கயாம்: இசையமைப்பாளர்களில் ஒரு கவிஞர்


இவ்வாரம், 19.8.2019 அன்று, பழுத்த 92 வயதில் கயாம் சாப் மறைந்த செய்தி வந்தது. அவரோடு ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அவர் காலத்து இசையமைப்பாளர்கள் யாரும் இப்போது இல்லை. அந்த அற்புதமான இசையமைப்பாளரை இந்த எளிய அஞ்சலியும் சேரட்டும்.

எழுபதுகளின் மத்தியில் ‘கபி கபி’ வந்தபோதுதான் நான் கயாம் பாடல் கேட்டேன். எழுபதுகளின் ஆரம்பத்தை ஒப்பிடும்போது ஹிந்தி சினிமாவில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. எழுபதுகளின் துவக்கம் ராஜேஷ் கன்னாவின் காலம், அவரது படங்கள் பெரும்பாலும் சிறிய அல்லது நடுத்தர முதலீட்டில் எடுக்கப்பட்ட காதல் கதைகள். அவரது படங்கள் வெற்றி பெற இசை  முக்கியமாக இருந்தது. அந்தப் பாடல்கள் இன்றும் எல்லா ஹிந்தி பண்பலை வானொலி நிலையங்களில் ஒலிக்கின்றன. ராஜேஷ் கன்னா காதல் நாயகன், தேசம் முழுவதும் அவரையும் அவர் படங்களின் இசையையும் நேசித்தது.

1973ஆம் ஆண்டு ‘ஜன்ஜீர்’ வந்தது. மெல்ல மெல்ல திரையுலகம் அதன் நாயகன் அமிதாப் பச்சன் பக்கம் சாய்ந்தது. அதற்கு முன்னும் அவர் சில படங்களில் நடித்திருந்தார், அவை பெரிய வெற்றி பெறவில்லை, அவரும் நாயக வேடத்துக்குத் தகுந்தவர் என்று பேர் எடுக்கவில்லை. அத்தனையும் ‘ஜன்ஜீர்’ வந்ததும் மாறிப் போனது. என்ன மாறியது என்று கேட்டால் திரைப்படங்களின் கதைக்களம்தான். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, காதல் யுகத்திலிருந்து ஆத்திர யுகத்துக்கு நாம் மாறியது போலிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் ஏமாற்றமும் விரக்தியும் இப்போது வேட்கைக்கும் ஆத்திரத்துக்கும் மெல்ல மெல்ல இடம் கொடுக்க ஆரம்பித்தது. சமூக விமரிசனப் படங்கள் இனி மென்மையான குரலில் பேசாது. புரட்சிக் குரல் ஒலிக்க ஆரம்பித்தது, அந்த சகாப்தத்தின் சங்கநாதம் அமிதாப்பின் ‘தீவார்’ என்று சொல்லலாம். சலீம் ஜாவேத் உருவாக்கிய கோபக்கார இளைஞன், சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டவன். தேசத்தின் காவல் துறைக்கோ நீதி அமைப்புக்கோ அஞ்சாமல் அதை அவன் நேருக்கு நேர் பழி தீர்த்துக் கொள்வான். ராஜேஷ் கன்னா படங்கள் சோபையிழந்தன, அமிதாப் சூப்பர் ஸ்டார் அவதாரம் எடுக்கத் துவங்கினார்.

