ன, ஏமாற்றங்கள் நெருக்கினால் என்ன, தோல்விகளிலிருந்து மீண்டெழ முடியாவிட்டால் தான் என்ன, நீ முதல் ஆள் அல்ல என்கிறார்கள். ஆம், அசைவற்றுக் கிடந்த யானை படத்தின் இறுதியில் பிளிறுகிறது. இன்னமும் இருள் நீங்கியிராத அந்தப் புலரியில் மீண்டும் பிளிறுகிறது. மீண்டும், மீண்டும்… அது எதிரொலித்த மலை முகடுகளில் ஒட்டுமொத்தக் காடே சிலிர்த்துக் கொண்டு திடுக்கிட்டிருக்கும். மன்சௌலிக்குப் போய்க் கொண்டிருந்த பேருந்திலிருந்து இறங்கி விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்பிளிறலைக் கேட்டு உறைந்து நின்று விடுகிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த என் மேனியெங்கும் மயிர்க்கால்கள் கூச்செறிந்தன. இதோ, இப்போது அக்காட்சியை நினைவில் மீட்டி இதை எழுதிக் கொண்டிருக்கையிலும் முதல் முறை ஏற்பட்ட அதே புல்லரிப்பு தன்னிச்சையாகப் பரவுகிறது. இது ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ படத்தில் தன் தந்தையின் கையை ஆதரவாகப் பற்றிக் கொள்ளும் சிறுவனை நினைத்துக் கொள்கையில் சிலிர்க்கும் உணர்வெழுச்சிக்கு நிகரானது தான். நாம் வாழ்வதற்கான காரணங்கள் இன்னமும் எஞ்சியிருக்கின்றன என்பதற்கான அத்தாட்சி. எதிர்காலத்தைப் பற்றின நன்னம்பிக்கை நினைவூட்டல்.

படம் முடிந்த போது ஹூ போ-வை ஒரு கணம் ஆதூரத்துடன் அணைத்துக் கொள்ள விரும்பினேன். தூக்கிட்டுக் கொள்ளும் முன் விடியலின் ஓங்காரத்தை அவர் எண்ணிப் பார்த்திருக்கக் கூடாதா என விசனப்படாமல் இருக்க முடியவில்லை. ஐயோ ஐயோவென நெஞ்சிலடித்துக் கொள்வதைத் தவிர இப்போது வேறென்ன செய்து விட முடியும்? ஏன் படத்தை நினையாமல் வாழ்வை முடித்துக் கொண்டார்? அது உண்மையில் நம்பிக்கை அறைகூவலே இல்லையா? அணைவதற்கு முன்பான பிரகாசமா? பிடி நழுவுகிற போது உரத்தெழும் உதவிக்கான இறுதி மன்றாடல் தானா? எனக்குத் திக்கென்று இருந்தது. யானையின் பிளிறலானது மீட்பை எதிர்நோக்கி வீணாகக் காத்திருப்பதன் பேரோலமாக உருமாறி ஒலித்தது.

படத்தை அவசியம் பாருங்கள் எனத் தனியாக வேண்டுகோள் விடுக்க வேண்டுமா என்ன? எனக்கு வாழ்க்கையிடம் வைக்கத் தான் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. ஒவ்வொரு விடியலும் மரணத்தின் கண்சிமிட்டல் என நினைக்கிறேன். சின்னஞ்சிறிய உயிர்களுக்காக நீட்டித்து வைக்கப்பட்டிருக்கும் அவகாசம். இறுதி மணியோசை ஒலிப்பதற்குள்ளாகவாவது இந்த நிலையழிவைச் சீராக்கிக் கொள்ள வேண்டும். திசையறியா காரிருளுள் ஒரு நட்சத்திர மினுக்கலுக்காக ஆயுள் முழுக்கக் காத்திருக்க விதிக்கப்பட்டதெல்லாம் போதும் பெருவாழ்வே. கருணைகூர்ந்து கண் கூசச் செய்யும் நூறாயிரம் வெளிச்சப் புள்ளிகளை இப்போதே காட்டித் தா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.