வெளி மூச்சு

This entry is part 1 of 2 in the series வெளி மூச்சு

[லைட்ஸ்பீட் பத்திரிகையின், 47 ஆம் இதழில், ஏப்ரல் 2014 -ல் பிரசுரமான கதை. தமிழாக்கம்: மைத்ரேயன்]

வெகு காலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது, காற்று (இதை மற்றவர்கள் ஆர்கான் என்று அழைக்கிறார்கள்) வாழ்க்கையின் மூலாதாரம் என்று. அது உண்மையல்ல, வாழ்வின் உண்மையான மூலாதாரம் எது என்பதையும், அதன் விளைவாக, வாழ்வு எப்படி முடியும் என்பதையும் நான் எப்படி அறிந்து கொண்டேன் என்று இந்தச் சொற்களைச் செதுக்குவதன் மூலம் நான் விவரிக்கிறேன்.

வரலாற்றின் பெரும் பாகத்தில், நாம் காற்றிலிருந்து வாழ்வை உள்ளிழுத்தோம் என்ற கூற்று தெளிவான நிஜமாக இருந்ததால் அதை அழுத்திச் சொல்லத் தேவை இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் காற்று நிரம்பியஇரண்டு நுரையீரல்களைப் பயன்படுத்துகிறோம்; ஒவ்வொரு நாளும் நம் மார்க்கூட்டிலிருந்து காலியானவற்றை எடுத்து விட்டு, நிரம்பியவற்றைப் பொருத்திக் கொள்கிறோம். யாராவது ஒரு நபர், கவனக் குறைவாக இருந்து தன் காற்று அளவு மிகக்குறைவாக விட்டு விட்டால், அவர் தன் கைகால்கள் கனமாவதை உணர்வார், உடனே காற்றை நிரப்ப வேண்டிய அவசியத்தை அறிவார். பொருத்தப்பட்டுள்ள ஜோடி நுரையீரல்கள் காலியாவதற்கு முன், குறைந்தது ஒரு நுரையீரலாவது மாற்றாக ஒருவருக்குக் கிட்டாமல் போவது என்பது மிக அரிதானது; அசம்பாவிதமாக எப்போதோ இப்படி நடந்த சில நிகழ்வுகளில்- எங்கோ சிக்கிக் கொண்டு நகர முடியாமல் போய், வேறு யாரும் உதவிக்கு வர முடியாமல் போவது போன்ற சில- அவர் தன் காற்று தீர்ந்து போய்ச் சில வினாடிகளிலேயே இறந்து போவார்.

ஆனால் வாழ்க்கையின் சாதாரணப் போக்கில், நமக்குக் காற்றின் தேவை இருப்பது நம் எண்ணங்களில் இருப்பதே இல்லை, பலரும் காற்று நிரப்பும் நிலையங்களுக்குப் போவதில் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது என்பதை அத்தனை திருப்தி தரும் விஷயமாகச் சொல்லக் கூட மாட்டார்கள். ஏனெனில் நிரப்பும் நிலையங்கள் முக்கியமாக சமூக உரையாடலுக்கான இடமாகத்தான் இருக்கின்றன, நமக்கு உடல் மற்றும் உணர்வுக்கான ஊட்டத்தைத் தரும் இடமாக உள்ளன. நாம் எல்லாருமே வீடுகளில் ஒரு உபரி ஜோடி நுரையீரலை வைத்திருக்கிறோம், ஆனால் நாம் தனியாக இருக்கையில், நம்முடைய மார்பைத் திறந்து அதில் உள்ள நுரையீரலை மாற்றிப் பொருத்துவது என்பது ஒரு சள்ளை பிடித்த வேலையாகத்தான் தோன்றும். மற்றவர்கள் சூழ இருக்கையில் அது ஒரு சமூக நடவடிக்கையாக, பகிரப்படும் மகிழ்ச்சியாக ஆகிறது.

ஒருவர் அதிகமான வேலைகளில் சிக்கி இருந்தாலோ, அல்லது பிறரோடு பழக விரும்பாமலிருந்தாலோ அவர் நிரப்பப்பட்ட ஜோடி நுரையீரல்களை எடுத்துக் கொண்டு, அவற்றை தன்னுள் பொருத்தி விட்டு, காலியான நுரையீரல்களை அறையின் மறு புறம் வைத்து விடலாம். ஒருவருக்கு சில நிமிடங்கள் உபரி நேரம் இருந்தால், காலியான நுரையீரல்களை காற்று விநியோகிக்கும் சாதனத்தோடு பொருத்தி அடுத்து வரும் நபருக்கு உதவுவது என்பது எளிய, மரியாதையான நடத்தை. ஆனால் அனேகரும் மேற்கொள்வது சிறிது நேரம் அங்கே தாமசித்து, பிறரோடு பழகுவதில் மகிழ்வு காண்பதுதான், அன்றைய செய்திகளை நண்பர்களோடோ அல்லது தெரிந்தவர்களோடோ பேசுவதும், போகிற வழியில், தன்னோடு உரையாடுபவருக்குப் புதிதாக நிரப்பப்பட்ட நுரையீரல்களை எடுத்துக் கொடுப்பதும்தான். இது காற்றைப் பகிர்வது என்று சொல்லப்பட முடியாது என்றாலும், எல்லாக் காற்றும் ஒரே இடத்திலிருந்துதான் கிட்டுகிறது என்று தெரிந்திருப்பதில் ஒரு தோழமை உணர்வு இருக்கிறது, ஏனெனில் காற்று விநியோகிக்கும் கருவிகள், தரையடியே ஆழத்தில் உள்ள காற்றுச் சேமிப்பகத்திலிருந்து வரும் குழாய்களின் வெளிப்படையாகத் தெரிய விடப்பட்டுள்ள முனைப் பாகங்கள்தாம், அந்த சேமிப்பகம்தான் உலகின் மிகப் பெரும் நுரையீரல், நம் அனைவரின் நலன் காக்கும் மூலாதாரம்.