இதன் தாக்கம் அக்கால திரைப்பாடல்களிலும் கணிசமான அளவில் இருந்தது. ராஜேஷ் கன்னாவின் பாடல்கள் காந்தர்வ கானம் என்று சொல்லத்தக்க மெலடீகள். அவை காதலர்கள் இதயங்களைத் துளைத்து தமக்கென நிரந்தர இடம் பிடித்துக் கொண்டன. அமிதாப்பின் படங்களில் இடத்துக்குத் தகுந்த பாடல்கள் இருந்தால் போதும். பெரிய மெலடீக்கு வேலையில்லை. ஆர்.டி. பர்மன் போன்ற இசையமைப்பாளர்களும்கூட கோபக்கார இளைஞனாக வேடம் தரித்த அமிதாப் படங்களில் பிரமாதமான பாடல்கள் கொடுக்கத் தடுமாறினர். மெல்ல மெல்ல இசை பின்னிலைக்குச் சென்றது. ஒரு படத்தை சூப்பர் ஹிட்டாக்க அமிதாப்பின் ஆகிருதியும் வன்முறை மிகுத்த கதைப்போக்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால் இசையின் தரம் குறையத் துவங்கியது. அறுபதுகளின் பிற்பகுதி முதல் எழுபதுகளின் துவக்க ஆண்டுகளில் இருந்த இசையோடு ஒப்பிடும் தகுதி எழுபதுகளின் பிற்கால ஹிந்தி திரைப்படங்களுக்கு கொஞ்சமும் கிடையாது. ரவீந்திர ஜெயின், சலீல் சௌதுரி, கயாம், ஜெயதேவ் போன்ற பிரபலமில்லாத இசையமைப்பாளர்களே மெலடியைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். ராஜ்ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த சிறு முதலீட்டுப் படங்கள், பாசு பட்டாச்சார்யா, ஹ்ரிஷ்கேஷ் முகர்ஜி போன்றவர்கள் இயக்கிய படங்களில் மெலடிக்கு இடமிருந்தது. ஆனால் பெருமுதலீட்டுப் படங்களின் இசைத் தரம் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்வதாயில்லை.

இந்தப் பின்னணியில்தான் ‘கபி கபி’ வருகிறது. ‘ஜன்ஜீர்’, ‘ஷோலே’, ‘தீவார்’, படங்களில் நடித்து அமிதாப் தன்னை ஒரு சாகச வீரனாக நிலை நிறுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றிருந்தார். அமிதாப்பின் இமேஜை வளர்த்தவர்களில் முக்கியமான ஒருவரான யாஷ் சோப்ரா, அவர்தான் ‘தீவார்’ படத்தை இயக்கியவர், இப்போது அமிதாப்பை வைத்து ஒரு காதல் கதை எடுத்தார். இசையமைப்பை கயாமிடம் ஒப்படைத்தார். துணிச்சலான முயற்சிதான். யாஷ் சோப்ராவுக்கு நல்ல இசை மற்றும் கவி ரசனை இருந்தது. கயாம் இசையமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது என்றாலும் யாஷ் சோப்ரா இயக்குனர் என்பதால் அதுவும் பொருத்தமாகவே அமைந்தது.

கயாம் பெயரை அமிதாப் படத்தில் பார்ப்பது ஏன் ஆச்சரியமாக இருந்தது என்று கேட்டால், அதற்கு முன் அவர் இசையமைத்திருந்த படங்களைப் பார்க்க வேண்டும். அவருக்கு சிறு முதலீட்டுப் படங்களின் இசையமைப்பாளர் என்ற பெயர்தான் இருந்தது. 1950ஆம் ஆண்டு இசையமைக்கத் துவங்கியது முதல் இருபத்து ஐந்து ஆண்டுகளில் அவர் இருபதுக்கும் குறைவான படங்களில்தான் வேலை செய்திருந்தார். அவற்றில் பல ஊர் பேர் தெரியாத சிறு முதலீட்டு படங்கள். இசை ரசிகனுக்கான கலைஞன் என்றுதான் அவரை நினைத்தார்கள், பொதுமக்கள் ரசிக்கக்கூடிய இசையமைப்பாளர் என்றல்ல. அந்த நாட்களில் பிரபலமாக இருந்த ஆர்.டி. பர்மன் அல்லது எஸ்.டி. பர்மன் அல்லது லக்ஷ்மிகாந்த் பியாரேலால் போல் அவர் புகழ் பெற்றவரல்ல. கயாமும் வந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டவரல்ல. 1967ஆம் ஆண்டுக்குப் பின் ஏழு ஆண்டுகள் அவர் இசையமைத்து ஒரு படம்கூட வெளிவரவில்லை. 1974ல்தான் மீண்டும் இசையமைக்கத் துவங்கியிருந்தார். எனவே யாஷ் சோப்ரா அவரைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமான விஷயம்தான், ஆனால் யாஷ் சோப்ராவின் நம்பிக்கை பொய்க்கவில்லை. யாஷ் சோப்ரா படங்கள் எல்லாமே இசைக்கு பேர் போனவை, ஆனால் அவற்றின் உச்சம் ‘கபி கபி’ தான்.
‘கபி கபி’க்குப்பின் கயாம் இசையமைத்த மற்றொரு பெருமுதலீட்டு படம் ‘த்ரிஷூல்’ . இதுவும் யாஷ் சோப்ரா படம்தான். அதற்குப்பின் கயாம் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டுப் படங்களில்தான் இசையமைத்து சாகர் சர்ஹாதி, முஜாஃபர் அலி போன்ற இணை சினிமா இயக்குனர்களின் ‘பஜார்’, ‘உம்ரோ ஜான்’ படங்கள் கவனம் பெற உதவினார். ராஜேஷ் கன்னா படங்களிலும் அவர் இசையமைத்தார். ஆனால் முன்னிருந்தது போலில்லாமல் ராஜேஷ் கன்னாவின் புகழ் மங்கியிருந்தது. அவர் மட்டுமல்ல, ஆர்.டி. பர்மன் புகழும்கூட குன்றத் துவங்கியிருந்தது. பப்பி லஹிரியின் டிஸ்கோ கூக்குரல் ஹிந்தி திரையிசையைக் கைப்பற்றத் துவங்கியது. ஆனால் கயாம் மெலடியைக் கைவிடவில்லை. 1980களின் ஹிந்தி திரை இசையின் மிகச் சொற்ப ஒளிர் புள்ளிகளில் அவர் ஒருவர்.

