Moonbound – Jonathan Fetter-Vorm
நிலவில் இறங்கிய அபோலோ 11 பற்றிய படக்கதை புத்தகம்

“நாஸா விண்வெளி மையத்தின் அபோலோ திட்டம் நிலவில் இறங்கிய அபோலோ 11 விண்களனுக்கு முன்னர் ஐந்து முறை விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் பதினைந்து முறைகளுக்கு மேல் பலவிதமான சோதனை விண்களன்கள் ஏவப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் திட்டத்தின் சோதனைகளை மேற்கொண்டு பயணத்துக்குத் தயார் செய்யப்படுவார்கள். பல ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களும், வெள்ளை நிறமல்லாதோர் பலரும் ஆய்வில் ஈடுபட்டிருந்த காலத்தில் கூட பெண்களை விண்வெளிக்கு அனுப்பவேண்டுமென்று நாஸா நினைத்ததில்லை. விண்வெளி வீரர்கள் ஆவதற்கானப் பரிசோதனைகளில் ஈடுபட்ட பெண்கள் ஆண் வீரர்களை விட வெற்றிகரமான முடிவுகளோடு வெளியேறியும் கூட விண்வெளிக்கு அவர்கள் அனுப்பப்படவில்லை. அதற்கானக் காரணத்தைக்கூட அமெரிக்க அரசும் நாஸாவும் தெரிவிக்கவில்லை. ரஷ்யா தொடர்ச்சியாகப் பெண் விண்வெளி வீரர்களை சோதித்துப்பார்த்தது. “
நம் பிரபஞ்சத்தின் ஆழங்களையும், மிகத் தூரத்தில் இருக்கும் விண்மீன் குடும்பங்களையும் ஆராய்வதற்கான பலவிதமான வழிமுறைகளை ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். குகை மனிதனாக கண்ணுக்குத் தெரிந்த நட்சத்திரங்களையும், ஒளி மண்டலங்களையும் கண்டும் வியந்தும் பயந்தும் கடத்திய இரவுகள் முதல் கடந்த ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக நம் கண்பார்வைக்குக் கிட்டும் ஒளி அலைவரிசைகளைக் கொண்டு மட்டுமே ஆராய்ந்து வந்துள்ளோம். நம் கண்ணுக்குப் புலப்படும் ஒளி அலைவரிசை மிகவும் குறுகியது. அதற்குப் புலப்படாத அலைவரிசைகளை ஆராயும் மின் மற்றும் காந்தவியல் அறிவியலின் பாய்ச்சலாம் நம் அறிதல் எல்லை விரிவடைந்திருக்கிறது. சீனா, இந்தியா போன்ற நாடுகளில் தொடங்கிய தொலைதூர நோக்கியின் ஆய்வு டைகோ பிராஹே, கலீலியோவின் ஆய்வுகளில் அடுத்தகட்டத்தை அடைந்தது. இன்று, வானத்தில் பொருத்தப்பட்ட தூரநோக்கிகள் நம் வளிமண்டலத்தின் தடைகளைக் கடந்து விண்மீன்களும், நட்சத்திரங்களும் வெளியிடும் எக்ஸ்ரே, அல்ட்ராவயலெட்ரே போன்ற மிகக் குறைந்த அலைவரிசைகளை ஆய்வு செய்கின்றன. இஸ்ரோவின் ஆஸ்டிரோசாட், ஹப்பிள் ஆய்வுக்கழகத்தின் தூரநோக்கி என இன்று அண்டத்தின் மத்தியில் இருக்கும் கருந்துளை, ஈர்ப்பலை, பல்சார், மறை ஆற்றல் போன் பிரபஞ்சதின் ரகசியங்களை ஆராய்கின்றன. இவற்றை ஆராய்வதன் மூலம் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும், நட்சத்திரங்களின் உருமாற்றங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஹப்பளின் பிரபஞ்ச விரிவாக்கக் கொள்கையிலிருந்து இன்று நம்மை விட்டு மிக வேகமாகப் பிரிந்து செல்லும் பிற விண்மீன் கூட்டங்களை இயக்கும் மறை ஆற்றல் (dark energy) வரை கடந்த நூறு ஆண்டுகளில் நாம் கடந்து வந்தபாதை மிக நீண்டது.