நிறைய நுரையீரல்கள் அடுத்த நாளே அதே நிரப்பும் நிலையத்துக்குத் திருப்பப்படுகின்றன, ஆனால் மனிதர் அடுத்துள்ள மாவட்டங்களுக்குப் போவதால், சம எண்ணிக்கையில் நுரையீரல்கள் மற்ற நிலையங்களுக்குச் சென்று சுழற்சியில் இருக்கின்றன; நுரையீரல்கள் எல்லாம் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்கின்றன, வழுமூனான அலுமினியத்தால் ஆன உருளைகள், அதனால் பார்த்ததும் ஒரு நுரையீரல் வீட்டருகேயே இருந்ததா அல்லது வெகு தூரத்திலிருந்து வந்ததா என்று சொல்ல முடிவதில்லை. பல மாவட்டங்களிடையேயும், நபர்களிடையேயும் நுரையீரல்கள் கடந்து போவது போலவே செய்திகளும், வதந்திகளும் பரவுகின்றன. இந்த வகையில் தொலைதூரத்து மாவட்டங்களிலிருந்து நாம் செய்திகளைப் பெற முடிகிறது, ஏன் உலகின் எல்லையில் உள்ள இடங்களிலிருந்தும் அவை கிட்டுகின்றன, சொந்த இடத்தை விட்டு நாம் போகவே தேவையில்லை, எனக்கு பயணம் போகப் பிடிக்கும் என்றாலும். நான் நிறைய தூரம் பயணம் போய், உலகின் விளிம்புக்கே சென்றிருக்கிறேன், அங்கே தரையிலிருந்து எழும்பி எல்லையில்லாத வான் வரை உயர்ந்திருக்கிற, திடமான க்ரோமியம் உலோகத்தால் ஆன, நெடுஞ்சுவரையும் பார்த்திருக்கிறேன்.

அப்படி ஒரு நிரப்பும் நிலையத்தில்தான் முதல் தடவையாக நான் சில வதந்திகளைக் கேட்ட போது, அவை என்னை மேலும் ஆராயத் தூண்டியதால் நான் கடைசியாக ஞானத் தெளிவுக்கு வந்து சேர்ந்தேன். அது களங்கமில்லாத நோக்கத்தோடுதான் துவங்கியது, எங்கள் பேட்டையின் பொது அறிவிப்பாளர் சொன்ன ஒரு குறிப்பால் துவங்கியது. ஒவ்வொரு வருடமும் முதல் நாளன்று நண்பகலில், அந்த அறிவிப்பாளர் ஒரு கவிதையின் பகுதியை பாராயணம் செய்வது மரபு, அந்த ஆண்டு தினக் கொண்டாட்டத்திற்காக என்றோ படைக்கப்பட்ட ஒரு பாடல் அது, அதைப் பாடி முடிக்க சரியாக ஒரு மணி ஆகும். அந்த தண்டோராக்காரர் தன் சமீபத்து நிகழ்ச்சி ஒன்றில் அதைச் சொன்னார், கூண்டுக் கடிகாரம் அவர் முடிக்குமுன்னரே அடுத்த மணி நேரத்தை ஒலித்தது, அது இதற்கு முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை. இன்னொரு நபர் இது ஒரு தற்செயல் உடன்நிகழ்வு என்று சொன்னார், ஏன் என்றால் பக்கத்து மாவட்டத்திலிருந்து அவர் அப்போதுதான் திரும்பி இருந்தார், அங்கும் தண்டோராக்காரர் இதே போலப் பொருத்தம் தவறியதைப் பற்றிக் குறை சொல்லி இருந்தாராம்.