இனி கயாமின் பாடல்கள் சில.‘கபி கபி’ படம் வந்தபோதுதான் நான் முதன்முதலில் கயாம் என்ற பெயரைக் கேட்டேன். அப்போது நான் பள்ளி மாணவன். ஒவ்வொரு படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போதும் அதன் இசையமைப்பாளர் யார் என்று பார்க்கும் வழக்கம் எனக்கு அந்தக் காலத்திலேயே  இருந்தது. அவர்களும் போஸ்டரில் இசையமைப்பாளரின் பெயர் தனியாகத் தெரியும் வகையில் பெரிய எழுத்துகளில் அச்சிடுவார்கள். அந்த நாட்களின் பிரபல இசையமைப்பாளர்கள் ஆர்.டி. பர்மன், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, ஷங்கர் ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த் பியாரேலால். இப்போது என் கண்ணில் பட்ட பெயர் புதியதாக இருந்தது. கயாம்.
‘கபி கபி’ பாடல்கள் பெரிய வெற்றி பெற்றன. அதிலும் குறிப்பாக, தலைப்புப் பாடல். அதற்கு அடுத்தபடி, ‘main pal do pal ka shayar hoon’ என்ற பாடல். இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாரையும் கவர்ந்தன. ‘main pal do pal ka shayar hoon’ பாடலில் இசையும் பாடல் வரிகளும் எவ்வளவு அழகாக இழைந்து வருகின்றன, பாருங்கள். பாடலாசிரியர் sahir.

அப்போது அமிதாப் ஆத்திரக்கார இளைஞனாக உச்சத்தை நோக்கி வெகு வேகமாக உயர்ந்து கொண்டிருந்தார். இதற்கு முன் ‘Chupke Chupke’, ‘Mili’, போன்ற படங்கள் செய்திருந்தார். ஆனால் இப்போது அவரது அடிதடி சாகச நாயகன் இமேஜ் மக்களின் கற்பனையை வசியப்படுத்தியிருந்தது. வழக்கமான பழிவாங்கும் கதையைக் கொடுக்காமல் கனிந்த சமூக நாடகம் ஒன்றில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்து யாஷ் சோப்ரா ஒரு பெரிய ரிஸ்க் எடுத்தார். அந்த சோதனை முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார். யாஷ் சோப்ராவின் இயக்கம், திரைப்படம் படமாக்கப்பட்ட இடங்கள், இவற்றோடு கயாமின் இசையும் சேர்ந்து, படம் பார்த்தவர்கள் இதயத்தைக் கவர்ந்தது. ‘கபி கபி’ பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டானது.