தூரத்திலிருந்து விண்மீன்களை ஆராயும் மனிதனுக்கு தன் வீட்டருகே இருப்பவரைப் பற்றிய ரகசியம் இன்றும் தெளிவாகவில்லை. ஆதி மனிதன் முதல் இன்றைய விஞ்ஞானிகள் வரை வசீகரித்துவரும் நம் அண்டைவீட்டாரான நிலவு. அது நம் பேட்டையில் இருக்கும் சக நண்பரா அல்லது நம் வீட்டிலிருந்து பிரிந்து சென்று அதே பேட்டையில் வசிக்கும் உறவினரா எனும் குழப்பம் இன்றளவும் நீடிக்கிறது. நிலவிலிருந்து நாம் எடுத்துவந்த கல்லையும் மண்ணையும் ஆராயும்போது அவை நம் உலகில் கிடைக்கும் கனிமப்பொருட்களிலிருந்து எவ்விதத்தில் மாறாத ஒன்று என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இருவரும் ஒருதாய் வயிற்றுக்குழந்தைகள் என்பதில் விஞ்ஞானிகளுக்குச் சந்தேகமில்லை. கனிம ஐசோடோப் எனும் அடிப்படை குணங்கள் ஒன்றாக இருப்பது ஒரு காரணம். பால்வீதியில் சுழன்றுகொண்டிருக்கும் சனி, வியாழன் போன்ற பிற கிரகத்துக்கும் நம் உலகத்துக்கும் இப்படிப்பட்ட உறவு இல்லை.
அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. நம் பூமியின் மையப்பகுதி மிக அதிக கொதிநிலையில் இன்றும் இருக்கிறது. நிலவின் மையப்பகுதியில் அப்படிப்பட்ட வெப்பம் இல்லை. நம் வளிமண்டலம் உயிர் உருவாக்கத்துக்கான மையக்காரணம். பிரபஞ்சத்திலிருந்து வரும் அதீத வெப்பம் மற்றும் கற்களிலிருந்து நம்மைக் காக்கிறது. நிலவுக்கு அப்படி ஒரு வளிமண்டலம் இல்லை. நம் உலகம் சூரியனைச் சுற்றி வருவதோடு சுழல்கிறது. நிலவு பூமியைச் சுற்றி வருகிறதே தவிர சுழல்வதில்லை. அதனால் நாம் எப்போதும் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிறோம். நம் செயற்கைக்கோள்களில் சீனா மட்டுமே நிலவின் மற்றொரு பகுதிக்குச் சென்றுள்ளது. பூமியின் சுழற்சி கோணம் 23 பகாக்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதையில் சாய்ந்துள்ளது. இதனால் மிகவும் குளிர்ச்சியானப் பகுதியின் அளவு பூமியில் குறைவு. நிலவுக்கு சுழற்சி கோணம் இல்லாததால் துருவங்களில் சூரிய ஒளி கிடையாது. அதனால் நிரந்தரமாக உறைந்துபோன பகுதிகள் நிலவில் அதிகம் உள்ளன. இப்படி நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மேற்சொன்ன எல்லாமே நிலவு உருவானவிதத்தைப் பற்றி நமக்கு பல தகவல்களைக் கொடுக்கின்றன. ஒரேவிதமான கனிமங்கள் கிடைப்பதால் பூமியும் நிலவும் ஒரு காலத்தில் ஒரே தாயிலிருந்து பிறந்தவையாக இருக்கலாம் எனும் தரப்பு இன்றும் வலுவான ஒன்றாக இருக்கிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் நாசா ஆய்வுக்கூடம், அபோலோ 11 எனும் விண்கலன் மூலம் முதல்முறையாக மனிதனை நிலவுக்கு அனுப்பியது. கச்சிதமாக நிகழ்த்தப்பட்ட பிராஜெக்ட் என இன்றளவும் நாசா பெருமைபேசும் விதத்தில் அந்த திட்டம் நிறைவேறியது. ரஷ்யாவும் அமெரிக்காவும் பூமியில் மட்டுமல்லாத வான்பயணத்திலும் தங்களது பலத்தைப் போட்டிபோட்டு காட்டிவந்த இருபது வருடப்பயணத்தின் உச்சகட்டம் ஜூலை 11, 1969. இந்த வரலாறு பற்றி பலவிதமான புத்தகங்களும், சினிமாக்களும், கட்டுக்கதைகளும் வந்துள்ளன.