யாரும் அந்த விஷயத்தை ஏற்பதைத் தவிர அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. சில நாட்கள் கழிந்த பின்னர்தான், மூன்றாவது மாவட்டத்திலும் தண்டோராக்காரரின் நிகழ்ச்சிக்கும் ஊர்க் கூண்டுக் கடிகாரத்துக்கும் இடையே வேறுபாடு ஏற்பட்டதைப் பற்றிச் சில நாட்கள் கழித்துச் செய்தி வந்த போதுதான், எல்லாக் கூண்டுக் கடிகாரங்களின் எந்திரங்களிலும் பொதுவான குறை ஏதோ இருப்பது பற்றி ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அது கொஞ்சம் விசித்திரமானதுதான், ஏனெனில் எல்லாக் கடிகாரங்களும் சிறிது கூடுதல் வேகத்தோடு ஓடி இருந்தன, எதுவும் மெதுவாக ஓடவில்லை. மணிக் கருவியாளர்கள் மேற்படி கூண்டுக் கடிகாரங்களைச் சோதித்தனர், சோதனையில் அவர்களால் எந்தப் பழுதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இப்படி ஒப்பிட்டுச் சோதிப்பதற்காக வைத்திருந்த கடிகாரங்களோடு அவற்றைச் சோதித்த போது எல்லாக் கூண்டுக் கடிகாரங்களும் நேரத்தை கச்சிதமாகக் காட்டுவதை மறுபடி தொடர்வதாகத் தெரிய வந்தது.

நானும் இந்தப் பிரச்சினையை மர்மமானதாகக் கண்டேன், ஆனால் என் படிப்பில் மிகவும் கூர்மையாக ஊன்றி இருந்ததால், வேறு விஷயங்களைப் பற்றி யோசிக்க என்னால் முடியவில்லை. நான் அப்போதும், இப்போதும் உடற்கூறியலில் மாணவனே, என் பிந்தைய செயல்களுக்குப் பின்னணியைத் தருவதறாக, அந்தத் துறையோடு எனக்கிருந்த உறவைப் பற்றிச் சுருக்கமான விவரணையைத் தருகிறேன்.

நாங்கள் நலிவுறாத உறுதி கொண்டவர்கள் என்பதாலும், உயிர் கொல்லும் விபத்துகள் அரியவை என்பதாலும், சாவு அபூர்வமாக இருக்கிறது, ஆனால் இது உடற்கூறைப் பற்றிப் படிப்பதைக் கடினமாக்குகிறது, குறிப்பாக சாவைக் கொணரும் விபத்துகள் மிக மோசமானவையாக இருப்பதால் மரித்தவரின் மீதங்கள் ஆய்வு செய்ய முடியாத அளவுக்குச் சேதமடைந்தவையாகவே கிட்டுகின்றன. நுரையீரல்கள் நிரம்பி இருக்கும்போது துளைக்கப்பட்டால், அப்போது வெடித்தெழும் சக்தி டைடேனியத்தை ஏதோ தகரம் போல எளிதாகக் கிழித்து, ஓர் உடலைப் பிளந்தெறிந்து விடும். முன் நாட்களில், உடற்கூறியலாளர்கள் கவனத்தைக் கால் கைகள் மீது குவித்துச் செலுத்தினர், அவை விபத்துகளில் பெரும்பாலும் சேதமின்றித் தப்பி இருக்கும். ஒரு நூறாண்டு முன்பு, என் முதல் உடற்கூறியல் உரை வகுப்பிற்கு நான் சென்ற போது, பேச்சாளர் எங்களுக்கு துண்டாகிப் போன ஒரு கையைக் காட்டினார், அதன் மேல் உறைகள் அகற்றப்பட்டிருந்தன, உள்ளே அடர்த்தியான பிஸ்டன்களும், கம்பிகளும் கொண்ட ஒரு நீண்ட தண்டு இருந்தது. அவற்றின் தமனிக் குழாய்களை சோதனைச் சாலையில் அவர் வைத்திருந்த, சுவற்றில் மாட்டப்பட்ட ஒரு நுரையீரலோடு அவர் இணைத்த பின், கையின் சிதைந்த அடிப்பகுதியிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்த செயலைத் தூண்டும் கம்பிகளை அவரால் நகர்த்தி இயக்க முடிந்தது, அந்தத் தூண்டுதலுக்கு மறுவினையாக கை விட்டுவிட்டுத் திறந்து மூடியது.

இடைப்பட்ட வருடங்களில், இந்தத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களால், உடற்கூறியலாளர்கள் சேதமான கால், கைகளைச் செப்பனிட முடிந்தவர்களானார்கள், சில நேரங்களில் துண்டான கைகளை மறுபடியும் இணைக்கவும் அவர்களுக்கு முடிந்தது. அதே நேரம் நாம் உயிர்வாழ்வோர்களின் உடற்கூறு அமைப்பை ஆராய முடியும் நிலைக்கு வந்திருந்தோம்; நான் பார்த்த அந்த வகுப்பின் உரையைப் போல ஒரு உரையை நான் நிகழ்த்திய போது, என் கையின் மேல் உறையை நான் திறந்து, என் மாணவர்களின் கவனத்தை, நான் கை விரல்களை ஆட்டியபோது நீண்டும், குறைந்தும் நகர்ந்த கம்பிகளின் பால் திருப்பினேன்.

