ஆட்டத்தின் ஐந்து விதிகள் – நான்காம் விதி

உங்களுக்கு இப்போது எப்படி இருக்கும் ? 

அன்று முழுவதும் தேநீர் சந்திப்புகளில் அவரைப் பற்றி பொருமித் தள்ளிவிட மாட்டீர்களா ? ஆனால் ஒரு மேலாளர் வேறெப்படி செயல்பட முடியும் என எண்ணுகிறீர்கள் ? வேண்டுமானால் பாராட்டை இன்னும் அழுத்தமாக அனைவருக்கும் நடுவே செய்யலாம். உங்களைக் காட்டி பிறரை மேலும் ஊக்கம் கொள்ள வைக்கலாம். ஆனால் முடிக்கும்போது உங்கள் அடுத்த இலக்கை நோக்கி உங்களைத் திருப்பாமல் அவரால் முடிக்க முடியாது. ஏனெனில் அதுவே மேலாளரின் பணி.

இன்றைய ஒரு நாளின் சாதனைக்காக நம்மை அடுத்த மூன்று மாதங்களும் தினந்தோறும் பாராட்டுவதா மேலாளரின் பணி ? அப்படி செய்தால் அந்த மூன்று மாதங்களில் நாம் ஒரு அடி கூட முன்னேறியிருக்க மாட்டோம். செய்த பணிக்கான பாராட்டைத் தரும் அதே நேரம் செய்யவிருக்கும் பணிக்கான உந்துததலையும் ஒருசேர வழங்குவதே மேலாண்மையின் அடிப்படைப் பாடம். ஆகவே மேலாளரின் பாராட்டு என்பது ஒரு செல்ல தட்டு தோளில். அடுத்த நொடி அதுவே அடுத்த இலக்கை நோக்கி நம்மைத் திருப்பி விடும் ஒரு அழுத்தமும் கூட.

ஆக இந்த பெயரளவு பாராட்டுகளை வாடிக்கையாளரிடம் செய்ய வேண்டாம். ஏனெனில் நம் முன் அமர்ந்திருக்கும் அவருக்கு நீங்கள் சம்பிரதாயமாக பாராட்டுவதாகத் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. இவ்வகைப் பாராட்டு சொல்லப்படுகையில் விற்பனையாளர் தரப்பில் நிகழ்வது என்ன? வாடிக்கையாளரின் முடிவினை, அல்லது அவர் சொன்ன தகவலை மறுத்துச் சொல்ல நம்மிடம் விஷயங்கள் இருக்கின்றன. அவை வாடிக்கையாளர் சொன்ன நொடிக்குள் நம் நாவிற்கு வந்து விடும்.  ஆனால் பாராட்டி ஆக வேண்டும் என்ற நினைவூட்டலும் கூடவே வரும்போது மறுப்பிற்கான வேகம் தரும் அழுத்தத்தில் பாராட்டைக் குறைத்துக் கொள்கிறோம் அல்லது வேகமாக சொல்லித் தாண்ட முயற்சிக்கிறோம். அதுவே இவ்வகைப் பாராட்டுகளில் ஒரு அவசரத் தொனியை ஏற்படுத்தி விடுகிறது.மீண்டும் ஒருமுறை நான்காவது விதியின் துணைவிதிகளில் முதலாவதை நினைவுபடுத்திக் கொள்வோம். –“செல்லத்தட்டு பாராட்டுகளை தவிர்க்கவும்

இங்கிருந்து நான்காவது விதியின் இரண்டாம் துணைவிதிக்குப் போகலாம். முதல் துணைவிதியைப் படித்துவிட்டு “குறைவாகப் பாராட்டக் கூடாது என்கிறீர்கள், சரிதான், மிச்சம் வைக்காமல் பாராட்டில் மூழ்கடித்து விடுவோம் வாடிக்கையாளரை. காசா , பணமா?” என்று யோசிப்பவர்க்கே இரண்டாம் துணைவிதி முக்கியமாகிறது.

இரண்டாம் துணைவிதி–“மிதமிஞ்சிய பாராட்டுப் பேச்சைத் தவிர்க்கவும்”.  ஆங்கிலத்தில் சற்று நேரடியாக , எந்தப் பூச்சுகளும் இன்றி இத்துணை விதி இவ்வாறு சொல்லப்படுகிறது-  Do not blow beggar’s trumpet “ . சற்று நயம் குறைவாகத் தோன்றினாலும் செயல்பாட்டில் நிகழும் நயக்குறைவை விட அதன் முன்னெச்சரிக்கைக் குரலில் இருக்கும் நயக்குறைவை பொறுத்துக்கொள்ளலாம். இந்தத் துணைவிதியை சேர்க்கக் காரணமான நிகழ்வுகளை இங்கு சொன்னால் புரிந்து கொள்ள பொருத்தமாக இருக்கும்.

பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் சாட்சி நானே. ஒரு விற்பனையாளர் வாடிக்கையாளர் சந்திப்புக்கு தொலைபேசியில் நேரம் கேட்டார். உரையாடலில் வாடிக்கையாளர் அதிக ஐயங்களைக் கேட்டதால் என்னையும் உடன்வந்து உதவும்படி கேட்டுக்கொண்டார். வாடிக்கையாளர் தனது இல்லத்திற்கே வருமாறு சொல்லியிருந்தார். பயிற்சி வகுப்புகள் எதுவும் இல்லாத நாள் என்பதால் நானும் அனுபவத்திற்காக அவருடன் சென்றேன். வாடிக்கையாளர் முப்பதைத் தொட்ட வயதில் நீண்ட கால முதலீடுகள் குறித்த நியாயமான ஐயங்களைக் கொண்டிருந்தார். நட்பார்ந்த முறையில் அவருடன் உரையாட இயன்றது. விற்பனையாளர் வரவேற்பறையை பார்த்துக் கொண்டிருந்தார். வாடிக்கையாளரும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் இருந்தது. வீட்டின் உள்ளறையில் அவரது மனைவி ஒரு குழந்தையுடன் விளையாடும் குரல் கேட்டுக்கொண்டிருந்தது.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் வீட்டின் உள்ளறையிலிருந்து அக்குழந்தை வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு வாசலை நோக்கி பாய்ந்தோடி வந்தது. பின்னாலேயே வாடிக்கையாளரின் மனைவியும் “ஏய், ஓடாத கண்ணா, நில்லு “ என்றவாறே விரைந்து வந்து எங்களைக் கண்டதும் சற்று நிதானித்தார். விற்பனையாளர் பயிற்சியில் என் நான்காவது விதியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர். பாய்ந்து சென்று அக்குழந்தையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிக்கொண்டார். அதே வேகத்தில் வாடிக்கையாளரிடம் திரும்பி “ சார், உங்க பையன் செம சுட்டி சார். என்ன வேகம். புலிப்பாய்ச்சலா பாயறானே “ என்று பாராட்ட ஆரம்பித்தார். இருமல் மருந்தின் கடைசி மிடறு தொண்டையில் இறங்கும்போது ஏற்படும் பாவனையில் வாடிக்கையாளர் மனைவியின் முகம் மாறியது. ஆனால் அடுத்த நொடியில் சிரிப்பு பூத்த கண்களுடன் உள்ளே திரும்பிக் கொண்டார்.

நம் விற்பனையாளரோ பாராட்டின் உச்ச ஸ்தாயிக்கு போய் விட்டார் –“ சார், கண்ணும், மூக்கும் அப்படியே உங்க ஜாடை சார் “. வாடிக்கையாளர் என்ன உணர்வு என்றே புரிந்து கொள்ள முடியாத முகபாவனையில் இருந்தார். இவ்வளவும் ஐந்து நொடிகளில் நடந்து விட்டன. நான் எதுவோ சரியில்லை என உணர்ந்து விற்பனையாளரை அருகே அழைத்தேன். அவரோ இன்னும் ஆர்வமாகி அடுத்து பேசத் தொடங்குவதைக் கண்ட வாடிக்கையாளர் வேகமாக “ அது எதிர் பிளாட்ல இருக்கற குழந்தை. இங்க வந்து விளையாடிட்டு இருக்கும்  “ என்றார் பரிதாபமாக. வேட்டை விளக்கு கண்களில் பட்ட மானைப் போல இரு நொடிகள் உறைந்து நின்றார் நம் விற்பனையாளர். மெல்ல குழந்தையை தன்மீதே வழுக்கி இறக்கினார். நான் “மன்னிக்கவும். அவர் உங்கள் குழந்தை என நினைத்து விட்டார். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் “ என்று மெல்ல சொன்னேன். வாடிக்கையாளரும் ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொள்ள மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து பேசத்தொடங்கினோம்.  