சமீபத்தில் ஐம்பது வருடக்கொண்டாட்டமாக வெளிவந்த Moonbound எனும் படக்கதை நூல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. படக்கதை நூலுக்கு ஒரு தனி மொழி அமைந்துள்ளதை இந்த நூலில் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. சாதாரண கார்டூன் போல வரும் பல கிரஃபிக் நாவல்களுக்கு மத்தியில் பல கோணங்களை ஒன்றாகத் தொடர்புறுத்தும் இது போன்ற நூல்கள் திரைப்படம், கதைபுத்தகம் போன்றவற்றைத் தாண்டி மற்றொரு பரிணாமத்தை அளிக்கிறது.
கார்டூன் போல ஒரு பக்கத்தில் பல பிரேம்கள் உள்ளன. ஒவ்வொரு பிரேமில் படங்களும், வாக்கியங்கள் இணைந்து வருவதால் ரெண்டுவிதமான செய்திகளை வாசகர்களிடம் கடத்துகிறார்கள். சொல்லப்படும் காலத்தை நம்முன்னே நிறுத்தும் படங்களும், பிற கலாச்சார படிமங்களும் காட்சியாக நம்முன் விரிகிறது. எழுத்து மூலம் சொல்லப்படும் செய்தி படக்கதைக்கு மாற்றாக அல்லாமல், அதை செறிவுபடுத்திக்காட்டுகிறது. இந்த நூல் அபுனைவு என்பதால் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் முனைகள் அதிகமாகக் கிடைக்கவில்லை. ஆனால் அறிவியலும் தொழில்நுட்பமும் எப்படி நாடுகளுக்கு மத்தியில் போட்டிக்கான ஆயுதமாக மாறியுள்ளது என்பதை நுணுக்கமாகக் காட்டுகிறது. வரலாறு எனும் சுண்டெலி அறைகளுக்கு இடையே ஓடுவது போல பல நாட்டு மனிதகளையும் அவர்களது கனவுகளையும் இணைக்கும் உயிர்சக்தியாக மாறும்போது இந்த நூல் அறிவியலின் வெற்றியையும் தாண்டிய பரப்பைத் தொட்டுவிடுகிறது.
அபோலோ 11 கோளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொலம்பியாவின் ஓட்டுனர் மைக்கேல் காலின்ஸ், பயணத் தலைவர் நீல் ஆர்ம்ஸ்டிராங், நிலவில் இறங்கும் கோளின் பகுதியான ஈகிளின் ஓட்டுனர் பஸ் ஆல்ட்ரின் நிலவை சுற்றும்போத கதை தொடங்குகிறது. சொல்லப்போனால் பயணத்திட்டத்தின் மிக முக்கிய கட்டம் இது. கட்டுப்பாட்டு அறையான கொலம்போவைப் பிரிந்து ஈகிள் நிலவில் தரையிறங்கப்போகிறது. அதில் ஆம்ஸ்டிராங்கும், பஸ் ஆல்டிரினும் காத்திருக்கிறார்கள். ஒரே கோளாகச் சென்று இருவேறாகப் பிரிந்து நிலவிலிருந்து திரும்ப வரும் ஈகிளுக்காகக் காத்திருக்கும் கொலம்பியா நிலவைச் சுற்றி வலம் வருகிறது. குழு முதல்முறையாகப் பிரிந்துவிட்டது. மிகத்தனிமையானப் பயணம் என கொலம்பியாவில் நிலவைச் சுற்றி வந்த மைக்கேல் காலின்ஸ் பின்னர் தெரிவித்தார். பூமியைப் பார்த்திராத நிலவுப்பகுதியைச் சுற்றி வரும்போது நாஸாவுடனான தொடர்பு இருக்காது. அண்டத்தில் தனித்து சுற்றிவந்த நொடிகளில் மைக்கேல் காலின்ஸின் மனநிலையை இந்த பகுதி தத்ரூபமாக விவரிக்கிறது.
