நினைவுகூர்தல்
ஒவ்வொரு கோடையும் மழை பொழியுமென்றும்
நித்திரையில் இரவுகள் நிச்சலனமாய் இருக்குமென்றும்
பசும் பெரணிகள் சாலையோரம் இடையறாது சுருளவிழ்க்குமென்றும்
நம்பியதை அற்ப விடயமென்று ஏன் நினைத்தோம்?
அன்னியர் கனவிலும் அண்ட முடியாத ஸ்திரத்தில்
ஆறும் வயலும் என்றும் நிலைக்கும்
ஜீவிதம் எளிதென ஏன் எடை போட்டோம்?
மலைகளின் மடிந்த மௌனத்தில்
வெய்யோன் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை அறிந்திருந்ததாலா?.
எப்போதையும் விட அதிக மழை பொழியும் இக்கோடையில்
அமிழ்ந்து சிதறுகிறது ராணுவ வீரர்களின் காலடிச்சத்தம்.
கானகத்தில் ஆயுதங்கள் விருத்திப்பதை
ரகசிய செய்திப் பரிமாற்றங்களில் கேட்டறிகிறோம்.
பெருந்தீனி புசிக்கும் கானகம்
மாமிசப் பச்சையில் பயங்கரங்களை பதுக்கி வைத்திருக்கிறது.
நினைவில் நீங்காது எப்போதும்
கல்லிலும் புல்லிலும் குழந்தைகளின் துயிலிலும்
தெய்வங்கள் உய்த்திருப்பார்களென ஏன் நினைத்தோம்;
இப்போதோ, கண்மூடி
நம்பிக்கை துறக்கையில், தெய்வங்கள் மரிக்கின்றன.
நினைவுகூர் நாள்முதல்
மனிதன் நீரையும் நெருப்பையும் வெறித்திருக்கிறான்.
நம்மைப் பற்றிய உலகின் அவதானிப்புகள்
மலைகளில் வசிக்கும் நமக்கு புலப்படுவதில்லை.
நமக்கான விதியை தேடியலைபவர்களாகிய நாம்
வாழ்நாள் முழுவதும்
மலைகளின் உருவரையை வெறித்திருக்கிறோம்,
வெல்லமுடியாத வானத்தை நோக்கி கண்களை உயர்த்தியபடியே.
oOo
சிற்றூர்களும் நதியும்
சிற்றூர்கள் எப்போதும் எனக்கு இறப்பையே நினைவுறுத்துகின்றன.
கோடையிலும் குளிரிலும்
புழுதி பறக்க
அருவிப் பள்ளத்தாக்கினூடே காற்று ஊளையிட,
மரங்களுக்கிடையே அமைதியாய் என் பிறப்பிடம்
எப்போதும் அதே போல் இருக்கிறது.
அண்மையில் எவரோவொருவர் இறந்து விட்டார்.
சம்பங்கி மலர் வளையங்களைப் பார்த்தபடி
அவலமானதொரு மெளனத்தில் அழுதுகொண்டிருந்தோம்.
உயிர்ப்பு மரிப்பு, உயிர்ப்பு மரிப்பு,
சடங்குகள் மட்டுமே நிரந்தரமானவை.
நதியிற்கும் ஆன்மா உண்டு.
கோடையில் துக்கப் பிரவாகமாய் அது
நிலத்தை வெட்டிச் செல்கிறது. சிலசமயங்களில்,
சிலசமயங்களில், தோன்றுவதுண்டு, மூச்சைப் பிடித்தபடி
மீன்களும் நட்சத்திரங்களும் நிறைந்த ஓரிடத்தை அது தேடுகிறதோவென்று.
நதியிற்கும் ஆன்மா உண்டு.
ஊரைக் கடந்து நீளும் அதற்குத் தெரியும்,
வரண்ட நிலத்தில் முதல் மழைத்துளியாகத் தொடங்கி
மலைமுகடுகளில் பனியென விரியும்
நதியிற்குத் தெரியும்,
நீரின் சாசுவதத்தைப் பற்றி.
மகிழ்வுச் சித்திரங்களின் நினைவாலயமொன்று
பால்யத்தின் நாட்களை அடையாளப்படுத்துகிறது.
எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்
சிற்றூர்கள் வளர்கின்றன.
நீத்தாரோ மேற்கு நோக்கி இருத்தப்படுகின்றனர்.
ஆன்மா உயர்ந்தெழுகையில்
பொன்னொளிர் கிழக்கினுட் புகுந்து
வெய்யோனின் இல்லம் சேரும்.
வெயிலொளியில் மீண்டும் இருத்தப்படும்
சில்லிட்ட மூங்கில்களில்
உயிர் பொருட்படுகிறது, இப்படி.
நதியோர சிற்றூர்களில்
நாமெல்லோரும் தெய்வங்களுடன் நடந்து செல்ல விரும்புகிறோம்.
oOo
வான் பாடல்
சுவாசத்துக்கும் நீத்தலுக்குமான
அறிகுறிகளை முன்நியமனமின்றி
சோதனையிட்டு
வானத்தின் விரியும் தேகத்தில்
மேகக் கவையெலும்பின்
உருமாறும் லிபியில்
மருத்துவக் குறிப்புகளை எழுதும்
மாலையே
மிகச் சிறந்த மருந்தாளர்.