இதில் சுவாரசியமான கட்டம் எதுவெனில் வாடிக்கையாளர் இல்லத்திலிருந்து விடை பெற்று வெளியே வந்து படிகளில் இறங்கினோம். வாடிக்கையாளர் தலை மறைந்ததும் விற்பனையாளர் என் கைகளைப் பிடித்துக் கொண்டார் – “ சார், யாரிடமும் சொல்லி விடாதீர்கள். சம்பவம் நமக்குள் மட்டும் இருக்க வேண்டும்” என்றார். நான் சொன்னேன் –“  நிச்சயம் உங்கள் பெயரை யாரிடமும் சொல்ல மாட்டேன். ஆனால் சம்பவம் எனக்கு பயிற்சி வகுப்பிற்கு பயனுள்ளது என்பதால் அதை மட்டும் சொல்வேன்”. இன்று நல்ல நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த நண்பரை சந்திக்கும்போதெல்லாம் இதைச் சொல்லி சிரித்துக்கொள்வோம். அவரும் பங்கேற்று இருந்த பயிற்சிகளில் இதை சொல்லியிருக்கிறேன். சரியான விதத்தில் பாடமாக எடுத்துக்கொண்டு தாண்டி விட்டார் விற்பனையாள நண்பர். கூடவே, எனக்கும் ஒரு துணைவிதியைத் தந்திருக்கிறார்.

இரண்டாம் துணைவிதி சொல்வது என்ன? அதீதப் புகழ்ச்சி வேண்டாம் என்பதே. ஏனெனில் நம்முன் வந்து ஐந்து நிமிடங்களுக்கு முன் அமர்ந்த ஒருவர் நம் செயல்கள் ஒவ்வொன்றையும் நீளமாகப் புகழ்ந்து கொண்டிருந்தால் நமக்கு முதலில் தோன்றும் எண்ணம் எது? இவர் நம்பத்தகுந்தவரா எனும் ஐயம்தானே. கூடவே இவர் நம்மிடம் எதையோ எதிர்பார்க்கிறார் எனும் தேவையற்ற எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்திவிடும் இல்லையா ? வாடிக்கையாளர் இப்படி யோசிப்பது ஒரு பரிமாணம்.

இன்னுமொரு பரிமாணம், அதீத பணிவு காட்டல். இது பெரும்பாலும் உடல்மொழியால் தெரிவிக்கப்படுவது. ஒரு நிறுவனத்தின் உயரதிகாரியை சந்திக்க மேலாளருடன் சென்றிருக்கிறேன். அவர் இலக்கியம் வாசிப்பவர் என்பதால் சட்டென என்னுடன் நெருக்கமாகி விட்டார். என்னுடன் வந்த விற்பனையாளருடன் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார். விற்பனையாளரின் பேச்சுக்கான முன்னெடுப்புகளை கவனமாகத் தவிர்த்தார். எங்கே குழப்பம் என எனக்குப் புரியவில்லை. விற்பனையாளர் ஒரு கைப்பேசி அழைப்புக்காக அறைக்கு வெளியே சென்ற 5 நிமிடங்களில் வாடிக்கையாளர் சிக்கலை நேரடியாகச் சொல்லிவிட்டார். விற்பனையாளர் அறைக்கு உள்ளே வந்து அறிமுகம் செய்து கொள்ளும்போது தனது முகவரி அட்டையை வாடிக்கையாளரிடம் கொடுத்ததே அவருக்கு விலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. சிக்கல் அட்டையில் அல்ல. நம் ஆள் கொடுத்த விதம்.

எப்படி இருக்கும் தெரியுமா அது? வரிசை மாறாமல் சொல்கிறேன். கற்பனையில் காணுங்கள் – நொடிக்கு பத்தில் ஒரு பங்கு வேகத்தில் இருக்கையிலிருந்து எழுதல் (நம்ம எனர்ஜி லெவலைக் காட்டும் சார் !) , பர்ஸை எடுத்து, தேடி பணத்தாட்களுக்கு மத்தியிலிருந்து ஒரு அட்டையை இரு விரல்களின் நுனியால் பற்றித் தூக்குதல் (அப்பத்தான் நம்ம விசிட்டிங் கார்டு எவ்ளோ வொர்த்துனு கஸ்டமருக்கு புரியும் சார்) , ஒரு அடி பின்னால் நகர்ந்து விலுக்கென முன்னால் வளைந்து ஏழாம் எண் போல உடலை ஆக்கி உள்ளங்கைகள் இணைத்து நீட்டப்பட்ட கைகளின் நுனியில் அட்டையை வைத்து, அதை  இரு கட்டைவிரலால் மட்டும் பற்றி வளைந்த உடலிலிருந்து தலையை மட்டும் நீட்டி உயர்த்தி அவரிடம் அளிப்பது ( அப்பத்தான் நாம  பணிவான ஆள், அவரை மதிக்கிறோம்னு அவருக்குத் தெரியும் சார்) . – “ஏன் இவ்வளவு நாடகத்தனமாக நடந்து கொள்கிறார் ? உங்கள் பயிற்சியின் விளைவா என்ன ? “ சிரித்துக் கொண்டே சாட்டையை எனக்கும் வீசினார் வாடிக்கையாளர்.