வானத்தில் உதிக்கும் ஒரு கோள் மட்டுமல்ல நிலவு. தேய்ந்தும் வளர்ந்தும் நம் காலத்தைக் கணக்கிடவும் மனிதனால் ஆதிகாலத்திலிருந்து வியந்து நோக்கும் ஒரு கோள். ஒரு குறியீடு. நிலவின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் இருந்தாலும், மனிதன் முறையாக அதை ஆராய்ந்து புரிந்துகொள்ள முயன்று வருகிறான். பல கலாச்சாரங்களில் நிலவு பற்றிய தொன்மங்களால் நிரம்பியுள்ளன. நிலவில் தெரியும் முயல் கிழக்காசிய தொன்மத்தில் பிரசித்திபெற்ற ஒரு கதை. பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற பாடல்களில் முயலின் உருவம் தெரியும் மதி பற்றிய வர்ணனைகள் நிறைய காணக்கிடைக்கின்றன.
சயக் கவிப் பெரும்படைத் தலைவர் தாள்களால்
முயல் கறை மதி தவழ் மூரிக் குன்றுகள்
அயக்கலின் முகில் குலம் அலறி ஓடின
இயக்கரும் மகளிரும் இரியல் போயினார்.
(கம்பராமாயணம் -யுத்த காண்டம்-8. சேது பந்தனப் படலம்-9)
கோளின் உச்சிட்ட மென்றும்
கலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட
(மீனாட்சிப் பிள்ளைத் தமிழ்)
முயல்கறை உருவம் தெரியும் நிலவைக் களங்கம் எனும் அர்த்தத்தில் வரும் பாடல்.
நிலவின் சுழற்சியைக் கொண்டு பல கதைகள் உருவாயின. முழு நிலவு மனித அகத்தின் மீது செலுத்தும் பாதிப்புகள் முதற்கொண்டு பெண்களின் மாதாந்திர உடற் சுழற்சிகள் வரை பல கலாச்சாரங்கள் நிலவுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கின. அவ்வகையில் உயிர்ப்புள்ள சித்திரமாக மனிதனுடன் இயங்கி வந்துள்ளது. எதிர்காலத்தைக் கணிப்பவர்கள் கைகளிலிருந்து மெல்ல விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு நிலவு மாறிய சித்திரம் இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கு. வளர்சிதை முறையையும், நம் பூமி மீது செலுத்தும் கட்டுப்பாட்டையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். வெறும் கருங்கல் எப்படி இருளாகவும், பால் நிலவாகவும், உயிர்ப்புள்ள கோளாகவும் தோற்றம் கொள்கின்றது என்பது இன்றும் நம்மை வசீகரித்து வருகிறது. அவ்வகையில் கவிஞர்களுக்கு கற்பனையாகவும், காதலர்களுக்குத் தூதாகவும், நோய்க்கு மருந்தாகவும், குழந்தைக்கு காட்சிப்பொருளாகவும், தத்துவ ஆர்வலர்களுக்கு தேடலாகவும், விஞ்ஞானிகளுக்கு சோதனைக்களமாகவும் இருந்து வந்துள்ளது.