இந்த முன்னேற்றங்களெல்லாம் இருந்த போதும், உடற்கூறியல் இன்னும் அதன் மையத்தில் முடிவு தெரியாத பெரிய மர்மத்தைக் கொண்டிருந்தது; நினைவு சக்தி பற்றிய கேள்வி அது. மூளையின் கட்டமைப்பு பற்றி நமக்குக் கொஞ்சம் தெரிந்திருக்கிற போதும், அதன் கூறுகளின் இயக்கங்களை ஆராய்வது என்பது சிக்கலானது என்பது தெரிந்ததே, அதற்குக் காரணம் மூளையின் அதீதமான நுண்மை. சாவு நேரும் வகையான விபத்துகளில், மண்டை ஓடு உடைந்தால், மூளை தங்கத்தால் ஆன மேகம் போல சீறிப் பாய்கிறது என்பதும், சின்னாபின்னமான சரடுகளையும், தகட்டையும் தவிர பயனுள்ள எதுவும் கிட்டுவதில்லை என்பதும் சராசரி நிகழ்வு. பல பத்தாண்டுகளாக, ஒரு நபரின் அனைத்து அனுபவங்களும் தங்கத் தகடுகளில் பொறிக்கப்படுகின்றன என்ற கருத்துதான் நினைவு சக்தியைப் பற்றிய கோட்பாடாக இருந்தது; விபத்துகளுக்குப் பிறகு காணப்பட்ட துகள்களுக்கு, வெடிப்பால் கிழிக்கப்பட்ட இந்தத் தகடுகளே காரணம். உடற்கூறியலாளர்கள் இந்தத் தங்கத் தகடுகளின் சிறு துகள்களைச் சேகரிப்பார்கள்- அவை அத்தனை மெலிதாக இருப்பதால் ஒளி அவற்றூடே கடந்து போகையில் பச்சையாகத் தெரியும்- பிறகு பல வருடங்கள் செலவழித்து அவற்றைத் திரும்ப இணைக்க முயல்வார்கள், இறுதியில் அவற்றின் மீது இறந்தவரின் அனுபவங்களைப் பொறித்ததால் காணப்படும் குறியீடுகளுக்கு அர்த்தம் காண முயல்வார்கள்.

பொறித்தல் கோட்பாடு என்றறியப்பட்ட இந்தக் கோட்பாட்டை நான் ஏற்கவில்லை, அதற்கு ஒரு எளிய காரணம் உண்டு, நம் அனுபவங்கள் எல்லாம் பதிக்கப்படுகின்றன என்றால் நம் நினைவுகள் ஏன் பூர்த்தியடையாதவையாக இருக்கின்றன? பொறித்தல் கருதுகோளை முன்வைப்பவர்கள், மறதிக்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள்- காலப் போக்கில் பதிவுகளைப் படிக்க உதவும் ஊசியிலிருந்து இடப் பொருத்தத்தை இழந்து விடுகின்றன, காலத்தால் மிகவும் பிந்தைய தகடுகள் அவற்றோடு தொடர்பை முழுதும் இழந்து விடுகின்றன – இதை நான் ஒருபோதும் போதுமான விளக்கமாகக் கருதவில்லை. ஆனால் இந்தக் கருதுகோளின் ஈர்ப்பை என்னால் பாராட்ட முடிந்தது; நானும் அந்தத் தகடுகளின் துகள்களை நுண் நோக்கியின் வழியே பார்த்துப் பல மணி நேரங்களைச் செலவழித்திருந்தேன், அந்த நோக்கியின் குமிழ்களைச் சுழற்றுவதன் மூலம் புரியக் கூடிய குறியீடுகள் குவிபுள்ளியில் வரும்போது அவற்றை நோக்குவது திருப்தியளிப்பதாக இருந்தது.

அதை விட, இறந்தவரின் நினைவுகளில் மிகப் பழையதானவற்றை, அவரே கூட மறந்து விட்டவற்றை, சிக்கல் பிரித்துப் புரிந்து கொள்வது எத்தனை அருமையானதாக இருக்கும்? நம்மில் யாரும் நூறு வருடங்களுக்கு முந்தையனவற்றை நினைவு கூர முடிவதில்லை, எழுதப்பட்ட பதிவுகளும்- நாமே எழுதியவைதான் அவை, ஆனால் நமக்கு அவை மிகச் சிறிதே நினைவிருக்கின்றன- அதற்கு முந்தைய சில நூறு வருடங்களுக்கே நீள்கின்றன. எழுதப்பட்ட வரலாறு துவங்குமுன் எத்தனை ஆண்டுகள் நாம் வாழ்ந்திருந்தோம்? எங்கிருந்து நாம் வந்தோம்? நம் மூளைகளிலேயே இவற்றுக்கான விடைகளைக் கண்டு பிடிப்பது முடியும் என்ற சாதிப்பு இந்த பொறித்தல் கோட்பாட்டை அத்தனை வசீகரமானதாக ஆக்குகிறது.