அடுத்து நான் கயாமின் பெயரை போஸ்டரில் பார்த்தது, ‘த்ரிஷூல்’ வெளிவந்தபோது. அமிதாப் படங்களில் கயாம் இசையமைப்பதே அப்போது ஒரு ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாக லக்ஷ்மிகாந்த் பியாரேலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, ஆர்.டி. பர்மன் என்று மிகப் பெரிய கலைஞர்கள்தான் அமிதாப் படங்களுக்கு இசையமைப்பது வழக்கம். கயாம் அமிதாப் படங்களின் இசைப் பாணிக்கு மாறுபட்டு இசையமைத்தார்- அவ்வளவு அருமையான மெலடி பாடல்கள் கிடைக்க காரணமாக இருந்த யாஷ் சோப்ராவை  மறந்தால் நாம் நன்றி கொன்றவர்களாவோம். ஆனால் என்னைக் கேட்டால், ‘த்ரிஷூல்’ பாடல்களில்கூட கயாம் தன்னை முழுமையாய் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்வேன். பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகின, ஆனால் வலுவான கயாம் முத்திரை மற்ற பாடல்களில் இருந்த அளவு இந்தப் படத்தில் இல்லை.

அடுத்து வந்தது ‘நூரி’. அதன் தலைப்புப் பாட்டே என்னவொரு ஹிட்! இதில் கயாம் சாப்பின் முத்திரை கண்ணுக்கு மெய்யென தெரிந்தது. பூனம் தில்லானின் முதல் படம் இது என்று நினைக்கிறேன். பாட்டும் படமும் பெரிய வெற்றி பெற்றன. பாடலாசிரியர் ஜான் நிஸ்ஸார் அக்தர்.

புதிய முகங்கள் கொண்ட கள்ளம் கபடமற்ற இளம் பிராயத்து காதல் கதைகள் அவற்றுக்குரிய பருவத்தில் வந்து மாபெரும் வெற்றி பெற்று திரைப்பட ரசிகர்களைப் பைத்தியமாக்குவதை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். அவற்றின் பொதுத்தன்மைகள் சில: நாயக நாயகியர் புதுமுகங்கள், வலுவான திரைக்கதை, இனிய இசை. இந்த பார்முலா இன்றும்கூட வெற்றி பெறுகிறது. இதில்  பூனம் தில்லானும் பரூக் ஷேய்க்கும் புதுமுகங்கள். துயர முடிவுக்கு வரும் காதல் கதை. யாஷ் சோப்ரா இயக்கம், கயாம் இசை. திரைப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அந்த நாட்களில் ‘நூரி’ படம் அதிகம் பேசப்பட்டது, அப்போது அதன் இசையை யாரும் பேசாமலிருக்க மாட்டார்கள். 

ஹாஸ்டலில் தங்கி பட்டக்கல்வி படித்த காலத்தில் கயாம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தக் காலத்தில்தான் நான் கயாமின் திகைக்க வைக்கும் பாடல்கள் சிலவற்றைக் கேட்டேன், அவற்றின் ஒலிநாடாக்கள் சேகரிக்க தேடி அலைந்தேன். அப்படிப்பட்ட பாடல்களில் என் மீது மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய பாடல், ‘ஃபுட்பாத்’ படத்தில் வரும், ‘sham-e-gham-ki-kasam’, என்ற பாடல். மஜ்ரூஹ், சர்தார் ஜஃப்ரி இருவரையும் பாடலாசிரியர்கள் என்று குறிப்பிடுகிறது விக்கி. 

முதலில் இந்தப் பாடலை ‘பெஸ்ட் ஆஃப் தாலத் மெஹ்மூத்’ என்ற ஒலிநாடாவில் கேட்டேன். பாடல் வரிகள், ட்யூன், இரண்டுமே என்னை உடனே வசீகரித்துக் கொண்டன. கயாமின் இசைக்கு புகழ் சேர்த்த ஆரம்ப கால திரைப்படங்களில் இது ஒன்று. இதற்குப் பின், திரைவானின் உதிக்கும் புதிய மெலடி நட்சத்திரம் என்று அவர் கவனிக்கப்பட்டார். அருமையான பாடல் வரிகள், தாலத் மெஹ்முத்தின் மென்மையான குரல், கவிதைக்கு சுதி சேர்க்கும் கயாமின் முத்திரைப் பாணி, எல்லாம் சேர்ந்து நமக்கு என்றும் இறவாத மெலடி பாடல் ஒன்றைத் தந்திருக்கிறது.