நிலவில் தெரியும் முயல் போன்ற கறைகள் மண்மீதான பெருவாய் என ஐநூறு வருடங்களுக்கு முன்னரே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர் என்றாலும் அபோலோ 11 குழுவினர் அதைச் சரிவர கணக்கிடவில்லை. பிற நட்சத்திரங்களைக் கணக்கில் கொண்டு நிலவின் எந்த இடத்தில் இருக்கிறார்கள் எனச் சொல்லமுடிந்தாலும் துல்லியமாக அவர்களுக்குத் தெரியவில்லை. பெருவாய் மீது இறங்கக்கூடாது என்பதால் இறங்க வேண்டிய இடத்தைத் தாண்டி சமதளம் தெரிந்த இடத்தில் ஈகிள் இறங்கியது. நவீனக் கோள்களின் இடத்தை உலகலாவிய தடங்காட்டி மூலம் நம்மால் சரியாகக் கணித்துவிடமுடிகிறது. அபோலோ 11 கொலம்போ கோளும் ஈகிளும் முழுவதும் அதன் ஓட்டுனர் கட்டுப்பாட்டில் இயங்கின. அதனால் எல்லைக்குட்பட்ட சில முடிவுகளை அவர்களால் சுதந்திரமாக எடுக்க முடிந்தது என மைக்கேல் கோலின்ஸ் தெரிவிக்கிறார். தூரத்தில் தெரிந்த நீல நிற பூமியின் காட்சி தான் கண்ட காட்சியிலேயே உளமுருகும் காட்சியாக இருந்தது என அவர் பின்னர் தெரிவித்தார்.
கோள் சாஸ்திரத்திலிருந்து விஞ்ஞானத்துக்குச் சென்ற நிலவின் ஆய்வுகள் தொடர்ந்து பல காலங்களுக்கு இரண்டு இயலிலும் வளர்ந்தது. வானியல் சாஸ்திரத்தைக் கொண்டு பெரும் செல்வந்தர்களின் எதிர்காலத்தைக் கணிப்பதில் கெப்லர் செலவிட்டாலும் அவரது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஐரோப்பாவில் பரவலாகத் தொடங்கின. கோபர்நிகஸ், கெப்லர், டைகோ பிராஹே, கலீலியோ என ஒரு நீண்ட விஞ்ஞானிகள் வரிசை வானத்திலிருந்த கிரகணங்களின் பயணத்தையும், தூரத்தையும் கணக்கிடத் தொடங்கினர்.அதே நேரத்தில், நம் பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது எனும் கண்டுபிடிப்பும், பிற கோள்களின் நீள்வட்டப்பாதையையும் கோபர்நிகஸ் தனது ஆய்வுகள் மூலம் நிலைநாட்டினார். மிக நுணுக்கமான புகைப்படங்கள் மூலம் வானவியல் அறிவியலின் வரலாறைத் தொகுத்திருக்கிறார்கள். கெப்லரின் கனவு எப்படி கலீலியோவின் ஆய்வு மூலம் இணைத்ததன் மூலம் தொன்மக்கதைகளைத் தாண்டி நிலவு சார்ந்த அறிவியல் வளர்ச்சி பற்றி அடிப்படைகளும் தொகுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொலம்பியாவிலிருந்த மைக்கேல் கோலின்ஸால் ஈகிள் இறங்கிய இடத்தைக் கண்டறிய முடியவில்லை. ஃபிளோரிடாவிலிருந்து நாஸா கூடத்திலிருப்பவர்கள் ஒவ்வொரு விநாடியும் அதைக் கணிக்க முயன்றார்கள். நிலவில இறங்கி ஈகிளுக்கு உள்ளே காத்திருந் நீல் ஆம்ஸ்டிராம் மற்றும் பஸ் ஆல்டரின் இருவருக்குமே கூட திட்டவட்டமாக எங்கிருக்கிறோம் என்பது தெரியவில்லை. நிலவில் இறங்குவதற்கான சரியான நேரத்துக்காகக் காத்திருந்தார்கள். ஒரு மணிநேரம் நிலவில் இருப்பதற்காக ஆக்ஸிஜன் மட்டுமே அவர்களது செயற்கை சுவாசப்பையில் இருந்தது.