இயல்பில் நாம் இப்படித்தான் அதீதப் பணிவாய் நடந்து கொள்வோமா? இவ்வாறுதான் நம் நண்பர்கள், சுற்றத்தாரைப் புகழ்வோமா ? நமக்கே அந்நியமாகத் தோன்றும் ஒரு செயலை நாம் வாடிக்கையாளரிடம் செய்யக்கூடாது என்பதே இத் துணை விதியின் அடிப்படை. ஒருவருக்குக் கொடுத்து நாம் பெற வேண்டும் எனும் வணிகத்தின் அடிப்படை விதியிலிருந்து மாறுபட்டதே பிச்சை அளிப்பது. ஒருவரிடம் உதவி பெற வேண்டி பதிலுக்கு கொடுப்பதற்கு ஏதுமில்லாத பிச்சைக்காரர் தன்னால்  முடிந்தது என்பதற்காக அந்த ஒருவருக்கு புகழ்மொழிகளையும், பயின்று வந்த பணிவையும் கொடுக்கிறார். “வள்ளலே, தர்மபிரபுவே, அரசரே, ..” என்றெல்லாம் நீளும் இம்மொழிகள் உண்மை அல்ல என நமக்கும் தெரியும், இதைக் கேட்டு தன் சொத்தை தனக்கு எழுதிவைத்து விடுவார் எனும் எதிர்பார்ப்பும் கேட்பவருக்குக் கிடையாது. இது ஒரு பேசப்படா ஒப்பந்தம். கேட்காதவருக்கு நாம் கொடுக்கப்போவதில்லை. அளவு தாண்டிக் கொடுத்தால் அதை பிச்சை உதவி கேட்டவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. உங்களுக்கு சந்தேகம் எனில் உங்களிடம் பிச்சை உதவி கேட்டவரிடம் உங்கள் கழுத்து தங்கச் செயினைக் கழட்டிக் கொடுக்க முயன்று பாருங்கள். வாங்குகிறார்களா எனப் பார்க்கலாம்.

இவ்வளவு கடுமையாக இவ்விதியைச் சொல்வதற்குக் காரணம் என்னவெனில் இப்படிப் பேசுவோர், போலிப் பணிவு காட்டுவோர் மீது வாடிக்கையாளர் துளியும் மதிப்பு கொள்வதில்லை என்பதோடு அவர்கள் சொல்லும் எதையும் வாடிக்கையாளர்கள் நம்புவதில்லை. விதிவிலக்கான நிலையிலும் கூட விற்பனையாளர் இப்படிப்பட்ட அதீத பாராட்டு, போலிப்பணிவு, புகழ்ச்சிகளில் இறங்குவது உறுதியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

இனி விற்பனைப் பேச்சுக்கு வருவோம். நான்காம் விதி என்ன சொல்கிறது ? “வாடிக்கையாளரின் நோக்கங்களை நேர்மையாகப் பாராட்டுங்கள்”  – நோக்கங்களைப் பாராட்டச் சொல்லும் விதிகூடவே இரு துணை விதிகளையும் மட்டுறுத்தலாக வைக்கிறது.

ஆக செல்லத் தட்டும் கூடாது, அதீதப் புகழ்ச்சியும் கூடாது என்றால் வாடிக்கையாளரைப் பாராட்டவே கூடாதா? அப்படியல்ல. சரியான விதத்தில் செய்யப்படும் பாராட்டு நம்மை வாடிக்கையாளரிடம் மேலும் நெருக்கமாக்கும். சரியான பாராட்டு மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டு, நமக்கு நாமே பயிற்றுவித்துக் கொள்ள வேண்டியது.  செய்த செயலின் விளைவுகளை விட அச்செயலை செய்ய ஊக்கிய எண்ணங்கள், அதற்கான உழைப்பு மற்றும் முயற்சிகள் ஆகியவை பாராட்டப்படுவது கேட்போர் மனதில் மகிழ்வை உண்டாக்கும்.