இதே காலகட்டத்தில் வந்த மற்றொரு மெலடி பாடலில் வேதனை வெளிப்படுகிறது – ‘Phir Subah Hogi’ படத்தில் வரும் ‘chino-arab-hamara’. பாடலாசிரியர் சாஹிர்.  

சாஹிருக்கே உரிய வரிகள். உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படும்  ஃப்யோடோர் தாஸ்தாவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் திரையாக்கம் இது. சாஹிரால் மட்டுமே வார்த்தைகளில் வடிக்கப்படக்கூடிய சீற்றத்தை இந்தப் பாடலில் கேட்கலாம். சீற்றத்துடன் கூடி ஒலிக்கும் எள்ளல் தொனி தெளிவாக வெளிப்படும் வகையில் கயாம் இந்தப் பாடலுக்கு ட்யூன் போட்டிருக்கிறார். ராஜ் கபூரும் கயாமும் சேர்ந்து வேலை செய்த படங்கள் அதிகம் இல்லை. இந்தப் படத்தில் அது நேர்ந்தது.
எனக்கு கிடைத்த மற்றொரு இரத்தினம் ‘ஷங்கர் ஹுசேன்’ படத்தில் வரும் முஹமது ரஃபி பாடல், , ‘kahin ek maasom nazuk si ladki’. பாடல் வரிகள் கமல் அம்ரோஹி.

மெலடி பாடல்களுக்கு கயாம் என்று பெயர் வாங்கித் தந்த இன்னொரு ரஃபி பியூட்டி  ‘Shola Aur Shabnam’ படத்தில் வரும் ‘Shola Aur Shabnam’ என்ற பாடல். எழுதியவர், கைஃபி ஆஜ்மி.

‘ஷகுன்’ படத்தில் வரும் ‘tum apna gham apni pareshani mujhe de do’ பாடலைப் பாடிய ஜக்ஜித் கௌர். சாஹிர் எழுதிய பாடல்.

1954ஆம் ஆண்டு கயாமும் ஜக்ஜித் கௌரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அவர் பஞ்சாபி சீக்கியர், கயாம் ஒரு முஸ்லிம். இந்திய திரையுலகின் முதல் சமய கலப்பு திருமணங்களில் ஒன்று இது என்று கூறப்படுகிறது. மிகவும் மகிழ்ச்சியான, நிறைவான தாம்பத்திய வாழ்வு இவர்களுக்கு அமைந்தது. கயாமின் 90ஆவது வயதில் அவர் அளித்த ஒரு நேர்முகம் பார்க்க வேண்டியது. இந்தத் தம்பதியர் இணக்கமாக நடந்து கொள்ளும் விதம், பரஸ்பரம் மரியாதை காட்டிக் கொள்வது, இருவருக்குமிடையே இருந்த ஆழமான புரிதல், இந்த நேர்முகத்தில் அழகாக வெளிப்படுகின்றன. நீண்ட நேர்முகம்தான், ஆனால் அற்புத தம்பதியர் இவர்களைக் காணச் செலவழிக்கும் நேரம் வீணல்ல.

‘நூரி’ படத்துக்குப்பின் அத்தனை பாடல்களும் பேசப்பட்ட படம், ‘பஜார்’. இந்தப் படமும் திரையுலகில் அலைகளை உருவாக்கியது.  ‘phir chidi raat baat phoolon ki’ பாடல் இந்தப் படத்தில் வருவதுதான். லதாவும் தாலத் அஜீஸும் பாடியது. மக்தூம் மொஹியுத்தின் வரிகள்.