தொலைநோக்கி மூலம் வானத்திலிருந்த கோள்களின் இயக்கங்களை இடைவிடாது கவனித்து குறித்துவைப்பதன் மூலம் வானின் சுழற்சியை கெப்லர், கலீலியோ போன்றோர் தொகுத்து வைத்தனர். ஆனால், இது வாழ்நாள் முழுவதும் உழைப்பை கோரிய செயல்பாடாக இருந்தது. வானத்தில் சுழலும் கோள்களைப் பற்றிய அறிவு வளர்ந்தபோதும் அவை ஏன் இப்படி ஒரு பாதையில் செல்கின்றன என்பதற்கான கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட ஏன்களுக்கான பதில்களுக்காக நாம் நியூட்டனின் வரவு வரைக் காத்திருக்க வேண்டியிருந்தது. கலீலியோ மற்றும் கெப்லரின் நீள்வட்டப்பாதைக்கு நியூட்டன் விளக்கங்களை அளித்தார். சாதாரணமாக நம் கண் முன்னே நடக்கும் நிகழ்வுகளுக்கான காரணத்தையும் வானியல் இயக்கங்களுக்குப் போட்டுப்பார்த்ததில் நியூட்டனின் அதிபுத்திசாலித்தனம் வெளிப்பட்டது. ஆப்பிள் மரத்திலிருந்து விழும் பழமும் சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கமும் ஒரே விசையால் உருவானது என்பது விஞ்ஞானத்தின் மிகப் பெரிய பாய்ச்சல். அவரது கண்டுபிடிப்பு மட்டுமல்லாது அவர் எடுத்துக்கொண்ட வழிமுறை கூட அறிவியலில் அதுவரை யாரும் செய்யாதது. சின்னப்பொருட்களுக்கும் பெரிய பொருட்களுக்கும் இடையே ஒரேவிதமான இயக்கங்கள் இருக்கலாம் எனும் பார்வையை அவர் முன்வைத்தது அறிவியல் உலகில் ஒரு புரட்சிகரமான கருத்தாகக் கொள்ளப்பட்டது. இதே கருத்தைக் கொண்டு அவர் நிலவின் சுழற்சிக்கும் விளக்கங்கள் அளித்தார். ஆய்வுக்கூடங்களில் கண்டடைந்த முடிவுகளை நியூட்டனின் விதிகளின் கணித சமன்பாடுகள் மூலமும் அடையத்தொடங்கியது மனித வளர்ச்சியில் அடுத்தகட்டமாகக் கொள்ளப்பட்டது.