ஐந்து வயதான தன் மகளின் எதிர்கால திருமணத்திற்கு நிலம் வாங்கி வைத்திருக்கும் வாடிக்கையாளரைப் பாராட்டும் இரு மொழிபுகளைக் காணலாம்.

அ. அன்புள்ள வாடிக்கையாளரே,  அருமையாக செய்திருக்கிறீர்கள். சிறப்பான முடிவு. எதிர்காலத்தில் நிலம் நல்ல விலை போகும் என எதிர்பார்த்து இன்றே நீங்கள் முதலீடு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டிய செயல்.

ஆ. அன்புள்ள வாடிக்கையாளரே,  பணி நிமித்தம் உங்களது சமவயது வரம்பில் நாங்கள் சந்தித்த வாடிக்கையாளர்கள் நிறைய உண்டு. அவர்களில் தம் குழந்தைகள் மிகச் சிறிய வயதில் இருக்கும்போதே அவர்களது வருங்காலத்தை மனதில் கொண்டு அதற்காக இப்போதே முதலீடுகளை உருவாக்கும் ஆர்வமும், அக்கறையும் உள்ள பெற்றோர்கள் மிகக் குறைவே. நீங்கள் அந்த வரிசையில் வரும் மிகச் சிலரில் ஒருவர். உங்கள் குழந்தைகள் நிச்சயம் நல்வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். குழந்தைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு இன்றே நீங்கள் சேமிக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.

இதில் எந்த மொழிபு வாடிக்கையாளருக்கு நெருக்கமாக இருக்கும்? இரண்டாம் மொழிபு எனச் சொல்வீர்களானால் மிகவும் சரி. என் அனுபவத்தில் அபூர்வமான விதிவிலக்குகளைத் தவிர்த்து இது மிகச் சரியாக வேலை செய்திருக்கிறது. முதல் மொழிபு தவறாக எதையும் சொல்லவில்லை. ஆனால் ஏன் முதல் மொழிபு இரண்டாவதைப் போன்ற அழுத்தமான பதிவினை வாடிக்கையாளர் மனதில் உருவாக்குவதில்லை? ஏனெனில் முதல் மொழிபில் பொதுவான பாராட்டே தெரிகிறது. வாடிக்கையாளரை, அவரது ஆழ்ந்த யோசனைகளை, முன்னெடுப்புகளை நாம் கவனித்திருக்கிறோம் என்பது இரண்டாம் மொழிபில்தான் தெரிகிறது. ஆகவே அவருக்கு நெருக்கமான பாராட்டு இரண்டாவது மொழிபுதான்.

இதில் இன்னும் கவனிக்க வேண்டியவை சில உள்ளன.