‘பஜார்’ படத்தை இயக்கியவர் சாஹர் சர்ஹாதி. இணை சினிமா இயக்கத்தின் முக்கிய கலைஞர்கள் பலர் இதில் நடித்திருந்தார்கள்- நசீருத்தின் ஷா, ஸ்மிதா பாட்டில், ஃபரூக் ஷேக், சுப்ரியா பதக். ஹைதராபாத்தில் நடக்கும் இந்தக் கதை, வளைகுடாவில் வாழும் இந்தியர்களுக்கு தங்கள் விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைக்கப்படும் பெண்கள் நிலையைச் சித்தரிக்கும் சோகக்கதை. அமோகமான விமரிசன ஆதரவு பெற்ற படம், இதன் இசையும் வெற்றி பெற்றது. than ‘phir chidi raat’ மட்டுமல்ல, லதாவின் ‘dikayi diye to bekhud kiya’ மற்றும் பூபிந்தரின் ‘karoge yaad to har ik baat yaad ayegi’ அந்நாளில் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தன.
கயாம் பாடல்களில் உள்ள மென்தொடுகை ஒரு ரஃபி அல்லது தலத் மஹ்மூதுக்குப் பொருந்தும், ஆனால் அவருடன் கிஷோரை இணைத்துப் பார்க்க யாரால் முடியும்? ஆனால் கயாமுடன் சேர்ந்து கிஷோரும் சில இனிய பாடல்கள் தந்திருக்கிறார். ‘Dil-e-Nadan’ படத்தில் இந்தப் பாடல் வருகிறது- ‘chandni raat mein ik bar tujhe dekha hai’

தமிழில் வந்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தைதான் இந்தியில் ‘Dil-E-Nadan’ என்று எடுத்தார்கள். தமிழ்ப்படத்தை இயக்கிய ஸ்ரீதரே இந்தியிலும் இயக்கினார். ராஜேஷ் கன்னாவும் சத்ருகன் சின்ஹாவும் கமல், ரஜினி ஏற்ற வேடங்களில் நடித்திருந்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தி ஏமாற்றி விட்டது. தமிழிலும் தெலுங்கிலும் மகத்தான வெற்றி பெற்ற கதை, இந்தியில் சோபிக்கவில்லை.
கயாம் இசையமைத்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தை கடைசியில் சொல்லலாம் என்று வைத்திருந்தேன். கயாம் பெயர் சொல்லும் சிறந்த படங்கள் பல, மெலடி பாடல்கள் அதைவிட அதிகம். ஆனால் கயாம் ஸாப் பெயர் சொன்னதும் நினைவுக்கு வரும் படம், ‘is Umrao Jaan’. அது இந்தி திரையுலகில் ஒரு திருப்புமுனை படம், அதில் பங்களிப்பு செய்திருந்த அத்தனை பேருக்கும் அது புகழ் ஈட்டித் தந்தது. முஜாஃபர் அலி, ரேகா, ஆஷா, கயாம், இந்த நால்வரும் தேசீய விருது பெற்றனர். அசாத்திய இசைக்காக இந்தப் படத்தை கயாம் பெயர் சொல்லி என்றென்றும் இருக்கும். ஒவ்வொரு பாடலும் விலைமதிப்பில்லாத வைரமணி. ஒன்றல்ல, இரண்டு பாடல்கள் தருகிறேன், பாருங்கள். திரைப்பாடல்கள் எழுதுவதில் விருப்பமில்லாமல் இருந்த ஷார்யார் இவற்றின் பாடலாசிரியர். அவரும் முஜாஃபர் அலியும் பள்ளிப் பருவம் முதல் நண்பர்கள். எனவே இந்தப் படத்துக்கு அவர் அபாரமான கவிதைகள் அளித்தார்.

‘yeh kya jagah hai doston’ by Asha Bhosle.

ஆஷா போஸ்லேயின் ‘yeh kya jagah hai doston’

‘zindagi jab bhi tere’ by Talat Aziz

தலாத் அஜீஸின் ‘zindagi jab bhi tere’