கதை கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளைத் தாண்டி இரண்டாம் உலகப்போர் காலத்தில் உருவான விண்களன்களின் தொழில்நுட்பத்தை விவரிக்கத் தொடங்குகிறது. பேரழிவுகளை யுத்தம் உண்டாக்கினாலும் அப்போதுதான் தொழில்நுட்பங்களும், நவீன யந்திரங்களும் அசுர வளர்ச்சி அடைந்தன. பல கட்டுக்கதைகள் உலவிய போர்சூழலில் ஹிட்லரின் வி2 வகை ஏவுகணை தொழில்நுட்பம் மிக முக்கியமானது. ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஏவுகணை, விண்களன்களின் பெரிய அளவு ஆராய்ச்சி செய்துவந்தன என்றாலும், ஜெர்மனி வி2 மூலம் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்துவிட்டது எனும் பயம் எல்லாரிடமும் இருந்தது. ஹிட்லர் வேறு கிரகணத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என இன்றளவும் நம்புவோர்கள் பலர் உண்டு. அதற்கு யுத்த காலத்தில் ஜெர்மன் அடைந்த விஞ்ஞான முன்னேற்றங்களும் ஒரு காரணம். அதே போல, ரஷ்ய விஞ்ஞானிகள் பலரும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில் கைது செய்யப்பட்டு வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்படிப்பட்ட ஒருவரான <<>> ஏவுகணை மற்றும் விண்களன் தொழில்நுட்பத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1950களுக்குப் பிறகு, நிலவைச்சுற்றி வரும் விண்களன்களை உருவாக்கும் போட்டி அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் ரஷ்யாவிடம் மயிறிழையில் தோற்றபடி இருந்தது அமெரிக்கா. பல ரஷ்ய விஞ்ஞானிகள் சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் குடி புகுந்து நாஸாவில் இணைந்து வேலை செய்யத் தொடங்கினர். நிலவைச் சுற்றிவரும் விண்களன்களை ரஷ்யா வெற்றிகரமாக இயக்கியது. முதல் மனிதனை விண்ணில் ஏவியது. அமெரிக்கா தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.
வரலாற்றில் காணாமல் போன பல விஞ்ஞானிகளின் பங்களிப்பை இந்த புத்தகம் நமக்கு விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ஸ்டாலினின் கொடுங்கோலாட்சியில் உருவான வதை முகாமில் அடைக்கப்பட்டிருந்த விஞ்ஞானி கொரொலேவின் உழைப்பில் உருவானது ரஷ்யாவின் விண்களன் தொழில்நுட்பம். ஆனால், அவரது கண்டுபிடிப்புகளையும் ஆய்வு முடிவுகளையும் பயன்படுத்திக்கொண்டு முதல் மனிதனை விண்ணில் செலுத்தியபின்னர் லியானிட் செடோவ் எனும் விஞ்ஞானியின் பெயர் முன்னிருத்தப்பட்டது. ஸ்பட்னிக்கின் தந்தை என அழைக்கப்பட்ட கொரொலேவ் மெல்ல வரலாற்றிலிருந்து மறைந்துபோனார்.
விண்களன் உருவாக்குவதிலிருக்கும் சிக்கல்களை இந்த புத்தகம் மிக விரிவாகப் பேசுகிறது. ஆயிரம் கிலோவுக்கு மேல் இருக்கும் களனை விண்ணில் செலுத்துவதற்குத் தேவையான எரிபொருளும் அதன் அமைப்பும் மிகப் பிரத்யேகமானது. சொல்லப்போனால், விண்களனில் பொருந்தும் ஒவ்வொரு பகுதியும் விண் பயணத்துக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும். வானத்தின் குறைந்த அழுத்தம், கடுமையான குளிர், புவி ஈர்ப்பிலிருந்து தப்பிச்செல்வதற்கான வேகத்தினால் உண்டாகும் உராய்வு எனப் பலவிதத் தாக்குதல்களைச் சமாளிக்கும் வெளிப்புற அமைப்பு உருவாக்கவேண்டியது அவசியம். அதேபோல, மூன்று அல்லது நான்கு பகுதிகள் இணைந்து உருவாக்கப்படும் விண்களன் சரியான எரிவாயுவைப் பயன்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களில் செல்திசையை மாற்றவேண்டியிருக்கும். ஒரு பகுதி எரிந்து கீழே விழும்போது மற்றொரு பகுதி தனது எரிபொருளை சரியான அளவு திறக்க வேண்டும். விண்களனின் எடை குறையக் குறைய எரிபொருளின் தேவையும் குறையும். அதேபோல விண்களனிலிருந்து சிறு ஏவுகணைகள் செலுத்துவதன் மூலம் திசையும் வேகமும் மாற்றப்படும். கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் செய்திகளைக்கொண்டு விண்களனில் இருக்கும் கணினி தனது பிற பாகங்களுக்கு ஆணைகளை அனுப்பும். இப்படிப்பட்ட சிக்கலான அமைப்பினூடாக பூமியின் தட்பவெட்பத்துக்கு நிகரான சிறு அறையில் நமது விண்வெளி வீரர்கள் தங்கியிருப்பார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் மின் தொடர்பு சாதனங்களும், கணிணி அமைப்புகளின் சக்தியும் அதிகரித்ததால் பலவிதமான கட்டுப்பாடுகளை நாம் பூமியிலிருக்கும் ஆய்வுக்கூடங்களிலிருந்து பிறப்பிக்கமுடியும். புத்தகத்தின் மிக உயிர்ப்பான பகுதி என இதைச் சொல்லவேண்டும். விண்களனின் வரலாறை அதன் அரசியலுடன் இணைத்து மிக விரிவாகப் பேசியுள்ளனர்.