இதற்கு மாறுபட்ட கோட்பாட்டு முகாமை நான் ஆதரித்தேன், அது நம் நினைவுகள் சேமிக்கப்பட்ட ஊடகத்தில், பதிப்பது எத்தனை சுலபமோ அதே அளவு எளிது அழிக்கும் முறையும்: பற்சக்கரங்களின் சுழற்சியாலோ, அல்லது ஒரு வரிசையாக இருந்த மாற்று விசைகளாலோ இது நடக்கலாம், என்று கருதியது. இந்தக் கோட்பாட்டின் நோக்கப்படி, நாம் மறந்ததெல்லாம் நிஜமாகவே தொலைந்து போய் விட்டன, நம் மூளைகள் நம் நூலகங்களில் இருக்கிறவற்றைத் தாண்டி எதையும் வரலாறுகளாகக் கொள்ளவில்லை என்று அர்த்தமாகும். இந்தக் கோட்பாடுடைய ஒரு நன்மை, காற்று இல்லாததால் இறந்தவர்களுக்குள் நுரையீரல்கள் பொருத்தப்பட்டால், உயிர்த்தெழுபவர்களுக்கு எந்த நினைவும் இருப்பதில்லை, அவர்கள் புத்தி இல்லாதவர்களாக எழுகிறார்கள் என்பதை அது விளக்க உதவுகிறது:அதன்படி எப்படியோ சாவு எல்லாப் பொறிச் சக்கரங்களையும், அல்லது மாற்று விசைகளையும் புதுநிலைக்கு கொண்டு விடுகிறது என்பது அது. பொறித்தல் கோட்பாட்டுக்காரர்கள் இதையே அதிர்ச்சி அந்த மெல்லிய இலை போன்ற தகடுகளை இடம் மாற்றிப் பொருத்தி விடுகிறது என்றார்கள், ஆனால் யாரும் உயிருள்ள ஒரு நபரை, முழு முட்டாளைக் கூட, இந்த விவாதத்தை முடிப்பதற்காகக் கொல்லத் தயாராக இல்லை. இது பற்றிய உண்மையை முடிவாக நிறுவக் கூடிய ஒரு சோதனையை நான் யோசித்து வைத்திருந்தேன், ஆனால் அதில் சில ஆபத்துகள் இருந்தன,அதை நடத்து முன் நிறைய கவனமாக யோசிக்கப்பட வேண்டியவை இருந்தன. நான் முடிவெடுக்க முடியாமல் நிறைய காலம் இருந்தேன், இந்தக் கடிகாரங்களின் நேரப் பிழைகளைக் கேட்கும் வரை.

இன்னும் தூரத்தில் இருந்த மாவட்டத்திலிருந்து செய்தி வந்தது, அங்கும் ஊர்க்கூவலாள் தன் புதுவருடத்துக்கான கவிதைப் பொழிவை முடிக்குமுன் கூண்டுக் கடிகாரம் மணி நேரம் முடிந்ததாக அடித்தது என்று தெரிவித்திருந்தார். இந்தச் சேதியைக் கவனிக்கும்படி ஆனதற்குக் காரணம், அந்த மாவட்டத்துக் கடிகாரம் வேறொரு இயந்திர அமைப்பைப் பயன்படுத்தியது என்பது, அதில் பாதரசம் ஒரு கோப்பையில் வழிவதை வைத்து மணிகள் அளக்கப்பட்டிருந்தன. இங்கு பிழை பொதுவான எந்திரக் கோளாறால் விளக்கப்பட முடியாதது. அனேக மக்கள் ஏதோ தில்லு முல்லு நடந்திருக்கிறது, விஷமக்காரர்கள் செய்த சேட்டை என்று சந்தேகப்பட்டார்கள். எனக்கு வேறொரு சந்தேகம் இருந்தது, அது மேலும் இருண்டதாக இருந்ததால் அதைச் சொல்ல எனக்கு தைரியம் இல்லை, ஆனால் அதுதான் என் செயலின் போக்கைத் தீர்மானித்தது; நான் என் சோதனையை மேற்கொள்வேன்.

நான் உருவாக்கிய முதல் கருவி இருப்பதில் எளிமையானது: என் சோதனைக் கூடத்தில் நான்கு கண்ணாடி முப்பட்டகைகளை சுவரில் பொருந்திய நிலைதாங்கிகளில் அமர்த்தினேன், அவற்றின் மேல் முனைகள் ஒரு செவ்வகத்தின் நான்கு மூலைகளாக இருக்கும்படி ஓர் ஒழுங்கு செய்து கவனமாக அமைத்தேன். அப்படி அமைத்த போது, கீழ் நிலையில் இருந்த ஒரு முப்பட்டகையில் செலுத்தப்பட்ட ஓர் ஒளிக்கற்றை மேல் நோக்கிப் பிரதிபலிக்கப்பட்டது, பின் பின்புறம் திரும்பியது, பிறகு கீழே, பிறகு மறுபடியும் முன்னே பயணித்தது, இது ஒரு நாற்கரச் சுழற்சியில் செல்லும். இதன்படி, நான் முதல் முப்பட்டகையின் உயரத்தில் நேரெதிரே அமர்ந்தால், எனக்கு என் தலையின் பின்புறத்தின் காட்சி தடையின்றிக் கிட்டியது. இந்த சுயத்தை மட்டுமே நம்பும் நிரூபண பெரிஸ்கோப் வரப்போகிற எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருந்தது.