இந்தப் பாடல்களை கவனமாக கேட்டால் நீங்கள் ஒரு விஷயத்தை கவனிப்பீர்கள், என்ன ஒரு கவித்துவம்! கயாம் பல கவிஞர்களுடன் வேலை செய்திருக்கிறார், அவர்களுடைய கவிதைகளுக்கு கச்சிதமான மெட்டு போட்டிருக்கிறார். அந்த காலத்தில் இருந்த இசையமைப்பாளர்கள் பலர் முதலில் பாடல் வரிகளை எழுதி வாங்கிக் கொள்வார்கள், அப்புறம்தான் அதற்கு மெட்டு போடுவார்கள். மெட்டுக்கு பாட்டு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். கே.வி. மகாதேவன் அந்த வகையில் பேர் போனவர். ஒரு பாட்டு அவர் மெட்டு போட்டு எழுதி வாங்கியதில்லை என்று சொல்வார்கள். கண்ணதாசன் பாடல்கள் பலவற்றுக்கு எம்எஸ்வி மெட்டு போட்டிருக்கிறார். அனில் பிஸ்வாஸ்கூட முதலில் பாடல் வரிகளை எழுதி வாங்கிக் கொள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர்களுக்கும் கயாமுக்கும் ஒரு விஷயத்தில் வேறுபாடு உண்டு. பெரும்பாலான இசையமைப்பாளர்கள் நல்ல மெட்டு போட விரும்பினார்கள். நல்ல பாடல் எழுதி வாங்கி ட்யூன் போட வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம். இங்கு ‘ட்யூன்’ என்ற சொல்லை கவனிக்க வேண்டும். அவர்கள் கவிதையைக்கூட பாடலாய் தந்தார்கள். ஆனால் கயாம் நமக்கு கவிதையை அப்படியே கொடுத்தார், மெலடி எனும் நயமிகு கவிதை. கவிதைக்கு அவரது மெட்டுக்கள் ஆழம் சேர்த்தன, ஆனால் அப்போதும் நமக்கு கிடைத்தவை பாடல்கள் என்று சொல்வதைவிட கவிதைகள் என்று சொல்லலாம். இசைக் கவிதை, ஆம், ஆனால் அப்போதும் கவிதைதான். அவர் இசையமைத்த பாடல்களிலிருந்து இசையை நீக்கினால் கவிதையின் தாக்கம் குறையும், ஆனால் ஒரு போதும் இசையுடன் கேட்கும்போது இசைத்தன்மை கவியுணர்வை மீறி ஒலிக்காது. இசையமைப்பாளரின் மொழி மற்றும் கவிச்செவி திறந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். கயாம் ஸாப் இரண்டும் அமையப்பெற்றிருந்தார் என்பதை அவரது பாடல்கள் பலவற்றில் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். அவர் மொழியை ரசித்த காரணத்ததால் அவர் பாடல்களில் அற்புதமான வரிகள் அமைந்தன, அவரது கவியுணர்வால் இசை கவித்துவத்துக்கு உட்பட்டு பாடல்கள் அபாரமான கவிதைகளாய் ஒலித்தன. அதனால்தான் நான் இசையமைப்பாளர்களில் கயாம் ஒரு கவிஞன் என்று சொல்கிறேன். அவர் நமக்கு மெட்டுக்கள் தரவில்லை, கவிதைகளை மேம்படுத்தித் தந்தார். பிற இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றில் அப்படிப்பட்ட கூருணர்வை நாம் பார்க்க முடிகிறது, ஆனால் மிக அபூர்வமாக- கே.வி. மகாதேவனின், ‘மலர்கள் நனைந்தன பனியாலே’, சாஜத் ஹுசேனின், ‘yeh kaisi ajab daastan’, என்று.

கடைசியில் இதையும் பார்த்து விடுங்கள்- இங்கு ராஜ்குமார் அனில் பிஸ்வாசை கேலி செய்கிறார், நௌஷத் இன்றைய இசை குறித்து தன் கருத்துகளைச் சொல்கிறார். அதன்பின் கயாம் மைக்கை வாங்கி தனக்கு முன் வந்தவர்களுக்கு நன்றி கூறுகிறார். யார் யார் எந்த பாடல்கள் எழுதினார்கள் என்று சொல்லி, “இவர்கள் பெயர்களைச் சொல்லாமல் இருப்பது அநீதி இழைப்பதாக இருக்கும்,” என்று முடிக்கிறார். எப்படிப்பட்ட மனிதர்! இன்றும்கூட இணையதளங்களில் பாடலாசிரியர் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. உடலில்லாமல் இசையும் குரலும் பேய் போல் வந்தது போலிருக்கிறது. கயாம் ஸாப் நிச்சயம் இந்த நிலையை ரசிக்க மாட்டார்.

ஒரு மாபெரும் இசையமைப்பாளரை, கனவானை, அழகுணர்வு கொண்ட மனிதரை இழந்து விட்டோம். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.