விண்வெளிப்பயணத்துக்கான தயாரிப்பு பற்றிய கதை வெகு சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கு. விண்வெளிப்பயணம் முடிந்தபின் நம்முன்னே நாயகர்களாக இருப்பவர்கள் விஞ்ஞானிகளும், விண்வெளிப்பயணிகளும் மட்டுமே. ஆனால், அவர்களுக்குப் பின்புலனாக உழைக்கும் பல அமைப்புகளைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குழு, ஆடை மற்றும் உபகரணங்கள் தேர்வுக்குழு, தினமும் விண்வெளிப்பயணிகளின் உடல் நலத்தைச் சோதிக்கும் செவிலி, மன நல மருத்துவர்கள் என இப்பயணத்துக்குப் பின்னே மிக நீண்ட உதவிக்கரம் இருக்கிறது.
மேலும், நாஸா தனது விண்வெளிப்பயணிகளைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. சோதனைகளில் பெண்களே விண்வெளிப்பயணத்துக்குத் தகுந்த உடல் மற்றும் மன அமைப்பைக் கொண்டவர்கள் எனத் தேர்வுக்குழு அறிவிக்கிறது. அதனால் அமெரிக்கா முழுவதும் பல பெண்கள் நாஸாவில் சேர்வதற்காகப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால், திடுமென ஒரு நாள் ஆண் குழு ஒன்றை நாஸா அறிவிக்கிறது. எவ்விதமான காரணமும் அல்லாது இந்த மாற்றம் நிகழ்கிறது. பல விண்வெளிக்குழுக்கள் மூலம் அபோலோ பயணம் தொடர்ந்து வரும்போது நிலவில் இறங்கும் திட்டத்துக்கு சுழற்சி முறையில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் பஸ் மூவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களைப் போலவே கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும் ஒருவிதத்தில் வரலாறில் இடம்பெற்ற அதிர்ஷ்டசாலிகள்.
தொன்மக்கதைகள், மக்தள் அறிந்த செவி வழிச் செய்திகள், அறிவியல் வளர்ச்சி பற்றிய வரலாறு, அரசியல் என மிகக் கலவையான தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இதன் வடிவம் கிராஃபிக் நாவல்களின் வரிசையில் மிகவும் பேசப்படும் ஒன்றாக அமையும். படக்கதைகள் மற்றும் உரையாடல்களுடனான பொம்மை உருவங்கள் என இல்லாது இந்நூல் படிப்பவருக்கு மிகவும் உயிர்ப்பான சித்திரத்தையும் நம்மைச் சூழ்ந்துள்ள பல கலாச்சார குறியீடுகளும், உலகலாவி அரசியல் நிரம்பிய தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது.
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
அருமையான விமர்சனம். புத்தக பதிப்பகம் விலைவிபரம் தெரிவித்தால் வாங்க எளிதாக இருக்கும்.
நன்றி. இணைப்பில் சேர்த்துள்ளோம்
https://www.amazon.in/Moonbound-Apollo-11-Dream-Spaceflight/dp/0374212457/ref=sr_1_1?keywords=moonbound&qid=1565759727&s=gateway&sr=8-1