உயர்ந்தெழுந்த நெடுமரங்களை விட்டு வந்தோம்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை விட்டு வந்தோம்.
பேசிக் கொண்டிருந்த மாந்தரை விட்டு வந்தோம்.
விளைச்சல் செழிக்குமா பொய்க்குமா என்று
ஆடவர்கள் நிமித்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
புலரிச் சிறுத்தைகளை முந்திச் செல்லும் முனைப்புடன்
சிறகடித்துக் கொண்டிருந்த அக்கோடையை விட்டு வந்தோம்.
வருடங்களின் சுமையை எப்படிச் சுமந்தோமென்று தெரியவில்லை.
தொல் வளைவாயில்களுக்கு அருகே
வரவேற்கவோ விடைகொடுக்கவோ நீ கையசைத்ததாக
நினைவு, சரியாகத் தெரியவில்லை;
கோடை கைமாறிய போது
கிழக்குவானம் மட்டுமே மீதமிருந்தது.
ஒரு நாள் காலை, பூத்துக் குலுங்கிய பியோனிப்பூக்கள்
என் நெஞ்சை ஏக்கத்தால் விம்மின.
கோடையின் கசப்பு மருந்து ஒரு வான் துண்டம்,
பறவைச் சிறகாய், முன்திட்டத்தை மாற்றிற்று.
இரவுடன் பேரம் பேசும் மின்மினிப்பூச்சிகளின் துரித ஒட்டம்.
பற்றென்பது காலத்தின் கொடை என்பதை நன்கறிவேன்,
மாலைத் திரவம் சொர்க்கத்தின் இரசவாதத்தை
ஒளியின் நிறப்புரிகளில் அளித்து
வானத்தின் பெருவிரல் அடையாளங்களாக
மேக ஜ்வாலைகளை ஏற்றுகிறது.
—————————
Original(s): Remembrance, Small Towns and the River, Sky Song by Mamang Dai
மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன் *** மொழி பெயர்ப்பாளர் குறிப்பு:
மாமாங் டாய் அருணாசலப் பிரதேசத்தின் முக்கியமான செய்தியாளர்களில் ஒருவர். இந்தியாவின் இங்கிலிஷ் எழுத்தாளர்களில் பிரபலமானவர். 2011-இல் பத்மஶ்ரீயையும் 2017-இல் சாகித்திய அகாதமி பரிசையையும் இவர் வென்றிருக்கிறார். இவர் பெருமளவும் இங்கிலிஷில் எழுதுகிறார். இவரது இதர நூல்களின் பட்டியல் விக்கிபீடியாவில் கிட்டுகிறது. அவை:
அபுனைவுகள்:
Arunachal Pradesh: The Hidden Land (2003)
Mountain Harvest: The Food of Arunachal (2004)
நாட்டுப்புறக் கதைகள் கொண்ட இரு புத்தகங்கள் உண்டு, அவை சித்திரங்களோடு பிரசுரிக்கப்பட்டன.
The Sky Queen
Once Upon a Moontime (2003)
நாவல்கள்:
முதல் நாவல்: The Legends of Pensam (2006)
பிறகு வெளி வந்தவை
Stupid Cupid (2008), The Black Hill (2014), River Poems (2004), The Balm of Time (2008), Hambreelsai’s Loom (2014), Midsummer Survival Lyrics(2014)
The balm of time அசாமிய மொழியிலும் as El Balsamo Del Ytiempo என்ற பெயரில் பிரசுரமாகியது.
இவரது பேட்டி ஒன்றை இங்கே காணலாம்: http://www.thanalonline.com/Issues/08/Interview2_en.htm
மாமாங் டாயின் இக்கவிதைகளை ஜீத் தாயிலின் அபாரமான “The Bloodaxe Book of Contemporary Indian poets” என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பில்தான் படித்தேன். அப்புத்தகத்திலிருந்து ஒரு சிறு குறிப்பை கீழே தந்துள்ளேன்:
மாமாங் டாய் சியாங் நதியின் அருகாமையில்அருணாசலப் பிரதேசத்தின் பாசிகாட்டில், 1959-இல் பிறந்தார். அவர் கவிதைகள் அம்மாநிலத்தின் நதிகள், மலைகள், நீர் மேலும் ஒளியைக் குறித்த உச்சாடனங்கள். பெரும்பாலும் வாய்வழிக்கதை மரபையும், அரிதாகவே காணக்கிடைக்கும் எழுத்து ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்ட குறும் வரலாறுகள் – காலனிய காலத்து இந்திய நில அளவைத் துறை ஆவணமொன்றில் சியாங் நதியை டிபெட்டிய சாங்போ நதியையும், அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றையும் பிணைக்கும் ஒரு ‘விடுபட்ட இணைப்பாக’அடையாளப்படுத்தும் குறிப்பு மாமாங்கின் “விடுபட்ட இணைப்பு” என்ற கவிதையில் உருமாற்றம் பெறுவது ஒரு நல்ல உதாரணம். அருணாசலப் பிரதேசத்தில் பிறந்து இந்திய ஆட்சிப் பணியில் (IAS) பணியாற்றிய முதல் பெண்மணி என்ற சாதனை படைத்த மாமாங் அப்பொறுப்பை ஊடகவியலுக்காகத் துறந்தார். இடாநகரில் செய்தியாளராக பணியாற்றுகிறார்.