  • நாங்கள் பணி நிமித்தம் சந்தித்த பலரில் …. என்று ஆரம்பிக்கும்போது அவரை அறியாமலேயே நாம் பல வாடிக்கையாளர்களை சந்தித்த அனுபவம் உடையவர் என்பதை அவருக்குக் கடத்தி விடுகிறோம். நம்முடன் பேசுபவர் இவ்விஷயத்தில் அனுபவம் உள்ளவர் எனும் கருத்து தன்னிச்சையாக வாடிக்கையாளருக்கு சென்று சேர்கிறது. தகுந்த ஆளுடன் தான் பேசுகிறோம் என்ற எண்ணம் வாடிக்கையாளருக்கு  வர இவ்வகைத் தொடக்கம் உதவியாக இருக்கும். இன்னும் கூடுதலாக எனில் உங்கள் அனுபவம் மற்றும் முந்தைய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுப் பேசலாம். –  “எனது எட்டாண்டு அனுபவத்தில் ஆயிரத்து  இருபது  பேரை இவ்விஷயமாக சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதில்….. “ – இப்படி எண்களாகப் பேசுவதும் ஏற்புடையதே.
  • வாடிக்கையாளரை தனிச்சிறப்பு கொண்டவராக எண்ண வைப்பது கூடுதல் சாதகத்தைத் தரும். அதனால்தான் நம் அனுபவத்தில் நாம் கண்ட சிலரில் ஒருவர் என அவரைக் குறிப்பிடுவது முக்கியமாகிறது.  எந்த வாடிக்கையாளரும் சராசரிகளில் ஒருவராக இருப்பதையோ, அவ்வாறு நடத்தப்படுவதையோ விரும்புவதில்லை.
  • இரண்டாம் மொழிபில் நிலத்தில் முதலீடு செய்தல் என்பது பாராட்டப்படவில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். முதலீடு செய்தமைக்கான நோக்கமே பாராட்டப்படுகிறது. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் எனில் இதைத் தொடர்ந்து வரும் உரையாடல்களில் நம் முதலீட்டைப் பற்றி பேச வேண்டும். அதை பிறவற்றோடு ஒப்பு நோக்கிப் பேச நேர்ந்தால் வாடிக்கையாளரின் முந்தைய முதலீட்டின் நிறை, குறைகளையும் பேச நேரிடலாம். நாம் முதலில் அந்த முதலீட்டை புகழ்ந்து விட்டு பின்னர் அதன் போதாமைகளைப் பேசினால் நம் பேச்சின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகும்.
  •  பாராட்டை முடித்த இடத்திலிருந்து வாடிக்கையாளருக்கு ஆர்வமூட்டும், தூண்டும் கேள்விகளுக்குள் நுழைந்து விடலாம். ஏனெனில் பாராட்டும்போது ஒருவரைக் கவனியுங்கள். ஒரு புன்சிரிப்பு தோன்றுவதைக் காணலாம். குறைந்த பட்சம் புருவ இணைப்பில் ஒரு முடிச்சவிழ்ந்து விரிவதையாவது காணலாம். பாராட்டு நம்மை ஆசுவாசம் கொள்ள வைக்கிறது. அந்த நிலையில் அவர் ஐயம், எச்சரிக்கை போன்றவற்றை தற்காலிகமாக ஒதுக்கி வைத்திருக்கிறார். ஆகவே ஆர்வமூட்டும் கேள்விகளை அப்போது கேட்பது அவரை நம் அலைவரிசை சிந்தனைக்கு கொண்டுவரும்.- “ஆ. அன்புள்ள வாடிக்கையாளரே,  …………… நீங்கள் சேமிக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது….. என்று முடிக்குமிடத்தில் “உங்கள் முதலீடு L.C.P ( Legal Complinace Protection)  உள்ளதுதானா என உறுதி செய்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.” என சொல்கையில் அவர் அதென்ன என கேட்கத் தொடங்குவார். நாம் அவ்வாறு கேட்பது எப்போதும் நம் பொருளின் / சேவையின் தனித்திறனாக இருப்பது அவசியம். அதன் வழியே நம் பொருள்/சேவை குறித்து அவருக்கு விளக்கலாம்.  ஆகவே உங்கள் துறை சார்ந்த ஆர்வமூட்டும் கேள்விகளை நீங்கள் தயாரித்து வைத்துக் கொள்வது எப்போதும் உதவும்.
  • பாராட்டு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதால் அதில் தேவைக்கு அதிக மொழிபுகளைத் தவிர்க்கலாம். எந்த இடத்தில் முடிக்க வேண்டும் என வாடிக்கையாளரின் மீதான அவதானிப்பு வழியே தெரிந்து கொள்ள வேண்டும். பாராட்டை சரியான அளவில், சரியான நேரத்தில் முடிப்பது அவசியம்.

நண்பர்களே, நான்காம் விதி விற்பனை உரையாடலுக்கு மட்டுமன்றி நம் இயல்பு வாழ்க்கைக்கும் பயனுள்ளது. அறிமுகம் எனும் தளத்திலிருந்து நட்பு எனும் இடம் நோக்கி நாம் நகர்வதற்கு இவ்விதியும், அதை சரியாகச் செய்ய இதன் துணை விதிகளும் உதவும்.

“வாடிக்கையாளரின் நோக்கங்களை நேர்மையாகப் பாராட்டுங்கள்”  

  • செல்லத்தட்டு பாராட்டுகளை தவிர்க்கவும்
  • மிதமிஞ்சிய பாராட்டுப் பேச்சைத் தவிர்க்கவும்

நண்பர்களே, நான்காம் விதி சற்று உணர்ந்து உள்வாங்க வேண்டியது. ஆகவே நீங்கள் நேரம் எடுத்துக்கொண்டு அவற்றை கவனித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும். அடுத்து ஐந்தாம் விதியுடன் சிந்திப்போம். நன்றி.

Series Navigation<< ஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதிஆட்டத்தின் ஐந்தாவது விதி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.