பார்வையை முப்பட்டைக் கண்ணாடிகளால் இடம் மாற்றிப் பொருத்தியதைப் போல, இயங்கச் செய்யும் கம்பிகளை அதே போன்ற ஒரு செவ்வக அமைப்பில் வைத்தது, பார்வை மாறும் போது அதோடு இணைந்தபடி, செயல்படுத்தலை இடம் மாற்றிப் பொருத்த வைத்தது. செயல்படுத்தும் கம்பிகளின் தொகுப்பு (கண்ணாடி முப்பட்டகங்களாலான) அந்த பெரிஸ்கோப்பை விட பல மடங்கு பெரியதாக இருந்தாலும், உருவமைப்பில் நேராகச் செய்யக் கூடியதாக இருந்தது; மாறாக, இந்தப் பொறியமைப்புகளின் முனையில் இணைக்கப்பட்டவை ஒவ்வொன்றும் மிகவுமே நுண்மையானதாக இருந்தன. செயல்படுத்தும் கம்பிகளோடு நான் ஒரு வரிசையான கச்சிதமாகத் தூண்டும் கருவிகளை இணைத்தேன், அப்படி அவற்றை வருணிப்பது என்னவோ எந்திரங்களைக் கட்டமைப்போரின் கலையின் சிகரங்களான அவற்றுக்கு நியாயம் செய்ததாகாது. உடற்கூறியலாளரின் அபாரத் தந்திரங்களையும், அவர்கள் ஆய்கிற உடல் கட்டமைப்புகள் கொடுத்த உத்வேகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட அந்தத் தூண்டு கருவிகள் அவற்றை இயக்குவோர் தம் சொந்தக் கைகளால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்ய உதவுவனவாக இருந்தன, ஆனால் ஒப்பீட்டில் மிகச் சிறிய அளவிலான வேலைகளையும் செய்ய உதவின.

இந்தக் கருவிகளை எல்லாம் தொகுக்கப் பல மாதங்கள் ஆயின, ஆனால் கருக்காக இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. தயாரிப்புகள் முடிந்த உடன், குவியலாக அமைந்த குமிழ்கள் மேலும் இழு விசைகளின் மீது என் இரு கைகளையும் வைத்து என் தலைக்குப் பின்னே இருந்த இரு திருப்பு விசைகளை என்னால் கட்டுப்படுத்த முடிந்தது, மேலும் பெரிஸ்கோப்பைப் பயன்படுத்தி அவை எதை இயக்கின என்று அறிய முடிந்தது. இனி என்னால் என் மூளையை அரிந்து பார்க்கவியலும்.

எனக்குத் தெரியும், இந்த யோசனையே முழுதும் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், இதை என் கூட வேலை செய்வோரிடம் சொல்லி இருந்தால், நிச்சயமாக என்னைத் தடுக்கவே அவர்கள் முயன்றிருப்பார்கள். உடல் கூறு ஆய்வுக்காகத் தங்களையே ஆபத்துக்கு உட்படுத்துமாறு வேறு யாரையும் நான் கேட்டிருக்க முடியாது, அறுத்துப் பார்க்கும் ஆய்வை நானே செய்யவே நான் விரும்பினேன், அத்தகைய செயல்திட்டத்தில் செயலில் பங்கெடுக்காத பொருளாக இருப்பது எனக்குத் திருப்தி தந்திராது. சுய-அறுவைதான் இருந்த ஒரே வழி.

ஒரு டஜன் நிரப்பப்பட்ட நுரையீரல்களை நான் உள்ளே கொணர்ந்தேன், அவற்றை ஒரு ????? உடன் இணைத்தேன். இந்தத் தொகுப்பை நான் உட்காரவிருந்த மேஜையின் கீழ் இணைத்துப் பொருத்தினேன், ஒரு வெளியேற்றும் கருவியை என் நெஞ்சுக்குள் இருந்த ப்ராங்கியல் உள்குழாய்களோடு இணைத்தேன். அது ஆறு நாட்களுக்கு வேண்டிய காற்றை எனக்குக் கொடுக்கும். அத்தனை நேரத்துக்குள் என் சோதனையை ஒரு வேளை நான் முடிக்காமல் போனால் என்ன என்ற சாத்தியப்பாட்டுக்காக, அத்தனை நேரம் கழிந்த பின் என்னைப் பார்க்க வருமாறு என் சக ஊழியர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தேன். அத்தனை நேரம் அந்தச் சோதனையை நான் முடிக்காமல் இருந்தால் அது நான் இறந்திருப்பதால்தான் என்று இருக்கும் என்பது என் முன் ஊகம்.

