~~ பானுமதி.ந ~~

மௌனம்
எனக்கும் பிடித்தமானது தான்
யாரும் உடன் இருக்கையில்
அது பேசுகிறது தன் மொழியில்
யாருமற்ற போது அதன்
இரைச்சல் பேரலைகள் போல்
அதன் கூக்குரல் விழுங்கும்
உலகனைத்தையும்;பின்னரும்
பசிக்கும் அதற்கு. நீ வந்து
அருகில் அமர அது அடங்கிவிடும்.
பேசாமலே அதை நீ வெல்ல எங்கு கற்றாய்?
சொன்னால் நலமே தோழி! ஓ,மன்னித்துவிடு
அது சிதறும் எனப் பயப்படுகிறாய் போலும்
இதற்கு மட்டுமாவது பதில் சொல்லேன்?
தனிமையின் குரலை மௌனம் அடக்குமா?
~~~ அனுக்ரஹா.ச ~~
புயலைக் கடத்தல்

நெடுஞ்சாலைகளின்
முடியாத ஒரு கயிற்றிழையில்,
ஒரு நொடி தோன்றி மறையும்,
வண்டி சென்றுகொண்டிருக்கும் வேகம்.
நின்றுகொண்டே, மனது
காற்றைப் பிளந்துகொண்டு செல்லும்.
ஜன்னல் கண்ணாடியில் நீர்கோலங்கள்
விரிந்து மறைந்துகொண்டிருக்கும் நேரம்,
உள்ளே கனத்த நிசப்தம்.
ஒன்று ஒன்றாக,
சிறியதும் பெரியதுமாய்
துளிகள் அஸ்திரங்களாக
கிளைவிரித்துச் சூழ,
மாபெரும் மூடுதிரையை
விலக்கியவாறே நகர்கிறோம்.
மெதுவாக, நீல வானம் தெளியும்.
ஆறும் காயங்களைப் போல
சிவந்த தீற்றுகளுடன்.