என் முதுகும் தலையுமாக உருவாக உதவிய நன்கு வளைந்த ஒரு தகட்டை அகற்றுவதில் நான் துவங்கினேன்; பிறகு பக்கவாட்டில் இருந்த இரண்டு ஆழமற்ற வளைவு கொண்ட இரு தகடுகளை அகற்றினேன். என் முகத்தின் தகடுதான் எஞ்சி இருந்தது, அது ஒரு கட்டுப்படுத்தும் வளைகொம்போடு இணைத்துப் பூட்டப்பட்டிருந்தது, என் பெரிஸ்கோப்பால் அதன் உள்புறத்தை என்னால் பார்க்க முடியவில்லை; வெளிப்படுத்தப்பட்டதாக நான் பார்த்தது என் மூளைதான். அதில் ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட துணைத் தொகுப்புகள் இருந்தன, அவற்றின் வெளிப்புறங்கள் நுணுக்கமாக வனையப்பட்ட வெளிக் கூடுகள் இருந்தன; பெரிஸ்கோப்பை அந்த கூடுகளுக்கிடையே இருந்த சிறு இடைவெளிகளுக்கு அருகில் பொருத்தியதன் மூலம், அவற்றின் உள்புறமிருந்த அற்புதமான பொறியமைப்புகளை ஒரு துளி கவர்ச்சிகரமாகக் கிட்டியது. நான் பார்த்த சிறு அளவிலேயே, நான் பார்த்ததிலேயே மிக அழகான நுண்மையான அமைப்புகள் கொண்ட எந்திரம் அது என்று என்னால் சொல்ல முடிந்தது, மனிதர் அமைத்த எதையும் விட பன்மடங்கு தாண்டிய அப்படி ஒரு கருவி தெய்வத்திடமிருந்துதான் வந்திருக்க முடியும். அந்தக் காட்சி பெரும் உற்சாகமும் கொடுத்தது, மயக்கம் வருமளவும் இருந்தது, நான் அதைப் பல நிமிடங்கள் அழகுணர்வுடனேயே பார்த்திருந்தேன், பிறகுதான் என் ஆய்வுகளைத் தொடர்ந்தேன்.

மூளை தலையின் மத்தியில் இருந்து, எதார்த்தமான அறிதலை நடத்தும் ஒரு எந்திரத்துக்குள்ளும், அதைச் சூழ்ந்து ஒரு தொகுப்பாக இருக்கும் உபகருவிகளில் நினைவுகள் சேமிக்கப்படுகின்ற பகுதியிலுமாகப் பிரித்துப் பொருத்தப்பட்டிருக்கிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. நான் கவனித்தது இந்தக் கோட்பாட்டோடு பொருந்தியிருந்தது, விளிம்பிலிருந்த உபதொகுப்புகள் எல்லாம் பார்வைக்கு ஒரே போலத் தெரிந்தன, ஆனால் மையத்திலிருந்த உபதொகுப்பு மாறிய தோற்றம் கொண்டிருந்தது, அது இன்னும் பல வகைகள் கொண்டதாகவும், கூடுதலான அசையும் பாகங்களோடும் தோன்றியது. இருந்தாலும் எல்லாக் கூறுகளும் மிக நெருக்கமாகப் பொருத்தப்பட்டு இருந்ததால், என்னால் அவற்றின் இயக்கங்களை அதிகம் பார்க்க முடியவில்லை; இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள விரும்பினேன் என்றால் நான் இன்னும் நெருக்கமான இடத்திற்குப் போக வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு உப தொகுப்புக்கும் அருகிலேயே காற்றுச் சேமிப்பு இருந்தது, அதற்கு மூளையின் அடிப்பகுதியிலிருந்த ஒரு கட்டுப்பாட்டகத்திலிருந்து நீண்ட குழாய் மூலம் காற்று கிட்டியது. இருப்பதில் மிகவும் பின்னே இருந்த ஓர் உப இணைப்பின் மீது, நான் தொலை இயக்கிகளைப் பயன்படுத்தி, என் பெரிஸ்கோப்பின் கவனிப்பைத் திருப்பினேன். துரிதமாக, காற்று வெளியேறும் குழாயைக் கழற்றி விட்டு, அதனிடத்தில் மேலும் நீளமான குழாய் ஒன்றைப் பொருத்தினேன். இந்தச் செய்முறையைப் பல முறை செய்து பார்த்துப் பயிற்சி இருந்ததால் இதை வினாடிகளில் என்னால் செய்ய முடிந்தது; இருந்த போதும், அந்த உப இணைப்பு தன் காற்றுச் சேமிப்பைத் தீர்க்கும் முன் அந்தத் தொடர்பை நான் மறுபடி இணைத்து விட்டேனா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. உப இணைப்பின் செயல்பாடு தடைப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டபின்னரே நான் தொடர்ந்தேன்; அந்த மேலும் நீண்ட குழாயைச் சற்று நகர்த்தி வைத்து, அதன் பின்னே இருந்த பிளவுக்குள் என்ன இருக்கிறது என்பதை மேலும் நன்றாகப் பார்க்கும்படி செய்து கொண்டேன்: அதற்கு அருகே இருந்த சிறு பாகங்களுடன் இணைத்த இதர குழாய்கள் அவை. இருப்பதிலேயே மிகச் சன்னமான இயக்கிகளைப் பயன்படுத்தி, அந்தக் குறுகிய இடைவெளியில் புகுந்து, இணைப்புக் குழாய்களை ஒவ்வொன்றாகக் கழற்றி மேலும் நீண்ட குழாய்களை உப தொகுப்புகளுடன் இணைத்தேன். கடைசியில், ஒவ்வொன்றாக மொத்த உப தொகுப்புகளையும் என்னால் மேலும் நீண்ட குழாய்கள் கொண்டு என் மூளையின் மீதிப் பகுதியோடு இணைக்க முடிந்தது. இப்போது என்னால் அந்த உப தொகுப்பை அதைத் தாங்கிக் கொண்டிருந்த படலிலிருந்து கழற்றி, மொத்தப் பகுதியையும் முன்பு என் தலையின் பின் பகுதியாக இருந்த இடத்திலிருந்து வெளியே இழுத்து எடுத்து விட முடிந்தது.

என் சிந்திக்கும் திறனை நான் சேதப்படுத்தி இருக்கக் கூடும், ஆனால் அதை நான் அறியாமல் இருக்கக் கூடும் என்பது சாத்தியம்தான் என்று எனக்குத் தெரிந்திருந்ததால், சில அடிப்படை எண் கணிதச் சோதனைகளைச் செய்து பார்த்ததில் நான் சேதமடையவில்லை என்பதாகத் தெரிந்தது. மேலே ஒரு சாரத்தில் ஒரு உப தொகுப்பு அமைப்பு தொங்கியபடி இருக்க, என் மூளையில் மையத்தில் இருந்த அறிதலுக்கான எந்திரத்தை என்னால் இன்னும் மேலான விதமாகப் பார்க்க முடிந்தது, ஆனால் நுண் நோக்கி இணைப்பை இன்னும் அருகில் கொண்டு வந்து கவனிக்க அங்கு இடம் போதவில்லை. என் மூளையின் செயல்களை நிஜமாகவே ஆராய்வதானால், அரை டஜன் உப தொகுப்புகளையாவது நான் இடம் மாற்றிப் பொருத்த வேண்டி இருக்கும்.

விடாமல் உழைத்து, மிகச் சிரமப்பட்டு, மற்ற உப தொகுப்புகளின் குழாய்களை எல்லாம் மாற்றும் வேலையைத் தொடர்ந்து செய்தேன், ஒன்றைப் பின்புறம் தூரத்தில் வைத்து, இரண்டை மேலும் உயரத்தில் வைத்து, வேறு இரண்டை வெளியில் பக்கவாட்டில் வைத்து, மொத்த ஆறு உப தொகுப்புகளையும் என் தலைக்கு மேலிருந்த ஒரு சாரத்தில் தொங்க விட்டு வைத்தேன். எல்லாம் முடிந்த போது, என் மூளை ஒரு பெரும் வெடிப்புக்கு அடுத்த வினாடியின் நுண்பின்னக் கணத்தை உறையச் செய்த காட்சி போலத் தெரிந்தது, அதை நினைத்துப் பார்க்கவும் எனக்குத் தலை சுற்றியது. இறுதியில் ஒரு வழியாக, அறியும் எந்திரமே பார்வைக்கு வெளிப்பட்டது, கீழே என் உடலுக்குள் இட்டுச் செல்லும் செயல்படுத்தும் கம்பிகளும், பல குழாய்களும் கொண்ட ஒரு தூணால் தாங்கப்பட்டிருந்தது. இப்போது என் நுண்நோக்கியை முழுச் சுற்றில் முந்நூற்று அறுபது பாகைகளிலும் சுழற்றிப் பார்க்க இடம் கிட்டி இருந்தது, நான் நகர்த்திப் பொருத்திய உப தொகுப்புகளின் உள்புறங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. நான் பார்த்தது தங்கத்தாலான எந்திரத்தின் ஒரு நுண்மாதிரிப் பகுதிதான், ஊடாட்ட உருளைகளின் குறும் வடிவும், சுற்றுகிற மிகச் சிறு சுழலிகளும் கொண்ட ஒரு நிலப்பரப்பு.

காலவரிசையில் அமைந்த இந்தக் காட்சிகள் பற்றி நான் யோசித்த போது, நான் கேள்வி எழுப்பிக் கொண்டேன், என் உடல் எங்கே இருந்தது? இயல்பாக எனக்கு இருந்த கண்களும், கைகளும் என் மூளையோடு தொடர்பு கொண்டிருந்த விதத்திற்கும், இப்போது அறையில் சூழ இருந்தபடி என் பார்வையையும், செயல்படும் முறைகளையும் இடம் மாற்றிப் பொருத்திய குழாய்கள் மூலம் பெறும் தொடர்புகளும் கருத்து அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லாதவை. இந்தச் சோதனையின் போது பயன்பட்ட செயல்படு கருவிகள் சாரத்தில் என் கைகள்தானே, இல்லையா? அந்த பெரிஸ்கோப்பின் நுனியில் இருந்து என் பார்வைக்கு உதவிய உருப்பெருக்கி வில்லைகள் சாரத்தில் என் கண்கள் போலத்தானே? உள்ளிருந்து அழுத்தத்தால் வீங்கியது போலத் தெரியும் என் மூளையின் மையத்தில் இருக்கும் என் அணு ஒத்த, பின்னப்பட்ட உடலோடு, உள்ளெல்லாம் வெளிப்படுத்தி வைக்கப்பட்ட ஒரு நபர் நான். சாதாரணமாகப் பார்க்கக் கிட்டவியலாத இந்த உருவமைப்புடன் என்னையே நான் பிரித்தாராய்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

Series Navigationவெளி மூச்சு – 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.